Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மார்ச் - ஏப்ரல் 2006

கட்டுரை

திருக்குறளில் பெண்களின் பாலியல் கட்டுப்பாடு

பத்மினி

‘திருக்குறள்’ உலகப் பொதுமறை எனப் புகழ் பெற்று விளங்குவது. வாழ்வின் கடைக்கோடியில் இருக்கும் மனிதனைக் கூட திருக்குறள் பரிவோடு அணுகுகின்றது. (இரவு, இரவச்சம்); சமூகச் சீர்கேடுகளை வன்மையாகக் கண்டிக்கின்றது (கள்ளுண்ணாமை); பிற உயிர்களிடத்தில் அன்பு கொள்ள வேண்டும் (புலால் மறுத்தல்) என்று வலியுறுத்துகின்றது. அன்புடைமை எனும் கொள்கையை மனித இனம் பின்பற்றத் தூண்டுகோலாய் இருக்கின்றது. இன்னும் உலகளாவிய பொதுமையான கருத்துகள் செழுமையான அளவிலிருந்தாலும் ‘பெண்’எனும் இனத்தைப் பற்றிக் கூறும் சில நிலைகளில் அக்காலகட்டச் சமூகக் கருத்தாக்கத்தின்படி ‘கற்பு’எனும் கருத்தாக்கத்தைத் திருக்குறளும் ஏற்றுக் கொள்கின்றது.

இலக்கியங்கள் ‘கற்பு’எனும் கருத்தாக்கத்தை மேலும் வலுப்பெறச் செய்தன. இந்நிலையில் நிலவுடமைச் சமூக அமைப்பில் தோன்றிய தொல்காப்பியம், சங்க இலக்கியம் இவற்றை ஒட்டி வந்த சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய நீதி நூல்களுள் ஒன்றான திருக்குறளும் ‘கற்பு’எனும் கருத்தாக்கத்தை ஆணாதிக்கப் பார்வையிலேயே முன் வைக்கின்றது. இக்கருத்தாக்கம் பெண்ணை ஒடுக்கும் விதம் குறித்து குறளின் வழி இக்கட்டுரை சுருக்கமாக ஆராய முற்படுகின்றது.

ஆணையும், பெண்ணையும் சமநிலையில் நோக்கிய தாய்வழிச் சமுதாயம், தந்தை வழிச் சமுதாயமாக மாற்றம் பெற்ற பின்பு பெண்ணைப் பல விதங்களில் நசுக்கியது. பெண் சமூகத்தினராலும், தனி நபராலும் ஒடுக்கப்பட்டாள். பெண்ணை ஒடுக்கும் விதமாக ஆணாதிக்கச் சமூகம் பல அமைப்புகளைக் காலப்போக்கில் ஏற்படுத்தியது. திருமணம், குடும்பம் போன்ற ஆணாதிக்கச் சமூக அமைப்புகள் ஆணை மையமாக வைத்து அவனை உயர்நிலையிலும், பெண்ணை இரண்டாம் தரக்குடிமகளாகக் கீழ் தள்ளியும் பலவிதமான கருத்தாக்கங்களை ஏற்படுத்தியது. ஆணைச் சார்ந்து வாழும் நிலைக்குப் பெண் தற்சார்பற்றவளாக ஆக்கப்பட்டாள். பல கருத்தாக்கங்கள் பெண்ணை ஒடுக்கும் நிலைக்கே கொண்டு வந்தன. அவ்வாறு பெண்ணைக் கட்டுப்படுத்த, அவளை இல்லச்சிறைக்குள், குடும்பம் அல்லது திருமணம் என்னும் சிறைக்குள் ஒடுக்கிய கருத்தாக்கங்களில் ஒன்று ‘கற்பு’ எனும் கட்டுப்பாடு ஆகும்.

‘கற்பு’ எனும் சொல்லுக்குப் பல பொருள் இருந்தாலும் இன்றளவிலும் மக்கள் மனதில் பதிவது ‘பெண்ணின் நடத்தை’ என்பது மட்டுமே. ‘கற்பு’ என்ற சொல், பதிவிரதாதர்மம், களவுக் கூட்டத்துக்குப் பின் தலைவன் - தலைவியை விதிப்படி மணந்து இல்லறம் புரியும் ஒழுக்கம், கல்வி, தியாகம், வேலைப்பாடு, சங்கற்பம், ஆணை, கதி என்ற பொருளில் கையாளப்படுவதாகத் தமிழ் லெக்சிகன்1 கூறுகிறது. கற்பு என்பது ஆங்கிலத்தில் ‘Chastity’ என்பர். வெப்ஸ்டர்ஸ் ஆங்கிலம்-தமிழ் அகராதி2, chastity எனும் ஆங்கிலச் சொல்லுக்கு, கற்பு, கற்புடைமை, கற்புநெறி, நிறை, முல்லை, புனிதம், தூய்மை எனும் பொருள்களைத் தருகிறது. சென்னைப் பல்கலைக் கழக அகராதி3 - chastity எனும் சொல்லுக்கு, தன்னடக்கம், தற்கட்டுப்பாடு, கற்புடைமை, கன்னித்தன்மை, தூய்மை, பண்புயர்வு, நடுநிலைமை, எளிமை நயம் எனும் பொருள்களைக் கூறுகிறது.

எனவே சமூகப் பயன்பாட்டிலும், இலக்கியங்களிலும் வழங்கும் பொருளிலேயே அகராதிகளும் விளக்கமளிப்பதைக் காணலாம். எனவே ‘கற்பு’ என்பது பெண்ணின் நடத்தையினையே வலியுறுத்தும் விதமாகப் பல பொருளில் பெரும்பான்மையாக வழங்கியிருப்பதைக் காண முடிகின்றது. ‘பெண்ணின் நடத்தையை’ வலியுறுத்தும் விதமாகக் ‘கற்பு’ எனும் கருத்தாக்கம் ஆணாதிக்கச் சமூகத்தினரால் கட்டமைக்கப்பட்டு அதுவே பெண்ணுக்கான கட்டுப்பாடுகளுள் முதன்மையாயிற்று.

இவ்வாறு பெண்ணுக்கு மட்டும் பாலியல் கட்டுப்பாடுகள் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருவதன் நோக்கம் ஏன் என்பதை ஆராயும் விதமாக, மனித குல வரலாற்றினைச் சுருக்கமாக விளக்குவது தேவையாகின்றது.

மனிதகுல வரலாற்றில், தாய்வழிச் சமூகத்தில் பெண்ணே முதன்மையானவளாகவும், ஆணுக்கு இணையாகவும் இருந்தாள். சமூக மதிப்பு, தற்சார்பு ஆகியவை அவளுடைய உடல் உழைப்பை மையப்படுத்தியே ஏற்பட்டன. உழைப்புக்கான கருவிகளும், உழவுத் தொழில்களும் ஏற்பட்ட பிறகு உற்பத்தி சார்ந்த உடல் உழைப்பு பெண்ணுக்கு மறுக்கப்பட்டது. ஆண்கள் உற்பத்தியைப் பெருக்கும் திறன் வாய்ந்த வேலைகளைக் கையில் கொண்டனர். பெண்ணுக்கோ, உபரியையும், உற்பத்தியையும் பெருக்குகின்ற திறன் வாய்ந்த வேலைகள் மறுக்கப்பட்டன. உடல் உழைப்பும், அதே நேரத்தில் எந்தவிதமான உபரியையும், உற்பத்தியையும் ஈட்டாத வீட்டுவேலைகள் மட்டுமே அளிக்கப்பட்டன. ஆண்களுடைய ஆதிக்கம், குழந்தைப் பேறு இவற்றின் காரணமாக அறிவார்ந்த, உற்பத்தியைப் பெருக்கும் திறன் வாய்ந்த வேலைகள் பெண்ணுக்கு மறுக்கப்பட்டன. எனவே வீடே அவளுக்கு உலகம் என வரையறுக்கப்பட்டது. வீடு என்பதைச் சார்ந்த குடும்பக் கடமைகள் அவளுக்கு முதன்மைப்படுத்தப்பட்டன. குடும்ப அமைப்பு நிலைபெறச் சொத்துடமை மிகப் பெரிய பங்காற்றியது. சொத்துடமை எனும் கொள்கையின் காரணமாக, அகமணம் எனும் முறை ஏற்படுத்தப்பட்டது. தங்கள் இனத்தவர்க்குள்ளாகத் திருமணம் செய்து கொண்டு, தன் மனைவியின் மூலமாகத் தன் வாரிசை உருவாக்கித் தனக்குப் பிறகு தன்னுடைய சொத்தைத் தன்னுடைய வாரிசுக்குச் சென்று சேருமாறு ஆண் அல்லது கணவன் ஏற்படுத்திக் கொண்டான். இதுவே தனிச் சொத்துடைமை. இதில் மனைவிக்கு ஏதும் பங்கில்லை. (தற்காலத்தில் இது மாற்றம் பெற்றுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்க). எனவே மனைவியின் மூலமாகப் பெறும் வாரிசுக்கே சொத்துடைமை எனும் காரணத்தினால் ‘பெண்களுக்கு பாலியல் ஒழுக்க நடத்தை’குறித்த சில கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டன. இதுவே ‘கற்பு’ எனும் சொல்லாக இன்றளவிலும் சமூகத்தில் நிலவி வருகிறது.

கற்புக்கனல், கற்புக்கரசி, கற்பலங்காரி, கற்புத் தெய்வம், கற்பாட்டி போன்ற சொல்லாக்கங்கள் பெண்களை ஏற்றுக் கொள்ளும்படி செய்தன. இலக்கியங்களும். ஊடகங்களும் ‘கற்பு’ என்பதை உடல்சார்ந்த தன்மையாகவும், பெண்ணுக்கான பாலியல் நடத்தை என்பதாகவுமே சுட்டியது. ஆணுக்கு ஒழுக்கம் என்பது பெருமை சேர்ப்பதாகவும், பெண்ணுக்கு இயல்பாகவும் இலக்கியங்களில் சுட்டப்படுகின்றது. பாரதியார், இருபாலருக்கும் ஒழுக்க நடத்தை வேண்டும் என்பதை,

“கற்புநிலை என்று சொல்லவந்தார் - இரு / கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்”4 என்கிறார்.

திருக்குறள் வாழ்க்கைத் துணை நலம் எனும் அதிகாரத்தின் வழி ‘கற்பு’ எனும் பெண்களுக்கான பாலியல் ஒழுக்க விதிகளை ஆணாதிக்கப் பார்வையிலேயே வலியுறுத்துகின்றது.

“பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும் / திண்மையுண்டாகப் பெறின்,” (குறள். 54)5 கற்பென்னும் திண்மையுண்டென்றால் பெண்ணுக்கு அதைவிடப் பெரிய பேறு உண்டோ என்று கூறும் திருவள்ளுவர், திண்மை என்பதை மனக்கட்டுப்பாடு என்ற பொருளில் கூறியுள்ளார் எனக் கொள்ளலாம். எதன் பொருட்டு மனக்கட்டுப்பாடு, தன்னுடைய ‘கற்பு’எனும் நடத்தை குறித்த கட்டுப்பாட்டையே மனக்கட்டுப்பாடு என்கிறார். அத்தகைய மனக்கட்டுப்பாடுடைய பெண், தன்னுடைய கணவனையே தெய்வமாக நினைத்துத் தொழுது மழையைப் பெய்யென்றால் மழையும் பெய்யும் என்கிறார், இது ஒரு கருத்தாக்கமே.

இதன் மூலம் பெண்ணுக்கு ஒரு போலியான அங்கீகாரத்தைத் தர முயலும் எண்ணங்களே மறைமுகமாகச் செயல்படுகின்றன.

இவள் தன்னையும் காத்துக் கொண்டு (கற்பில்) தன்னைக் கொண்டவனையும் காத்துக் கொண்டு சோர்வின்றி இல்வாழ்க்கையை நடத்தவேண்டும். தன்னைக் ‘கற்பின் ஒழுக்கம் பூண்டு’காத்துக் கொள்வதன் வழித் தன்னை உடைமையாகக் கொண்ட கணவனின் நலம் அல்லது சமூக அங்கீகாரத்தையும் பாதுகாக்க வேண்டும். இக்கருத்தினை,

“தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற / சொற்காத்துச் சோர்விலாள் பெண்.” (குறள் 56)6 என வலியுறுத்தும் திருவள்ளுவர், மேலும் இதை மற்றொரு குறளின் மூலம் வலியுறுத்துகிறார்.

“புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார் முன் / ஏறுபோல் பீடுநடை” (குறள் 59)7 இங்கு ‘புகழ்புரிந்த இல்’லிலார் - எனும் சொற்றொடரை மனையாளின் நற்குண நற்செய்கைகள்” என்று பரிமேலழகர் பல இடங்களில் தம் உரையில் கூறுகிறார். நற்குண நற்செய்கைகள் பெற்ற மனைவியைப் பெறாதவர்கள் தம் பகைவர்க்கு முன் ஏறுபோல் நிமிர்ந்து நடக்க இயலாது என்று ஆண் மகனின் சமூகத்தரம் பெண்ணின் நடத்தையை பொறுத்தே தீர்மானிக்கப்படும் எனக் கூறுவதன் வழி மீண்டும் மீண்டும் பெண்ணின் நடத்தையே திருக்குறளில் வலியுறுத்தப்படுகிறது. இந்தக் கட்டுப்பாடே இவளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் முதன்மைக் கடமை என்றும் திருவள்ளுவர் குறிப்பிடுகின்றார்.

“சிறைகாக்குங் காப்பு எவன் செய்யும் மகளிர் / நிறைகாக்குங் காப்பே தலை”. (குறள் 57)9 எனும் குறள் பெண்ணை இற்சிறையில் வைத்தாலும் அவர்தன் ‘நெஞ்சைக் கற்பு நெறியில்’ நிறுத்தா விடில் இற்சிறைக்காவல் பயனில்லை என்கிறார். பெண்களுக்கு இவ்வாறு ஒழுக்க நடத்தையைப் பலவிதங்களில் வலியுறுத்தும் திருவள்ளுவர், ஆண்களுக்கு ஒழுக்க நடத்தையைக் குறித்து எங்ஙனம் கூறுகிறார் என்பதையும் இங்குக் காணலாம். பிறன்இல் விழையாமை (15) எனும் அதிகாரத்தின் வழி, ஒழுக்க நடத்தையிலிருந்து மீறிய ஆண்மகனைப் பேதமையுடையவன் (குறள் 141), அறியாமையுடையவன் (குறள் 142), இழிவுடையவன் (குறள் 144) என்ற பொருளில் கட்டப்படுகின்றான்.

இங்கு ஒழுக்க நடத்தையை மீறியவனுக்கு அறிவுரை கூறும் போக்கில் அதிகாரம் அமைத்துள்ள திருவள்ளுவர், பெண்ணுக்கு மட்டும் ‘கற்பே உயிர்’ என்னும் பொருளில் அதிகாரம் அமைத்துள்ளார். எனவே மனையாள் என்பவளை நற்குண, நற்செயல் கொண்டுள்ள இல்லாள் எனும் பொருளில் குறள் அமைத்துள்ள திருவள்ளுவர், நற்குண நற்செய்கைகளுள் முதன்மையாகக் ‘கற்பு’ எனும் கருத்தாக்கத்தை முன்வைக்கின்றார்.

இவ்வாறு சங்கம் மருவிய காலத்தில் நிலைபெற்று விளங்கிய நிலவுடைமைச் சமுதாய அமைப்பில் நிலவிய கருத்தாக்கங்கள், அக்கால இலக்கியங்களின் ஊடாகவும் பயணிக்கின்றன. எனவே இக்கருத்தாக்கத்தை திருவள்ளுவரும் ஏற்றுக் கொண்டு தம் இலக்கியத்தில் படைத்துள்ளார்.

இவ்வாறு திருக்குறளின் வழி அக்காலச் சமுதாயத்தில் பெண்ணுக்கான பாலியல் கட்டுப்பாடுகள் ‘கற்பு’ எனும் கருத்தாக்கத்தின் வழி நிலைபெற்று பெண்களை ஒடுக்கின எனும் முடிவிற்கு வர இயலுகிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com