மெளனமாய் பார்க்கிறேன்
பழ. தேவராஜன்
இப்போதெல்லாம் - உன்ளை
மெளனமாய் பார்க்கிறேன்
மெளனமாய் கேட்கிறேன்
நீதான் என்னமாய் போடுகிறாய்
ரங்காட்டம்! என்னமாய் துள்ளுகிறாய்
பெருந்துள்ளல்.
நானென்ன விஜ்ஜிராந்திதானோ?!
என் வாழ்வும் நிஷ்காமியந்தானோ?!
நியம நிஷ்டைகளில் - நீ ஆழ்ந்திருக்கிறாய்
பூஜை புரஷ்காரங்களில் புரள்கிறாய்
இப்போதும் - நான் உன்னை
மெளனமாய் பார்க்கிறேன்
மெளனமாய் கேட்கிறேன்
குப்பை மேட்டின் எச்சில் இலைகள்
இன்று கோபுர கலசத்தில் ஒட்டிக்கொண்டன.
வீசிய காற்று ஊளைக்காற்று
ஊழியக் காற்றல்லவே! சம்காரமறியா
சமத்காரியே! இதை நீ அறியாயோ?!
இப்போதும் நான் உன்னை
மெளனமாய், மிக மெளனமாய் பார்க்கிறேன்
மெளனமாய், மிக மெளனமாய் கேட்கிறேன்.
நீயோ உயரே, உயரே பறக்கிறாய்
வைக்கோல் பதரை கூட்டுகிறாய்
எக்காளத்தில் ஏதோதோ கெக்களிக்கிறாய்!
எப்போதும் போல் இப்போதும்
நான் மிக மெளனமாய்...
தீக்கங்காகவே இருந்து கொள்கிறேனே!?
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
|