தண்டத்தை விட்டு விட்டு
தலைக்காவிரிக்குப் போனவரை
சிபிஐ தேடிப்பிடிக்க
லோ குரு
பின்பு லோக குருவானார்.

வேலைக்குப் போகும்
பொம்மனாட்டிக
மோசமானவா என
முணங்கிய
சங்கர மடத்து சன்னியாசியின்
'துறவு' நிலை குறித்து
பதறப் பதற எழுதினார்
எழுத்தாளர் அனுராதா ரமணன்.

உடல் அவயங்கள்
எங்கெங்கு இருக்குதோ
அங்கங்கு இருப்பது போல
தலித்துகள்
எங்கிருக்கிறார்களோ
அங்கேயே இருக்கணும் என்ற
சங்கராச்சாரி
கொலை வழக்கில் இருந்து விடுதலை.

சங்கர மடத்தின்
ஆசார  அனுஷ்டானங்கள்
காற்றில் பறக்கிறதென்று
கடிதம் எழுதியவரின்  உயிர்
காற்றில் கரைந்தது.

சோமசேகர கனபாடிகள்
கடிதங்களுக்கு
பதில் எழுதுவதற்குப் பதில்
அவருக்கு
இரங்கற்பா எழுதப்பட்டது.

வரதராஜப் பெருமாள்
கோயிலில் பூஜைக்குப் பதில்
அன்று பலி நடந்தது;
வரதராஜரா வந்து
சாட்சி சொல்லமுடியும்?

தாதா அப்பு
மாட்டு பாஸ்கர்
குருவி ரவி
தில் பாண்டியன்
சில்வர் ஸ்டாலின்
லோக குருக்களின்
லோக்கல் குழுக்கள் இவை.

கேடிகளையும்
கோடிகளையும்
நீதிமன்றங்கள்
கழட்டி விட
கவரிமான்கள் என
காஞ்சி மடத்து கன்றுக்குட்டிகள்
சில துள்ளிக் குதிக்கின்றன.

எட்டு ஆண்டுகள்
ஏறாத படிக்கட்டுக்கள் ஏறி
மாநிலம் விட்டு
மாநிலம் போய்
வாங்கிய தீர்ப்பன்று
மௌனவிரதம்.

சந்தர்ப்ப சாட்சியங்கள்
ராமபக்தனுக்கு
அருளவில்லை.
அவர் மகன் கேட்கிறான்
“என் தந்தை தானே
வெட்டிக் கொண்டு இறந்தாரா?"

லோககுரு மௌன விரதமிருக்கலாம்
லோகம் மௌனமாயிருக்குமா?

- ப.கவிதா குமார்