கீற்றில் தேட

சொத்துக்காகப் பெற்றோரைக் கொல்லும் பிள்ளைகள், பணத்தாசையினால் நீதிமன்றத்தில் சந்தித்துக் கொள்ளும் சகோதர சகோதரிகள், பொருளுக்காக நம்பிக்கைத் துரோகம் செய்யும் வேலைக்காரர்கள் மத்தியில் எந்தத் தேவையும் இல்லாத சமுதாயம் யாசகர்களின் சமுதாயம். சுத்தம், அழுக்கு எல்லாம் ஒன்றுதான் இவர்களுக்கு. வேஷம் போட்டு அதிக வசூல் செய்யும் ஏமாற்றுக்காரர்கள் மத்தியில் எந்தத் தேவையும் இல்லாதவர்கள்.

mm deen bookவெறும் சாப்பாடு குறித்த அக்கறை மட்டுமே யாசகர்களை இயக்குகிறது, இல்லையென்றால் அறையப்பட்ட ஆணி போல ஒரே இடத்தில் இருந்து செத்துப் போவார்கள் என்ற தகவலைச் சொல்கிறது எழுத்தாளர் எம்.எம். தீன் எழுதிய ‘யாசகம்’ என்ற நாவல்.

பிள்ளைகளைக் கடத்திக் கொண்டு வந்து அவர்களை ஊனமாக்கி பிச்சை எடுக்க வைக்கும் பிச்சைக்காரர்கள் பற்றி நாவல் பேசவில்லை; வண்டியில் விழச் செய்து ஏமாற்றிப் பணம் பறிக்கும் ஏமாற்றுக்காரர்களை ஆசிரியர் குறிப்பிட விரும்பவில்லை; கடற்கரையில் தனிமை தேவைப்படுவோரிடம் சென்று கையேந்தும் கொடுமைக்காரர்களை வெளிச்சம் போடும் வக்கிரம் இங்கு இல்லை; சிக்னலில் நிற்கும் வண்டிகளில் இருக்கும் மனிதர்களைத் தட்டித் தட்டிப் பணம் கேட்போரைப் பற்றிய கதை அல்ல இது. யாருமே பார்க்க விரும்பாத, பார்க்க சகிக்காத, பார்க்க பழகாத, பார்க்க தைரியமில்லாத ஒருவேளை பார்த்தாலும் பேச அச்சப்படும் யாசகர்களை இந்த நாவல் விளக்கியிருக்கிறது.

மண்ணுக்குள் இருந்து மக்கிப் போய் உரமாகாமல் பிளாஸ்டிக் கழிவுகளாக ஆளையே விழுங்கும் சாதிப் பேய்களையும் அன்பைப் போதிப்பதாகச் சொன்ன மத அரக்கர்களையும் தன் நாவல் மூலம் தற்கொலைக்குத் தூண்டிவிட்டு அச்சமில்லாமல் நீதிமன்றத்தில் உலா வந்து கொண்டிருக்கிறார் வழக்கறிஞரும் எழுத்தாளருமான நாவலாசிரியர். சாதியையும் மதத்தையும் மிக எளிதாகக் கடந்து விடலாம் என்பதற்கு ஒரே காட்சி போதுமான சான்றாக அமைகிறது.

விவசாயிகளும் தங்கள் பச்சை பெல்ட்டை அவிழ்க்கும் அளவில் அதாவது பொருளுதவி செய்ய வைக்குமாறு சிறுவன் குட்டித்துரையின் நிலை இருப்பதாகக் நாவல் கூறும். மாற்றுத்திறனாளியான குட்டித்துரையைப் பார்வையற்றோர் பள்ளியில் சேர்த்த பின் அவனுக்கான சலுகை கிடைக்க வழி செய்யும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யும் போது சாதி சமயம் என்ற இடத்தில் ஒரு கோடு போட்டுவிடுங்கள் என்றான் குட்டித்துரை. அவன் தாயாரின் பெயர் முத்தாச்சி என்றால் அவன் வாப்பாவின் பெயர் தக்கரை பீர்முகமது என்பதால் அவர்கள் இருவரும் இணைந்து வாழ்வதில் சங்கடங்கள் வரக்கூடாது என்பதற்காக யோசிக்கும் சிறுவனின் எண்ணித்திலும் முத்தாச்சி என்ற தன் பெயரை ‘மும்தாஜ்’ என்று மாற்றிக் கொள்ளத் துணியும் அவன் தாயாரின் நிலையும் சாதாரணமாக ஒரு புரட்சியை விதைத்துவிடுகிறது.

மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சிலைத் துப்புவதற்கு நிறைய பக்குவம் இருக்க வேண்டும். அந்தப் பக்குவத்தை அடைந்து விட்டார் ஆசிரியர்.

வேறு வேறு ஊர்களில் வாழும் சொந்த பந்தங்கள் ஒன்றாகக் கூடும் இஸ்லாமியர் உணவுத் திருவிழாவான ‘கந்தூரி’ விழாவில் இளைஞன் ஒருவன் அவனுக்குச் சித்தி என்று சொல்லும் வயதில் உள்ள ஒருத்தியின் பாலியல் உணர்வுக்குப் பலியாகி விடுகிறான் என்று கதையில் ஒரு திருப்பத்தைக் காட்டுகிறது நாவல். பக்தர்களுக்குக் கடவுளின் அதிசயங்கள் நிகழும் என்று மூளைச் சலவை செய்து வைத்திருக்கும் இந்தச் சமூகத்தில் அதற்கு எதிராக மனித வக்கிரங்களும், மனித அவலங்களும் போகிற போக்கில் நடந்து முடிந்து விடுகின்றன என்பதை ஆழமாகப் பேசியுள்ளது நாவல்.

மரணத்திற்குப் பின் பெரிய வாழ்வுக்கான உத்திரவாதத்தை எல்லா மதங்களும் சொல்வதால் ஆன்மிகத்தைப் பிடித்துக் கொண்டிருக்கின்றனர் என்ற சட்டை உறிக்கப்பட்ட உண்மையையும், மேலுலகில் நீடித்த வாழ்வு என்பது சுவாரஸ்யமும் புதுமையும் இல்லாதது, அங்கே எப்படித்தான் வாழ்ப்போகிறோமோ என்று அய்யாகண்ணு வக்கீல் கேட்பதாக ஒரு கேள்வியையும் அமைத்துவிட்டு ஆரம்பத்தில் வக்கீல் பொதுவுடைமைக் கொள்கையைத் தழுவி இருந்ததாகக் குறிப்பது சிந்தனைக்கு உரியது.

கதையில் பல்வேறு யாசகர்கள் இருந்தாலும் ஞானிகளைப் போல வாழும் மூவரைச் சுற்றியே கதை படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பிறக்கும் போதே பிச்சைக்காரர்களாகப் பிறக்கவில்லை. ஆனால் வாழ்க்கைச் சூழல் அப்படி மாற்றிப் போட்டுவிடுகிறது என்று கூறும் போது ‘ஓவென’ கதறி அழவேண்டும் என்று தோன்றுகிறது. மேலும் இன்றைய காலகட்டங்களில் திருமணத்திற்கு வந்திருக்கும் அழைப்பாளர்களே தாலி கட்டும் முன்பாகச் சாப்பாட்டு அறைக்குள் நுழைவதால் தள்ளு முள்ளு நடந்து விடுகிறது என்று ‘சோத்துப்பெட்டி’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் கூறுவது கேலி கூத்தாக அமைகிறது. அவன் தன்னை முற்பிறவியில் வள்ளலாரைப் போல வாழ்ந்ததாகச் சொல்வதெல்லாம் வேடிக்கை தானே தவிர வேறு ஒன்றுமில்லை.

பெண்களை மேன்மைபடுத்திய தீன் சார், சில ஆண்கள் தங்கள் வாழ்க்கையைத் தொலைக்க பெண்களே காரணம் என்று நம்மைக் கோபப்பட வைத்துவிட்டு ‘முத்தாச்சி’ என்ற பெண் கதாபாத்திரத்தின் மூலம் ஆறுதல் அடைய வைக்கிறார்.

பழமொழிகளும் தத்துவக் கருத்துக்களும் நாவலில் நிறையவே காணப்படுகின்றன. “யாரையும் வாயி புளிச்சது மாங்கா புளிச்சதுன்னு பேசக்கூடா துல்ல” என்றும் “பூனை எளைச்சு போயிட்டுன்னா எலி மச்சான் மொறை கொண்டாடுமாம்” என்றும் தத்துவம் பேசும் தக்கரை பீர்முகமது உண்மையிலேயே யாசகன்தானா என்ற கேள்வியை நமக்குள் எழுப்புகிறது. பார்வையற்ற மாற்றுத் திறனாளியின் திறமை, குரங்குகளின் இயல்பு, மாதக் கடைசியில் கருணைக்குத் தடை, ஆங்காங்கே காதல், தத்துவ விசாரம் என்று முப்பத்தியெட்டு அத்தியாயங்களில் விளாசியிருக்கிறார் ஆசிரியர்.

நெல்லைப் பகுதியில் உள்ள இஸ்லாமிய மக்களையும் அவர் தம் வாழ்க்கை முறையையும் படம் பிடித்துக் காட்டும் நாவலில் பிச்சைக்காரர்களுக்கு இரயில் நிலையத்தில் காவலர்களால் மட்டுமல்லாமல் குடிகாரர்களாலும் துன்பம் வருவதை எதார்த்தமாகப் பேசுகிறது கதை. குடி போதையில் பெரிய குச்சியை வைத்துக் கொண்டு வேறு போக்கிடம் இல்லாமல் தூங்கிக் கொண்டிருக்கும் அவர்களை அடித்துத் துன்புறுத்துவது கொடுமையிலும் கொடுமை.

தேவைப்படுவோருக்கு உதவ வேண்டும் என்று சொல்லும் அதே அளவிற்கு வேஷம் போட்டு இரக்கம் உள்ளவர்களைக் கொள்ளையடிக்கக் கூடாது என்றும் வலியுறுத்துகிறார் எழுத்தாளர். யாசகர்களுடன் ஒருவராக வாழ்ந்து இந்த நாவலை எழுதியிருக்கிறார் என்பது வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் புரியும். வாசித்துப் பாருங்கள், மனித சமுதாயத்தை நேசிப்பீர்கள்!

- முனைவர் சி.ஆர்.மஞ்சுளா

நூல்: யாசகம் - நாவல்
ஆசிரியர்: எம்.எம். தீன்
விலை: ரூ.200 மட்டும்
வெளியீடு: ஜீவா பதிப்பகம், காஞ்சிபுரம்
Pin It

தி. ஞானசேகரனின் “திருப்புமுனைத் தரிப்புகள்” சிறுகதையினூடான ஒரு தேடல்

டாக்டர் தி.ஞானசேகரன் “குருதிமலை” என்னும் நாவலினூடாக எனக்கு அறிமுகமான ஒரு படைப்பாளி. என்னுடைய இளமாணி பட்டப்படிப்பின் இறுதி ஆண்டில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கும் நோக்கில் மலையக நாவல்களை ஆய்விற்குத் தெரிவு செய்தபோது இவருடைய படைப்பாளுமையில் ஈடுபாடு கொண்டு சிறுகதைகளையும் தேடி கற்கத் தொடங்கினேன். மருத்துவப் பணிக்கு அப்பால் ஒரு இலக்கிய ஆர்வலனாக பரிமாணம் பெற்று தன்னுடைய எழுதுகோலால் நவீன இலக்கியங்களை எழுத்துலகுக்கு அளித்துக் கொண்டிருக்கும் ஒரு படைப்பாளி என்பதையும் மருத்துவப் பணியின் நிமித்தம் மலையகத்தில் வாழ்ந்தபோது தோட்டத் தொழிலாளர்களின் துயரங்களைக் கண்டு நெஞ்சுப் பொறுக்காது அம்மக்களின் வாழ்வியலை அவர்தம் உணர்வுகளுடனும் தேயிலைச் செடிகளுடனும் கலந்து யதார்த்தப்பூர்வமாக வெளிப்படுத்திய ஓர் ஆளுமை மிக்க படைப்பாளி தி. ஞானசேகரன் என்பதையும் அறிந்து கொண்டேன்.

இப் படைப்பாளியின் படைப்புகளில் அலாதியான ஈடுபாடு கொண்டு படிக்கத் தொடங்கிய படைப்பிலக்கியங்களில் “அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும்” என்னும் சிறுகதைத் தொகுப்பும் குறிப்பிடத்தக்கது. இச் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெறும் “திருப்புமுனைத் தரிப்புகள்” என்னும் சிறுகதை என்னை வெகுவாக பாதித்தது. மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் கல்வியில் எதிர்நோக்கும் பிரச்சினை காலங்காலமாக அரங்கேறி வரும் வரலாற்று நிதர்சனம் ஆகும். ஆய்வாளர்கள் பலரும் இது தொடர்பான பல கருத்துக்களை முன்வைத்துள்ளமையை மலையகம் சார்ந்து வெளிவந்த ஆய்வுக்கட்டுரைகளினூடாக கண்டு கொள்ள முடிகின்றது. இச்சிறுகதையும் மலையக மக்களின் பிள்ளைகள் கல்வியில் எதிர்நோக்கும் சவால்களைத் தெளிவுப்படுத்துகின்றது. எனினும் “திருப்புமுனைத் தரிப்புகள்” என்னும் சிறுகதை “மலையகம்” என்ற பிரதேச உணர்வைத் தாண்டி கற்றலில் மாணவர்கள் எதிர்நோக்கும் சவால்களில் ஒன்றான சூழலின் வகிபங்கு குறித்து சிந்திக்க இடம் தருகின்றது. மருத்துவர் என்னும் நிலையைத் தாண்டி ஒரு படி மேலே சென்று கல்வி உளவியல் ஆலோசகராக இச்சிறுகதையில் தி. ஞானசேகரன் பரிணமிக்கிறார் என்றுதான் கூற வேண்டும்.

கற்றல் கொள்கைகளின்படி மாணவர்களுக்கான தேவைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் போதுதான் முழுமையான கற்றல் வெற்றியளிக்கும் என கல்வி உளவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஒரு மாணவனின் கற்றல் செயற்பாட்டில் கவர்ச்சி, கவனம், புலக்காட்சி, கற்பனையும் சிந்தித்தலும், ஆய்வுதிறன், பயிற்சியும் பழக்கமும் முதலிய காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன.

“திருப்புமுனைத் தரிப்புகள்” என்னும் சிறுகதை ஒரு மாணவன் கல்வி கற்பதற்கு சூழல் தடையாக அமைவதையும் தனது தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக சவால்களை உடைத்தெறிந்து வைராக்கியத்துடன் மீண்டும் கல்வி கற்கத் தொடங்குவ‌தையும் கருப்பொருளாக்கி படைக்கப்பட்டுள்ளது.

பெருமாள் ஒரு தோட்டத் தொழிலாளி. தன்னுடைய மகன் தங்கராசுவை ஒரு சிறந்த அறிவாளியாக உருவாக்க வேண்டும், உயர்ந்த உத்தியோகத்தில் அமர்த்திப் பார்க்க வேண்டும் என்னும் அவாவில் அதற்கான முழு பிரயத்தனங்களையும் செய்து வருகின்றான். ஆனால் இவற்றிட்கெல்லாம் பிரதான தடையாக அமைவது தான் வாழும் லயக் குடியிருப்பும் அங்கு வாழும் சூழல் இடையூறுகளுமாகும். இவற்றை இச்சிறுகதை ஆசிரியர் கதையின் பல இடங்களில் பதிவுசெய்துள்ளமையை காண முடிகின்றது.

“… தங்கராசுவிற்கு மட்டும் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டால் அமைதியாகப் படிக்க முடிவதில்லை. புத்தகத்தை மூடிவைத்துவிட்டுச் சத்தம் ஓயும் வரை சுவருடன் சாய்ந்து கொள்வான்.”

“தங்கராசுவின் வீட்டில் அவனது தாயிற்கும் தங்கைக்கும் அம்மை வருத்தம் வந்திருந்தபோது, இஸ்தோப்பின் மூலையில் இருந்து படிக்க வேண்டியிருந்தது. பக்கத்துவீட்டு அம்மாயி கரகரத்த குரலில் நடுக்கத்தோடு பாடிய மாரியம்மன் தாலாட்டுத்தான் அவனுக்கு மனதில் பதிந்ததேதவிர பாடங்கள் மனதில் பதியவில்லை.”

“பக்கத்து காம்பரா கந்தையா புதிதாக வாங்கிய ரேடியோவில் உச்சஸ்தாயில் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. படித்துக் கொண்டிருந்த தங்கராசு தனது இரு காதுகளுக்குள்ளும் சுட்டு விரல்களைச் செலுத்திக் காதுகளைப் பொத்திக்கொண்டு அன்றைய பாடத்தை உரத்துப் படிக்கத் தொடங்கினான்.”

என ஆசிரியர் குறிப்பிடுகின்றார். இச்சிறுகதையில் வரும் பாத்திரங்களினூடாகவும் சிறந்த கற்றல் செயற்பாட்டிற்கு ஆரவாரமான சூழல் தடையாக அமைவதை சூழல் ஞானசேகரன் குறிப்பிட்டுச் செல்கின்றார்.

“இதென்னடா மசிரு பூசாரி, எந்தநாளும் உடுக்கு அடிச்சு ஆளுங்கள ஏமாத்திக்கிட்டிருக்கான்… லயத்தில ஒரே சத்தம், புள்ளைங்க படிக்கேலாது. இப்பவே போயி செவிட்டில ரெண்டு குடுத்து உடுக்கைப் புடுங்கிக்கிட்டு வாரேன்.” என பெருமாள் என்னும் பாத்திரம் குறிப்பிடுகின்றது. மேலும் தங்கராசு படிப்பதற்கு சூழல் தடையாக இருப்பதால் அடிக்கடி அவன் தந்தை பெருமாள் பக்கத்துக்காம்பராக்காரர்களுடன் சண்டையிடுவதும் வழக்கமாக இருந்தது. இதனை,

“கந்தையா ஆக்குரோசத்துடன் வெளியே வந்தான். ‘இந்தா பெருமாளு தேவையில்லாத பேச்சுப் பேசாத. போன கெழம சுப்பன் கங்காணி வீட்டில சடங்கு நாலுநாளா ஸ்பீக்கர் போட்டாங்க… அப்ப மட்டும் சத்தம் இல்லியா… அந்த நேரம் ஒம்புள்ள படிப்பு எங்க போச்சு…?” என வரும் சான்றுகளும் கற்றல்சார் செயற்பாடுகளில் சூழல் வகிக்கும் பங்கினை எடுத்துக் காட்டுகின்றது.

ஒரு பிள்ளை கல்வி கற்கும்போது அமர்வதற்கும் எழுதுவதற்கும் தளபாடங்கள் இருப்பதுடன் அவை வசதியாக இருப்பதும் இன்றியமையாததாக இருத்தல் வேண்டும் என கல்வியியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதுமட்டுமல்லாது பிள்ளைகளின் கல்வி தொடர்பான விழிப்புணர்வு பெற்றோர்களுக்கு இருப்பதும் இன்றைய காலகட்டத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது. இச்சிறுகதையில் வரும் தங்கராசுவின் தகப்பன் பெருமாள் ஓரளவு கற்றல் செயற்பாட்டில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளை அறியக் கூடியவனாக இருந்தபோதும் அவனின் தாயிற்கு அவ்வாறான சிந்தனைத் தெளிவு குறைவாக இருப்பதையும் தி.ஞானசேகரன் தெளிவுபடுத்தியுள்ளார்.

காற்றோட்டமுள்ள, போதியளவு வெளிச்சமிக்க, அமைதியான சுகாதாரமான சூழல் அமையும்போது கற்றல் இலகுவாகும். எனினும் தங்கராசுவிற்கு அவ்வாறான சூழல் இன்மையை பின்வரும் சிறுகதை சான்றுகள் தெளிவுபடுத்துகின்றன.

“ ‘என்ன ஆயா, எந்தநாளுந்தான் சொல்லிக்கிட்டிருக்கேன். நான் படிக்க ஒக்காந்தேன்னா நீயும் அடுப்பில பொகையப் போடுற… எனக்குக் கண்ணு எரியுது@ படிக்க முடியல்ல’ என்றவாறு கண்களைக் கசக்கியபடி நிமிர்ந்தான் தங்கராசு.”

“தங்கராசுவிற்கு மூக்கு அரித்தது. பலமாக இரண்டு தடவை தும்மிவிட்டு மூக்கிலிருந்து வடிந்த நீரைப் புறங்கையால் துடைத்தபடி நிமிர்ந்தான். முன்புறமாகக் குனிந்திருந்து எழுதியதால் முதுகு வலிக்கத் தொடங்கியது. சம்மணங்கொட்டிய கால்களை விரித்து நீட்டிநிமிர்ந்து உட்கார்ந்தான்.

“தங்கராசு படித்துக்கொண்டிருக்கும் போது, குப்பி விளக்கிலிருந்து வெளிவந்த புகையும் அடுப்புப் புகையுடன் சேர்ந்துகொண்டது. கண்களில் எரிச்சல் அதிகமாகியது. வெளியே எழுந்து சென்று அவன் மூக்கைச் சிந்திவிட்டு மூலையிலிருந்த அலுமினியக் குடத்திலிருந்து கோப்பையில் தண்ணீரை ஊற்றிக் கண்களையும் முகத்தையும் கழுவிக் கொள்கிறான்.”

பிள்ளை படித்துக் கொண்டிருக்கும்போது கவனம், சிந்தனை சிதறாமல் இருப்பதுடன் வேறு வேலைகளைச் செய்யச் சொல்லி கட்டளையிடுவதும் அப்பிள்ளையை பாதிக்கும் ஒரு முக்கிய விடயமாகும். மலையகத் தோட்டத் தொழிலைப் பொருத்தவரையில் குழந்தை பராமரிப்பில் வீட்டிலுள்ள வளர்ந்த பிள்ளைகளும் பிள்ளைக்காம்பராவும் பிரதான பங்கினை வகிக்கின்றது. இச்சிறுகதையில் வரும் தங்கராசு படித்துக்கொண்டிருக்கும்போது அவனுடைய தாய் பல இடையூறுகளை ஏற்படுத்துவதையும் காண முடிகின்றது.

“தங்கராசு மீண்டும் படிக்கத் தொடங்கியபோது தங்கச்சிப் பாப்பா அழுகையோடு நெளியத் தொடங்கினாள். ‘அடே தங்கராசு அம்மாப்புள்ளய கொஞ்சம் ஆட்டிவிடு. சோறு வடிச்சுக்கிட்டு இருக்கேன்.” என கூறியதிற்கு பதிலாக தங்கராசு தாயை நோக்கி

“ ‘என்ன ஆயா, கொஞ்சங்கூட படிக்க வுடமாட்டேங்கிற. வேலை வச்சுக்கிட்டு இருக்கே…’ எனச் சினத்துடன் கூறிக்கொண்டே எழுந்த தங்கராசு தொட்டிலை ஆட்டத் தொடங்கினான்.” என வரும் உரையாடல் பகுதியும் சான்று பகர்கின்றது.

எனவே தொகுத்து நோக்கும்போது கற்றல் செயற்பாட்டில் மாணவர்கள் திறமையாகச் செயற்படுவதற்கும், கற்கும் விடயங்களை உள்வாங்கிக் கொள்ளவும் ஆரோக்கியமான சூழலும் ஒரு காரணியாக அமைவதை தி.ஞானசேகரனின் “திருப்புமுனைத் தரிப்புகள்” என்னும் சிறுகதை எடுத்துக் காட்டுகின்றது. பொதுவாக கற்றல் செயற்பாடுகளில் மலையகத் தோட்டப்புறங்கள் வெற்றியளிக்காமையை மையப்படுத்தி இச் சிறுகதை இடம்பெற்றாலும் “கற்றல் - சூழல்” என்னும் எண்ணக்கருக்களை வைத்து நோக்கும்போது பொதுவாக மாணவர்களின் கற்றல் செயற்பாட்டின் பாதகங்கள் மிகத் தெளிவாக வெளிப்படுத்தப்படுகின்றது. மலையகம் என்ற உணர்வை விடுத்து இச்சிறுகதை பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் ஒரு படிப்பினையை ஏற்படுத்தி அவர்களை சிந்திக்கத் தூண்டுவதாக அமைவதையும் அறிய முடிகின்றது. ஆகவே ஒவ்வொரு பெற்றோர்களும் பிள்ளைகளின் கற்றல்சார் செயற்பாடுகளை செம்மைப்படுத்துவதற்கு முன்னர் வீட்டுச்சூழலை முதலில் கருத்தில் கொண்டு பின்னர் அவர்களின் கற்றலை முன்னெடுத்து செல்வது சாலச் சிறந்ததாகும்.

- சி.ரஞ்சிதா

Pin It

உண்மையில் இந்தக் கேள்விதான் இன்று இந்தியாவில் உள்ள பல அரசியல் கட்சிகளுக்கு பெரும் தொல்லை தருவதாக உள்ளது. மக்களால் வெறுக்கப்பட்ட, மதவெறி பிடித்த, கார்ப்ரேட் அடிவருடிக் கும்பலான பிஜேபியால் எப்படி பல மாநிலத் தேர்தல்களில் வெற்றி பெற முடிந்தது என்பது பலருக்கும் வியப்பாக உள்ளது. குறிப்பாக அதற்கு அடித்தளமே இல்லாத மாநிலங்களில் கூட, எப்படி அதனால் தன்னுடைய ஆட்சியை விரிவுபடுத்த முடிந்தது என்பது பலருக்கும் குழப்பமான ஒன்றாகவே இருக்கின்றது. ஆனால் 'பாஜக எப்படி வெல்கிறது?' என்ற இந்தப் புத்தகம் அதற்கான விடையை மிகத் தெளிவாக ஆய்வுப்பூர்வமாக பதிவு செய்துள்ளது. இந்த நூலை எழுதிய பிரசாந்த் ஜா, தன்னுடைய நேரடியான கள ஆய்வின் மூலம் நம்மை பிஜேபியின் தேர்தல் உத்திகளை அறிய வைக்கின்றார். நாம் நினைத்துக் கொண்டிருப்பதற்கு எதிர்த் திசையில் அவர்கள் தேர்தல் உத்திகளை அமைக்கின்றார்கள். நவீன தொழில்நுட்பத்தை இடதுசாரிகள் பயன்படுத்துவதைவிட மிக லாவகமாக நேர்த்தியாக வலதுசாரிகள் பயன்படுத்துகின்றார்கள். மக்களின் கருத்துக்களை திசைமாற்ற பிற்போக்குவாதிகள் மிக முற்போக்கான உத்திகளை எல்லாம் எப்படி கையாள்கின்றார்கள் என்பதை இந்நூல் பதிவு செய்துள்ளது.

bjp eppadi velgirathuஇந்தப் புத்தகத்தின் அரசியல் நிகழ்வுகள் எல்லாம் முக்கியமாக உபி, பீகார், அரியானா, மணிப்பூர் போன்றவற்றை சுற்றியே எழுதப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக உபியைச் சுற்றியே பெரும்பாலும் உள்ளது. காரணம் உபி, பிஜேபிக்கு முக்கியமான சோதனைக் களமாக பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது. ஒரு தேசியக் கட்சியாக பாஜக உருவாவதற்கான மையப் பகுதியாகவும் இம்மாநிலம் இருந்துள்ளது. உபியில் எப்பொழுதெல்லாம் பாஜக வெற்றியடைந்ததோ, அப்பொழுதெல்லாம் தேசிய ரீதியாகவும் அது வளர்ச்சி அடைந்தது. அதே நேரம் இம்மாநிலத்தில் கட்சி சரிவைக் கண்ட போதெல்லாம், மத்தியிலும் சரிவைக் கண்டது. அடல் பிகாரி வாஜ்பாய் மற்றும் நரேந்திர மோடி இருவருமே இந்த மாநிலத்தில் இருந்துதான் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1930 ஆம் ஆண்டு தொடங்கி தனக்குத் தேவையான பெருந்திரளான உறுப்பினர்களையும் உபியின் அலகாபாத் பலகலைக்கழகத்திலிருந்தும் , பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இருந்துமே தேர்ந்தெடுத்துள்ளது. மேலும் பிஜேபி தன்னுடைய அரசியலுக்காக பயன்படுத்தும் மூன்று கோயில்களான அயோத்தி, காசி மற்றும் மதுரா போன்றவையும் இந்த மாநிலத்தில்தான் உள்ளது.

நாம் பெரும்பாலும் பிஜேபி தேர்தலில் வெற்றி பெற மதவாதத்தையும், சாதியவாதத்தையும் மட்டுமே நம்பி இருப்பதாக நினைக்கின்றோம். ஆனால் அனைத்து சாதி மக்களையும், மத மக்களையும் கொண்ட நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் இந்த உத்தியை அவர்கள் கையாள்வதில்லை. அவர்கள் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தன்னுடைய அடிப்படையான ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தில் கூட பல முறை சமரசம் செய்து கொண்டிருக்கின்றார்கள். உபியில் இந்து - முஸ்லிம் என்னும் இரு மதங்களுக்கு இடையிலான பிரச்சினையைத் திட்டமிட்டே உருவாக்கி, அவர்கள் ஓட்டுகளை அறுவடை செய்தார்கள். அதற்காக ஜாட் சாதியைச் சேர்ந்த இரு சிறுவர்கள் தங்களுடைய தங்கையை இசுலாமிய ஆணிடமிருந்து காப்பதற்காகப் போராடிய போது, அவர்களை இஸ்லாமியர்கள் கொடூரமாக அடித்துக் கொன்றது போல போலியான காணொளிக் காட்சிகளை உருவாக்கி வெளியிட்டார்கள். இதனால் மிகப் பெரிய கலவரம் திட்டமிட்டு முசாபர் நகரில் உருவாக்கப்பட்டது. 50 பேர் பலியானர்கள், 40000 பேர் ஊரைவிட்டு வெளியேறினார்கள். இந்தக் கலவரத்தில் கிடைத்த ஆதாயத்தால் 2017 உபி தேர்தலில் பிஜேபியால் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது உள்பட பல்வேறு தகவல்களை இந்நூல் நமக்குத் தருகின்றது.

உபியில் வெல்ல முடிந்த பிஜேபியால் பீகாரில் வெல்ல முடியாமல் போனதற்கான காரணமாக மோகன் பகவத்தின் பேச்சை குறிப்பிடுகின்றார் நூலாசிரியர். ஆர்கனைசர் இதழில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மோகன் பகவத் கொடுத்த பேட்டியை நிதிஷும், லாலுவும் தங்களுடைய தேர்தல் வெற்றிக்குப் பயன்படுத்திக் கொண்டார்கள்; உயர் சாதியினருக்கும் பிற பிற்படுத்தப்பட்டோருக்குமான தேர்தலாக அதை அவர்கள் மாற்றினார்கள். பிஜேபி ஆட்சிக்கு வந்தால் இட ஒதுக்கீட்டை ஒழித்து விடுவார்கள் என்ற வலுவான பிரச்சாரம் பீகார் முழுவதும் மேற்கொள்ளப்பட்டது. அதுமட்டுமில்லாமல் லாலு எப்பொழுதும் சிறுபான்மை மக்களுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுப்பவராகவே இருந்தார். ஆனால் அமித்ஷா பீகாரில் உபியில் செய்தது போலவே இந்து முஸ்லிம் பிரிவினையை உண்டாக்கி தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என நினைத்தார். “தேர்தலில் பாஜக தோல்வியுற்றால் , தீபாவளிப் பண்டிகை பாகிஸ்தானில் கொண்டாடப்படும்” என்றார். மேலும் யாதவர்கள் அதிகம் வாழும் பீகாரில் மாட்டிறைச்சி விவகாரத்தையும் அமித்ஷா எழுப்பினார். ஆனால் பிஜேபியின் அனைத்து சதி திட்டங்களும் பீகார் மக்களிடம் எடுபடாமல் போனது. இதனால் பீகாரில் பிஜேபி தோல்வியைத் தழுவியது. உபியைப் போல பிற்பட்ட சமூகத்தின் ஓட்டுக்களை பீகாரில் வென்றெடுக்க முடியாமல் போனது. இதைப் பற்றி இந்நூல் மிக விரிவாகப் பதிவு செய்துள்ளது.

பிஜேபிக்கு இப்போது உள்ள மிகப்பெரிய பிரச்சினையே, பார்ப்பனர்களின் நலன்களுக்காக மட்டுமே கட்சி இயங்கக் கூடியது என்ற தோற்றத்தை உடைப்பதுதான். அதற்காக அது மிகக் கவனமாக கட்சியில் பார்ப்பனியத்தை முழுமனதோடு ஏற்றுக் கொண்ட பிற்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அதிகாரத்தைக் பிரித்துக் கொடுப்பதை செய்கின்றது. இந்தப் பின்னணியில் இருந்துதான் தாக்கூரான ராஜ்நாத் சிங் மற்றும் யோகி ஆதித்யநாத் போன்றவர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. மேலும் கட்சியிலும் பல மட்டங்களில் புதிய பதவிகளை உருவாக்கி, பிற்பட்ட சாதியினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இதைப் பற்றியெல்லாம் மிக விரிவாக இந்நூல் பதிவு செய்துள்ளது.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொகுதிகளைப் பெற பிரிவினைவாதத் தலைவராகிய சஜ்ஜாத் லோனை கட்சிக்குள் இழுத்தது பிஜேபி. இதற்காக மோடி-லோன் சந்திப்புக்கள் நடந்தன. இன்று காஷ்மீரின் பிரச்சினையில் பிரிவினைவாதிகளின் மீது குற்றம் சாட்டும் தேசபக்த யோக்கியர்களுக்கு இது தெரியுமா எனத் தெரியவில்லை. அதே போல அசாமில் குடியேறும் வங்கதேச முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தை மேற்கொண்ட பிஜேபி, அசாமில் மக்கள் செல்வாக்கோடு இருந்த சர்மாவை தன்பக்கம் இழுத்தது எப்படி என்பதையும் இந்நூல் பதிவு செய்கிறது. மணிப்பூரில் இந்த தேசபக்தர்கள் நாகா மொழி பேசுவோரை தனியாகப் பிரித்து நாகாலாந்து என்னும் தனி நாடாக அறிவிக்க வேண்டும் எனப் போராடிய பிரிவினைவாதிகளுடனும் கூட்டு வைத்து தேர்தலைச் சந்தித்தனர். அவர்களின் இலக்கு எப்போதுமே வெற்றியை நோக்கியே இருந்தது. அதற்காக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சமரசங்களையும் அவர்கள் செய்து கொண்டார்கள். குறிப்பாக பிஜேபியைச் சேர்ந்தவர்கள் மணிப்பூரின் மலைவாழ் மக்களிடம் ஓட்டு கேட்டு சென்றபோது, கிறித்துவ பழங்குடியின வேட்பாளர்கள் அங்கிருந்த மக்களிடம் 'பாஜக என்றால் பாரதீய ஜீஸஸ் பார்ட்டி' என்று சொல்லி நம்ப வைத்து ஓட்டு கேட்டார்கள். அதை எல்லாம் இந்நூல் பதிவு செய்துள்ளது.

மேலும் மக்களை ஏமாற்ற மோடி மற்றும் அமித்ஷா பல்வேறு சந்தர்ப்பங்களில் பேசிய தந்திரம் மிக்க பேச்சுக்கள், எப்படி எதிர்க்கட்சிகளின் தவறுகளை தனக்கு சாதகமாக அது பயன்படுத்திக் கொள்கின்றது, வெற்றி வாய்ப்பு இல்லாத இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ள தலைவர்களை ஆசைகாட்டி கட்சிக்குள் இழுத்தது, பிஜேபிக்கு பெருமளவு நிதி உதவி அளிக்கும் பணக்கார்கள், எல்லாவற்றுக்கும் மேலாக அமித்ஷா என்ற தனிமனிதர் கட்சியின் வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகள் என பறந்து விரிந்த தளத்தில் இந்நூல் பயணப்படுகின்றது. தேர்தல் அரசியலையும் அதன் நயவஞ்சகப் போக்கையும் அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு இந்நூல் ஒரு கையேடாக இருக்கும். இந்நூலை எதிர் வெளியீடு வெளியிட்டுள்ளது. இந்நூலை சசிகலா பாபு என்பவர் மிகச் சிறப்பாக மொழிபெயர்த்து இருக்கின்றார்.

கிடைக்குமிடம்:

எதிர்வெளியீடு
96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி-642002.
தொலை பேசி:04259-226012,9942511302
https://www.commonfolks.in
விலை ரூ.250

- செ.கார்கி

Pin It

கதை நிகழ்ந்த காலத்தை கண்டடைதல்:

 நிலமும் பொழுதும் ’முதற்பொருள்’ என்று சொல்கிறது செந்தமிழ் இலக்கணம். இலக்கியங்களில் பயின்றுவரும் களமும் காலமும் தமிழிலக்கியத்தின் செவ்வியல் பண்புகளுக்கு வலுச்சேர்க்கும் காரணிகள். ‘கறிச்சோறு’ நாவலின் கதை நிகழும் களம் என்பது, காவிரியாறு பாயும் தஞ்சை மண்டலத்தின் கிழக்குப்பகுதியில் அமைந்திருக்கும் சாலியமங்கலத்தை ஒட்டிய கிராமங்களாக உள்ளன. இந்தக்கதை நிகழ்ந்த காலத்தை கதையின்வழி அறிய முயற்சிக்கலாம்.

 karisoruநாவல், சிறுகதைகள் என்பது சமூகத்தின் பிரதிகள் என்ற பொழுதிலும் அவை சமூக நிகழ்வுகளை இடம், நாள், சம்பவங்களை ஒரு வரலாற்றுப் பதிவினைப் போல் குறிப்பிடுவதில்லை. வரலாறு என்பது சார்புத் தன்மையுடையது. வரலாறு அதிகார மையங்களையே முக்கியத்துவப்படுத்தும். எக்காலத்திலும் வரலாறு என்பது வெகுமக்களின் வரலாறாக இருந்தது இல்லை. நாட்டில் வாழும் பெரும்பான்மை தொகையினரின் சமுகக் பண்பாட்டு வாழ்வியல் சார்புகளையும் அவர்களது வாழ்வியல் நம்பிக்கைகளையும் வரலாறு தன்னகத்தே கொண்டிருப்பதில்லை. இந்தக்குறையை இலக்கியம் போக்கிவிடுன்றது. இலக்கியம் வெகுமக்களின் கதையைப் பேசுகின்றது. அவ்வாறு பேசும்பொழுது அந்தக்கதையைச் சொல்லும் எழுத்தாளரின் பார்வையும், விளக்கமுமாகவே இலக்கியங்கள் அமைவது தவிர்க்க முடியாதது.

 இவ்வாறு, புனைவு இலக்கியங்கள் வரலாற்றுப் பதிவுகளிலிருந்து வேறுபட்டு நின்றாலும், அந்தக்களத்தில் நிகழ்ந்த ஏதேனும் ஒரு உண்மையான வரலாற்றுச் சம்பவங்களின் மீது தான் அந்தப்புனைவு எழ முடியும். எனவே, நாவல் எனும் பெருங்கதையாடல் நிகழ்த்தப்படும்போது, அதில் எத்துணைப்பங்கு உண்மை, எத்துணைப்பங்கு புனைவு என்பதனை தேர்ந்தெடுக்கும் உரிமை படைப்பாளனின் வசம் ஒப்புவிக்கப்பட்ட உரிமையாகின்றது.

 ஆனால், எழுத்தாளன் ஒரு வாசகனிடம் அந்தப்புனைவை கடத்துவதற்கான உயர்நோக்கம் என்னவாக இருக்க முடியும்? நடந்த கதையை அப்படியே ஒரு வரலாற்றுப் பதிவாக தராமல், அந்நிகழ்வுகள் குறித்த தனது பார்வை ஒழுங்கை, தன்னையொத்த இன்னொருவனிடம், ஒரு வாசகனிடம் கடத்த வேண்டிய அல்லது குறைந்த பட்சம் அந்தக்கதையை இன்னொருவரிடம் சொல்ல வேண்டிய தேவை ஒரு படைப்பாளனுக்கு ஏன் எழுகின்றது?

 நீல.பத்மநாபன், தனது ‘தலைமுறைகள்’ நாவலின் முன்னுரையில், அந்நாவலில் புனவின் தன்மை பற்றி பொதுவாகக் குறிப்பிடும்போது, “புனைவு என்ற பெயரில், உண்மையாகவே நடந்த அந்த கதையில் வரும், கதைமாந்தர்களின் பெயர்களையும், ஊர்களையும் மாற்றி எழுதுவதன் மூலம், அவர்கள் அவமானப்படுத்தப்படுவதை நான் விரும்பவில்லை” என்று கூறுவார். இது அண்மைக்கால வட்டார புனைவிலக்கியவாதிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கோட்பாடாகவே ஆகியிருக்கின்றது, என்பதற்கு அவ்விலக்கியங்களை படைக்கும் எழுத்தாளர்களின் வாக்குமூலத்திலிருந்தே அறிய முடிகின்றது.

 நடுநாட்டு மக்கள் கதையை எழுதும், கண்மணி குணசேகரன் அவரது ‘அஞ்சலை’ நாவலில் வரும் முக்கிய கதாப்பாத்திரமான ‘அஞ்சலை’ அவரது தெருவில் இன்றும் வாழ்ந்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்மணி தான் என்று ஒத்துக்கொள்கிறார்.

 ஆகவே, தற்கால புனைவிலக்கிய படைப்புகளில், கதைநிகழும் களம், கதைமாந்தர்களை பற்றியச் செய்திகளில் பெயர் மாற்றங்களைக்கூட விரும்பாத அசல் விவரணைகளே, வட்டார நாவல்களின் உயிர்த்துடிப்பாக இருக்க முடியும், என்று கோட்பாடு எழுந்து வருகின்றது.

 இந்தப்புதிய கோட்பாட்டின் வழியமைந்த வட்டார நாவல்களின் படைப்பு வீரியத்தையும் நம்பகத்தன்மையையும் உறுதிப்படுத்த கதை நிகழும் காலத்தை படைப்பினூடே சொல்ல வேண்டியது மிக முக்கியமானதாகிறது.

 சான்றாக, ‘கறிச்சோறு’ நாவலின், நாயகியைப்போல வலம்வரும் ‘கமலா’ - ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சமயத்தில் வயதிற்கு வந்துவிட்டதால், அத்தோடு படிப்பிற்கு முழுக்கு போடப்பட்டது. ஏனெனில் ‘வாகரக் கள்ளர்’ சாதி மரபில் வயதிற்கு வந்த பெண் வெளியில் செல்வதும், பிற ஆண்கள் பார்க்கும்படி நடமாடுவது என்பதெல்லாம் கிடையாது” என்று நாவலில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

 தற்காலத்தில், இந்த மரபு வழக்கில் இல்லாததை பெண்கல்வியின் வளர்ச்சியிலிருந்து அறிந்துகொள்ள முடியும். ஆயின், படைப்பாளன் கூறுவதைப்போல வயதிற்கு வந்த ’வாகரச்சாதிப்பெண்களை’ வெளியில் அனுப்பும் வழக்கமில்லை, என்று எழுத்தாளர் பதிவுச்செய்வதை அந்த வழக்கமிருந்த காலத்தோடு அதைப்பொருத்திப் பார்த்துக்கொள்ள வாசகன் முயலும்போது, அவ்வழக்கம் எக்காலத்தில் நடப்பில் இருந்தது, என்பதனை அறிந்துக் கொள்வதற்கான வாய்ப்புகளையும் படைப்பாளன் தனது கதையில் காட்ட வேண்டும் என்பது தவிர்க்க முடியாததாகின்றது. இல்லையெனில் அந்தப்பதிவின் நம்பகத்தன்மை குறித்து வாசகனுக்குள் ஐயங்கள் எழக்கூடும்!

 அந்த வகையில் நாவலில் சித்தரிக்கப்பட்டிருக்கும் கதையம்சத்தின் வழி, அது நிகழ்ந்த காலத்தை கண்டடைய முயல்வதற்கு சில நிகழ்வுகள் ஆதாரமாகக் கொள்ளலாம். ’வாகரக்கள்ளர்’ சாதி வழக்கத்தை மீறி, கமலாவின் அப்பா முத்துக்கண்ணு விசுவராயர், தெற்குச்சீமைக்கு மாப்பிள்ளை பார்க்கச் செல்கின்றார். தெற்குச்சீமையில் அறுத்தக்கட்டிக் கள்ளன்களோடு கொள்வினை கொடுப்பினை வைத்துக்கொண்டால், வாகரக்கள்ளர்களின் பெருமை குறைந்துவிடும், என்று உள்ளூர் சாதியத்தலைமைகள் (அவர்களே கிராமத்தலைவர்களுமாக இருக்கின்றனர்) எதிர்க்கின்றன.

 இந்நிலையில், தெற்குச்சீமையில் சோத்துப்பட்டு மாப்பிள்ளை வீட்டாரிடமிருந்து வரும் கடிதத்தில், ‘மாப்பிள்ளை பூண்டி வாண்டையார் கல்லூரியில் தொடர்ந்து படிக்க விரும்புவதால், அவனை கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்க பெரும்பாடுப்பட்டதாக” நாவலில் வரும்.

 ’கறிச்சோறு’ நாவல் கதை நிகழும் காலத்தை கணக்கிடுவதற்கு, இந்தச்சம்பவத்தை நாம் கணக்கில் எடுத்துக்கோண்டேமேயானல், பூண்டி வாண்டையார் கல்லூரி 1956-ற்கு பிறகு தான் தொடங்கப்பட்டுள்ளது என்பதானால், இந்தக்கதை விடுதலைக்கு பிறகான காலக்கட்டத்தில் நிகழ்கிறது என்பதனை அறிய முடிகின்றது. அத்துடன் திருமணம் போன்ற நிகழ்வுகளில் இரு வீட்டாருக்கு இடையேயான செய்தித்தொடர்புகள் கடிதவழி நடைப்பெற்றுள்ளதால், விடுதலைக்கு பிறகான காலக்கட்டத்தில் குறிப்பாக எந்த காலக்கட்டத்தில் நிகழ்கிறது என்பதனை உறுதிப்பட சொல்ல இயலவில்லை. ஏனெனில், கடித வழிச்செய்தித்தொடர்புகள் சாமனிய மக்களிடையே எப்பொழுது தொடங்கியது, எப்பொழுது அது முடிவுக்கு வந்து, செல்போன் வழி தொடர்புகள் தொடங்கின என்பதனை அறுதியிட்டுச் சொல்ல முடிவதில்லை.

 நாவலின் இன்னொரு இடத்தில், உள்ளூர் வாகரக்கள்ளர்களின் பகையை தவிர்க்கும்பொருட்டும், கமலா-சாம்பசிவம் காதல்கதை ஊரறிந்த செய்தியாக விட்டப்படியாலும், கமலாவின் திருமணத்தை உடனடியாக நடத்த வேண்டிய கட்டாயத்தில் முத்துக்கண்ணு விசுவராயர் இருக்கிறார். தெற்குச்சீமைக்கு சம்மந்தம் போட போய் வந்த பிறகு, அதைக் கண்டித்த தருமையா நாட்டாரை,

 ‘எனது மகளுக்கு எந்தவூரில் வேண்டுமானாலும் மாப்பிள்ளை பார்ப்பேன்; இந்தவூர்க்காரன் என்ன செஞ்சிடாவோன்னு நானும் பார்த்துப்புடுறேன்”,

 என்று ஆவேசமாகப் பேசியவர், அதே தருமையா நாட்டாரிடம் சென்று, ‘வாகரக்கள்ளர்ச் சாதியிலேயே’ தனது பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்க்கு ஏற்பாடு செய்யுமாறு வழிக்கு வந்துவிடுகின்றார்.

 ’வாகரக்கள்ளர்’ சாதியிலேயே, முத்துக்கண்ணு விசுவராயர் தரத்திற்கு ஏற்ற மாப்பிள்ளையை, தருமையா நாட்டார் தேடிப்பிடித்து நிச்சயம் பண்ணுவித்த சில நாட்களில், நிச்சயம் செய்த மாப்பிள்ளை வீட்டிலிருந்து ஒரு கடிதம் வருகின்றது. அந்தக் கடிதத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ‘திவ்ய சமூகம்’, ‘நமஸ்காரம்’, ‘சௌக்கியம்’, ‘இஸ்டப்பந்துக்கள்’ போன்ற சமஸ்கிருத சொற்களின் பயன்பாட்டைப் பார்க்கும்போது, சாமானியர்கள் எழுதும் கடிதங்களில் இத்தனை சமற்கிருத சொற்கள் இடம்பெற்றிருக்கிறது என்றால், இக்கதை சுமார் 1970-1980 அல்லது 1970-1990 காலக்கட்டத்தில் நிகழ்ந்திருக்கலாம் எனக் கருத இடமுண்டு.

 இன்னொரு இடத்தில், கமலாவைக் காதலிக்கும் இளைஞன் சாம்பசிவத்தைப் பற்றிச் சொல்லும்போது,

 ‘சாம்பசிவம் சட்டையில்லாத உடம்போடு தலைமுண்டாசுடன் தொறட்டிக் கம்பைத் தோளில் வைத்தப்படி ஆட்டுக்கிடா ரெண்டை ஓட்டிக்கொண்டு’ போவதாக குறிப்பிடுகிறார்.

தொறட்டிக்கம்பைத் தோளில் வைத்துக்கொண்டு ஆடு மேய்க்கும் இளைஞர்களை இன்று காண்பதரிது. எனவே, இத்தகையச் சூழல் ஒரு தலைமுறைக்கு முன்பு நிலவியிருக்கக்கூடும்!

 இலக்கியம் ஏன் எழுதப்படும் என்பதுப்பற்றி கூறுகையில், ”மனிதகுல வரலாறு எனும் நெடும்பரப்பில், ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள், ஒரு குறிப்பிட்ட நிலத்தில் வாழ்ந்த மானுடச்சமூகத்தின் வாழ்வியல் நம்பிக்கையாக எது இருந்தது என்பதனைப் பதிவுச் செய்வதற்காகவே இலக்கியங்கள் எழுதப்பட வேண்டும்”, என்று எழுத்தாளர் இமையம் தெளிவுப்படுத்துவார்.

 ’கறிச்சோறு’ காட்டும் மானுடச்சமூகத்தின் வாழ்வியல் நம்பிக்கையாக சாதி இருந்திருக்கின்றது, என்பது நாவலின் ஒவ்வொரு பக்கங்களிலிருந்தும் அறிய முடிகின்றது.

 இமையம் குறிப்பிடும் அந்தக் குறிப்பிட்ட கால எல்லையை கண்டடைவதன் நோக்கம், இடமும் பொருளும் காலத்தோடு பொருந்தி வரும்பொழுது தான் கதைச்சொல்லியின் இலக்குகளும், நோக்கங்களும் குறைந்தபட்சம் படைப்பாளன் எழுதும்போது அவனுக்குள் எழுந்தநின்ற உணர்வு நிலையை வாசகனிடம் கடத்த முடியும்!

 ஏனெனில், ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பிலேயே நிலைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சமூக இனத்தின் வாழ்வியல் பண்பாட்டுக்கூறுகள், காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே வருகின்றன என்பதனை தான் ‘தலைமுறைகள்’ நாவலில் நீல.பத்மநாபன் உணர்த்துவது. ஒரு சமூகம் ஒரு தலைமுறையில் கொண்டிருந்த நம்பிக்கைகளையும் வழக்கங்களையும் இன்னொரு காலத்திற்கேற்ப மாற்றமுடைந்துள்ள தலைமுறைக்கும் பொருத்திப்பார்த்துவிட வாய்ப்புண்டு!

 புனைவு இலக்கியங்கள் பெரும்பாலும் நிகழும்போதே எழுதப்படுவதில்லை. படைப்பாளனின் வாழ்வனுபத்தின் ஏதோ ஒரு காலக்கட்டத்தில் அவனுக்குள் பெருந்தாக்கத்தை ஏற்படுத்திய சம்பவங்களை அவனது நினைவு அடுக்கிலிருந்து உருவி எடுத்துக்காட்டுகின்றான். அவ்வாறு நினைவுக்கூறும்பொழுது, சம்பவங்களுக்கு இடையே உள்ள ஒருமைப்பாட்டின் விளைவாக, ஒரு காலத்தில் நடந்த ஒரு நிகழ்வோடு, இன்னொரு காலத்தில் நடந்த ஒரு நிகழ்வினை காலப்பொருத்தமின்றி எடுத்துக்கூறிவிட நேரிடலாம். அது படைப்பாளன் அறிந்து செய்கின்ற வேலையல்ல. அது நினைவுக்குறிப்புகளின் தன்னிச்சையான இணைப்புகளினால் ஏற்படும் இயற்பிழையே!

 இந்த எனது கருதுகோளிற்கு சான்று காட்டுவெதெனில், இந்தக்கட்டுரையில், நாவலில் வருவதாக நான் சுட்டிக்காட்டிய கடிதம், முத்துக்கண்ணு விசுவராயர் தெற்குச்சீமையான நெல்லுப்பட்டுக்குப் போய் வந்த மாப்பிள்ளை பார்த்துவிட்டு வந்த பிறகு, மாப்பிள்ளை வீட்டார் எழுதியக் கடிதமே. ஆனால், இக்கட்டுரையில் தருமையா நாட்டார் மூல வாகரைக்கள்ளச்சாதியிலேயே கமலாவிற்கு ஒரு சம்பந்தம் பேசி நிச்சயம் முடித்த பிறகு அவர்கள் எழுதிய கடிதமென குறிப்பிட்டுள்ளேன். இந்தப்பிழை ஏன் நேர்கின்றது?

 வாசிப்பனுபவம் ஏற்படுத்திய மனச்சித்திரத்தில், ஒத்த நிகழ்வுகளுக்கு இடையே சிந்தை தானாகவே ஏற்படுத்திக்கொண்ட இணைப்பு தான் அதற்கு காரணம். ’கமலாவிற்கு மாப்பிள்ளைப் பார்த்தல்’ என்ற இரண்டு ஒத்தச் சம்பவங்களுக்கிடையே உருவாக்கிக்கொண்டு இணைப்பினால் அது நிகழ்கின்றது. இதேப்பிழை படைப்பிலும் எழ வாய்ப்புள்ளது என்றாலும், அதனை படைப்பாளன் கடத்தும் உயர் உணர்ச்சியினால் சமன் செய்துவிடுவான்.

 படைப்பாளன் என்பவன், கதை நிகழும் காலத்தின் பேரெல்லையைப் பற்றி கவலைப்படுபவன் அல்ல. மாறாக, கதைமாந்தர்களின் மனவோட்டத்தில் கணத்திற்கு கணம் அவர்களது மனத்தினுள் எழுகின்ற எண்ணிலடங்கா பன்மை எண்ணவோட்டங்களைப் பற்றிப் பதிவுச் செய்வதில் தான் தனது கவனத்தை குவிப்பான் போலும்!

 தெற்குச்சீமை நெல்லுப்பட்டில் கமலாவிற்கு மாப்பிள்ளைப் பார்த்து விட்ட வந்த பிறகு, எழுந்த ஊராரின் எதிர்ப்புக் குரலின் பிரதிநிதியாக வரும் தருமையா நாட்டார் இதுகுறித்து, முத்துக்கண்ணு விசுவராயிரிடம் பேசிக்கொண்டிருக்கும் உரையாடலின் போது ஒரு கட்டத்தில்,

“ஊரப்பகச்சிகிட்டு ஒங்களாளா ஒண்ணும் பண்ணிர முடியாது. நீங்க தெக்கு சீமப்பக்கம் சம்பந்தம் போடப் போறதை ஊரு ஜனம் மொத்தமும் ஊரோட கௌரவம்னுதான் எடுத்துட்டிருக்கு”,

 என்று கூற, பதிலுக்கு முத்துக்கண்ணு

“ஓ… அப்படியா சங்கதி… நா தெக்குச்சீமையில ஏ பொண்ணுக்கு சம்மந்தம் போடாம தூங்கப்போறதில்ல… மச்சா… முடிஞ்சா பாருங்க…”

 என்று வீராப்பாய் பேசினாலும், உள்ளுக்குள் ஒரு நடுக்கம் இருந்தது என்பது தான் உண்மை. உள்ளுக்குள் எடுக்கும் இந்த உதறல் ஒரு கோணத்திலிருந்து அவரை தாக்கியது என்றால், அவரது மகள் கமலாவைப் பற்றியச் சந்தேகம் இன்னொரு பக்கத்திலிருந்து தாக்கியது. சோத்துப்பட்டுக்கு மாப்பிள்ளைப் பார்க்கச் சென்று வந்த அந்த நாளின் இரவில், நடுச்சாமத்தில் யதேச்சையாக கொல்லைப்புறத்திற்கு எழுந்த வந்தபோது, தனது வீட்டுக்கொல்லைபுறத்தில் ஒரு ஆணும் பெண்ணும் ரகசியாமய் சந்தித்து பேசிக்கொண்டிருப்பதைக் கண்ட அவர், அந்தப்பெண் தனது மகள் கமலா தான் இருக்கும் என்று சந்தேககப்பட ஆரம்பிக்கின்றார்.

 ஊராரை எதிர்த்து தெற்குச்சீமையில் தனது மகள் கமலாவிற்கு சம்பந்தம் போட முயற்சித்ததால் எழுந்த ஊராரின் எதிர்ப்பினால் அவருக்குள் ஏற்பட்டிருந்த கிலி ஒருபக்கம், அதேநேரத்தில் தனது மகள் கமலா யாரோ ஒருவனைக் காதலிக்கிறாள் என்ற சந்தேகம் ஏற்படுத்திய மனக்கிலேசம் இன்னொரு பக்கமென இரண்டும் சேர்ந்துகொண்டு முத்துக்கண்ணு விசுவராயரை முடக்கிப் போடுகின்றது. அவரது அன்றாடச் செயல்பாடுகளைக்கூட செய்ய நாட்டமின்றி சிந்தனையில் குழம்பிக்கிடக்கின்றார்.

 இத்தகைய ஒரு இக்கட்டானச்சூழலில் முத்துக்கண்ணு விசுவராயரின் மனதில் கணத்திற்கு கணம் எழும் மாறுபட்ட எண்ணவோட்டங்களில் முன்னுக்குப்பின் உள்ள முரண்பாடுகளை மட்டும் 4 பக்கங்களுக்கு மேல் எழுதிச் செல்கிறார் எழுத்தாளர் சி.எம்.முத்து.

 ஊரை எதிர்க்கும் துணிவு எழும் அடுத்தக்கணமே, ஊரைப்பற்றிய பயமும் எழுகின்றது.

 தனது மகளின் மீதான சந்தேகம் வலுக்கும் அடுத்தக்கணமே, ‘ச்சே.. அப்படியெல்லாம் இருக்காது..” என்ற நம்பிக்கையும் வருகின்றது.

 ஊரார்களைவிட, சாதிச்சமாச்சாரத்தில் அதிக அக்கறை உள்ளவன் தான் நான், எனும் எண்ணம் எழும் அடுத்த விநாடியில்,

 ‘தனது வீட்டு விவகாரத்தை சட்டையைக்கூட ஒழுங்கா போடத்தெரியாத பயகளெல்லாம் பேசுகிறார்களே”, என்று நினைக்கும்போது,

 ‘மனிசரகாட்டிலும் என்ன சாதி வேண்டியிருக்கு; சாதியான்…சாதி.. மயிருசாதி” என்ற வெறுப்புணர்ச்சியும் எழுகின்றது.

 தனது மகன் தங்கவேலு போக்கிரித்தனமாக சுற்றிக்கொண்டிருப்பது வெறுப்பை உண்டுபண்ணினாலும், ‘ஊரானுங்க எத்தினிப்பேரு படதெரண்டு வந்தாலும் கவலாப்படாதீங்க; நா பாத்துக்குறன்; ஆறுலயும் சாவு நூறுலயும் சாவு” என பேசியபோது அவன் மீது நம்பிக்கை எழுகின்றது.

 புற உலகை உள்வாங்கி அக உலகில் அசைப்போடும் தருணங்களில் தான், புற உலகு தனக்கு காட்டியிருக்கின்ற பாதை கரடுமுரடாண, முற்கள் நிறைந்த மென்மையான பாதங்களை, குத்திக்கிழிக்கின்ற பாதை; அதைத்தான் சமூகம் தனக்கு அமைத்துக் கொடுத்திருக்கின்றது என்ற உண்மை புலப்படுகின்றது. அந்தப்பாதைகளுக்கு மாற்றாக, மகிழ்ச்சியான, சிக்கலில்லாத வாழ்விற்கான வழிகளை மனம் தேடுகின்றது. புதிய மாற்றுப்பாதைக்கான தர்க்கங்களை தேடுகின்றது. அந்தத்தேடல், சாதரண சம்சாரிகளையும் மனிதச்சமூகம் குறித்தும், அதன் வாழ்க்கைக் குறித்தும் சிந்திக்கும் தத்துவ விசாரணைக்குள் கொண்டுபோய் செலுத்திவிடுகின்றது. அந்த தத்துவ விசாரணைகளை செழுமைப்படுத்தி புதிய மாற்றுப்பாதைகளை கண்டடையும்போது, அந்தப்புதிய மாற்றுப்பாதைகளிலும் மனிதன் பேண்டு வைத்த ’சாதி’ எனும் மலங்களின் நாற்றம், குடலைப்பிடுங்கி அப்படியே வேளியேப்ப்போடும் அளவிற்கு கொடிந்தீவினைகளை தனது இயபுகளாகக் கொண்டிருக்கிறது என்று தெரிய வரும்போதுதான், சாதியச்சமூகத்தின் மீதான வெறுப்பும், கடுப்பும் தலைக்கேறி,

 “அடேய் மனுசா! நல்ல புத்திமானாடா நீ..! மனுச இனத்தில் சாதி என்ற முத்திரையைக்குத்தி, நொறுங்கிப்போன கண்ணாடித் துண்டுகள மாதிரி எத்தனை சில் பண்ணியிருக்கின்றாய்…?”

என, முத்துக்கண்ணு விசுவராயர் போன்ற சாதி அபிமானிகளையே கலங்கடித்து, சாதிக்கு எதிராக இயங்க துணியவைக்கின்றது.

இவ்வாறு, வறுத்தும் புறச்சூழலின் விளைவாக எழும் சிந்தனைகள் கணங்கள் தோறும் மாறி மாறித் தோன்றும் அந்த நுண் கால எல்லைக்குள் புகுந்து, அந்த எண்ணவோட்டங்களை அப்படியே படம்பிடித்து காட்டுவதையே, ஒரு எழுத்தாளர்கள் தான் இயங்க வேண்டிய காலப்பரப்பு எல்லைகளாக தேர்வு செய்கின்றார்கள்!

கதைத்தொடங்கும் அந்த முனையிலிருந்து, அது முடியும் எல்லைவரை பரவி நிற்கின்ற அகன்ற கால எல்லையை படம்பிடிப்பதைக் காட்டிலும், ஒரு கதாப்பத்திரத்தினுள் நுழைந்து, ஒரு சில நிமிடங்களில் அவருக்குள் எழும் அந்த மனப்பிம்பங்களை, தன்னால் முடிந்து மட்டும் பெரியச்சித்திரமாக வரைந்து காட்டுவதில் தான் எழுத்தாளர்களின் கவனம் குவிகின்றது.

 புனைவெழுத்தாளனுக்கு ஆண்டுகளைவிட, கணங்களே முக்கியம்

 ஆண்டுகளை விட சில கணங்கள் ஒரு மனிதனுக்குள் ஏற்படுத்தும் உற்சாகமும், ஆர்வமும் வலிமை மிக்கவை என்பதனை படைப்பாளன் கண்டு கொள்கிறான். கமலா-சாம்பசிவம் காதல் விவகாரம் ஊரறிந்த செய்தியானப் பிறகு, குடும்பத்தில் கலகம் வெடிக்கின்றது. கமலாவின் காதல் விவகாரம் ஏற்படுத்திய கோபத்தில் ஒருநாள், முத்துக்கண்ணு விசுவராயர் இடுப்பில் கட்டியிறுந்த வாரினை உருவி தன் மகள் கமலாவை விலாசி எடுத்துவிடுகின்றார்.

 ”வந்தாரங்குடி சாதிக்கெட்ட அறுத்தக்கட்டி கள்ளனுக்கு, வாகரக்கள்ளன் வீட்டுப் பெண் கேக்குதா”

 என்று ஊர் நாட்டாமை தருமையா நாட்டார், சாம்பசிவத்தை நடு வீதியில் நிற்கவைத்து அவமானப்படுத்தியப் பிறகு, சாம்பசிவம் மனதாலும், உடலாலும் ஓ… வென்று ஒடிந்துபோய் விடுகின்றான்.

 இச்சம்பவங்கள் நடந்து முடிந்து எல்லாம் சற்று அமுங்கி நாட்கள் பல கடந்த நிலையில் ஒருநாள், சாம்பசிவம் தெரு வழியாக கமலா வீட்டு நெருக்கத்தில் நடந்து சென்றபோது, கமலா அவன் வருவதைக்கண்டு வாசலிலேயே அழகுக்காட்டி நிற்கின்றாள். தெருவில் யாரும் இல்லை.

 ஒரு கணம் இருவரின் பார்வைகளும் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட போது, எங்கிருந்தோ வந்த இடியொன்று அவர்களுக்கேத் தெரியாமல் எதிரெதிர் திசையில் நின்றிருந்த அவர்கள் இருவரையும் தாக்கியது போல் ஓர் உணர்வு, இருவருக்குள்ளும் ஒரே சமயத்தில் எழுந்தது. இத்தனை நாட்களாக தனது மனதிற்குள் தேக்கி வைத்த விசயங்கள் எல்லாம் இறகு முளைத்து பறப்பது போலவும், வாய்முளைத்து பேசுவது போலவும் ஓர் உணர்ச்சி. அடங்கிக்கிடந்த அத்தணை உணர்ச்சிகளும் கண நேரத்தில் பொங்கி எழும் இந்த அதிசயம் எப்படி நிகழ்கிறது?

 இந்த அதிசயங்கள் கணப்பொழுதுகளில் தான் நிகழ்கின்றன. இத்தகைய அதிசய கணங்களுக்காக, மானுடம் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் காத்திருக்க தயாராக இருக்கின்றது. அந்த அதிசயக் கணங்களை ஆண்டுமுழுவதற்கும் நீட்டிக்க விரும்புவதில்லை. மாறாக, ஆண்டுகள் பலவற்றை நீட்டித்து அந்த அதிசயக்கணத்திற்காக ஏங்கித் தவிக்கின்றது மனம்.

 ஒருகணம் நிகழ்த்திய அந்த அதிசயத்தை இன்னொரு கணம் நிகழ்த்தமாட்டானா…, என்ற ஏக்கத்தில் கமலா, அவன் தெருக்கோடி போய் மறையும் வரை பார்த்துக்கொண்டே நிற்கின்றாள்.

 சாம்பசிவனின் பார்வை நிகழ்த்திய அந்த சுகமான வேதனையை அனுபவித்தவாறு அவள் வீட்டிற்குள் நடக்கின்றாள். அப்படி நடக்கும்போது, ஒலிக்கும் வளையும், குலுங்கும் கொலுசும், உதட்டில் சிரிப்பும் இணையும் அந்தக்கணத்தில் அவள் முற்றிலும் புதியவளாக தென்படுகின்றாள். அழுது அழுது வீங்கிப்போயிருந்த அவளது முகம், வெட்கத்திலும், சிரிப்பிலும் மலர்ந்திருக்கும் அந்த அதிசயத்தைக்கண்டு, அவளது அம்மா பூரணியே ஒரு கணம் ஆச்சர்யப்படுகின்றாள். சில கணங்கள் அசாத்தியமான ஆச்சரியங்களை நிகழ்த்த வல்லவை.

 இந்த அதிசயக்கணங்கள், காதலினால் மட்டும் தோற்றுவிக்கப்படுவதில்லை. வேறு பல இடங்களிலும், தருணங்களிலும் கூட அவை நிகழ்கின்றன.

 ஒட்டுமொத்த ஊரும் தனக்கு எதிராக இருக்கின்றது என்ற எண்ணமும், வந்தாரங்குடி என்பதனால் தனக்கென்று ஆதரவுக்கரம் நீட்ட ஓராளில்லை என்ற ஏக்கமும், ஏற்படுத்திய துக்கத்தோடு சாம்பசிவம் ரோட்டுப்பக்கம் சென்றபோது, அங்கே மதகுக்கரையில் அமர்ந்திருந்த கமலாவின் அண்ணன் தங்கவேலு ‘மச்சா’ என்ற அழைத்த, அந்தக்கணத்தில் உலகத்து சந்தோசமெல்லாம் தனது நெஞ்சில் வந்து கொடிக்கொண்டுவிட்டதைப்போல அந்த ஒரு சொல் அவனுக்குள் புகுந்து வேலைச் செய்கின்றது. உலகமே ஓரணியாகப் படைத்திரண்ட வந்தபோதும் தனக்கு ஆதரவாக தங்கவேலு மட்டும் நின்றால் போதுமே, என்ற பரவசம் உடலெங்கும் சீறிப்பாய்கின்றது.

 தங்கவேலு அவனிடம் பேசிவிட்டு போன பிறகு சாம்பசிவம் தனியாக அங்கேயே அமர்ந்து சிந்தித்துக் கொணிட்ருந்தபொழுது அவனது மனம் எங்கெங்கோ ஓடியது. அந்நேரத்தில், வயலுக்கு நடவு போடப்போகும் பெண்கள் சாரைசாரையாய், ஒய்யார நடையிட்டு வரப்பில் நடந்தப்போகும் அந்தக் காட்சியை கண்ட கணத்தில், அந்தக்காட்சியும், அவர்களது சிரிப்பும், பாவனைகளும் அவனுக்குள் அந்தக்கணத்தில் ஏற்படுத்திய உற்சாகம், அவனுக்குள் தேங்கியிறுந்த துன்பங்களை எல்லாம் ஒரேயடியாகத் துடைத்து எறிந்துவிடுகின்றது.

 இது கணங்கள் நிகழ்த்தும் அதிசயம். உலகில் வாழும் பெரும்பாலான மனிதர்களுக்கு அவர்களின் வாழ்வின் பெரும்பகுதி துன்பமும், வலியும், வேதனையும் மிகுந்ததாகவே இருந்தபோதிலும், மனிதர்களுக்கு வாழ்க்கையின் மீது உண்டாகின்ற தீராத விருப்பும் காதலும் பற்றும், வாழ வேண்டும் என்ற அளவுகடந்த ஆசைகளும் ஏன் தோன்றுகின்றன?

 சில கணங்கள், சில விநாடிகள், சில நிமிடங்கள் ஒரு மனிதனுக்குள் ஏற்படுத்தும் சொல்லொணா இன்ப அனுபவங்கள், அதுதான் வாழ்க்கையின் மீது தீராத காதலை உண்டுபண்ணுகின்றது. அந்தச் சிறியப்பொழுதுகளை தொடர்ந்து வரும் நாட்களும், ஆண்டுகளும் பெருந்துயரம் கொண்டதாக இருப்பினும், மனதை இலகுவாக்கிய, இன்பங்களை எளிமையாகப் பருகிய அந்தக்கணங்கள், தனக்கு மீண்டும் வாய்க்கக்கூடும், என்ற நம்பிக்கையில் தான் தனது வாழ்க்கையை ஒவ்வொரு மனிதனும் தொடர்கின்றான் போலும்!

 நாவலில், கமலாவிற்கும், சாம்பசிவத்திற்கும் இடையே நடக்கும் நேரடியான காதல் சந்திப்புக் காட்சிகளும் உரையாடல்களும் ஒப்பீட்டளவில் மிகச் சொற்பமே. கமலாவிற்கு மாப்பிள்ளைப் பார்க்க நெல்லுப்பட்டுக்குப் போன அன்று, சாம்பசிவத்தை சந்திக்கும் நோக்கில் குடுமுருட்டி வாய்க்காலில் குளித்துக்கொண்டிருக்கும்போது, அவர்கள் இருவரும் நேரடியாக சந்தித்துப் பேசிக் கொண்டிருந்ததை கோபால் குச்சிராயர், மகள் நீலா அவளது கொல்லையில் இருந்த மூங்கில்குத்து மறைவில் நின்று பார்த்து விடுகின்றாள். அந்தச்செய்தியை, நீலா கோபால் காதில் ஓதிவிட்டது தான் தாமதம். கதைச்சொல்லி குறிப்பிடுவதைப்போல, “ஊரில் நடக்கும் முக்கிவாசிப் பிரச்சனைகளுக்கு மூலக்கருத்தாவன” கோபால் குச்சிராயர், குளத்தங்கரை மரநிழலில் அவ்வூர் இளைஞர்களைக் கூட்டி, கமலாவும் சாம்பசிவமும் குடமுருட்டி வாய்க்காலில் ரகசியமாய் சந்தித்து பேசிக்கொண்டிருந்ததைப் பற்றி ஒரு குட்டிப் பிரசங்கமே செய்து முடித்துவிடுகின்றார்.

 நெல்லுப்பட்டுக்கு மாப்பிள்ளைப் பார்க்க போய் வந்தச் செய்தியை எப்படியும் சாம்பசிவத்திடம் தெரிவித்து விட வேண்டும், என்ற துடிப்பில் அன்று இரவு கமலா வீட்டுக்கொல்லையில் ரகசிமாய் சந்தித்து பேசியதை, கமலாவின் அப்பா, முத்துக்கண்ணு விசுவராயர் பார்த்து விடுகின்றார். இதுதான் கமலாவிற்கும் சாமபசிவத்திற்கும் இடையே நடக்கும் மற்றொரு காதல் சந்திப்பு.

 இந்த இரண்டு காதல் சந்திப்புகளும், அதன் விளைவுகளுமே நாவலாக விரிகின்றது. முதல் சந்திப்பு ஊருக்குள்ளும், இரண்டாவது சந்திப்பு வீட்டிற்குள்ளும் புயல் மையங்களை தோற்றுவிக்கின்றன. இரண்டு புயற்கண்களும் ஒரு கட்டத்தில் கைகோர்த்துக்கொள்ளும்போது, அந்தக்கொடும் புயலுக்குள் சிக்கிச் சீரழிந்துபோவது கமலாவின் காதல் வாழ்வு மட்டுமல்ல, அன்பு, கருணை போன்ற மானுடப்பண்புகளும் தான். சாதி எனும் சமூகக்கட்டுமானம், மானுடச்சமூகத்திற்கு ஒரு சாபக்கேடு, என்பதனை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், கதாபாத்திரங்களின் வழியேயும், கதைச்சொல்லி என்ற முறையில் தன்னிலை விளக்கமுமாக ஆற்றாமையோடும், அன்பின் பெருங்கோபத்தோடும் பதிவு செய்கின்றார் சி.எம்.முத்து அவர்கள்.

 தனது தங்கையின் காதற்பொருட்டு, சாதிக்கு எதிராக இயங்கும் கமலாவின் அண்ணன் தங்கவேலு, ஊரின் எதிர்ப்பையும், குடும்பாத்தாரின் எதிர்ப்பையும் மீறி தனது தங்கை கமலாவை சாம்பசிவத்திற்கே திருமணம் செய்துவைக்க துடிக்கின்றான். இதுகுறித்து ஒருநாள், தாயிற்கும் மகனுக்கும் ஏற்படும் கடும் வாக்குவாதத்தின் ஒருகட்டத்தில், தங்கவேலுவின் அம்மா பூரணி,

“நம்ம வூட்டுக்குள்ள ஒரு சாவு வுழுந்ததான், ஊரு வாயி அடங்கும்”,

 என்று கூற அதற்கு தங்கவேலு,

“மூனும் பேரும் சேந்து முடிவு பண்றது ஆரு சாவுறுதுன்னம்மா….? என்ன வரமுற வச்சிருக்கானுங்க கம்னாட்டிங்க…! சாதியான் சாதி… மயிருசாதி”, என்பான்.

இது தங்கவேலுவின் மனசாட்சி பேசும் பேச்சல்ல. சாதிக்கு எதிராக எழுத்தாளனுக்குள் எழும் அன்பின் பெருங்கோபம்!

 படைப்பிற்குள் இயங்கும் கதாப்பாத்திரங்கள் சாதிக்கு ஆதரவாகவும், சாதிக்கும் எதிராகவும் சரிசமமாய் நின்று சமர் செய்கின்றன. கமலாவை தான் கரம்பிடித்தால், ஊருக்கே விருந்து வைப்பதற்காக அவன் வளர்த்த நெய்ப்பசையேறிய இரண்டு ஆட்டுக்கிடாக்களை, கெடுவாய்ப்பாய் போன சூழலினாலும், அதனால் தனது மனதுக்குள் தீட்டிய வஞ்சனையினாலும், காத்தாயி அம்மன் கோவில் திருவிழாவில், முனிஸ்பர தேவதைகளுக்கு பலியிட்டு ஊருக்கே கறிச்சோறு போடுகின்றான்.

’கறிச்சோறு’ தின்னும் ஆசையில், ஊரே சப்புக்கொட்டி நிற்கின்றது. இப்பொழுது, சாம்பசிவத்தின் வந்தாரங்குடி அடையாளமோ, சாதிக்குள்ளே சாதியாக ‘அறுத்துக்கட்டிக்கள்ளன்’ என்ற அடையாளமோ விருந்திற்கு வந்திருந்தவர்களின் மனதில் இருந்து காணாமல் போய்விடுகின்றன. ‘சோற்றில் ஏதுடா சாதி…” என்பது அவர்களது கோட்பாடு. பந்தியில் இலைப்போட்டு, கறிவறுவல், கறிபிரட்டல், கறிஉருண்டை, கறிகோலா, கறிபொடுமாசு, எழும்புக்குழம்பு என விதவிதமாக பரிமாறி, சாப்பிடும் போகும் சமயத்தில், ஊர் நாட்டாமைக்கும், சாம்பசிவத்திற்கும் நடக்கும் வாக்குவாதத்தின், ஒரு பகுதியில் இப்படி வருகின்றது:

“சாதியே இல்லாதப்ப சாதிக்குள்ளேயே சாதி வேறப் பாக்குறீங்க…”

“சாதி இல்லன்னு ஆருடா… சொன்னா…?”

“ஏன் பொஸ்தகத்துல படிக்கல.. நாடவம் பாக்கல… சினிமாலகூட பேசுறாங்களே… தலைவருங்கு மைக்கு வச்சி பேசுறதெல்லாம்…”

“அம்புட்டும் பொய்யிடா.. ஊர ஏமாத்துறத்துக்குச் சொல்றானுவ… ஒன்ன மாறி ஆளுங்கள பித்துக்குளி பயலாக்குறா… சாதி உண்டுடா…”

“மாமாவ்… துமரடியா சொல்லாதீங்க… தலைவருங்க கண்டா ஒங்க நாக்க அறுத்துப்புடுவாங்க…”

“அவங்கெடக்காண்டா மயிராண்டி… நானும் இந்த கிராமத்துக்கு தலைவன் தான் சொல்றே கேட்டுக்க… சாதி உண்டுடா.. சாதி உண்டு… மாடறுக்குற பறயங்குள்ள எத்தன சாதிருக்குன்னு தெரியுமாடா… தலைவனாம் தலைவன்… அவனுக்கென்னாதடா மசுரத்தெரியும்… அப்பன் பாட்டன் பாட்டனுக்கும் பாட்டன் காலத்துலேயே சாதிய ஏ பிரிச்சி வச்சன் தெரியுமா…. எல்லாம் ஒரு வகையில அடங்குனும்னுதாண்டா… ஒன்ன மாதிரி ஆளுங்க துமரடியா பேசப்பேசத்தான் சாதி வளர்ந்துகிட்டு இருக்கு… சாதியப்பத்தி தெரியாதவனுக்கெல்லாம் தெரியவச்சிப்புட்டானொவோ… எலே மயிரு.. ஆரு என்ன பேசுனா என்னாடா… கள்ளன் கள்ளந்தான்.. பள்ளன் பள்ளந்தான்… பாப்பான் பார்ப்பாந்தான்…போடா மயிரு…”

 இந்த உரையாடலுக்குப் பிறகு, சாதி ஏற்பு, சாதி மறுப்பு என்ற இந்த எதிர்க்கூறுகளின் முரணியக்கத்தில், எழுத்தாளர் எந்தப்பக்கம் நிற்கின்றார், என்ற ஐயம் இயல்பாகவே ஒரு வாசகனின் உள்ளத்தில் எழ வேண்டும்.

 கமலா-சாம்பசிவம் காதல் இணையர், தங்கவேலு, வெறுப்படையும்போது முத்துக்கண்ணு விசுவராயர், பொதுவாகவேப் பெண்கள் என, நாவலுக்குள் சாதிக்கு எதிராக இயங்கும் கதாப்பாத்திரங்களின் வழி தனது சாதி எதிர்ப்பை, வாய்ப்பு நேரும்போதெல்லாம் வெளிப்படுத்தி நிற்கிறார் எழுத்தாளர். ஆனால், இவற்றைக்கடந்து, ஒரு கதைச்சொல்லியாக கதாப்பாத்திரங்களின் உரையாடல்களுக்கு அப்பால் நின்று எழுதும் தன்னிலை விள்க்கங்களில் தான் அவருடைய உண்மையான சாதி எதிர்ப்பு மனநிலையை வாசகர்கள் கண்டுகொள்ள முடியும்!

 அத்தகைய ஒரு பதிவினை இந்நாவலில், அத்தியாயம் 7-ல் அவர் தன் இச்சிக்கு வாசகனிடம் சொல்லும் ‘சங்கதிகள்’ முக்கியமானவை என்று நான் கருதுகின்றேன். அதன் முக்கியத்துவத்தைக் கருதி, அவற்றை அப்படியே தருவது சாலப்பயக்கும் நன்மை எனக் கருதுகின்றேன்:

“இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்துக்கொண்டிருக்கின்ற ந்மது இளைஞர்களுக்கு அப்பாக்களோ-அம்மாக்களோ –ஊரார்களோ கட்டுப்பாடு விதிக்காத பட்சத்தில் அவர்கள் சாதிவிட்டு கல்யாணம் பண்ணிக்கொள்ளத் தயார்தான். ஆனால், தருமையா நாட்டார், கோபால்குச்சிராயர் போன்ற ஆசாமிகளால் போடுப்படுகிற முட்டுக்கட்டை, அவர்களின் இளமை வாழ்க்கையையே நாசாமாக்குகிறது, என்ற உண்மையை அவர்கள் எங்கேயாவது அற்கிறார்களா?

மனசுக்கு பிடித்த பெண் இருந்தால் போதுமென்று நினைக்கிற இளைஞர்களின் மத்தியில் தருமையா நாட்டார் போன்ற நச்சுக்கள், ஊடே புகுந்து அவர்களின் மனசையே மாற்றிவிடுகிற உண்மையை ஒவ்வொரு இளைஞர்களும் அறிந்திருந்தும் கூட அதை எதிர்க்க வேண்டுமென்ற திராணி, இன்னும் இந்த இருபதாம் நூற்றாண்டு கண்ட இளைஞனுக்கு வரவே இல்லை!

நல்ல விசயங்கள் மனசுக்குள் வேலைச்செய்ய வெகுகாலம் எடுத்துக்கொள்ள, கெட்ட விசயங்கள் உடனே ‘லபக்’கென்று பிடித்துக் கொள்வதற்கு, மனிதர்களுடைய பலஹீனங்களும், விசித்திரமான கற்பனைகளும், குணாதிசயங்களுமே காரணம், என்ற உண்மையை இவர்களில் எத்தனைப்பேர் அறிந்திருக்கிறார்கள்?

 கோபால்குச்சிராயர் போன்ற நச்சுக்கள் சொன்ன சங்கதிகளுக்கெல்லாம், இளைஞர்கள் பூம்பூம்மாடு மாதிரி தலையைத்தான் உலுக்கினார்களே தவிர, ஒருத்தராவது அது தவறானதென்று சொல்ல முன் வரவில்லையே?”

 இந்த, ஆற்றாமையின் வெளிப்பாட்டில் தான் படைப்பாளனைக் கண்டுகொள்ள முடியும்!

 நாவலில், கமலாவின் வழி அவர் காட்ட விரும்பும் பெண்ணின் அற்புத ஆற்றல்கள் வியக்கத்தக்கது. பூப்படைந்து விட்டாலே, பொதுவெளியில் நடமாட முடியாது என்று இறுக்கமான கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ள ‘வாகரக்கள்ளன்’ வழியில் பிறந்த கமலா, தனது இளமை அழைத்துச்செல்லும் வழியில் சென்று, வந்தாரங்குடி ‘அறுத்துக்கட்டிக்கள்ளன்’ சாதியில் வந்த சாம்பசிவத்தை காதலனாக மனதிற்குள் நிறைத்துக்கொள்கிறாள். தனது காதலனைச் சந்திக்க வேண்டும் என்ற ஆவலில், காலங்காலமாக அவளது சமூகம் பெண்ணிற்கு விதித்திருக்கும் அத்துணை கட்டுப்பாடுகளையும் சாமர்த்தியமாக நொறுக்கிவிட்டு, குடமுருட்டி வாய்க்காலில் குளிக்கபோகும் சாக்கில், தனது காதலன் சாம்பசிவத்தோடு அவர்களது காதலின் எதிர்காலம் குறித்துப் உரையாடிக்கொண்டிருக்கும்போது ஒரு கட்டத்தில், சாம்பசிவத்திற்கு கமலாவை கல்யாணம் செய்துகொள்வோம், என்ற நம்பிக்கையே இல்லாமல் விரக்தியாகப் பேசுகின்றான். அச்சமயத்தில் கமலா சொல்வாள்,

“அப்டி முடிவு பண்ணிராதீங்க மச்சா, நான் நினைச்சிப்புட்டா உங்களால என்ன தான் முடியாது?” என்று.

 இதுதான் பெண்சக்தியை அடையாளம் காட்டுவது. ஆணாதிக்கச் சாதியச் சமூகம், பெண்ணின் ஒவ்வொரு அசைவையும் தனது விருப்பத்திற்கேற்ப ஆட்டி வைக்க முடியும் என்ற அசட்டு நம்பிக்கையில் உருவாக்கப்பட்டுள்ள கர்வமிக்க போலிச்சங்கிலிகளை, சட்டென்று அறுத்தெறிந்து விடும் வல்லமை தனக்கு உண்டு என்று ஒவ்வொரு பெண்ணும் உணர்ந்தே தான் இருக்கின்றாள். அந்தப்பெண்ணாற்றல் தான் இறுக்குமான சாதியக் கட்டுப்பாட்டுக்குள் இருந்தும், அதனை மீறி வெளியேற நினைக்கும் கமலாவின் சொற்களில் வெளிப்படுகின்றது.

 சாதியச்சமூகத்தில் பெண், ஆணுக்கு நிகரான ஆதிக்கங்களையும் அதிகாரங்களையும் கொண்டிருப்பவளில்லை. காலந்தோறும் வழங்கிவரும் பாலின சமத்துவமின்மையின் கொடுமைகளை சாதியச்சமூகத்தில் அனுபவித்துக் கொண்டிருப்பவள். பெண், சாதியை அடுத்த தலைமுறைக்கு கடுத்தும் கருவி மட்டுமே.

 சாதியச்சமூகத்தில் பெண் அதிகாரத்திற்கும் ஆதிக்கத்திற்கும் ஆட்படுத்துப்படுவதால், அவள் எக்காலத்திலும் சாதியத்திற்கு வெளியே நிறுத்தப்படுபவளாகின்றாள். பெண்கள் சாதியச்சமூகத்திற்குள் வாழ்ந்தாலும், அவர்கள் சாதிய அதிகாரங்களுக்கு புறத்தே நிறுத்தப்படுவதனால், எக்காலத்திலும் பெண்கள் சாதியற்றவர்களாகவே வாழ்கின்றனர்.

 ஒரு சாதி இந்துவின் வீட்டில், வளர்க்கப்படும் ஆடு, மாடு, நாய் போன்ற உயிரினங்கள் எப்படிச் சாதியச் சமூகத்தின் வேர்களை தொடர்ந்து அடுத்த தலைமுறைக்கு கடுத்துவதில், அதனை நிலை நிறுத்துவதில் எந்தப்பங்கும் வகிக்காமல், ஒரு கருவியாக மட்டும் பயன்படுகின்றனவோ, அதைப்போலவே தான் சாதியச்சமூகத்தில் வாழும் பெண்களின் நிலையும். அவர்கள் வெறும் கருவிகள் மட்டுமே; பங்கேற்பாளர்கள் அல்ல. மனித இனத்தில் ஆணுக்கு எதிர்நிலைப் பாலினம் பெண், என்ற இயற்கையியலின் அடிப்படையில் சாதியச்சமூக ஆண்களோடு பெண்கள் உறவுக்கொள்ள நேரிடும்போது, சாதியத்தின் பண்புக்கூறுகள் அவர்கள் மீது ஒப்பிற்காக பண்பேற்றம் செய்யப்படுகின்றது. இந்நடைமுறை ஒரு வழக்கமாகத் தொடரும்பொழுது, பெண்களும் சாதியச்சமூகத்தின் அங்கமே என்றொரு தோற்றம் பொதுவெளியில் உருவாகியிருக்கின்றது. இந்த தோற்றத்தின் பின்னால், இருக்கக்கூடிய உண்மையென்னவென்று ஒவ்வொரு பெண்ணும் உணர்ந்தே இருக்கின்றார்கள். சாதியச்சமூகத்தில் தானொரு அதிகாரமிக்க பங்காளியாக இல்லாமல், ஒரு கருவியாக மட்டுமே இருப்பதனால், பெண் அந்த சாதிச்சமூக அமைப்பிற்குள் இருந்து எளிதாக வெளியேற முடிகின்றது. அவ்வாறு வெளியேறுவதற்குரிய எல்லாத் தார்மீக அடிப்படைகளும், அதற்கான ஆற்றலும் பெண்ணிற்குள் இருக்கின்றது என்பது தான், கமலாவின் வார்த்தாயில்

“நான் நினைச்சுப்புட்டா…”

 என்று வெளிப்படுகின்றது.

 பெண்கள் பிறக்கும்போதே, தாய்மைப்பண்போடு தான் பிறக்கின்றார்கள்! அவனைப்பெற்ற தந்தைக்கும் கூட அவள் தாயெனக் கருதத்தக்கவள். பெண்களின் தாய்மைப்பண்பு என்பது, காக்கும் பண்பு. முட்டையிடும்போது, இல்லாத வலிமை, குஞ்சுப்பொறிக்கும்போது ஒரு தாய்க்கோழிக்கு எப்படி வருகின்றது? கவுச்சி ஏறிய ஆட்டுக்கிடாவையும், வேட்டையாடும் நாய்களையும் ஒரே நேரத்தில் விரட்டி அடிக்கும் அந்த வல்லமை கற்பனை செய்ய முடியாதது. பெண்ணிற்குள் இயங்கும் அந்த பெருஞ்சக்தியை அடையாளம் கண்டுகொள்பவன் தான் எழுத்தாளன். “பெண்ணிற் பெருந்தக்க யாவுள” என்று வள்ளுவன் வியப்பதும் இந்த பெண்சக்தியைத்தானே!

 ”Red Sorghum” என்ற முக்கியப் படைப்பிற்காக, நோபல் பரிசினைப்பெற்றுள்ள சீன இலக்கியவாதி மோ யான் (Mo Yan), பெண்ணாற்றலைப் பற்றி குறிப்பிடும்போது, ”பெண்களின் வலிமையை நாம் கற்பனையே செய்ய முடியாது; ஆதலால் எனது நூல்களில் வரும் பெண் பாத்திரங்களின் காலணிக்குள் நான் என்னை நுழைத்துக்கொள்ள முயற்சிக்கிறேன்” என்பார்.

 எழுத்தாளர் சி.எம்.முத்து அவர்களும் தனது ’கறிச்சோறு’ நாவலில் அந்தப்பெண் சக்தியை நமக்கு அடையாளம் காட்டுகிறார். பெண்ணியல் குணங்களை வியந்து பாராட்டுகின்றார். அத்துடன் பெண்ணிற்குள் இயங்கும் உளவியலையும் தொட்டுக்காட்டுகின்றார். நெல்லுப்பட்டு சம்மந்தத்தை கைவிட்டு, முத்துக்கண்ணு விசுவராயர் ‘வாகரைக்கள்ளன்’ வழியிலேயே, மாப்பிள்ளைப் பார்க்க தருமையா நாட்டாரிடம் சொன்னதையடைத்து, காரியத்தை கச்சிதமாக முடிக்கின்றார் தருமையா நாட்டார்.

 முத்துக்கண்ணு விசுவராயரின் தகுதிக்கு ஏற்றாற்போல, அவர் பெரிதும் விரும்பிய, எழுத்தாளரின் வார்த்தைகளின் குறிப்பிட்டால், “சூத்துப்பெருத்த பொம்பளைகள், பாப்பாத்திக் கணக்கா, கழுத்தில் புடிபுடியா நகைகளைப்போட்டுக்கொண்டு”, வருவதைப்பார்த்து ஊரே அசந்து போனதைப்போலவே, கமலாவும் அசந்துபோகின்றாள். சாம்பசிவத்தின் நினைப்பைப்போலவே, அந்தச் சூழலும் கைவிடப்பட முடியாதப்படிக்கு அவளுக்குள் ஒரு குதூகலத்தையே உண்டு பண்ணுவிடுகின்றது. அந்தச்சூழல் ஏற்படுத்திய பரவசமும் அவளுக்குள் தொற்றிக் கொள்கிறது. அந்தப் பரவசத்தின் உச்ச வளர்ச்சியானது, ‘மாப்பிள்ளை வந்திருப்பாரா?’ என்று அவளுக்குள் அவளே கேட்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கின்றது.

 இது பெண்ணிற்குள் இயங்கும் ஒரு வகையான யதார்த்த உளவியலை காட்டும் முயற்சி. இதன் பொருள், ’பெண்ணிற்கு இரண்டு மனம்’ என்று முடிவு கட்டுவதன்று. ‘சூழலுக்கு ஆட்படுதல்’ வழி தன்னை அதனுள் முழுதாகப் பொருத்திக்கொண்டு, அதில் லயிப்பது என்ற பெண்ணின் பண்புநலனே இது.

 பெண்ணின் ஆற்றல், ஆணாதிக்கச் சமூகக் கட்டுமானத்தின் வழி மட்டுப்படுத்துப்படுவதனால், அவளது ஆற்றலை வெளிப்படுத்தும் இயக்க வடிவங்களை அவள் பயன்படுத்திக் கொள்கிறாள். சமூக வாழ்வியற் இயக்கங்களில் தன்னை முன்னிறுத்துகின்ற இடங்களிலும் செயல்களிலெல்லாம் பெண் தன்னை நிறுவிக் கொள்கிற முயற்சி தான் இது.

 கமலா தனது நிச்சயதார்த்த நிகழ்வில் பரவசத்தோடு பங்கேற்பது என்பது, தனக்கு இரண்டு மனம் என்றுகாட்டி, சாம்பசிவத்தை பகடிச்செய்வதாகப் பொருள் கொள்ளாலாகாது. மாறாக, தன்னை நிறுவிக்காட்டி ஒட்டுமொத்த ஆணாதிக்கச் சமூகத்தையே பகடிச்செய்வது ஆகும். இது கமலா சாம்பசிவத்திற்கு காட்டும் எதிர்வினையன்று. மாறாக ஒரு பெண், தன்னை அதிகாரத்திற்கு உட்படுத்தும் ஒட்டுமொத்தச் சமூகத்தை பகடி செய்யும் வாய்ப்பு எனக் கருத இடமுண்டு.

 படைப்பாளரின் இசை அனுபவப் பகிர்வு நாவலில் ருசியாக பரிமாறப்பட்டிருக்கின்றது. நாவலின் முக்கால் பாகத்தைக் கடக்கும்போது, அதன் இறுதிப்பகுதி ஒரு கொலைக்களத்தை நோக்கிச் செல்லவிருக்கின்றது, என்ற பீதியை வாசகனிடத்தில் உருவாக்கிவிட்டு, படைப்பாளர், காத்தாயி அம்மன் கோவில் திருவிழாவில் நடைபெறும் குறவன் – குறத்தி ஆட்டத்தில் லயித்து விடுகின்றார். குறவன் – குறத்தி ஆட்டத்தைப் பற்றிச் சொல்லும்போது அவருக்குள் இரட்டிப்பு குதூகலமும், ஆர்வமும் பொங்கி வருகின்றது. அதனை விளக்கும் அவரது எழுத்தில் பயின்று வரும் உற்சாகத்தொணி வாசகனிடமும் தொற்றிக் கொள்கிறது.

ஒவ்வொரு இசைக்கருவியிலிருந்தும் பிறக்கும் இசை வடிவங்களைப்பற்றி, கிளுகிளுப்பை உண்டுபண்ணும் சொற்களில் வருணிக்கின்றார். கச்சேரியில் வாசிக்கும் ஒவ்வொரு கலைஞனின் கைகளும் எப்பொழுது ஆரம்பிக்கலாம், என்று பரபரக்கின்றன.

அந்தால ஒருத்தன் ஆரம்பிச்சிட்டான்.

டும் டும்டும் டுடும்டுடும்டுடும் டும்டும்டும்…

அடுத்தவன் சும்மாயிருப்பானா…..? அவன் பங்கிற்கு….

‘பூம்பூம்.. பூம்பூம்பூம்…. பூம்பூம்…’

இன்னொருத்தன் எகிறிக்கொண்டு,

டிங் டிக்கு டிக்கு டிங்டிக்கு டிக்கு டிக்கு டிங்டிக்கு டிக்கு டிக்கு….

இன்னொருத்தன் பாய்ந்துகொண்டு…

‘கித்.. கித்தா… கித்தா… கித்கித்கித்கித்தா….. ‘

இப்பொழுது எல்லோரும் சேர்ந்துகொண்டு,

‘நகநகநகநகநகநகநகநகநகநகநக…..” வென்று தட்டி கிடுகிடுக்கின்றது, என்று கதைச்சொல்லி, அதற்கேற்ப ஆடும் குறவன் – குறத்தியின் ஆட்டத்தினை சொற்களாலன ஒரு வண்ண ஓவியமாய் வரைந்து காட்டும்போது, வாசகனின் மனம், அந்த அழகிய ஓவியத்தை மனத்திரையில் ஓடவிட்டு ‘போடு… அசக்கு டப்பா. அசக்கு டப்பா.. அசக்கு டப்பா..’ என்று ஆட்டம்போடுகின்றது.

ஊருக்குள் வினையையும், சூழ்ச்சியையும் விதைத்துக்கொண்டிருந்த கோபால் குச்சிராயரின் மூத்தமகள் நீலா, முற்றி வெடித்த தனது இளமையின் ரகசியங்களை, அவள் வீட்டு பண்ணைக்காரன் ‘பள்ளக்கேசு’-வோடு (பள்ளன் + கேசு; கேசு என்பது அவனது பெயர்) பகிர்ந்துகொள்ள, அதன் விளைவாக அவளது வயிறு மெத்த வீங்கி, அவள் பகிர்ந்துகொண்ட ரகசியத்தை ஊராருக்கு அம்பலப்படுத்திவிட்டது. கொல்லையில் கிடந்த பயித்தம்பொக்கு மறைவில் வைத்து தனது இளமையின் ரகசியங்களை, நீலா பண்ணைக்காரனோடு பகிர்ந்துகொண்டதை, கோபால் குச்சிராயர் நேரடியாகவே பார்த்துவிட்ட அந்த நாளிலிருந்து முடங்கிப்போனவர் தான்.

திருமணம் ஆகாமலேயே, நீலா கர்ப்பமுற்றிருக்கும் செய்தியை எப்பாடுப்பட்டாவது தடுத்திட முயலும் கோபால் குச்சிராயர், எழுத்து மறையும் நேரத்தில், நீலாவைக் கூட்டிக்கொண்டு காத்தவராயன் கோவில் பூசாரியும், மருத்துவனுமான செங்கானிடம் அழைத்தச் செல்லும்போது, அங்கே செங்கான், தலையை விரித்துப்போட்டுக்கொண்டு, ஆவேசமாய் உடுக்கையைத் தட்டி கணீரென்று பாடுகின்றான்.

ஏ என்ன செய்வேன் ஏதுசெய்வேன்

ஏ மாயவனே மணி வண்ணா

ஏ எனக்காரும் நல்ல துணையுமுல்லே….

என்று இரவிற்கும் சோகத்திற்கும் சொந்தமென அவன் உச்சஸ்தாயில் பாடிக்கொண்டிருப்பதை, எழுத்தாளர் வர்ணிக்கும்போது நாட்டுப்புற இசையில் அவருக்கிருக்கும் பரிச்சயம் வெளிப்பட்டு நிற்கின்றது.

 கமலாவின் நிச்சயத்தன்று, வாசித்த மேளக் கச்சேரியைப் பற்றி மட்டும் 4 பக்கத்திற்கு எழுதிச் செல்கின்றார். அவருக்கு கர்நாடக சங்கீதத்தில் நல்ல அறிமுகமும், நாட்டுப்புற இசையில் நல்ல பரிச்சயமும் உண்டு என்பதனை எழுத்தாளர் சி.எம்.முத்து அவர்களை நேரடியாகச் சந்தித்து உரையாடிக்கொண்டிருந்தபோது அறிந்தேன்.

 சாதியை தனது உள்ளியக்கு ஆற்றலாகக் கொண்டு நடமாடும் மாந்தர்கள், சமூகத்தோடு இடைவினையாற்றும்போது வெளிப்படுகின்ற பல்வேறு வகையான இயக்கங்களை (motion) பற்றி நாம் உணர முடிகின்றது. பள்ளிப்பருவத்தில் ‘ரெங்கா’-வாக இருந்தவர், திருமணத்திற்கு பிறகு ‘ரெங்கக்கோணார்’ ஆவதும், கையில் காசேறும்போது புறச்சமூகத்தில் தன்னை உயர் ’அந்தஸ்து’ உடையவராக அடையாளப்படுத்திக் கொள்ள முயற்சிக்கும்போது, ‘ரெங்கப்பிள்ளை’-யாகவும், பிறகு சுயசாதிப்பற்றுக்கு கேடு விளைவிக்கா வண்ணம் அதனோடு ஒரு சமரசம் புரிந்துகொள்ளும் பொருட்டு ‘ரெங்கப்பிள்ளைக்கோனார்’ ஆவதைப் பற்றிய சமூக யதார்த்த நடைமுறைகளை எழுத்தாளர் குறிப்பிடுகின்றார்.

 சாதிச்சமூகம் காலந்தோறும் வழங்கி வருவதற்கு மிக முக்கியமானக் காரணம், சாதியத்தின் அதிகாரங்கள், உள்ளூர் மட்டத்தில் ஜனநாயகபடுத்தப்பட்டிருப்பது தான். ஒரு கிராமத்தில் வசிக்கும் சாதிப்பிரிவினர்களிலேயே, படிநிலையில் யார் மேல்நிலையில் உள்ளார்களோ, அவர்களே சாதியத்தலைமைகளாக பொறுப்பேற்றுக் கொண்டு சாதியைக் காப்பாற்றி விடுவர். சாதிய அதிகாரம் உள்ளூர் மட்டத்தில் ஜனநாயகப் படுத்தப்பட்டிருப்பதன் விளைவு தான், ‘ரெங்கா’- ‘ரெங்கக்கோனார் – ‘ரெங்கப்பிள்ளை’ – ‘ரெங்கப்பிள்ளைக்கோனார்’ என்று தனது விருப்பிற்கேற்ப தன்னை அடையாளப்படுத்திக்கொள்வதற்கான சாத்தியங்களை வழங்குகின்றது.

 ஊர் நாட்டாமை தருமையா நாட்டார் வைத்திருக்கும் 5 வைப்பாட்டிகளும் கீழ்ச்சாதிக்காரர்கள் தானாம்….!, என்று எள்ளலோடு குறிப்பிடுவதும், தனது மனைவி யாருடனோ படுத்து வந்திருக்கிறாள் என்ற சந்தேகத்தில், அவளை கொலைச்செய்து, பிறகு அவளை தூக்கில் தொங்கவிட்டு, ‘தற்கொலை’ என்று நாடகமாடிய மாயாண்டி கொத்தப்பிரியனை, ’வாகரைக்கள்ளர்’-களின் சுயசாதிப் பெருமிதத்தைக் காப்பாற்றும் பொருட்டு, கமலாவை ’வந்தாரங்குடி’ சாம்பசிவத்திற்கு கட்டிவைக்கத் துடிக்கும் தங்கவேலுவைத் தீர்த்துக்கட்ட ஊர் நாட்டாமை பெரியவீட்டு நாயக்கரும், தருமையா நாட்டாரும் போடும் சதித்திட்டத்திற்கு பயன்படுத்திக் கொள்வதும், அந்தப்பழிக்கு ஊர் பொறுப்பேற்கும் என்று அவனை உற்சாகப்படுத்துவம், சாதியச்சமூகத்தின் இயங்குமுறைமைகளை காட்டுவதாகும்.

 வட்டார நாவல்களின் முக்கியமானப் பண்புக்கூறு என்பது, அதன் மொழிதான். குறிப்பிட்ட எல்லைக்குள் அது பரிணாமம் பெற்று வளர்ச்சியடைந்து இருப்பதனால், அது எந்தச்சமூகத்தினால், வளர்க்கப்பட்டதோ, அந்தச்சமூகத்தின் அனைத்து வாழ்வியல் அசைவுகளையும் தனது உள்ளடக்கமாகக் கொண்ட உக்கிர வெளிப்பாட்டுத்தன்மை வட்டாரமொழிகளின் சிறப்புப் பண்புகளாகின்றன.

 அத்தகைய கூர்மையான, உக்கிர வெளிப்பாட்டுத்தன்மைக் கொண்ட வட்டார மொழியோடு தொடர்புடைய எழுத்தாளன், அவன் வாழ்ந்த வாழ்க்கையை, அவன் அனுபவித்த வாழ்க்கையை எழுதுவதற்கு தேர்ந்தெடுக்கப்படும் மொழி, அவர் அன்றாடம் புழங்கும் மொழியாக அமைந்திருப்பது, படைப்பின் ஆழ அகலங்களை தான் உணர்ந்தது போலவே வாசகனிடம் கடுத்த வழிவகுக்கும்.

 நவீன இலக்கியவாதிகள் ஏற்பாடு செய்து வைத்திருக்கும் கோட்பாட்டுச் சிக்கலுக்குள் மாட்டிக் கொள்ளாமல், புனைவில் நேர்மை குன்றாது, சமூக யதார்த்தை அப்படியே பதிவுச் செய்ய முயல்கிறார் எழுத்தாளர். ”எழுத்தாளன் வாழும் தெருவில் நடந்த கதைகள் தான் உலகின் ஒவ்வொரு மொழியிலும் இலக்கியமாக்கப்பட்டிருக்கின்றது”, என்று எழுத்தாளர் இமையம் சுட்டிக்காட்டவர். ‘கறிச்சோறு’ நாவலும் எழுத்தாளன் வாழ்ந்த சமூகத்தில் நடமாடிய கதைதான்.

 ”நான் பார்த்த வாழ்க்கை முழுவதையும், எழுது தீர்த்துவிட்டேன். என்னிடம் இனி எஞ்சிய நினைவுகள் ஏதுமில்லை என்கிறபொழுது, எனது கதாப்பாத்திரங்கள் மீது நான் கற்பனையை ஏற்றுகின்றேன்” என்று நோபல் பரிசுப்பெற்ற எழுத்தாளர், மோ யான் (Mo Yan) குறிப்பிடுவார். ஆனால் எழுத்தாளர் சி.எம். முத்து கிட்டதட்ட 40 ஆண்டுகளாக இலக்கிய உலகில் வலம் வருபவர். 40 ஆண்டுகள் எழுதியும் இன்னும் எழுதுவதற்கு ஏராளமான வாழ்க்கைப்பாடுகள் மிச்சமிருக்கின்றன என்பதுபோல் ‘கறிச்சோறு’ நாவல், மாய யதார்த்தம், பின்நவீனத்துவம் போன்ற எந்த கற்பனை நாடகீயத்தன்மைகளின் உதவியையும் நாடாமல், முழுக்க முழுக்க அசல் வாழ்க்கையைப் பதிவு செய்வது போல் நாவலின் கதையைச்சொல்லிச் செல்கின்றார்.

 ’தேவை தான் கண்டுபிடிப்புகளின் தாய்’ என்பான் சமூக அறிவியல் மாமேதை எங்கெல்ஸ். தேவைகள் என்பன பொருளாதாரத் தேவைகளோடு சுருங்குவதல்ல. முன்னோக்கிச் செல்லும் காலம், அதற்கேற்ற புதிய அரசியல், பண்பாட்டு, சமூகத் தேவைகளை முன்வைக்கின்றன. விடுதலைக்குப் பிறகான தமிழக அரசியலின் குறிப்பிடத்தக்க அரசியல் சக்தியாக உருவெடுக்கும் ‘கள்ளர் சமூகம்’ தங்களுக்கிடையே உள்ள உட்சாதி முரணைக் களைந்து ஓரணியாக ஒன்று திரள வேண்டிய சமூகப்பண்பாட்டுத் தேவையின் ஒரு வெளிப்பாடு தான் ‘கறிச்சோறு’ என்று புரிந்துகொள்வது, இலக்கியத்தின் உயர்நோக்கத்தை குறுகிய எல்லைக்குள் சுருக்கி விடுவதாக சிலர் கருதக்கூடும். ஆனாலும் அந்த பொருண்மை விளக்கத்திலிருந்து எந்த இலக்கியத்திற்கும் விலக்கு அளிக்க முடியாது, என்பதே உண்மை.

 எழுத்தாளர்கள், வரையறுக்கப்பட்ட நோக்கங்கள் எதையும் தனது இலக்கிய ஆக்கத்திற்கு வைத்துக்கொள்வதில்லை. ஆனாலும், அவர்களது திட்டமின்மையைக் கடந்து, வரையறுக்கப்பட்ட நோக்கங்கள் கதைவெளிக்குள் இருப்பதை அவர்களால் தடுக்க இயலாது.

 வரையறுக்கப்பட்ட அந்த நோக்கங்களோடு மட்டும் நாவலைப் பொருத்திப் பார்ப்பது தட்டையான புரிதலுக்கு வழிவகுக்கும். இலக்கியவாதிகளின் இறுதி நோக்கம் மானுட விடுதலை தான். அந்த விடுதலையை, அவன் தான் வாழும் காலத்திலேயே, தன்னோடு தொடர்புடைய சமூகத்திற்கு கிடைக்க வேண்டும், என அவன் இலக்கியம் செய்யும்பொழுது, அதற்கொரு வட்டாரத்தன்மை வந்த விடுகின்றது. வட்டார விடுதலையல்ல எழுத்தாளனின் நோக்கம்; வைய விடுதலை!

 அத்தகைய ஒரு விடுதலைப் போராட்டத்தை கமலா, தனது சாதியச்சமூகத்திற்கு எதிராக நடத்தும்போது, கூட்டுச்சமூகத்தின் அசுர ஆற்றலின் பிரதிநிதியாக வரும் மாயாண்டி கொத்தப்பிரியனின் அரிவாளுக்கு தனது அண்ணன் தங்கவேலுவின் தலை இரையாகி முண்டமாக விழுவதைக் கண்டு அழுது புலம்புகிறாள். இந்தச் சாதியப் படுகொலைக்கு மூலகர்த்தாவாகிய, ஊர் நாட்டமை, வாகரைக்கள்ளர்களின் சாதியக்காவலர், ‘பெரிய வீட்டு நாயக்கரை’ துரத்திக்கொண்டு, முத்துக்கண்ணு விசுவராயர் ஓடுகின்றார். தனது வருங்கால மச்சானை கொலை செய்த மாயாண்டி கொத்தப்பிரியனையும், அவனது கூட்டாளிகளையும் துரத்திக்கொண்டு சாம்பசிவம் ஓடுகின்றான். மலரும் இரவின் கருமையிலிருந்து அமைதியை மட்டும் பிரித்தெடுக்கும் கலேபரங்கள், கூச்சல்கள், அழுகுரல்கள்….

“சீறிப்பாயும் வேங்கைகளின் வெறியினும் கடுமையான சாதிவெறி கொண்டலையும் இந்த மனிதர்களின் மத்தியில் அமைதியும் அன்பும் கருணையும் எப்போது திரும்பும்..?” என எழுத்தாளன் ஆற்றமையோடு ஏங்குகிறார்.

 இத்தனை களேபரங்களுக்கு மத்தியிலும், மாயாண்டிக் கொத்தப்பிரியனை துரத்துக்கொண்டுச் சென்ற தனது காதலன் சாம்பசிவம் திரும்பி வருகிறானா…? என ஏதிர்பார்ப்போடு வழியைப் பார்த்துக்கொண்டிருக்கிறாள், கமலா.

 இந்த எதிர்பார்ப்பு கமலாவுடைய எதிர்பார்ப்பல்ல; சாதியச் சமூகத்தின் கோரப்பிடியில் மாட்டிக்கொண்டு சிக்கித் தவிக்கும் ஒவ்வொரு மனிதனின் எதிர்பார்ப்பு. சாதி நிகழ்த்தும் கொடுந்தீவினைகளின் மீதான ஏற்பு-மறுப்பு உரையாடல்களிலிருந்தும் விசாரணைகளிலிருந்தும் விலகி, அப்பாற்நின்று தனக்கு வாய்த்த இந்த அற்புதமான வாழ்க்கையை, எல்லையற்ற மகிழ்ச்சியுடன் இன்றே வாழ்ந்து விட வேண்டும் என்பது உயிரின் உடைமை; உயிரின் உரிமை. அந்த உரிமைக்கு எதிரான கூக்குரல்கள் உலகோடு வரினும் கெடும்!

 தனது அண்ணன் தங்கவேலுவின் ஆதரவோடு, சாம்பசிவத்தைக் கூட்டிக்கொண்டு ஊரை விட்டு ஓடிவிட, குடமுருட்டி வாய்க்காலில் கமலா காத்துக்கொண்டிருக்கும் சமயத்தில், கோபால் குச்சிராயரின் வீட்டுப் பக்கமிருந்து, ஐயோ… அம்மா… என்று அலறித்துடிக்கும் நீலாவின் குரல், திருமணம் ஆகாமலேயே, தானொரு பிள்ளைப்பெற்றுக் கொள்ளப் போவதை அறிவிக்கின்றது.

 அதனைத் தொடர்ந்து வரும் சில நிமிடங்களில், மாயாண்டி கொத்தப்பிரியன் தங்கவேலுவின் தலையை சாதிப்பெருமைக்காக காவு கொடுக்கின்றான்.

 சாதியச் சமூகம் தொடரும்போது, சாதியைக் காப்பாற்றும் கொலைகளும், சாதியை உடைக்கும் பிறப்புகளும் நிகழ்ந்து கொண்டே இருக்கும், என்ற அசரீரி கதைசொல்லியின் குரலாக ஒலிக்கின்றது!

 - ப.பிரபாகரன்

Pin It

varalaatril brahmana neekkamஇந்த நூல் பேசும் செய்திகள் நமக்கு பல்வேறு சாளரங்களைத் திறந்து விடுகின்றது. இது வரை அறியப்படாத, ஆராயப்படாத பார்ப்பனியத்தின் இருண்ட பிரதேசங்களை அம்பலப்படுத்துகின்றது. இந்த நூலில் உள்ள ஒவ்வொரு வரியும் அதன் பேசுபொருளாலும், கருத்தாழத்தாலும் நம்மை விலகிப் போகச் செய்யாமல் கடைசிவரை கட்டிப் போட்டு விடுகின்றது. வேதங்கள் தொடங்கி சமணம், பெளத்தம், பக்தி இயக்கம், தேசிய இயக்கம் என பல்வேறு காலகட்டங்களில் பார்ப்பனியம் எவ்வாறு இந்திய சமூகத்தில் தொழில்பட்டது என்பதை ஆணித்தரமான வாதங்கள் மூலமும், அசைக்க முடியாத ஆதாரங்கள் மூலமும் அம்பலப்படுத்துகின்றது. குறிப்பாக வட இந்தியாவில் தோன்றிய பக்தி இயக்கம் பற்றிய ஆய்வு தமிழுக்குப் புதிது. தமிழ்நாட்டில் பக்தி இயக்கம் என்று சிலர் இங்கிருக்கும் தேவாரம், திருவாசகம் போன்றவற்றை சொல்லிக் கொண்டிருக்கும்போது இந்நூலில் ஆசிரியர் அதற்கான வேர்களை சித்தர் மரபில் கண்டுபிடிக்கின்றார். கடவுளையும், சாதியையும் பின்னுக்குத் தள்ளி மனிதனை முன்னிலைப்படுத்திய சித்தர் மரபை தமிழ்நாட்டில் உள்ள ஆய்வாளர்களே பக்தி இயக்கமாக கருதாத இந்தச் சூழ்நிலையில் உண்மையில் பக்தி இயக்கம் எதை முன்னிலைப்படுத்தியது என்பதை மிக விரிவாக இந்நூல் பதிவு செய்துள்ளது.

வட இந்தியாவில் தோன்றிய பக்தி இயக்கம் தன்னகத்தே பார்ப்பன எதிர்ப்பு மரபை தீவிரமாகக் கொண்டிருந்தது. பக்தி இயக்கத்தைச் சேர்ந்த பலர் தாழ்த்தப்பட்ட‌ சாதிகளில் இருந்து வந்தவர்கள். துணி தைப்பவர்கள், தச்சர்கள், குயவர்கள், தோட்டவேலை செய்பவர்கள், கடைக்காரர்கள், மழிப்பவர்கள், செருப்பு தைப்பவர்கள் என பல பேர் பக்தி இயக்கத்துக்கு பங்களிப்பு செய்துள்ளார்கள். வட இந்தியாவில் கபீர், குருநானக் போன்றவர்கள் பார்ப்பன சாதிய அமைப்புக்கு சவால்விட்டனர் என்றால் கர்நாடகாவில் அது பசுவரின் தலைமையில் வீரசைவமாக வளர்ச்சி பெற்றது. மகாராஷ்டிரத்தில் இந்தப் பணியை பதிமூன்றாம் நூற்றாண்டு முதல் பதினேழாம் நூற்றாண்டுவரை வார்கரி இயக்கம் செய்தது. இப்படியாக வட இந்தியா ஆரம்பித்து தென் இந்தியா வரை சாதி எதிர்ப்பு இயக்கங்கள் பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்டதையும் அதை முறியடிக்க பார்ப்பன சக்திகள் செய்த பல்வேறு சூழ்ச்சிகளையும் இந்நூல் சிறப்பான முறையில் பதிவு செய்துள்ளது.

இந்து மதத்தில் உடன்கட்டை ஏறுதல் பழக்கத்தை ஒழிக்க பாடுபட்டதாய் சொல்லப்படும் ராம்மோகன் ராய் போன்றவர்கள் எப்படி மிகத் தீவிரமான பிற்போக்குவாதிகளாகவும், ஆங்கில ஏகாதிபத்தியத்தின் அடிமைகளாகவும் இருந்தார் என்பதை பல்வேறு ஆதாரங்களோடு இந்நூல் முன்வைக்கின்றது. அவர் செய்ததெல்லாம் நவீன ஐரோப்பிய சிந்தனையுடன் பழைய பார்ப்பனிய கருத்துக்களை ஒன்று சேர்த்து சொன்னதுதான். அவர் பிரிட்டிஷாருக்கு எழுதிய ஒவ்வொரு கடிதத்தையும் முடிக்கும்போது “பிரிட்டிஷாரின் மிகக் கீழ்ப்படிந்த சேவகர்” என்றே முடித்தார். மேலும் வங்காளத்தில் தோன்றிய பிரம்ம சமாஜம், மகாராஷ்டிராவில் தோன்றிய பிரார்த்தனா, தமிழ்நாட்டில் தோன்றிய வேத சமாஜம், பஞ்சாப்பிலும் வட இந்தியாவிலும் தோன்றிய ஆரிய சமாஜம் போன்றவை பார்ப்பன மதிப்புகளால் மட்டுமே வழிநடத்தப்பட்டதைப் பல்வேறு தரவுகளுடன் அம்பலப்படுத்துகின்றது இந்நூல்.

தேசியம் என்ற கருத்தியலை வலுவாக கட்டமைத்த எழுத்தாளர்கள் அனைவரும் தீவிர இந்துமத ஆதரவாளர்களாய் இருந்ததும் அவர்கள் முன்னெடுத்த தேசியம் என்பது சாதி அமைப்பை ஏற்றுக்கொண்ட, பார்ப்பன மேலாண்மையை ஏற்றுக்கொண்ட தேசியம் என்பதையும் அம்பலப்படுத்துகின்றது. இராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர் போன்றவர்கள் எப்படி பழைய பார்ப்பன மரபுகளை தூக்கிப் பிடித்து சனாதன இந்தியாவை கட்டமைக்க முயன்றனர் என்பதையும் இந்நூல் தெளிவாக விளக்குகின்றது. விவேகானந்தர் பார்ப்பனர்களைத் தவிர மற்ற சூத்திர சாதி, தீண்டபடாத மக்கள் மீது கொண்டிருந்த அருவருப்பு நிறைந்த பார்வை இன்னும் அவரைக் கொண்டாடும் பல பேருக்குத் தெரிவதில்லை, குறிப்பாக அவர்கள் கல்வி கற்பதை அவர் முற்றிலுமாக வெறுத்தார் “….. அறியாமை மிக்க, படிக்காத கீழ்ச்சாதி மக்களுக்கு, கோவணத்தோடு வயல்களில் வேலை செய்பவர்களுக்கு, ஆரிய இனமல்லாதவர்களுக்கு ஐரோப்பியர்கள் இப்போது கல்வியளிக்கிறார்கள், இது நம்மை பலவீனப்படுத்தவும் அவர்களுக்கும் பிரிட்டிஷ்காரருக்கும் ஆதாயம் அளிக்கவும் போகின்றது” என்றார். மேலும் சாதியைப் பற்றி கூறும் போது “ சாதி நம்மை ஒரு தேசமாக உயிர்ப்புடன் வைத்திருக்கிறது, அதில் பல குறைகள் இருந்தாலும், அதைவிட அதிகமாக நன்மைகள் உள்ளன” என்றார். முஸ்லிம்களைப் பற்றிய அவரது பார்வை மிகக் கீழ்த்தரமானதாகவும் அருவருப்பு ஊட்டுவதாகவும் இருந்திருக்கின்றது அதே போல ராணடே, இரவீந்திரநாத் தாகூர், திலகர் போன்ற பலரின் பார்ப்பன வெறியையும் இந்நூல் அம்பலப்படுத்துகின்றது.

மேலும் மார்க்ஸ்முல்லர், நீட்சே போன்றவர்களின் பாசிச நோக்கத்தையும், சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் மறுத்த அவர்களின் இறுகிப் போன சிந்தனைகளையும் மிக விரிவாக இந்நூல் ஆராய்கின்றது. ஆர்.எஸ்.எஸ் எப்படி பார்ப்பனர்களின் நலன்களைக் காப்பாற்ற பார்ப்பனர்களால் தொடங்கப்பட்டது என்பதை ஆராயும் நூல் அதன் அபாயகரமான சிந்தனையை அதன் அரசியல் அறிக்கையை பகிரங்கப்படுத்தி வெளிக்கொண்டு வந்திருக்கின்றது. ஆர்.எஸ்.எஸ் யின் ரகசிய சுற்றறிக்கை எண் 411 அதன் தளபதிகளுக்கும் பிரச்சாரகர்களுக்கும் அதில் சொன்ன செய்தி, அதன் முகத்திரையை கிழித்தெறிவதாக உள்ளது. அதில் 1) அம்பேத்கரைப் பின்பற்றுபவர்களையும் முஸ்லிம்களையும் எதிர்த்துப் போரிட, தொண்டர்களின் எண்ணிகையை உயர்த்தும் பொருட்டு கட்சியில் பட்டியல் சாதியினரையும், பிற்பட்ட வகுப்பினரையும் ஆட்சேர்ப்பு செய்ய வேண்டும் 2) கலகங்களின் போது முஸ்லிம்கள், பட்டியல் இனத்தவர், பெண்களையும் பலர் சேர்ந்து கற்பழிக்க வேண்டும். அவர்களின் நண்பர்களையும் தெரிந்தவர்களையும் விட்டு வைக்கலாகாது. இந்த வேலை சூரத் முன்மாதிரிப்படி நடக்க வேண்டும் 3) இந்துக்களுக்கும் பிராமணர்களுக்கும் எதிரான எல்லா எழுத்துகளும் அழிக்கப்பட வேண்டும், தலித்துகள், முஸ்லிம்கள், கிறித்துவர்கள், அம்பேத்கர்வாதிகள் தேடப்படவேண்டும், அவர்களுடைய எழுத்து பொது இடங்களுக்கு செல்லக் கூடாது. இந்து எழுத்து மட்டுமே பிற்பட்ட வகுப்பினருக்கும் அம்பேத்கரைப் பின்பற்றுபவர்களுக்கும் சேர வேண்டும் 4) பட்டியல் இனத்தவர்க்கும், பிற்பட்ட வகுப்பினருக்கும் இடையிலான பாரபட்சமான வேறுபாடுகள் ஆழமாக வேர்கொள்ளும் விதமாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இதற்கான உதவியை சாமியார்கள், துறவிகளிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம் 5) சமத்துவத்தை போதிக்கும் கம்யூனிஸ்ட்கள், அம்பேத்கர்வாதிகள், இஸ்லாமிய ஆசிரியர்கள், கிறித்துவமதப் பணியாளர்கள், அவர்களின் அண்டையினர் ஆகியோருக்கு எதிராக தீவிரமான தாக்குதல்கள் தொடங்கப்பட வேண்டும் எனக் கூறுகின்றது. இன்று தங்களை நடுநிலைவாதிகள் என்று கூறிக் கொண்டு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை ஆதரிக்கும் அயோக்கியர்கள் நிச்சயமாக இதைப் படிக்க வேண்டும்.

புலே அவர்களைப் பற்றி மிக விரிவாக இந்நூல் ஆராய்கின்றது. அவரின் சாதி எதிர்ப்புக் கருத்துக்கள், கல்வி சிந்தனைகள், புலே எவ்வாறு சாதிவெறியர்களால் அவமானப்படுத்தப்பட்டார், அதை எப்படி அவர் எதிர்கொண்டார் போன்றவற்றை தரவுகளுடன் நிறுவுகின்றது. நவீன இந்தியாவின் மிகச் சிறந்த சாதி ஒழிப்பு போராளியான‌ புலே, பார்ப்பன புராணங்கள் எழுதப்பட்டதன் உண்மை நோக்கத்தை அம்பலப்படுத்தியது மட்டுமில்லாமல் இந்தியாவின் மீது நிகழ்ந்த ஆரிய படையெடுப்பை முதன் முதலில் நிறுவுகின்றார். சிவாஜியை சாதிக்கு எதிரானவராக அன்றே அடையாளம் காண்கின்றார் புலே. பெரியாரைப் போலவே பெண்ணடிமைத்தன எதிர்ப்பு, தந்தைவழியாதிக்கத்திற்கு எதிர்ப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, சாதி ஒழிப்பு என அனைத்துக் களங்களிலும் மிகத் தீவிரமாக செயலாற்றிய களப் போராளியாக புலே இருந்துள்ளார் என்பதை இந்நூலைப் படிக்கும் போது நம்மால் தெரிந்து கொள்ள முடிகின்றது.

தேசிய இயக்க காலத்தில் நடந்த ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தை வரலாற்றில் இருந்து மீள் கட்டமைப்பு செய்து அது எவ்வாறு பார்ப்பனர்கள் நடத்திய தேசிய இயக்கப் போராட்டத்திற்கு எதிர்த் திசையில் இருந்தது என்பதை விவரிக்கின்றார். வைக்கம் போராட்டம், தோல்சீலைப் போராட்டம் போன்ற போராட்டங்கள் பற்றி மிக விரிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. நாராயணகுரு கே.அய்யப்பன், அய்யன்காளி போன்றோரின் சமூக பங்களிப்புகள் மிக விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது ஏன் தாழ்த்தப்பட்ட மக்கள் இந்துக்களாக சேர்க்கப்பட்டார்கள், அதன் பின் இருந்த பார்ப்பன சக்திகளின் நலன் போன்றவற்றையும் தமிழகத்தில் ஏன் பார்ப்பனர் அல்லாதர் இயக்கம் தோன்றியது, பெரியாரின் சமூகப் பங்களிப்பு, அம்பேத்கரின் சமூகப் பங்களிப்பு, சாதி ஒழிப்பில் காந்தியின் மோசடி, அதற்கு நேருவின் உடந்தை, நவீன இந்தியாவில் எப்படி சாதி ரீதியாக அரசு வேலைகள், தனியார் வேலைகள் ஒதுக்கப்படுகின்றன, சாதியால் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவு என அனைத்தையும் மிக விரிவாகப் பதிவு செய்திருக்கின்றது இந்நூல். அனைத்து இடதுசாரி சிந்தனையாளர்களும் படிக்க வேண்டிய, பாதுகாக்க வேண்டிய மிக முக்கியமான நூல். இந்நூலை ‘எதிர் வெளியீடு’ வெளியிட்டு இருக்கின்றார்கள். இந்நூலை எழுதிய ப்ரஜ்ரஞ்சன் மணி அவர்களுக்கும், இந்த நூலை மிகச் சிறப்பான முறையில் மிக நேர்த்தியாக சுவை குன்றாமல் மொழி பெயர்த்த க.பூர்ணசந்திரன் அவர்களுக்கும் எத்தனை நன்றிகளைச் சொன்னாலும் அது போதாது.

கிடைக்குமிடம்

எதிர் வெளியீடு
96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி-642002.
தொலை பேசி:04259-226012,9942511302
https://www.commonfolks.in
விலை ரூ.550

 - செ.கார்கி

Pin It