காட்டு மிராண்டியாய், நாடோடியாய் வாழ்ந்த மனிதன், கூட்டமைப்பு வாழ்வை மேற்கொள்ளத் தொடங்கிய போதே ‘சமூகம்’ என்ற கட்டமைப்பு உருவாகியது. அச்சமூக வாழ்க்கைக்கு அடிப்படையாய் அமைந்தது. கால்நடை வளர்ப்பும், விவசாய உற்பத்தியுமே ஆகும். நாடோடி வாழ்விற்குப் பின்னர் நிலையான குடியிருப்பு அமைத்து நதிக்கரையோர வாழக்கை முறையை அமைத்துக் கொண்டு விவசாய உற்பத்தியில் ஈடுபடலாயினர். விவசாய உற்பத்தியும், அதனைச் சார்ந்த மாறுபட்ட தொழில்நுட்பக் கூறுகளும் தோன்றி சமூகத்தை மேலும் பலப்படுத்தியது.

இச்சூழலிலேயே ஒருபுறம் செல்வம் குவிய மறுபுறம் வறுமையும் தோன்றி மக்களிடையே ஏற்றத் தாழ்வுகள் உண்டாகத் தொடங்கின. இச்சூழல் பழங்காலத்திலேயே தோன்றியிருந்தது. அடிமைச் சமூகத்தின் தோற்றமே சுரண்டல் வர்க்கம் தலைதூக்குவதற்குரிய தோற்றுவாயாக அமைந்தது என்கிறார் மார்க்ஸ்.

விவசாய உற்பத்தியில் ஈடுபட்டோர் பல்வகைப் பெருகினர். குறிப்பாக நிலவுடைமையாளர்களாக சிலரும், நிலமற்றவர்களாக பலரும் இருக்கும் சூழல் உருவாயின. நிலமற்றவர்கள் நிலவுடைமையாளருக்கு சேவை புரியவும், ஏவலளாளர்களாகவும் மாறினர். அன்று முதலே உழைக்கும் வர்க்கத்தினர் சுரண்டப்படுவோராகவும், கீழ்நிலையினராகவும், சுரண்டுபவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்தோராகவும், சமூகத்தில் மேல்நிலையினராகவும் மாற்றப்பட்டனர். அது முதலே வர்க்கப் போராட்டம் தொடர்ந்து நிகழ்ந்து வருவது  கண்கூடு. ஆம், காரல்மார்க்ஸ் குறிப்பிடுவது போல, வரலாறு யாவும் வர்க்கப் போராட்டத்தின் விளைவே’ என்பது பொருத்தமாகிறது.

உழைக்கும் மக்கள் பல்வேறு ஒடுக்குமுறைக்கு உள்ளானார்கள். அன்று முதல் இன்று வரையுமாய் பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு எதிராக பேராடியும், (வருகின்றனர்) பல்வேறு போராட்டங்களை நடத்தியும் வருகின்றனர்.

மக்கள் வரலாற்றை சில இலக்கிய, கல்வெட்டு, இன்ன பிற சான்றுகளின் வழியாகவே அறிந்து கொண்டு வருகின்றோம். இதில் விவசாய மக்களின் வாழ்க்கையை பண்டைக் காலந் தொட்டு இன்று வரையும் எடுத்துரைப்பதை காண முடியும். அவ்வகையில், கு.சின்னப்ப பாரதி யின் ‘தாகம்’ நாவல் தமிழகத்தின் மக்கள் வரலாற்றை மிக இயல்பாக உண்மைப் போக்கினில் எடுத்துரைத்து முற்போக்கு (நடை) வலம் வருகிறது எனலாம்.

“சுழன்றும் ஏர் பின்னது உலகம் உழன்றும் உழவே தலை” (குறள்பா) என்றார் வள்ளுவர். இவ்உழவுத் தொழிலில் ஈடுபடும் மக்களின் வாழ்க்கை இன்றோ பெரும் கேள்விக்குறியாகி நிற்கிறது. உழைப்பில் ஈடுபட்ட மக்களை அடிமைகளாக்கி அவர்களை பெருங்கொடுமைக்கு உள்ளாக்கியது நிலபிரபுத்துவம். இதனைப் பற்றி 19, 20-ஆம் நூற்றாண்டில் தோன்றிய சிறுகதை, நாவல், புதுக்கவிதை போன்ற இலக்கியங்கள் வெளிப்படுத்தின. இதில் நாவல்கள் தனி முத்திரைப் பதித்தன. நாவல்கள் அதிகார வர்க்கத்தினரின் கருத்துகளை எடுத்துரைப்பதைத் தாண்டி அடிப்படை பாமர மக்களின் வாழ்க்கையை நேரடியாக விளக்கி சமூகத்தில் தவறுகளை எடுத்தியம்பும் ஆயுதங்களாக வலம் வந்தன. குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் சர்வதேசிய சூழலுக்குப் பின்னர் விவசாய தொழிலில் ஈடுபட்ட பாமர மக்கள் அதிகார மையத்திற்கு எதிராக குரல் எழுப்பினர். அக்குரல் ‘தீ’ அதிகார மையத்தை உடைத்தெறியும் தீயாய் மாற்றம் பெற்றது. குறிப்பாக பொதுவுடைமை இயக்கங்கள் தோற்றம் பெற்றும் விவசாய சங்கம் அமைக்கப்பட்டு விவசாய மக்களை பாதுகாப்பதற்கான, அவர்களின் விடுதலைக்கான உரிமைக் குரலாகவும் பல்வேறு மக்கள் இயக்கங்கள் தோற்றுவிக்கப்பட்டன. இதனை நாவல்கள் மிக அதிகமாக பதிவு செய்தன. குறிப்பாக 21-ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் பல நாவல்கள் விவசாய உற்பத்தியில் ஈடுபடும் முறை, அவர்களின் வாழ்க்கை முறை, அவர்களை அடிமைகளாக்கி சுரண்டும் வர்க்கத்தின்ரின் செயல்கள். அதற்கெதிரானப் போராட்டங்கள் ஆகியவற்றை படம் பிடித்துக் காட்டின. அவற்றுள் கு.சின்னப்ப பாரதியின் நாவல்கள் முதலிடம் பிடிக்கின்றன.

20-ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த மக்களின் வாழக்கை. அவர்கள் பெரு நிலக்கிழார்களை எதிர்த்து நடத்தியப் போராட்டங்கள், அவர்கள் படும்பாடுகள், அதிகார வர்க்கத்தின் செயல்கள் என அனைத்து சூழலையும் தெளிவுற எடுத்தியம்புவதை காண முடிகிறது.

“தாகம்” நாவலின் கதைக் கருவும், கதையமைப்பும் சிறப்புற அமைக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக இக்கதையில் மையக்கருவாக, விவசாய உற்பத்தியில் ஈடுபடும் பாமர மக்கள், பெருநிலக்கிழார்களிடம் சிக்கிக் கொண்டு மக்கள் படும்பாடு பற்றியும், உடைமை வர்க்கத்தினரை எதிர்க்கும் களமாகவும் கதைக்கரு பின்னப்பட்டிருக்கிறது.

விவசாய மக்களின் துன்பமான வாழ்க்கை நிலையையும், நிலவுடைமைச் சமுதாயத்தில் நிலச்சுவான்தார்களின் கொடுமையான செயலையும், விவசாயிகளின் அடிமைத் தனத்தையும், நிலவுடைமையினருக்கு எதிரான போராட்டங்களையும் மையமிட்ட கதைக்கரு ஆகும்.

விவசாயம் சார்ந்த உற்பத்தி முறை இக்கதையின் பின்புலமாக அமைக்கபட்டிருப்பதால் இயற்கைச் சூழல், நிலங்கள் பற்றியும், விவசாய உற்பத்தியில் ஈடுபடுத்தப்படும் மாடுகள், அதனைப் பற்றிய குறிப்புகள், பிற பொருட்களின் பயன்பாடு, விவசாயிகளின் அன்றாட வாழ்க்கை முறை, உண்ணும் உணவு, உடுத்தும் உடை, இருக்கும் இடம், கல்வி, நோய் எனும் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக அவர்கள் படும்பாடு போன்றவற்றை தெளிவாக எடுத்துரைக்கிறார்.

பாத்திரப்படைப்புகள் ஒவ்வொன்றும் தனித்துவமாகவும், மிகச் சிறப்பாகவும் படைக்கப்பட்டிருக்கின்றன. புதினத்திற்கே உரிய சிறந்த உத்தி முறைகளை ஆசிரியர் மிகத் தெளிவாக கையாண்டுள்ளார். மொழிநடையில் கிராமிய வழக்கோடு, பேச்சு வழக்கு, வட்டார வழக்கு, பிற மொழி சொல் கலப்பு, ஒலிக்குறிப்புச் சொற்கள், கதைக் கூறி விளக்கம் செய்தல், விவரிப்பு நடை, வருணனை, இரட்டைக்கிளவி, உவமை, உருவகம் பழமொழி என நடை யாவும் கிராம புற மக்களின் இயல்பு நிலையை அப்படியே கண்முன் நிறுத்தும் சிறப்பான மொழிநடை. 

நாவலில் பாத்திரப்படைப்பே கதையை அழகுற நகர்த்திச் செல்லும். பாத்திரப்படைப்பு இல்லையெனும், கதை நகர்வு, ஓட்டமென யாவும் வெறுமையான பயணிப்பாக அமையும். ஆக, பல்வேறுப்பட்ட பாத்திரங்களை நிரல்நிறையாக அமைத்தும் நேரிடையான, முரண்பாடான, முதன்மை மற்றும் துணைப் பாத்திரங்களைப் படைத்து இலக்கிய ஓட்டத்தையும், நுகரும் வாசகனுக்கு சலிப்பு, எரிச்சல் ஏற்படாத வண்ணம் கதை நகர்கிறது.

முதன்மைப் பாத்திரமாக மாரப்பன் மற்றும் அவன் மனைவி மாரக்காள், துணைப் பாத்திரமாக கந்தன், பழனியம்மாள், முத்தம்மாள், ஆகிய மூன்று பிள்ளைகள். இவர்களில் சீர்திருத்தவாதியாக, கந்தன் பரிணமிக்கிறான். அவன் தனக்குக் கீழான சாதியை சார்ந்த ‘பாப்பாயி’ என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு சமத்துவ கருத்தை விதைக்கின்றான். மேலும் நாட்டில் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடற்ற சமநிலை சமுதாயம் படைக்க போராட்டக் குழுவில் தம்மை இணைத்துச் செயல்படும் மிகச் சிறந்த பாத்திரமாகப் பரிணமிக்கிறான்.

எதிர்நிலைப் பாத்திரமாக சேனாதிபதி கவுண்டர் படைக்கப்பட்டுள்ளார். இப்பாத்திரத்தின் வழியாக சமூகத்தில் நிலபிரபுக்களின் அதிகாரச் சூழலையும், அவர்களால் மக்கள் படும் இன்னல்களையும் ஆசிரியர் தெளிவுபட எடுத்துரைக்கின்றார்.

மேலும், சண்முகம், மாயாண்டி போன்ற சீர்திருத்தப் பாத்திரங்களையும், காத்தான், வள்ளி போன்ற பாத்திரத்தை படைத்து அடிமை மக்களின் துன்பத்தை உணர்த்தும் பாத்திரமாகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்நாவலின் கருத்தினை வெளிப்படுத்தும் நூலாசிரியர், “ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் - இரண்டு வர்க்கங்களின் கலாச்சாரத் தடயங்களும் மனித மதிப்பீடுகளும் இதில் பதமாகப் பதிவாகியிருக்கின்றன” என்கிறார்.

இக்கதையில் போராட்டமான விவசாய பெருங்குடிகளின் வாழ்வு, பொதுவுடைமை கட்சியில் இணைந்து அதிகாரத்திலிருக்கும் நிலபிரபுக்களுக்கு எதிரான மக்கள் திரட்சி, அதனால் போராடும் மக்களை அழிக்கும் அதிகாரம், காவல்துறையினர் அவர்களுக்கு துணை போகும் போக்கு புரட்சிக்கான பின்புலத்தில் மக்கள் ஒன்று திரண்டு நிலவுடைமையாளரை அழிக்க வேண்டும் என்ற பார்வை புரட்சியின் தாகம் வேகம் என கதை சிறப்பாக மக்களுக்கானதாக பரிணாமம் பெற்று புத்துயிரூட்டுகிறது.

***

‘பிறகு’ புதினம் - நிலவுடைமைச் சமூகத்தின் எதார்த்த பின்புலம்

முதன்மை மாந்தர்கள் :

அழகிரி         - செருப்பு தைக்கும் தொழிலாளி : காணிக்காரன்

ஆவடை       - அழகிரியின் 2 வது மனைவி

முத்துமாரி               - அழகிரிக்கும் முதல் மனைவிக்கும் பிறந்த பெண்

கந்தையா - மேல்குடி சாதியர் (ஊர்க் காவலர், நியாயவாதி)

கருப்பன்     - அநாதை (ஊரில் உள்ள வேலை செய்யும் பொதுஆள்)

துணை மாந்தர்கள்

காளி                              - அழகிரியின் முதல் மனைவி

வண்டாரி   - சக்கிலிக்குடி தலைவர்

ரெங்கராமானுஜ நாயக்கர்  (எ)        ஊர் பெருந்தலைவர் (எதிர்ப்பாத்திரம்)

வில்லிச்சேரிக்காரர்

குருசாமி நாயக்கர் -      ஊரில் 2 வது பெரிய அந்தஸ்து உடையவர்.

அப்பையா                              -              வட்டிக்கு விடுபவர் (எதிர்பாத்திரம்)

மாடசாமி, வீரி      -              கணவன், மனைவி (சக்கிலியக்குடி)

சக்கணன், சித்திரன்    -              ஊரில் பொழுதுபோக்குபவர்கள்

(தாயம், வேட்டையாடுதல் போன்றன)

நடுக்கடை சங்கரலிங்கம் - ஊரில் கடை வைத்திருப்பவர்

வயிரவன்                                 - முத்துமாரியின் முதல் கணவன்

முனியாண்டி                       - முத்துமாரியின் இரண்டாவது கணவன்

சுப்பையா                                              - மணலூத்தில் தட்டரை வைத்திருப்பவர்

சுடலை                                       - முத்துமாரிக்கும் வயிரவனுக்கும் பிறந்தவன்

கதைக்களமும், கதை நகர்வும்

துரைசாமிபுரத்திலிருந்த அழகிரி மணலூத்திற்கு வந்து செருப்பு தைக்கும் தொழில் செய்து வருகிறான். மனைவி காளி, மகள் முத்துமாரியோடு வாழ்ந்த சில வருடங்களில் மனைவி காளி இறந்து விடுகிறாள். முத்துமாரியை வளர்க்க சிரமப்பட சில நாட்களில் மாட்டுத் தாவணியில் சந்தித்த ‘ஆவடை’ என்பவளை மறுமணம் செய்து கொள்கிறான்.

வில்லிச்சேரிக்காரர் ஊர் பெரியவர். குருசாமி நாயக்கர், போத்து நாயக்கர், அப்பையா ஆகியோரும் ஊரில் முக்கியத்துவம் உடையவர்கள். கந்தையா ஊரில் காவல் காக்கும் காவலர். சித்திரன், சக்கணன், கருப்பன், வண்டாரி (சக்கிலியர் தலைவர்) மற்றும் பலரும் அவ்வூரில் வசிக்கின்றனர்.

அழகிரி மகள் பருவடைகிறாள். அவளுக்கு செய்ய வேண்டிய சடங்குகளை செய்து முடிக்கிறான் அழகிரி. ஓர் நாள் மாடு ஒன்று இறந்து போக, அதனை சக்கிலியர் சிலர் வெட்டி உணவாக எடுத்துச் செல்ல முடிவு செய்கின்றனர். அப்போது ‘மாடசாமி’ வீட்டிற்குப் பாத்திரம் வாங்க செல்லும் அழகிரி, ‘மாடசாமியின் மனைவி வீரியோடு, அப்பையா தகாத பாலியல் உறவில் ஈடுபடுவதைக் கண்டதும் அப்பையாவை அடித்து விட்டு, வீரியை எச்சரிக்கை செய்கிறான்.

ஊரில் திருவிழா ஏற்பாடாகிறது. வசூல் செய்து விழா நடத்துகின்றனர். சக்கிலியர் கடமையாக ‘லைட்’ தூக்குவது, வேலு, குப்பாண்டி, சக்கணன், சித்திரன் போன்றோர் வேட்டையாடுவது, தாயம் ஆடுதல் போன்ற செயலில் ஈடுபடுகின்றனர்.

ஊரைப் பொறுத்தமட்டில் நிலம் வைத்திருப்பவர்களே மிக பெரிய ஆள். சக்கிலியர் குடியில் நிலம் வைத்திருப்பவன் அழகிரி மட்டுமே. நிலம் வைத்திருப்வர்களுக்குள் முரண்பாடுகள் பல நிகழ்கின்றது. ஊரில் தேர்தல் வருகிறது. வில்லிச் சேரிக்காரர் தேர்தல் நிற்கின்றார். அதனால் சக்கிலியர் மக்களிடம் சொல்லி எல்லோரும் ஓட்டுப் போடும்படி கட்டளையிடுகின்றனர். ‘வண்டாரி’ சரி என்கின்றார் பின்னர் வில்லிச் சேரிக்காரர் வெற்றி பெறுகின்றார்.

நாட்கள் நகர்கிறது. அப்பையாவின் கமலச் சாமான் காணாமல் போகிறது. பலி அழகிரி மேல் விழ, அழகிரியோ மறுக்கின்றான். இச்சூழிலிலேயே முத்துமாரியும், வைரவனும் மணம் முடிக்கின்றனர். பின்னர், வைரவன் இராணுவத்தில் வேலை செய்து வந்த பின்னர் முத்துமாரியை கடுமையாக துன்புறுத்த தான் பெற்ற முதல் மகன் சுடலையை விட்டுவிட்டு அழகிரியோடு வந்து வசிக்கிறான். சில காலத்திற்குப் பின் முனியாண்டி என்பவனுக்கு மறுமணம் செய்து வைக்கின்றனர்.

கமலச் சாமான் அப்பையா வீட்டிலேயே இருப்பது தெரியவர, அவனோ மாடசாமி மீது பலி சுமத்துகின்றான். கோடைக்காலம் வருகிறது. ஊர் மிகப் பெரிய வறட்சியை சந்திக்கிறது. சக்கிலியர் தெருவில் குப்பையைக் கொட்டுகிறார்கள். புறம்போக்கு நிலத்தை வில்லிச்சேரிக்காரர் அப்பையாவிடம் விற்று விடுகிறார். தேர்தல் வெற்றிக்குப் பின்னர், மேட்டுக் குடியினருக்கே பல செய்யப்படுகிறது. இச்சூழலில், விவசாய பயனாக அமைந்த ஊரணி அடைக்காமல் இருக்கின்றனர். ஊரார் கூடுகின்றனர்.

ஊர் பொதுக் கூட்டம் நடக்கிறது. சங்கரலிங்கம் கடை நடத்துவது, முத்தையா காபி கடை போன்ற பல விசயம் பேசப்பட்டு, இந்த வருடம் ஊர்க்காவல் வேண்டாம் என கூற, முரண்பாடாகி மீண்டும் கந்தையா ஊர்க்காவலராக ஆகிறார்.

முத்துமாரிக்கும் 2-வது பெண் குழந்தைப் பிறக்கிறது. பின்னர் முத்துமுருங்கன் (முத்துமாரி மாமன்) இறந்த தகவல் கேட்டு, அய்யங்குளம் செல்கிறான். அங்கு மூத்தமகன் ‘சுடலை’யை பார்த்து அவன் அழுக எண்ணி அவள் தன்னோடு அழைத்து வர அது கண்டு கோவப்பட்ட முனியாண்டி அவளை அடித்து உதைக்கிறான். அதனால் சுடலையோடு தம் ஊர் நோக்கி வருகிறாள். கருப்பன் வேகமாக ஓடி வருகிறான். தன் பெண் குழந்தையோடு கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறாள் முத்துமாரி. அது கண்ட பெருந்துயருற்ற அழகிரி மனம் உடைந்து போகிறார்.

நாட்கள் நகர்கிறது. மழையில்லாமல் ஊரே வறட்சியாகிறது. கருப்பன் இருப்பதால் தான் வறட்சி நிலவுகிறது என்று கூற அவனை 2 நாள் வெளியூர் செல்ல வேண்டுமென முடிவு எடுக்க, அதன்படியே அவன் செல்கின்றான். கொடும்பாவி கட்டி இழுக்கின்றனர். பின், கருப்பனுக்கு மொட்டையடித்து கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி கழுதை மேல் ஏற்றி ஊரில் சுற்றுகின்றனர். 2 நாளுக்கு மேலாக கீழுருக்குச் செல்ல 2-ம் நாள் மழை பொழிகிறது.

தன் மனைவி அழகிரி முத்துமாரியையும், குடும்பச் சூழலையும் எண்ணி இருக்க, கந்தையாவும் திடீரென இறந்து விடுகிறார். இறுதிச் சடங்கு நடக்கிறது. பின்னர் ‘சுடலை’ தான் இராணுவத்தில் வேலைக்குச் செல்வேன் எனக்கூற அதைவிட பெரிய வேலைக்குச் செல்ல வேண்டுமென கூறுவதாக கதை முடிவடைகிறது.

இக்கதை அடிப்படையில் கொங்கு மண்டலத்தை மையமாகக் கொண்டு, அங்குள்ள இருவேறுபட்ட சாதியைச் சார்ந்த மக்களின் நிலையை வெளிப்படுத்தி நிற்கிறது. குறிப்பாக, கவுண்டர், சக்கிலியர் ஆகிய இரு குடிகளைப் பற்றியும் அக்குடியினரின் வாழ்நிலை, உயர்சாதி, கீழ்சாதி என்று சொல்பவர்களின் வாழ்க்கை நிலை, சமூக சிக்கல்கள் என பலவற்றையும் மிகத் தெளிவாக விளக்கி, அவர்களின் மொழிநடையோடு அழகுற தமது எழுத்தாளுமையில் எடுத்துரைத்து செல்கின்றார் ஆசிரியர் பூமணி.

- பா.பிரபு

Pin It

தமிழில் கவிதைகளுக்குப் பஞ்சமே இல்லை. கடந்த இருபத்தைந்து நூற்றாண்டுகளுக்கு முந்தைய கவிதை தொடங்கி நேற்றைய… இன்றைய… கவிதைகள் வரை பல்லாயிரம் தமிழ்க் கவிதைகளைப் பார்த்து.. படித்து.. பழகி விட்டோம். இன்னும் பிடிபடாத ஒரு விஷயம். கவிதை செய்யும் கலை. கவிஞர்களுக்கு உள்ளேயிருந்து கவிதை பிறக்கிறது. மற்றவர்களுக்கு? எழுத்தும் சொல்லும் அடம் பிடிக்கின்றன. பிறவிக் கவிஞர்கள் என்று கேள்விப்பட்டிருப்போம். அதென்ன பிறவிக் கவிஞன்? கருவிலே திருவுடையான். அப்படியெல்லாம் யாரும் பிறப்பதில்லை. கவிஞர்கள் கவிஞர்களாகப் பிறப்பதில்லை. அவர்கள் கவிஞர்களாகிறார்கள் அல்லது ஆக்கப்படுகிறார்கள். நல்ல கவிதை எழுதுவது என்பது ஒருவகை நுட்பச் செய்நேர்த்தி. “சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்” என்று ஒளவையார் சொன்னதைப் போல், கவிதை பழகுவதால் வருவது. பழகுவது என்றால் எழுதிப் பழகுவது மாத்திரமில்லை. மனத்தால் பழகுவது.. பழக்குவது. அதனால்தான், “உள்ளத்து உள்ளது கவிதை” என்று கவிமணி சொன்னார். கவிதை எழுதப் படிப்பறிவு கட்டாயத் தேவையில்லை. இதற்கு நாட்டுப்புறக் கவிதைகளே சாட்சி.

இயற்கையின் படைப்பில் மனிதன் ஒரு விந்தை யென்றால் மனிதனின் படைப்பில் கவிதை ஒரு விந்தை. கவிதைகளுக்குத்தான் எத்தனை சுதந்திரம்! ஒருமுறை கவிதையைக் கேட்டோ வாசித்தோ நமக்குள் அனுமதித்து விட்டால் அந்தத் கவிதைகள் நம் மனத்துள் புகுந்து செய்யும் சித்துவேலைகள்தாம் என்னென்ன! சித்தர்கள் செய்யும் எண்வகைச் சித்துகளைப்போல் எண்ணிலாச் சித்துகளை தமக்குள் செய்யும் அந்தக் கவிதைகள். உருவைச் சுருக்குவது, பேருரு எடுப்பது, தமக்குள் ஒன்றுமில்லாதது போல் மயக்குவது, தமக்குள்ளே எல்லாம் இருப்பதாகக் காட்டுவது, சுவைஞனிடத்தில் ஆக்கலும் காத்தலும் அழித்தலும் செய்வது என அப்பப்பா! நல்ல கவிதைகள் செய்யும் மாயங்கள் சொல்லிமாளா! நல்லவேளையாக இன்றைக்குக் கவிதை எழுதும் நூற்றுக்கணக்கான கவிஞர்களின் ஆயிரக்கணக்கான கவிதைகளில் நல்ல கவிதைகள் கொஞ்சம் அரிதாயிருப்பதால் நாம் தப்பித்தோம்.

எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் எல்லோருமே கவிஞர்கள்தாம். பலர் இன்னும் எழுதவில்லை என்பதால் அவர்கள் கவிஞர்கள் இல்லை என்று சொல்லமுடியாது. இன்னும் எரியவில்லை என்பதால் விறகுக்குள் நெருப்பில்லை என்று சொல்லமுடியுமா?. எழுதும் கவிதைக்கு உயிர் வேண்டுமே! உயிருள்ள கவிதைகள்தாமே வாழும்! உயிருள்ள கவிதையை யார் எழுதமுடியும்? எப்படி எழுத முடியும்? நன்னூல் ஆசிரியன் பவணந்தி விடை சொல்கிறான்,

பல்வகைத் தாதுவின் உயிர்க்குஉடல் போல்பல

சொல்லால் பொருட்கு இடனாக உணர்வினின்

வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள்.

கவிதையில் உள்ள சொற்கள் உடல் என்றால், கவிதையின் பொருள்தான் உயிர். வெறும் சொற்கள் கவிதையாகாது! அது வெற்று உடம்பு.. கருத்து மட்டுமே கவிதையாகுமா? அதுவும் ஆகாது. உணர்வினின் வல்லோர் சொல்லும் கருத்தே கவிதையாகும். அதையே அணிகளால் அழகூட்டினால் கவிதை சிறக்கும் இதுவே நன்னூலார் கருத்து. நன்னூல் ஆசான் பவணந்தி சொல்லும் இலக்கணம் எல்லாக் கவிதைகளுக்கும் பொதுவானது. கவிதைக்கு இலக்கணம் எதுவோ, அதுவே கவிஞர்களுக்கும் இலக்கணம். கவிஞர்கள் நல்ல மொழியறிவும் உலகியல் பார்வையும் நுட்பமான உணர்வு வெளிப்பாட்டுத்திறனும் அழகுணர்ச்சியும் கொண்டவர்களாய் இருத்தல் வேண்டும். இங்கே, உலகியல் அறிவு என்பது தமக்கான அரசியல் அல்லது கொள்கை. அதுதான் கவிஞனின் இயக்கம், கவிதையின் உயிர். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே இத்துணை தெளிவான கவிதைக் கோட்பாடுடைய தமிழர்களின் கவிதைப் பயணம் எத்துணை நெடியதாயிருக்கும் என்பது சொல்லாமலே விளங்கும்.

தமிழின் கவிதைப் பயணம் என்பது கவிஞர்களின் தொடர்ச்சியான பயணங்களால் ஆனது. ஒவ்வாரு கவிஞனுக்கும் தனித்தனியான கவிதைப் பயணங்கள் உண்டு. தனித்தனிக் கவிஞர்களின் தொடர்ச்சியில்தான் தமிழ்க் கவிதையின் நெடும்பயணம் சாத்தியமாயிற்று. சங்கப் புலவர்கள் தொடங்கி இளங்கோ, கம்பன் வள்ளலார், பாரதி, பாவேந்தன் என நீளும் தமிழ்க் கவிஞர்களின் தொடர் பயணத்தின் ஒரு புள்ளிதான் இந்நூலாசிரியர் பிச்சினிக்காடு இளங்கோவின் கவிதைப் பயணம்.

'என்னோடு வந்த கவிதைகள்' என்ற தலைப்பில் கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ தம் கவிதைகளோடு தாம் பயணப்பட்ட பயண அனுபங்களை நிரல்பட ஆற்றொழுக்காக விவரிக்காமல் முன்பின்னாக, வளைவுகளாகவும் நேர்க்கோடு களாகவும் வட்டங்களாகவும் விவரித்துச் செல்கிறார். வடிவற்ற வடிவில் சொல்லப்படும் இத்தகு விதப்புமுறை வாழ்க்கை அனுபவங்களின் வடிவற்ற வகைமாதிரியில் அமைந்துள்ளமை இந்நூலின் தனிச்சிறப்பு.

'என்னோடு வந்த கவிதைகள்' என்ற இப்படைப்பு, கவிதை நூலா? கவிதைகளைக் குறித்த கட்டுரை நூலா? இலக்கிய விமர்சனமா? பயணக் கட்டுரையா? வாழ்க்கை வரலாற்று நூலா? என்று வாசிப்பவர்களை ஒருகணம் திகைக்க வைக்கும். முன்மாதிரிகள் அற்ற ஒரு புதுமைப் படைப்பாக இந்நூலைக் கவிஞர் உருவாக்கியுள்ளார் என்பதே உண்மை.

பிச்சினிக்காடு இளங்கோ…

கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ, தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், அத்திவெட்டி கிராமத்தைச் சேர்ந்த பிச்சினிக்காட்டில் 1952-இல் மா.ஆறுமுகம் இலக்குமி அம்மாள் இணையருக்கு முதல் மகனாகப் பிறந்தார். கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் பட்டம் பயின்ற இவர் பள்ளியில் படிக்கும் இளம் வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றல் உடையவராயிருந்தார். தமிழக அரசு வேளாண்மைத் துறையிலும், திருச்சி அனைத்திந்திய வானொலியிலும், சிங்கப்பூர் ஒலிபரப்புக் கழகத்திலும், சிங்கப்பூரில் எண்டியுசி 100.3 பண்பலை வானொலியிலும் பணியாற்றியுள்ளார். குறிப்பாக, சிங்கப்பூர் தமிழர் பேரவை நடத்திய திங்களிதழான சிங்கைச் சுடரில் ஒற்றை ஆசிரியராகப் பொறுப்பேற்று, “தமிழ்தான் தமிழரின் முகவரி” என்ற முழக்க வரியை உருவாக்கிப் பணியாற்றினார்.

பத்துக்கும் மேற்பட்ட கவிதை நூல்கள் கவிதை மற்றும் நாடக நூல்கள், புதினம், கட்டுரை நூல்கள் என இருபதிற்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துத் தமிழுக்கு அணி சேர்த்துள்ள இந்நூலாசிரியர் பிச்சினிக்காடு இளங்கோ அவர்கள் பல விருதுகளுக்குச் சொந்தக்காரர். தமிழகத்திலும் சிங்கையிலும் இவர் ஆற்றியுள்ள இலக்கியப் பணிகள், குறிப்பாகக் கவிதைப் பணிகள் காலத்தை வென்று நிற்கும் தகுதிபெற்றவை. சிங்கப்பூரில் கவிமாலை என்ற கவிதை இலக்கிய அமைப்பைத் தொடங்கிப் பல புதிய இளந்தலைமுறைக் கவிஞர்களை உருவாக்கிய பெருமை இவருக்குண்டு.

திருச்சி வானொலியிலும் சிங்கை பண்பலை வானொலியிலும் இவர் முத்திரை பதித்த நிகழ்ச்சிகள் எண்ணற்றவை. குறிப்பாகத் திருச்சி வானொலியில், வானம்பாடி கிராமிய இசைப்பாடல்களை வாரந்தோறும் எழுதி ஒலிபரப்பினார். ‘கொட்டும் முரசு’ நிகழ்ச்சியையும் எழுதிப் படைத்தார். கிராமம் போவோமே, ஊர்க்கூட்டம், ஊர்மணம், நாடகம் முதலான வானொலி நிகழ்ச்சிகள் இவர் படைப்பில் ஒலிபரப்பாகி வெற்றி முரசு கொட்டின. ‘காடு’ பற்றி கன்னடத்தில் எழுதி ஒலிபரப்பான பாடல்களை இவர் தமிழில் மொழிபெயர்த்தார். அந்த பாடல்கள் தமிழகத்தின் அனைத்து வானொலி நிலையங்களிலும் ஒரே நேரத்தில் ஒலிபரப்பப் பட்டன. சிங்கப்பூர் வானொலியில் ‘ஒண்ணே ஒண்ணு’, கிராமத்துக் குயில்கள், பொங்கல், தீபாவளி இசைச்சித்திரம், இலக்கிய இன்பம், குறளின்பம், வீட்டுக்குவீடு, நான் ரசித்த பாடல், கவிதைத்தேன் முதலான புகழ்பெற்ற நிகழ்ச்சிகள் இவர் கைவண்ணத்தில் உருவானவை. சிறப்பாக இவர் படைத்தளித்த “எளிமை இது இனிமை” தமிழ் பற்றிய உரையாடல் நிகழ்ச்சி 101 வாரமும் “பாடல் தரும் பாடம்” என்ற திரைப்பாடல் பற்றிய உரையாடல் நிகழ்ச்சி 42 வாரமும் “வாழ நினைத்தால் வாழலாம்” தன்முன்னேற்ற நிகழ்ச்சி 51 வாரமும் ஒலிபரப்பாகிச் சாதனை படைத்தன.

வானொலி நாடகங்கள், இசைச் சித்திரங்கள், உரைச் சித்திரங்கள் என்று இவரின் வானொலிப் படைப்புகள் பல சாதனைகளைப் படைத்துள்ளன என்றாலும் இவரின் கவிதைப் பணியும் பயணமும் செய்துள்ள சாதனைகள் அவற்றை விஞ்சியவை. தாம் கவிதை முழக்கும் மேடைகள் தோறும் கேட்டார் நெஞ்சைப் பிணிக்கும் வகையில் தம் கவிதையால் சுவைஞர்களை வசீகரிக்கும் சொல்லாற்றலும் கருத்தாற்றலும் ஒருங்கே வாய்க்கப் பெற்றவர் பிச்சினிக்காடு இளங்கோ என்பது மிகையன்று.

நான் வைத்துக் கொண்ட புனை பெயர்கள் என்று இந்நூலில் அவரே ஒரு பட்டியலைத் தருகின்றார். சோழநாடன், கோடியூர் கண்ணதாசன், சுதா இளங்கோ, கலை இளங்கோ, மாயி, பகல்தாசன், தேனீ, ராதா என்பன அவை. இப்புனை பெயர்களில் பகல்தாசன் என்ற பெயர் குறிப்பிடத்தக்கது. அதற்கும் விளக்கம் கவிஞரே தருகிறார் வேறு ஒரு கட்டுரையில். “பகல்தாசன் என்றால் அதன் உண்மையான விளக்கம் ப.. பட்டுக்கோட்டை, கல்.. கல்யாணசுந்தரம். பட்டுக் கோட்டை கல்யாணசுந்தர தாசன்” தமிழ்க் கவிஞர்களில் பாரதிக்கு தாசன் பாரதிதாசன், பாரதிதாசனுக்கு தாசன் சுரதா (சுப்பு ரத்தின தாசன்), பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரத்தின் தாசன் பகல்தாசன் அவர்தாம் இந்நூலாசிரியர் பிச்சினிக்காடு இளங்கோ.

'என்னோடு வந்த கவிதைகள்' என்ற இக்கட்டுரைத் தொகுப்பில் முப்பது அத்தியாயங்கள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அத்தியாயமும் கவிதை குறித்ததோர் விளக்கத்துடன் தொடங்குகின்றது, முடிகின்றது. கவிதை குறித்த விளக்கத்தை உலகின் தலைசிறந்த கவிஞர்கள், சிந்தனையாளர்கள், புகழ்பெற்ற திறனாய்வாளர்களின் மேற்கோளோடு தொடங்குவது நூலுக்கு அணி சேர்ப்பதோடு ஆழத்தையும் கூட்டுகின்றது. இதோ ஒரு சான்று,

கவிதை,

கவிதை என்றால் என்ன?

ஒன்றுக்கும் மேற்பட்ட அபத்தமான

பதில்கள் அளிக்கப்பட்டு விட்டன.

எனக்குத் தெரியாது

எனினும் உயிரின் கீற்றினைப் போல்

நான் இறுகப் பற்றியுள்ளேன் அதனை

- விஸ்லாவா சிம்போர்ஸ்க்கா

(96இல் நோபல் பரிசு பெற்ற போலந்துக் கவி)

கவிதைக்கு விளக்கம் சொல்லிக் கொண்டே போகலாம். அது ஒரு தீராநதி. அதனால்தான் நான் வயது பாராமல் நீந்திக் கொண்டிருக் கிறேன். அனுபவங்களையும் உணர்வுகளையும் சொல்வதே கவிதை. என் அனுபவங்களைச் சொல்லவே நான் கவிதை எழுதும்படி யாயிற்று. என் உணர்வுகள் என்னைக் கவிஞனாக்கின என்பது கவிஞர் விக்ரமாதித்யன் அவர்களின் வெளிப்பாடு. இது எல்லோர்க்கும் பொருந்துகிறதோ என்னவோ எனக்குப் பொருந்துகிறது. அப்படி அனுபவங்கள் வழங்கிய கவிதையைத்தான் நானும் தொகுத்திருக்கிறேன், என் பத்துத் தொகுப்புகளும், இனிவரும் தொகுப்புகளும் அப்படித்தான் அமையும்.

மேற்சுட்டிய பகுதி பதின்மூன்றாம் அத்தியாயத்தின் தொடக்கப் பகுதி. இவ்வாறே ஒவ்வொரு கட்டுரையும் தொடக்கத்திலும் முடிவிலும் கவிதை அல்லது வாழ்க்கை குறித்த தத்துவத் தேடலோடு அமைக்கப் பட்டுள்ளது.

      ஒருவகையில் இந்த நூல் கவிஞரின் வாழ்க்கை வரலாறு போன்றதே. வாழ்க்கை வரலாறென்றால், பிறந்தேன், வளர்ந்தேன், வாழ்ந்தேன் என்று எழுதாமல் வாழ்க்கையைத் தமது கவிதைப் படைப்பின் புள்ளியிலிருந்து தொடங்கி கவிதையுடனான பயணத்தை விவரிக்கும் போக்கில் தமது கவிதைகளின் சிதறல்களோடு இடையிடையே மற்ற கவிஞர்களின் மிகச் சிறந்த கவிதைச் சான்றுகளின் துணையோடு நடத்திச் செல்கிறார் நூலாசிரியர். நூலின் ஒவ்வாரு அத்தியாயமும் காலவரிசையில் அமைக்கப்படவில்லை. மாறாக வாழ்க்கையின் குறுக்கும் நெடுக்குமான அனுபவப் பகிர்வுகளோடு பதிவுகள் இடம்பெற்றுள்ளன.. குறுக்கும் நெடுக்குமான பயணத்தில் வெட்டுப்படும் புள்ளிகளில் சில சம்பவங்களும் தகவல்களும் மீண்டும் மீண்டும் இடம்பெறுவது தவிர்க்க முடியாததாகின்றது.

      படைப்பாளிக்கும் படைப்புக்குமான உறவு குறித்துக் கிழக்கிலும் மேற்கிலும் எத்தனையோ திறனாய்வாளர்கள் எழுதிவிட்டார்கள். ஆனால் பிச்சினிக்காட்டாரின் என்னோடு வந்த கவிதைகள் என்ற இந்நூல் படைப்பு – படைப்பாளி என்று பேதப்படுத்திப் பார்க்காமல் படைப்பாளியே எப்படிப் படைப்பாக மாறுகிறான் என்பதனை ஓர் அத்வைதமாய் விரித்துரைக்கின்றது. படைப்பாளி படைப்பாக மாறும்போது பிரபஞ்சத்தின் நிலையென்ன என்ற கேள்விக்கும் நுட்பமான விடை நூலில் கிடைக்கின்றது. பின்வரும் ஒன்பதாம் அத்தியாயப் பகுதியைப் பார்ப்போம்.

      கவிதையை நான் ஏன் எழுத வேண்டும்? கவிதை ஏன் என்னை எழுத வைத்தது? கவிதைக்கும் எனக்குமான உறவு எப்படி வந்தது என்பதை அசைபோடுகிற போதுதான் சில அரிய தருணங்களை நினைவுக்குக் கொண்டு வருகிறோம். இல்லையெனில் அவை தோன்’றா நட்சத்திரங்களாக விழிக்கா விதைகளாக ஆகியிருக்கும். ஒவ்வொரு கவிஞனும் இயற்கையைப் பார்த்திருக் கிறான். இயற்கையும் கவிஞனைப் பார்த்திருக்கிறது, கவிஞனைப் பாதித்திருக்கிறது. அந்த விளைவின் விளைச்சல்தான் கவிதை. இந்த உணர்வு, தேடல், புரிதல், அறிதலாக விளைகிறபோது எத்தனையோ மாற்றங்களைக் கண்டிருக்கிறது, எத்தனையோ வடிவங்களைக் கொண்டிருக்கிறது. அதற்கும் எத்தனையோ பெயர்களைச் சூட்டி அழைத்துக் கொண்டிருக்கிறோம். கவிதை வளர்ந்துகொண்டே வருகிறது. கவிஞன் வளர்வதால்தான் கவிதையும் வளர்கிறது.

நூலின் இந்த வரிகளைப் படிக்கின்ற போது கவிதை – கவிஞன் இரண்டில் எது பிரம்மம் - மூலம் என்பதே தெரியாத நிலையில் இரண்டும் அத்துவிதமாய்க் கலந்திருப்பதை நூலாசிரியர் விளக்கும் நுட்பம் அலாதியானது.

      நூலாசிரியருக்கு எல்லாமே கவிதைதான். பேச்சு, மூச்சு, சிந்தனை எல்லாமும். தாம் நேசிக்கும் அத்தனையும் அவருக்குக் கவிதையாய்த்தான் தெரிகின்றன. தமது இரண்டாவது தாய்நாடு என்ற வாஞ்சையோடு அவர் நேசிக்கும் சிங்கப்பூரை “மாதந்தோறும் கவிமாலை, ஆண்டுதோறும் கவிதைப் பெருவிழா, கவிதை நூலுக்குப் பரிசு, பெருவிரைவு வண்டியில் கவிதை, மாணவர்களுக்குக் கவிதைப் பட்டறை, கவிதைப் போட்டி இப்படிக் கவி வளர்க்கும் நாட்டைக் கவிதையூர் என்பதுதான் சரி” என்று கவிதையூராகப் பார்க்கும் நூலாசிரியரின் பெருவிருப்பு நம்மை வியப்பிலாழ்த்துகிறது.

      எளிமையான இனிய தமிழில் தங்கு தடையற்ற மொழியாளுமையோடு இந்நூலைப் படைத்துள்ள கவிஞரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஒரு புதினத்தை வாசிக்கும் அனுபவத்திற்கு இணையான அனுபவத்தை நூலின் வாசிப்பு நமக்குத் தருகின்றது. ஒரே மூச்சில் படித்து முடித்துவிடக் கூடிய வகையில் சுவை குன்றாமல் தம் பழைய நினைவுகளை அசைபோட்டு ஆளுமைகளை அறிமுகப்படுத்தும் போதும் இலக்கிய மேற்கோள்களை இடையிடையே பெய்து கவிதை இரசனையை மிகுவிக்கும் போதும் உலகச் சிந்தனையார்களின் மேற்கோள்களைக் கையாண்டு நம்மை நெறிப்படுத்தும் போதும் மொழிநடையின் எளிமையும் இனிமையும் குறையாமல் எழுதிச் செல்லும் கவிஞரின் நடைநலம் பாராட்டிற்குரியது.

நூலாசிரியரின் நடைநலத்திற்குப் பின்வரும் நூலின் பகுதியைச் சான்று காட்ட விழைகிறேன்.

பம்பரம் குத்தி விளையாடும்போது கவிதை எழுதவில்லை. அது கவிதை எழுதும் வயதில்லை. அது பம்பரப் பொழுது. காலம் என்கையில் பம்பரமாய் இருந்தது, விளையாடினேன். இப்பொழுது காலத்தின் கையில் நான் பம்பரம். அது விளையாடுகிறது என்னை. எவ்வளவு வயதானாலும் அந்தப் பம்பரப்பொழுது இளமையை மறக்க முடியவில்லையே

மேற்காட்டிய பகுதியில் கவிஞர் இளமை, முதுமை இரண்டையும் பம்பரத்தின் துணையோடு வேறுபடுத்திக் காட்டுகின்றார். இளமையில் காலம் என்கையில் பம்பரமாய் இருந்தது, இப்பொழுது முதுமையில் காலத்தின் கையில் நான் பம்பரமாய்ச் சுழல்கிறேன் என விவரிக்கும் பகுதி நூலாசிரியரின் மொழி ஆளுமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

இந்த அணிந்துரையின் பக்கங்களைக் கவிஞரின் கவிதை மேற்கோள்களால் நிரப்பிவிட நான் விரும்பவில்லை. அந்தக் கவிதைகள் நூலின் உள்ளே உங்களுக்காக் காத்திருக்கின்றன. காத்திருக்கும் கவிதைகளில் என்னைக் கவர்ந்த கவிதைகள் சிலவற்றின் தலைப்பை மட்டும் இங்கே பட்டியலிடுகிறேன்.

  1. பம்பரம்
  2. காலம்
  3. சிராங்கூன் சாலை
  4. அப்துல் கலாம்
  5. பூமகன்
  6. மழை நீர்

விண்மீன் கூட்டத்தில் பிடித்த விண்மீன்களைத் தேடியெடுத்து மடிகட்ட முனையும் சிறுமியின் நிலையில்தான் இந்த கவிதைத் தலைப்புகளைப் பட்டியலிட்டுள்ளேன்.

நான் இன்று கவிஞனென்ற விளக்கு. என்னை யாரெல்லாம் கவிஞன் ஆக்கினார்களோ அவர்களெல்லாம் தீக்குச்சிகள் என்று சொல்லிப் பல தீக்குச்சிகளை நூலின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் அறிமுகப்படுத்தி வரும் நூலாசிரியர் குறிப்பாக, பேரறிஞர் அண்ணாவின் மரணத்தின்போது தாம் எழுதியதைக் கவிதை என்று வகுப்பாசிரியர் முனியமுத்து அங்கீகரித்ததே என்கவிதைப் பயணத்தின் முதல்படி என்கிறார். அதேபோல் கண்ணதாசனின் தைப்பாவை நூலை அறிமுகம் செய்த ‘தானா’ என்றழைக்கப்படும் செ.தங்கவேலின் வழிகாட்டல் என் கவிதைப் பயணத்தின் இரண்டாம் படி என்று படிப்படியாய் தம் கவிதைப் பயணத்திற்குத் துணைநின்ற ஆளுமைகளைத் தருணங்களைப் பட்டியலிட்டு என்னோடு வந்த கவிதைகள் என்ற கவிதைப் பயணத்தை விவரிக்கின்றார் கவிஞர். ஒரு வெற்றி பெற்ற கவிஞரின் அடியொற்றி அவரோடு பயணப்படும் நமக்குக் கவிதை வெகுதொலைவில் இல்லை என்ற நம்பிக்கையை விதைப்பதே இந்த நூலின் மிகப்பெரிய வெற்றி என்று நான் கருதுகிறேன்.

நன்றி!

(சிங்கப்பூர் கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ அவர்களின் 'என்னோடு வந்த கவிதைகள்' நூலுக்கான அணிந்துரை)

- முனைவர் நா.இளங்கோ, தமிழ்த்துறைத் தலைவர், தாகூர் அரசு கலை அறிவியல் கல்லூரி, புதுச்சேரி- 605008

Pin It

"உள்ளீனும் தீராப் பெருமகிழ் செய்தாலால் 

கள்ளீனும் காமம் இனிது"

anbaadhavan poemsகள் அருந்தும் போது ஏற்படும் மகிழ்ச்சியினும் நினைக்குந்தோறூம் இன்பம் பெருகும் காதல் இனிது, இது கவிதையின் உயிர்முடிச்சு. மழையின் தரிசனம் சூரியக் கற்றையின் பிரகாசம். காதல் வாழ்வின் மையம். காமம் அதன் அச்சாணி. அன்பின் மிகுதியால் காமம் பெருகுவதைக் காமப்புணர்ச்சி எனக் கூறுகிறார் தொல்காப்பியர்.

ஒத்தப்பிறப்பு, குடி, ஆண்மை, ஆண்டு, அன்பு, நிறை, அருள், உணர்வு, திரு என்னும் பண்புகள் நிறைந்த ஓர் ஆண் பெண்ணைக் கண்டு காதல் தலைப்படுவதையும் உள்ளத்தால் இணைந்து வாழ்வதையும் குறிப்பிடுகின்றது களவியல் நூற்பா. இத்தகைய பண்புகள் நிறைந்த ஓர் ஆண் பொருள்வயின் பிரிந்தலோ, முரண்பாடுகளால் விலகினாலோ அல்லது இணைந்தே வாழ்ந்தாலோ ஆண் பெண் இருவரிடையே அவர்களை இயக்குவது காதல் தான் என்பதை இலக்கியங்கள் காட்சிப்படுத்துகின்றன.

கண்ணனை நேரே கண்டு காதல் கொள்ள ஒத்துழைத்தால் கிளியும் பால்சோறும் தந்து பசியாற்றுவேன் என்ற ஆண்டாளின் குரலோ, மனதில் வைப்பாய் வைத்துப் பாதுகாக்கும்! காரைக்காலம்மையாரின் எண்ணமோ! யாரும் இல்லைதானே கள்வன் தானது பொய்ப்பின் யான் எவன் செய்கோ எனப்புலம்பும் சங்கத் தலைவியோ

'அங்கு மழை
இங்கு வெயில்
அங்கு குளிர்
இங்கு கூதல்
அங்கு நீ
இங்கு நான்
பிரிக்கும் பூமி
இணைக்கும் வானம்' என்ற நவீன கவிஞர் அன்பாதவனோ ஒவ்வொருவரின் உயிரிலும் இந்தக் காதல் மழையாய்ப் பொழிவதையே சுட்டுகிறது.

ஊடலும் கூடலும் அன்பின் வலியது - இதுதான் தலைமுறைச் சரடு. ஆறறிவின் முதிர்ச்சி. இதன் இழை தொடர்ந்திடத் தான் பயணங்கள். இது இரயில் தண்டவாளங்களாய் நீள்கின்றன.

ஏறும் இடத்தில் ஏறவும், இறங்க வேண்டிய இடத்தில் இளைப்பாறுதலையும் அகலாது அணுகாது கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. முரண்கள் பெருக, உயிர் மேகம் வறண்டுவிடும், காற்று வெப்பமாகும், புழுக்கம் வியர்வையைக் கசியச் செய்யும் களைப்பாகும். உயிர்க்காற்று ஒலியிழக்கும். இறப்பு நிகழும். இந்த இயக்கம் அன்பின் மிகையானாலும், குறைவானாலும் அறுபடும். ஏங்கச் செய்யும், எதிர்ப்பார்ப்பைக் கூட்டும். இணைந்து வாழத் துடிக்கும். இத்தகைய உயிரியக்கம் தான் அன்பாதவனின் 'உயிர் மழை பொழிய வா' கவிதைகளின் உள்ளார்ந்த சூக்குமம்.

வல்லுறவுகளால், வன்முறைகளால் மனதிலும் உடலிலும் பெருகும் வன்மம் தவிர்த்து வதைமனம் தவிர்க்கும் மெல்லிதான மூச்சுக்காற்றை ஆராதிக்கிறார். இந்த மூச்சுக்காற்றுதான் உயிர் மழையாய்ப் பொழிகிறது. மண் செம்மண் நீராகிறது. பெண் நிலமாகிறாள். ஆண்மகனைத் தாங்கிக் கொள்ளும் சுமைதாங்கியாகி பெருமனம் பெறுகிறாள். ஆணின் உயிராகி வாதை தவிர்க்கிறாள். கூதல் போக்குகிறாள்.

எப்பொழுதும் தாயாகவும் மனைவியாகவும் மகளாகவும் மருமகனாகவும் பேத்தியாகவும் பாட்டியாகவும் விஸ்வரூபமெடுக்கிறார். எத்தனை உறவுகளின் படிமங்களால் உயிர்ப் பெற்றாலும் காதலால் கசிந்துருகி கண்ணீர் மல்கும் காதலியாக, மனைவியாக பேறு பெறுகிறாள்.

தூய்மையின் பரிவூரிய மென்கரங்களால் பிசைந்தூட்டிய உணவு உயிராகிறது எனக்கு அழுந்த துடைத்தால் வலிக்குமெனத் துவலையால் ஒத்தியெடுக்கிறாயென் உணர்வுத் துளிகளை
உயிர்மழை பொழிய வா ப :61

"என் நிர்வாணத்தின் இரகசியம் மீது
வெளிச்சம் விழாமல்
உனது நிர்வாணத்தால் எனைமூடி
துழாவித் தேடி போர்த்துகிறாய் ஆடைகளை
கிறக்கம் உலர்ந்ததும்
ஊட்டிக் கொள்கிறோம்
சன்னமான சந்தோஷங்களின் துளிகளை" ப:61

காதலன் பெண்மொழியைப் பெண் தான் எழுத முடியும் என்று அழுத்தமாகக் கூறினாலும், ஆணிற்குள்ளும் பெண்மை பூத்திருக்கும் என்பதற்கான சாட்சியாக இக்கவிதைகள் அமைகின்றன.

அன்பாதவன் கவிதைகளில் சங்க அகமரபு பொதிந்து கிடக்கிறது. எனினும் நவீனத்துவத்தின் யுகத்தின் தாக்கத்தால் கவிதை மொழி மாறுகிறது.

நதியில் குளித்து திளைப்பது
பறை இசை
களைத்துக் கரையில் கிடப்பதோ
குழலிசை
தீப்பற்றி எரியுமோ நதி
தீண்டினால் தெரியும் சேதி
கரைகளை ….. அணைகளை….. எல்லைகளை
மீறுது நீரு
மீறல் தானே ஆறு
மனுசப் பயல்களைப் பார்த்து நமட்டு சிரிப்போ
கண் சிமிட்டுகின்றன
மழை ….
மலை ….
கடல் ….
நதி ….
போங்கடா … நீங்களும் உங்கள் விதிகளும்
ப:67

இந்தக் கவிதையில் பெண்ணும் ஆணும் களவி கொள்வதான படிமம் மிக அற்புதமாகப் பதிவாகியிருக்கிறது.

நதியில் குளித்து திளைப்பது
பறை இசை
களைத்துக் கரையில் கிடப்பதோ
குழலிசை ….

பறையும், குழலும் முறையே பெண்ணாகவும் ஆணாகவும் படிமப்படுத்தப்பட்டுள்ளன.

கரைகளை அணைகளை எல்லைகளை
மீறுது நீரு
மீறல் தானே ஆறு

நவீனத்துவச் சித்தாந்தம் அன்பாதவனின் கவிதைகளில் ஒளவையார் இந்தப் பறை பெண் அந்தரங்க உறுப்பையும், குச்சி ஆணின் அந்தரங்க உறுப்பையும் நினைவுபடுத்துவதாக கவிதையை
அமைத்திருப்பார். இது கவிஞனின் கவி ஆளுமை.

அன்பாதவன் உயிர் மழை பொழிய வா கவிதையின் அட்டைப் படம் ஒர் அரச இலையில் இணை பாம்புகள் படம் அமைந்திருப்பது இங்கே கவனிக்கத்தக்கது. அரச இலை பெண்ணாகவும், பாம்பு ஆணாகவும்
உருவகப்படுத்தப்பட்டு உயிர் மழை பொழிய அழைப்பு விடுக்கும் இந்தக் கவிதைத் தொகுதிக்குள் கவிஞனின் அன்பும் காதலும் பயிர்களில் பனியாய் பரவிக்கிடக்கிறது.

பெண்மனம் பரங்கிப் பூவென மலர் களவிக்கு அழைப்பு விடுக்கிறது. நதியாய்ப் பெருகும் நிலம் நனைத்து ஆண் மனம் மகிழ்ந்து குழலூதும் இவருடைய கவிதைகளில் பொருள்வயின் பிரிவு பற்றிய ஒரு கருத்தாக்கத்தை வரைந்து கொள்ள உதவுகிறது. (Inter personal intelligency) உட்பக திறன் பெற்ற இவர் ஆண்களின் மன உணர்வுகளில் பதிவாகியிருக்கும் நிர்பயாக்களை வதைத்த பிரியங்காவைக் கொலைச் செய்தவர்களைக் கண்டிப்பதோடு நையாண்டி செய்கிறார்.

பெண்ணின் தனி ஆளுமை சிதைக்கப்படாத பெண் உரிமைகள், உணர்வுகள் மதிக்கப்படக் கூடிய சகப் பயணியின் தோழமை நிறைந்த உணர்வுகள் தான் பெரும்பாலான கவிதைகளில் வெளிப்பட்டுள்ளன. அழகுக்காக திருமணம் செய்து கொள்வதும், பின் அதே அழகை வைத்து அவளை மன வதை செய்வதும் ஒர் ஆணுக்கான எழுதப்படாத சட்டமாக அங்கீகார அதிகாரம் அன்பாதவனின் கவிதைகளில் இல்லை என்பது தான் அவர் பெண் விடுதலை உணர்வுக்கு அவர் தரும் அடையாளம். அவர் பெண் விடுதலை உள்ளடக்கிய கவித் தேடல்.

உடலங்களின் இசை நிகழ்வு
ஓய்ந்த தருணமொன்றில் முகிழ்த்த
மகா மெளன மலரின் சுகந்தம்
நிரம்பி வழிகிறது வீடெங்கும்.
ப:3

இந்த சுகந்தம் தான் இருவருக்கான மன இசைவு வீடு கலவியால் நறுமணம் பெறுகிறது. ஆணுக்கு அது கூடுதல் மகிழ்ச்சியையும், பெண்ணுக்கு அது குறைவான சுகத்தையும் தருவதாக எங்கும் பதிவில்லை. செம்புலப்பெயல் நீராய் இரண்டறக்கலந்து மாமழைப்போற்ற வைக்கிறது.

மலையும் கடலும் காடும் மருதமும் புணர்தலில் இனவிருத்தி விதைகளை உற்பத்தி செய்யும் கவிதைகளை அன்பாதவன் தந்திருப்பது உலகத்தின் தொடர் மரபே. பிரிவைப் பேசும் பல கவிதைகளில் பொருள்வயின் பிரிதலில் ஆண் கடமைகளோடு களைந்துவிடுவதும் பெண் குடும்ப பொறுப்பைச் சுமந்து அவன் நினைவுகளை எண்ணி ஏங்குவதும் மிக நுட்பமான வெளிப்பாடாகப் பார்க்க முடிகிறது பல நேரங்களில் கடமை மீறி கசியும் காம வேட்கையை…

வறண்ட நிலம்
தாகத் தவிப்பு
உயிர் மழை பொழிய வா

எனப் பாடி கனைப் பற்றிக் கொள்ளுதலையும் படம் பிடித்திருக்கிறார். மாதவிடாய் நாட்களிலும் கூட ஆணின் உடற்தேவையை மகிழ்விக்கும் பெண் அன்பில் கரையும் அவன் பல நேரங்களில் வெட்கப்படுவதையும் மனக்கினிய வைப்பாக பெண்ணை வைத்து இன்புறும் ஆண்களையும் காண முடிகிறது.

பெண்களைக் கட்டுப்படுத்தி ஒடுக்குவதற்கும், பெண்களோடு உறவாடுவதற்கு ஆண்களின் அதிகாரம் அங்கீகரிக்கப்பட்டிருக்கும். இச்சமுகத்தில் பொருள்வயின் பிரிந்து செல்லும் ஓர் ஆணின் பிரிவில் பெண்ணின் உடல் அவள் உயிர் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை

உனக்காகவே காத்திருந்தது போல்
மகிழ்வோடு திறந்து வரவேற்கிறது
எனக்குள்ளொரு புதிய கதவு
ப:31

உடல்களின் இசைவைப் பாடும் கவிஞன் பிரிவின் வலியையும் விட்டு வைக்கவில்லை.

என் மீதான உனது கோபம்
பனிப்பாறையாய் இருப்பின்
காத்திருப்பேன் அது கரையும் வரை
பிரிவின் இடைவெளியில்
உருகும் கோபம்
பேரன்பின் பெரு நதியாய் பெருக்கெடுக்குமெனும்
நம்பிக்கையில்
ப:33

ஒவ்வொரு நாளும் காதல் வரியின் அகம் உணரும் ஒர் அற்புத காதலனின் காதல் மொழியில்

முதை சுவல் கலந்த முற்றன இனம்புல்
மூதாதை வந்தாங்கு
விருந்தே காமம்
பெருந்தோளோயே – குறுந்தொகை 24

மேட்டில் துளிர்த்த முற்றாழை இளம்புல்லை உண்பதைப் போல காமம் மிகையினும் குறையுனும் நோய் செய்வதை உணர்த்தும் அந்த குறுந்தொகைப் பாடலின் நீட்சியை அன்பாதவனின் கவிதையினும் காண முடிகிறது.

புணர்ச்சி இயல்பானது, தவிர்க்க முடியாதது காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ.நற்றிணை -39

இந்த சங்க அக கவிதையில் கூறப்பட்டுள்ள காமம் காதலால் பெருகுவதை உயிர் மழை பொழிய வா கவிதை தொகுதி முழுவதும் காணமுடிகிறது.

காதலின் சுவையும்
மோகத்தின் சுகந்தமும்
கலந்து உயிர்த்த வானவில் பூங்காவில்
உடல் கோர்த்தலைந்தோம்
இச்சை வழியும் வியர்வைகளில் காமத்தீ

"ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்." – இந்த உயிரிழை தான் வாழ்க்கையைச் சுவைக்க வைக்கிறது.

"உயிர் மழை பொழிய வா"
அன்பாதவன்
நறுமுகை வெளீயீடு, 2016

- அரங்க.மல்லிகா

Pin It

புயல் பெ. ஸ்ரீகந்தநேசன் அவர்கள் இதுவரை காலமும் வெளியிட்ட நூல்கள் அனைத்தும் அடிப்படையில் படைப்பிலக்கியம் என்னும் வகைப்பாட்டினுள் நின்று வடபகுதிவாழ் மக்களின் வாழ்வியலை மண்வாசனையுடன் பேசியது. அவ்வகையில் “போர்க்காலச் சிறுகதைகள் (நமது ஈழநாடு - இலக்கியச் சோலை)” என்னும் நூல் முதன் முறையாக யாழ்க்குடநாட்டில் இருந்து வெளிவந்த ஈழநாடு என்னும் பத்திரிகையின் இலக்கியச் சோலை என்னும் பகுதியில் 2005 ஆம் ஆண்டுக்காலப் பகுதியில் வெளிவந்த சிறுகதைகள் மீதான ஆய்வாக, ஆய்வு நூலாக பரிமாணம் பெற்றுள்ளது. ஒரு படைப்பாளி இலக்கிய ஆய்வாளனாகவும், ஆய்வாளன் படைப்பாளியாகவும் ஒரே வேளையில் இரு தளங்களில் நின்று செயற்படுவது கடினம். அவ்வாறு செயற்படுவதும் மிகக் குறைவாகும். எனினும் புயல் அவர்கள் சிறுகதை படைப்பாளியாகவும், சிறுகதை ஆய்வாளனாகவும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு தமிழ் இலக்கியப் பணியை மேற்கொண்டு செல்கின்றமைக்கு இந்த ஆய்வு நூல் தக்க சான்றாக அமைகின்றது.

பொதுவாக புனைகதை இலக்கியத்தில் சிறுகதை, நாவல் ஆகியன இடம்பெற்றாலும் பரவலாக சிறுகதைக்கே முன்னுரிமை வழங்கப்படுகின்றது. குறுகிய நேரத்தில் வாசித்து முடித்துவிடக்கூடியதாகவும் உள்ளது. புதினம் புளியமரம் என்றால் சிறுகதை தென்னை மரம் என இராஜாஜி குறிப்பிடுவதைப் போல தென்னை மரங்களின் உற்பத்தியும் அது தொடர்பான ஆராய்ச்சியும் எண்ணிலடங்காதவைகளாக இன்று தமிழ் உலகிற்குள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. கலாநிதி க.குணராசாவின் ‘ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை வாலாறு’, பேராசிரியர் க.அருணாசலத்தின “ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகள் (1925–1965)”, பேராசிரியர் ம. இரகுநாதன் அவர்களின் “முற்போக்கு இயக்கமும் ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளும்” முதலிய ஆய்வு நூல்கள் ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை பற்றிய ஆய்வு முயற்சியாக வெளிந்துள்ளன. இந் நூல்களின் வரிசையில் வைத்து எண்ணத்தக்கதாக புயலின் “போர்க்காலச் சிறுகதைகள்” என்னும் ஆய்வு நூல் மிளிர்கின்றபோதும், அவ் ஆய்வு முற்சிகளில் இடம் பெறாத ‘சிறுகதையின் உருவம்’ பற்றி இவ் ஆய்வு நூலில் நோக்கப்பட்டிருப்பது ஆய்வாளரின் தனித்துவத்தைக் காட்டுகின்றது.

 1980களில் ஈழத்தில் இனப்பிரச்சினை கூர்மையடையத் தொடங்கியபோது பல்வேறு பத்திரிகைகள் யாழ்ப்பாணத்தில் தொடங்கப்பட்டன. அவ்வாறு தொடங்கப்பட்ட பத்திரிகையில் தமிழ்த்தேசியத்தை வலியுறுத்தி 2002 ஆம் ஆண்டில் சி. சிவமகராசாவின் தலைமையில் வெளிவந்த பத்திரிகையே “நமது ஈழநாடு” என்னும் பத்திரிகையாகும். இப் பத்திகையில் இலக்கியப் பணியை மேற்கொண்டுவந்த “இலக்கியச் சோலை” என்னும் பகுதியில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த சிறுகதைகள் புயல் அவர்களால் ஆய்வுசெய்யப்பட்டுள்ளன. இந்நூல் இவரின் இளமாணிப்பட்டப்படிப்பின் ஒரு பகுதியை பூர்த்திசெய்வதற்காகத் தமிழ்த்துறைக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரையாகும். அது இன்று ஆய்வு நூலாக வெளிவந்துள்ளது.

“போர்க்காலச் சிறுகதைகள்” என்ற இந்நூலின் தலைப்பையும் நூலின் இயல் இரண்டில் வழங்கப்பட்டுள்ள சமூகக் கதை, காதல், குடும்பம் என்னும் உள்ளடக்கப் பகுப்பும் ஆரம்பத்தில் ஒரு குழப்பத்தையே எனக்குத் தந்தது. “போர்க்காலச் சிறுகதைகள்” என்ற தலைப்பில் ஏன் இவ்வாறான உள்ளடக்கப் பகுப்புகள் வந்தன? என்ற குழப்பம் தோன்றியது. இந்த குழப்பத்திற்கு நூலின் இறுதியில் “இங்குள்ள சிறுகதைகளில் ஒரு பொதுவான தன்மை ஒன்றினை அவதானிக்க முடிகின்றது. சமூகம், குடும்பம், காதல் என்று எந்த விடயங்களைக் கூறினாலும் அதில் இனப்பிரச்சினைகளின் தன்மைகள் ஓரளவுக்காவது எடுத்துக் கூறப்பட்டுள்ளன…” என ஆசிரியரே விடை கூறிவிட்டார். அந்த வகையில் இந்நூலின் ஆய்வுத் தலைப்பு பொருத்தமாகவே அமைந்துள்ளது.

இந்நூல் பிரதானமாக நான்கு இயல்களாக பகுக்கப்பட்டு, பல்வேறு தளங்களில் நின்று வெவ்வேறு கோணத்தில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது என்றே கூறவேண்டும். இந்நூலின் மூன்றாவது இயல் சிறுகதை என்னும் இலக்கிய வடிவத்தை கோட்பாட்டுநிலை நின்றும்,“நமது ஈழநாடு இலக்கியச் சோலை” என்னும் பகுதியில் வெளிவந்த சிறுகதைகளை எடுத்துக்கொண்டு சிறுகதை கோட்பாட்டை பயன்படுத்தி ஆய்வு செய்துள்ளமையையும் காணலாம். சிறுகதை கோட்பாடும் அதன் பிரயோகமும் சங்கமிக்கும் இடமாக இப்பகுதி ஆசிரியரால் ஆய்வுசெய்யப்பட்டுள்ளது.

இசையில் இராகம் என்பது வெறும் வடிவமாகத்தான் இருக்கின்றது. அந்த வடிவத்திற்குள் அர்த்தங்களையும் உணர்ச்சிகளையும் கொட்டி நிரப்பும்போது அது முழுமை பெறுகின்றது. அது போலதான் சிறுகதை என்னும் இலக்கிய வடிவமும் ஆரம்பத்தில் வெறும் வடிவமாக இருக்கின்றது. அந்த வடிவத்தை முழுமையாக்குவது புனைதிறன், கதைக்கரு, பாத்திரப்படைப்பு, தலைப்பு, தொடக்கம் முதலிய ஆக்கக்கூறுகளே என்பதை இந்நூலின் மூன்றாவது இயல் தெளிவுபடுத்துகின்றது. இவ் இயலினூடாகவே இந்நூல் ஆசிரியர் தாம் ஆய்விற்காக தேர்ந்தெடுத்த சிறுகதைகளை சான்று காட்டி சிறுகதைகளுக்கு இருக்கவேண்டிய அம்சங்களை விளக்கிச்சென்றுள்ளார்.

மேலும் சிறுகதையின் அம்சங்களில் ஒன்றாகிய “நடையியல்”(Stylistic) என்னும் பகுதி இன்றைய மொழியியல் ஆய்வுகளை மேற்கொள்பவர்களும், மேற்கொள்ள விரும்புபவர்களுக்குமான ஆய்வு வெளியைத் திறந்துவிடுகின்றது. அதுமட்டுமல்லாது “நடையியல்” குறித்த ஆய்வுகள் தமிழ்ச்சூழலுக்குள் அதிகமாக உள்வாங்கப்படவேண்டும் என்ற அவரின் கோரிக்கையை முன்வைக்கின்றது. “ஈழத்துத் தமிழ் நவீன இலக்கியங்களின் நடையியல் உரைநடை வளர்ச்சி, ஒப்பியல், உருவம் முதலியன சார்பாக வெளிவந்த ஆய்வுகள் அரிது என்றே கூறவேண்டும்.” என இந்நூல் ஆசிரியர் குறிப்பிடுவது எதிர்காலத்தில் நடையியல் குறித்து ஆய்வுகளை மேற்கொள்ள வழிசமைக்கிறது.

“போர்க்காலச் சிறுகதைகள்” என்னும் இந்நூலின்இந்நூலின் இரண்டாவது இயல் “நமது ஈழநாடு” என்னும் பத்திரிகையில் வெளிவந்த (2005 ஆம் ஆண்டில்) சிறுகதைகளை உள்ளடக்கரீயில் ஆய்விற்குட்படுத்தியுள்ளது. போர்க்காலச் சூழலில் வடபகுதிவாழ் மக்கள் சுமந்து நின்ற சுமைகளை இனப்பிரச்சினை, சமூக யதார்த்தம், குடும்பக் கதைகள், காதற் கதைகள் என்னும் நோக்கில் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் சொல்லெணாத் துயர்களை வெளிப்படுத்தி நிற்கும் இப்பிரச்சினைகள் இம் மக்களின் ஒரு காலகட்ட வாழ்வியலின் பதிவாகவும் வரலாற்று ஆவணமாகவும் இந்நூலினூடாக பதிவாகின்றது.

 முதலாவது இயல் தனிக்கவனத்திற்குரியது. இப் பகுதியிலேயே நமது ஈழநாடு - இலக்கியச் சோலை என்னும் பகுதியில் 2005 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சிறுகதைகளை படைத்தளித்த படைப்பாளிகள் பற்றிய அறிமுகம் பதிவு செய்யப்பட்டுள்ளது. தையிட்டி அ. இராசதுரை முதலாக சி.கதிர்காமநாதன் ஈறாக ஈழத்தின் இனப்பிரச்சினை காலகட்டத்தில் “நமது ஈழநாடு” என்னும் பத்திரிகைக்கு இலக்கியப் பணியாற்றிய முப்பதிற்கும் அதிகமான படைப்பாளிகள் இவ் இயலினூடாக அறிமுகமாகின்றனர். மேலும் ஈழத்துச் தமிழ்ச் சிறுகதை வரலாறு அதன்; அமைப்பு, உள்ளடக்கம் கருதி ஏழு கட்டங்களாக வகுக்கப்பட்டும் இவ்வியலில் வரலாற்று அணுகுமுறையில் நோக்கப்பட்டுள்ளது.

இறுதி இயலில் “மதிப்பீடு” என்னும் பகுதியில் ஆய்விற்காகத் தெரிவுசெய்யப்பட்ட சிறுகதைகளை மதிப்பீட்டுத் திறனாய்வு முறையைப் பயன்படுத்தி இந்நூல் ஆசிரியர் ஆய்வுசெய்துள்ளார். குணம் நாடி குற்றம் நாடி தாம் ஆய்விற்குத் தெரிவுசெய்த சிறுகதைகளில் குறிப்பிட்ட சில சிறுகதைகளின் தரம் பற்றிய பதிவு இங்கு இடம்பெறுகின்றது. மதிப்பீட்டுத் திறனாய்வு குறிப்பிட்ட இலக்கியத்தின் தரம், தகுதி, சிறப்பு என்பவற்றைப் பேசுவதோடு, அவ்விலக்கியத்தில் அமைந்திருக்கும் கூறுகளும், பண்புகளும், உண்மைகளும் பிறவும் இலக்கிய மதிப்பீடு உடையவை என்பதை பேசுகின்றது. அவ்வகையில் புயல் அவர்கள் ஆய்விற்காக தேர்ந்தெடுத்த நாற்பத்தைந்து சிறுகதைகளில் ஒரு சில கதைகள் சிறுகதைக்குரியத் தன்மைகளை கொண்டு விளங்கவில்லை என்பதையும் ஒரு சில கதைகளில் இன்னுமொரு சிறுகதையின் தாக்கம் இருப்பதாகவும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். இவ் இயலினூடாக ஒரு ஆய்வாளன் ஆய்வின் உண்மைத் தன்மைகளை ஆராய்ந்து செல்லவேண்டும் என்பதையும் ஒரு விமர்சகன் பக்கச் சார்பின்றி இலக்கியத்தின் தரம் பற்றி கருத்துக்களை வழங்கவேண்டும் என்பதையும் கவனத்தில் கொண்டு, இந்நூல் ஆசிரியர் செயற்பட்டுள்ளார். இதன் மூலம் ஒரு சிறந்த ஆய்வாளனாகவும் விமர்சகனாகவும் புயல் அவர்கள் செயற்பட்டுள்ளதை நூலின் இறுதி இயல் நன்குத் தெளிவுப்படுத்துகின்றது.

பெரும்பாலும் தமிழ் ஆய்வு முயற்சிகளில் ஈடுபடுவோர் பத்திரிகைகளில் வெளிவரும் படைப்புக்களை ஆய்வு உலகிற்குள் கொண்டு வருவது மிகக் குறைவு. அதிலும் தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தி வரும் பத்திரிகை ஒன்றை இளமாணிப் பட்டப்படிப்பின் ஒரு பகுதியை பூர்த்தி செய்வதற்காக தெரிவுசெய்து அதில் வெளிவரும் சிறுகதைகளை ஆய்விற்குட்படுத்துவதென்பது ஆச்சரியம் தரும் ஒன்றே. ஏனெனில் இன்றுவரையும் ஆய்வு முயற்சிகளில் ஈடுபடுவோர் மரபு, நவீன இலக்கியங்கள், நூல்களாக வெளிவந்து ஆவணமாக்கப்பட்ட படைப்பிலக்கியங்கள், இலக்கணம், புகழ்பெற்ற படைப்பாளிகள் என ஆய்விற்குள் தம் கவனத்தை செலுத்தி வருகின்றனர். சில மாணவர்கள் ஆய்வை இலகுவாக மேற்கொண்டு செல்வதற்காகவும் படைப்பிலக்கியங்கள் பால் தமது கவனத்தை குவிக்கின்றனர். ஆனால் கிழமைதோறும் வெளிவரும் தமிழ்ப் பத்திரிகையொன்றைத் தெரிவுசெய்து தொகுத்து “இலக்கியச் சோலை” என்னும் பகுதிக்கும், அதில் படைப்புக்களை வழங்கிய படைப்பாளிகளுக்கும் அவர்களிகளின் படைப்புக்களுக்கும் ஒரு அந்தஸ்தை வழங்கி அவற்றை ஆவணமாக்கியுள்ளமை மாணவனாக இருக்கும்போதே புயல் அவர்கள் ஆழமான ஆய்வினை மேற்கொள்ள அவாவியதை, மேற்கொண்டதை பறைசாற்றுகின்றது.

முன்னர் சுட்டிக்காட்டியது போல புயல் அவர்கள் ஆய்வாளன் என்பதற்கு அப்பால் ஒரு சிறந்த படைப்பாளி என்பதை ஊர்ஜிதப்படுத்துவதாக இயல் இரண்டில் வழங்கப்பட்டுள்ள இவரின் “செழிப்பைத் தேடும் பறவைகள்” என்னும் சிறுகதை இடம்பெறுகின்றது. இச்சிறுகதையும் “நமது ஈழநாடு” என்னும் பத்திரிகையில் 2003 ஆம் ஆண்டில் வெளிவந்துள்ளது. இராணுவத்தினரால் தமிழ் மக்கள் கொடுமைப்படுத்தப்பட்டதையும் அகதி முகாம்களில் அவர்களுக்கு நேர்ந்த துயரங்களையும் இச்சிறுகதை வெளிப்படுத்துகின்றது.

எனவே “போர்க்காலச் சிறுகதைகள் (நமது ஈழநாடு - இலக்கியச் சோலை)” என்னும் ஆய்வு நூல் உயர்தரத்தில் தமிழை ஒரு பாடமாக கற்கும் மாணவர்களுக்கும், பல்கலைக்கழக மாணவர்களுக்கும், ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைக் குறித்து ஆய்வுகளை மேற்கொள்பவர்களுக்கும், ஒர் ஆய்வு மாணவன் எவ்வாறு ஆய்வில் ஈடுபட வேண்டும் என்பதற்கும் ஒர் உசாத்துணையாக அமைந்துள்ளதென்பது திண்ணம்.

- சி.ரஞ்சிதா, யாழ். பல்கலை

Pin It

வர்க்கத் தோற்றுவாய்க்குப் பின்னரான சமூகக் கட்டமைப்புகள் பல்வேறு முரண்பட்ட செயல்களை மனித குலத்துள் தோற்றுவித்திருக்கிறது. அவற்றுள் ஒவ்வொரு சமூக பண்பாட்டுச் சூழலும், அச்சமூகக் கட்டமைப்பைத் தாங்கிப் பிடித்தே வந்துள்ளதை கலை, இலக்கியப் பண்பாட்டு சூழலியல் மிகத் தெளிவுபட விளக்கி உரைக்கின்றது. குறிப்பாக, மேற்கட்டுமான கட்டமைப்புக்குள் ஒன்றாகக் கருதப்படுகின்ற, ‘காதல்’ பற்றி உலகியல் வாதம் பல்வேறு கருத்தியலை முன் வைத்துச் செல்கின்றது; இன்றும் கூட அது தொடர்பான விவாதம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது.

vairamuthu oru porkalam irandu pookalஆண், பெண் கூடிக் களிப்புறும் ‘காதல்’ பற்றி தமிழிலக்கியங்கள் மட்டுமல்ல, உலக இலக்கியங்களும் அழகுறவும், உள்ளுணர்வின் வேட்கை மிகுமாறும் கூட எடுத்துரைத்தன. பண்டைக் காலந் தொட்டு இன்று வரையுமாய் இலக்கியங்களில் அங்கீகரிக்கப்பட்டதாகக் கூறப்படினும், காதல் சமூகத்தால் மறுக்கப்பட்டே வந்துள்ளது என்பதே நாம் கண்ட, காணும் உண்மை. இதற்குரிய காரணியாய் சமூகத்திலுள்ள வர்க்க அடிப்படையே என வாதிடுவர் சமூகவிஞ்ஞான ஆய்வாளர்கள்.

காதல்

பண்டைத் தமிழ் இலக்கியப் பதிவுகள் மிக செறிவாக, நுட்பமாக காதலை உணர்த்துகிறது. உதாரணமாக,

“யாயும் யாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே” என்ற குறுந்தொகை பாடல் அடிகள்

நீ யாரோ? நான் யாரோ? உன் தாய், தந்தையும், என் தாய், தந்தையும் யார் யாரோ? நீயும் நானும் எவ்வகை வழியும் அறியாது, செம்மண்ணில் விழுந்து இரண்டற கலந்த நீர்போல அன்புடைய நம் இருவர் நெஞ்சமும் இரண்டற கலந்ததே” என்று காதலின் நிலையினை மிக நுட்பமாக 6 அடிகளில் சுருங்கச் சொல்லி விளக்கும் மாண்பு பழந்தமிழிடையேயுள்ள சிறப்பு.

அத்தகு இனிமை பயக்கும் காதல் பற்றி இக்காலத்து இலக்கியவாதிகள் பலரும் தமது கலை, இலக்கிய போக்கின் ஊடாக பலவாறாக எடுத்துரைத்தனர். இன்றும் எடுத்துரைக்கின்றனர்.

“காதல் காதல் காதல் ஃ காதல் போயின் ஃ சாதல் சாதல்” என்றான் நம் பாரதி.

அத்தகைய ‘காதல்’ செய்யும் இளையோரோ? “காதல் காதல் காதல் காதல் செய்யின் சாதல் சாதல்” என்று கூறும் அளவிற்கு ‘காதல்’ எனும் போக்கு மனித அழிவை இந்திய சமூகம் மிக பெருமளவில் சந்தித்து வருவதை தொடர்ச்சியாகக் கேட்டும், கண்டும் வருகின்றோம். இத்தகைய சூழலை மையமிட்டு ஒரு நிலவுடைமைச் சூழலில் காதல் எவ்வாறு வெற்றி பெற முடியும். ‘காதல்’ நிலைத்தாலும் காதலர்கள் அழிந்து கொண்டே இருக்கிறார்கள் என்பதை ஆசிரியர் நாவல் வழி தருகின்றார்.

நிலபிரபுக்கள், ஜமீன்தார் என்று கூறுகின்ற அதிகாரத்துவ தன்மை (தகுதி) கொண்டவர்களின் செயல்பாடுகளை வெளிபடுத்தி, சமூகத்தின் கடந்த கால வாழ்க்கையை பிரதிபலிக்கின்றார் வைரமுத்து. ஆம்! ‘ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்’ என்ற புதினம் 21-ம் நூற்றாண்டிற்கு முந்தைய நிலபிரபுத்துவக் கட்டமைப்பின் உச்ச நிலையையும், அதிகாரப் போக்கையும், புறம் சார்ந்த நிலையையும், அகம் சார் கருத்தியலின் அழிவையும் அகப்புற சூழலில் நின்று மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

தமது எழுத்தாளுமையால் ஜமீன்களின் தன்மையையும், கலைக் கூத்துத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களின் வாழ்வு நிலையையும், இருவேறுபட்ட தளத்துள் இருக்கும் இவர்களுக்குள்ளான காதல். அதனால் ஏற்படும் முரண்கள், அழிவுகள் என திரைப்படத்தின் காட்சிகளைப் போல வருணனைகள் தந்து மிகச் சிறப்பாகவும், நுட்பமாகவும் வைரமுத்து எடுத்துரைக்கின்றார்.

ஜமீன் நிலத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு மக்களின் உழைப்பைச் சுரண்டி வாழும் தன்மையுடையோராய் ஜமீன்தார்கள் இருந்தனர். அவர்கள் பேசினால் வேதம்; செயல்படுத்தினால் சட்டம்; எதிர் நின்று பேசினால் அல்ல பார்த்தாலே கொலை செய்யும் கொடுமையும் அவர்களின் காலச் சூழல்.

அவர்களின் அதிகாரப் போக்கு, அரசியல் செல்வாக்கு, பொருளாதார செல்வாக்கு அங்கு வாழும் ஒட்டுமொத்த மக்களையும் அச்சப்படவே வைத்தது. ஆக, தர்பாரும், தனித்தன்மையும், சொல்லும் சொல் வேத வாக்காகவும், பிறர் ஏவல் வழி வாழ்வதையே கடமையெனக் கொண்டும் மக்கள் வாழ்ந்தனர்.

இத்தகைய ஜமீன்தார் முறையையுடைய தமிழகத்தின் 20 ஆம் நூற்றாண்டிற்கு முன்னரான வர்க்க முரண்பாட்டோடு கூடிய சாதிய படிநிலைச் சூழலையும் பொருத்தி வைரமுத்து 20 ஆம் நூற்றாண்டின் மைய பகுதி நிகழ்வை மிக அழகாக பதிவு செய்திருக்கின்றார் வைரமுத்து.

அனைத்துத் தகுதிகளையும் பெற்ற முழு அதிகாரம் படைத்த ஜமீன் மகன், கலைத் துறையில் ஈடுபட்டு பிழைப்பு நடத்தும் ஓர் பெண். இருவருக்குமிடையேயான காதல், வர்க்க முரண், ஜமீன் அதிகாரப் போக்கு, கலைக் கூத்துத் தொழிலில் ஈடுபடுவோரின் நிலை, காதலின் ஈர்ப்பு, ஆழம், அதனால் விளையும் தீமைகள் என ‘காதலின் பயணம்’ அழகுற சென்று அழிவை எதிர்கொள்ளும்படியான செயலொடு கதைக்களம் முடிவுறுகிறது.

மாந்தர்கள்

1. முதன்மை மாந்தர்கள்.
 ராஜதுரை (ஜமீன்தார் மகன்)
 அம்சவள்ளி (கூத்துக்கலை பெண்)
2. துணை மாந்தர்கள்
 வெள்ளையம்மாள் (அம்சவள்ளியின் தாய்)
 ஜமீன்தார் (இராஜதுரையின் தந்தை)
 ஜெகதீஷ்வரி (ஜமீன்தார் மனைவி)
 அங்கப்பன் (அம்சவள்ளியின் மாமன்)
3. இன்ன பிற துணை, ஒரு நிலை மாந்தர்கள்

காதலைப் பற்றி நூலில் முன்னுரையில் கூறும் வைரமுத்து,

“காதலை இன்னும் இந்த மண்ணில் யாரும் சரியாகப் பார்க்கவில்லை. மொழி அதை வெறும் வார்த்தையாய்ப் பார்க்கிறது. விஞ்ஞானம் அதை வெறும் ஹார்மோன்களாய்ப் பார்க்கிறது. மதம் அதை வலக்கையில் தண்டித்துவிட்டு இடக்கையில் ஆசீர்வதிக்கிறது. தத்துவம் அதை தனக்குள் சேர்த்துக் கொள்ளலாமா வேண்டாமா என்று இன்னும் தீர்மானம் போடவில்லை. பெற்றோர் காதலை தங்களோடு முடிந்துவிட்ட சமாச்சாரமாகவே கருதுகிறார்கள். சமூகம் இன்னும் அதை ஓர் ஒழுக்கக் கேடு என்றே உறுதியாக நம்புகிறது. எனவே இந்தியாவில் காதல் இன்னும் நம்பிக்கை வைத்திருப்பது காதலர்கள் மீதுதான்.

அவர்கள் மட்டுமே அறிவார்கள் அது சக்தி என்று. அதன் அவஸ்தைகள் சந்தோஷங்கள் எல்லாம் எரிப்பொருள்கள்”. (பக். 55, ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்) என்கிறார். மேலும்,

காதலின் ஆசைகள் அர்த்தமில்லாதவை. ஆனால் ஆழமானவை. பைத்தியக்காரத்தனங்களே காதலின் சபையில் கௌரவிக்கப்படும் (பக். 81) என்றும் கருத்துரைக்கின்றார்.

நாவலின் கதை நகர்வு

கண்டமனூருக்கு முதன் முதலில் கூத்து நிகழ்ந்த வெள்ளையம்மாள் தன் மகள் அம்சவல்லியை அழைத்து வருகின்றாள். அவர்கள் ஜமீன்தார் வீட்டில் தங்குவது, அவர்கள் கொடுக்கும் பொருளைப் பெறுவதும் கூத்துக் கலைஞர்களின் வழக்கம். ஜமீன்தார் பொருளைத் தரும் போது அம்சவல்லி வாங்க மறுத்து, உழைப்புக்கு ஊதியம் தாருங்கள். கொடை தந்து கொச்சைப்படுத்தாதீர்கள் எனக் கூற ஜமீன் கோபம் அடைகிறான்.

இதற்கிடையில் ஜமீனின் ஒரே வாரிசு இராஜதுரை அம்சவல்லி மீது காதல் கொள்ளவும், இந்நிகழ்வு ஜமீனுக்கு தெரியவர, வேறொரு ஜமீன் பெண்ணை இராஜதுரைக்கு நிச்சயம் செய்ய, அவனோ அம்சவல்லியின் ஊருக்கே சென்று, வறுமையானாலும் காதலியோடு வாழ்கின்றான்.

இராஜதுரைக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனான போடி ஜமீன் பூபதிராஜா அவனை பழிவாங்க முடிவெடுக்கிறார். அம்சவல்லி குடும்பமோ பணம் மீது ஆசை கொண்டு அலைகின்றனர். அவள் மாமன் அங்கப்பனும் துன்பம் தருகின்றான். இதை தெரிந்து கொண்ட பூபதி, அம்சவல்லியை சீரழித்து, இராஜதுரையை கொலை செய்யவும் அடியாட்களை அனுப்புகிறான். இதே சூழலில் தமக்கு இழிவு ஏற்படுத்திய அம்சவல்லியை அழித்து விட்டு தன் மகனை அழைத்து வர கண்டமனூர் ஜமீன் ஆட்களை அனுப்பி வைக்கிறார்.

பணத்தாசைக் கொண்ட அங்கப்பனிடம் பணம் கொடுத்து அம்சவல்லியை தனியாக ஓரிடத்திற்கு வரவழைக்கிறான். அங்கு பூபதி அம்சவல்லியை தகாத பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயலுகிறான். அது கண்டு கோபம் கொண்ட இராஜதுரை துணிச்சல் கொண்டு ‘பூபதி’யை கொலை செய்துவிட, இருவரும் வேறிடம் நோக்கி ஓடுகின்றனர்.

ஒருபுறம் கண்டமனூர் ஆட்கள், மறுபுறம் போடி ஜமீன் ஆட்கள். இரு கும்பலும் இருவரையும் கொலை செய்யத் துடிக்கின்றனர். கண்டமனூர் ஆட்களில் ஒருவன் அம்சவல்லி மீது ஈட்டியை பாய்ச்சுகிறான். அதை முன்னால் நின்று இராஜதுரை தடுக்க, அவன் மீது ஈட்டி பாய்கிறது. அது கண்ட அம்சவல்லி ஈட்டியின் மீதி பகுதியினுள் தன் உடலைச் செலுத்தி தானும் இறந்துவிடுகிறாள்.

காதல் ஈர்ப்பினால் ஈருடலும் ஓருடலாய் ஈட்டியில் புகுந்து இருவருமே இறந்து போவதாக கதை முடிவடைகிறது.

இக்கதை அடிப்படையாக ஓர் மிகச்சிறந்த திரைப்படம் போன்று நகர்கிறது. ஆசிரியர் கதையின் உள்ளடக்கத்தை அமைத்து சென்றிருக்கும் விதம் மிகச் சிறப்பு. மிகச் சிறப்பான முறையில் கதை தொடக்கம், நகர்வு உச்சம் என மிக சரியாக கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கிறது. நிலவுடைமைச் சமூகத்தில் ஜமீன்தார்களின் நிலை, மக்களின் நிலை, கலை கூத்து நிகழ்த்துவோரின் நிலை காதல், அழிவுயென எதார்த்த நடைமுறைப் பதிவாய் உண்மையின் பிம்பமாய் உலவுகிறது இக்கதை.

கதை மாந்தர்களை அறிமுகப்படுத்தும் முறை, அவர்களை வருணிக்கும் போக்கு என ஒவ்வொரு எழுத்தும் சிற்பியின் கைவண்ணத்தில் இருக்கும் சிற்பங்களைப் போல. கவிதை நடையில் எதுகை, மோனையிலும் சொற்சுவை சொட்ட மிக அழகாக சுருக்கமாக எவ்வித சலிப்புமின்றி இறுதி வரை நகர்கிறது “ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்” புதினம். மிகச் சிறந்த மண் சார் பதிவாக, மானுடத் தேடலான காதலின் பிழிவாக, சமூகத்தில் எதார்த்த பிம்பமாக, நிலவுடமையின் காதல் கதையை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார் கவிஞர் வைரமுத்து அவர்கள்.

 - முனைவர் பா.பிரபு, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீமாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மதுராந்தகம் - 603 306

Pin It