சித்திரவதையால் பாதிக்கபட்டோருக்கான சர்வதேச ஆதரவு தினம் – ஜூன் 26 

ஒவ்வொரு ஆண்டும்  ஜூன் 26 ஆம் நாளை “சித்திரவதைகளால் பாதிக்கபட்டோருக்கான சர்வதேச ஆதரவு தினமாக” ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. உலகில் சித்திரவதையை ஒழிப்பதே இதன் நோக்கம் ஆகும்.

நம் வீடுகளில் கூறிய கதைகளில் வரும் “நரகம்” என்ற உலகம் உங்களுக்கு ஞாபகம் வருகிறதா?. நரகத்தில் தவறு செய்தவர்களை கடவுள் பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாக்குவார் என்பது தான் அந்தக் கதைகளின் நீதி.

police torture in india

சித்திரவதை என்றால் என்ன ?

 “சித்திரவதை” என்பது ஒரு தவறுக்கான தண்டனையாகவோ, ஒரு கருத்தை வலுக்கட்டாயமாக ஏற்கவைப்பதற்காகவோ, பாகுபடுத்தும் நோக்கத்திலோ, அச்சுறுத்தல் செய்வதற்காகவோ அல்லது வேண்டுமென்றே நடத்தப்படுகிறது.

“ஒருவர் தமக்கான உள்நோக்கத்துடன், தானாகவோ அல்லது தமது தூண்டுதலின் பேரிலோ, தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி இன்னொருவர் மீது, உடல்ரீதியாகவோ, மன ரீதியாகவோ கடுமையான வலியையோ அல்லது மன வேதனையையோ ஏற்படுத்துவதையே சித்ரவதை” எனலாம்.

சித்திரவதை என்பதை மூன்று வகையாகப் பிரிக்கலாம் அதாவது 

முதலாவதாக நமது வீடுகளில் நிலவும் சித்திரவதை.

வீடுகளில் சித்திரவதை என்னும் போது ஆணாதிக்க சிந்தனையுடன் தங்கள் குடும்பத்தில் உள்ள குழந்தைகள் மீதோ, பெண்கள் மீதோ அல்லது பெரியவர்கள் மீதோ செலுத்தும் வன்முறை மற்றும் சித்திரவதைகளைக் கூறலாம்.

இரண்டாவதாக சமூகத்தில் நிலவும் சித்திரவதை.

சமூகத்தில் நிலவும் சித்திரவதை என்னும் போது வேலையாட்கள் மீதோ, ஜாதி மற்றும் சமூக ரீதியாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ பின்தங்கியவர்கள் மீது சமூகத்தில் அல்லது பொதுவான இடங்களில் ஆதிக்க சிந்தனையுடன் செலுத்தப்படும் சித்திரவதை எனலாம்.

மூன்றாவதாக மக்களைப் பாதுகாக்க வேண்டிய அரசே மக்கள் மீது நடத்தும் சித்திரவதை.

மக்களைப் பேணிப் பாதுகாக்க வேண்டிய அரசே சாதாரண மக்கள் மீது நடத்தும் சித்திரவதையைக் குறிப்பிடலாம். குறிப்பாக காவல்துறை, பாதுகாப்புப் படைகள் மூலமாகவோ அல்லது அரசு எந்திரங்களின் ஏதாவது அமைப்புக்கள் மூலமாகவோ இது நடத்தப்படுகின்றது.

மனித உரிமைக் கண்ணோட்டத்தில் சித்திரவதை

மனித உரிமை என்பதன் அடிப்படைத் தத்துவம் என்ன?

சமத்துவம் – மனிதருள் ஒவ்வொருவரும் மற்றவருக்குச் சமம்.

சுதந்திரம் – நாம் ஒவ்வொருவரும் பிறரைப் பாதிக்காத வகையில் நம்முடைய சுதந்திரத்தை முழுமையாக அனுபவிக்க முடியும்.

மாண்பு – மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் தன்மானம் என்கின்ற மாண்புரிமை உண்டு.

இவை தான் இந்தியாவின் அரசியல் சாசனங்களின் படியும், சர்வதேச சட்டங்களின் படியும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமையின் அடிப்படைத் தத்துவம். எனவே தான் சித்திரவதையை மனித உரிமைக் கண்ணோட்டத்தில் பார்க்கவேண்டியுள்ளது.

“சித்திரவதை” என்பது மனித உரிமை மீறல்களில் மிகக் கொடூரமான வடிவமாகும். ஒருவரை மனிதத் தன்மையற்ற முறையில் கீழ்த்தரமாக நடத்துவதும், கொடுமைப் படுத்துவதும், அவர் தம் உரிமைகளை அனுபவிக்க விடாமல் மறுப்பதும் மனித நாகரீகமற்ற செயல் ஆகும்.

சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்கும், அவர்களுக்கான மறுவாழ்வை உறுதிபடுத்தவும், சர்வதேச சட்டங்கள் வழிவகைகளைச் செய்கின்றன. இதற்காக ஐநா மூலம் சர்வதேச உடன்படிக்கை மற்றும் ஒப்பந்தகள் ஏற்படுத்தி தற்போது பல்வேறு உலக நாடுகளில் சித்திரவதை என்பது முழுமையாக ஒழிக்கப்பட்டு வருகின்றது.

அரசே நடத்தும் சித்திரவதை

வளர்ந்து வரும் இன்றைய கால கட்டத்தில் சித்திரவதை நடைபெறுகின்றதா? என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். ஆம் கால மாற்றத்திற்கேற்ப சித்திரவதையின் வடிவங்களும் மாறிக்கொண்டே இருக்கின்றன.

தீவிரவாதிகளைக் கண்டு பிடிப்பதற்காக சாமானியர் மீது பதுகாப்புப் படை வீரர்கள் நிகழ்த்தும் சித்திரவதை.

தனி மனிதர் தவறு செய்தால் உண்மையை அல்லது உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க அப்பாவி மக்கள் மீது காவல்துறை நிகழ்த்தும் சித்திரவதை.

அரசு எந்திரத்தின் முக்கிய அங்கமான காவல்துறை, பாதுகாப்புப்படை ஆகியோர் அப்பாவி மக்கள் மீது நடத்தும் சித்திரவதைகள்  ஜனநாயகத்தின் அடிபடையையே கேள்விக்குள்ளாக்குகிறது.

சித்திரவதையின் வடிவங்கள்

சித்திரவதையினால் பாதிக்கப்பட்டவர்கள் படும் இன்னல்களை ஆய்வு செய்தோமானால் எழுதி மாளாது. நீங்கள் சித்திரவதையின் சில வடிவங்களை நாம் திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள். ஆனால் அதே சித்திரவதையை தினமும் பல்லாயிரம் பேர் அனுபவிக்கின்றார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? சித்தரவதை மூலமாகவும் போலி மோதல் கொலை (என்கவுண்டர்) மூலமாகவும் பலர் கொல்லப்படுகின்றனர். சித்திரவதையால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்தவர்கள் படும் துயரம் நம்மால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது. பல மாதங்களாக சட்டவிரோதமாக தனி அறைகளில் வைத்து, கை கால்களைக் கட்டி வைத்திருத்தல். கை கால் எலும்புகள் முறிக்கப்படுதல், உடலில் முக்கிய நரம்புகளைத்துண்டித்தல் போன்ற மனித நேயமற்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். மேலும் தலை, கண், காது, வாய், மூக்கு, சிறுநீரகம், ஆசன வாய் போன்ற பல்வேறு முக்கிய பாகங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்துதல் மற்றும் உடலில் மின்சக்தியைச் செலுத்துதல் போன்ற பல்வேறு வகையிலான சித்திரவதைகளுக்கு உள்ளாக்குகின்றனர். இதனால் சித்திரவதைகளுக்கு உள்ளானவர்கள் உயிர் பிழைத்தாலும் தம் வாழ்நாள் முழுமையும் இயலாமை மற்றும் வேதனையுடன் வாழவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றனர்.

சித்திரவதையைத் தடுப்பதற்கான ஐக்கியநாடுகள் சபையின் முயற்சிகள்

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகில் சித்திரவதை என்ற கொடுமையே இருக்கக் கூடாது என்று ஐநாவின் மனித உரிமைக் கவுன்சிலும் உறுப்பு நாடுகளும் திட்டமிட்டன. சித்திரவதையை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்றும் சித்திரவதையால் பாதிக்கபடுவோருக்கு ஆதரவு தெரிவித்து ஆறுதல் அளித்து மன ரீதியாக தைரியப்படுத்தி அவர்களுக்கான நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்றும் தீர்மானித்தனர். இதற்காக முதலாவதாக 1984 ஆம் ஆண்டு ஐநாவின் பொதுச் சபையில் சித்திரவதைகெதிரான ஓர் உடன்படிக்கை அறிமுகப்படுத்தப்பட்டது. 1987ஆம் ஆண்டு முதற்கட்டமாக 20 நாடுகள் இந்த சர்வதேச உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டன. அதன்பிறகு படிப்படியாக பெரும்பாலான நாடுகளும் ஏற்றுக் கொண்டுவிட்டன.   

இந்தியாவும் சித்திரவதைக்கு எதிரான ஒப்பந்தத்தில் 1997இல் கையொப்பமிட்டது. சித்திரவதையை ஒழிப்பதற்காக ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட நாடுகள் தமது நாட்டில் சித்திரவதையைத் தடை செய்வதுடன் தனது குடிமக்கள் அனைவரும் எந்த விதமான சித்திரவதைக்கும் உள்ளாகாமல் பாதுகாப்புடன் இருப்பதை உரிய அறிக்கைகள் மூலம் உறுதி செய்தல் வேண்டும். மேலும் சித்திரவதையால் பாதிக்கபட்டோருக்கு சட்டரீதியாகவும், மறுவாழ்வு ரீதியிலும் ஆதரவுக் கரம் நீட்டவேண்டியதும் குறிப்பிட்ட அரசுகளின் கடமை ஆகும்.

இந்தியாவில் சித்திரவதை உள்ளதா?

ஐநாவின் சித்திரவதைக்கு எதிரான சர்வதேச உடன்படிக்கையில் இந்தியா 1997இல் கையொப்பமிட்டு இருபது ஆண்டுகள் ஆகியுள்ளது. இருப்பினும் இந்தியாவில் சித்திரவதையை ஒழிப்பதற்காகவோ, ஒப்பந்தத்தின் அடிப்படையில் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவோ, எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை.  மாறாக அரசே மக்கள் மீதான சித்திரவதையை நடத்தி வருகிறது என்பது தான் நிதர்சனம்.

இந்தியாவில் காவல்துறையும், பாதுகாப்புப் படையும் விசாரணை என்ற பெயரில் சந்தேகப்படும் நபரை பலவந்தப்படுத்துவது, சித்திரவதை செய்வது, பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்குவது, எந்தவித விசாரணையும் இன்றி கைது செய்து சிறையில் அடைப்பது போன்ற செயல்களில் ஈடுபட அதிகாரங்களைப் பெற்றுள்ளன.  இது போன்ற நடவடிக்கைகளுக்கு அதிகாரங்களை அளிப்பதற்காக இந்தியாவில் பல்வேறு சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இந்தச் சட்டங்கள் அனைத்தும் சாமானியர்களின் மனித உரிமைகளை அத்துமீறுவதற்கும், சித்திரவதை செய்வதற்கும் இவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கிறது.

 • தீவிரவாத மற்றும் சமூக விரோத செயல்கள் தடுப்புச் சட்டம் (TADA)
 • தீவிரவாத தடுப்புச் சட்டம் (POTA)
 • கலவரப் பகுதிகளுக்கான பாதுகாப்புச் சட்டம் (DAA)
 • ஆயுதப்படையினருக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் சட்டம் (AFSPA)
 • அஸ்சாம் தடுப்புக் காவல் சட்டம் (APD)
 • தேசியப் பாதுகாப்புச் சட்டம் (NSA)
 • ஜம்மு காஷ்மீரில் ஆயுதப்படையினருக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் சட்டம் 1990

போன்ற சட்டங்களைக் கருவிகளாகப் பயன்படுத்தி, அப்பாவி மக்கள் மீது பல்வேறு வகையிலான வன்முறைகளும், சித்திரவதைகளும் நிகழ்த்தப்பட்டு வருவது தொடர் கதையாகவே உள்ளது. இது போன்ற அரசின் வன்முறைகளை கண்காணித்து அறிக்கைகள் மூலம் அவ்வப்போது வெளியிடுவதில் சமூக ஆர்வலர்கள், மனித உரிமை தொடர்பான நிறுவனங்கள் போன்றோர் பெரும்பங்கு ஆற்றி வருகின்றன. இதற்காக இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும், மனித உரிமை ஆர்வலர்களும் மற்றும் அரசியல் கட்சிகளும் ஆதரவுக்குரல் கொடுத்து வருகின்றன.

 • இந்தியாவின் காவல் நிலையங்களில் அப்பாவி மக்கள் மீது விசாரணை என்ற பெயரில் பல்வேறு விதமான சித்திரவதைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.8 மில்லியன் வழக்குகளில் சாதாரண அப்பாவி மக்கள் மீது காவல்துறையினர் சித்திரவதை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
 • சட்டிஸ்கரில் தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி பெறப்பட்ட தகவலின்படி கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரையிலான காலங்களில்  நீதிமன்றங்களில் விசாரணை செய்யப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்ட வழக்குகளில் 95.7% பேர் நிரபராதிகள் என்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் பொய் வழக்குகள் புனையப்பட்டு பழிவாங்கப்படுவதை அறிய முடிகிறது.
 • சட்டிஸ்கர் மாநில பழங்குடியினர் அமைச்சகத்தின் 2014ஆம் ஆண்டின் அறிக்கையின்படி சிறைகளில் பல்லாயிரம் பழங்குடியின மக்கள் ஜாமீனில் வெளிவரமுடியாமல் விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது எந்த வித விசாரணையும் நடத்தப்படாமல் தொடர்ந்து பல ஆண்டுகளாக சிறையிலேயே வைக்கப்பட்டிருந்தனர். அறியாமையில் உள்ள பழங்குடி மக்களை அரசுப் படைகள் பொய்வழக்குகள் போட்டு பழிவாங்குவது உள்நோக்கம் கொண்டதாகும்.
 • தேசிய ஆவணக் காப்பகத்தின் 2014 ஆம் ஆண்டின் அறிக்கையின்படி சட்டிஸ்கரில் காவல் துறையால் நடத்தப்பட்ட மனித உரிமை மீறல் நடவைக்கைகள் குறித்து 3,105 புகார்கள் பெறப்பட்டது. இதில் 924 புகார்கள் குறித்து நீதி விசாரணை நடத்தப்பட்டது.
 • தேசிய ஆவணக் காப்பகத்தின் 2015 ஆம் ஆண்டின் அறிக்கையின்படி 97 பேர் காவல் துறையின் பாதுகாப்பில் இருந்த போது பல்வேறு சித்திரவதைகளால் இறந்துள்ளனர்.
 • கடந்த 2015 ஆம் ஆண்டில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 19 பேர் காவல்துறையின் பாதுகாப்பில்  இருந்த போது சித்திரவதை செய்யப்பட்டு  இறந்துள்ளனர்.
 • கடந்த 2015 – 2016 ஆம் ஆண்டுகளில் சட்டிஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளை ஒழிக்கிறோம் என்ற பெயரில் அப்பாவி பழங்குடியின மக்கள் மீது பயங்கரவாத ஒழிப்பு காவல் துறையினர் பல்வேறு சித்திரவதைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக பெண்கள் மீதான பாலியல் பலாத்காரங்கள், பாலியல் தொந்தரவுகள் மற்றும் துன்புறுத்தல்கள், போலி மோதல் கொலைகள் (என்கவுண்டர்கள்) போன்ற பல்வேறு மனித உரிமை மீறல்களை நடத்தியுள்ளனர் என்று பல்வேறு புகார்கள் பெறப்பட்டதாக மனித உரிமைக் காப்பாளர்கள் கூட்டமைப்பினர் தங்கள் ஆண்டறிக்கைகளில் தெரிவித்துள்ளனர்.
 • கடந்த 2016 ஆம் ஆண்டில் , சட்டிஸ்கர் மாநிலத்தில் உள்ள சுக்மா மாவட்டத்தில் உள்ள பழங்குடியினப் பெண்கள் மீது பாதுகாப்புப் படையினர் பல்வேறு பாலியல் பலாத்காரம் மற்றும் வன்முறைகளையும், துன்புறுத்தல்களையும் நடத்தியுள்ளனர். குறிப்பாக “மடிக்கம் ஹிட்மீ” என்ற சிறுமியை மாவோயிஸ்ட் ஆதரவாளர் என்று பொய்க் குற்றச்சாட்டைக் கூறி விசாரணைக்கு அழைத்துச் சென்றவர்கள் சிறுமியின் பிணத்தைத் தான் கொடுத்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்த உண்மையறியும் குழு “இந்த சிறுமி கற்பழிக்கப்பட்டு அதன் பிறகு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக” தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 • கடந்த 2015 ஆம் ஆண்டு ஆந்திர வனத்துறையினர், தமிழகத்தில் இருந்து ஆந்திராவிற்கு கூலி வேலைக்காக பேருந்தில் பயணம் செய்த 20 கூலித் தொழிலாளர்களை செம்மரம் வெட்டுபவர்கள் என்ற குற்றச்சாட்டைக் கூறி கைது செய்வதாக அழைத்துச் சென்றனர். காவல் நிலையத்தில் வைத்து, இரவு முழுவதும் விடிய விடிய சித்திரவதை செய்து அதிகாலையில் காட்டிற்குள் கொண்டு போய் “போலி மோதல் (என்கவுண்டர்) சாவு” என்ற பெயரில் சென்று சுட்டுக் கொன்றனர்.
 • கடந்த 2016 ஏப்ரல் மாதம் மணிப்பூர் மாநில முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவர் பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில் “கடந்த 2002 முதல் 2009 வரையிலான ஆண்டுகளில் தாம் மட்டுமே 100 க்கு மேற்பட்ட போலி மோதல் சாவுகளை” (என்கவுண்டர்கள்) நடத்தியிருப்பதாகப் பெருமையுடன் கூறியுள்ளார்.
 • மணிப்பூரில் ஆயுதப் படையினரால் நடத்தப்பட்ட1500க்கு  மேற்பட்ட (என்கவுண்டர்) மோதல் சாவுகள் குறித்த தீர்ப்புகளில் “தவறு செய்த அதிகாரிகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் கீழமை நீதிமன்றங்கள் ஈடுபடக் கூடாது” என்று உச்ச நீதிமன்றம் கிழமை நீதிமன்றங்களைக் கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளது.
 • கடந்த 2016 ஏப்ரல் மாதம் (என்கவுண்டர்) போலி மோதல் சாவுகள் குறித்து விசாரித்த மத்திய புலனாய்வுத்துறை கொலையில் ஈடுபட்ட 47 உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தண்டனையை உறுதி செய்துள்ளது. இதில் 10 பேர் கடந்த 1991 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபிட் போலி மோதல் சாவில் (என்கவுண்டர்) தொடர்புடைய உயர் அதிகாரிகளாவார்கள். மேலும் சட்டிஸ்கரில் கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற மோதல் சாவுகள் அனைத்திற்குமே பாதுகாப்புப் படையினரின் தவறான அணுகுமுறை தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவையெல்லாம் பல்வேறு மனித உரிமை அமைப்புக்களின் அறிக்கைகளில் இருந்து தொகுக்கப்பட்ட தேசிய அளவிலான மிக முக்கியமான காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படைகளின் சித்திரவதைகள் குறித்த செய்திகள் மட்டும் தான். இவை தவிர சித்திரவதையால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்து, வாழ்நாள் முழுமையும் இன்னல் படுவோர் பலர். மேலும் திருட்டு, கொள்ளை, கொலை மற்றும் அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளாகும் அப்பாவிகளின் துயரங்கள் கணக்கிலடங்காது.

ஜனநாயக இந்தியாவில் நடக்கும் “சித்திரவதை” குறித்து சர்வதேச நாடுகளின் கவலை

உலகின் ஜனநாயக நாடுகளில் இந்தியா மிக முக்கியமான நாடாகும். இது போன்ற ஜனநாயக நாட்டில் சித்திரவதை என்பது இயற்கையாகவே களையப்பட வேண்டிய ஒன்றாகும். ஆனால் இங்கு நிலைமை தலைகீழாகவே உள்ளது. அதாவது ஐநாவின் மனித உரிமைகளுக்கான பல்வேறு கூட்டங்களில் இந்தியாவிடம் பல்வேறு உலக நாடுகள் சித்திரவதையை ஒழிப்பதற்காக தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதை நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.

 • முதலாவதாக ஐநாவின் மனித உரிமைக் கவுன்சிலில் 1993இல் நடந்த கூட்டத்தில் இந்தியா சித்திரவதை குறித்த ஒப்பந்தத்தில் கையொப்பம் இட வேண்டும் என்று பல்வேறு நாடுகள் வலியுறுத்தின. இதனால் கடந்த 1997இல் இந்தியா  சித்திரவதைக்கெதிரான ஐநாவின் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது
 • கடந்த 2008 ஆம் ஆண்டு சித்திரவதை குறித்து நடந்த சர்வதேச அளவிலான மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் “உடன்படிக்கையில் கையொப்பமிட பிறகு இந்தியா கடந்த இருபது ஆண்டுகளாக சித்திரவதையைத் தடுப்பதற்கான சட்டம் ஏதும் இயற்றவில்லை. உடனே அதற்கான சட்டம் இயற்ற வேண்டும்” என்று பல்வேறு நாடுகளால் பரிந்துரைகள் வைக்கப்பட்டன.
 • இதனால் கடந்த 2010 ஆம் ஆண்டு “ஏழு சிறு பிரிவுகள் கொண்ட சித்திரவதை குறித்த ஒரு சிறிய மசோதா” பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் ஒரு சடங்காகவே தாக்கல் செய்தது.  ஆனால் அப்போதிருந்த காங்கிரஸ் அரசும் அதற்குப் பின் வந்த பா.ஜ.க அரசும் மேற்குறித்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்து நிரந்தர சட்டமாக்குவதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கவேயில்லை.
 • கடந்த 2012 ஆம் ஆண்டு நடந்த சர்வதேச அளவிலான கூட்டத்தில் “இந்தியா சித்திரவதையைத் தடுப்பது குறித்து உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று 20 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.
 • இந்த ஆண்டு, கடந்த மே 04 - 2017, அன்று “உலக நாடுகளின் மனித உரிமைகள் நிலை” குறித்து ஜெனீவாவில் நடைபெற்ற ஐநாவின் மீளாய்வுக் கூட்டத்தில் இந்தியாவிடம் 41 நாடுகள் சித்திரவதையை ஒழிப்பதற்காக என்னென்ன  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்ற கேள்விகளை எழுப்பியுள்ளன. இதற்குப் பதிலளித்த இந்தியா தற்போது இதற்கான செயல்பாடுகள் அனைத்தும் சட்ட ஆணையத்தின் பரிசீலனையில் உள்ளது என்று மழுப்பலான பதில் அளித்துள்ளது.
 • இதே மீளாய்வுக் கூட்டத்தில் இந்தியாவிடம் மேலும் 250 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. இவற்றில் ஒன்றைக் கூட இந்தியா உடனடியாக ஏற்றுக் கொள்ளவில்லை.
 • இந்தச் சூழ்நிலையில் தான் வருகிற செப்டம்பர் மாதம் – 2017இல் நடக்க இருக்கும் ஐநாவின் மனித உரிமைகளுக்கான 36வது கூட்டத்தொடரில் இந்தியா மேற்கண்ட அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இதே காலகட்டத்தில் ஒரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால், காங்கிரஸ் அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்த திரு.அஸ்வின்குமார் என்பவர் தாம் சட்ட அமைச்சராக இருந்த காலத்தில், சித்திரவதையைத் தடுப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே சமயம் தாம் செய்ய மறந்ததை தற்போது எதிர்கட்சி வரிசையில் உள்ளதால் உச்ச[RC1]  நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். இதில் இந்தியா உடனே சித்திரவதைக்கு எதிரான சட்டத்தை இயற்ற நடவடிக்கைகை மேற்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமர் மோடி தமது பதவி காலத்தின் பெரும் பகுதியை வெளிநாட்டுப் பயணங்களிலேயே கழித்து வருவதை நாம் அறிவோம். இந்தப் பயணங்களின் போது பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இந்தியாவில் சித்திரவதையைத் தடுப்பது குறித்த தங்கள் கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர். எனவே  இதற்கு முன் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் பிரதமர் விட்டுச் சென்ற பணியை முடிக்க வேண்டிய கடமை உள்ளது. அதே சமயம் சித்திரவதையை ஒழிக்கும் பணியில் தற்போதைய ஆட்சியாளர்களும் காலம் தாழ்த்தி வருவதை மனித உரிமை ஆர்வலர்களும், சர்வதேச சமூகமும், பத்திரிகைகளும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருப்பதை உணர வேண்டும்.

நமது கடமை

சித்திரவதையை முழுமையாக ஒழிப்பதற்காக இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய மற்றும் மாநில அளவிலான அனைத்து அரசியல் கட்சிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள், அரசு சாரா அமைப்புகளும் மற்றும் அனைத்து வெகுஜன அமைப்புகளும் குரல் கொடுக்க வேண்டும். மேலும் அனைத்து குடிமைச் சமூக அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும் மற்றும் சமூக ஆர்வலர்களும் அதற்கான முயற்சிகள் எடுக்க வேண்டும்.

எனவே தான் “ஐநாவின் சித்திரவதைக்கெதிரான நாளில்” பல்வேறு அரசியல் கட்சிகளும், சிவில் சமூக அமைப்புக்களும் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களும் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன் வைத்து அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் செயல்பட்டு வருகின்றார்கள்.

 • சித்திரவதைக்கெதிரான சர்வதேச உடன்படிக்கையின் சரத்துகளை இந்தியா முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
 • சித்திரவதைக்கெதிரான ஐநாவின் சிறப்புப் பிரதிநிதி இந்தியாவுக்கு வருகை புரிய மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.
 • அரசியல் கட்சிகள், மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் ஆலோசனைகளை ஏற்று சித்திரவதையை ஒழிப்பதற்கான மசோதாவில் திருத்தம் செய்து உடனே சட்டமாக்க வேண்டும்.
 • ஆயுதப்படை மற்றும் காவல் துறையினர் சித்திரவதையில் ஈடுபட சாதகமான சட்டங்களை உடனே திருத்தம் செய்தல் வேண்டும்.
 • சாதாரண மக்கள் சித்திரவதைகளுக்கு உள்ளாகமால் பாதுக்கக்கப்படுவதை அரசு உறுதிபடுத்த வேண்டும்.

மத்திய அரசு இதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதன் மூலம் தான் சித்திரவதை இல்லாத இந்தியாவை உருவாக்க முடியும்.

மேலும் இந்த சர்வதேச தினத்தில் சித்திரவதையை ஒழிப்பதில் ஒவ்வொரு தனி மனிதரும் உறுதியேற்க வேண்டும். குறிப்பாக சித்திரவதையை நமது வீடுகளில் மற்றும் சமூகத்தில் இருந்தே ஒழிக்க சபதமேற்க வேண்டும்.

(நன்றி – ஆதாரம் - தகவல்கள் மற்றும் அறிக்கைகள், மக்கள் கண்காணிப்பக நூலகம், மதுரை)

- ரா.சொக்கு, மாநில ஒருங்கிணைப்பாளர், மனித உரிமைக் கல்வி நிறுவனம், மதுரை

Pin It

14.10.2016 அன்று கோயமுத்தூர் தொண்டாமுத்தூரில் கனரா வங்கி ஊழியர்கள் வங்கியில் தங்களுக்குள் முதல்வரின் உடல்நிலை குறித்து பேசி வந்ததாகவும், அதனை வாடிக்கையாளரான அ.தி.மு.க. உறுப்பினர் கேட்டு போலிசில் புகார் கொடுத்ததாகவும், அதன் அடிப்படையில் வதந்தி பரப்புதல், மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தாக்கல் செய்து, காவல்துறை சிறைபடுத்தியுள்ளதை அறிய முடிகின்றது. காவல்துறையின் இந்த நடவடிக்கை அடிப்படை சனநாயக உரிமைகளை நசுக்கும் செயலாக உள்ளது.

jayalalitha after electionஇரண்டு நண்பர்கள் தமிழக முதல்வர் குறித்து உரையாடுவதே குற்றச்செயலாக ஆகிவிட்டது. தமிழக முதல்வர் ஒரு மாநிலத்தின் முதல் குடிமகனானவர், தலையானவர். அவர் குறிப்பிட்ட ஆளும் கட்சிக்கு மட்டும் சொந்தமானவரல்ல. எல்லோருக்கும் பொதுவானவர். அவர் நோய் வாய்ப்பட்டுள்ளபோது, அவரின் உடல் நிலை குறித்த ஆதங்கங்களும், அக்கறையும், கரிசனமும் மக்கள் எல்லோருக்கும் இருக்க வேண்டும்.

அரசு தரப்பிலிருந்தும், மருத்துவமனையிலிருந்தும் வெளிப்படையான செய்திகள் வராத போது, மக்கள் முதல்வரின் உடல் நலம் பற்றி , தங்களின் சக நண்பர்களிடம், உறவுகளிடம் பேசிக்கொள்ளும் பேச்சுக்களை குற்றச் செயல் போல பார்ப்பது முற்றிலும் சனநாயகத் தன்மையற்றது. இது நமது அரசியலைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. மேலும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 505 ல் கூட நல்ல எண்ணத்தின் அடிப்படையில் பேசப்படும் கருத்தை அவதூறாகக் கருதக்கூடாது என விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தக் கைது தமிழகத்தில் முதல்வரின் உடல் நலம் குறித்து கருத்து அளவில் கூட சாமானியன் யோசிப்பது ஆபத்தானது என்ற அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இது, கடந்த 2012ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தில் பால் தாக்கரே இறந்தபோது நடைபெற்ற முழு அடைப்பை பேஸ்புக்கில் விமர்சனம் செய்த சகின் தாதா என்ற பெண்ணும், அந்தப் பதிவை like செய்த ரேனு சீனிவாசன் என்ற பெண்ணும் கைது செய்யப்பட்டதற்கு இணையானது. ( உச்சநீதிமன்றம் இந்த வழக்கில்தான் 66 (a) of the Information Technology Act 2000 சட்டப்பிரிவை சனநாயக விரோதமானது என நீக்கியது). சனநாயக சமூகம் இந்த அடக்குமுறையை தவறு என சுட்டிக்காட்ட தயங்கக் கூடாது.

உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு 'தேர்தல் ஆணையம் வெறுப்புப் பேச்சை தடை செய்ய வேண்டும்' என என்.எல்.சர்மா என்ற வழக்குரைஞர் தாக்கல் செய்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி லோத்த அந்த பொது நல மனுவை தள்ளுபடி செய்து விட்டு , நமது வளர்ச்சியடைந்த சனநாயக சமூகம். 128 கோடி மக்கள் தொகை கொண்ட சமூகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்தும் பார்வையும் உண்டு. அது அவர்கள் தனி மனித சுதந்தரம். ஒருவரின் கருத்துக்காக அடிப்படை உரிமையை பறிக்க எவருக்கும் அதிகாரமில்லை என்றார். ("We cannot curtail fundamental rights of people. It is a precious rights guaranteed by Constitution," a bench headed by Justice RM Lodha said, adding "we are a mature democracy and it is for the public to decide. We are 1280 million people and there would be 1280 million views. One is free not accept the view of others". Also the court said that it is a matter of perception, and a statement objectionable to a person might not be normal to other person)

உச்சநீதிமன்றத்தின் கருத்தும், அடிப்படை உரிமைக் கோட்பாடுகளும் தமிழக காவல்துறைக்கு எட்டவில்லை என்பது நமது துயரம். காவல்துறை முதல்வரின் உடல்நிலை குறித்து கருத்து சொன்னதால் கைது செய்யப்பட்டவர்கள் மீதான வழக்குகளை இரத்து செய்ய வேண்டும். தனி மனித சுதந்திரத்தை அச்சுறுத்தல்கள், கைது போன்ற வடிவங்களால் பறிக்கக் கூடாது.

- ச.பாலமுருகன், பி.யு.சி.எல்

Pin It

1.            மக்கள் ஜனநாயகக் கட்சி பி.ஜே.பி கூட்டணி அமைச்சரவை ஜம்மு காஷ்மீரில் பதவியேற்ற ஒரே வாரத்திற்குள் நான்கு நாட்களுக்கு முன்பு குப்வாரா மாவட்டத்தில் ஹாண்டுவாரா நகரில் ராணுவம் நடத்தியிருக்கும் துப்பாக்கி சூட்டில் ஒரு பெண் உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

Kashmir violence 411

2.            காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவ வீரர்கள் சிலபேர் ஒரு இளம் பெண்ணை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய சம்பவம் நடைபெற்றதாக கேள்விப்பட்ட மக்கள் ஹாண்டுவாரா நகர வீதிகளில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும், கலவரக்காரர்களைக் கட்டுப்படுத்த தூப்பாக்கி சூடு நடத்தியதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், ராணுவம் அத்துமீறி நடந்துகொண்டதே துப்பாக்கி சூட்டுக்கு காரணம் என்றும், அவர்கள் மீது மத்திய அரசின் பாதுகாப்புத்துறை சட்டப்படி நடவடிக்கையெடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மெ்பூபா பாதுகாப்பு அமைச்சர், உள்துறை அமைச்சர் மற்றும் பிரதமரை டெல்லியில் சந்தித்து முறையிட்டிருக்கிறார்.

3.            பி.ஜே.பி. ஆதரவு பெற்ற சட்ட அமைச்சரும், துப்பாக்கி சூடு நடந்த ஹாண்டுவாரா தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஷையத் லோன் “அவமானத்தால் நான் தலைகுனிந்து நிற்கிறேன்” என்று மட்டும் சொல்லி தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார். நான்காவது நாளாக ஊரடங்கு உத்தரவு தலைநகர் _நகரிலும், குப்வாரா மாவட்டத்திலும் அமுலில் உள்ளது. கடையடைப்பு இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.

4.            2011 ல் காஷ்மீர் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணியில் பதவி வகித்த உமர்பரூக் அப்துல்லா ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை (ARMED FORCES SPECIAL POWERS ACT) மத்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென்று குரல் கொடுத்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 21 மாவட்டங்கள் இருக்கின்றன. ஓரளவுக்கு அமைதி திரும்பியிருக்கும் ஜம்மு, ஶ்ரீநகர், பட்காம் மற்றும் சாம்பா ஆகிய நான்கு மாவட்டங்களிலாவது ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெறவேண்டுமென அன்றைய பிரதமர், உள்துறை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் சோனிய காந்தியிடம் உமர் பரூக் அப்துல்லா வலியுறுத்தினார்.

5.            கம்யூனிஸ்ட் கட்சிகள், காஷ்மீர் மாநில அன்றைய பிரதான எதிர்க்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சி  உமர்பரூக் அப்துல்லாவின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தன. கூடவே கூடாது என்று பி.ஜே.பி. மட்டும் எகிறிக் குதித்தது.

6.            அன்றைய ராணுவ தலைமை தளபதி வி.கே.சிங்கும், காஷ்மீர் மாநிலத்தில் இயங்கும் ராணுவ கூட்டுப்படை தளபதிகளும் ( ராணுவம், மத்திய ரிசர்வ் படை, எல்லையோர காவல்படை) முதல்வர் உமர் பரூக்கின் கோரிக்கைக்கு பலத்த எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். வழக்கம்போல் காங்கிரஸ் கட்சி “விளக்கெண்ணையில் வெண்டைக்காயை” தாளித்த கதையாக எந்த முடிவையும் சொல்லாமல் ஆளாளுக்கு ஒரு கருத்தைச் சொல்லி தாங்களும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பிக் கொண்டிருந்தார்கள்.

7.            அன்றைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உமர் பரூக்கின் கோரிக்கை நியாயமானது என்றார். பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி ராணுவ தளபதிகள் ஒத்துக்கொண்டால்தான் உமர் பரூக் அப்துல்லா கோரிக்கையை பரிசீலிக்க முடியும் என்றார். மன்மோகன் சிங், ஆயுதப்படை சிறப்புச் சட்டத்தை நீக்குவது சம்பந்தமாக இந்த பிரச்சனையில் சம்பந்தப்பட்ட அனைவரிடம் மேலும் கலந்து பேசி ஒருமுடிவிற்கு வர கால அவகாசம் தேவையென்ற பொன்னான கருத்தைச் சொன்னார். அதாவது இவர் பிரதமராக இருக்கும்வரை இதில் எந்த உருப்படியான முடிவையும் எடுக்கப் போவதில்லை என்று அர்த்தம்.

8.          ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை வாபஸ்பெற வேண்டும் என்ற கோரிக்கை உமர்பரூக்கின் கோரிக்கை மட்டுமல்ல. இந்த சட்டத்தை அடியோடு நீக்க வேண்டுமென வலியுறுத்தி இந்த சட்டம் அமுலிலிருக்கும் அசாம், மணிப்பூர் அருணாச்சல் பிரதேசம், மிசோரம், திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய வடகிழக்கு மாநில மக்களும் கடந்த பல வருடங்களாக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

9.          மணீப்பூர் வீராங்கனை இரோம் சார்மிளா இந்த சட்டத்தை நீக்கக்கோரி 2000ம் ஆண்டு நவம்பர் 2 ம் தேதியிலிருந்து 15 ஆண்டுகளாக உண்ணவிரதப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார்.

10.          ஐ.நா.மன்றத்தின் மனித உரிமைப் பிரிவு இந்த சட்டத்தை கண்டித்திருக்கிறது. சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பு (AMNASTY INTERNATIONAL) மற்றும் உலக செஞ்சிலுவைச் சங்கம் இந்தியா இந்த சட்டத்தை கைவிட வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

11.          1958 ம் வருடத்திய ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டத்திற்கெதிராக ஜனநாயக அமைப்புகளும், மனித உரிமை பாதுகாப்பு போராளிகளும் கிளர்ந்தெழந்து இயக்கம் நடத்துவது ஏன் ?

kashmir agitation

12.          இந்த சட்டம் அமுலில் இருக்கும் காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் ராணுவத்திற்கும். துணை ராணுவப் அடியிற்கண்ட சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன-

(1)          சட்டத்தை மீறும் நபரை அல்லது சட்டத்தை மீறலாம் என்று சந்தேகப்படும் நபரை ராணுவம் சுட்டுக் கொல்லலாம்.

(2)          யாரை வேண்டுமானாலும் நீதிமன்ற வாரண்ட் இல்லாமல் ராணுவம் கைது செய்யலாம், விசாரிக்கலாம்.

(3)          நீதிமன்ற உத்தரவில்லாமல் எந்த நேரத்திலும், யாருடையை வீட்டுக்குள்ளும் புகுந்து சோதனை செய்யலாம்.

(4)          கலவரக்காரர்கள் அல்லது ஊடுருவல்காரர்கள் தங்கியிருப்பதாக சந்தேகப்படும் வீடுகளை, சொத்துகளை இடித்து தரைமட்டமாக்கி அழிக்கலாம்.

(5)          ராணுவத்தினர் மேற்கொள்ளும் மேற்கண்ட நடவடிக்கைகளுக்காக இந்தியாவில் எந்த நீதிமன்றத்திலும் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் வழக்கு தாக்கல் செய்ய முடியாது.

15.          “ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் - அடக்குமுறையின் வடிவம், அதிகார போதையில் ஆட்டம் போடுவோருக்கு பயன்படும் கருவி, ஜனநாயகத்தை நேசிக்கும் மக்களால் நஞ்சென வெறுக்கப்படுவது. ஆகையால் இந்த சட்டத்தை முற்றிலுமாக நீக்குவது இந்த நாட்டுக்கு நல்லது” என்று மத்திய அரசு 2004 ல் உச்சநீதிமன்ற நீதிபதி ஜீவன்ரெட்டி தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணைக் கமிசன்அரசுக்கு தாக்கல் செய்த அறிக்கையில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. மத்திய அரசு அந்த அறிக்கையின் மீது எந்;த நடவடிக்கையும் எடுக்காமல் காங்கிரஸ் ஆட்சி அதை பத்திரமாக பரண்மேல் தூக்கியெறிந்துவிட்டது; இன்றைய பி.ஜே.பி.யின் நிலையும் அதுதான்.

16.          இந்த சட்டத்திற்கெதிராக காஷ்மீர் மக்கள் மற்றவர்களைக் காட்டிலும் கூடுதலாக தெருவிலிறங்கிப் போராடுவதற்கு நியாயமான காரணங்களுண்டு. அங்கு ஒவ்வொரு ஏழு காஸ்மீரிகளுக்கு ஒரு ராணுவ வீரன் வீதம் ஆயுதப்படைகள் குவிக்கப்பட்டுள்ளன.

17.          1990 ல் இந்த சட்டம் காஷ்மீரில் நடைமுறைக்கு வந்ததிலிருந்து நாளதுவரை விசாரணைக்கென்று ராணுவம் அழைத்துச் சென்ற 8000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வீடு திரும்பவில்லை. அவர்களின் கதியென்ன, உயிரோடிருக்கிறார்களாக இல்லையா என்று கூட அவர்களது பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் தெரியாது. “காணாமல் போனவர்களின் பெற்றோர்களின் சங்கம்” என்றொரு அமைப்பு காஷ்மிரைத்தவிர உலகத்தில் வேறெங்காவது நாம் கேள்விப்பட்டதுண்டா?

18.          2008 ல் பத்திரிக்கையாளர்கள், மனித உரிமைகள் பாதுகாப்பு போராளிகளின் குழு ஒன்று காஷ்மீர் நிலவரங்களை கண்டறிய நேரில் சென்றது. அந்த குழுவில் சென்ற பேராசிரியர் அ.மார்க்ஸ், புதுச்சேரி சுகுமாரன் ராணுவத்தால் தரைமட்டம் ஆக்கப்பட்ட வீடுகளையும், ராணுவத்தின் சர்வாதிகார நடவடிக்கைகளையும நேரில் கண்டு வந்தார்கள். அ.மார்க்ஸ் அங்கு கண்டவற்றின் அடிப்படையிலும், மக்களிடம் பேட்டி கண்டு தெரிந்து கொண்ட விவரங்களின் அடிப்படையிலும் எழுதி வெளியிட்டிருக்கும் “காஷ்மீர் - என்னதான் நடக்குது அங்கே ?” புத்தகம் நமக்கு அதிர்ச்சியளிக்கும் பல உண்மைகளை வெளிப்படுத்தியிருக்கிறது.

19.          மூன்று மாதங்களுக்கு முன்னால் காஷ்மீர் மாநில மனித உரிமைகள் கமிசனின் கீழ் இயங்கும் உளவுத்துறை காவலர்கள் பாரமுல்லா, பந்திப்பூர் மற்றும் குப்வாரா மாவட்டங்களில் அந்த ஊர் மக்களுக்கே தெரியாத 38 ரகசிய புதைகுழிகளைக் கண்டுபிடித்தார்கள்.. அங்கே புதைக்கப்பட்டிருந்த 2730 சடலங்கள் தோண்டியெடுக்கப்பட்டன. 517 உடல்களை மட்டும் உறவினர்கள் அடையாளாம் கண்டுபிடிக்க முடியவில்லை. 1692 உடல்களில் சித்ரவரை செய்து கொல்லப்பட்டதற்கான அடையாளங்கள் இருக்கின்றன். ( 22.8.2011 இந்து நாளேடு)

20.          நவீன அறிவியல் அதிசயமான மரபணு பரிசோதனை மூலம் அடையாளந் தெரியாத உடல்களின் பெற்றோர் யாரென்று கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளில் மாநில அரசு ஈடுபட்டிருக்கிறது. சுட்டுக் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட அனைவருமே தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று ராணுவம் தைரியமாகக் கூறி வருகிறது. அதற்கான ஆதாரத்தை தெரிவிக்க மறுக்கிறது.

21.          எல்லை தாண்டிவரும் ஊடுவருவல்காரர்களையும், தீவிரவாதிகளையும் அடக்கி ஒடுக்குகிறோம் என்ற பெயரில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, சொத்துக்கள் சூறையாடுதல் என்ற பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட ராணுவத்தினர் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள “ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம்” தொடரவேண்டும் என்றுதான் சொல்வார்கள்.

22.          தீவிரவாதிகளை என்கவுண்ட்ரில் போலீசோ, ராணுவமோ போட்டுத் தள்ளினால் முன்பு ஒரு கொலைக்கு அரசு ரூ.10 லட்சம் சன்மானம் கொடுத்து வந்தது. இப்போது பரிசுத் தொகையை 25% உயர்த்தி ஒவ்வொரு என்கவுண்ட்டர் கொலைக்கும் 12 ½ லட்சம் ரூபாய் சன்மானம் கொடுக்கப்படுகிறது.

23.          என்கவுண்ட்டர் கொலைக்கு பரிசுத்தொகை அறிவிக்கப்பட்ட 1998ம் ஆண்டிலிருந்து போலீசும், ராணுவமும் தீவிரவாதி என்று யரையும் உயிரோடு பிடிப்பதற்கு பதிலாக பரிசுத்தொகைக்கு ஆசைப்பட்டு சுட்டுக் கொன்று விடுகிறார்கள்.

24.          பரிசுத்தொகை ஆசையால், பல அப்பாவி காஷ்மீரி இளைஞர்களும் “தீவிரவாதி” என்ற முத்திரை குத்தப்பட்டு போலி என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட சம்பவமும் நடந்து வருகிறது என்று சிவில் சமூக மனித உரிமை ஆர்வலர் குர்ரம் பர்வேஸ் மத்திய, மாநில அரசுகள் மீது குற்றஞ்சாட்டியிருக்கிறார். ( தி ஹிந்து 1.2.2016 ஆங்கில நாளேடு) புல்வாமா மாவட்ட போலீஸ் அதிகாரிகள் தீவிரவாதத்தால் கவரப்பட்ட 34 இளைஞர்களை நல்வழிப்படுத்தி திருத்தியிருக்கிறார்கள். அந்த போலீஸ் அதிகாரிகளுக்கு எந்த பரிசுமில்லை. ஜனநாயக ஆட்சிமுறைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை விரைவில் விலக்கிக் கொள்வது அவசர அவசியமான நடவடிக்கையாகும்.

கே.சுப்ரமணியன், மாநில சட்ட ஆலோசகர், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம்

Pin It

பாதிக்கப்பட்ட ஒருவர் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுத்து, அதனை வழக்குப் பதிவு செய்ய வைப்பது என்பது பொதுவாக, அவ்வளவு எளிதான காரியமல்ல என்பதனை காவல் நிலையத்திற்குச் சென்ற அனுபவமுள்ள நம்மில் பலர் நிச்சயமாக உணர்ந்திருப்போம். அதிலும், யாருக்கு எதிராக புகார் கொடுக்கப்படுகிறதோ, அந்த குற்றமிழைத்தவர் சமூகத்தில் சிறிது அதிகாரம் மிகுந்தவராக இருப்பாராயின் நிலைமை மேலும் மோசமாகும்.

dalit house fireஇப்படியாக, பக்கத்து வீட்டுக்காரர், அடுத்த தெருவில் வசிப்பவர், பக்கத்து நிலத்துக்காரர் போன்றவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வைப்பதற்கே பாதிக்கப்பட்ட நபர் உயர்நீதிமன்றம் வரையிலும் செல்ல வேண்டிய அசாதாரணமான சூழல் இங்கே நிலவுகிறது. இந்த சூழ்நிலையில் தனக்கு இழைக்கப்பட்ட குற்றத்திற்காக அல்லது குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததற்காக, ஒரு அரசு ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்வதில், எவ்வளவு தடைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை எவரும் சொல்லி தெரிந்துகொள்ள வேண்டிய தேவையில்லை. அரசு ஊழியரின் மீது வழக்குப்பதிவா?  அது சாத்தியமா? என நமக்கு சாதாரணமாக எழும் கேள்வி நியாயமானதே.

சமூகத்தில் மிகவும் ஒடுக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ள பட்டியலின மற்றும் பட்டியல் பழங்குடியின மக்கள் தங்களுக்கு எதிராக சாதி ரீதியாக இழைக்கப்படும் வன்கொடுமைகளிலிருந்து தற்காத்துக் கொள்ள, கடந்த 1989ம் ஆண்டில் இயற்றப்பட்டது “பட்டியலின / பட்டியல் பழங்குடியின மக்களுக்கு எதிரான (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம்”.

                அந்த சட்டத்தில், பட்டியலின/பட்டியல் பழங்குடியின மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் சாதி ரீதியான குற்ற நிகழ்வுகளின் போது, அந்த சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட பணிகளை வேண்டுமென்றே செய்யாமல் இருக்கும் மற்றும் அந்த விதிகளுக்கு முரணாக செயல்படும், மாவட்ட ஆட்சித்தலைவர், காவல்துறை கண்காணிப்பாளர், வருவாய் துறை அதிகாரிகள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் மீது தனியே வழக்குப் பதிவு செய்திட பிரிவு 4ன் கீழ் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த சட்டத்தில் “வேண்டுமென்றே கடமையை செய்யாமல் இருத்தல்” என்பதற்கு யாதொரு விளக்கமும் கொடுக்கப்படவில்லை.

இந்நிலையில், 2016ம் ஆண்டு, இந்த சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தத்தில், வன்கொடுமை தொடர்பான புகாரை வாங்க மறுத்தல், அதிலுள்ள குற்றங்களுகேற்ப தகுந்த சட்டப்பிரிவுகளைப் பதிவு செய்யாமல் இருத்தல் என்பது போன்ற சூழல்களில், தொடர்புடைய அதிகாரிகள் மீது பிரிவு  4ன் கீழ் வழக்குப் பதிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

வன்கொடுமை தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டு ஏறத்தாழ 27 ஆண்டுகள் கடந்துவிட்ட பிறகு, இதுநாள் வரையிலும், வேண்டுமென்றே தனது கடமையிலிருந்து தவறிய எத்தனை அரசு ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று பார்த்தோமானால், பட்டியலின மக்களுக்கெதிராக இழைக்கப்படும் குற்றங்களுக்கும், அதிகாரிகள் மீது பதிவு செய்யப்படும் வழக்கு எண்ணிக்கைக்கும் பெருத்த முரண்பாடு நிலவுவதை காணலாம்.

வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பாக ஆந்திரபிரதேச மாநிலத்தில் அமைக்கப்பட்ட நீதியரசர் புன்னையா ஆணையம், கடந்த 2001ம் ஆண்டில் தாக்கல் செய்த,  தனது 2000 பக்க அறிக்கையில், “இந்த சட்டத்தின் பிரிவு 4 ன் கீழ் சொல்லப்பட்டுள்ள, அரசு அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்தல் என்பது ஏட்டுச் சுரைக்காய் போன்றது. அது வெறும் அலங்கார சொற்கள். அப்பிரிவானது  அமலுக்கே வரவில்லை” என்று கூறியுள்ளார்.

அந்த அறிக்கையை மெய்ப்பிக்கும் விதமாய், தமிழகத்தில் இது வரையிலும் பத்து வழக்குகள் கூட வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் பிரிவு 4 ன் கீழ் அரசு ஊழியர்களுக்கு எதிராக பதிவு செய்யப்படவில்லை. ஆனால் அதே வேளையில், பட்டியலின மக்களுக்கு எதிராக, வன்கொடுமைகள் தொடர்ந்து இன்றளவும் நிகழ்த்தப்பட்ட வண்ணம் உள்ளது. மீண்டும் மீண்டும் அந்த குற்றங்களில் ஈடுபடுபவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

அரசு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்வது தொடர்பாக, பிரிவு 4 உள்ளிட்ட  வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளை இரத்து செய்யக் கோரியும், அந்த சட்டத்தையே அரசியலமைப்பு சாசனத்திற்கு புறம்பானதென அறிவித்திடக் கோரியும், கடந்த 1994ம் ஆண்டில் இராம கிருஷ்ணா பலோதியா எதிர் இந்திய அரசு எனும் வழக்கு மத்திய பிரதேசம் மாநிலத்திலும் மற்றும் அதுபோல பல்வேறு மாநில உயர்நீதிமன்றங்களிலும் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்குகளில் இறுதியாக உச்ச நீதிமன்றம், அரசு ஊழியர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்திட  வழிவகுத்திடும் பிரிவு 4 ஐ உறுதி செய்து தீர்ப்பிடப்பட்டது.

பாபுலால் எதிர் இராஜஸ்தான் மாநில அரசு எனும் வழக்கில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 4 ன் கீழ் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி, நீதித்துறை நடுவர் முன்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய நீதித்துறை நடுவர் உத்தரவு பிறப்பித்திட வேண்டும் என்று இராஜஸ்தான் உயர்நீதிமன்றம் கடந்த 2009ல் உத்தரவிட்டது.

தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்தில், கடந்த 2007ம் ஆண்டில் ஓய்வு பெற்ற காவல்துறை ஆய்வாளராக குப்புராவ் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், அப்போதைய வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் காவல் துறை துணை கண்காணிப்பாளர் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 4 ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பட்டியலின் அருந்ததியர் சாதியை சேர்ந்த மாரியப்பன், தனது ஊரான ஈரோடு மாவட்டம் காந்திபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் காமாட்சி அம்மன் திருமண மண்டபத்தை கடந்த 2007ம் ஆண்டில் தனது மகனுக்கு காது குத்து விழா நடந்துவதற்காக வாடகைக்கு எடுத்தார். அந்த நிகழ்வுக்கு முன்பாக அப்பகுதியிலுள்ள ஆதிக்க சாதி இந்துக்கள் சாதி ரீதியாக அவரை திட்டி, அந்த மண்டபத்தில் விழா நடத்தக் கூடாது என அவரை மிரட்டியது தொடர்பாக அவர் புகார் செய்தார். அந்த புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காத கோபிசெட்டிபாளையம், நம்பியூர் காவல் நிலைய ஆய்வாளர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் பிரிவு 4ன் கீழ் வழக்கு பதிவு செய்திட சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2014ம் ஆண்டில் உத்தரவு பிறப்பித்தது.

குஜராத் மாநிலத்தில், பட்டியலின பெண் ஒருவர், கூட்டாக பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை கிழித்ததுடன்  அதில் சேர்க்கப்பட்டிருந்த உள்ளூர் பாரதீய ஜனதா தலைவரது பெயரை நீக்கி புதிதாக முதல் அறிக்கை தயாரித்த பஞ்ச்மகால் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் காத்வி, காவலர் அர்ஜூன் கோயபாய் ஆகியோர் மீது கடந்த 2015 ஜனவரியில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 4ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதோடு, அவர்கள் பணி இடை நீக்கமும் செய்யப்பட்டார்கள்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வசித்து வருபவர் ருக்மணி. 73 வயதான அவர் பட்டியல் இனத்தைச் சார்ந்தவர். சொந்தமாக நிலமும் இன்னபிற சொத்துக்களும் வைத்துள்ளார். அவரது 4 மகன்களில் மூன்று பேரை வெளிநாட்டில். விஞ்ஞானியாகவும், பொறியாளராகவும் ஆக்கியுள்ளார்.  அவரது கிராமத்தில் அதிக அளவில் வசித்து வரும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சிலருக்கு இது பிடிக்காமல் போகவே, உள்ளூரில் விவசாயம் பார்த்து வந்த அவரது நான்காவது மகன் ஆறுமுகராஜாவை, 7 பேர் அடங்கிய கும்பல் கடந்த 2013ம் ஆண்டு தாக்கியது. அது தொடர்பாக அவர் புகார் கொடுத்து வழக்குப் பதிவும் செய்யப்பட்டது. ஆனால் உள்ளூரிலேயே தொடர்ந்து இருந்த போதிலும்,  குற்றம் சுமத்தப்பட்ட 7 பேரில் இருவர் மட்டுமே கைது செய்யப்படுகின்றனர். பின்னர் அவர்கள் ருக்மணியின் வீட்டை தாக்குகின்றனர். இதன் காரணமாக, மதுரை உயர்நீதிமன்றத்தில் தனக்கும், தனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்கிடக் கோரி வழக்கு தொடர்ந்தார். உயர்நீதிமன்றமும் அவருக்கு பாதுகாப்பு வழங்கிட உத்தரவிட்டது.  ஆனால் சரியாக ஒன்றரை ஆண்டுகள் கழித்து அதே 7 பேரும் சேர்ந்து, ருக்மணியின் மகன் ஆறுமுகராஜாவை ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தின் அருகே வைத்து வெட்டி கொலை செய்துவிடுகிறார்கள்.

குற்றம் சுமத்தப்பட்ட 7 பேர் மீதும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கத்தவறிய அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர், காவல்துறை கண்காணிப்பாளர், வருவாய் துறை அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 4 ன் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் கடந்த 1999ம் ஆண்டில் ஜல்லிகட்டு மாட்டை எங்கு கட்டிவைப்பது தொடர்பான பிரச்சனையில், பட்டியலினத்தை சார்ந்த பன்னீர் செல்வம், மகாமணி ஆகியோரை, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் சாதி ரீதியாக இழிவுபடுத்தி தாக்கியது தொடர்பான,  ஆறுமுகம் சேர்வை எதிர் தமிழக அரசு எனும் வழக்கில், 2011ம் ஆண்டில் உச்சநீதிமன்றம், “வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்திட கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி, நிர்வாக மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு நாங்கள் அறிவுத்துகிறோம். இது போன்ற வன்கொடுமைகள் நிகழின், அது நிகழக் காரணமானோருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகள் தொடர்வது மட்டுமன்றி, (1)சம்பவம் நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து முன்கூட்டியே தகவல் கிடைக்கப்பெற்று, அச்சம்பவம் அதுவரையில் நடந்தேராமல் இருக்கும் பட்சத்திலும், அதனைத் தடுத்திட முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை அல்லது (2)சம்பவம் நடந்து முடிந்திருப்பின், குற்றம் புரிந்தவர்களையும், ஏனைய சம்மந்தப்பட்ட நபர்களையும் கைதுசெய்து, அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்காமல் இருப்பின், மாவட்ட ஆட்சியாளர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள், ஏனைய பொறுப்புடைய அதிகாரிகள் போன்றவர்களை மாநில அரசு உடனடியாக பணியிடை நீக்கம் செய்யவேண்டும் என்றும் அறிவுறுத்துகிறோம். ஏனெனில் எங்களது கருத்தில் அவர்களே நேரடியாகவோ, மறைமுகமாகவோ பொறுப்புடையவர்களாகக் கருதப்படுவார்கள்”  என்று தீர்ப்பிட்டுள்ளது.

இப்படியாக நாடு முழுவதும் அங்கொன்றும் இங்கொன்றுமாக, அரிதினும் அரிதான வழக்குகளிலேயே, தனது பணிகளிலிருந்து விலகிய, பட்டியலின மக்களுக்கெதிரான வன்கொடுமை நிகழ்வுகளில் வேண்டுமென்றே சட்டபூர்வ நடவடிக்கைகள் எடுக்கத் தவறிய அரசு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்ட பிறகு பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களால் பல்வேறு காரணங்களால் தள்ளுபடியும் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நான்கில் ஒரு பங்கு எண்ணிக்கையில் வாழும் பட்டியலின மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் வன்கொடுமைகளை தடுத்திட வேண்டி 27 ஆண்டுகளுக்கு முன்பாக சட்டம் இயற்றப்பட்ட போதிலும், வன்கொடுமைகளும், மீறல்களும் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆகவே, அந்த சட்டத்தின் விதிகளுக்கு முரணாக செயல்படும், அரசு அதிகாரிகள் மீது பிரிவு 4ன் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களுக்கு தண்டனை கிடைக்க வழி செய்யும் போதுதான், பட்டியலின மக்களுக்கெதிரான வன்கொடுமைகள் பெருவாரியாக குறையும்.

- இ.இ.இராபர்ட் சந்திரகுமார்             

Pin It

மக்கள் பாடகர் தோழர் கோவனை உடனே விடுதலைசெய்! 

கருத்துரிமையை முடக்கும் ( IPC -124 A) சட்டத்தை உடனே அகற்று. 

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பிரச்சாரப் பாடகரும் கவிஞருமான தோழர் கோவன் அவர்களை கடந்த 30.10.2015 வெள்ளி அதிகாலை 2.30 மணிக்கு திருச்சியில் தோழர் கோவன் வீட்டிற்குச் சென்ற சென்னை குற்றப் பிரிவு போலிசார் கைது செய்தனர். தற்போதைய நிலவரப்படி அவர் மீது 124 ஏ தேசத்துரோக நடவடிக்கை, 153 சமூகத்தில் இரு பிரிவினருக்கிடையில் மோதல் ஏற்படுத்துதல், 502/1 அவதூறு செய்தல் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். அதே நேரம் தோழர் கோவனைக் கைது செய்து எங்கே வைத்திருக்கிறார்கள் என்பதை சொல்ல போலிசு மறுக்கிறது.

kovan 1தோழர் கோவன் செய்த குற்றம் என்ன? “மூடு டாஸ்மாக்கை மூடு, ...ஊத்திக்கொடுத்த உத்தமி .. விளங்குமா இந்த அம்மா!” போன்ற வரிகள் அடங்கிய ஒரு பாடலைப் பாடியுள்ளார். அதன் வீடியோ பதிவுகள் யூ டியூபிலும் சமூக வலைத்தளங்களிலும் பரவின. எதிர்க்கட்சிகள் ஆட்டம் எல்லாம் டாஸ்மாக் விவகாரத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீதான முதல்வர் ஜெயலலிதா எதிர்வினைக்குப் பின்னர் அடங்கிவிட்டன. ஆனால் மக்கள் அதிகாரம் கோரும் ம.க.இ.க.வின் குரலும் பாடகர் தோழர் கோபனின் குரலும் அடங்கவில்லை. அது தெருத் தெருவாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.

டாஸ்மாக்கை மூடச் சொல்வதும், அம்மாவை விமர்சிப்பதும் தேசத்துரோகம் ஆகிவிட்டது. மத்தியில் மோடி தான் தேசம், மாநிலத்தில் அம்மாதான் தேசம்! இவர்களை எதிர்ப்பது தேசவிரோதம்! இதுதான் ஜனநாயக நாடு என்று கூறிக் கொள்ளும் இந்தியாவின், தமிழ்நாட்டின் ஆளும் கும்பல்களின் மாற்றுக்கருத்துக் கொண்டவர்களை அணுகும் முறை.

இந்தத் தேசத் துரோகச் சட்டம் என்பது என்ன? இதன் பின்னணி என்ன? அது எவ்வாறு அரசியல் மாற்றுக்கருத்து கொண்டோரை பழிவாங்கப் பயன்படுத்தப்படுகிறது என்பது பற்றிய ஒரு பார்வை இது. 

இந்தியத் தண்டனைச் சட்டத்தின் (ஐ.பி.சி.) நான்காவது பிரிவில் அரசுக்கு எதிரான குற்றங்களின் கீழ் பிரிவு 124 அ அரசெதிர் குற்றம் என்பதைப் பின்வருமாறு வரையறுக்கிறது:

‘பேசப்பட்ட சொற்கள் மூலமோ, குறியீடுகள் மூலமோ, காணத்தக்க வகையில் பிரதிநிதித்துவப்படுத்துவதன் மூலமோ அல்லது வேறு வகையிலோ இந்தியாவில் சட்டத்தின் மூலம் நிறுவப்பட்ட அரசாங்கத்தின் மீது வெறுப்பையோ அவமதிப்பையோ கொண்டுவருகிற அல்லது கொண்டுவர முயற்சிக்கிற அல்லது அதிருப்தியைத் தூண்டுகிற அல்லது தூண்ட முயற்சிக்கிற எவரொருவரும் வாழ்நாள் சிறைத்தண்டனையும், அத்தோடு தண்டத் தொகையும் சேர்த்தும் அல்லது மூன்றாண்டுகள் வரை நீட்டிக்கக் கூடிய சிறைத் தண்டனையும், அத்தோடு தண்டத் தொகை சேர்த்தும் அல்லது தண்டத் தொகை விதித்தும் தண்டிக்கப்படுவார்.’

பேச்சுரிமையும், கருத்து வெளியிடும் உரிமையும், அரசெதிர்ப்பும்

இந்தியாவின் குடிமக்கள் அனைவர்க்கும் பேச்சுரிமையும் கருத்து வெளியிடும் உரிமையும் இருக்கிறது என்று இந்திய அரசியல் சட்டப் பிரிவு 19 (1) அ கூறுகிறது. நிலவும் அரசாங்கக் கட்டமைப்புக்களையும் கொள்கைகளையும், நிர்வாகத் திட்டங்களையும் கண்டிப்புடன், கண்டிப்பதற்கான பாதுகாப்பும் வேறு அமைப்பு முறையைப் பின்பற்ற ஆலோசனை தெரிவிப்பதற்கும் பரிந்துரைப்பதற்குமான பாதுகாப்பும் சேர்ந்ததே பேச்சுரிமையும் கருத்து வெளியிடும் உரிமையும் ஆகும். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் அச்சு ஊடகம் மூலமாகவோ மின்னணு ஊடகம் மூலமாகவோ தன்னுடைய கருத்தை வெளியிடுவதற்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய உரிமை இருக்கிறது, என்று இந்திய அரசியல் சட்டப் பிரிவு 19 (1) அ கூறுகிறது.

இந்தியாவில் அரசெதிர்ப்புக் குற்றம் தொடர்பான சட்டத்தின் வரலாற்றுப் பின்னணி

இந்தச் சட்டம் 1863க்கும் 1870க்கும் இடையில் அதிகரித்து வந்த வகாபிய நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக முன்மொழியப்பட்டது. பின்னர் 1898ல் மாற்றியமைக்கப்பட்டது. பிரிட்டனின் சதிக் குற்றச் சட்டம் 1848, நிரந்தர வடிவங்களில் அவதூறுக்கு எதிரான பொதுச் சட்டம், அரசெதிர்ப்புச் சொற்களுக்கான ஆங்கிலேயச் சட்டம் ஆகியவை இதன் ஊற்றுக் கண்கள் ஆகும்.

இந்தியாவின் விடுதலைப் போராட்டம் பற்றி அறிந்தவர்கள் யாரும் அரசெதிர்ப்பு தொடர்பான சட்டத்தை பிரிட்டிஷார் எவ்வளவு மோசமாகப் பயன்படுத்தினார்கள் என்பதை நன்கு அறிந்துகொண்டிருப்பார்கள். பிரிட்டிஷ் அதிகாரிகள் இந்திய விடுதலைப் போராட்டத்தை இரும்புக் கரம் கொண்டு நசுக்குவதற்கு முயற்சி செய்தார்கள்; இந்திய விடுதலைப் போராட்டத்தின் செயல்வீரம் கொண்ட இலட்சியவாதிகளின் எதிர்ப்புக்குப் பதிலடியாக அவர்கள் மீது அரசெதிர்ப்புக் குற்றத்தை சுமத்தினார்கள்.                                                 

இந்தியாவில் அரசெதிர்ப்புக் குற்றச்சாட்டு தொடர்பான முக்கிய வழக்குகள் 

அரசெதிர்ப்புக் குற்ற வழக்குகளில் தேசிய செய்தித்தாள்களின் ஆசிரியர்கள் மீது சுமத்தப்பட்ட வழக்கு முதலாவதாகும், அது 189ல் விசாரணைக்கு வந்த ஜோகிந்தர் சந்திர போஸ் வழக்காகும். அதைத் தொடர்ந்து பாலகங்காதர திலகர் இக்குற்றச்சாட்டின் பேரில் வழக்கு விசாரணைக்கு உள்ளானார். அடுத்து மிக முக்கியமான வழக்கு மகாத்மா காந்தி, சங்கரலால் ஹேங்கர் ஆகியோர் 1922ல் யங் இந்தியா இதழில் அரசுக்கு எதிராக எழுதியதற்கும் வெளியிட்டமைக்கும் இக்குற்றச்சாட்டுக்கு ஆளாகியதாகும்.

 கேதார்நாத் எதிர் பிகார் அரசு (AIR 1962 SC 955; 1962 SUPP.(2) SCR 769); இந்த மேல்முறையீட்டு வழக்கில், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 124A மற்றும் 505 ஆகியவை இந்திய அரசியல் சட்ட பிரிவு 19 (1) (a)க்கு முரணானவையா என்பது இவ்வழக்கின் முக்கிய கேள்வியாக இருந்தது.

குற்றச்சாட்டுக்குரிய பேச்சில் இடம்பெற்ற வாசகங்கள் “இன்று, குற்றப் புலனாய்வுத் துறை (CID) நாய்கள் பரூனியைச் சுற்றித் திரிந்துகொண்டிருக்கின்றன. பல அதிகாரி நாய்கள் இந்தக் கூட்டத்தில் கூட உட்கார்ந்திருக்கின்றன. இந்திய மக்கள் பிரிட்டிஷ்காரர்களை இந்த நாட்டில் இருந்து விரட்டியடித்து விட்டு இந்தக் காங்கிரஸ் குண்டர்களுக்கு வாக்களித்துத் தேர்ந்தெடுத்து வண்டியில் உட்கார வைத்துள்ளார்கள். இன்று இந்தக் காங்கிரஸ் குண்டர்கள் மக்களின் தவறுகளால் வண்டியில் உட்கார்ந்திருக்கிறார்கள். நாம் பிரிட்டிஷாரை விரட்டியடித்தபோதே, இந்தக் காங்கிரஸ் குண்டர்களையும் விரட்டியடித்திருக்க வேண்டும்..” என்பதாகும்.

ஏராளமான வாய்மொழி சாட்சியங்களைப் பதிவு செய்த பிறகு, விசாரணை குற்றவியல் நடுவர் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 124A மற்றும் 505 இரண்டின் கீழும் குற்றவாளிகளுக்கு ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்திருந்தார். குற்றவாளிகள் பாட்னா உயர்நீதிமன்றத்தில் செய்த மேல் முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டு கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. இறுதியாக இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 124A அரசியல் சட்ட ரீதியாகச் செல்லத்தக்கது என்று முடிவு செய்யப்பட்டது. இந்தப் பிரிவு பேச்சுரிமை, கருத்துரிமை ஆகிய அடிப்படை உரிமைகளைக் கட்டுப்படுத்தினாலும் கூட, அந்தக் கட்டுப்பாடுகள் பொது ஒழுங்கின் நலனுக்கானவை, அவை அடிப்படை உரிமைகளின் மீது சட்டரீதியாக அனுமதிக்கக் கூடிய தலையீட்டின் வரம்புக்குள் உள்ளவை என்று அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.

அரசெதிர்ப்புக் குற்றம் தொடர்பான பிற வழக்குகள்

 • கெஹோ பாம் ஹசாரிகா மற்றும் பிறர் எதிர் அஸ்ஸாம் அரசாங்கம் (1951 Cr.L.J.68;
 • மனுபாய் திரிபோவந்தாஸ் படேல் மற்றும் பிறர் எதிர் குஜராத் அரசாங்கம் மற்றும் இன்னொருவர் ( 1972 Cr.L.J. 388; (1971) GLR 968)
 • உத்தம்ராவ் த/பெ. கேசவராவ் பட்வாரி எதிர் மராட்டிய அரசாங்கம் மற்றும் இன்னொருவர்.
 • மத்தியப்பிரதேச அரசாங்கம் எதிர் பாலேஷ்வர்தயாள் மற்றும் பிறர் (1967 Cr.L.J.1110)
 • பிலால் அஹமது காலூ எதிர் ஆந்திரப்பிரதேச அரசாங்கம் (1997)
 • பலவந்த சிங் எதிர் பஞ்சாப் அரசாங்கம் (1995)

அண்மைக் காலத்தில் காசுமீர் இந்தியாவுடன் இணைத்துக் கொள்ளப்பட்ட பிறகும் கூட காசுமீரின் பிரச்சனை தீர்க்கப்படவில்லை என்று கூறியதற்காக அருந்ததி ராயும் மாவோயிஸ்டு பிரசுரங்களை வைத்திருந்ததாக பினாயக் சென்னும் இக்குற்றச்சாட்டுக்கு ஆளாக்கபபட்டது அனைவரும் அறிந்ததே. இது போன்று இந்தியாவெங்கும் பலர் மீது இக்குற்றச்சாட்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனால் தான் “காந்தியின் தன்வரலாறு ஒருவரிடத்தில் இருந்தால் அவர் காந்தியவாதி என்று அழைக்கப்படலாமா?” என்று உச்ச நீதிமன்றம் எள்ளலுடன் கேட்டது.

1922 ல் காந்தியின் மீது இக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட போது அவர் கூறியதாவது:

“நிலவும் அரசாங்க அமைப்பு முறை மீது வெறுப்பு கொள்ளுமாறு மக்களிடம் போதிப்பது ஏறத்தாழ எனக்கு மிகப்பெரிய விருப்பத்துக்குரிய ஒன்றாக ஆகிவிட்டது என்ற உண்மையை எந்த வகையிலும் இந்த நீதிமன்றத்திடமிருந்து மறைக்க நான் விரும்பவில்லை. (அரசாங்கத்தின் மீது) பாசத்தைத் தயாரிக்கவோ அல்லது சட்டத்தின் மூலம் ஒழுங்குபடுத்தவோ முடியாது... குடிமக்களின் சுதந்திரத்தை நசுக்குவதற்கு வடிவமைக்கப்பட்ட இந்தியத் தண்டனைச் சட்டத்தின் அரசியல் பிரிவுகளில் இது (124 A) பட்டத்து அரசாக இருக்கிறது...”

மேலும், “மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட நாட்டுப்பற்றாளர்களில் சிலர் இந்தச் சட்டத்தின் கீழ் தண்டிககப்பட்டிருக்கிறார்கள்” என்பதால் இந்தச் சட்டத்தின் கீழ் தாம் குற்றம் சாட்டப்பட்டதைப் பெருமிதமாகக் கருதுவதாக காந்தி கூறினார்.

இந்த, 124 அ, சட்டம் “பெருமளவுக்கு ஆட்சேபகரமானது, மிகவும் வெறுக்கத்தக்கது. அதை எவ்வளவு விரைவில் கைவிடுகிறோமோ அந்த அளவுக்கு நல்லது” என்று முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு கூறியுள்ளார்.

அப்படியானால் நமது சட்டப் புத்தகத்தில் இந்த சட்டப்பிரிவு இன்னும் ஏன் இருந்துவருகிறது? நமது சிந்தனையாளர்களும் சமூக செயல்பாட்டாளர்களும் அவர்கள் அனுதாபம் கொண்டுள்ள ஒரு சித்தாந்தம் அல்லது கருத்தினை வெளிப்படுத்துகிறார்கள் என்பதற்காக அவர்களை அச்சுறுத்தவும், வழக்கு விசாரணையில் துன்புறுத்தவும் இந்த சட்டம் ஏன் பயன்படுத்தப்படுகிறது?

இந்திய அரசியல் அமைப்பின் குறைபாடுகளையும் அரசின் கொள்கைகளையும் திட்டங்களையும் விமர்சிப்போரும் மாற்று அரசியல் அமைப்பிற்கான கருத்துகளை முன்வைப்போரும் தொடர்ந்து இச்சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு சிறைவைக்கப்படுவது இன்றளவும் தொடர்கிறது.

ஒரு காலத்தில் இந்திய விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதற்கு காலனிய பிரிட்டிஷ் அரசாங்கம் பயன்படுத்திய ஒரு சட்டத்தை, இந்தியாவின் சொந்த மக்களின் குரல்வளைகளை நெறிப்பதற்கு – சுதந்திரமாக கருத்து வெளியிடுவதைத் தடுப்பதற்கு, அரசமைப்புக்கு மாற்றான ஓர் அமைப்பை முன்மொழியும் வெளியிடுவதைத் தடுப்பதற்கு – இந்திய அரசு தக்கவைத்துக் கொள்வதை அனுமதிக்கக் கூடாது. வழக்கொழிந்த பிற சட்டங்களைப் போலவே இந்த இ.த.ச.124 அ பிரிவும் அகற்றப்பட்ட வேண்டிய ஒன்றாகும்.

எனவே அரசின் மக்கள்விரோதக் கொள்கைகளையும் நடைமுறைகளையும் விமர்சிக்கும் சுதந்திரத்திலும் கருத்துரிமையிலும் ஜனநாயகத்திலும் நமபிக்கை கொண்ட ஒவ்வொருவரும் இந்த மக்கள்விரோத, தேசவிரோத இ.த.ச. 124 அ பிரிவை உடனடியாக அகற்ற குரல் கொடுக்கவேண்டும்.

மக்கள் விரோத, தேசவிரோத இ.த.ச. 124 அ பிரிவை அகற்றிட அணிதிரள்வோம்!

கருத்துரிமையைப் பாதுகாக்க ஒன்றுபடுவோம்!

தமிழக அரசே! மக்கள் பாடகர் தோழர் கோவனை உடனடியாக விடுதலை செய்! 

- நிழல்வண்ணன்

Pin It