கிளர்ச்சியாளர்களே சட்டத்தின் வடிவமைப்புக்கு உதவுகிறார்கள்.  
 
ashes in the snowவலதுசாரி மட்டுமல்ல. இடதுசாரியும் கொன்று குவிக்கும் என்பதை இந்த படம் திரையிட்டு காட்டுகிறது.
 
அதிகாரம் மைனாரிட்டுக்கு வரும் போது மைனாரிட்டியும் அதிகாரமே செய்யும் என்ற பார்வையை முன் வைக்கிறது. அதிகாரத்தின் தோரணை அப்படி. தொழிலாளி முதலாளி ஆன பின் முதலாளியின் குணங்களோடு தான் அவன் ஆட்சி செய்ய ஆரம்பிக்கிறான். இது தான் வர்க்க பேதங்களின் அடிப்படை விதியோ என்று பார்க்கிறேன்.
 
இரண்டாம் உலக போர் சமயத்தில் நடக்கும் கதை. நடந்த உண்மைக் கதைகளின் கூட்டு என்று தான் எழுத்தில் போடுகிறார்கள்.
 
16 வயது ஓவிய பெண் தன் அம்மாவோடும் தம்பியோடும் சைபீரியாவுக்கு அடிமையாக.......அகதியாக நாடு கடத்தப்படுவது தான் கதை. கடத்துவது நமது "ஜோசப் ஸ்டாலின்". ஏன் ரஷ்யா உடைந்தது என்று இந்த படத்தை கண்ட பிறகு தான் நுட்பகமாக விளங்கிக் கொள்ள முடிகிறது. யூதர்களின் மீது ஹிட்லர் கொண்ட வெறுப்புக்கு சற்றும் குறைவில்லாதது..... சோசலிசம் அல்லாதர்வர்கள் மீது ஸ்டாலின் கொண்ட வெறுப்பு.
 
பகல் முழுக்க கிழங்குகளை பறிக்கும் வேலை,. எல்லாமே ரேஷன் தான். ஒரு ஓவியக்காரியை ஒன்றுமில்லாமல் பண்ணுகிறது இந்த அடக்குமுறை. உரிமையைக் கேட்டால்....அது சொல் பேச்சு கேளாமை. உடம்பு சரியாய் இல்லை என்று இயலாமையில் அமர்ந்தால் கூட அது சட்டத்தை மீறுவது......ஆயுதத்தின் வழி தான் ஒவ்வொரு நாளையும் விடிய வைப்பது என்று ஸ்டாலினின் அராஜகம்...என்னை போன்ற கம்யூனிச சிந்தனைவாதிகளை சற்று அசைத்துப் பார்க்கிறது. 6 வாரங்கள் ஒரு ரயிலில் கும்பலாக மாட்டை அடைப்பது போல அடைத்து செல்லும் காட்சி.. ஹிட்லரின் பலி கூடாரங்களையே நினைவூட்டுகின்றது
 
எல்லாக் காலங்களிலும் அதிகாரம் இருக்கும் கரங்களில் மனிதர்கள் புழுக்களை போல நசுக்கப் பட்டுக் கொண்டே தான் இருந்திருக்கிறார்கள். அது அப்படித்தான் தொடருமோ என்று கூட யோசிக்க வேண்டி இருக்கிறது. ஆதிக்கத்தின் அச்சு அப்படி ஒரு வார்ப்பில் தான் ஊற்றப்பட்டு வடிவமைக்கப் பட்டிருக்கிறது என்பது தான் இங்கு இருத்தல். கீழுள்ளோன் மேலே வந்தாலும் கூட அவன் மேலுள்ளவன் போல தான் கீழுள்ளவனை ஆட்டிப் படைக்கிறான். படைப்பது என்று வந்து விட்டால் அங்கு கொம்பு முளைக்கும் தத்துவம் முளைத்து விடுகிறது.
 
அந்த ரயில் பெட்டியின் இருட்டுக்குள் மூச்சடைத்து சாகும் பச்சிளம் குழந்தையில் இருந்து கதை ஆரம்பிக்கிறது. அந்த தாய் மூச்சு முட்ட அழுவதில் நம் தலை மீது ஏறி இறங்குகிறது ரயில். நிகழ்வுகள் ஒரு கட்டத்தில் குழந்தை செத்ததையும் மறந்து அணைத்துக் கொண்டே குறுகி அமர்ந்திருக்கும் அந்த தாயின் விசனம் நம்மை கவ்விக் கொண்டே பயணிக்கிறது. மெல்ல குழந்தையின் பிணம் நாற்றம் அடிக்க துவங்க.....பேசி பேசி சமாளித்து..... வலுக்கட்டாயமாக தாயிடமிருந்து பிரித்து வாங்கி அதை ஓடும் ரயிலில் இருக்கும் இடைவெளிக்குள் கீழே போட்டு விடுகிறாள் ஓவியக்காரியின் அம்மா. வேறு வழியில்லாத கொடூரம் அது. அதற்கு சற்று முன்பாக வண்டி ஒரு இடத்தில் நிற்கையில் காவல் அதிகாரியிடம் இந்த விஷயத்தை சொல்லி அந்த குழந்தையைப் புதைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்கையில்....வேறு வழியின்றி முடியாது என்பது போல கடந்து விடும் காவல் அதிகாரி.... படம் முழுக்க விசித்திரமான மனிதனாகவே வருகிறான். முதல் கொலையை நடுங்கிக் கொண்டே தண்டனையாக தருபவன் பின் பாதியில் அதே தந்திரத்தை அவன் ஜுனியருக்கு வெகு இயல்பாக கற்றுத் தருவதில்.. இங்கு எல்லாமே பழக்கமாகி விடும் என்ற தத்துவம் தான் மானுடத்தின் வழி முழுக்க வலி நிறைந்த வியாக்கியானமாக இருக்கிறது என்று நம்புகிறோம்.
 
பார்த்து பார்த்து திருடுபவனை விட்டு விட்டு பசிக்கு திருடுபவனை கொன்று போடும் கையாலாகாத்தனம் ஸ்டாலின் காலத்தில் வலிமையாகவே இருந்திருக்கிறது.
 
அந்த முகாமில் அந்த பெண்ணுக்கு ஒரு காதல் வருகிறது. அவனும் அவளுக்காக ஓவியங்கள் வரைய தேவையான பொருள்களை எல்லாம் திருடிக் கொண்டு வந்து தருகிறான். நியாயப்படி பார்த்தால் அது திருட்டு அல்ல. எடுத்துக் கொள்வது தான். தேவையின் பொருட்டு நிகழும் பரிணாமங்கள் தான். அந்த கசந்த பகல்களை கழுவி விடும் சாந்த இரவுக்கு இருவருமே காத்திருக்கிறார்கள். அங்கு அன்பின் சுவடுகளாக ஆழமாய் முத்தம் பறி மாறிக் கொள்கிறார்கள். அவ்வளவு தான் அவ்விருட்டு தரும் சுதந்திரம். அவனை விட்டும் ஒரு கட்டத்தில் ஓவியக் குடும்பம் உள்பட ஒரு கூட்டத்தை பிரித்து இன்னும் மோசமான வேறு ஓர் இடத்துக்கு கொண்டு செல்கிறார்கள். அங்கே அவள் தாயிடம் அந்த விசித்திர காவலாளி தவறாக நடந்து கொள்ள முயற்சிக்கிறான். அந்த தவறின் வழியே அவளின் காதலை அடையவே விரும்புகிறான். அவனும் தன் குடும்பத்தை பிரிந்து தனிமையில்..... இந்த முகாமில் தவித்துக் கொண்டு தான் இருக்கிறான். சீருடை அணிந்த அடிமையாகவே தன்னை உணருகிறான். எல்லாருமே ஒரு வகை பித்து நிலையில்....மானுடத்தின் சட்டதிட்டங்கள் அழுத்தும் மூச்சிரைப்பின் தவிப்போடு தான் இருக்கிறார்கள். காவல் காக்கப்படுவர்களும் குற்றவாளிகளாகவே தான் வாழ்கிறார்கள். குற்ற உணர்ச்சியில்..... துடிக்கும் இதயங்களில் வெயிலும் நிர்பந்தமும் கிழங்கு பறிக்கவே ஆணை இடுகிறது. அப்படியே.....ஒரு கட்டத்தில் அந்த தாய் உடம்புக்கு முடியாமல்....கூண்டுக்குள் அடைபட்ட வாழ்வின் மூச்சுத் திணறல் தாங்காமல்.....ஓய்வில்லாத வேலையின் அழுத்தம் தாங்காமல்... நோய்வாய்ப்பட்டு மறித்து போகிறாள். 
 
அதன் பின் ஓவிய பெண்ணையும் அவள் தம்பியையம் விடுதலை செய்து விட்டு அந்த காவலாளி தூக்கிட்டுக் கொள்கிறான். அது தான் அவனுக்கு விடுதலை அளிக்கிறது. சோஷலிச வாழ்வு முறையும் இறுக்கி பிடித்தால் மூச்சுத் திணறவே செய்யும் என்பதன் வெளிப்பாடு தான் இந்த காவல் அதிகாரியின் வாழ்வும் சாவும்.
 
ஒரு ஊருக்காக ஒரு குடும்பம் அழியலாம் என்பது சரி தான். அந்த குடும்பத்தில் ஒருவனாய் இருக்கையில்.... எப்படி எதிர்கொள்வது. அது தான் இங்கே நிகழ்கிறது. ஸ்டாலின் என்றொரு மாபெரும் தலைவன்....... போரின் பொருட்டு....  கட்டமைப்பின் பொருட்டு.... சோஷலிச சித்தாந்தத்தின் பொருட்டு....குடும்பங்களைப் பிரித்து  நாடு கடத்துவது.... என்பதும் பாசிசம் தான். பொதுவாக விதிக்கப்படும் தண்டனைகளில் குற்றம் இழைக்காத ஒருவனும் மாட்டிக் கொள்கிறான் என்பது தான் வரையப்பட்ட விதியாக இருக்கிறது. அது தான் இந்த ஓவியப் பெண்ணின் குடும்பத்துக்கும் நிகழ்கிறது. அவளின் தந்தை எப்போதோ சிறையில் அடைபட்டு அங்கேயே செத்தும் போய்விட்டிருப்பது படத்தின் முடிவில் தான் அந்தப் பெண்ணோடு சேர்த்து நமக்கும் தெரிய வருகிறது. படம் முழுவதும் தன் தந்தை எப்படியும் வந்து நம்மை மீட்டெடுத்து போய் விடுவார் என்று தான் அந்த ஓவியப் பெண் நம்பிக் கொண்டிருப்பாள். நம்பிக்கைகளை ஹிட்லர் உடைத்தாலும் ஸ்டாலின் உடைத்தாலும் ஒன்று தான். திருட்டுக்கு தண்டனை உண்டென்றால் அவனைத் திருடும் அளவுக்கு ஆக்கி விட்ட இந்த சமூகத்துக்கும் தண்டனை உண்டு.
 
படம் முழுக்க இருள் சூழ்ந்த ஒரு நிழலின் பயம் பின் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அந்த பயத்தின் பின் மண்டையில் எந்த துப்பாக்கியும் எதன் பொருட்டும் வெடித்துக் கொண்டேதானிருக்கிறது. அதற்கு நீங்கள் இரண்டே இருண்டு உருளைக் கிழங்கை திருடியிருந்தாலும் கூட போதுமானது. உங்கள் பசி பற்றிய அக்கறை அந்த சித்தாந்தத்துக்கு இல்லை. நீங்கள் நல்லவர்களாக இருப்பது தான் முக்கியம். நல்லவனுக்கு கீழேயும் அடிமையாய் இருப்பதை ஒப்புக்கொள்ளவே முடியாது. எல்லாவற்றையும் களைத்து போட்டு மீண்டும் முதலில் இருந்து ஆடலாம் என்பது ஹிட்லர் செய்தாலும் பிழைதான்.....ஸ்டாலின் செய்தாலும் பிழை தான். 
 
Film: Ashes in the snow 
Direction: Mariys A.Markevisius
Language: English
Year: 2018
 
- கவிஜி
Pin It
வன்முறை தீர்வென்று சொல்லவில்லை. அதே நேரம் அகிம்சையும் இங்கு தீரவில்லை. 
 
இப்படித்தான் ஆரம்பிக்க வேண்டி இருக்கிறது உறியடி 2 படத்தின் பார்வையை. 
 
விவேகானந்தர் கேட்ட அந்த பத்து இளைஞர்களின் ஒருவன் தான் இந்த விஜய் குமார். சினிமாவுக்காக வரவைக்கப்பட்ட கோபம் இல்லை. இன்றைய கேடுகெட்ட அரசியல் 'பிழை' ப்பின் மீதுள்ள பெரும்கோபம்.....விஜய் குமாரின் ஒவ்வொரு அசைவிலும் தெரிவதை மனதார கொண்டாடத்தான் வேண்டும். பல நேரங்களில் வரும் மௌனங்களில்......யோசனைகளில்.... அமைதியில்.... உள்ளூர யோசிக்கும் தேவையின் கோபத்தை உற்று நோக்கத்தான் வேண்டும். புது நம்பிக்கையை இந்த மனிதன் தருகிறான் என்றால்...அவன் பின்னால் செல்ல ஒரு போதும் தயங்காது இந்தக் கூட்டம். இங்கு சரியான தலைவன் இல்லை. அது தான் எதிர்வினை ஆற்றுகிறது. காசும் அது சார்ந்த வியாபாரமும் மணிமண்டபம் காட்டுகிறது. கிரிமினல்களிடம் எல்லாத்தையும் தந்துவிட்டு வாயில் ஈ போக கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருக்கும் மூடத்தனம் அல்லது மோடித்தனம் நமக்குள் எப்படியோ விதைக்கப்பட்டு விட்டது. கண்கள் திறந்து களைய வேண்டிய தருணம் இது.
 
uriyadi 2தத்ததிகிட தத்தகிட தத்தகிட தத்தோம்....
 
பாரதியின் மீசை எப்படி மழுங்கும்.. அது கூர் கொண்ட ஈட்டியின் சுவாசத்தில் தானே இயங்கும். இயங்குகிறது......திருப்பி தாக்கும் போதெல்லாம் எதிரியின் பலமும் சேர்ந்து கொள்கிறது.
 
"அக்கினி குஞ்சொன்று கண்டேன்... அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன். வெந்து தணிந்தது காடு. தழல் வீரத்தில் குஞ்சென்று மூப்பென்று உண்டோ...."
 
நிகழ்கால அரசியலை தோலுரித்துக் காட்டும் விஜய் குமாரின் இரண்டாவது படம் இது.  இரண்டு படத்தில் வரும் கதைக்களமுமே....இந்த மனித குலத்துக்கு விட்ட எச்சரிக்கை. 
 
"கவனமா இரு.. இல்ல.. விஷவாயு தாக்கி சாவாய்.... அந்நிய முதலீட்டுக்கு பலிகடா ஆவாய். மீண்டும் ஒரு சுதந்திர போருக்கு தயாராக வேண்டி வரும்...." 
 
போபால் விசவாயு சம்பவம் மறந்திருக்க மாட்டோம். அது தான்..,. தூத்துக்குடியில் நிகழ இருக்கிறது. அது தான்.. மேற்கு தொடர்ச்சி மலைகளில் நிகழ இருக்கிறது. டெக்னாலஜி என்ற பெயரில்... முன்னேற்றம் என்ற பெயரில்.. இயற்கை வளங்களை அழித்து அழித்து சுடுகாட்டுக்கு நம்மைத் தத்தெடுக்கும் வேலைகளை கைக்கூலிகள் செய்து கொண்டிருப்பதை இன்னமும் புரிந்து கொள்ளாவிட்டால்... இந்த இனம் அழிந்து தான் போகும். விழித்துக் கொள்ளவில்லை என்றால்... இந்திய வரைபடத்தில் இருந்து தமிழகம் அழிக்கப்படும். உலகம் முழுக்க பரவி இருக்கும் தமிழ் இனம் அறிவிலும் ஆற்றலிலும் முன்னோடியாக இருக்கும் உலக சக்தி,. அதை அழிப்பதில் தான் அந்நிய சக்திகளின் ஆட்சியும் சந்தையும் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது.
 
தயவு செய்து இந்த ஆண்ட பரம்பரையெல்லாம் கொஞ்சம் முகம் கழுவி விட்டு படம் பாருங்கள். நீங்கள் பகல் கனவு காண ஆரம்பித்து வெகு நாட்களாயிற்று.
 
எப்போதெல்லாம் இந்த சமூகத்தின் சமநிலை தவறுகிறதோ அப்போதெல்லாம் விஜய் குமார் மாதிரி ஒருவன் வந்து கொண்டேயிருப்பான்.  கல்புர்கியைக் கொன்றது போல, நரேந்திர தபோல்கரை கொன்றது போல, கவ்ரி லங்கேஷ் ஐ கொன்றது போல நாளை அவனை யாரும் கொல்லவும் கூடும். ஆனால் அது பற்றியெல்லாம் அவன் கவலைப் பட்டதாக தெரியவில்லை. அவன் எல்லாவற்றையும் கடந்து தான் இங்கு கருப்பு சட்டை அணிந்து, சிவப்பு சட்டை அணிந்து,  "அரசியல்ல நாம தலையிடலனா அரசியல் நம்ம வாழ்க்கையில தலையிடும்" என்று உண்மையைப் பேசுகிறான். 
 
அவன் இவன் என்று  ஏன் சொல்கிறேன் என்றால்.....நாங்கள் பாரதியை அப்படித்தான் சொல்வோம். அத்தனை நெருக்கம் அவன் எங்களுக்கு.
 
ஒரு தொழிற்சாலைக்குள்  நடைபெறும் தொழில் நுட்பம் சார்ந்த விவரணைகளை இதற்கு முன் எந்த படத்திலும் இத்தனை நெருக்கத்தில்  நாம் கண்டிருக்க மாட்டோம். இடைவேளை காட்சியில் ஆழ்மனம் அலறும். சுவாசிக்க திணறும் பாவனையில் ஒவ்வொரு இருக்கையிலும் பெருமூச்சு.
 
சினிமா என்பது கலை. கலை என்பது ஒருவகையில் ஆயுதம். அது மக்களுக்கான ஆயுதம். அதை சரியாக கையாண்டிருக்கிறான்... நம் தோழன். உலக முதலாளிகள் பத்து பேருக்காகவா இந்த உலகம் இயங்குகிறது...! அப்படிதான் அது இயங்க வேண்டுமா? அப்படி இயங்கினால் அதில் தவறு இருக்கிறது என்று தானே அர்த்தம். வியாபாரமே வாழ்வென்று ஆக்கியது யார். காற்றையும் நீரையும் காசாக்கியவனை கொன்றால் தான் தகும். சமூகத்தின் சமநிலை தவறும் போதெல்லாம் அதை சரி செய்ய வேண்டியிருக்கிறது.....ஆயுதம் கொண்டோ அகிம்சை கொண்டோ...
 
ஒவ்வொரு காட்சியிலும் அத்தனை பாத்திரங்கள்.. எப்படி முடிந்தது. ஒரு கதாபாத்திரம் கூட நடித்ததாக தெரியவில்லை. வாழ்ந்திருக்கிறது. நிஜத்துக்கு வெகு அருகில் இருக்கையில்... படம் மறந்து ஆவணப்படம் வந்து விடுகிறது. அது பற்றியெல்லாம் கவலை இல்லை விஜயகுமார். உன் எச்சரிக்கை மணி கட்டங்களை அழித்து விடுகிறது. இது சினிமாவாக சரியாக உருவாகாமல் கூட போயிருக்கலாம். ஆனால்... உள்ளே இருக்கும் ஆன்மாவை புரிந்து கொள்ள முடிகிறது. அது போதுமானதாக இருக்கிறது. 
 
எந்த கட்டுப்பாடும் பாதுகாப்பும் இல்லாமல் இயங்கும் ஆலைகளின் வியாபாரம், கொன்று குவிப்பது மானுட சந்தைகளின் தவிப்பை என்பதை கன்னத்தில் அறைந்து சொல்லும் இந்த தோழனுக்கு சல்யூட் அடித்து தான் தீர வேண்டும். ஊரே கிரிக்கெட் பார்க்கையில் ஒருத்தன் மட்டும் கத்தி கொண்டு இனி இருக்க முடியாது. தியேட்டரில் விஜய்குமார் பேசும் காட்சிகளில் எல்லாம் கரகோஷம் குவிந்தது. நம்பிக்கை வந்த பொழுது அது. நாம் கேட்க நினைத்த அத்தனை கேடுகெட்ட கேள்விகளையும் அவன் கேட்கிறான். செருப்பால் அடிப்பது போல இருக்கிறது. ஆளும் கட்சி எதிர்கட்சினு இந்த 50 வருசத்துல ஜான் ஏறி முழம் சறுக்கிய அரசியல் நமது. எல்லாவற்றையும் உள்வாங்கி டீடைலிங் செய்த திரைக்கதை இது. பறந்து பறந்து அடிக்கும் சண்டைகள் இல்லை. ஆனால் மனம் பதபதைக்கும் மரணங்கள் உண்டு. நம் வீட்டுக்கு வராத வரை டெங்குவும் பன்றிக்காய்ச்சலும் நமக்கு செய்தி தான். செய்தி தாண்டி அதில் உள்ள பரிதவிப்பை ஒவ்வொரு மனிதனும் உணர்கையில்.... இந்த சந்தையின் நோக்கம் புரிந்து கொள்ள முடியும். எதிர்வினையாற்ற மானுடன் வினைக்கு சாவும் போக்கு இனியும் வேண்டாம்.
 
எல்லா களவாணிகளும் எல்லா கூட்டத்திலும் இருப்பார்கள். கண்டு களையெடுக்க வேண்டும். உள்ளூர் அரசியலில் இருந்து உலக அரசியல் வரை தெரிந்திருக்க வேண்டியது கட்டாயம். 
 
இறுதிக் காட்சியில்... தத்தகிட தத்தகிட தத்தகிட பி ஜி எம்......அதே வேகத்தோடு அதே கோபத்தோடு நம் மனசாட்சியின் வடிவில்.. விஜய் குமார் கையில் ஆயுதம். வன்முறை தீர்வென்று சொல்லவில்லை. அதே நேரம் அகிம்சையும் இங்கு தீரவில்லை. வேறு வழியின்றி நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்று நம் எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்.  
 
இது மிக மோசமான அரசியல் களம்....  நின்று போராடித்தான் விட்ட இடத்தை பிடிக்க முடியும்.
 
உறியடி1 ல் இருந்த நண்பர்களே இதிலும் இருந்திருக்கலாம். அதுவும் அந்த கண்ணாடி நண்பன் இருந்திருந்தால் இன்னும் பலமாக இருந்திருக்கும். சினிமாவுக்கே உண்டான குறைகள் இல்லாமல் இல்லை. ஆனால் வாழ்வின் சாயலைக் காட்டுகையில் அங்கே குறைகள் கண்டுகொள்ள தேவை இல்லை. தூத்துக்குடி விஷயம் தான் கதையின் மையம். பரிதவிக்கும் சாவுகளின் கோரத்தை சினிமாவில் காணவே நடுங்குகிறது. டெட் பாடி ஆட்சி செய்தால் நிஜமாகவும் ஆகும். செத்தாலும் அடிமை வாழ்வை தமிழினம் ஒருபோதும் ஏற்காது. சாதி விட்டெறிந்து விட்டு சாமியை வீட்டுக்குள் வைத்து விட்டு வீதிக்கு வந்து நில்....போராடு.....
 
போராடி செத்தாலும் அது தான் நிம்மதி. எட்டப்பன்கள் வாழும் இதே மண்ணில் தான் கட்டபொம்மன்களும் வாழ்கிறார்கள். வேடிக்கை மனிதராய் ஒரு போதும் வீழ்த்திடக்கூடாது. 
 
பாரதி வாழ்ந்த நாட்டில்.... அக்கினி குஞ்சுகளுக்கு பஞ்சம் இல்லை.
 
விஜய்குமாருக்கு வீர வணக்கங்கள். 
 
- கவிஜி
Pin It

பரியேறும் பெருமாளை நமக்குத் திரையில் கொண்டுவந்த மாரிசெல்வராஜ் அவர்கள் நன்றாகவே பேசுகிறார். அந்தப் பேச்சின் ஊடாக இன்னும் சில கேள்விகள் இருக்கத்தான் செய்கின்றன. அவர் தன்னை ஒரு கலைஞன் என்று பிரகடனப்படுத்திக் கொள்வதில் எவருக்கும் வருத்தமில்லை. ஆனால் அக்கலைகளின் ஊடாக அவர் முன்வைக்கும் கருத்துகளுக்கும் அக்கலைஞன் தார்மீகப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பதில் தவறு என்ன?

puthiyamadhavi and mariselvarajபரியேறும் பெருமாள் ஏன் திருப்பி அடிக்கவில்லை என்ற கேள்விக்கு அவர் சொன்ன பதில் நிறைய யோசிக்க வைத்தது.

“ என் பெற்றோர்கள் என்னை அப்படி வளர்க்கவில்லை. திருப்பி அடிக்கச் சொல்லவில்லை. ஜெயித்துக் காட்டு என்றார்கள்."

"சாதி இந்து என் நண்பன். அவனுடன் நான் எப்படிப் பேசுவது? இதுதான் என் படம்…”

"வெற்றி என்பது திருப்பி அடிப்பதல்ல; என் கருத்தை என் பார்வையை எதிராளிக்கு கொண்டு செல்வது தான் வெற்றி..."

"பொதுவாக சினிமாவில் கதாநாயகன் தனியாளாக நின்று எதிர்ப்பவனை திருப்பி அடிக்கும் காட்சிகளையே பார்த்தவர்களின் உளவியல் தான் இக்கேள்விகளை எழுப்புகிறது."

"பரியேறும் பெருமாள் ஒரு கலைவடிவம்… நான் ஒரு சினிமா கலைஞன்"

இப்படியாக மாரி செல்வராஜ் தன் பொன்மொழிகளைச் சொன்னபோது கேட்க சுகமாகவும் இதமாகவும் இருந்தது, கைதட்டினோம்.

படம் வெளிவந்து மும்பையில் கொடுத்தது போல பாராட்டு பத்திரம்/ விருது பத்திரம் 150 க்கும் மேலாக வாங்கி விட்ட தாக அவர் சொன்னபோதும் கைதட்டினோம். ஆனால் அப்படிக் கொடுத்த அந்த 150 அமைப்புகள் யார்? யார்? என்பது அவருக்குத் தெரியும். அதை அவர் நன்றாகவே புரிந்து கொண்டுமிருப்பார் என்பதும் புரிந்தது.

காரணம் அவர் தன் உரையாடலின் ஒரிட த்தில் நம் சமூகம் மூன்று வகையான மக்களைக் கொண்டிருக்கிறது.

1) சாதி வெறி பிடித்தவன் (சாதி இந்து என்று நான் புரிந்து கொண்டேன்)
2) சாதியால் ஒடுக்கப்படுபவன்
3) இந்த இரண்டு பேரையும் பார்த்துக் கொண்டு நமக்கென்ன என்று கடந்து செல்பவன்.

இந்த மூன்றாவது வகை மனிதர்கள் தான் ஆபத்தானவர்கள் என்று சொன்னார் மாரி.

பரியேறும் பெருமாள் இந்த மூன்றாம் வகை மனிதர்களிடம் என்ன மாதிரியான சின்ன அசைவலையை உருவாக்கி இருக்கிறது!

சரிதானே… இந்த த் தம்பி சொல்வது சரிதானே! என்ற எண்ணத்தைக் கட்டமைத்து இருக்கிறது என்று மாரி சொல்ல வருகிறார். இதைத்தான் அவர் தன் சாதி இந்து நண்பனுடன் நான் நட த்தும் உரையாடல் என்று முன்வைப்பதாகப் புரிந்து கொண்டேன்.

இதற்காக மாரி கொடுத்திருக்கும் விலை என்ன?

சட்டக்கல்லூரி களம், சாதி மோதல்கள், ஒடுக்கப்பட்டவன் மீது மூத்திரம் அடிக்கும் சாதி வெறி, அண்மையில் கவனிப்புக்குள்ளான ஆணவக் கொலைகள், அதன் பின்னணி, அதற்கு எழுந்த குரல்கள், கறுப்பி, நீல நிறம்… இப்படியாக தன் கலைவடிவம் கவனிப்புக்குள்ளாகும் ஒர் அரசியலை மாரி வைக்கிறார். ஆனால் அதே அரசியல் சார்ந்தக் கேள்விகள் வரும் போது கலை என்ற போர்வைக்குள் தன்னைப் பத்திரப்படுத்திக் கொள்கிறார்.. இது சினிமா உலகில் இருத்தலுக்கான போராட்டம் என்பதையாவது அவர் ஒத்துக் கொண்டிருக்கலாம்!

ஒரு பார்வையாளன் கதையின் கதா நாயகன் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவன் என்று காட்டும்போது அதே சமூகத்தைச் சார்ந்தவன் அக்கதையின் ஊடாக மாரி வைக்கும் சில வசனங்களை காட்சிகளை எப்படி உள்வாங்கி இருப்பான் என்ற புரிதல் மாரிக்கு இருக்கிறது. ஆனால் அவன் அவரை நோக்கி வைக்கும் சில தன் உணர்ச்சியான கேள்விகள் மட்டும் அவரைத் தொந்தரவு செய்கின்றன.

நான் வைத்தக் கேள்வி…

கதையில் சாதி இந்து கதாநாயகியின் அப்பா பரியேறும் பெருமாளிடம் சொல்லும் ஒரு வசனம்..

“ நல்லா படிங்க தம்பி.. எதிர்காலத்தில எது வேணும்னா மாறலாம் இல்லியா..”

இந்த அறிவுரை… அப்படியே பாபாசாகிப் அம்பேத்கரின் வாசகத்துடன் சேர்ந்து பார்வையாளனுக்குள் போகிறது. என்னவோ ஒடுக்கப்பட்டவன் எல்லாம் படிச்சிட்டா சாதி மாறிடும் என்ற சாதி இந்துவின் அறிவுரை… அவன் சாதி என்ற கட்டமைப்புக்கு வைக்கும் அறிவுரை மாதிரி ஒரு தோற்றம்.. அதுதான் படிச்சா மாறிடும் என்று சொல்லும் புத்திசாலித்தனம்…

இன்னும் சிலர் சொல்வார்கள்… இப்போல்லாம் யாரு சாதிப் பார்க்கா?

நீங்க ஏன் மேடம் சாதிக்கொடுமை தலித் என்றெல்லாம் பேசவேண்டும்?

என்னிக்காவது நாங்க உங்கள தலித்துனு நினைச்சிருக்குமோ இல்ல அப்படி நட த்தி இருக்கோமா…’

இந்த டயலாக் தான் சாதி இந்துவின் இந்த அறிவுரைக்குள் ஒளிந்திருக்கிறது. அம்பேத்கார் சொன்னார்... “கல்வி தான் ஒடுக்கப்பட்டவனுக்கான ஒரே ஆயுதம்" என்று. கல்வி தான் அவனை முன்னேற்றும், கல்வி தான் அவனுக்கு பொருளாதர வலிமையைக் கொடுத்து வயிற்றுப் பாட்டுக்காக அடிமையாக இருக்கும் நிலையை மாற்றும். இக்கல்வி தான் சாதிக்கொடுமைகளுக்கு எதிராக போராடும் மனவலிமையை, உடல் வலிமையை, அதிகார வலிமையை, அரசியல் வலிமையைக் கொடுக்கும். இவ்வளவும் அம்பேத்கர் சொன்ன "நீ படி" என்பதற்குப் பின்னாலிருக்கும் அரசியல்.

இதே அர்த்தம் தொனிக்கும் வசனத்தை ஒரு சாதி இந்து, ஒடுக்கப்பட்டவனைப் பார்த்து சொல்லும் போது அதற்கான அர்த்தங்கள் என்ன? இதைப் பரியேறும் பெருமாள் தான் புரிந்து கொள்ள வேண்டும்…

என்னவோ அம்பேத்கர் மாதிரி படிச்சிட்டா… சாதி இந்து அப்பா தன் மகளைத் திருமணம் செய்து கொடுத்திடுவார்னு ஒரு தட்டையான சமன்பாட்டுக்கு வந்திடக்கூடாது.

ஒடுக்கப்பட்டவனைப் பார்த்து இதைச் சொல்கிறவர் யார் என்பதைப் பொருத்து அதற்கான பொருள் தானே வந்தடைகிறது ! இச்சமூகம் நாள் தோறும் நட த்திக் கொண்டிருக்கும் இந்த அறிவுரைகள் சாதி என்ற கட்டுமானத்தின் மீது நாய் தன் காலைத் தூக்கிக் கொண்டு அடிக்கும் மூத்திரம் மாதிரி தான்!

இங்கே நம் பரியேறும் பெருமாளுக்கு இருக்கும் பிரச்சனை கல்வியோ, தகுதியோ அல்ல; அதையும் தாண்டிய வேறு ஒன்று. அதை நேர்கொள்ள முடியாமல் வைக்கும் அறிவுரைகள் யாரைத் திருப்திபடுத்த..?

இன்னொரு கேள்வி… இக்கதையில் மிகவும் சிறப்பான ஒருவரின் நடிப்பு, பரியேறும்பெருமாளின் அப்பா. அந்த நாட்டுப்புற கூத்துக்கலைஞன். இப்பட த்தில் அவன் பெண் வேடமிட்டு ஆடும் கலைஞனாக காட்டப்பட்டு, அதனால் ஏற்படும் சமூகத்தின் இழிந்த பார்வையை எதிர்கொள்ளும் கலைஞன். நாட்டுப்புறக்கூத்து கலைஞன் பாத்திரங்கள் எண்ணற்றவை இருக்கும்போது இப்படி ஒரு கதாபாத்திரத்தைக் காட்டுவது ஏன்? இப்படியான ஒரு கதாபாத்திரம் கூடாது என்றோ அல்லது இழிவு என்றோ சொல்ல வரவில்லை. ஆனால் இக்கதாபாத்திரம் ஏன் இப்படி காட்டப்படுகிறது?

இக்கதையுடன் சேர்த்துப் பார்க்காமல் தனியாகப் பார்க்கும் போது மிகவும் அற்புதமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இக்கதாபாத்திரம், இக்கதைக்கு அதுவும் ஒடுக்கப்பட்ட கதாநாயகனின் அப்பா என்ற பாத்திரத்திற்கு என்ன பின்னணியைக் கொடுக்கிறது? அதே நேரத்தில் சாதி இந்து கதாநாயகியின் அப்பாவின் தோற்றம் எப்படி காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது? இந்த இரண்டு காட்சிகளுக்கும் நடுவில் பெரிய பள்ளதாக்கு மாதிரி ஏற்றத்தாழ்வுகளை மாரி ஏன் காட்ட வேண்டும்? இன்றைய சாதி சமூகம் கட்டமைக்கப்பட்டிருக்கும் உளவியல் தானே இதெல்லாம்..! தலித் என்றால் இப்படித்தான் இருப்பான்.. தலித் வீட்டில் நம்ம பொண்ணுக போய் குடித்தனம் நட த்த முடியுமா? என்ற பொதுப்புத்திக்கு இக்காட்சிகளும் தீனி போடுகின்றன.

உதிரியாக வரும் கல்லூரி பேராசிரியர், கல்லூரி முதல்வர் அவர்களின் வசனங்கள் தான் பரியேறும் பெருமாளைத் தூக்கி நிறுத்தி பரிமேல் சவாரி செய்ய வைத்திருக்கின்றன. சாதி இந்துவுடன் மட்டுமல்ல சாதி கிறித்தவன், சாதி இசுலாமியர் எல்லோரும் நமக்கு நண்பர்கள் தான். அனைவருடனும் நாம் உரையாடுவோம். உரையாடத்தான் வேண்டும். ரொம்பவும் கவனமாக.. நிதானமாக உரையாடத்தான் வேண்டும். உரையாடலில் தெறிக்கும் நம் ஒவ்வொரு சொல்லிலும் ஒட்டிக் கொண்டிருக்கிறது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அச்சொற்கள் கடந்து வந்த பாதையும்….

கறுப்பி என்பது ஆன்மா மட்டுமல்ல
கறுப்பி என்பது கலை மட்டுமல்ல
கறுப்பி என்பது அழகியல் குறியீடு மட்டுமல்ல
கறுப்பி என்பது ஒரு வரலாறு.
பரியேறும் பெருமாளுக்கு வாழ்த்துகள்.

மாரி செல்வராஜ் அவர்களைச் சந்திக்கவும் உரையாடல் நட த்தவும் களம் அமைத்துக் கொடுத்த மும்பை விழித்தெழு இயக்கம் தோழர்களுக்கு என் அன்பும் நன்றியும்.

- புதிய மாதவி

Pin It
ஒரு வரிக் கதை. 
 
நின்று நிதானமாக நகரும் திரைக்கதை. போட்டோகிராபி ஒளிப்பதிவு. மனதில்......எப்படியோ எங்கிருந்தோ வருடும்... சொல்லொணாத் துயரம்.... தமன்னா நடிப்பில்.  காதலும் காதல் சார்ந்த சில காட்சிகளில் கூட சீனுவின் தனித்தன்மை. 
 
உதயநிதி நடிக்கவும் ஆரம்பித்து விட்டார் என்று நம்பலாம். இப்படி ஒரு கதையில் தன்னை இணைத்துக் கொண்டதை பாராட்டியே ஆக வேண்டும்.  தமன்னாவுக்கும் உதயநிதிக்கும் இடையே அரும்பும் காதலாகட்டும்... படத்தின் ஆரம்பத்தில் ஏற்படும் லோன் பிரச்சினைகள் ஆகட்டும்....விவசாயிகள் பற்றிய பார்வை ஆகட்டும்.....ஒன்றன் பின் ஒன்றாக வாழ்வின் யதார்த்தத்தின் அருகே....சென்று காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். நிகழ்கால விவசாய பிரச்சனைகளை ஆங்காங்கே தூவி இருப்பது சமூக பொறுப்பு. 
 
udayanidhi and tamannaநல்ல ஆன்மாக்களால் இயங்கும் சுற்றுப்புறங்களால் ஆன ஊரில் இப்படி ஒரு கதை நிகழ 100 சதவீதம் வாய்ப்பிருக்கிறது.
 
பொன்னாங்கன்னி கீரை....தலைக்கு தேய்க்கும் நல்லெண்ணெய்....இயற்கை விவசாயம்......மண்புழு உரம்......ஜீன் பிரச்சனை......பள்ளி கால தோழி இப்போதும் தோழி...... அப்பத்தா என்றொரு ஆலமரத்தின் நிழல்......கூட்டுக்குடும்பம்......பையனை நல்லவனாக வளர்த்த அப்பா.......கையில் ரசம் வாங்கி குடிக்கும் காட்சி என்று, எதையெல்லாம் நம் சமூகம் மறந்து விட்டதோ அதையெல்லாம் நினைவு படுத்துகிறது. எங்கெல்லாம் நம் சமூகம் தேங்கி நின்று விட்டதோ அங்கெல்லாம் தூர் வாருகிறது திரைக்கதை.
 
இந்த வாழ்வின் பெரும்பகுதி நம்மை மீறி தான் நடக்கிறது. அது தான் இயற்கையின் வாழ்வியல் சுழற்சி. மீதமுள்ள மிகவும் குறைவான பகுதி மட்டுமே நமது திட்டமிடலுக்குள் நிகழ்வதாக நம்பப் படுகிறது. யாருக்கு எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நிகழும், சம்பவிக்கும் அடுத்த முனை திருப்பம் எதுவென்று தெரியாத பேரிருள் இவ்வாழ்வு. அன்பெனும் வெளிச்சமே கை பிடித்து அழைத்து செல்லும் கடவுள்தனம். அன்பில்லாமல் இந்த உயிரின் தாகம் ஒரு போதும் தீர்வதில்லை. அன்பைத் தேடாமல் அன்பைத் தராமல் ஒருபோதும் உன்னதம் நிலைப்பதில்லை. 
 
"உன்னைப் பார்த்துக்க 12 கண்ணு இருக்கு...இந்த வீட்டோட சொத்தே நீ தான்...." என்று உதயநிதி பேசும் வசனங்கள் எங்கிருந்தோ மனைவியாக வரும் எல்லா பெண்களுக்கும் சமர்ப்பணம். மனைவிகள் எல்லாவற்றையும் கடந்த பேரன்புக்காரிகள். அவர்களைக் கொண்டாடாவிட்டாலும் துண்டாடாமல் இருக்கக் கடவது ஆண் சமூகம்.
 
பெரிதாக சப்போர்ட் இல்லாத பெண் பிள்ளைகள் தங்கள் திருமணத்துக்கு தாங்களே காசு சேர்த்து வைக்கும் பக்குவம் கண்களில் துளி விட செய்து விடுகிறது. தன் கல்யாணத்தைப் பற்றி பேச.......தானே வந்து அமர்ந்து பேசும் தமன்னா வெள்ளை நிறத்து பக்கத்து வீட்டுக்காரி என்று தான் நம்பினேன். எதிர்கால ஏக்கம் கண்களில் தவழும் காட்சிகளில் நிஜமாலுமே தன் சுயத்தில் சுயம்புவாக வாழும் எத்தனையோ பெண்களின்  வாழ்வைத்தான் பார்த்தேன். குருவி சேர்ப்பது போல கொஞ்சம் கொஞ்சமாக காசு சேர்த்து தன் திருமணத்தை தானே நடத்திக் கொள்ளும் பெண்களின் ஒரு துளி எனத்தான் தமன்னா என்ற கதாபாத்திரம் இருந்தது. மனம் பிசையும் தனிமைக்குள் இந்த உலகத்தில் அவர்கள் தங்களை தாங்களே காத்துக் கொள்கிறார்கள். அவர்களிடம் நேர்மை இருக்கிறது. உண்மை இருக்கிறது. ஆசை அடிமனதில் மட்டுமே இருக்கிறது.
 
சோழமண்டலம் அத்தனை அற்புதமாய் கண்களில் விரிகிறது. யுவனின் இசை.. தன்னை கிராமத்து பறவையாக்கிக் கொண்டு சிறகடிக்கிறது. திரைக்கதை சில இடங்களில் நாடகத்தனமாய் இருந்தாலும்... நாடகத்தனம் இல்லாத வாழ்வு எங்கிருக்கிறது என்று கடந்து விடலாம்.
 
வடிவுக்கரசி என்ற நடிப்பு ராட்சசி... சில  காட்சிகளே வந்தாலும்... கண்களாலும்... உடல் அசைவாலுமே நம்மை அசைத்து விடுகிறார். அதும் இறுதிக் காட்சியில் பேரனையும் பேத்தியையும் வழி அனுப்பி விட்டு வாழ்த்துவது போலவே காற்றினில் இரு கைகளையும் வைத்திருக்கும் சில நொடிகள் போதும்... கூட்டுக் குடும்பத்தின்...... பாட்டிகளின் அரவணைப்பில்... ஒரு வீட்டின் வளையம்....எப்படி நம்மை சூழ்ந்திருக்கிறது என்று உணர... 
 
பெருங்காதலோடு வாழும் ஜோடிகளுக்கு குறைகளே இல்லை. ஏனோ அழத் தோன்றுகிறது....மனம் விட்டு அழுவதற்காகவாது ஒரு அப்பாத்தாவின் அன்பு வீட்டில் இருக்க வேண்டும்.... எப்போதும். 
 
- கவிஜி 
Pin It

ரஷ்ய எழுத்தாளரான விளாதிமிர் நபகோவ் (1899_1977) அவர்களின் பெரும் சர்ச்சைக்குரிய இலக்கியப் படைப்பு "லோலிதா". அக்காலகட்டத்தில் வாசகர்களின் பார்வைக் கோணத்தில் மிகுந்த பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்திய தவிர்க்க இயலாத நாவலென "லோலிதா"வைக் குறிப்பிடலாம்.

Eyes wide shut, The shining உள்ளிட்ட திரைப்படங்களுக்குச் சொந்தக்காரரான இயக்குநர் "Stanley Kubrick" அவர்களின் முயற்சியால் 1962ல் 'லோலிதா' முதன்முதலாக கருப்பு, வெள்ளைப் படமாக திரைதொட்டது. த்திரைப்படமானது சிறந்த எழுத்து மற்றும் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதிற்குப் பரிந்துரை செய்யப்பட்ட பட்டியலில் இடம்பெற்றது. பின்னர் மீண்டும் 1997ல் இயக்குநர் "Adrian lyne" அவர்களால் திரையில் மறுமலர்ச்சி பெற்றது.

lolitaAdrian lyne ன் கதாப்பாத்திரத் தேர்வுகள்:
Humbert _ Jeremy Irons
Dolores haze _ Dominique swain(Lolita)
Charlotte haze _ Melanie Griffith
Claire Quilty _ Frank Langella.

பிரெஞ்சு விரிவுரையாளர் பணிக்கென பிரான்ஸிலிருந்து அமெரிக்கா செல்லும் Humbert, விதவையான Charlotte haze ன் வீட்டில் தங்குகிறார். அங்கு அவளது 12 வயது மகளான Dolores haze(Lolita) ஐ எதேச்சையாய்ப் பார்க்கையில் அவரது பதின்வயதுக் காதல் மீண்டும் உயிர்ப்பு பெறுகிறது. தவிர்க்க இயலாத சூழலில் Charlotte haze ஐ மணந்துகொண்ட Humbert , Dolores ன் வளர்ப்புத் தந்தையாகிறார். ஒரு வளர்ப்புத் தந்தைக்கும் அவரது பதின் வயது மகளுக்குமான உறவுச் சிக்கல்கள்தான் இத்திரைப்படத்தின் கதைக்களம். சர்ச்சைக்குரிய இம்மையக்கருத்தும், திரைக்கதையும்தான் இத்திரைப்படத்தின் ஆளுமைக்குப் பலமாக அமைந்துள்ளன.

திரையின் முதற்காட்சியில், தன் காதலையும், அதன் கற்பிதங்களையும் சுமந்தபடி பயணிக்கும் கதாநாயகன் Humbert தனது பால்ய காதலியை உன்னத உயிர்ப்புடன் நமக்கு அறிமுகம் செய்கிறார். தன் வாழ்வின் ஆசிர்வாதங்களையும், சாபங்களையும் எடுத்தியம்பும் கதைசொல்லியாய் தன் பயணத்தைத் தொடர்கிறார்.

Jeremy Irons(Humbert), தனது மன உணர்வுகளின் பரிபூரண ஆளுமைகளை அவ்வளவு அழகாக தன் முகவெட்டில் செதுக்குகிறார். எவ்வித ஆர்ப்பரிப்புமின்றி வில்லன் மற்றும் கதாநாயகன் என்ற இருவித நடத்தைப் பாங்குடன் படம் முழுக்க அடக்கமாகவும், மிகவும் அற்புதமாகவும் உலாவருகிறார். நடுத்தர வயதுடைய கதாப்பாத்திரமான இவரைச் சூழ்ந்தபடி ஒரு மென்மையான இழையோட்டம் இறுதிவரை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. தன் வாழ்வின் பெருமளவு அர்ப்பணிப்புகளை இவர்தம் காதலுக்கென நிகழ்த்துவதால் ஹம்பர்ட்டை காதலுக்கான குறியீடாக உணர்கிறது மனம்.

Humbert தன் 14 ம் வயதில் எதிர்கொள்ளும் முதற்காதலானது அவரை பல சுபசங்கடங்களில் எல்லைகளற்று சஞ்சரிக்க வைக்கிறது. எதிர்பாராமல் தனது காதலியின் மரணம் நிகழ்ந்துவிடும் அத்தருணத்தில் தாங்கவொண்ணாத வேதனையால் கதறுகிறது அவரது நெஞ்சம். துளியும் கருணையற்று காலம் நிகழ்த்தும் அம் மரணமானது தீராவலியுடன் அவரது பால்யத்தில் சுவடு பதிக்கிறது.

அதன்பின் Humbert தனது வயதுகளைக் கடக்க இயன்றதே ஒழிய காதலைப் பொறுத்து, அதன் உணர்வுகளைப் பொறுத்து பால்யத்தைக் கடக்க இயலவில்லை. மனிதன் தன் இச்சையின் ஆழ ஆழங்களில் சுழலும் எண்ணங்களுக்கு அபரிமிதமான முக்கியத்துவம் அளித்து அவற்றை தனது செயல்களால் தீவிரமாக நெருங்குகையில்தான் அவனது சோதனைகளும், சாதனைகளும் ஆரம்பமாகின்றன. தடுத்து நிறுத்த திராணியற்ற வகையில் எதிர்பாரா மாற்றங்களும் , திடீர்த் திருப்பங்களும் நொடியில் நிகழ்ந்து விடுகின்றன.

இயக்குநர் அட்ரியன் லைன், "லோலிதா" கதாபாத்திரத்திற்கென 'Dominique swain' ஐ தேர்வு செய்திருப்பது மிகவும் பொருத்தமான ஒன்று. லோலிதாவின் உடல்மொழி அதீத கவர்ச்சியுடையது. ஒரு பதின்வயதுச் சிறுமிக்குரிய துறுதுறுப்புடன் அவ்வளவு அருமையாய் கதாபாத்திரத்துடன் ஒன்றிப் போகிறார். முரட்டுத்தனமும், கொச்சைத்தனமும், குறும்புத்தனமும், ஆக்ரோசமும் ததும்பும் குட்டி தேவதையென அவளைக் குறிப்பிடலாம். ஒட்டுமொத்த காமத்தின் குறியீடாக மனதில் வேரூன்றி கிளை பரப்புகிறாள் லோலிதா. அந்த தேவதையின் கொச்சைத்தனமான குறும்புகளை மனத்தால் முற்றிலுமாக ஏற்கவோ, மறுக்கவோ இயலவில்லை. எனினும், அப்படியான ஒரு பாலியல் சித்தரிப்பை இறுதிவரை கண்மூடித்தனமாக போதுமட்டும் ரசிக்க முடிக்கிறது. எதார்த்தமும், மாய எதார்த்தமும் கலந்த கலவையாய் மனதை இறுகப் பிசையும் லோலிதா, நொடிக்கு நொடி அதிர்வதும், நம்மை அதிரவைப்பதுமாய் அமர்க்களப்படுத்துகிறாள். அந்த மாயதேவதை படத்தின் இறுதிக் காட்சிவரை ஒரு மென்மையான வன்முறையுடன் மனதினுள் கும்மாளமிட்டபடி குறுகுறுத்துக் கொண்டேயிருக்கிறாள்.

Lo (lolita) பள்ளி முகாமிற்குச் செல்லுமுன் தனது அதீத அன்பை Humbert ற்கு வெளிப்படுத்தும் அணுக்கமான நிகழ்வில் முதன்முதலாக அவர்கள் இருவர் மீதான பன்முகப் பார்வையின் பிம்பம் உடைந்து நொறுங்குகிறது. இக்காட்சி முதற்கொண்டு பார்வையாளரின் புரிதலில் உறவுச்சிக்கலானது மென்மேலும் பலப்படுகிறது. இந்த உறவுச்சிக்கலை மையமாய்க் கொண்டு அடுத்தடுத்த காட்சிகள் சுவாரஸ்யமாகவும் , விறுவிறுப்பாகவும் நகர்கின்றன.

Lo வின் செய்கைகளை ஆதரிக்கவோ, நிராகரிக்கவோ தடுமாறும் மனமானது பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளை முன்னிறுத்தவும், அதன் பின்வாங்கலுக்கும் ஒரே சமயத்தில் தயாராகிறது.

சமூகம் என்பது உறவு ரீதியான சில ஒழுங்கு கட்டமைப்புகளுடன் கூடிய உறுதியான அஸ்திவாரங்களைக் கொண்டுள்ளது. அதனை மீறியதான உறவுச் செயல்பாடுகள் சமூக ஒழுக்கச் சீர்குலைவிற்கு அடித்தளமிடுவதாகவே எண்ணப்படுகிறது. தனிமனித ஒழுக்க சீர்கேடென்பது ஒட்டுமொத்த சமூகத்தின் சர்வநாசத்திற்கு ஒப்பநோக்கப்படுகிறது எனும் கருத்தியலை நாம் மறுக்க இயலாது. இவ்வகையான உறவுச்சிக்கல்களில் தோய்ந்த மனமானது நினைவுகளை ஆதிக்காலத்திற்கு அடியோடு நகர்த்துவதோடு மட்டுமன்றி நாகரிகத்திற்கு முந்தைய காலம், பிந்தைய காலமென பகுத்து அவைகளுக்குக் குறுக்கிடையாய் ஒரு கோடு கிழிக்கிறது. அதன்பின் நாகரிகத்திற்கு முந்தைய காலங்களில் தன்னை இருத்திக்கொள்ளும் மனமானது பிரபஞ்சம் முழுமைக்குமான உறவுப்புரிதல்களின் அலசல்களில் எல்லாமும் சரி, எல்லாமும் தவறு என்பதான குழப்பத்தில் உழன்று, ஸ்தம்பித்து உறைந்துபோய் நிற்கிறது.

வரலாற்றில் விடுபட்டுப்போன ஆதிக்கால ஸ்நேகங்களை ஸ்பரிசிப்பதாக நம்புகிறது மனம். இப்படியொரு சர்ச்சைக்குரிய உளவியலை, உயிரோட்டமான உறவினை உருவாக்கிய நபகோவ் வாசகர்களை மதில்மேல் பூனையாக நிறுத்தி ஒருசில "ம்யாவ்"களைக்கூட உதிர்க்கமுடியாதபடிக்கு இக்கட்டான சூழலில் தள்ளிவிட்டு வேடிக்கை பார்த்திருக்கிறார். அதன்படிக்கு Adrian lyne கதைவழியிலான திரைக்காட்சிகளில் மிகையளவு அமர்க்களப்படுத்துகிறார்.

Humbert ம், Lo ம் தங்களின் பெரும்பான்மை இரவுகளை வெவ்வேறு விடுதிகளில் கழிக்கின்றனர். ஒருமுறை Humbert வெளியே சென்று திரும்புகையில் அவளது இன்ப அலங்கோலங்களின் நிலையுணர்ந்தவராய் அந்த ரகசிய நபர் பற்றிய தகவல்களைத் தெரிவிக்கும்படி மன்றாடுகையில்கூட Lo தனது காமாஸ்திரத்தைத்தான் பண்பட்ட கருவியென உபயோகிக்கிறாள். என்ன மாதிரியான ஒரு காட்சி அது! பெண்ணானவள், ஆணின் உணர்வுகளை சிதைத்து அதனை காமத்தின் வழி ரசித்து அனுபவிக்கிறாள். அதிரடியான அவ்வன்புணர்வு காட்சியின் உருக்கங்களிலிருந்து உடனடியாக விடுபட இயலாமல் சிறிது நேரம் அவ்விடத்திலேயே தேங்கி நிற்கிறது மனம். அக்காட்சியில் Lo தனக்குத்தானே வன்முறையை வலிந்து திணித்துக் கொள்பவளாக அடையாளப்படுத்தப்படுகிறாள். மென்மையான காமக் குரூரத்தின் தோற்றமென மிளிர்கிறாள் Lo.

Lo வின் காமம் எவ்வளவுக்கெவ்வளவு நெகிழ்வை ஏற்படுத்துகிறதோ அவ்வளவுக்கவ்வளவு Humbert ன் காதல் ஆழங்களை உண்டாக்குகிறது. மிகவும் அற்புதமான காட்சியமைப்பு இது.

இத்திரைப்படத்தின் உச்சகட்ட நிகழ்வுகளுள் ஒன்று Quilty ன் மரணம். கதாப்பாத்திரத்திற்கேற்ற அபார நடிப்பு. இவருக்கென ஒருசில காட்சிகள் மட்டுமே வாய்ப்பாக அளிக்கப்பட்டிருப்பினும் தனக்குரிய பகுதியை நிறைவாகச் செய்திருக்கிறார்.குறிப்பாகச் சொல்லப்போனால் மரணிக்க விருப்பமற்ற ஒரு மரணத்தின் நேரடிக்காட்சியென இக்காட்சியினைக் குறிப்பிடலாம். Quilty ன் யதார்த்த நடிப்பும், காட்சியாக்கிய விதமும் பிரமிக்கத்தக்க பிரம்மாண்டமென மனதை நிரப்புகிறது.

அவ்வப்போது மேலெழும்பும் பின்னனி இசையானது மனதை மென்மையாக வருடிச் செல்கிறது.

அந்நிய நாடுகளில் நாவலைத் தழுவிய திரைப்படங்கள் ஏராளம். இதுவும் நாவலைத் தழுவிய திரைப்படமென்றாலும் காட்சியமைப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அறிவின் மெனக்கெடல்களை உள்ளூர உணர முடிகிறது. பெரும்பான்மை காட்சியமைப்புகளில் கவித்துவம் இழையோடுகிறது. ஒருவேளை இந்நாவல் வாசிக்கப் பெற்றிருந்தால் நாவலுக்கும், இயக்குநரின் காட்சியமைப்புகளுக்கான ஒப்புமை மற்றும் வேற்றுமைகளை பேசும் வாய்ப்பு அமைந்திருக்கலாம்.

துரதிஷ்டவசமாக, "லோலிதா" விற்கு இணையான ஒரு நாவலையோ அல்லது திரைக்கதையையோ மேற்கோளாகக் குறிப்பிட இயலவில்லை. முடிவாக , சர்ச்சைக்குரிய திரைப்பட வரிசையில் தனித்து நிற்கும் "லோலிதா"விற்கு நிகர் லோலிதா மட்டுமே!!!

- வான்மதி செந்தில்வாணன்

Pin It