நூலகத்தொகுப்பை ஆய்வாளர்கள் முழுமையாகப் பயன் படுத்திக்கொள்ளக்கூடிய வாய்ப்பைத் தரவல்லது ஒரு தரமான நூற்பட்டியல். நூலகத்தின் முதுகெலும்பாகத் திகழ்வது நூற்பட்டியல் தான். நூலகம் ஆரோக்கியமாகச் செயல்படுவதற்கு நூற்பட்டியல் மிகவும் இன்றியமையாதது. இதை நன்கு உணர்ந்தவர் ரோஜா முத்தையா. ரோஜா முத்தையா தொடங்கிய இப்பணிகள் எவ்வாறு தமிழகச் சூழலில் தனித்துவம் பெற்றது என்பதைப் பற்றிய கட்டுரை இது.

நூற்பட்டியல் வரலாறு

அமெரிக்க நூலகச் சங்கத்தைத் தொடங்கியவர்களில் ஒருவர் சி. எ. கட்டர் (C. A. Cutter, 1837-1903). காகித அட்டைகளில் நூற்பட்டியல் செய்யும் முறையை அறிமுகப்படுத்தியவர் இவர் தான். இவர் 1876ல் நூற்பட்டியலுக்கான விதியை வரையறை செய்தார். இவ்விதிகளை மையமாக வைத்து தான் நூற்பட்டியல் உருவாக்கும் முறைகள் வளர்ந்துள்ளது. Anglo American Cataloguing Rules (AACR) முதற்பதிப்பு 1967லும் இரண்டாவது பதிப்பு 1978லும் வெளிவந்தது. இவ்விதிகளை ஆதாரமாகக் கொண்டு நூற்பட்டி யல்களை உலகம் முழுவதும் உள்ள நூலகங்கள் உருவாக்கி வரு கின்றன. இந்தியாவின் நூலகத் தந்தையான எஸ். ஆர். ரங்கநாதன் (1892-_-1972) நூலக வளர்ச்சிக்குப் பெரிதும் பங்காற்றியுள்ளார். நம் நாட்டிற்கென தனியான நூற்பட்டியல் செய்யும் முறையை 1934ல் அறிமுகப்படுத்தினார்.

ஆரம்ப காலத்தில் நூலகங்கள் தங்களுடைய நூல்களைப் பதிவேடுகளில் பதிவுசெய்து வந்தனர். அவற்றையே நூற்பட்டியல்களாகவும் பயன்படுத்தினார்கள். இம்முறையில் இருந்த நடைமுறைச் சிக்கலால், அகரவரிசையில் அடுக்கி வைக்க ஏதுவாக, அட்டையில் நூற்பட்டியல் உருவாக்கும் முறை 19ஆம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.கணினி தொழில்நுட்பம் நடைமுறைக்கு வந்தபோது அமெரிக்க காங்கிரஸ் நூலகம் (Library of Congress, Washington D.C.) நூற்பட்டியலைத் தயாரிக்கும் பணியைக் கணினிப்படுத்த முயற்சி எடுத்தது. அதன் விளைவாகக் கணினிமயப்படுத்திய நூற்பட்டியல் (Machine Readable Cataloguing) என்னும் முறையை 1970ல் உருவாக்கியது. இம்முறையைப் பின்பற்றி கணினிநூற்பட்டியலை நூலகங்கள் உருவாக்கி வருகின்றன.

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் 1999ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டில் நூலகக் கள ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. தமிழகத்திலுள்ள நூலகங்கள் தங்களுடைய நூற்பட்டியல்களை பதிவேடுகளிலும் அட்டைகளிலும் செய்துள்ளனர். இவற்றில் காணும் விவரங்கள் பொதுவாகத் தொடர் எண், நூல் தலைப்பு, நூலாசிரியர், பதிப்பாளர் என்கிற விவரங்களை மட்டுமே பதிவு செய்துள்ளனர். இதற்குப் பதிவேடுகளின் அளவு ஒரு தடையாக இருந்திருக்கலாம். பல முக்கியமான விவரங்களை நூற்பட்டியலில் சேர்க்கும் பழக்கம் இருக்கவில்லை. ஆகையால் முழுமையான நூற்பட்டியல் கிடைக்காது. இந்தப் பின்புலத்தில் ரோஜா முத்தையா எவ்வாறு தனித்துச் செயல்பட்டுள்ளார் என்பதை அவரது பதிவேடுகளின் மூலம் அறியமுடிகிறது.

தமிழ் நூல்களுக்கான சில முக்கியமான விவர அட்டவணைகள் வெளிவந்துள்ளன.

ஜான் மர்டாக் (John Murdoch, 1819-1904) 1865இல் ஆங்கிலத்தில் தமிழ் நூல் விவர அட்டவணையை வெளியிட்டார். இதில் 1865 வரையில் வெளிவந்த நூல்களின் விவரங்கள் அடங்கி யுள்ளன. சென்னை மாகாண அரசாங்கத்தினால் சென்னை மாகாணத்தில் பதிவு செய்யப்பெற்ற எல்லா மொழி நூல்களுக்குமான விவர அட்டவணையை அரசு இதழில் இணைப்பாக 1875லிருந்து 1943 வரை வெளியிடப்பட்டது. லண்டனிலுள்ள பிரிட்டிஷ் அருங் காட்சிக்கூடத்தில் சேகரிக்கப்பட்டுள்ள தமிழ் நூல்களுக்கு 1909இல் ஜி. யூ. போப் பாதிரியாரால் நூல் விவர அட்டவணை வெளியிடப்பட்டது. பிறகு 1931இல் எல். டி. பர்னெட் முதல் பதிப்பில் விடுபட்ட நூல்களை அனுபந்தமாக வெளியிட்டார். தமிழ் நூல் விவர அட்டவணையைத் தமிழ் வளர்ச்சித்துறை 1961 முதல் 1987 வரை ஏழு தொகுதியாக வெளியிட்டது. இதில் 1867 முதல் 1935 வரை வெளிவந்த நூல்களுக்கான விவரங்கள் உள்ளன. இந்திய தேசிய நூலகமும் கன்னிமாரா பொதுநூலகமும் நூல் விவர அட்டவணையைத் தமிழில் உருவாக்கி வெளியிட்டுள்ளது. பிரிட்டிஷ் நூலகத்திலுள்ள முனைவர் கிரெஹம் ஸா என்பவர் உருவாக்கிய நூல் விவர அட்டவணை மிக முக்கியமானது. இதில் 1556லிருந்து 1800 வரை வெளிவந்த நூல்களுக்கான விவரங்களும் ஐரோப்பாவில் எந்த நூலகத்தில் உள்ளது என்ற விவரங்களையும் தந்துள்ளார்.

ரோஜா முத்தையாவின் நூற்பட்டியல்

ரோஜா முத்தையா நூல்களைச் சேகரித்து வைத்தது மட்டுமல்லாமல் அவற்றை ஆவணப்படுத்தப் பல முயற்சிகளை எடுத்துள்ளார். ரோஜா முத்தையா தன்னுடைய தொகுப்பை கையாண்டவிதத்தைக் கவனிக்கும்போது அவர் நூலகவியலின் தத்துவங்களை நன்கு அறிந்து, நவீன நூற்பட்டியலைத் தயாரித் திருந்தார் என்பதை அறிந்துகொள்ளமுடிகிறது. எஸ். ஆர். ரங்கநாதன் பார்த்திருந்தால் வியந்து மாணவர்களுக்கு இம்முறையைப் பயிற்றுவிக்கச் செய்திருப்பார் அல்லது முனைவர் பட்டத்திற்காகத் தனது மாணவர் ஒருவரைப் பணித்திருப்பார். தொகுப்பை அவர் முறைப்படுத்த பயன்படுத்திய முறைகள் மற்றும் ஆவணப்படுத்த அவர் எடுத்த முயற்சிகள் தொலைநோக்குடையது.

நூலகவியலில் பட்டம் இல்லையென்றாலும் அத்துறையின் நுணுக்கங்களுக்கு ஒப்பாகத் தாமாகவே ஒரு மரபை ஏற்படுத்தி யிருக்கிறார். மூன்று முக்கியமான முறைகளைக் கையாண்டிருக் கிறார். நூல்களுக்கான விவரங்களைப் பதிவேடுகளில் பதிவு செய்யும் நூற்பட்டியல் முறையும் இதழ்களுக்கான அடைவுகளைப் பதிவேடுகளில் பதிவுசெய்யும் முறையும் மூன்றாவதாக துறை சார்ந்த நூற்பட்டியல்கள் செய்யும் முறையும் கையாண்டுள்ளார்.

1957ஆ-ம் ஆண்டிலேயே நூல்களுக்கான விவரங்களைப் பதிவு செய்யும் பணியினை ஆரம்பித்துள்ளார். எஸ். ஆர். ரங்கநாதனின் ஐந்தாவது நூலக விதியின்படி நூற்பட்டியலில் இடம்பெற்றுள்ள விவரங்களைத் தொடர்ந்து மெருகு ஏற்றிக் கொண்டு வந்துள்ளார். இதற்கு இவருடைய பதிவேடுகளே சான்று. ஆரம்பக் காலத்தில் நூலின் தலைப்பு, மூல ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர்/பதிப்பாசிரியர், வெளியிட்டோர், பதிப்பு ஆண்டு மற்றும் விலை முதலிய தகவல்களை மட்டுமே பதிவுசெய்துள்ளார்.

அதன் பிறகு, 1961இல் இப்பதிவேடுகளில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்துள்ளார். மேற்குறிப்பிட்ட விவரத்தோடு, நூலின் பக்கம், நூல் யாரிடமிருந்து வாங்கியது, முதல் பதிப்பு விவரம், நூலின் பதிப்பு, பதிப்பித்த ஆண்டு, காப்புரிமையைப் பற்றிய விவரம் ஆகியவைகளைச் சேர்த்துள்ளார். நூற்பட்டியலைத் தொடர்ந்து செய்யாமல் போனதற்குக் காரணம் தெரியவில்லை.

பொதுவாக நூலகங்களில் தரும் விவரங்களைத் தவிர மேற் குறிப்பிட்ட விவரங்களையும் நூற்பட்டியலில் சேர்க்கவேண்டு மென்கிற உந்துதல் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. இவ்வகையான விவரங்கள் இடம்பெற்ற ஒரே நூற்பட்டியல் சென்னை மாகாண அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட அரசாணை இதழில் வெளிவந்த நூற்றொகை இணைப்பு தான்(Fort St. George gazette, supplement to catalogue of books). இவ்வாறான நூற்பட்டியலை ஜான் மர்டாக் கூட செய்யவில்லை.

இத்தகைய விவரங்களைக் கொண்டுதான் தன்னுடைய தொகுப்பைத் தொடர்ந்து ஆய்வு செய்யவும், தொகுப்பில் என்னென்ன நூல்கள் விடுபட்டுள்ளதை அறிய முடியும் என்பதை உணர்ந்து இருந்தபடியால் இவற்றைத் தன்னுடைய நூற்பட்டி யலில் சேர்த்துள்ளார். நூற்பட்டியலில் “யாரிடமிருந்து வாங்கியது” என்ற விவரத்திலிருந்து பழைய புத்தகக் கடைகளில் அதிகமான நூல்கள் இவர் வாங்கியதாகத் தெரிகிறது. இவ்விவரத்தை “OBS (old book shop)” என்று குறித்துள்ளார். தேவகோட்டை, காரைக்குடியில் உள்ள பழைய புத்தகக் கடைகளிலிருந்து வாங்கிய குறிப்புகளையும் இதில் பதிவுசெய்துள்ளார். இத்தகவல்கள் ரோஜா முத்தையா வழக்கமாக நூல்களைப் பழைய புத்தகக் கடைகளிலும் வாங்கியிருக்கிறார் என்பதை உறுதிப்படுத்துகிறது.

 இப்பதிவேடுகளில் பதிவுசெய்வதற்கு முன் ரோஜா முத்தையா அவர்கள் நூல்களை முழுமையாகச் சோதித்துப் பிறகுதான் பதிவு செய்துள்ளார். இப்பதிவேடுகளில் தலைப்புப் பக்கம் இல்லாத நூல்களுக்கு “வேறு விவரம் எதுவும் தெரியவில்லை” என்றும் நூல் கள் முழுமையாக இல்லாத போது “9வது பக்கத்திலிருந்து தான் இருக்கிறது” என்றும் பக்கங்கள் காணாமல் போனவற்றிற்கான குறிப்புகளையும் காணலாம். மோசமான பக்கங்கள், கிழிந்த பக்கங்கள், பூச்சி அரித்த நூல் என நூல்களின் நிலைமைபற்றிய குறிப்புக்கள்கூட உள்ளது. இத்தகவல்கள் ஆய்வாளர்களுக்கு மட்டுமல்லாமல் நூலகக் காப்பாளர்களும் அறிய வேண்டிய தகவலாகும். ஏனென்றால் நூல் பாதுகாப்பிற்கு இது முக்கியம். இதுமட்டும் இல்லாமல் நூல்களை முறையாகச் சோதித்து வந்துள்ளார். பூச்சிகள் துளையிட்ட இடத்தை வட்டமிட்டு எந்த ஆண்டில் இவற்றைப் பார்த்தார் என்ற விவரத்தைப் பென்சிலில் எழுதி வைத்துள்ளார்.

 ஆரம்ப காலத்தில் சில நூல்களை விற்பனை செய்துள்ளார். அவ்விவரத்தையும் இப்பதிவேடுகளில் சிகப்பு மையில் குறித்துள் ளார். தன்னுடைய வரவு செலவு கணக்குப் புத்தகங்களிலும் நூல்களை விற்பனை செய்யப்பட்டு வரும் வருமானத்தையும் சிகப்பு மையிலே குறித்துள்ளார்.

 1994இல் நிறுவனமயமாக்கப்பட்ட பின் நவீன நூலகவியல் கோட்பாடுகளைக் கொண்டு நூற்பட்டியலை உருவாக்குகிறது ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம். ரோஜா முத்தையாவின் நூற்பட்டியலை நூலகத்தின் கணினி நூற்பட்டியலோடு ஒப்பிடும் போது, இவர் பயன்படுத்தியுள்ள விவரங்கள் எல்லாம் தற்போதும் பயன்படுத்தப்படுகிறது. உலகளாவிய நூலகங்கள் பயன்படுத்துகிற MARC 21 வரைமுறையில் ரோஜா முத்தையா நூற்பட்டியலில் உள்ள விவரங்கள் சரியாகப் பொருந்துகிறது. நிறுவப்பட்ட நாள் முதல், அட்டைகளில் நூற்பட்டியலைச் செய்யாமல், நேரடியாக கணினியில் தமிழிலே நூற்பட்டியலைச் செய்த முதல் நூலகம் இதுதான். கணினித் தொழில்நுட்ப வளர்ச்சியின் ஆரம்பக் காலத்திலே தமிழில் கணினி நூற்பட்டியலை செய்யக்கூடிய வசதியை இந்நூலகத்தில் தான் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்டது. CDS/ISIS என்னும் மென்பொருளில் தகவல் தளத்தை வடிவமைத்து Anglo American Cataloguing Rules நூற்பட்டியலுக்கான விதிகளைப் பயன்படுத்தி, கணினியில் நூற்பட்டியல் உருவாக்குவது தொடர்பான MARC 21 format for bibliographic dataவில் கணினி நூற்பட்டியல் இங்கு உருவாக்கப்படுகிறது.

நடுவண் அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் Centre for Development of Advanced Computing (C-DAC)இல் ஆராய்ச்சி செய்து உருவாக்கிய Graphics and Intelligence based Script Technology (GIST) தொழில்நுட்பத்தைக் கொண்டு கணினியில் தமிழிலே பதிவு செய்யப்படுகின்றன. இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தமிழில் பதிவு செய்யப்பட்ட விவரங்களை இந்தியாவிலுள்ள முக்கியமான மொழிகளுக்கும் எளிதில் மாற்றிப் படிக்கக்கூடிய வசதி உள்ளது. தமிழிலும் மற்றும் தமிழ் எழுத்துக்கு இணையான ரோமன் எழுத்துக்களில் குறியீடுகளோடு இப்பட்டியலைப் படிக்க வும், அவற்றைப் படி எடுக்கவும் வசதி இதில் உண்டு. இந்நூலகத் தில் உருவாக்கப்படும் நூற்பட்டியல்கள் சர்வதேசத் தரத்துடன் உருவாக்கப்படுகின்ற காரணத்தால் இத்தொகுப்பில் உள்ள நூல்களின் விவரங்கள் உலகம் முழுவதும் உள்ள ஆய்வாளர்கள் பயன்படுத்திக்கொள்ள முடிகிறது. இப்பட்டியலை உலகிலுள்ள எல்லா நூலகப் பட்டியலோடு எந்தவித சிக்கலுமின்றி இணைக்க முடியும். உலகில் பெரிய தகவல்தளத்தைக் கொண்டுள்ள OCLC என்னும் அமெரிக்க நிறுவனத்தின் WorldCat databaseஇல் நூல்விவரங்களைச் சேர்த்துவருகிறது.

இதழ்களுக்கு அடைவு (Indexing)

 பத்திரிகைகளில் வந்த கட்டுரைகளை வகைப்படுத்தி அவற்றிற்கான அடைவுகளையும் உருவாக்கியிருக்கிறார். கட்டுரையின் தலைப்பு, ஆசிரியர், பத்திரிகையின் பெயர், தொகுதி, ஆண்டு மற்றும் பக்கம் இவைகளைப் பதிவுசெய்துள்ளார். இதையும் 1954 லிலேயே செய்துள்ளதாகத் தெரிகிறது. இலக்கியம், சமயம், விவசாயம், மூலிகை, ஆரோக்கியம், சங்கீதம், விஞ்ஞானம், அரசியல், சிற்பம், கலை, மருத்துவம், பெரியார், விஷகடி, கதைகள், யாத்திரை, நூல்கள், பத்திரிகைகள் இன்னும் பல பிரிவுகளில் பத்திரிகையில் வந்த விவரங்களைப் பதிவு செய்துள்ளார். சில துறைகளுக்குப் பதி வேடுகளில் ஒன்று இரண்டு பக்கங்களில் பதிவுசெய்தும் முக்கியமான துறைகளுக்குத் தனியான பதிவேடுகளில் பதிவும் செய்துள்ளார்.

 இந்நூலகம் நிறுவனமாக்கப்பட்டபின் தொடர்ந்து இப்பணிகளை மேற்கோண்டு வருகிறது. தலைப்பு வாரியாக இல்லாமல் ஒவ்வொரு இதழும் அடைவுகள் செய்யப்பட்டு வருகின்றன. கட்டுரைகளை மட்டுமே பட்டியலிடாமல், ஒவ்வொரு இதழில் வரும் விளம்பரங்கள், துணுக்குகள், செய்திகள், மதிப்புரை, பதிப்புரை, கடிதங்கள் என கூடுதலான விவரங்களை உள்ளடக்கி அடைவுகள் தயாரிக்கப்படுகின்றன.

துறைச்சார்ந்த நூற்பட்டியல்

நூல் விவரங்களோடு வேறு சில விரிவான தகவல்களைக் குறிப்பெடுத்து எழுதும் பழக்கம் ரோஜா முத்தையாவிற்கு இருந்தது. பாரதியார், பாரதிதாசன் எழுதிய நூல்கள் மற்றும் திருவிளை யாடற்புராணம் ஆகிய பற்றிய விவரங்களைப் பதிவு செய்துள்ளார். இது அவருக்கு அதிக ஈடுபாடுள்ள துறைகளாக இருக்கக்கூடும். முன்னுரை, பதிப்புரை, பொருளடக்கம் ஆகியவற்றிலுள்ள விவரங்களைத் தன்னுடைய பாணியில் பதிவு செய்திருக்கிறார். குறிப்பிட்ட ஒரு நூலின் பல்வேறு பதிப்புகளை ஒப்பிட்டு அவைகளைப் பற்றிய செய்திகளையும் இப்பதிவுகளில் குறிப்பிட் டுள்ளார்.

பாரதியார், பாரதிதாசன் எழுதிய நூல்கள், இவர்களைப் பற்றி மற்றவர்கள் எழுதிய நூல்கள், இவர்களின் வாழ்க்கை சரிதம், படைப்புகளைப் பற்றிய திறனாய்வு நூல்கள் மற்றும் பத்திரி கைகளில் இவர்களைப் பற்றி வந்த கட்டுரைகள் ஆகியவற்றை எல்லாம் ஒரே பதிவேட்டில் பதிவுசெய்து வைத்துள்ளார். இது ஆய்வாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

நூல்களின் எண்ணிக்கையை மட்டும் சரிபார்த்து வைப்பது நூலகர்களின் கடமையல்ல. மற்ற நூலகத்திலிருந்து மேன்மைப் படுத்த நூலகங்கள் புதுப்புது யுக்திகளைக் கையாள வேண்டும். இது நவீன நூலகவியல் துறையில் மேற்கொள்ளப்பட்டுவரும் ஒரு யுக்தியாகும். இந்த முறையை ரோஜா முத்தையா நூலகத்தில் ஒரு குறிப்பிட்ட நூலின் பல பதிப்புகளை நுண்படமெடுக்கும்போது கடைபிடிக்கப்படுகிறது. பதிப்புகளை ஒப்பிட்டுப் பார்த்து, முதற்பதிப்பையும் கடைசியாக வெளிவந்த பதிப்பையும் முழுமை யாக நுண்படமெடுக்கப்படும். அதன்பிறகு இதற்கிடையில் வெளிவந்த பதிப்புகளில் இருக்கும் முன்னுரை, பதிப்புரை மற்றும் வேறுபாடுகள் உடைய இதர விவரங்கள் மட்டுமே நுண்பட மெடுக்கப்படும். இம்முறைக்கு Coda என்று பெயர்.

இந்த நூற்பட்டியலைக் குறித்த விழிப்புணர்வு அவருக்கு மட்டும் எப்படி இருந்திருக்கக்கூடும் என்று எண்ணும்போது மிகவும் வியப்பாகத்தான் உள்ளது. இவர் யாரிடம் கற்றார் என்பதைக் குறித்த விவரம் ஏதும் கிடைக்கவில்லை. ஆகையால் தன்னிச்சையாகத்தான் செய்திருக்கவேண்டும். இந்த பட்டியலிடும் முறையினை யாரேனும் கற்றறிந்துள்ளாரா என்றால் அதுவும் இல்லை. இதைப்பற்றி பலர் பேசியதுண்டு, ஆனால் தொகுப்பு களைச் சேகரிக்கும் ஆர்வத்தை மட்டும் உள்வாங்கியுள்ளனர். நூலக மேலாண்மையின் ஓர் அங்கமான பட்டியலிடுதல் குறித்த அனுபவத்தைத் தருவித்துக்கொண்டதாகத் தெரியவில்லை.

தெற்காசிய ஒருங்கிணைந்த நூல்விவரணப்பட்டியல் (South Asia Union Catalogue)

தெற்காசிய ஒருங்கிணைந்த நூல்விவரணப்பட்டியல் ஒரு வரலாற்று நூற்றொகை. ஆப்கானிஸ்தான், வங்காள தேசம், பூட்டான், பர்மா, இந்தியா, மாலத் தீவுகள், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் 1556ஆம் ஆண்டிலிருந்து எல்லா மொழி களிலும் அச்சான நூல்கள் மற்றும் இதழ்களைப் பற்றிய விவரங்கள் இதில் இடம்பெறுகின்றன. ஏற்கனவே பல்வேறு நூலகங்கள் தெற்காசிய மொழியில் உருவாக்கியுள்ள கணினி நூற்பட்டியல் களும் இதோடு இணைக்கப்படும். இத்தகவல் தளம் ஒரு வரலாற்று நூற்றொகை மாத்திரமல்லாமல் எந்த நூலகத்தில் என்ன நூல்கள் உள்ளன என்பதைப் பற்றிய விவரத்தைத் தரும் ஓர் ஒருங்கிணைந்த நூல்விவரணப்பட்டியலாகச் செயல்படும். உலகிலுள்ள முக்கி யமான நூலகங்களோடு இணைந்து இப்பணி மேற்கொள்ளப்படு கிறது. தெற்காசியாவிலுள்ள நூலகங்கள் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தோடு இணைந்தும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலுள்ள நூலகங்கள் சிகாகோ பல்கலைக்கழகத்தோடு இணைந்தும் செயல்படுகிறது.

இதுவரை தமிழ்நூல் விவர அட்டவணை, சென்னை மாகாண அரசாங்க அரசு இதழின் இணைப்பான நூல் விவர அட்டவணை மற்றும் மைசூர் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட கன்னட நூல் விவர அட்டவணைகளைக் கணினிமயப்படுத்திய நூற்பட்டிய லாக மாற்றம் செய்யப்பட்டு இத்தகவல் தளத்தில் சேர்க்கப்பட்டுள் ளது. இணையதளத்தில் காண http://sauc.uchicago.edu/about.html

நூலகத்தின் தொகுப்பை ஆய்வாளர்கள் தெரிந்துகொள்ளுவதற்கும் அத்தொகுப்பை வைத்துக்கொண்டு ஆய்வுகள் மேற்கொள்ளவும் நூற்பட்டியல்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய நூற்பட்டியல்கள் இல்லையென்றால் ஆய்வாளர்களின் ஆய்வு காலத்தில் அதிகமான நேரங்கள் நூல்களை தேடுவதிலே வீணாகப் போய்விடும். ஆய்வாளர்கள் நூற்பட்டியலில் கிடைக்கும்/கிடைக் காத நூல்களைக் குறித்தான விவரங்களை உடனே தெரிந்து கொள்ளமுடியும். நூற்பட்டியல் இல்லாதபோது இவ்விவரத்தைத் தெரிந்துகொள்ள நூலகத்தொகுப்பிலுள்ள நூல்களை ஒவ்வொன் றாகத் தேடவேண்டிய கட்டாயம் உள்ளது. நூற்பட்டியல்கள் மூலமாக நூலின் பதிப்பு வரலாற்றையும் ஒரு துறையில் வெளிவந்துள்ள நூல்களைப்பற்றிய விவரங்களை அறிந்து ஆய்வுகளை மேற்கொள்ள உதவியாக இருக்கும். உலகளாவிய நூற்பட்டியல்களின் வளர்ச்சியை நாம் பார்க்கும் போது நம் நாடு மிகவும் பின்தங்கியே உள்ளது. இந்தியா தொழில் நுட்பத்தில் அபார வளர்ச்சி கண்டுள்ளது, ஆனால் இன்னும் இந்திய தேசத்திற் கான முழுமையான நூற்பட்டியல் உருவாக்கப்படவில்லை என்பது வருத்தமான ஒரு காரியமே.

(இவர் ரோஜா முத்தையா நூலகத்தினை சென்னையில் தொடங்கியபோதே இவ்வமைப்பில் சேர்ந்தவர். இன்றளவில் தமிழ்த் தரவுகளை அதிக அளவில் பட்டியலிட்ட தமிழர். நூற்பட்டியலில் ஆசிரியர் மற்றும் துறைப் பெயர்களை முறைமைப்படுத்த அமெரிக்க காங்கிரஸ் நூலகத்தில் (வாஷிங்டன் டி. சி.) அங்கீகாரம் பெற்ற இரண்டு ஆசிரியர்களில் ஒருவர். தற்போது இந்நூலகத்தில் உதவி இயக்குநராக உள்ளார்.)

Pin It