கோவை வங்கி ஊழியர் சங்கக்கட்டிடத்தில் 13.6.2010 அன்று 'இலங்கை இன்று' என்ற தலைப்பில் அ.மார்க்ஸ் சிறப்புரை ஆற்றுகிறார் என்று ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது. கூடவே அவரது இலங்கைப் பயண அனுபவங்கள் குறித்த கலந்துரையாடலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தியப் பொதுவுடமைக் கட்சியோடு (சி.பி.அய்.) தொடர்புடைய 'சங்கமம்' என்ற அமைப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. கூட்டணி வித்தியாசமாக இருக்கவே, சென்று பார்ப்பது என்று முடிவு செய்தேன்.

 அரங்கத்தில் சுமார் 40 பேர் இருந்தனர். வரவேற்புரை சடங்குகளெல்லாம் முடிந்த பிறகு அ.மார்க்ஸ் பேச எழுந்தார். உடனே கூட்டத்திலிருந்த ஒரு 15 பேர் எழுந்து “கோவை ராணுவ வாகன எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது போலீஸ் அத்துமீறல்களை ஆதரித்த, பாதிக்கப்பட்டவர்களைக் கிண்டல் செய்த அ. மார்க்ஸே பேசாதே” என்று முழக்கமிட்டனர். அ.மார்க்ஸுக்கு “ராஜபக்ஷேவின் நான்காவது சகோதரன்” என்ற பட்டமும் வழங்கினர். (அதுவரை கோவையில் அ. மார்க்ஸுக்கு “நோட்ஸ் வாத்தி” என்ற பட்டப்பெயர் மட்டும்தான் நிலவி வந்தது). “அ.மார்க்ஸ் ஒரு இலக்கியவாதியாக கூட்டம் நடத்த வரவில்லை. கொலைகார இலங்கை அரசை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்திருக்கிறார். எனவே அவரைத் தடுக்க எங்களுக்கு உரிமை உண்டு” என்று எதிப்பு தெரிவித்தவர்கள் கூறினர்.

 ஒரு சி.பி.அய் தோழர் எதிப்பு தெரிவித்தவர்களில் ஒருவரைப் பிடித்துத் தள்ளினார். ஒரு 20 நிமிடம் அரங்கம் அலோகல்லோலப் பட்டது. பின்பு காவல்துறை வரவழைக்கப்பட்டது. எதிர்ப்பு தெரிவித்தவர்கள் அ.மாவையும் இலங்கை அரசையும் எதிர்த்து முழக்கமிட்டபடி வெளியேறினர்.

 நான் அ.மார்க்ஸ் பேச்சைக் கேட்பது என்று முடிவுசெய்தேன். என்னைப் போலவே புரட்சிகர இளைஞர் முன்னணி (பு.இ.மு.) தோழர்களும் அமர்ந்திருந்தனர்.

 அ.மார்க்ஸ் பேசத்தொடங்கினார். 'புத்தளத்திலிருந்து இஸ்லாமியர்களை புலிகள் வெளியேற்றியது, காத்தான்குடியில் இஸ்லாமியர்களைக் கொன்ற‌து, இலங்கை அருந்ததியர்கள் தங்கள் வீடுகளில் பிரேமதாஸா படம் வைத்திருப்பது, பிரேமதாஸா அருந்ததியர்களுக்கு செய்த நன்மைகள், தற்போது தலித்துகள் இன்னொரு தலித்தான டக்ளஸ் தேவானந்தாவை ஆதரிப்பது(?) எப்படி, புலிகளால்தான் முள்ளிவாய்க்கால் படுகொலைகள்' என்றெல்லாம் விலாவாரியாக சுமார் 1 1/2 மணிநேரம் பேசினார்.

 பின்பு கேள்வி கேட்க விரும்புபவர்கள் கேட்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

 நான் எழுந்து பின்வரும் கேள்விகள் கேட்டேன்.

1.   முஸ்லீம்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கும் கிழக்கில் படுகொலை செய்யப்பட்டதற்கும் நேரடிக் காரணமான கருணாவும் பிள்ளையானும் இன்னும் இலங்கையில்தான் இருக்கிறார்கள். இப்படுகொலைகள், அநியாயங்களுக்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்பதுதானே நியாயம்? இலங்கை சென்றபோது இதை வலியுறுத்தி எங்காவது பேசினீர்களா?

2.   புலிகள் மீது அ.மார்க்ஸ் வைத்த விமர்சனங்கள் இந்தியாவிலுள்ள இஸ்லாமிய போராளி இயக்கங்களுக்குப் பொருந்தாதா? அப்பாவி மக்களைப் புலிகள் கொன்றார்கள் என்ற காரணத்தால் அவர்களை எதிர்ப்பதாகக் கூறும் நீங்கள், அப்பாவிப் பொதுமக்கள் புழங்கும் இடங்களில் குண்டுகள் வெடிக்கச் செய்த இஸ்லாமியப் போராளி இயக்கங்களை அப்படி அணுகுவீர்களா? கோவை குண்டு வெடிப்பிற்குப் பிறகு இஸ்லாமியர்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டபோது அதற்கு அல்-உம்மாதான் காரணம் என்று எப்போதாவது கூறியிருக்கிறீர்களா?

3.   சிறைபிடிக்கப்பட்ட பல புலிகள் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்படுவதும், இறந்த பெண்புலிகளின் உடல்கள் சிதைக்கப்படுவதும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதும் இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டதும் வெளியாகியுள்ளது. ராஜபக்ஷேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்கவேண்டும் என்ற டப்ளின் டிரிபியூனலில் கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது. நீங்கள் இலங்கையிலோ அல்லது இந்தியாவிலோ இதுகுறித்துப் பேசியிருக்கிறீர்களா?

4. ஈழத்தில் போர் உக்கிரமாக நடந்த காலகட்டத்தில் நீங்கள், பல ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு மாகாணத்திலிருந்து புலிகளால் விரட்டப்பட்ட இஸ்லாமியர் குறித்து ஒரு உண்மையறியும் குழு செல்லவேண்டும் என்று ஏற்பாடுகள் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. சிபிசிஎல் (CPCL) அமைப்பை அக்குழுவில் பங்கு கொள்ள அழைத்ததாகவும் கூறுகிறார்கள். அவர்கள் அப்போதைய நிலையில் அதற்குப்பதிலாக வன்னி போர்க்களங்களில் அரசப்படைகளின் தாக்குதலால் பாதிக்கப்பட்டுக்கொண்டிருந்த மக்கள் குறித்து உண்மையறியச் செல்லலாம் அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று கேட்டதாகவும் தாங்கள் இதை உறுதியாக மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. (அ.மார்க்ஸ் இதை ம‌றுத்தார்.)

5.   கோவை ராணுவ வாகன எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு பல இயக்கத் தோழர்களும் சம்பவத்தோடு தொடர்பே இல்லாத பொதுமக்களும் போலீசாரால் கடும் துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டனர். மனித உரிமைப் போராளி என்று சொல்லிக் கொள்ளும் நீங்கள் இச்சம்பவம் தொடர்பாக என்ன எதிர்வினை ஆற்றினீர்கள்?

6. அந்த இராணுவ வாகனங்களில் இலங்கைக்கு ஆயுதங்கள் ஏற்றிச் செல்லப்படவில்லை என்று கூறினீர்கள். ஏதாவது கள ஆய்வு செய்து இதைக் கண்டுபிடித்துச் சொன்னீர்களா? ஆம் எனில் ஏன் அந்த முடிவுகளை வெளியிடவில்லை? இல்லை எனில் ஆய்வு இல்லாமல் ஆதாரம் இல்லாமல் அப்படி சொல்வது சரியா? பேராசிரியர் பதிலளிக்க வேண்டும்.

என் கேள்விகளைக் கேட்டுவிட்டு அமர்ந்தேன்.

பு.இ.மு தோழர் ஒருவர் எழுந்து “சாதாரண மனிதர் ஒருவர் ‍ ஈழ ஆதரவாளர் - இலங்கையில் நீங்கள் சென்ற இடங்களுக்கு எல்லாம் செல்ல முடியுமா?” என்று கேட்டார்.

கூட்டத்தில் அமைதி நிலவியது.

பழைய படங்களில் சிவாஜி கணேசன் அடிக்கடி வேதனை, கையாலாகாத்தனம், பெரியமனிதத் தோரணை எல்லாம் கலந்த ஒரு முகபாவம் காட்டுவார். அது போன்ற ஒரு முகத்தோற்றத்தில் அ.மார்க்ஸ் வாய்திறக்காமல் உட்கார்ந்திருந்தார். கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த தோழர்களில் ஒருவர் அ.மா அருகில் சென்று அவர் முகத்தைக் குளோசப்பில் உற்றுப் பார்த்தார். எந்தப் பதிலும் தெரியாததால் அவரே மைக் பிடித்து பின்வரும் பதில்களை அளித்தார்.

1. நேரம் ஆகிவிட்டதால் கூட்டத்தை முடித்துக் கொள்ளலாம்.

2. அ.மார்க்ஸின் புத்தகங்களைப் படித்து பதில் தேடிக் கொள்ளலாம்.

இரண்டாவது பதிலைக் கேட்டு அ.மாவுக்கு என் மேல் ஏன் இத்தனை கோபம், ஏன் இவ்வளவு பெரிய தண்டனை என்று மிகுந்த மனவருத்தம் அடைந்தேன்.

சிறுவயதிலிருந்தே கோனார் நோட்ஸ், உஷா கைய்ட் போன்ற நோட்ஸ்கள், கைடுகள் மீது எனக்கு அலர்ஜி உண்டு. அதே போன்று வெளிநாட்டு எழுத்தாளர்களுக்கு அ. மார்க்ஸ் போடும் நோட்ஸ்கள் மீதும் அலர்ஜி உண்டு. சரி எனக்கு இருக்கும் நோட்ஸோபோபியா தோழர் அ. மார்க்ஸுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று மனதை தேற்றிக்கொண்டு மீண்டும் அவரிடம் சில விளக்கங்கள் கேட்கத் தொடங்கினேன்.

“மணி இப்போது 12.50 தானே ஆகிறது. நாம் இருப்பது வங்கி ஊழியர்சங்கக் கட்டிடம்தானே. கீதா ஹால் சந்திலிருக்கும் லாட்ஜுகளில்தானே நேரம் முடிந்த அடுத்த நிமிடம் பெட்டிப் படுக்கைகளை தூக்கி வெளியில் வீசி விடுவார்கள். வங்கி ஊழியர் சங்கக் கட்டிடத்தில் 3 மணிவரை கூட்டங்கள் நடைபெறுவதை நானே பார்த்திருக்கிறேன். அப்படியே நெருக்கடி இருந்தாலும் வெளியில் நின்றோ தேநீர் அருந்திக்கொண்டோ அவர் பதிலளித்தால்கூட நான் கேட்டுக்கொள்கிறேன். பு. இ. மு தோழரும் மற்ற தோழர்களும் இதை மறுக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

நோட்ஸ்களைப் பொருத்தவரை மன்னிக்கவும் புத்தகங்களைப் பொருத்தவரை அ.மார்க்ஸ் புத்தகம் விற்க வரவில்லை. மேடையில்தான் பேசியிருக்கிறார். நீங்களும் கலந்துரையாடல் என்றுதான் அழைத்திருக்கிறீர்கள். இது உபன்யாசமும் அல்ல, கேட்டவுடன் பரவசமடைந்து திரும்பிச்செல்ல” என்றும் கூறினேன்.

திரும்பவும் குளோசப், திரும்பவும் அதே முகபாவம் ....

இப்போது இன்னொரு தோழர் தலையிட்டு கணீரென்ற குரலில் கூறினார். “தோழர் கார்க்கி அவர்களே! அவர் அவருடைய கருத்தைச் சொன்னார். நீங்கள் உங்கள் கருத்தைச் சொன்னீர்கள். அதோடு விடாமல் யாரும் தன்னுடைய கருத்தை மற்றவர் மீது திணிக்க வேண்டியதில்லை. அது கருத்துச் சுதந்திரமல்ல‌”.

நான் கூறினேன், "அ.மார்க்ஸுக்கு ஒன்றும் க‌ருத்துச் சுத‌ந்திர‌ம் குறைந்துவிட‌வில்லை. பிட‌ல் காஸ்ட்ரோவையும், சே குவேராவையும் கொச்சைப்ப‌டுத்தி லீனா ம‌ணிமேக‌லை எழுதிய‌ கவிதைக‌ளை ஆத‌ரித்து அவரால் பேசமுடிகிறது. அதே மார்க்சிய‌ மூல‌வ‌ர்க‌ளை த‌ங்க‌ள‌து வ‌ழிகாட்டிகளாக‌க் கொண்ட‌ தோழ‌ர்க‌ளின் கூட்ட‌த்திலும் அவரால் பேசமுடிகிறது. அ.மார்க்ஸுக்கு க‌ருத்து சுத‌ந்திர‌ம் இருப்ப‌தால்தான் இதை அவ‌ரால் செய்ய‌முடிகிறது."

ஆனால் அதன்பின்பும் அ.மார்க்ஸ் அசையாததால், வேறு வழி இல்லாத நிலையில் கூட்டம் இனிதே சற்றேறக்குறைய முடிந்தது.

அ மார்க்ஸ் பதிலளிக்க மறுத்ததற்கு “இவர்களுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க வேண்டியதில்லை” என்ற ஆணவம்தான் காரணம் என்றால் அவர் மெக்காலே கல்விமுறையின் அற்புதமான வார்ப்பு என்றாகிறது. அல்லது முறையான ஆய்வுகளோ தரவுகளோ இல்லாத காரணத்தால் பதிலளிக்கவில்லையென்றால் சக குடிமக்களிடம் “நான் பேசுவதைக் கேள்” என்று சொல்லும் தகுதி இல்லையென்றாகிறது.

இது தவிர இன்னொரு காரணமும் தமிழ் உணர்வாளர்களால் சொல்லப்படுகிறது. “அ மார்க்ஸ் புலியெதிர்ப்புப் பிரச்சாரம் செய்கிறார். கேள்விகளுக்கெல்லாம் அவர் பதில் சொல்ல மாட்டார்” என்கிறார்கள். இதில் உண்மை இருப்பதாகவே தோன்றுகிறது.

இது தவிர கூட்டத்தில் நான் கேட்க அனுமதிக்கப்படாத மற்ற கேள்விகளையும் முன் வைக்கிறேன். மேற்குறிப்பிட்ட கேள்விகளோடு இவற்றுக்கும் ரிட்டயர்ட் பேராசிரியர் பதிலளிப்பார் என்று நம்புகிறேன்.

ரிட்டயர்ட் பேராசிரியர் தான் தலித் ஆதரவாளரென்றும் இஸ்லாமியரின் காவலரென்றும் பிம்பங்களை கட்டமைக்க விரும்புகிறார்.

1. பங்களாதேஷ் உருவாவதற்கு முன்பு லட்சக்கணக்கான அகதிகள் மேற்கு வங்காளத்துக்கு வந்தனர். உயர்சாதி அகதிகள் தங்கள் சாதியினரால் வரவேற்கப்பட்டு நல்ல இடங்களில் குடியமர்த்தப்பட்டனர். தலித்துகள் சட்டீஸ்கருக்கும் ஒரிசாவுக்கும் கொண்டு செல்லப்பட்டு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டனர். 1978 தேர்தலின்போது சிபிஎம் கட்சியினர் தலித் அகதிகளுக்கு வங்காளத்தில் இடம் அளிப்பதாக பிரச்சாரம் செய்தனர். சிபிஎம் கட்சி வென்று ஜோதிபாசு தலைமையில் ஆட்சி அமைந்தது. இந்த உறுதிமொழியை நம்பிய பல்லாயிரம் தலித்துகள் மேற்கு வங்கத்துக்கு வந்து சுந்தரவனக்காடுகளில் உள்ள மொரிஜபி என்ற ஆளில்லாத தீவில் குடியேறினர். சிபிஎம் கட்சி மொரிஜபிப் தீவு சுந்தரவனக்காடுகள் புலிகள் சரணாலயத்தின் ஒரு பகுதி, மக்கள் வெளியேறவேண்டுமென்று உத்தரவிட்டது. அதை எதிர்த்து எந்த ஆயுதமும் ஏந்தாமல் அமைதிவழியில் போராடிய மக்கள்மீது 1979 ஆம் ஆண்டு மே மாதம் தன் கட்சி குண்டர்களையும் போலீசையும் ஏவி பெரும் தாக்குதல் தொடுத்தது. பல்லாயிரம் மக்கள் கொல்லப்பட்டனர். மிஞ்சியவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு படுமோசமான முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டு வந்த இடங்களுக்கே திருப்பி அனுப்பட்டனர். நேரடியாக கொல்லப்பட்டவர்கள் மற்றும் முகாம்களில் நோய்களால் இறந்தவர்களின் எண்ணிக்கை 4700க்கும் மேலிருக்கும் என்று கணக்கிட்டுள்ளனர்.

வரலாற்றில் தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்ட மிகப் பெரிய படுகொலை இது. மொரிஜபித்தீவு படுகொலை அல்லது சுந்தரவனப்படுகொலை என்று அழைக்கப்படுகிறது.

ரிட்டயர்ட் பேராசிரியர், ஒரிஜனல் மார்க்ஸை கேவலப்படுத்தும் ஆபாசக் கவிதைகளை மேன்மைப்படுத்த சிபிஎம் கட்சியினரோடு இணைந்து போராடுகிறார். கூச்சமே இல்லாமல் அவர்களோடு மேடைகளில் வீற்றிருக்கிறார். சுந்தர வனப்படுகொலையைப் பற்றி எங்கேயும் எப்போதும் எதுவும் பேசியதில்லை. உங்களை தலித் ஆதரவாளர் என்று எப்படி ஏற்றுக்கொள்வது?

2. நந்தி கிராமில் ஏழை விவசாயிகளின் நிலங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு சிபிஎம் பிடுங்கிக் கொடுத்தபோது பாதிப்பிற்கு ஆளானவர்களில் பலர் ஏழை இஸ்லாமிய விவசாயிகள். நீங்கள் உலகமயமாக்கலும் எஸ் இ இசட்டும் (SEZ) தலித்துகளுக்கு விடுதலை அளிக்கும் என்று இதே கோவையில் பேசினீர்கள். மேற்கு வங்கத்தில் சிபிஎம்மின் உலக மயமாக்கல் கொள்கையால் நேரடியாக பாதிப்பிற்கு ஆளான இஸ்லாமியர்களின் நிலை குறித்து வாயே திறக்கவில்லை. அப்படியானால் உங்கள் இஸ்லாமிய ஆதரவு என்பது புலிகளை ஒழிக்க ஒரு கருவி மட்டும்தானா?

3. இயக்கங்கள் (இந்திய மாவோயிஸ்ட்டுகள், எல்டிடிஇ மட்டும்) முன்னிறுத்தும் ஆயுதப்போரட்டங்களால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று அண்மைக்காலமாக பேசி வருகிறீர்கள். உள்நாட்டுப்போர் உருவாவதற்கான அரசியல் பொருளாதாரக் காரணிகள் குறித்து என்னவிதமான ஆய்வுகள் மேற்கொண்டுள்ளீர்கள்? மற்ற நோட்ஸ்களை அல்ல, களஆய்வுகளையும் ஆய்வுமுடிவுகளையும் எதிர்பார்க்கிறோம்.

4. கோவை இராணுவ லாரி மறிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார்கள் என்று அவதூறாக எழுதினீர்கள். அதை ஆதாரத்துடன் மறுத்து ச.பாலமுருகனும், இரா.முருகவேளும் எழுதியதற்குப் பிறகு, தவறான தகவலை எழுதியதற்காக எங்காவது மன்னிப்போ, வருத்தமோ தெரிவித்தீர்களா?

5. புலிகள் மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தினார்கள் என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்துவருகிறீர்கள். ஒரு வீட்டில் நுழைந்த தீவிரவாதி, அங்கிருப்பவர்களை பிணைக் கைதிகளாகப் பிடித்துவைத்திருக்கிறான். தீவிரவாதியைப் பிடிக்கவேண்டிய காவல்துறை, தீவிரவாதியையும் கொன்று, அவன் கேடயமாகப் பயன்படுத்திய பிணைக்கைதிகளையும் கொன்றால் அதை சரியென்பீர்களா?

6.தெற்காசியாவில் நடந்த மிகப்பெரிய இனப்படுகொலை ஈழத்தில் நடந்ததாகும். இதைக் கண்டிக்காதவர்கள் மனித உரிமை பற்றிப் பேச ஏதாவது தகுதியிருக்கிறதா?

7.இலங்கையில் நுழைவதற்கு சுதந்திரமான மனித உரிமைவாதி எவரொருவருக்கும் அனுமதி மறுக்கப்படும் நிலையில் உங்களுக்கு மட்டும் எப்படி அனுமதி கிடைத்தது? இலங்கை அரசில் உங்களுக்கு இந்த செல்வாக்கு எப்படி ஏற்பட்டது?

பேராசிரியர் இந்த கேள்விகளுக்குப் பதிலளிப்பார் என்றும் என் போன்றோரின் சந்தேகங்களைத் தீர்க்க உதவுவார் என்றும் எதிர்பார்க்கிறேன் 

- மு.கார்க்கி, வழக்குரைஞர், ஒருங்கிணைப்பாளர் - சமத்துவ முன்னணி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It