கடலோர மாவட்டமான கன்னியாகுமரி கடற்கரை 70 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இதன் கரையில் நூற்றுக்கணக்கான மீனவ கிராமங்கள் இருக்கின்றன. சுற்றுலாவுக்கு ஏற்ற கடற்கரைகளை மட்டும் இங்கு காண்போம்.

முட்டம்

குமரியில் இருந்து 40 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கடற்கரை கிராமம் முட்டம். இங்கு ஒரு கலங்கரை விளக்கமும் அமைந்துள்ளது. கன்னியாகுமரியில் இருந்தும் நாகர்கோவிலில் இருந்தும் அடிக்கடி பேருந்துகள் இருக்கின்றன. கன்னியாகுமரி கடற்கரைப் பகுதிகளில் அலையின் வேகம் இங்குதான் அதிகமாக இருக்கும். பாறைகள் நிறைந்து காணப்படும் இந்தக் கடற்கரைக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

சங்குத்துறை கடற்கரை

நாகர்கோவில் நகரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் சங்குத்துறை கடற்கரை அமைந்துள்ளது. இதுவரை கண்டுகொள்ளப்படாமல் இருந்த இந்தக் கடற்கரை சுற்றுலாத்துறை சார்பில் சமீபத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு பொதுமக்கள் வசதிக்கேற்ப தற்போது மாற்றப்பட்டுள்ளது. குழந்தைகள் பூங்கா, பார்வையாளர்கள் குடில்கள் போன்றவை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. உள்ளூர் மக்களால் விரும்பபடும் கடற்கரையாக இது மாறிவிட்டது.

சொத்தவிளை கடற்கரை

கன்னியாகுமரியில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் சொத்தவிளை கடற்கரை அமைந்துள்ளது. இயற்கையாக அமைந்த இந்தக் கடற்கரை குமரிக் கடற்கரைகளிலேயே மிக அழகானது. கடற்கரையோரமாக வாகனங்கள் செல்வதற்கு நேர்த்தியான சாலை அமமக்கப்பட்டுள்ளது. கடற்கரை டிரைவிங் பிரியர்களுக்கு இந்தக் கடற்கரை மிகப்பிரியமானதாக இருக்கும்.

தேங்காய்ப்பட்டிணம் கடற்கரை

நாகர்கோவிலில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரியில் இருந்து 54 கிலோமீட்டர் தொலைவிலும் தேங்காய்ப்பட்டிணம் கடற்கரை அமைந்துள்ளது. இந்தக் கடற்கரையோரமாக ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் வளர்ந்திருப்பது இந்தக் கடற்கரையின் அழகை மேலும் கூட்டுவதாக அமைந்துள்ளது. இங்கு தான் தாமிரபரணி ஆறு கடலில் கலக்கிறது. ஆறு கடலோடு சங்கமிக்கும் கழிமுகப்பகுதி இயற்கை எழில் வாய்ந்தது. இந்தப் பகுதியில் படகுச்சவாரியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் இருந்து இங்கு வர பேருந்துகள் அடிக்கடி இருக்கிறது.

சின்ன முட்டம்

கன்னியாகுமரிக்கு மிக அருகில் அமைந்துள்ள சின்ன முட்டம் கடற்கரைப் பகுதியில் மீன்பிடித் துறைமுகம் அமைந்துள்ளது. இங்கிருந்து ஏராளமான மீன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இறால் மீன்கள் அதிக அளவில் கிடைப்பது இந்தத் துறைமுகத்தின் சிறப்பு.

Pin It