பிரபல பத்திரிகையாளரான மாஜினி 1942 ஆம் ஆண்டில் சி.பா. ஆதித்தனார் துவக்கிய தினத்தந்தி ஏட்டில் ஆசிரியராகப் பணியாற்றியவர். காங்கிரஸ் ஆதரவு மனப்பான்மையைக் கொண்ட அவர் மதுரையில் காங்கிரஸ் மாணவர் இயக்கத்தில் முக்கியத் தலைவராகப் பணியாற்றியவர். மாஜினியின் இயற்பெயர் ரங்கசாமி என்பதாகும். அக்காலங்களில் தீவிரமாகக கம்யூனிஸ எதிர்ப்பாளராக விளங்கினார். அவர் கம்யூனிச எதிர்ப்பாளராக இருந்த போது ‘மாஸ்கோவில் மழைவிழுந்தால் மதுரையில் குடைபிடிப்பார்கள்’ என்றும் கம்யூனிஸ்ட் தலைவர் மாரி மணவாளன் சுட்டுக்கொல்லப்பட்ட போது ‘கம்யூனிஸ்ட் காலிகளுக்கு எமலோகத்தில் சீட்டு’ என்றும் தந்தியில் எழுதியவர். பின்னாளில் கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவாவின் தொடர்பால் கம்யூனிஸ்ட்டாக மாறியவர்.

கருத்து மாறுபாட்டால் தந்தியிலிருந்து விலகிய பின் பல பிரசுரங்களை எழுதியவர். இவர் தந்தியிலிருந்து விலகிய பிறகு தலையங்கம் எழுதுவது தந்தி பத்திரிகையில் நிறுத்தப்பட்டது. இவர் எழுதிய பிரசுரங்களில் ‘கறுப்பும் சிவப்பும்,’ ‘நீயா நானா’ போன்றவை குறிப்பிடத்தக்கவை. தமிழ்நாடு என்ற வார ஏட்டையும் நடத்தியவர். பின்னர் 1950களில் நடுப்பகுதியில் ஜீவாவை ஆசிரியராகக் கொண்ட ஜனசக்தி நாளேட்டின் துணை ஆசிரயராகச் சேர்ந்தார். கம்யூனிஸ்ட் கட்சி தாமரை என்ற இலக்கிய ஏட்டை துவக்கிய போது ஜீவா ஆசிரியராக இருந்தார். மாஜினி தாமரை ஏட்டிற்குப் பொறுப்பாசிரியர் போன்று செயல்பட்டார். 1960களில் நடுப்பகுதியில் அவர் ‘சோவியத் நாடு’ ஏட்டின் பொறுப்பாசிரியராக பணியாற்றினார்.

அந்தப் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு ஏராளமான நூல்களை ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்துள்ளார். திலகர் எழுதிய கீதையின் ரகசியம் உள்ளிட்ட பல நூல்களையும் தமிழாக்கம் செய்துள்ளார். டாக்டர் அம்பேத்கர் தொகுப்பு நூல்களுக்கு தமிழ் மொழியாக்கப் பகுதிக்குப் பொறுப்பாளராக இருந்து செயல்பட்டார். அம்பேத்கரின் பல தொகுப்பு நூல்களுக்கு மேற்பார்வையாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் ஏராளமான விமர்சனக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். 2005 ஆம் ஆண்டு புத்தகம் பேசுது இதழ் நடத்திய உலகப்புத்தகத்தினத்தில் தோழர் மாஜினி கௌரவிக்கப்பட்டார் அவருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

மூத்த பத்திரிகையாளரான மாஜினியின் மறைவிற்கு புதிய புத்தகம் பேசுது இதழ் ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலியையும் செலுத்துகிறது.

Pin It