(மட்டக்களப்பில் நிகழ்ந்த கண்ணாடி முகங்கள் எனும் கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் ஆற்றிய உரை)

இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். இந்த சர்வதேச மகளிர் தினத்திற்கு நானும் என்னுடன் இந்தியாவிலிருந்து வந்திருக்கும் தோழி அனுஷாவும் மட்டக்களப்பில் இருப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறோம். இங்கு எமது கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்பளித்த சூரியா நிறுவனத்திற்கு நன்றி.

‘கண்ணாடி முகங்கள்’ என்கிற கவிதைத் தொகுப்பு, சூர்யாவின் பல வெளியீடுகளில் ஒன்று என்பதை நாம் அறிவோம். இப்போது இக்கவிதை நூலில் உள்ள கவிதைகள் குறிப்பாகக் ‘கவிதை வெளிப்பாடுகள்’, அதிலும் இக்கவிதைகளை உருவாக்கியுள்ள முறை பற்றி சில கருத்துக்களை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன். இந்த ஆக்கப்பூர்வமான வெளிப்பாடுகள், பெண்களிடத்தில்-தெற்காசிய, ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில்- அதிலும் போர் மற்றும் அது சார்ந்த சிக்கல்களில் இருக்கும் சமூகங்களின் வரலாறு விரிந்த தன்மைகொண்டதாக உள்ளது. இதற்கான காரணங்கள் மற்றும் இவற்றின் முக்கியத்துவத்தை நாம் பலவாறாக காணலாம்.

ஒன்று:

பெரும் நம்பிக்கைகளும் வாழ்க்கையும் கனவுகளும் சிதைந்த சூழல்களில் கவிதை மற்றும் அது போன்ற பிற வெளிப்பாடுகள், தினசரி வாழ்க்கையின் பாரங்களைச் சிறிதளவாவது-குறுகிய காலத்திற்காவது குறைக்கிறது என்பதில் ஐயமில்லை. குறிப்பாகப் பெண்களுக்கு, பெரும்பாலும் பொதுவெளியில் இடமின்மையால், இந்தக் காகிதமும் பேனாவும் வார்த்தைகளும் கொடுக்கும் நிம்மதி அனேகம். கழற்றி வைக்கப்பட்ட பாரங்களாகக் கவிதைகள் நம்முன் இருக்கின்றன.

இரண்டு:

நமது கருத்து, எண்ணம், நோக்கம், நாம் காணும் உண்மைகள் ஆகியவற்றை வெளிப்படுத்த ‘வெளி’யில்லாத சூழல்களில் கவிதை போன்ற கலை வெளிப்பாடுகள் சின்னச்சிறு வெளிகளையும், சில வேளை பெரும்‘வெளி’ களையும் உருவாக்கித்தருகின்றன. இந்த வெளியை நாம் ஒரு கணமும் குறைத்து மதிப்பிடலாகாது என்பதை இலங்கையில் வாழும் உங்களுக்கு நான் கூறத்தேவை யில்லை. இந்த வெளியில் உருவாகும் பல உண்மைகளின் வர்ணனைகளை நாம் கணக்கில் கொண்டால் பல விடயங்களை மாற்றியமைப்பதற்கான யோசனைகளும் மாற்றியமைக்க வேண்டும் என்னும் கட்டாயமும் நமக்குள் உருவாகும். சக்தி வாய்ந்த இவ்வெளிப்பாடுகளின் முக்கியத்துவம் சொல்லி மாளாது.

மூன்று:

நாளை வரும் சமுதாயத்திற்கு அளிக்கப்படும் வரலாற்றை நாம் என்றென்றும் தோண்டித் தோண்டிதான் எடுக்க வேண்டியுள்ளது. போர்க்கால வரலாறுகள் ஆட்சி யாளர்களால் மட்டும் எழுதப்படும் சூழலில், மாற்று வரலாறுகளை உருவாக்க வேண்டிய தேவை எமது கடமை. பெண்கள் வாழ்வில்-அன்றாட நிகழ்வுகளில்- ஆண்களால் எழுதப்படும் வரலாறுகளை நாம் தொடர்ந்து மீள்வரையறை செய்ய வேண்டும். இந்த மீள்வரையறை செய்து பகிர்ந்துகொள்ளும் பயணத்தில் கவிதை ஒரு முக்கிய அங்கம் என்பதைத் திரும்பத் திரும்ப அழுத்தமாகச் சொல்ல வேண்டியுள்ளது.

நான்கு:

இந்நூலில் உள்ள கவிதைகள், பலருடன் பகிர்ந்து கொள்ளக் கூடிய ஒரு வடிவமாகவும் உள்ளது. ஒன்றாய்ச் சேர்ந்து கவிதைகளைப் படித்து, ரசித்து, விருப்பு வெறுப்புடன் உணர முடிகிறது. ஒருசில கவிதைகள் அவ்வப்போது பாடல்களாக மலர்ந்து உலகையே மாற்றியமைக்கும் பலமுள்ளவை.

தமிழ்ப்பேசும் மக்களிடையேயும் தெற்காசிய நாடுகளின் பல பகுதிகளிலும் உள்ள ஆழமான, மரபான கவிதை எழுதுதல் மற்றும் பகிர்தலின் ஒரு அங்கமாக இந்தக் கவிதைத் தொகுப்பையும் சூர்யாவின் மற்ற பல கலை வடிவங்கள் சார்ந்த வெளியீடு களையும் நாம் காணவேண்டும். பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில், பல்வேறு செயல்களில் ஈடுபடும் ‘சூர்யா’வின் கலை வெளிப்பாடு சார்ந்த வேலைகளை நாங்கள் வரவேற்கிறோம்; பாராட்டுகிறோம்; மேலும் தொடர வாழ்த்துகிறோம்.

Pin It