தொல்காப்பியம் -பன்முக வாசிப்பு

தமிழ்ச்சூழலில் அண்மைக்காலமாக இலக்கண ஆய்வு, இலக்க நூல் பதிப்பு குறித்தான செயல்பாடுகள் வேகம் பெற்றுவருவதைப் பார்க்க முடிகிறது. இந்தச் செயல்பாட்டுத் தளத்தில் ‘தொல்காப்பியம்-பன்முக வாசிப்பு’ எனும் நூல் புதிய வரவாகும். தமிழ் இலக்கண மரபிலும், புலமை மரபிலும் உச்சநிலையில் வைத்து எண்ணப்படும் தொல்காப்பியம் குறித்து இந்த இருநூற்றாண்டுகளில் முன்னெ டுக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூல்.

இருபதாம் நூற்றாண்டின் மையப் பகுதியில் காலம் குறித்தான ஆய்வுகளும் பிற்பகுதியில் மொழியியல், கோட்பாட்டு ரீதியிலான ஆய்வுகளும் தமிழ்ச்சூழலில் முனைப்பாக நடந்தன. இவ்வாறானப் பன்முகப்பட்ட ஆய்வுத் தளத்தில் தொல்காப்பியம் குறித்து நிகழ்த்தப்பட்ட பன்னிரண்டு ஆய்வுக்கட்டுரைகளைத் தேடித் தொகுத்து பா.இளமாறன் இந்நூலை உருவாக்கியுள்ளார். தமிழ்ச்சமூகம் தொல்காப்பியத்தை இலக்கணப் பிரதியாக மட்டும் பார்க்காது சிந்தனை மரபின், பண்பாட்டின் அடையாளமாகவும் பார்த்து வருகிறது. இதன் விளைவாக, அப்பிரதியின் மீது பலதரப்பட்ட ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அவற்றுள் குறிப்பிட்ட ஆய்வுக் கட்டுரைகளைத் தொகுத்து இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

தொல்காப்பியப் பனுவலின் காலம் அப்பனுவல் உருவாக்கத் தின் தேவை, பனுவலின் அமைப்பு, அவை குறித்த ஆய்வு, மொழிபெயர்ப்பு, பதிப்பு எனும் பன்முகத் தன்மையில் கட்டுரைகள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. தொல்காப்பியப் பிரதியின் பல்பரிமா ணத்தையும் புரிந்துகொள்ளும் வகையில் இத்தொகுப்பு நூல் உருவாக்கப்பட்டுள்ளமை கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இலக்கணம் குறித்த தேடலில் ஈடுபடும் ஆய்வாளனுக்கும் வாசிப்பாளனுக்கும் இத்தொகுப்பு நூல் ஒரு முதன்மைத்தரவாக இருந்து உதவும். 

சீனாவின் முற்றுகையில் இந்தியா

2009 மே 16, 17, 18 ஆகிய நாட்களில் சிங்களப் பேரின இராணுவ அரசாங்கம் இருபதனாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்பேசும் மனிதர்களைக் கொலைசெய்து முடித்தது. மூன்று லட்சம் தமிழ் பேசும்மனிதர்கள் சொந்தமண்ணில்அகதிகளாக்கப்பட்டு அவதியுறுகின்றனர். இந்தக்கொடுமைக்குப் பின்புலமாக இந்தியா, சீனா ஆகிய ஆசியக் கண்டத்தின் வல்லரசுகள் எவ்விதம் செயல் பட்டன? இவை இரண்டிற்குள்ளும் உள்ள முரண்பாடுகள் எவை? சீனா முன்னெடுக்கும் திட்டங்கள் எவை? இதனை இந்தியா எப்படி எதிர்கொள்ளப்போகிறது? ஆகிய பல உரையாடல்களை இந்நூல் முன்வைக்கிறது. இணையத் தளங்களில் உள்ள கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது.

இந்தியாவும் பிரிட்டிஷ் ஆட்சியும் (1919-1947)

பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சிபுரிந்தபோது இந்தியாவில் நடைபெற்ற செயல்களை எப்படிப் புரிந்துகொள்வது? இந்திய முதலாளி வர்க்கம், ஏகாதிபத்தியத்துடன் எவ்வகையில் உறவு கொண்டிருந்தது? இந்தியாவில் பிரிட்டிஷாருக்கு எதிரான போராட்டங்களைக் காங்கிரஸ்காரர்கள் மட்டும்தான் நடத்தினார்களா? காங்கிரசின் தொடர்பில்லாமல், சுயேச்சையாக விவசாயிகள்-தொழிலாளிகள்-நகர்ப்புற குட்டி முதலாளிகள் நடத்திய போராட்டங்களை எவ்வகையில் மதிப்பிடுவது? இந்தியப் பெருமூலதனமும் ஏகாதிபத் தியமும் எவ்வகையில் இணைந்து செயல்பட்டன? ‘சத்தியாகிரகம்’, ‘வெள்ளையனே வெளியேறுஇயக்கம் ஆகிய பிறவற்றை காந்தி எதற்காக நடத்தினார்? இவ்வகை இயக்கங்கள் முதலாளிகளை எப்படிக் காப்பாற்றின? இந்தியாவில் செயல்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் பாத்திரத்தை எப்படிப் புரிந்துகொள்வது? ஆகிய பல கேள்விகளுக்கான உரையாடலை இத்தொகுதிகள் முன்வைக்கின்றன. 

 

Pin It