இக்கட்டுரையில் இந்திய அரசியல், பொருளாதாரக் கொள்கையில் கடந்த இருபது ஆண்டுகளில் நடந்த மாற்றங்கள், அந்த மாற்றங்களால் ஏற்படும் சமூக விளைவுகளைப் பற்றிப் பார்க்கலாம். இந்தக் கொள்கைகளில் புதிய பொருளாதாரக் கொள்கை அல்லது தாராளமயமாதல் என்பதை ஆதரிப்பவர்கள் இந்தச் சூழல் வந்ததற்குப் பிறகு இந்தியப் பொருளாதாரம் முன்பைக் காட்டிலும் வளர்ச்சியடைந்துள்ளது என்று கூறுகிறார்கள். 1990லிருந்து 2008 வரையிலான இந்த வளர்ச்சி அளவு அதற்கு முன்பைவிட அதிகமாக உள்ளதாகச் சொல்லுகிறார்கள். ஆனால் இதுவே சர்ச்சைக்குரியதாக உள்ளது. பல பொருளாதார நிபுணர்கள் இந்த தரவுகளையே கேள்விக்குட்படுத்தி, 1980களில் உள்ள வளர்ச்சியைவிட அதன் பின்னர் குறைவாகவே உள்ளதாகச் சொல்வதும் உண்டு. இதை உண்மை என்று எடுத்துக்கொண்டால்கூட இந்த வளர்ச்சி எப்படிப்பட்ட வளர்ச்சி என்பதைப் பார்க்க வேண்டும். இந்த வளர்ச்சியின் விளைவுகள் என்ன என்பதும் இந்த வளர்ச்சிக்கும் பொருளாதார மாற்றத்திற்கும் இடையேயான உறவு என்ன என்பதையும் பார்க்க வேண்டும்.

இதற்காக இந்தக் காலகட்டத்தில் தமிழ்நாட்டில் நடந்த பொருளாதார மாற்றங்களை எடுத்துக் கொள்வோம். தமிழ்நாட்டில் நடந்த மாற்றங்கள் ஓரளவு அகில இந்திய அளவில் நடந்த மாற்றங்களைப் பிரதிபலிப்பதாக உள்ளன. மேலும் ஒரு மாநிலத்தின் வளர்ச்சிப்பாதை அம்மாநிலத்திற்கும் மத்திய அரசுக்கும் உள்ள மாறிவரும் உறவுகளை புரிந்து கொள்ள உதவும். 1990களிலிருந்து நடந்துவரும் பொருளாதார மாற்றத்தை மூன்று முக்கியமான மாற்றம் மூலம் விவரிக்கலாம்.

முதலாவதாக, தாராளமயமாக்கல்: அரசாங்கம் தனி மனிதர்களின் பொருளாதார செயல்பாடுகளைத் தீர்மானிப்பது நல்லதல்ல. அது நாட்டளவில் திறமையைக் குறைக்கும். பொருட்களின் விலை மற்றும் உற்பத்தி அளவையும் அரசாங்கம் நிர்ணயிக்கக் கூடாது. மாறாக சந்தையே அந்த வேலையைச் செய்ய வேண்டும். இதில் தொழிலாளர்களின் ஊதியம், உழைப்பு ஆகியவற்றையும் சந்தையே தீர்மானிக்க வேண்டும். அரசாங்கம் செய்யவேண்டிய ஒரே வேலை சந்தை நன்றாக இயங்குவதற்குத் தேவையான நிறுவனங்களை உருவாக்குவது மட்டுமே. சந்தை நன்றாக இயங்கவேண்டுமெனில் அரசாங்க கட்டுப்பாடு இல்லாமல் இயங்க வேண்டும்.

இரண்டாவதாக, உள்நாட்டு சந்தையை மையப்படுத்துவ தற்குப் பதிலாக வெளிநாட்டுச் சந்தைக்கு முக்கியத்துவம் கொடுப்பது. உள்நாட்டுச் சந்தை குறுகலாக இருப்பதால் வெளிநாட்டுச் சந்தையை நாட வேண்டியுள்ளது. வெளிநாட்டுச் சந்தைக்கு ஏற்றுமதி செய்ய வேண்டுமெனில் வர்த்தகக் கட்டுப்பாட்டை நீக்க வேண்டும். யார் வேண்டுமானாலும் ஏற்றுமதி, இறக்குமதி செய்யலாம். எந்த மாதிரியான பொருட்களையும் ஏற்றுமதி, இறக்குமதி செய்யலாம். அதற்கான சலுகைகள் செய்து தருவது முக்கியமாக ஆகிவிட்டது. வெளிநாட்டுச் சந்தையை மையப்படுத்துவதினால் ஒரு முக்கிய மாற்றத்தை செய்ய வேண்டியுள்ளது. அது தொழிலாளர்களின் ஊதியம் என்பதை உற்பத்திச் செலவின் ஒரு அம்சம் என்றுதான் பார்க்க வேண்டுமே தவிர, தொழிலாளர்களின் வாங்கும் திறனை அதிகரிக்கச் செய்யும் அம்சம் என்று பார்க்க வேண்டியதில்லை. முன்பு அப்படி அல்ல. உள்நாட்டுச் சந்தை வளர வேண்டு மென்றால் தொழிலாளர்களின் வாங்கும் திறன் கூடவேண்டும். அவர்களின் ஊதியத்தை உற்பத்திச் செலவின் ஒரு அங்கமாக மட்டும் பார்க்க முடியாது. மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளில் இப்படி ஒரு போக்கை இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் நடந்த வளர்ச்சியில் பார்க்கலாம். இந்தக் காலகட்டத்தை (1954-70கள் வரை) Golden age of Capitalism என்று சொல்வார்கள். தொடர்ந்து தொழிலாளர்களின் உண்மை ஊதியம் பெருகிக் கொண்டிருந்த காலம் அது. ஆகையால் தொழிலாளர்களின் வாங்கும் திறன் கூடியதால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கு உள்நாட்டிலேயே சந்தை உருவாயிற்று. அப்படிப்பட்ட சந்தைப் பெருக்கத்துக்கும் தொழிலாளர்களின் ஊதியத்துக்கும் நிலவக்கூடிய இணக்கமான உறவை இந்தப் புதுப் பொருளாதாரக் கொள்கை மழுங்கடித்து விடுகிறது.

மூன்றாவதாக, சமூக நலத் திட்டங்களுக்கோ தொழில் வளர்ச்சிக்கு வேண்டிய அகக் கட்டுமானத்திற்கோ அரசாங்கத் தில் பணம் இல்லாத பட்சத்தில் அந்தத் துறைகளில் தனியார் முதலீட்டை முன்னிலைப்படுத்த வேண்டும். அந்த தனியார் முதலீடு அந்நிய முதலீடாகவும் இருக்கலாம் அல்லது உள்நாட்டு முதலீடாகவும் இருக்கலாம். அரசுத் துறைகள் திறம்பட செயல்பட போதுமான ஊக்கத்தொகை இல்லை. எனவே தனியார் மயப்படுத்தினால் இந்தப் பிரச்சனை தீர்ந்து விடும் என்ற நோக்கும் வைக்கப்படுகிறது.

இவைதான் பொருளாதார மாற்றங்களில் முக்கியமான மூன்று அம்சங்கள். இந்தப் பொருளாதாரக் கொள்கை மாற்றத்துக்குப் பிறகு சராசரி வளர்ச்சி என்று பார்த்தால் ஓரளவு வளர்ச்சி அடைந்துள்ளது என்பது உண்மைதான். இதன் அடிப்படையில்தான் இருபத்தோறாம் நூற்றாண்டை சீனா, இந்தியாவின் நூற்றாண்டு என்றெல்லாம் பத்திரிகைகளும் பொருளாதார வல்லுனர்களும் கணிக்கிறார்கள். அதேசமயத்தில் இந்த வளர்ச்சியின் கூடவே பிரதேச ரீதியிலான ஏற்றத்தாழ்வு அதிகமாகியுள்ளது என்பதையும் நாம் கவனிக்கவேண்டும். இது புதிது அல்ல. ஆனால் 1990களுக்குப் பிறகு மாநிலங்களுக்கு இடையேயான ஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ளது. பின்னடைவான மாநிலங்கள் மேலும் பின்னடைந்துள்ளது. வளர்ச்சியடைந்த மாநிலங்கள் மேலும் வளர்ச்சி அடைந்துள்ளன.

இதில் தமிழ்நாடு 1990களுக்குப் பிறகு மற்ற மாநிலங்களைக் காட்டிலும் நன்கு வளர்ந்துள்ளது. தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் பிற மாநிலங்களைக் காட்டிலும் அதிகமாக வளர்ந்து வந்துள்ளது. இந்த வளர்ச்சியை எப்படிப் புரிந்து கொள்வது? 1980களுக்கு முன்புவரை வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள மக்கள்தொகை பீகார், ஒரிசா ஆகியவற்றுக்கு அடுத்த நிலையில் தமிழ்நாடு இருந்தது. இது தற்போது 20-25% என அரசாங்கப் புள்ளி விவரம் கூறுகிறது. மொத்த மாநில வருமானத்தில் பொருள் உற்பத்தி துறையால் வருகின்ற வருமானத்தைப் பொறுத்தவரை மஹாராஷ்டிரத்திற்கு அடுத்த இடத்தில் தமிழ்நாடு உள்ளது. இந்தப் பொருளாதார வளர்ச்சிக்கும் சமூக உறவுகளுக்கும் உள்ள உறவு என்ன என்பதையும் பார்க்கலாம்.

சேவைத்துறையும் நன்கு வளர்ச்சி கண்டுள்ளது. விவசாயத் துறை மற்ற எல்லாத் துறைகளைக் காட்டிலும் மிக மோசமாக உள்ளது என்றே கூறலாம். மக்கள் தொகையில் 56% விவசாயத்தைச் சார்ந்து இருந்தாலும் விவசாயத்துறையிலிருந்து வரும் வருமானம் மொத்த வருமானத்தில் 13% தான். இந்தியாவில் உள்ள மாநிலங்களில் விவசாயத்துறை வருமானம் மிகக் குறைவாக இருக்கும் மாநிலம் கேரளம். அதற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு. இன்னொரு முக்கியமான விசயம், தமிழ்நாட்டு கிராமப்புறங்களில் சாகுபடியாளர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. கிராமப்புறத்தில் 30% குடும்பங்கள்தான் தொடர்ந்து சாகுபடியாளர்களாக உள்ளனர். விவசாயத் துறையில் மந்த நிலையை இந்தியா முழுவதும் பார்க்க முடிகிறது. இந்தத் துறையின் வீழ்ச்சி தமிழ்நாட்டில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் கூர்மைப் பட்டிருப்பதைப் பார்க்கலாம். தமிழ்நாட்டில் நிலமற்ற விவசாயிகளின் எண்ணிக்கை, விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை, விவசாயத்தைக் கைவிட்டவர்களின் எண்ணிக்கை கடந்த இருபது ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. அப்போக்கிற்கு காரணங்கள் என்ன? விவசாயத் துறையின் உற்பத்தித் திறன் கடந்த இருபது ஆண்டுகளில் பெரிதாக ஒன்றும் அதிகரிக்க வில்லை. மாறாக உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளது.

அடுத்ததாக நீர்ப்பாசனத்தை எடுத்துக்கொண்டால் 1960-65களுக்குப் பிறகு தமிழகத்தைப் பொறுத்தவரை கால்வாய் நீர்ப்பாசனம் 1960களுக்கும் முன் எந்தளவிற்கு இருந்ததோ, அந்த அளவிற்குத்தான் இப்பொழுதும் இருக்கிறது; இன்னும் மோசமடைந்துள்ளதே தவிர அதிகரிக்கவில்லை. இந்த நீர்ப்பாசனத்திலேயே ஏரிப்பாசனம், கால்வாய்ப் பாசனம் மற்றும் கிணற்றுப் பாசனம் என்று பிரித்துப் பார்த்தால் ஏரிப்பாசனம் முன்பைவிட குறைந்து கொண்டே வருகிறது. ஏரிப்பாசனத்தைப் பெரும்பாலும் சிறு மற்றும் குறுவிவசாயிகள்தான் சார்ந்துள் ளனர். அரசாங்கத்தின் இலவச மின்சாரத்தின் காரணத்தால் ஆழ்துளைக் கிணறுகள் தமிழகம் முழுவதும் பரவி, பாசனம் அதிகரித்து வந்துள்ளதைக் காணலாம். ஏரிப்பாசனம் எந்தளவிற்கு குறைந்துள்ளதோ அந்தளவிற்கு கிணற்றுப் பாசனம் அதிகரித்துள்ளது. கிணற்றுப் பாசனத்திற்கு சாகுபடி பரவலாக நடப்பதற்கு உதவும் தன்மையுண்டு. இப்பாசனம் பரவலாக விவசாய வளர்ச்சிக்கு உதவுகின்றது.

தமிழக விவசாயத்துறையின் மற்றொரு அம்சம் விவசாயிகள் அதிகமான பொருட்களை சந்தையில் விற்கின்றனர். உணவுப் பொருட்கள் அல்லாத பணப்பயிர்களை விளைவிப்பதில் தமிழகம் இந்தியாவில் மூன்றாவது இடத்தை வகிக்கிறது. நீர்ப்பாசனம் குறைந்து கொண்டே வந்தாலும் சந்தை சார்ந்த விவசாயம் அதிகரித்துள்ளது. 1990களில் விவசாயத் துறையில் அரசாங்க முதலீடு குறைந்து கொண்டே வந்துள்ளது. புதிதாக விவசாயத்திற்குப் பாசன வசதிகளை அதிகப்படுத்தவோ அல்லது தொழில்நுட்ப ரீதியிலாக உற்பத்தித் திறனை அதிகப்படுத்தவோ இல்லை. ஏரிப்பாசனம் குறைவதும் கிணற்றுப்பாசனம் அதிகமாவதும் சில மாற்றங்களை உருவாக்குகிறது. மாற்றங்கள் நாளடைவில் சாகுபடி செலவை அதிகமாக்குகிறது. மேலும் பயிர்களுக்கான கட்டுபடியாகும் விலை என்பது கிடைப்ப தில்லை. எனவே 2000 ஆண்டிலிருந்து பார்த்தால் விவசாயத் துறையில் வருமானத்தைக் காட்டிலும் செலவுதான் அதிகமாகும் என்பதையே புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. குறிப்பாக, தமிழ்நாட்டில் விவசாயத்துறையில் வரவுக்கும் செலவுக்கும் உள்ள பற்றாக்குறை மற்ற மாநிலங்களைக் காட்டிலும் அதிகமாகவே உள்ளது.

தமிழகத்தில் சிறு மற்றும் குறு விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் இவர்களின் உடமையில் உள்ள சராசரி நிலம் குறைந்துகொண்டே வந்துள்ளது. சராசரியாக 0.25 ஹெக்டேர் நிலம்தான் ஒரு குறு விவசாயியிடம் உள்ளது. மேலும் குறுவிவசாயிகள் நிலத்தை இழந்து வெளியேறும் போக்கையும் காணலாம். ஆனால் விவசாயத்தில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு வாழ்வாதாரங்கள் இல்லை. பலர் நிலத்தை இழந்துவிட்டு நகர்புறத்திற்கு இடம் பெயர்கின்றனர். பல மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதைப் பார்க்கிறோம். இதற்கு முக்கியமான காரணம் விவசாயிகளின் கடன் தொல்லை. ஏனெனில் சாகுபடி செலவு அதிகரித்தாலும், அதற்கான வருமானம் கிடையாது. அதனால் இந்த தற்கொலைகள் ஆந்திரபிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் நிகழ்ந்தன.

ஆந்திரபிரதேசத்திற்கு அடுத்தபடியாக கடன்தொல்லை அதிகமாக உள்ள விவசாயிகள் தமிழகத்தில்தான் இருந்துள் ளனர். கடன்தொல்லை உள்ள விவசாயிகள் ஆந்திரபிரதேசத்தில் 83% எனில் தமிழகத்தில் 73% ஆகும். கடன் அளவும் அதிகமாகவே உள்ளது. ஆனால் மற்ற மாநிலங்களைப்போல தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை என்பது நடந்ததாக நமக்குத் தெரியவில்லை. அதற்கு ஒரு முக்கியமான காரணம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தொழில்துறை வளர்ச்சியின் தனித்தன்மைதான்.

மற்ற மாநிலங்களைக் காட்டிலும் நகர்புறத்தில் அதிகமாக வாழ்கின்ற மக்கள் விகிதம் தமிழகத்தில்தான். 44-45% மக்கள் நகர்புறத்தில் உள்ளனர். ஒன்று அல்லது இரண்டு பெரிய நகரங்கள் என்று இல்லாமல் பல சிறிய நகரங்கள் தமிழகம் முழுவதும் பெருகி வருகிறது. கிராம மக்கள் சுலபமாக பேருந்து அல்லது சிற்றுந்து பிடித்து நகரத்திற்குச் சென்று வேலை செய்துவிட்டு கிராமத்திற்கு வந்துவிடலாம். ஒருபக்கம் விவசாயத்தில் நெருக்கடி. இன்னொரு பக்கம் போக்குவரத்து வசதிகள் குக்கிராமங்கள் வரை விரிவடைந்துள்ளன. கிராமப் புறத்து மக்கள் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்ய தயாராக கிராமத்தை விட்டு இடம் பெயர்ந்து வருகின்றனர். நகர்புற வளர்ச்சி 1990களில் இருந்து பார்த்தோமேயானால் பல இடங்களில் அமைப்பு சாரா தொழில்வளர்ச்சி தமிழகத்தில் நடந்துள்ளது.

மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்திலுள்ள பல நகரங்களில் இதுபோல தொழில் வளர்ச்சி பெருகி வருகிறது. அந்தத் துறைகள் விவசாயத்துறையிலிருந்து ஏராளமானோரை இழுத்துக் கொள்கின்றன. கொங்கு மண்டலத்தில் திருப்பூர், கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்செங்கோடு போன்ற நகரங்களும் தொண்டை மண்டலத்தில் தோல் தொழிற்சாலைகளில் ஆம்பூர், வாணியம்பாடி போன்றவை, தெற்கே சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலை என பல இடங்களில் தொழில் வளர்ச்சி நடந்து வருகிறது. இந்த வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணம் கிராமப் புறத்திலிருந்து வரும் உழைப்பாளிகள் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்வதற்கு தயாராக இருப்பதுதான். மேலும் இவர்கள் மட்டுமல்லாது மற்ற மாநிலங்களில் நலிவடைந்த விவசாயிகளும் வேலை செய்வதற்கு வருகின்றனர். குறிப்பாக சென்னையில் வீடுகள், அலுவலகங்கள் ஆகியவற்றின் பாதுகாவலர்களாக வேலை செய்பவர்களில் ஏராளமானோர் இந்தி பேசுபவர்களாக உள்ளனர்.

தமிழகம் தொழிற்துறையில் வளர்ச்சியடைந்துள்ளதால் தமிழக மக்கள் பெரும்பாலும் வேறு மாநிலங்களுக்கு வேலை தேடிச் செல்வதில்லை. ஆனால் பீகார், சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களின் மக்கள் அங்கு தொழில்துறை வளர்ச்சி அடையாததால் அங்கிருந்து இங்கு வருகின்றனர். இதனால் ஏற்படும் போட்டியினால் கூலியைக் குறைவாகக் கொடுத்து முதலாளிகள் இலாபம் அடைகின்றனர். ஆனால் கிராமப் புறங்களில் வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை என்ற போக்கையும் பார்க்கலாம். இதில் என்ன சிக்கல் எனில் கிராமத்தில் ஆள் வருடம் முழுக்க தேவைப்படுவது கிடையாது. நான்கு, ஐந்து மாதங்கள் மட்டுமே தேவைப்படுகின்றனர். கூலி குறைவாக இருந்தாலும் நகர்புறத்தில், கடுமையான வேலை இருந்தாலும் அது ஜாதி என்கிற அடையாளம் அற்ற வேலையாகக் கருதுகின்றனர்.

தமிழகத்தில் விவசாயம் நலிவடைந்தும் அமைப்புசாரா தொழிற்துறை வளர்ந்தும் வருகிறது. இதை மற்ற மாநிலங்களில் பார்க்க முடியாது. பொதுவாக பொருளாதாரப் பாடப் புத்தகங்களில் விவசாயத்துறையில் இருந்து பொருள் உற்பத்தித்துறைக்கு மக்கள் வேலைக்கு செல்வதுதான் வளர்ச்சி என்று சொல்லப்படுகிறது. ஆனால் இப்பொழுது நடைபெறும் பொருளாதார மாற்றம் இந்தப் போக்கை முற்றிலுமாக முறியடிப்பதாக உள்ளது. பொதுவாக தமிழ்நாட்டில் கட்டிடத் தொழில் போன்ற உள்கட்டுமான வேலைக்கே பெரும்பாலான உழைப்பாளிகள் செல்கின்றனர். உற்பத்தித் துறையின் மூலமாக வளர்ச்சி ஏற்படுவதையே இயல்பான வளர்ச்சி முறை என்று முன்பு பொதுவாகக் கருதப்பட்டு வந்தது.

1960, 1970களில் கிராமப்புறங்களிலிருந்து வந்தவர்கள் அமைப்புசாராத் தொழில்களில் நுழைந்தனர். அந்த அமைப்பு சாராத்துறை என்பது அவர்கள் நாளடைவில் அமைப்புசார்ந்த துறைக்கு செல்வதற்காகக் காத்திருக்கும் இடம் என்றும் அமைப்புசாரா தொழில் என்பதே மறைந்து முழுக்க முழுக்க அமைப்பு சார்ந்த தொழில்துறையே உருவாகும் என்றும் அப்போது கருதப்பட்டது. ஆனால் தற்சமயம் அந்த நம்பிக்கை போய்விட்டது எனலாம். சமீபத்தில் இந்திய நாடாளுமன்றம், அமைப்புசாரா தொழில் நிறுவனங்களுக்கான தேசிய ஆணையத்தை (National commission for Enterprises into Unorganised Sector) அமைத்தது. இந்த ஆணையத்தின் நோக்கம், அமைப்பு சாராத் தொழில்துறையிலிருந்து அமைப்பு சார்ந்த தொழில் துறைகளுக்குத் தொழிலாளர்களைக் கொண்டு சேர்க்கும் கொள்கைகளை உருவாக்குவதல்ல. மாறாக இப்போது அதைச் செய்ய முடியாது என்பதைக் கணக்கில் கொண்டு இந்த அமைப்புசாராத் துறையில் உள்ள தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு என்ன செய்வது, அவர்களது உற்பத்தித் திறனை எப்படி வளர்ப்பது, வேலை இல்லாதபோதும், வயதான போதும், உடல்நிலை சரியில்லாத போதும் உதவ முடியுமா என்பதை யோசித்துப் பரிந்துரை செய்வது ஆகியவற்றில் மட்டுமே இந்த ஆணையம் கவனம் செலுத்துகிறது.

அமைப்புசார்ந்த தொழிற்துறையின் வளர்ச்சி, அமைப்பு சாராத் தொழிற்துறையின் வளர்ச்சியை விட குறைவாக உள்ளது. மேலும், அமைப்புசார்ந்த தொழிற்துறையில் மிக நவீனத் தொழில்நுட்பம் புகுத்தப்படுவதால், உயர்அளவு பயிற்சி பெற்ற (Highly skilled) தொழிலாளர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு உள்ளது. நவீனத் தொழில்நுட்பத்தின் காரணமாக, வேலை செய்யும் தொழிலாளிகளின் எண்ணிக்கையும் குறைந்துவிடுகிறது. எனவே அமைப்புசார்ந்த தொழிற்துறையில் புதிதாக அதிக அளவில் ஆட்கள் சேர்க்கப்படுவது இல்லை. இதற்கு எடுத்துக்காட்டாக டிஸ்கோ (Tata Iron and Steel Company - TISCO) நிறுவனத்தை எடுத்துக்கொள்ளலாம். அதில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களின் அளவு கடந்த பத்தாண்டுகளில் இரண்டு, மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் அதில் தற்போது வேலை செய்யும் தொழிலாளர்களின் எண்ணிக்கை முன்பைவிட மிகக் குறைவு.

அமைப்புசார்ந்த தொழிற்துறையிலும் கூட, தொழிற் சாலைக்கு வெளியே உள்ளவர்களிடம் ஒப்பந்தம் செய்து கொண்டு அவர்களிடம் சில வேலைகளை ஒப்படைக்கும் போக்கும் இருக்கிறது. பொதுவாக இந்தியாவிலும் குறிப்பாகத் தமிழகத்திலும் ஏற்பட்டுள்ள, ஏற்பட்டு வரும் அமைப்புசார்ந்த தொழில் வளர்ச்சி முறை, வேலைவாய்ப்பைப் பெருக்கக் கூடியதாக இருப்பதில்லை.

விவசாயத் துறை நலிவுற்றும், அமைப்புசார் தொழிற்துறை வளர்ச்சியால் வேலைவாய்ப்பு பெருகாமலும் உள்ள நிலையில் வேலைவாய்ப்புக்கான ஒரே இடமாக அமைப்புசாரா தொழில்துறைதான் உள்ளது. ஆனால் இத்துறையில் வேலைப் பாதுகாப்போ தொழிலாளர் உரிமைப் பாதுகாப்போ கிடையாது.

இந்நிலையில், வேலைவாய்ப்பையும், மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் பெருக்க முடியாத அரசாங்கம் ஜனநாயகத்தின் பெயரால் மக்களுக்குச் செய்வதெல்லாம், விவசாயிகளின் கடன் ரத்து, ஒரு ரூபாய்க்கு ஒருகிலோ அரிசி, ஊரக வளர்ச்சித் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 100 நாள் வேலை, இலவச வேட்டி, சேலை, சைக்கிள், வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி போன்ற ‘இலவச திட்டங்களை’ மட்டுமே. அரசாங்கத்தால் மாற்று வளர்ச்சிப்பாதையை உருவாக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- எம்.விஜய பாஸ்கர்

(இக்கட்டுரையாளர் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிகிறார். 'திருப்பூர் ஆலைகளின் சமூகப் பொருளாதாரம்' குறித்து ஆய்வை நிகழ்த்தியவர்.) 

Pin It