தமிழ் ஆளுமைகள் போராளிகள் பார்வைக்கு!

விருது பெறுவதற்கு மட்டுமில்லை, வழங்குவதற்கும் தகுதி என்பது வேண்டும். ஆனால், நம் தமிழ் ஆளுமைகள் அதைப் பற்றியெல்லாம் துளியும் கவலைப்படுவதில்லை. யார், என்ன விருது கொடுத்தாலும் வாங்கிக்கொண்டு வந்து விடுகிறார்கள்.

தமிழ் இனத்தையே அழித்தொழித்த இந்திய அரசு தரும் விருதுகளை ஏற்க வேண்டாம் என எவ்வளவுதான் சொன்னாலும் யாரும் இங்கு காதில் போட்டுக் கொள்வதாக இல்லை. அந்த வரிசையில் இப்பொழுது புதிதாகச் சேர இருக்கிறார்கள், காலமெல்லாம் “தமிழ்... தமிழ்...” என்று பேசி இருக்கிற கலைஞானியும் கவிப்பேரரசுவும்!

பத்மபூஷண் விருது அறிவிப்பு வந்த அதே நாளேட்டில், அந்தச் செய்தியை ஒட்டியே இவர்களின் நன்றி அறிவிப்பும் வருகிறது! அதுவும், அறிவிப்பில் ஓரிடத்தில் கூட நம் இனத்தையே கொடூரமாகப் பலி வாங்கியவர்களின் கைகளால் இந்த விருது பெற இருக்கிறோமே என்கிற வருத்தம் அணுவளவும் இல்லாமல்!

ஈழத்தில் இந்தியா செய்த அட்டூழியங்கள் எதுவும் இவர்களுக்குத் தெரியாதது இல்லை. ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டிய கடமை கொண்ட இந்திய அரசு, மாறாக அவர்களை அழிப்பதற்குத் தன்னாலான எல்லா உதவிகளையும் செய்தது!

நேரடியாகவே பணமும் ராணுவத் தளவாடங்களும் வழங்கி உதவியது. தரைப்படைத் தளபதியை அனுப்பிப் போர் வியூகங்கள் வகுத்துக் கொடுத்தது. ரகசியமாக ஆயுதங்களும் அனுப்பியது. இனப்படுகொலையை நிறுத்த ஐ.நா மூலமாக மேற்குலக நாடுகள் செய்த முயற்சிகளைத் தன் அரசியல் செல்வாக்கால் முறியடித்தது. இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களைத் தோற்கடித்து இனப்படுகொலை நிற்காமல் தொடர வழிவகுத்தது.

எல்லாவற்றுக்கும் உச்சகட்டமாக, கடைசி நேரத்தில், முள்ளிவாய்க்கால் பேரழிப்புக்கு முன்பு அதைத் தடுக்க நேரடியாகவே அமெரிக்காவும் பிரிட்டனும் களமிறங்கத் தீர்மானித்திருந்த நேரத்தில் அதையும் நிறைவேற விடாமல் தடுத்து ஒரே நாளில் நாற்பதாயிரம் தமிழர்கள் மிகக் குரூரமாகச் சாக வகை செய்தது இந்தியா! (சான்று: விக்கிலீக்ஸ்).

இவ்வளவும் போதாதென்று, நடந்தது வெறும் போர் இல்லை. ஓர் இனத்தையே அழிப்பதற்காக நடத்தப்பட்ட இனப்படுகொலை என்று ஐ.நா விசாரணைக் குழு அறிவித்த பின்னும், இப்பொழுதும் தற்போதைய இந்திய அரசு இலங்கைக்குத்தான் ஆதரவாக நிற்கிறது! ஐ.நா விசாரணைக் குழுவின் இந்த அறிக்கை பற்றி ஐ.நா பாதுகாப்பு அவையில் விவாதித்து அதன் பேரில் முடிவெடுக்கலாம் என்று உலக நாடுகள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு முதல் ஆளாக எதிர்ப்பு தெரிவித்தது இந்திய அரசுதான்.

தமிழர்களுக்கு எதிராக இத்தனை உலக மகா அக்கிரமங்களையும் நிகழ்த்திய, நிகழ்த்துகிற இந்திய அரசின் கையால் தங்கள் தமிழ்சார் சாதனைகளுக்கான விருதைப் பெறுவதில் இவர்களுக்கு அப்படி என்ன பெருமை இருக்க முடியும் என எனக்குக் கொஞ்சமும் புரியவில்லை! சராசரி மனிதர்களை விடப் பல மடங்கு அறிவுக் கூர்மையும், திறமையும் படைத்த இவர்களுக்கு இந்த அடிப்படை முரண்பாடு கூடவா தெரியவில்லை? தாங்கள் செய்த தமிழ்ச் சேவைக்கான விருதைத் தமிழர்களையே அழித்தவர்களின் கையாலா பெறுவது என உள்ளத்தில் ஒரு சிறு வேதனை கூடவா இவர்களுக்கு எழவில்லை? என்ன வகையான மொழி உணர்வு இது?

சிலர் கேட்கலாம், “இது தனிப்பட்ட முறையில் அவர்களின் திறமைகளைப் பாராட்டித் தரப்படும் விருதுதானே? இதற்கும் ஈழப் பிரச்சினைக்கும் ஏன் முடிச்சுப் போடுகிறீர்கள்? ஏன் இவை இரண்டையும் நாம் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும்” என.

அப்படியில்லை நண்பர்களே! ஒரு சமுதாயத்தின் பெருமை, வரலாறு, பண்பாடு என எல்லா விழுமியங்களையும் உலகுக்கு எடுத்துக்காட்டுவது கலை. அப்பேர்ப்பட்ட கலையை ஆள்பவர்கள் கலைஞர்கள். ஆகவே, கலைஞர்கள்தான் ஒரு சமுதாயத்தின் உண்மையான பிரதிநிதிகள். ஆட்சியாளர்கள் இன்று இருப்பார்கள்; நாளை மாறுவார்கள். ஆனால், கலைஞர்கள் நிலையானவர்கள். அதனால்தான் தன் மொழி சார்ந்த கலைஞர்களுள் யாருக்கு விருது கிடைத்தாலும், மாலை, மரியாதை கிடைத்தாலும் மக்கள் அதைப் பெருமையாக உணர்கிறார்கள். கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்! சிலருக்கு ரஜினியைப் பிடிக்கும், சிலருக்குக் கமலைப் பிடிக்கும். ஆனால், ரஜினி விருது வாங்கினாலும் சரி, கமல் விருது வாங்கினாலும் சரி, தமிழர்கள் அனைவருமேதான் அதைக் கொண்டாடுகிறார்கள்.

இன்னமும், இளையராஜா இசைதான் இசை எனச் சொல்லும் ஒரு தலைமுறையே இங்கு இருக்கிறது. ஆனால், அத்தனை நாடுகளின் கலைஞர்களும் வீற்றிருந்த அவையில் “எல்லாப் புகழும் இறைவனுக்கே” என்று பச்சைத் தமிழில் முழங்கி, இரண்டு கைகளிலும் ஆஸ்காரை ஏந்தி வந்தபொழுது ஒட்டுமொத்தத் தமிழ் நெஞ்சங்களுமேதான் ஏ.ஆர்.ரகுமானை எண்ணி விம்மின!

காரணம், தான் யாருக்கு வேண்டுமானாலும் விசிறியாக இருக்கலாம், இல்லாமல் இருக்கலாம். ஆனால், தன் மொழி சார்ந்த கலைஞர் ஒருவருக்குக் கிடைக்கும் விருது தன் மொழிக்கு, தன் சமுதாயத்துக்கே கிடைக்கும் மரியாதை என்பதால்தான்.

மேலும், பிரபலங்களுடைய நிலைப்பாடுதான் குறிப்பிட்ட ஒரு விஷயம் பற்றிய அந்த மொத்தச் சமூகத்தின் நிலைப்பாடாக உலகம் கருதுகிறது.

இப்படி, ஒரு சமுதாயத்தின் பிரதிநிதிகளாக விளங்கும் கலைஞர்கள், பிரபலங்கள் ஆகியோர் அந்தச் சமுதாயத்துக்கு எதிராகச் செயல்படுபவர்களின் மரியாதைகளை ஏற்றுக்கொண்டால் அது, அந்தச் சமுதாயமே அதை ஏற்றுக்கொண்டது போல. தனக்கு எதிரான அந்த நடவடிக்கைகளை அந்தச் சமுதாயம் வரவேற்பதாக அது பொருள்படும். ஆக, தன் இனத்தை, மொழியை, மக்களை, சமுதாயத்தை இழிவுபடுத்துபவர்கள் தன்னை மட்டும் மதித்து விருது கொடுத்தால் உலகில் எந்தக் கலைஞரும் அதை ஏற்பதில்லை. அதுதான் வரலாறு.

இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்பவர் வங்கத்துக் கவிப்பேரரசர் இரவீந்திரநாத் தாகூர்.

அந்தக் காலத்தில், தங்கள் துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ‘சர்’ பட்டம் அளித்துப் பெருமைப்படுத்துவது ஆங்கிலேய அரசின் வழக்கம். தாகூர் அவர்களின் காலத்தை வெல்லும் படைப்புகளுக்காக அவருக்கும் அந்தப் பட்டத்தை வழங்கியது வெள்ளையர் அரசு. முதலில் அதை ஏற்றுக்கொண்ட இரவீந்திரநாத் தாகூர் அவர்கள், ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்ததும் அப்பேர்ப்பட்ட கொலைகார அரசின் விருது தனக்குப் பெருமையில்லை, இழிவு என்று உணர்ந்து தூக்கி வீசினார்! அவர் கவிப் பேரரசர்!

மனிதநேயமிக்க கவிஞருக்கான எடுத்துக்காட்டாக ஒருவரைப் பார்த்தோம். அடுத்து, அதே போன்ற கலைஞர் என இப்பொழுது குறிப்பிடப்படவிருக்கும் ஒருவர் யார் எனப் பார்த்தால் வியப்பு ஏற்படும்!

பொதுவாக, கலையையும் கலைஞர்களையும் பெரிதும் மதிக்கும் தமிழ்ச் சமூகத்துக்கு ஆங்கில பாப் பாடகிகள் என்றால் மட்டும் எப்பொழுதும் கீழ்ப் பார்வைதான். அவர்கள் உடம்பைக் காட்டிப் பிழைப்பவர்கள், ஒழுக்கமில்லாதவர்கள் என்பது நம் கருத்து.

அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் புகழ்பெற்ற கலைஞர் ஜெனிபர் லோபஸ். அவர் ஒருமுறை, அவருடைய பிறந்தநாள் விழாக் கலை நிகழ்ச்சி ஒன்றுக்காக வட சைப்ரசுக்கு அழைக்கப்பட்டிருந்தார். அதற்காக அவர் வாங்க இருந்தது மூன்று மில்லியன் டாலர்கள். அதாவது, பதின்மூன்று கோடியே எண்பது இலட்சம் ரூபாய்கள்! ஆனால், நிகழ்ச்சிக்கு ஒப்புக்கொண்ட பின்னர், அந்நாட்டில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாகக் கேள்விப்பட்டார். உடனே, “மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய எந்த ஒரு நாட்டையோ, அரசையோ, நிறுவனத்தையோ நான் ஆதரிக்க மாட்டேன்” என்று கூறி அந்த நிகழ்ச்சியைப் புறக்கணித்தார் ஜெனிபர் லோபஸ்.

தாகூர், ஜெனிபர் லோபஸ் இருவருக்கும் உள்ள இன்னோர் ஒற்றுமை, இருவருமே தங்கள் மக்களுக்காக இல்லாமல் இன்னோர் இனத்து மக்களுக்குக்காக இந்த ஈகங்களைச் (தியாகங்களை) செய்தவர்கள் என்பது!

ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்த்தப்பட்டது பஞ்சாபில் உள்ள அமிர்தசரசில். எனவே, கொலையுண்டவர்கள் பெரும்பாலும் பஞ்சாபிகளாகத்தான் இருந்திருக்க முடியும். ஆனால் தாகூர் வங்காளி! ஜெனிபர் லோபசோ இன்னும் பல மடங்கு மேலானவர். தனக்கு என்ன ஏது என விவரம் கூடத் தெரியாத ஒரு நாட்டு மக்களுக்காக அந்த ஈகத்தைச் செய்தவர்!

ஆனால், நம் கவிப் பேரரசரும் கலைஞானியும் விருது பெற இருப்பதோ தங்கள் மொழி, தங்கள் இன மக்களையே கொன்றவர்கள் கைகளால்!

ஈழத்தின் குருதி வெள்ளத்தில் செத்த ஆண்களில் ஒருவரையாவது தன் அண்ணனாகவோ தம்பியாகவோ நினைத்துப் பார்த்தால் இந்த விருது இவ்வளவு இனிக்குமா?...

கட்டிய கணவன், பெற்ற பிள்ளைகள் கண்ணெதிரே வெட்டவெளியில் சிங்கள இழிபிறப்புக்களால் பாலியல் பெருங்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட பெண்மணிகளில் ஒருவரையாவது தங்கள் தாயாகவோ மகளாகவோ ஒரு நொடியாவது நினைத்துப் பார்த்திருந்தால் இந்த விருதைப் பெறக் கை நீளுமா?...

தமிழ் எனச் சொல்லக்கூடத் தெரியாத பால் மணம் மாறாப் பாலகர்கள் தமிழனுக்குப் பிறந்த ஒரே காரணத்துக்காகச் சின்னபின்னமாக்கி வீசப்பட்டதும், வெளியுலகத்தைக் கண் திறந்து கூடப் பார்க்காமல் தாய் வயிற்றிலிருந்த அரும்புகள் கூடத் தமிழச்சி வயிற்றில் இருந்த ஒரே காரணத்துக்காக வயிற்றிலேயே கொல்லப்பட்டதும் துளியாவது இன்னும் நினைவில் இருக்குமானால் இந்த விருதை ஏற்க உள்ளம் வருமா?...

தாகூரையும் ஜெனிபர் லோபசையும் போல, தவறானவர்கள் தனக்கு அளிக்க வந்த விருதுகளையும் மரியாதைகளையும் வாய்ப்புகளையும் மொழி, இனம், நாடு, சமுதாயம் என வேறுபாடு பார்க்காமல் மனிதநேயம் ஒன்றையே அடிப்படையாகக் கொண்டு எட்டி உதைத்தவர்கள் பட்டியலில் இன்னும் பலர் உண்டு. ஆனால், அந்தப் பட்டியலில் சேருவதை விட விருது பெற்றவர்கள் எனும் பொதுப்பெரும் பட்டியலில் பத்தோடு பதினொன்றாகச் சேர்வதைத்தான் நம்மவர்கள் விரும்புகிறார்கள்!

பொதுவாக, இந்திய அரசு எப்பொழுதும் தமிழர்களின் திறமைகளையோ சாதனைகளையோ மதிப்பது கிடையாது. விடுதலை பெற்ற காலம் தொட்டே அப்படித்தான். அதுவும், இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்துக்குப் பின் தமிழர்கள் என்றாலே வடநாட்டினருக்கு வேப்பங்காய்தான். ஆனால், ஈழத்தில் தமிழினப் படுகொலையை நடத்திய பின் இந்திய அரசின் விருதுப் பட்டியல்களில் தமிழர்களின் எண்ணிக்கை கணிசமாகவே இருப்பதாகத் தெரிகிறது. அதுவும் சில நேரங்களில், நெறிமுறைகளை மீறிக் கூடத் தமிழர்களுக்கு விருது கொடுக்க இந்திய அரசு முன்வருவதாகத் தெரிகிறது. எடுத்துக்காட்டு: வழக்கத்துக்கு மாறாக, ‘ஆடுகளம்’ திரைப்படத்துக்கு மட்டும், வெளிவந்த அதே ஆண்டில் அந்த ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டது! (கருத்துரையில் சான்றுடன் மறுப்புத் தெரிவித்தால் இந்தக் கருத்து நீக்கிக் கொள்ளப்படும்).

இத்தனை காலங்களாக இல்லாமல், தமிழினப் படுகொலைக்குப் பின் இப்படித் தமிழர்களுக்கு விருதுகளை வாரி வழங்க, அதுவும் நெறிமுறைகளை மீறியாவது வழங்க இந்திய அரசு முன்வரக் காரணங்கள் பல.

தமிழர்களை இழிவுபடுத்த: தமிழினத்துக்கு இந்திய அரசு செய்த, செய்கிற துரோகங்களைப் பார்த்துத் தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் கொதித்துப் போயுள்ள நிலையில் அதற்கு நேரெதிராக, தமிழ் இனத்தின் ஆளுமைகள் இப்படி அதே இந்திய அரசின் விருதுகளை ஏற்றுக்கொள்வது தமிழ் மக்களையும் அவர்களின் உணர்வுகளையும் இழிவுபடுத்துவதாகும்!

தமிழர் போராட்டங்களை வலுவிழக்கச் செய்ய: பல காலமாகத் தமிழ்ச் சேவை செய்து வருபவர்களே இந்திய அரசின் தமிழர்களுக்கு எதிரான போக்கைப் பற்றிக் கவலைப்படாமல் இப்படி அவர்கள் தரும் விருதுகளை ஏற்பதால் சாதாரண மாணவர்களும், தனியார் அமைப்புகளும் மட்டும் இந்திய அரசுக்கு எதிராகக் குற்றம்சாட்டுவது எடுபடாமல் போகிறது. இதனால் நடைபெற்று வரும் தமிழர் போராட்டங்கள் வலுவிழக்கின்றன.

பன்னாட்டு அழுத்தத்தை வலுவிழக்கச் செய்ய: உலகெங்கும் உள்ள தமிழர்கள் அந்நாட்டு அரசுகளை நோக்கித் தொடர்ந்து போராடுவதால், தமிழினப் படுகொலைக்குப் பன்னாட்டு விசாரணை தேவை எனவும் இன்ன பிற வகைகளிலும் இலங்கை அரசு மீது பன்னாட்டுச் சமூகம் தொடர்ந்து பல அழுத்தங்களைச் செலுத்தி வருகிறது. இந்நிலையில், தமிழ் இனத்தின் பெரும்புள்ளிகளே இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் இனப் படுகொலையின் முதற் குற்றவாளியான இந்திய அரசின் விருதுகளை ஏற்றுக்கொள்வதால், தமிழினத்தின் செல்வாக்கு மிக்க ஆட்கள், தமிழ் மக்களின் கருத்துக்களையும் நிலைப்பாடுகளையும் தீர்மானிக்கக் கூடியவர்கள் இன்றும் தன் கைப்பிடியில்தான் இருக்கிறார்கள்; எனவே, வெறும் பொதுமக்கள் போராட்டத்தைக் கண்டு அஞ்ச வேண்டாம் என இந்திய அரசு மற்ற நாடுகளுக்குத் துணிச்சலூட்ட இந்த விருது வழங்கும் நிகழ்வுகள் பயன்படுகின்றன.

தமிழர்களைப் பிரித்தாள: தமிழ்ப் பிரபலங்களே ஈழத் தமிழர்கள் பற்றிக் கவலைகொள்ளாமல் இந்திய அரசு தரும் விருதுகளை ஏற்றுக் கொள்வதால் தமிழ்நாட்டு மக்களின் நிலைப்பாடும் அதுதான் என ஈழத் தமிழர்கள் தவறாக நினைக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, தமிழ்நாட்டு மக்களையும் ஈழத் தமிழர்களையும் பிரிக்கக்கூடிய ஒரு செயலாகவும் இதைக் கருத வேண்டியிருக்கிறது.

இப்படி, தமிழர்களைப் பிரித்து, இழிவுபடுத்தி, தமிழர் போராட்டங்களை வலுவிழக்கச் செய்து, ஈழப் பிரச்சினையையும் மேலும் சிக்கலுக்குள்ளாக்கித்தான் தங்கள் தமிழ்ச் சேவைக்கான அங்கீகாரத்தைத் தாங்கள் பெற்றாக வேண்டுமா, அப்படிப் பெறுவது ஓர் அங்கீகாரமா என்பதைக் கமல்ஹாசன் அவர்களும், வைரமுத்து அவர்களும் மட்டுமின்றி இந்திய அரசின் விருதுகள், பட்டங்கள் முதலான மரியாதைகளைப் பெற்றிருக்கிற, பெற இருக்கிற தமிழ் ஆளுமைகள் அனைவருமே சிந்தித்துப் பார்க்க வேண்டும்!

அவர்கள் சிந்திக்கிறார்களோ இல்லையோ ஈழப் பிரச்சினைக்காகப் போராடும் மாணவர்கள், தனியார் அமைப்பினர், அரசியலாளர்கள், தலைவர்கள் முதலானோர் இது பற்றிச் சிந்திக்க வேண்டும்! நம் கையை வைத்தே நம் கண்ணைக் குத்துவது போல நம் தமிழ்ப் பிரபலங்களை வைத்தே நமக்குத் தீங்கு செய்ய முயலும் இந்திய அரசின் இந்த முயற்சியை இனியாவது நாம் முறியடிக்க வேண்டும்!

அதற்காக, இந்த முறை பத்மபூஷண், பத்மஸ்ரீ முதலான தேசிய விருதுகளைப் பெற இருப்பவர்களைத் தமிழ்ப் போராளிகள் சந்தித்துப் பேச வேண்டும்! தமிழ் இனத்தையே அழித்த இந்திய அரசு தரும் விருதை ஏற்கக்கூடாது என வலியுறுத்த வேண்டும்! உண்மையில் அதை ஏற்பது மரியாதை இல்லை, இழிவுதான் என்பதை விளக்க வேண்டும்! இந்த விருதை ஏற்பதால் தமிழினத்துக்கு ஏற்படும் மேற்கண்ட விளைவுகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்! அவர்கள் ஒருவேளை, இந்திய அரசியலாளர்களுக்கு அஞ்சிக் கூட இந்த விருதை ஏற்க முன்வந்திருக்கலாம். எனவே, துணிந்து இந்த விருதைப் புறக்கணிக்குமாறும், அவர்களுக்குப் பின்னால் ஒட்டுமொத்தத் தமிழினமும் இருக்கிறது என்றும் உறுதியளிக்க வேண்டும்!

ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், தமிழ்நாட்டிலேயே பிறந்து வளர்ந்த என்னைப் போன்றவர்களுக்கே, ஈழத் தமிழர்களை அழித்ததைப் பார்த்து இந்திய அரசு மீது இவ்வளவு காழ்ப்புணர்ச்சி ஏற்படுகிறது என்றால், ஈழத்திலேயே பிறந்து வளர்ந்தவரும், எல்லாக் கொடுமைகளையும் நேரில் பார்த்தவராக மட்டுமின்றி அனுபவித்திருக்கக் கூடியவருமான கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் அவர்களுக்கு இந்திய அரசு மீது எவ்வளவு சீற்றம் இருந்திருக்க வேண்டும்? ஆனால், அவரே ‘ஆடுகளம்’ படத்தில் நடித்ததற்காக அவருக்கு அளிக்கப்பட்ட இந்திய தேசிய விருதை ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்றால், விருது பெறுவது தொடர்பாக தமிழ்ப் பிரபலங்கள் இந்திய அரசால் மிரட்டப்படுகிறார்களோ எனும் ஐயம் வலுவாக எழுகிறது. எனவே, அந்தக் கோணத்திலும் நாம் சிந்தித்துப் பார்த்து, நம் தமிழ்ப் பெருமக்களுக்கு இந்த விஷயத்தில் தோள் கொடுக்க வேண்டும்!

தேவைப்பட்டால், அவர்களை விருது விழாவுக்குச் செல்லாமல் தடுக்கத் தெருவில் இறங்கிப் போராடவும் நாம் முன்வர வேண்டும்!

பண பலம், படை பலம், அரசியல் செல்வாக்கு ஆகியவற்றால் தமிழினத்தை அழித்தது போதாதென்று விருது வழங்கும் போர்வையில் இந்திய அரசு செய்யும் இந்த ராஜதந்திரச் சூழ்ச்சியை முறியடிப்போம்!

நமக்குத் தமிழ் ரசனை கற்பித்தவர்களுக்கு நாம் தமிழுணர்வு ஊட்டுவோம்!

போராடுவது நாமாக இருக்கட்டும்! வெல்வது தமிழாக இருக்கட்டும்!

Pin It