வேலை வாய்ப்புகளை வழங்குவதில் தமிழகம் பின் தங்கியுள்ளது என்று ‘டீம்லீஸ்’ எனும் நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கிறது. முன்னெப் போதும் இல்லாத அளவுக்கு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித் துறைகளில் வேலை வாய்ப்பு குறைந்து வருவதோடு நாடு முழுதும் சுகாதாரம் மற்றும் மருந்து உற்பத்தித் துறை ஏறுமுகமாக இருந்தாலும், தமிழகம் மட்டும் பின்னடைந்துள்ளது என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. தென்னக நகரங்களிலேயே வேலை வாய்ப்பில் மிகவும் பின்தங்கியிருப்பது சென்னைதான் என்றும் ஆய்வு கூறுகிறது. மிகவும் கவலையளிக்கக் கூடிய இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கக் கூடிய பிரச்சினை குறித்து ஆட்சியாளர்கள் கவலைப் படுவதாகத் தெரியவில்லை. அடுத்து வரவிருக்கும் தேர்தல்கள்தான் அழுத்தமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் பன்னாட்டு நிறுவனங்களை இறக்குமதி செய்தபோது வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்று உறுதிமொழியை மத்திய மாநில ஆட்சிகளின் தமிழக அமைச்சர்கள் கூறினார்கள். அப்படி வேலைவாய்ப்பு ஏதும் அதிகரித்து விடவில்லை. தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்கள் புதிதாக வேலைக்கு ஊழியர்களை சேர்க்காமல், குறைந்த ஊதியத்தில் பயிற்சி யாளர்களாக ஓராண்டுக்கு மட்டும் வேலைக்கு எடுத்து, உழைப்பை உறிஞ்சிக் கொண்டு, வீட்டுக்கு அனுப்பிவிடுகிறார்கள். 21000 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்த, நோக்கியா நிறுவனம், 7000 ஊழியர்களை நட்டாற்றில் தவிக்கவிட்டு, நிறுவனத்தை வேறு ஒரு நிறுவனத்துக்கு மாற்றிக் கொடுத்துவிட்டது. நோக்கியாவைக் கொண்டு வந்த தயாநிதி மாறன்கள் - மவுனம் சாதிக்கிறார்கள்.

தனியார்நிறுவனங்களின் கதை இப்படி என்றால், தமிழ்நாடு அரசு நிலையோ, மேலும் மோசம். ஆசிரியர் தேர்வில் சமூக நீதியைக் குழி தோண்டிப் புதைத்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சி, பல வேலைகளுக்கு அறிவிப்புகளை வெளியிட்டாலும் “பெருந்தொகை” கைமாறினால்தான் வேலை கிடைக்கும் என்ற நிலை.

தமிழ்நாடு தேர்வாணையம், குரூப்-1 தேர்வுகளுக்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும் என்ற சமூகநீதி கோரிக்கையையும் தமிழக அரசு காதில் போட்டுக் கொள்ள மறுக்கிறது. இந்தத் தேர்வுக்கான வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 30 ஆகவும், மற்ற அனைத்து வகுப்பினருக்கு 35 ஆகவும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இந்தத் தேர்வுகள் ஒரு காலத் திட்டத்தின்படியும் நடப்பது இல்லை. அத்துடன் வேலை வாய்ப்புக்காகக் காத்திருப்போர் பட்டியலும் அதிகரித்து வரும் நிலையில் 35 வயதுக்குள் வேலை வாய்ப்பு வழங்காதது அரசின் தவறே தவிர, இளைஞர்களின் தவறு அல்ல.  மற்ற மாநிலங்களில் இந்த வயது வரம்பு உயர்த்தப்பட்டிருக்கிறது.

அரியானா, ஜார்கண்ட், பீகார், திரிபுரா, குஜராத், கேரளத்தில் 45 ஆகவும், ஆந்திராவில் 41 ஆகவும், உ.பி.யில் 40 ஆகவும் உள்ள நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் 35 ஆகவே இருக்கிறது. வயது வரம்பு உயர்த்தப்பட்டால், 3.5 லட்சம் பட்டதாரிகள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் இளைஞர்களின் எதிர்காலம் நெருக்கடிக்கு உள்ளாவதால்தான்  அவர்கள் தவறான திசையில் தடம்மாறிப் போய் விடுகிறார்கள். செயின் பறிப்பு, குழந்தை கடத்தல், சைபர் கிரைம் என்ற கணினி தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோர் எல்லாம் படித்த இளைஞர்களாகவே இருப்பது ஆபத்தான அறிகுறி. கொலை, கொள்ளைகள் அதிகரிக்கும் மாநிலமாக தமிழ்நாடு மாறிக் கொண்டிருக்கிறது. அதிகாரிகள் தரும் அறிக்கைகள் புள்ளி விவரங்களில் மூழ்கிப் போய் கற்பனைப் பெருமைகளில் மூழ்கிக் கிடக்காமல் நாட்டின் நிகழ்வுகளை கவலையோடு பரிசீலிக்க வேண்டிய பொறுப்பு தமிழக முதல்வருக்கு உண்டு!

Pin It