ஒடிசாவிலோ, சட்டீஸ்கரிலோ, ஜார்கண்டிலோ, மேற்கு வங்கத்திலோ – மிகச் சரியாகச் சொல்வ தெனில் – "சிவப்பு மண்டலம்' என இந்திய அரசால் வரையறை செய்யப்பட்டிருக்கும் தனித்ததோர் நிலப் பகுதியிலோஒருவர் காவல்துறையாலோ துணை ராணுவப் படையினராலோ பழிதீர்க்கப்படுவதற்கு – நிரந்தர குற்றவாளியாக்கப்படுவதற்கு – போகிற போக்கில் கொல்லப்படுவதற்கு அவர் மாவோயிஸ்டாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு பழங்குடியினத்தவராக இருந்தால் போதுமானது. "ஒரு சுதந்திர அரசில் ஒரு பழங்குடியைக் கொல்வது எப்படி?' என்ற ஷோமா சவுத்ரியின் (நிர்வாக ஆசிரியர், "தெகல்கா') கட்டுரை (15 அக்டோபர் 2011) அந்த உண்மையைப் புலப்படுத்துகிறது. ஒரு திரைக்கதையையொத்த திருப்பங்களுடன் விரிகிறது அக்கட்டுரை; ஆனாலும் அது கதையல்ல.

“2011 செப்டம்பர் 9 அன்று, எஸ்ஸார் நிறுவன ஒப்பந்ததாரர் லாலா என்பவர் லிங்கா கொடாபி என்ற மாவோயிஸ்டுகளின் தொடர்பாளரிடம் 15 லட்சம் ரூபாயை தண்டேவாடா வணிகப் பகுதி ஒன்றில் வைத்து கைமாற்றிய போது இருவரும் பிடிபட்டனர். இந்தப் பணப் பரிவர்த்தனையில் தொடர்புடைய மூன்றாமவர் – ஒரு நக்சலைட் – தப்பி விட்டார்'' என அடுத்த ஓரிரு நாட்களில் பத்திரிகைகள் செய்தி ஒன்றை வெளியிட்டன. தலைமறைவாகிவிட்டதாகச் சொல்லப்பட்ட மூன்றாமவர் – சோனிசோரி (வயது 35) சில நாட்களுக்குப் பின் டெல்லியிலுள்ள "தெகல்கா' பத்திரிகை அலுவலகத்தில் தஞ்சமடைந்தார்; "வெளி உலகத்திற்கு உண்மையைச் சொல்ல நீங்கள் எனக்கு உதவ வேண்டும்' என்ற வேண்டுகோளை முன்வைத்து. “போலிசிடம் சரணடைந்து விடு. நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்கின்றனர் எனது உறவினர்கள். அப்பாவியான நான் எதற்குக் கைதாக வேண்டும்? நான் படித்தவள், எனது உரிமைகள் என்னவென்று அறிந்தவள். தவறேதும் செய்திருந்தால் நான் சிறை செல்வதற்கு அஞ்சமாட்டேன். எந்தவொரு ஆதாரமுமின்றி காவல்துறை என்னை குற்றவாளியாக்கத் துடிக்கிறது'' என்று ஈரம் வழியும் விழிகளோடு சோனி "தெகல்கா'விடம் முறையிட்டார்.

ஆபத்து மிகுந்ததும் அவ்வளவு எளிதில் எவரும் வெளியேறிவிட முடியாததுமான ஒடிசாவின் எல்லையோரத்தைக் கடந்து அவர் புதுதில்லி வந்து சேர்ந்திருந்தார். 12 வயதிற்கும் குறைவான தன் மூன்று குழந்தைகளையும் கவனிப்பாரின்றி உறவினர் வீடுகளில் தங்க வைத்திருப்பதாகக் கூறினார். ஆம், அவரது கணவர் "ஒரு மாவோயிஸ்ட்' எனக் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் இருக்கிறார். அவரது தந்தையோ "போலிசுக்கு உதவுகிறார்' என்ற சந்தேகத்தின் பேரில் மாவோயிஸ்டுகளால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார். மாவோயிஸ்டுகள் பற்றி தகவல் தரச் சொல்லி சோனிசோரியைக் காவல்துறை தொடர்ந்து சித்திரவதை செய்து வந்திருக்கிறது. அவர் மீது இதுவரை அய்ந்து வழக்குகள் புனையப்பட்டுள்ளன.

காவல் துறை தேடத் தொடங்கிய செப்டம்பர் 11 அன்று, தனது கிராமத்திலிருந்து அடர்ந்த காடுகள் வழியே ஓடத் தொடங்கிய சோனிசோரி மீது வழியில் துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது. குருதிக் காயத்துடன் தப்பிப் பிழைத்து அவர் தலைநகர் தில்லிக்கு வந்ததே உலகுக்கு உண்மையைக் கூறத்தான். மாவோயிஸ்டுகள் என்று கருதப்படும் ஏனைய பழங்குடிகளைப் போல் தலைமறைவாகிவிடவோ, வெளியுலகு அறியாத வகையில் பிற பழங்குடியினரைப் போல் சிறையில் வாடவோ, போலி மோதல் படுகொலை ஒன்றில் காவல்துறையால் அநியாயமாகக் கொல்லப்படவோ விரும்பாத அவர் எளிதில் வெளியேற முடியாத அவ்வனப் பிரதேசத்திலிருந்து அதிகார வர்க்கத்தின் இரும்புக் கோட்டையான தில்லியை வந்தடைந்த துயரப் பயணம் "வியக்கத்தக்க இந்தியா'வின் ('Incredible India') உள்ளம் பூரிக்கும் பயணத்தைப் போன்றதல்ல. ஆனாலும் அக்டோபர் 4, 2011 அன்று, அவர் தில்லி காவல் துறையால் பிணையில் வெளிவர முடியாத வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு விட்டார். சோனிசோரி சொல்லும் "உண்மை' தான் என்ன?

கிரண்டல் எனும் ஊரின் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர் சோனியை அணுகி ஒரு திட்டம் தருகிறார். அது, எஸ்ஸார் நிறுவன ஒப்பந்ததாரரான லாலாவிடம் பணம் பறிக்க சோனியின் உறவினரான லிங்கா கொடாபி (வயது 25) யை, ஒரு மாவோயிஸ்ட்டாக நடிக்கச் சொல்ல வேண்டும் என்பதுதான். லாலாவை மிரட்டிப் பணம் பெற்று, அப்பணத்தை லிங்கா காவல் துறையிடம் கொடுத்துவிட வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் சோனியின் மீது புனையப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் நீக்கப்பட்டுவிடும் என்ற அக்காவலரின் கடைந்தெடுத்த அயோக்கியத்தனத்திற்கு சோனி உடன்படவில்லை. ஆனால், அக்காவலரோ சோனியின் கைபேசியைப் பறித்து, அதிலிருந்து லாலாவிற்கு அழைப்பு விடுத்து, தான் ஒரு உள்ளூர் மாவோயிஸ்ட் எனக் கூறி, பணத்துடன் மறு நாள் தன்னை சந்திக்க வர வேண்டும் என எச்சரித்தார்.

அடுத்த நாள் மாலை சுமார் 4 மணியளவில் சீருடை அணியாத சிலர் ஒரு வண்டியில் வந்து, லிங்காவை பலவந்தமாக இழுத்துச் சென்றனர். அதிர்ச்சியடைந்த சோனி, சி.ஆர்.பி.எப். துணை கமாண்டரான மோகன் பிரகாஷ் என்பவரிடம் முறையிட்டபோது, சீருடை அணியாத அவர்கள் தங்கள் துறையினர் அல்லர் என்று கூறிவிட்டார். சோனி தனது சகோதரர் ராம்தேவுடன் கிரண்டல் காவல் நிலையத்திற்குச் சென்று முறையிட்டபோது, "சீருடை அணியாத அவர்கள் நக்சலைட்டுகளாக இருக்கலாம்' என்று புகாரை மறுத்திருக்கிறார், காவல்நிலையப் பொறுப்பிலிருந்த உமேஷ் சாகு என்பவர். ஆனால், லிங்காவையும் லாலாவையும் மார்க்கெட்டில் வைத்து கைது செய்ததாக முதல் தகவல் அறிக்கை (எண் 26/2011, கிரண்டல் காவல் நிலையம்) பதிவு செய்தவரே இச்சாகுதான். அதற்கடுத்த நாள் செய்தித் தாள்களில் இருவர் கைது பற்றியும், இவ்வழக்கில் சோனி தேடப்படுவதாகவும் வெளிவர, தப்பித்துவிட முடிவெடுத்தார் சோனி.

அவர் கூறுவது உண்மைதானாவென்பதை அறிய, சோனியிடம் இச்சதித் திட்டத்தை விளக்கிய மன்கர் என்ற அந்தக் காவலரைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ள வைத்தது "தெகல்கா'. இந்த உண்மைகளை ஒப்புக் கொண்ட அக்காவலர், லாலாவின் வீட்டிலிருந்தே தாங்கள் பணத்தைக் கையகப்படுத்தியதாகவும், இவ்வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் நீதிமன்றத்தில் இவ்வழக்கு தோற்றுவிடும் என்றும், அதுவரை சோனி தில்லியிலேயே பாதுகாப்பாக சில மாதங்கள் இருந்துவிட்டு வழக்கிலிருந்து விடுபட்ட பிறகு ஊர் திரும்பினால் போதுமென்றும் ஆலோசனை கூறினார். அதுவரை சோனி இப்பிரச்சனை குறித்து எவரிடமும் எதுவும் பேச வேண்டாமென்றும் அவர் பேசிய அதிர்ச்சிதரத்தக்க இந்த உரையாடலை "தெகல்கா' (www.tehelka) பதிவு செய்துள்ளது.

வனத்திற்குள்ளே ஒடுக்கப்படும் ஏனைய பழங்குடிகளின் குரலைப் போலல்லாமல், தில்லிவரை பயணம் செய்து வெளி உலகோடு தொடர்பு கொள்ளும் துணிவு சோனிக்கு மட்டும் வாய்த்ததெப்படி? சோனியின் தந்தையான மாத்ரு ராம் சோரி 15 ஆண்டுகளாகப் பஞ்சாயத்துத் தலைவராக இருந்து வருபவர். சோனியின் மாமா இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். சோனியின் மூத்த சகோதரர் காங்கிரஸ் கட்சியின் உள்ளூர் பிரமுகர். சோனி பழங்குடி மக்களுக்காகப் பணிசெய்து வரும் காந்தியவாதியான ஹிமான்சுகுமார் நடத்திவரும் ஆசிரமப் பள்ளியில் பயின்றவர். தற்போது ஜபேளி எனும் கிராமத்தில் இயங்கிவரும் பழங்குடிக் குழந்தைகளுக்கான பள்ளியில் அரசு நியமன ஆசிரியர். ஒரு பழங்குடிக் குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரி. இப்பின்புலமே தனது உரிமைகளை நிலைநாட்ட அவரை தில்லிவரை பயணிக்க வைத்துள்ளது.

“எனது மக்களுக்குப் பணிசெய்ய நான் ஊருக்குத் திரும்ப வேண்டும். எங்கள் குழந்தைகளுக்கு கல்வி தந்து சொந்தக் காலில் அவர்களை நிற்க வைக்க வேண்டும். எங்களுக்காகப் பரிந்து பேச நாங்கள் கற்றுக் கொள்ளவில்லையெனில், பழங்குடி மக்களான நாங்கள் முற்றாக அழிக்கப்படுவோம். லிங்காவும் என்னைப் போன்று சிந்திப்பவரே. போலிஸ், நக்சலைட் என இருவருக்கும் துணை போகாமல் எங்கள் மக்களுக்காகப் போராட வேண்டும் என்பதே அவரது லட்சியம்'' என கண்களில் பெருமித ஒளிவீச அவர் பேசியதாகக் கூறுகிறார் "தெகல்கா'வின் நிர்வாக ஆசிரியரான ஷோமா சவுத்ரி. சோனி, லிங்கா மட்டுமல்ல, நக்சல்பாரி அரசியலோடு தொடர்பில்லாத பினாயக்சென், ஹிமான்சுகுமார், கோப குஞ்சம் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட பழங்குடி மக்களின் களப்பணியாளர்களுக்கும் பசுமை வேட்டை பயங்கரவாத மண்டலத்தில் நிகழ்ந்த துயரம் இதுதான். "நீங்கள் காவல்துறை மற்றும் துணைராணுவப் படையின் ஆளாக இருக்க வேண்டும் அல்லது நக்சலைட்டுகளின் ஆதரவாளராக இருக்க வேண்டும். நடுநிலையாளராக ஒருபோதும் இருக்க முடியாது' என்பதே ராணுவ அதிகார வர்க்கத்தின் நிலைப்பாடு.

பல்நர், சமேலி, ஜபேளி, கீதம் போன்ற தண்டேவாடா மாவட்டத்தின் அடர்ந்த வனப் பகுதியில் துணைராணுவப் படையினர், நக்சலைட்டுகள் என இருதரப்பினருமே முகாம்கள் அமைத்திருக்கின்றனர். சந்தேகம், விசாரணை, கைதுகள், கொலை, மோதல் கொலைகள் ஆகியன கேள்விகளுக்கு இடமற்ற வகையில் இப்பகுதியில் அன்றாடம் நிகழ்ந்து வருகின்றன. லிங்கா, சோனி போன்ற படித்த புதிய தலைமுறையினரின் வாழிடமும் இதுவே. தங்கள் மக்களுக்கான குறைந்தபட்ச கூலிக்காகவும், சுரங்கங்களில் அல்லல்படுபவர்களின் உரிமைகளுக்காகவும், காடுகளிலிருந்து சட்ட விரோதமாக தேக்குமரங்களை வெட்டிக் கடத்தும் வனக் கொள்ளையர்களிடம் பெரும் பணத்தைப் பெற்றுக் கொண்டு, அவ்வாழிடங்களிலிருந்து தங்கள் மக்களை விரட்டியடிக்கும் காவல்துறைக் கயவர்களுக்கு எதிராகவும் போர்க்குரல் எழுப்புவதுதான் சோனிசோரி, லிங்கா போன்றோர் மீதான குற்றப் புனைவுகளுக்குக் காரணம்.

மேலும், ஒரு போலிசாக வாழ்க்கையைத் தொடங்கி இன்று உள்ளூர் அளவில் அதிகாரமிக்க காங்கிரசுக்காரராகவும் அரசு ஒப்பந்ததாரராகவும் வலம் வரும் அவ்தேஷ் கவுதம் என்பவரை எதிர்த்து மாவட்ட ஆட்சியரை அணுகி, தன் கிராமத்திற்கென ஒரு சொந்தப் பள்ளிக் கூட அனுமதியையும், அதற்கான கட்டட ஒப்பந்தத்தையும் பெற்று விட்டார் சோனி. அரசியல் ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் சோனி குடும்பத்தினரோடு கவுதம் பகை காட்டி வந்தார். தாக்குர் சாதிக்காரரான அவ்தேஷ் ஒரு பழங்குடிப் பெண்ணிற்குக் கிடைத்துவரும் முக்கியத்துவத்தை ஒப்புக் கொள்வாரா என்ன? ஆதிக்கசாதி, அரசுப் படைகள், முதலாளிய வர்க்கம் இவர்களின் கூட்டுதானே இயல்பாய் அமையும். சோனி, லிங்கா இருவரும் காவல்துறையின் கையாட்களாக மாற வேண்டும் என சில ஆண்டுகளாகவே நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டு வந்தனர்.

கடந்த ஆகஸ்டு 30, 2009 அன்று, லிங்காவை அவரது வீட்டிலிருந்து பலவந்தமாக இழுத்து வந்து, ஒரு காவல் நிலையத்தின் கழிவறையில் அடைத்து வைத்து கடும் சித்திரவதை செய்துள்ளனர். சட்டீஸ்கர் உயர்நீதி மன்றத்தில் லிங்காவின் சகோதரர் மாசரம் மற்றும் ஹிமான்சுகுமார் ஆகியோர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவிற்குப் பின், அதாவது 40 நாட்களுக்குப் பிறகு, அக்டோபர் 10 அன்று விடுவித்தனர். கொடுமை என்னவெனில், அடுத்தநாளே "நக்சலைட் என முத்திரை குத்தப்பட்ட லிங்காவிற்கு அடைக்கலம் தந்தவர்' எனக் காரணம் கூறி, உடன்பிறந்த மாசரம் காவல்துறையால் கைது செய்யப்பட்டதுதான். ஹிமான்சுகுமார் மீண்டும் நீதிமன்றத்தை நாட, மாசரம் விடுவிக்கப்பட்டார். உடலும், மனமும் சோர்வடையும் அளவுக்கு இடைவிடாது துன்புறுத்தல்களைத் தந்து கொண்டிருக்கும் காவல்துறையின் கொடுமைகளிலிருந்து தற்காலிகமாக விடுவிக்க, லிங்காவை தண்டேவாடாவிலிருந்து தில்லிக்கு வரவழைத்தார் ஹிமான்சு. தலைநகரின் அனைத்து ஊடகங்களிலும் காவல் துறையின் அடக்குமுறைகளையும் வனவளங்கள் கொள்ளை போவதையும் லிங்கா அம்பலப்படுத்தினார். ஆனால், தண்டேவாடா காவல் துறையோ தனது கொடும் கரங்களை சோனியின் பக்கம் நீட்டியதை அறிந்து, லிங்கா ஊர் திரும்ப நேர்ந்தது.

தனது கையாளாக மாற்ற முனைந்ததில் தோல்வி கண்ட காவல்துறை லிங்காவை "மாவோயிஸ்ட்' என முத்திரை குத்த முடிவெடுத்தது. இச்சூழலில் யாரும் எதிர்பார்த்திராத அந்த நிகழ்வு நடந்தேறியது. 2010 சூலை 7 அன்று, உள்ளூர் மக்களுடன் இணைந்து நூறுக்கும் குறையாத நக்சலைட்டுகள் அவ்தேஷின் வீட்டைச் சூழ்ந்து கொண்டு தாக்கினர். இத்தாக்குதலில் அவ்தேஷின் குடும்பத்தினர் இருவர் கொல்லப்பட்டனர். கட்சி நிதியாக இரண்டு கோடி ரூபாயை திரட்டித்தர அவ்தேஷிற்கு நக்சலைட்டுகள் கெடு விதித்திருந்ததாகவும்; கெடு முடிந்த நிலையில் எச்சரிக்கும் விதமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என ஒரு கதையும் இப்பகுதியில் பொது விநியோகத்தை முறைப்படுத்தப் போவதாகக் கூறிக் கொண்டு, அனைத்து ரேஷன் பொருட்களையும் தன் வீட்டில் கையகப்படுத்தி வைத்திருப்பதாக வந்த புகாரைத் தொடர்ந்தே நக்சலைட்டுகள் இந்தத் தாக்குதலை நடத்தினர் என மற்றொரு கதையும் பரப்பப்பட்டது. உண்மையான காரணம் ஏதோவொன்றாக இருக்கட்டும்.

தன்மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த அவ்தேஷ், இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என 60 நபர்களைக் குற்றம் சாட்டினார். இவர்களில் சோனியும் அவரது கணவர் அனில் புதானேயும் அடக்கம். தனது வீடு தாக்கப்பட்டபோது, அனில் புதானே தனது மஹிந்திரா பொலிரோ காரில் அவ்வீட்டை வலம் வந்ததாக அவ்தேஷ் குற்றம் சாட்டுகிறார். ஆனால், தாக்குதல் நடந்த அன்று, புதானே தனது காரில் ஜகதல்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தனது மாமியாரைக் காண சென்றிருந்தார் என்பதற்கும் சோனிசோரி ஜபேளியிலுள்ள அவரது பள்ளிக் கூடத்தில் இருந்தார் என்பதற்கும் ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனாலும், முதல் தகவல் அறிக்கையின்படி, புதானே சூலை 10 அன்று கைது செய்யப்பட்டு, அவரது காரும் பறிமுதல் செய்யப்பட்டது. ஆக, சோனியைப் பழிதீர்க்க அவரது கணவரை "மாவோயிஸ்ட்' என முத்திரை குத்தி சிறையிலடைத்தது அவ்தேஷின் ஆதரவு காவல்துறை.

சூலை 13 அன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், இப்பகுதி மக்களிடம் அவப்பெயர் பெற்ற மூத்த காவல்துறைக் கண்காணிப்பாளரான எஸ்.ஆர்.பி. கல்லுரி, இத்தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் லிங்காராம் கொடாபி என்றும், அவர் டெல்லியிலும் குஜராத்திலும் தீவிரவாதப் பயிற்சிகள் எடுத்துக் கொண்டவர் என்றும், எழுத்தாளர் அருந்ததிராய், மேதா பட்கர், டெல்லி பல்கலைக் கழகப் பேராசிரியர் நந்தினி சுந்தர் ஆகியோருடன் தொடர்பில் இருப்பவர் என்றும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட தகவல்களை ஆதாரங்கள் என அடுக்கித் தள்ளினார். ஆனால், இத்தாக்குதல் நடந்த நாளில் லிங்கா டெல்லியில் ஒரு இதழியல் மாணவராகப் பயின்று கொண்டிருந்தார். கல்லூரியின் தவறான தகவல்கள் மற்றும் பொய்யான குற்றச்சாட்டுகள் வெளிச்சத்திற்கு வர, சட்டீஸ்கர் காவல்துறை இயக்குனர் விஸ்வரஞ்சன் அதைத் திரும்பப் பெற வேண்டியதாகிவிட்டது.

“நான் முதன்முறையாக தண்டேவாடா வந்தபோது, ஒரு முக்கோண நிலை இருப்பதை அறிந்து கொண்டேன். அரசுப் படைகள், நக்சலைட்டுகள் இருவேறு முனைகள் எனில், இரண்டிற்கும் நடுவில் ஒரு முனையாய் சிக்கியிருப்பவர்கள் மக்கள். இப்பகுதியில் 90 சதவிகிதம் மக்கள் மாவோயிஸ்டுகளின் தொடர்பில் இருக்கிறார்கள். மாவோயிஸ்டுகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்குவது, அவர்களின் கூட்டங்களுக்குச் செல்வது ஆகியன மக்களுக்கு தவிர்க்க இயலாதவையாகி விட்டன. இதில் விரும்பிச் செல்பவர்கள் எவர், கட்டாயத்தின்பேரில் செல்பவர்கள் எவர் எனக் கண்டறிவது கடினம். அவ்வகையில் மாவோயிஸ்ட் என ஒருவரை முத்திரை குத்துவதும் இங்கு எளிதான ஒன்று'' என்கிறார் ஒரு துணைராணுவப் படை அதிகாரி.

ஆயுதப் போராட்ட வழிமுறை என்ற மாவோயிஸ்டுகளின் போராட்டப்பாதை விமர்சனத்திற்குரியதாக இருக்கலாம். நம்ப வைத்து கழுத்தறுக்கும் அரசாங்கத்திற்கு எதிராக, பழங்குடியின மக்களைப் போராட அணி திரட்டுபவர்களாக, தங்கள் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்கான நம்பிக்கையை அளிப்பவர்களாக, இக்கடப்பாட்டில் தம்மை அர்ப்பணித்துக் கொள்பவர்களாக மாவோயிஸ்டுகள் மட்டுமே இருக்கிறார்கள் என்பதும் மறுக்கவியலாததாக இருக்கிறது. விருப்பத்தின் பேரிலோ, கட்டாயத்தின் பேரிலோ மாவோயிஸ்டுகளை அம்மக்கள் ஆதரிப்பதற்கான காரணங்களை அறிந்து கொண்டால் மட்டுமே நியாயமும் உண்மையும் புலப்படும்.

“எஸ்ஸார் நிறுவனத்தின் "சித்ரகொண்டா பம்பிங் ஸ்டேஷன்' குழாய்கள் மாவோயிஸ்டுகளின் முக்கியத் தலைவராகயிருந்த ஆசாத் ஆணையின்பேரில் வெடிவைத்துத் தகர்க்கப்பட்டது. ஆசாத் படுகொலைக்குப் பிறகு, அந்தக் குழாய்கள் சரிசெய்யப்பட்டன. இப்பணியின் ஒப்பந்ததாரராக இருந்தவர் லாலா. இப்பணியை மேற்கொள்வதில் மாவோயிஸ்டுகளின் இடையீடு நிகழாமல் இருப்பதற்காகவே லாலா மூலம் பணப் பரிமாற்றம் நிகழ்ந்தது. அதன்பொருட்டே சோனியும் லிங்காவும் கைது செய்யப்பட்டுள்ளனர். "எஸ்ஸார் கையூட்டு வழக்கை' புனைய காவல் துறைக்கு வேறு வழியில்லை'' என ஒரு மூத்த ராணுவ அதிகாரி "தெகல்கா'விடம் தெரிவித்துள்ளார். லாலா அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் எஸ்ஸார் நிறுவன பொது மேலாளர் வர்மா என்பவர் காவல் துறையால் பின்னர் கைது செய்யப்பட்டார்.

மேலும், “எவ்வித ஆதாரங்களுமின்றியே சோனியும் லிங்காவும் இவ்வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். உண்மையில் இவ்வழக்கை பலவீனப்படுத்தவே காவல் துறை விரும்புகிறது. அதனால் சோனியும் லிங்காவும் விடுதலையாவது உறுதி. காவல் துறையினருக்குத் தேவையானதெல்லாம் அவர்களுக்குச் சேர வேண்டிய பங்கு மட்டுமே'' என காவல் துறையின் புனைவுகளை உடைக்கிறார் அந்த ராணுவ அதிகாரி. "மாவோயிஸ்டுகளுக்குப் பணம் தரப்பட்டது என்ற அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை மறுப்பதாக, எஸ்ஸார் நிர்வாகம் கூறியது.

மற்றொன்று, 2010 சூலை 7 அன்று, அவ்தேஷ் கவுதமின் வீட்டை மட்டுமல்ல, குவாகொண்டா காவல் நிலையம் மற்றும் துணை ராணுவப் படை முகாம் என இரண்டு தாக்குதல்கள் அதே நக்சலைட்டுகளால் நிகழ்த்தப்பட்டுள்ளது. ஆனால், அவ்தேஷ் வீடு தாக்குதல் தவிர, மற்ற இரண்டிலும் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. 2010 ஆகஸ்டு 15 அன்று, குவாகொண்டாவில் ராணுவ அலுவலகம் ஒன்று வெடிவைத்துத் தகர்க்கப்பட்டது. இதன் முதல் தகவல் அறிக்கையில் "அடையாளம் தெரியாத நக்சலைட்டுகள்' நிகழ்த்தியதாகக் குறிப்பிடப்படுகிறது. 16 செப்டம்பர் 2010 அன்று சில டிரக்குகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை இல்லை. ஆனால், மூன்று மாதங்களுக்குப் பிறகு, 30.10.2010 மற்றும் 11.12.2010 ஆகிய தேதிகளில் காவல்துறை நீதிமன்றத்தில் அளித்த மூன்று குற்றப்பத்திரிகைகளிலும் சோனி சோரியின் பெயர் "குற்றம் சாட்டப்படுபவராக' (accused) இடம் பெற்றிருக்கிறது. மேற்சொன்ன தாக்குதல்கள் நிகழ்ந்த நாள்முதல் டெல்லிக்கு அவர் தப்பிவந்த நாள்வரை, ஜபேளியில் உள்ள அவரது பள்ளிக்கூடத்திற்கு தினமும் சென்று வந்துள்ளார். பள்ளிக்கூட பதிவேட்டில் தினமும் கையெழுத்திட்டிருக்கிறார். ஆனால், தண்டேவாடா காவல் துறையோ, அவர் தலைமறைவாகவே இருந்தார்; அவரைப் பிடிக்க இயலவில்லை என்று அப்பட்டமாகப் பொய்யுரைத்தது.

"எனது வீடு தாக்கப்பட்ட பிறகு, நானே நான்கைந்து முறை சோனியை நேரில் கண்டிருக்கிறேன். எனது எதிரியாக இருந்த போதும் அவரைக் கைது செய்யச் சொல்லி காவல்துறையை நான் நிர்பந்திக்கவில்லை என்கிறார் அவ்தேஷ் கவுதம் "தெகல்கா'விடம். வழக்குகள் புனைந்து அச்சுறுத்தியதெல்லாம் அவரைத் தங்கள் கையாளாக மாற்றிவிட வேண்டும் என்பதற்காகத்தான்.

முதல் குற்றப்பத்திரிகையில் போலிஸ் தரப்பு சாட்சியாகச் சேர்க்கப்பட்டிருக்கும் முந்த்ரா முஜாகி என்பவர், குவாகொண்டா காவல் நிலையம் தாக்கப்பட்ட மறுநாள் காலையில் தனது பண்ணைக்குச் செல்லும் வழியில், சீருடை அணிந்த மாவோயிஸ்டுகளுடன் வனப் பகுதியில் சோனியைப் பார்த்ததாகக் குறிப்பிடப்படுகிறது. அடுத்த இரு குற்றப்பத்திரிகைகளில் சாட்சியாகச் சேர்க்கப்பட்டிருக்கும் முஜாகி லசா மற்றும் சன்னு முஜாகி இருவரும் அதே பாணியிலேயே சாட்சியம் அளித்திருக்கின்றனர். இம்மூன்று சாட்சியங்களும் ஒரே நாளில் பெறப்பட்டதாக (2010 அக்டோபர் 17) குற்றப்பத்திரிகை குறிப்பிடுகிறது. தாக்குதல் நடந்த சில மாதங்களுக்குப் பிறகு, மூன்று வெவ்வேறு நபர்கள் ஒரே மொழியில், ஒரே தன்மையில், ஒரே நபரைப் பற்றி மூன்று தனித்தனி வழக்குகளில் சாட்சியமளித்திருப்பதாகச் சொல்லப்படுவது பொருத்தமுடையதாகவா இருக்கிறது?

தண்டேவாடா பகுதியின் முதல் பழங்குடியின பத்திரிகையாளராக தனது படிப்பை முடித்து விட்டு, லிங்கா டெல்லியிலிருந்து திரும்புவதற்கு முன் ஹிமான்சுகுமாரை சந்தித்த போது, காவல்துறையின் அத்துமீறல்கள் குறித்த அச்சத்தை அவர் எழுப்பினார். "நான் ஏன் பயப்பட வேண்டும்? ஆதிவாசியாக இருப்பவர்கள் போலிசுக்கு கட்டாயம் பயப்பட வேண்டுமா என்ன?' என்று பதிலுரைத்தார் லிங்கா. ஆனால் ஹிமான்சு அச்சப்பட்டதைப் போலவே லிங்கா கைது செய்யப்பட்டு விட்டார். எஸ்ஸார் நிறுவன மேலாளருக்குப் பிணை வழங்கிய நீதிமன்றம் அதே வழக்கில் சோனி, லிங்கா இருவருக்கும் இன்றுவரை பிணை வழங்க மறுத்து வருகிறது. “பழங்குடியல்லாத பெரும்பான்மையினரின் விருப்பத்தை நிறைவேற்ற, சிறுபான்மை பூர்வகுடி மக்களின் உரிமைகள் ஒடுக்கப்படுவதன் அடையாளம்தான் சோனி மற்றும் லிங்கா இருவரும் குறி வைக்கப்படுகின்றனர். தொடக்கத்தில் பழங்குடிகள் குரலற்றவர்களாகத்தான் இருந்தனர். லிங்கா, சோனி இருவரும் அதில் மாற்றம் கொண்டு வந்திருக்கின்றனர்'' என தலைநகர் வரை சென்று தங்கள் போர்க்குரலை எழுப்பியிருக்கும் இவர்கள் குறித்து துணை ராணுவப் படை அதிகாரி ஒருவரே மனம் திறந்து "தெகல்கா'விடம் கூறியிருக்கிறார். குரலற்ற தம் மக்களின் போர்க்

குரலாக சிறைக் கொட்டடியிலும் நீதிமன்றச் சுவர்களுக்குள்ளுமிருந்து அடர்ந்த வனப்பகுதியின் இருண்மையைக் கீறி வெளிவரும் அப்போர்க்குரல் நம் காதுகளை எட்டாமல் இருப்பதேன்? செவியுள்ளவர்கள் கேட்கட்டும்.            

அனில் புதானே மரணம்

மூன்று ஆண்டுகளாக பிணை மறுக்கப்பட்டு, சிறையிலேயே முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டு, இடுப்புக்குக் கீழே முற்றிலும் செயலிழந்த நிலையில் 2.8.2013 அன்று, சோனி சோரியின் கணவரான அனில் புதானே மரணமடைந்துவிட்டார். “சோனிசோரியின் கணவராக இருந்ததுதான் புதானேயின் பிரச்சனை. சோனியின் மீதான காவல் துறையின் நெருக்குதலே, புதானேயை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி, இத்தனை சிறிய வயதில் கொன்று விட்டது'' என வருந்துகின்றனர் அவரது நண்பர்கள். மூன்று ஆண்டுகள் கழிந்த பிறகு, எந்தக் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி 2013 மே 1 அன்று, நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.

புதானே கைது செய்யப்பட்ட சில மாதங்களில் சோனிசோரியைக் கைது செய்த காவல் துறை, அவரைக் கொடூரமாக சித்திரவதை செய்ததன் விளைவாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனாலும் இதுவரை அவருக்குப் பிணை வழங்க மறுத்து வருகிறது. "முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்ட பிறகும் கூட, புதானேயின் வழக்கின் மீது போதிய கவனம் குவிக்கப்படாமல் இருந்தது மிகவும் வருந்தத்தக்கது' என்கிறார் ஜகதல்புர் சிறைக் கண்காணிப்பாளர் ("திஇந்து' 4.8.2013). கணவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்குக் கூட சோனிசோரிக்கு அனுமதி தர மறுத்துவிட்டது தண்டேவாடா மாவட்ட நீதிமன்றம். தந்தை இறந்துவிட, தாய் சிறையில் வாட நிராதரவான நிலையில், இன்று இவர்களின் மூன்று குழந்தைகளும். "சட்டத்தின் துணையுடன் ஒரு பழங்குடியைக் கொல்வது எப்படி?' என்பதை இப்படியாக நிகழ்த்திக் காட்டியிருக்கிறது சட்டீஸ்கர் காவல் துறை.

– அடுத்த இதழில் 

Pin It