பாபாசாகேப் அம்பேத்கர் மீது பெ.மணியரசன் எழுப்பும் விமர்சனங்களில் மிகவும் தற்குறித்தனமானது, இந்துத்துவக் கண்ணோட்டத்துடன் தான் அம்பேத்கர் பவுத்தத்தில் இணைந்தார் என்பதாகும். அம்பேத்கர் பவுத்தம் தழுவியதைப்பற்றி எவ்வளவு தவறான கற்பிதங்களையெல்லாம் சாதி இந்துக்களால் எழுப்ப முடியும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

பவுத்தம் இந்து மதத்தின் கிளை அமைப்பு என்றும், கிறித்துவம், இசுலாம் போல அந்திய நாடுகளிலிருந்து வந்த மதம் அல்ல என்றும், அந்த அடிப்படையில்தான் அம்பேத்கர் பவுத்தத்தில் இணைந்தார் என்றும் இந்துத்துவவாதிகள் பிதற்றுகிறார்கள். அம்பேத்கரை இந்து வட்டத்திற்குள் வைத்துக்கொள்ள இந்துக்களால் முன்னெடுக்கப்படும் முயற்சி இது. ஈவு இரக்கமற்ற வகையில் வன்கொடுமைகள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையிலும், ஒடுக்கப்பட்ட மக்களை இந்து மதத்தில் தக்கவைத்துக் கொள்ள இந்துத்துவவாதிகளுக்கு வேறு என்ன வழி இருக்கிறது? ஆனால் பவுத்தம் குறித்த அம்பேத்கரின் பார்வை முற்றிலும் வேறாக இருந்தது. "தீண்டத்தகாத மக்கள் இந்துக்கள் அல்லர்' என்பதே அம்பேத்கரியத்தின் அடிப்படைக் கோட்பாடாகும். அந்த வாதத்தின் அடிப்படையிலேயே அம்பேத்கரின் அரசியல் வாழ்க்கை தொடங்குகிறது. 1929 இல் சைமன் ஆணையத்திடம் அம்பேத்கர் அளித்த அறிக்கையில், “இந்துக்களைப் போல, சீக்கியர்களைப்போல, பார்சிகளைப்போல தீண்டத்தகாத மக்களும் தனித்த வகுப்பினர்; அவர்கள் இந்துக்கள் அல்லர். அம்மக்களை இந்துக்களாகக் கருதுவது பெரும் பிழையாகும். இந்திய வரலாற்று நோக்கில் தனித்த பண்பாடோடும், மத நம்பிக்கைகளோடும் வாழ்ந்த அம்மக்கள் தனித்த வகுப்பினராகக் கருதப்பட வேண்டும்'' என்று குறிப்பிட்டார். அந்த வாதத்தின் அடிப்படையில்தான் வட்டமேசை மாநாடுகள், இரட்டை வாக்குரிமை, பூனா ஒப்பந்தம், தனித்தொகுதிகள், இடஒதுக்கீடு, பவுத்தநெறி ஏற்பு என்று அனைத்து நிகழ்வுகளும் நடந்தன. அந்த கோட்பாட்டின் அடிப்படையில்தான் அம்பேத்கர் வாழ்நாள் முழுவதும் செயலாற்றினார்.

சிதறடிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை இந்து சமூகக் கட்டமைப்பிலிருந்தும் அதன் அடிமைத்தளையிலிருந்தும் விடுவித்து, அவர்களுக்கென தனித்த சமூக அடையாளத்தை சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த வாழ்க்கை முறையை உருவாக்கித்தர வேண்டும் என்பதே அம்பேத்கரின் வாழ்நாள் லட்சியமாக இருந்தது. அந்த தனித்த சமூக அடையாளம் பவுத்தமாகவே இருக்கமுடியும் என்று அவர் நம்பினார். பவுத்தத்தை ஏற்பதன் மூலமே இந்துக்களை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் உளவியலையும் ஆற்றலையும் மனத்துணிவையும் ஒடுக்கப்பட்ட மக்கள் பெற முடியும் என்றார். எனவேதான் இந்து மதத்திலிருந்து வெளியேறுவது என்ற முடிவை அம்பேத்கர் எடுத்தார். 1935 இல் பம்பாய் இயோலா மாநாட்டில், “இந்து மதத்தில் உள்ள சமத்துவமின்மைதான் நான் இந்துமதத்திலிருந்து வெளியேற எண்ணுவதற்கான அடிப்படைக் காரணமாகும். நான் ஓர் இந்துவாகப் பிறந்துவிட்டேன், அது என் தவறன்று; ஆனால் நான் ஓர் இந்துவாக இறக்க மாட்டேன்'' என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

அந்த அறிவிப்பு வெளியானவுடன் இந்திய நாடே அம்பேத்கரின் பக்கம் திரும்பியது. இந்து மதத் தலைவர்கள், இந்து மத அமைப்புகள் எல்லாம் மதம் மாறும் முடிவை மாற்றிக்கொள்ளும்படி வலியுறுத்தின. இஸ்லாம், சீக்கியம், புத்தமதம், கிறித்தவ மதம் உள்ளிட்ட இந்தியாவில் உள்ள அனைத்து மதத் தலைவர்களும் அம்பேத்கரைச் சந்தித்து தங்கள் மதத்தில் இணைய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். எவருடைய அழைப்பையும் அம்பேத்கர் ஏற்கவில்லை. தீண்டத்தகாத மக்களின் சமூக, பொருளாதார ஆன்மிகச் சிக்கல்களுக்கானத் தீர்வை எந்த மதம் அளிக்க வல்லது என்ற ஆய்வை 15 ஆண்டுகளுக்கும் மேலாக அம்பேத்கர் நடத்தினார். பாலி மொழியைக் கற்று பாலி மொழியிலிருந்த மூல பவுத்த நூல்களையெல்லாம் கற்றறிந்து, இறுதியில் பவுத்தமே சரியான வழி என்ற தீர்மானத்திற்கு வந்தார். பவுத்தத்தின் உண்மையான சாரத்தை அறிந்து அதன் பின்னரே பவுத்தத்தை ஏற்றார். இந்து மதத்திற்கு எதிரான புரட்சியை ஏற்படுத்திய பகுத்தறிவு நெறியே பவுத்தம் என்பதாலும், தீண்டத்தகாத மக்கள் பவுத்தர்கள் என்பதால் தான் அவர்கள் ஊருக்குப் புறம்பாக சேரிகளில் தள்ளப்பட்டனர் என்ற வரலாற்று உண்மையை கண்டுணர்ந்ததாலும்தான் அம்பேத்கர் பவுத்தத்தை ஏற்றார்.

அம்பேத்கரின் பவுத்த ஏற்பிற்கு இன்னொரு நோக்கமும் இருந்தது. அது, இந்து மதத்தை ஒழித்துக் கட்டுவதாகும். “இந்து மதத்தை இந்திய மண்ணிலிருந்து வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்தெறிவதற்கு கிறித்துவமோ இசுலாமோ பயன்படாது. அந்த மதங்களின் கடவுள் கோட்பாடுகளும், சாதிப் பழக்க வழக்கங்களும் அதற்குத் தடையாக இருக்கின்றன. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை வலியுறுத்தும் பவுத்தத்தால் மட்டுமே அதைச் செய்ய முடியும்'' என்ற அம்பேத்கரின் வரிகள் அதை மெய்ப்பிக்கின்றன.

எனவேதான், 1956 இல் நாகபுரி மண்ணில் லட்சக்கணக்கான மக்களுடன் பவுத்தம் ஏற்றபோது அவர் எடுத்துக்கொண்ட 22 உறுதிமொழிகளும் இந்து மதத்திற்கு நேர் எதிரான அறைகூவல்களாக இருந்தன. அவற்றில் முதல் மூன்று உறுதிமொழிகள், “பிரம்மா, விஷ்ணு, மகேஷ், ராமன், கிருஷ்ணன், கணபதி உட்பட எந்த இந்துக் கடவுளர்களையும் நான் வணங்க மாட்டேன்'' என்பதாகும். “இந்துமதம் சமத்துவமற்ற தன்மையுடன் அமைக்கப்பட்டிருப்பதாலும், மானுடத்தின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் இந்து மதம் கேடு விளைவிப்பதாலும் இந்து மதத்தைவிட்டு விலகி பவுத்த நெறியை ஏற்கிறேன்'' என்று சூளுரைக்கிறது 18 ஆவது உறுதிமொழி. எனவே அம்பேத்கரின் பவுத்த ஏற்பு, அடிப்படையில் இந்து மத ஒழிப்பிற்கானதுதானே தவிர இந்துமதத்தைப் பாதுகாப்பதற்கு அல்ல.

தேசிய இன உருவாக்கம் குறித்து முரண்பாடான கருத்துகளை அம்பேத்கர் கொண்டிருந்தார்' என்றும் "இந்திய ஒற்றுமைக்கு இந்து மதம் தேவை' என்ற எண்ணமும் அம்பேத்கரிடம் இருந்தது என்கிறார் பெ. மணியரசன்.

இந்திய மண்ணில் இந்தியத் தேசியத்திற்கோ, வேறு எந்த தேசியக் கருத்துருவாக்கத்திற்கோ இடமில்லை என்ற கருத்தையே அம்பேத்கர் கொண்டிருந்தார். இந்தியாவில் தேசிய இனங்கள் என்று எவையுமில்லை. இருப்பதெல்லாம் சாதிகள்தான். ஒவ்வொரு சாதியும் தனித் தேசியமாகச் செயல்படுகின்றன. ஒரு சாதி இன்னொரு சாதியைச் சார்ந்தவருக்கு இடம் அளிப்பதில்லை என்பதே அம்பேத்கரின் கருத்து. இந்திய விடுதலைப் போராட்டங்களிலும், தேசிய கருத்துருவாக்கத்திலும் இந்துமதம் முக்கியப் பங்காற்றியது என உறுதியாகச் சொல்ல முடியும். எண்ணிக்கையற்ற அளவில் சாதிகளையும் கடவுள்களையும் வழிபாட்டு முறைகளையும் சடங்கு சம்பிரதாயங்களையும் கொண்ட இந்தியர்களை "இந்துக்கள்' என்ற ஒற்றை அடையாளத்தின் கீழ் அடையாளப்படுத்தியதுதான் ஆங்கிலேய ஆட்சியாளர்கள் செய்த முதன்மையான தவறாகும்.

அதற்கு முன்பு மொழி அடிப்படையிலோ, இன அடிப்படையிலோ, வேறு எந்த புறக்காரணிகளின் அடிப்படையிலோ பொதுவான அடையாளம் என்று எதுவுமே இல்லாத இந்தியர்களை – ஆங்கிலேயர்களுக்கு எதிராக – "இந்து' என்ற சொல்தான் இணைக்கத் தொடங்கியது. "இந்துக்கள்' என்ற சொல் வேறு எதனையும்விட இந்திய விடுதலைப் போராட்டத்தில் மிக முக்கியப் பங்காற்றியது. விடுதலைப் போராட்டத்திற்கு காந்தி நீண்ட காலத்திற்குத் தலைமையேற்று நடத்தியதற்குக் காரணம், அவர் "இந்துமதம்' மற்றும் "இந்துக்களின்' அரசியலை வெற்றிகரமாகச் செய்ததுதான். எனவே "இந்திய தேச' உருவாக்கத்தில் இந்து மதத்திற்கு எந்தப் பங்களிப்பும் இல்லை என்று மணியரசன் கூறுவது வரலாற்றைப் புரிந்து கொள்ளாததன் வெளிப்பாடாகும்.

இந்திய ஒற்றுமைக்கு இந்து மதம் தேவை என்ற கருத்தை அம்பேத்கர் கொண்டிருந்தார் என்று கூறுவது, அவர் மீது அள்ளிவீசப்படும் அப்பட்டமான அவதூறு. இந்திய வரலாற்றில், இந்து மதத்தின் மீது அம்பேத்கர் அளவிற்கு கொடுந்தாக்குதல் நடத்தியவர் எவருமிலர். இந்து மதம் ஒழித்துக்கட்டப்படும்வரை, இந்துச் சாதிய சமூகத்தை சிறு பாதிப்பிற்கும் உள்ளாக்க முடியாது என்றார் அம்பேத்கர். “இந்து சமூகக் கட்டமைப்பில் தான் இந்தியாவின் பலவீனம் தங்கியிருக்கிறது. எனவே இந்து மதம் எவ்வளவு விரைவில் ஒழிக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு நல்லது. நமது சமூக நெறிகளும், இந்து மத மரபுகளும் நமது ஒற்றுமையைச் சீர்குலைப்பவையாக உள்ளன. எதிர்கால இந்தியாவில் இந்து மதத்தின் பங்கு எந்த அளவில் இருக்கப்போகிறது என்பதைப் பொருத்தே இந்தியாவின் எதிர்காலம் அமையும்'' என்று இந்து மதத்திற்கு எதிரான தனது கருத்தை துல்லியமாகப் பதிவுசெய்துள்ளார் அம்பேத்கர்.

1936 இல் ஜாட்பட் தோடக் மண்டல் என்ற இந்துமதச் சீர்திருத்த இயக்கத்தின் ஆண்டுக்கூட்டத்தில் தலைமையுரையாற்ற டாக்டர் அம்பேத்கர் அழைக்கப்பட்டிருந்தார். அவர் தயாரித்திருந்த உரையில், இந்து மதம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை நீக்கினால் தான் கூட்டத்தை நடத்த முடியும் என்று மண்டல் அமைப்பினர் அம்பேத்கரிடம் கூறினர். தனது உரையில் ஒரு காற்புள்ளியைக்கூட மாற்ற முடியாது என்று அம்பேத்கர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இறுதியில் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. அந்த அளவிற்கு இந்து மதம் ஒழிக்கப்படவேண்டும் என்ற கருத்தில் தீவிரம் காட்டியவர் அம்பேத்கர். மண்டலுக்காக ஆற்றவிருந்த உரையை பிறகு அம்பேத்கர் "சாதி ஒழிப்பு' என்ற பெயரில் நூலாக வெளியிட்டார். ஆயினும், அம்பேத்கர் இந்துமத ஆதரவாளராக இருந்தார் என்று மணியரசன் போன்றோர் எழுதுவது, இந்து இடைநிலைச் சாதியக் காழ்ப்பு அல்லாமல் வேறென்ன?

தமிழ்த்தேசியவாதிகளில் மிகப் பெரும்பான்மையானவர்கள் இந்துமதப் பற்றுடையவர்களாக இருக்கிறார்கள் என்பதே உண்மை. தங்களின் இந்துமதப் பற்றின் காரணமாகவே தமிழ்த்தேசியவாதிகள் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள்; இனிமேலும் சந்திக்கப்போகிறார்கள். 2007 பிப்ரவரி "தமிழர் கண்ணோட்டம்' இதழில், "இந்து மத ஒழிப்பா வர்ண ஒழிப்பா' என்ற தலைப்பில் பெ. மணியரசன் எழுதியுள்ள கட்டுரையில், “இந்து மதமும் இந்துக் கடவுள்களும் பார்ப்பனியச் சரக்குகள் என்று எளிதில் புறந்தள்ளிவிடமுடியாது. தமிழர்களிடையே அவற்றுக்கான உளவியலும் இருப்பும் ஆழமாக உள்ளன'' என்கிறார்.

இந்துமதம் தமிழர்களின் மதம் என்றும், இந்துக் கடவுள்கள் எல்லாம் தமிழர்களின் கண்டுபிடிப்புகள் என்றும் கூறும் மணியரசன், தங்களின் மதத்தினரோடு ஒப்புரவுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களை தமிழ்த்தேசியம் என்ற பெயரில் மற்ற மாநில இந்துக்களிடமிருந்து பிரிக்க நினைப்பது ஏன்? தங்கள் மதத்தினரோடு சேர்ந்து வாழ்ந்தால்தானே சமூக பலமுள்ளவர்களாகவும், அரசியல், பொருளாதார பலமுள்ளவர்களாகவும் தமிழர்கள் திகழ முடியும். காசியையும், ராமேஸ்வரத்தையும் தனித் தனி நாடுகளாக்குவதற்கு இந்துத் தமிழர்கள் சம்மதிப்பார்களா? தமிழர்களின் தனி நாடு கோரிக்கையினால் இந்து மதத்தின் ஒற்றுமையும் பலமும் குறைந்து விடாதா?

இந்து மதத்தில் நீண்ட காலமாக இருந்துவரும் தமிழர்களுக்கு எந்த அடிப்படையில் தனிநாடு தேவை? மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்தியாவில் இந்துமத ஆட்சிதானே நடக்கிறது! நாடே இந்து நாடுதானே! காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் சரி, பாரதிய ஜனதா கட்சியாக இருந்தாலும் சரி, தி.மு.க., அ.தி.மு.க., கம்யூனிஸ்ட் என்று யார் ஆட்சி செய்தாலும் மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்து ஆட்சியைத்தானே நடத்திக்கொண்டிருக்கிறார்கள். ஆளும் கொடும் இந்து பார்ப்பன அதிகார வர்க்கத்திடமிருந்து ஆட்சி அதிகாரத்தை இடைநிலைச் சாதிய ஆதிக்க சக்திகளிடம் கைமாற்றிக் கொடுப்பதற்கான வஞ்சகத்திட்டமே இந்துத் தனித் தமிழ்நாடு முழக்கம். சாதி ஒழிப்பு, பொதுவுடைமை என்பதெல்லாம் ஒப்புக்குப் பேசப்படும் வாதங்களாகும்.

தமிழ்த்தேசியம் பேசும் பெ.மணியரசனைப் போன்ற இந்துமதப்பற்றாளர்கள், இந்து மதம் குறித்தும், சாதியச் சமூகக் கட்டமைப்பு குறித்தும் விதவிதமான விளக்கங்களைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், 150 ஆண்டுகளுக்கும் மேலாக, தனித்தமிழ், தமிழ்நாடு, தமிழ்த்தேசியம் என்று விவாதிக்கப்படும் கருத்துருவாக்கங்கள் அனைத்தும் இந்து மதவாதிகளாலும், சைவ வேளாளச் சாதியவாதிகளாலும் இந்துக் கண்ணோட்டத்துடன் உருவாக்கப்பட்டவையாகும். தமிழ்த்தேசிய சிந்தனைப் போக்குகளை கவனித்துவரும் எவரும் இதை அறிவர். இந்து மத ஒழிப்பு, வேத இதிகாச எதிர்ப்பு, இந்து பார்ப்பன – வேளாளச் சாதி எதிர்ப்பு, சாதி ஒழிப்பு போன்றவற்றை முன்வைத்த ஒடுக்கப்பட்ட மக்களின் தமிழ், தமிழர், திராவிடர் வரலாற்றை இருட்டடிப்பு செய்துதான் இந்துத் தமிழ்தேசியவாதம் வளர்ந்து வருகிறது.

தனது நூல் நெடுகிலும் சாதி ஒழிப்பு குறித்து அதிகம் அக்கறை காட்டிக் கொள்ளும் மணியரசன், சாதி என்பது "இயல்பான மனிதத் தற்காப்புணர்வு' என்று வரையறுக்கிறார். சாதிக்கு இப்படியொரு விளக்கத்தை அளித்த மணியரசனை சாதி உணர்வாளர்கள் வெகுவாய் பாராட்டியிருப்பார்கள். சாதி உணர்வு, இயல்பான மனித கூட்டுத் தற்காப்புணர்வு என்றால், அந்த தற்காப்புணர்வை ஏன் ஒழிக்க வேண்டும்? சாதிகளை ஒழிக்கவேண்டும் என்று சொல்லிக் கொண்டே சாதி உணர்வை தற்காப்புணர்வு என்றும், சாதிவெறியர்களை தமிழினக்காவலர் என்றும் எழுதுவதை கேடுகெட்ட நரித்தந்திரமிக்க "இரட்டை வேடம்' என்று சொல்வது தவறாகி விடாது. சாதி உணர்வை, "இயல்பான மனித கூட்டுத் தற்காப்பு உணர்வு' என்று எழுதுமளவிற்கு சாதிய உணர்வு நிரம்பிய மணியரசன் போன்ற மனிதர்களால் முன் வைக்கப்படும் தமிழ்த் தேசியம், "சமூக விரோத தேசிய'மாகத்தானே இருக்க முடியும்.

 "சாதி அமைப்பு மெல்லத் தேய்ந்து தேய்ந்து மறைந்து போகும். சாதிகளை மறையச் செய்ய நடைமுறைகள் ஏதும் தேவையில்லை' என்று கூறும் மணியரசன், சாதிக்கு எதிரான எந்த நடவடிக்கையும் தேவையில்லை என்பதோடு, சட்டங்களால் சாதி அமைப்பைத் தகர்க்க முடியாது என்றும் அறிவிக்கிறார்.

தமிழ் மொழிப்பற்றை ஊட்டி, இன உணர்வை வளர்த்தெடுப்பதன் மூலம் சாதி ஏற்றத்தாழ்வுகளை நீக்கிவிட முடியும் என்றும், தமிழர்களைப் பொதுவுடைமைவாதிகளாக மாற்றி, மக்கள் குடியரசை நிறுவிவிட முடியும் என்றும் தமிழ்த் தேசியவாதிகள் நம்புவதுதான் வேதனைதரும் வேடிக்கையாகும். "தமிழின உணர்வு கொள்வோம்! சாதிகளை ஒழிப்போம்!' என்று கூறிவிட்டாலே சாதிகளைத் தமிழர்கள் ஒழித்துக் கட்டிவிடுவார்களா என்ன? தமிழ்த்தேசியவாதிகளில் சிலர் சாதிகளைக் கொண்டே தமிழர்களை அடையாளம் கண்டு கொள்ள முடியும்; எனவே சாதி அடையாளங்களைத் தமிழர்கள் துறக்க வேண்டியதில்லை என்றும் பேசியும் எழுதியும் வருகின்றனர்.

தேசிய இனக் கருத்துருவாக்கத்திற்கு "மொழி' முக்கியமான இடத்தை வகிக்கும் என்ற தமிழ்த்தேசியவாதிகளின் வாதம் ஏற்கத் தகுந்ததே! ஆனால், "தேசிய இன'க் கருத்துருவாக்கத்திற்கு மிகவும் அடிப்படைத் தேவையான "பொதுவான வாழ்விட உணர்வு' என்பதே தமிழர்களுக்கு இல்லை. எந்த சாதி இந்துத் தமிழனும், சேரித் தமிழர்கள் வாழும் பகுதிகளை தங்கள் நாட்டின் ஒரு பகுதியென்றோ தமிழர்களின் வாழ்விடம் என்றோ கருதுவதில்லை. தங்களின் தெருக்களில் தலித்துகள் நடக்கக் கூடாது என்று தமிழ்நாட்டின் அனைத்து சாதி இந்துக்களும் ஒரு மனதாகக் கூக்குரலிடுவதை தமிழ்த்தேசியவாதிகள் அறியாமலில்லை. தமிழர்கள் இந்துக்களாக – சாதிப் பற்றாளர்களாக இருப்பதை பெரும்பாலான தமிழ்த்தேசியவாதிகள் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை.

தமிழர்களிடையே நிலவும் இந்துப் பண்பாட்டையோ, சடங்குகளையோ, பழக்க வழக்கங்களையோ ஒழிப்பது குறித்து தமிழ்த்தேசியவாதிகள் பேசுவதில்லை. ஆனால் சாதிகளை ஒழிக்க வேண்டும் என்று மட்டும் முழங்குகின்றனர். இந்த இரட்டை வேடம்தான் தமிழ்த்தேசியவாதிகள் இந்து மதப் பற்றாளர்கள் என்பதை நிரூபிக்கிறது. எனவேதான் தமிழ்த்தேசியம் இந்துத்துவத்தின் இன்னொரு பரிணõமமாக வெளிப்பட்டு வருகிறதோ என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டியுள்ளது.

– தொடரும்

Pin It