அறிவியலும் தொழில் நுட்பமும் மனித சமூக வளர்ச்சியின் முக்கியமான மைல்கற்களாகும். உலகின் ஒவ்வொரு தேசிய இனமும் தனக்கான சொந்த அறிவியல் தொழில்நுட்ப அறிவினைப் பெற்றே வளர்ந்து வந்துள்ளது. நாகரீகமடைந்த சமூகம் மட்டுமன்றிப் பழங்குடி மற்றும் நாட்டுப்புறச் சமூகங்களுக்கும் இவ்விதி பொருந்தும். பழந்தமிழ்ச் சமுதாயம் பெற்றிருந்த அறிவியல் தொழில்நுட்ப அறிவும் நுண்மாண் நுழைபுலனும் தமிழகத்தின் பல்வேறு வரலாற்று ஆதாரங்களில் காணக் கிடைக்கின்றன. தமிழ் இலக்கிய இலக்கண ஆதாரங்கள் மட்டுமன்றிப் புதைபொருட் சுவடுகளிலும் இன்றும் நின்று நிலைத்திருக்கும் பழந்தமிழர் கட்டிடக் கலைச் சின்னங்களிலும் தமிழர்தம் அறிவியல் தொழில்நுட்ப ஆற்றல் பொதிந்து கிடக்கின்றது. பழந்தமிழர் அறிவியல் தொழில்நுட்பப் புலமை, பல்வேறு மொழி, இன, நில ஆதிக்கச் சூழலில் சிதைவுகளுக் குள்ளாகிக் காலப்போக்கில் தன் அடையாளத்தை இழந்துநின்ற நிலையில் பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்த ஐரோப்பியர் வருகை பல புதிய மாற்றங்களை இந்திய அளவிலும் தமிழக அளவிலும் கொண்டுவந்தது.

ஐரோப்பியர் வருகை, அச்சியந்திர அறிமுகம், ஆங்கிலக் கல்வி மூன்றும் இணைந்து தமிழ் இலக்கிய வரலாற்றில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தின. உரைநடை வடிவம் தமிழர்க்குப் புதியதன்று என்றாலும் மேற்சொன்ன மூன்று காரணிகளும் தமிழ் உரைநடையின் பாரிய பாய்ச்சலுக்கு அடித்தளமிட்டன என்பதில் மிகையில்லை. தொடக்கத்தில் தமிழ் உரைநடை, சமயக் கருத்தாக்கங்களை எளிமையாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு வடிவமாக மட்டுமே பயன்பட்ட நிலையிலிருந்து படிப்படியாக முன்னேறி நாட்குறிப்புகளாக, கட்டுரைகளாக, கதைகளாக, புனைகதைகளாக, பாடநூல்களாக முன்னேற்றமடைந்தன. தமிழ் உரைநடையின் முன்னேற்றப் படிக்கற்கள் ஒவ்வொன்றிலும் ஐரோப்பியப் பாதிரிமார்களின் பங்கும் பணியும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன.

இன்று நாம் கற்றுப் பயன்கொள்ளும் அறிவியல் தொழில்நுட்பமும் அது குறித்த கல்வியும் ஐரோப்பியர் வருகையை ஒட்டி நமக்கு அறிமுகமானவை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அறிவியலும் தொழில்நுட்பமும் உலக அளவில் மிகப்பெரிய வளர்ச்சி பெற்ற காலம் பத்தொன்பதாம் நூற்றாண்டு. ஆங்கிலேயர்களின் உலகப் பரவலாக்கமும் ஆங்கிலத்தின் உலகப் பரவலாக்கமும் இணைந்து ஆங்கிலமே உலகின் அறிவுமொழி, அறிவியல் மொழி என்ற நம்பிக்கை காலனி நாடுகளில் வேர்விட்டு நின்று நிலைபெற்ற காலம் அது. தொடக்கத்தில் ஆங்கிலேயர்கள் தம் காலனி நாடுகளில் ஆங்கில வழியிலேயே கல்வியைப் புகட்டத் தொடங்கினர். தாய்மொழி வழியாகக் கல்வியை -அறிவியலைப் படிக்கும் வாய்ப்பு ஏற்படுத்துவதன் மூலமே சிந்தனைத்திறமும் புதியன படைக்கும் வேட்கையும் அதற்கான ஆராய்ச்சி ஆற்றலும் பெருகும் என்ற விழிப்புணர்வு மெல்லத் துளிர்விடத் தொடங்கியது. காலம் செல்லச்செல்லத் தாய்மொழிவழிக் கல்வியின் இன்றியமையாமையை உணர்ந்த கிருத்துவப் பாதிரிமார்கள் தாய்மொழிக் கல்வியில் கவனம் செலுத்தத் தொடங்கினர். கற்கும் மக்களின் தாய்மொழியில் கல்வியை, குறிப்பாக அறிவியலைக் கொண்டு சேர்ப்பதில் கிருத்துவப் பாதிரிமார்களின் பணி மகத்தானதாயிருந்தது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் மக்களின் கல்வி வளர்ச்சியிலும் அறிவுப் பெருக்கத்திலும் அக்கறை கொண்ட ஆட்சியாளர்களும் கல்வியாளர்களும் கிருத்துவச் சமய அமைப்புகளும் தமிழ்மொழி மூலம் கல்வியை - அறிவியலைப் பரப்பும் வழி பற்றி முனைப்புடன் சிந்திக்கலாயினர். தமிழில் அறிவியலைக் கற்பிக்க, பள்ளிக்கூடங்களில் கல்வி கற்கும் இளம் மாணவர்களுக்கேற்ற முறையில் பாடத்திட்டத்தை அடியொற்றித் தமிழில் அறிவியல் பாடங்களை எழுதி வழங்க வேண்டும். மேலும் அதே அறிவியல் செய்திகளைப் பொதுமக்கள் விரும்பிப் படித்துத் தெளிவு பெறும் வகையில் கட்டுரை வடிவிலும் கதைப் போக்கிலும் சுவாரசியமாகச் சொல்லும் வகையில் தருதல் வேண்டும். தொடக்கக் காலங்களில் இந்த அடிப்படையில் ஆங்கில அறிவியல் நூல்கள் மொழியாக்க வடிவாகவும், மறுஆக்கப் படைப்பாகவும் உருவாக்கப்பட்டன.

பொறியாளர் பா.வே.மாணிக்க நாயக்கர் 1920களில் அறிவியல் கலைச் சொற்களைத் தமிழ்ப்படுத்தி தமிழில் அறிவியல் சொற்கள் என்ற தலைப்பில் தொடர்ந்து செந்தமிழ்ச் செல்வி என்ற இதழில் எழுதினார். ஜஸ்டிஸ் பத்திரிக்கையிலும் அவர் இப்பணியைத் தொடர்ந்தார். விஞ்ஞானம், சாஸ்திரம் என்ற சொற்களுக்குப் பதிலாக அறிவியல் என்ற கலைச்சொல்லை உருவாக்கியவர் அவரே. பா.வே.மாணிக்க நாயக்கரால் அறிவியல் என்ற சொல் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு 1919 என்பார் இராம.சுந்தரம். (தமிழ் வளர்க்கும் அறிவியல், ப.82)

அறிவியல் தமிழ், கருக்கொண்டு, உருக்கொண்டு சற்றேறக் குறைய இருநூறு ஆண்டுகளைத் தொட்டுவிட்ட பிறகும் தமிழின் மொழி வரலாற்றிலும் இலக்கிய வரலாற்றிலும் இன்றும் அறிவியல் தமிழை இணைத்துக் காணும் நிலை உருவாகவில்லை. அறிவியல் தமிழ், இலக்கிய வரலாற்றில் புறக்கணிக்கப்படுகிறது. இந்நிலை மாற வேண்டும். கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் தமிழ் இலக்கிய வரலாறு என்னும் நூலில் குறிப்பிடும் பின்வரும் பகுதியை நாம் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.

தமிழில் அறிவியல் நூல்களின் வளர்ச்சி பற்றி இலக்கியத்தின் வரலாற்று நூல் ஒன்றிலாவது எதுவும் இல்லை. அதை நாம் செய்யாத வரையில், தமிழிலக்கிய வரலாறு தமிழர்களின் சிந்தனை வரலாற்றைச் சுட்டுவதாகவே அமைய முடியாது.

தமிழ்வழிக் கல்வி:

ஐரோப்பிய அறிவியலைத் தமிழில் தரும் முயற்சிகள் முதன்முதலில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டது. இலங்கைக்குச் சமயப்பணி செய்யவந்து, தம் பெயரைப் பெரிய சஞ்சீவநாத சுவாமிகள் என மாற்றம் செய்து கொண்ட கிருத்துவப் பாதிரியார் ஒருவர் பதினேழாம் நூற்றாண்டில் கிரீஸ் நாட்டில் வழக்கில் இருந்த அறிவியல் உண்மைகளைத் தொகுத்து ஓலைச்சுவடிகளில் எழுதினார். அவர் காலத்தில் அச்சுமுறைகள் வழக்கில் இல்லாததால் அவருடைய முயற்சிகள் அச்சேறவில்லை. அச்சுவடி பின்னர், அண்டபிண்ட வியாக்கியானம் என்று தலைப்பில் 1874 ஆம் ஆண்டு அச்சேறியது.

அறிவியல் கருத்துகளைத் தமிழில் மக்களுக்குப் புரியும் வகையில் எளிமையாகக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற கருத்து 1830 ஆம் ஆண்டு வாக்கில் வேகமும் விறுவிறுப்பும் அடையத் தொடங்கியது. இந்த ஆண்டில்தான் தாய்மொழியாகிய தமிழ் மூலம் சிறுவர்கட்குப் பாடம் புகட்டும் தமிழ்ப் பயிற்சி மொழித்திட்டம் ஆட்சியாளர்களாலும் கல்வித்துறையினராலும் தொடங்கி வைக்கப்பட்டது. முதல் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை தமிழே பயிற்சி மொழியாக்கப்பட்டது. பாடமொழி தமிழாகியதால் அதற்கிணங்கப் பாடநூல்கள் தமிழில் எழுத வேண்டிய இன்றியமையாத தேவை ஏற்பட்டது. அதற்கேற்ப ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த அறிவியல் நூல்களைத் தமிழாக்கம் செய்து வெளியிடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

முதல் அறிவியல் மாத இதழ்

அறிவியலின் தமிழாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட காலத்தில் அம்முயற்சிக்கு வலுவ+ட்டும் முறையில்  1831இல் சென்னைக் கிருத்துவத் துண்டறிக்கைச் சங்கத்தால் தமிழ் மேகசின் எனும் பெயரில் தமிழ் மாத இதழொன்று வெளிவரத் தொடங்கியது. இவ்விதழில் அறிவியல் கட்டுரைகள் பல வெளியிடப்பட்டன.

முதல் தமிழ் அறிவியல் நூல்

தமிழில் முதல் அறிவியல் நூலை உருவாக்கியவர் என்ற பெருமைக்குரியவர் சார்லஸ் தியாப்பிலஸ் ஈவால்ட் ரேனியஸ் பாதிரியாராவார். செருமனி நாட்டைச் சேர்ந்த இவர் 1832இல் ஆங்கில அறிவியல் நூலை அடியொற்றிப் பூமி சாஸ்திரம் எனும் பெயரில் பூகோள நூல் ஒன்றினைத் தமிழில் எழுதி வெளியிட்டார். மேலும், பூகோளம், சரித்திரம், இயற்கை, வான சாஸ்திரம், மனுக்குல வரலாறு, சூரிய மண்டலம், பிரெஞ்சு இலக்கணம், கால நூல், தர்க்கம் முதலான பாட நூல்கள் பலவற்றையும் ரேனியஸ் பாதிரியார் தமிழில் எழுதியளித்துள்ளார். தமிழில் அறிவியல் நூல்களை உருவாக்குவதில் முன்னோடியாக இவர் ஆற்றியுள்ள தமிழ்ப்பணி சிறப்பிற்குரியதாகும்.

தமிழின் முதல் அறிவியல் நூலான பூமி சாஸ்திரத்தின் முன்னுரையில் ரேனியஸ் தம் அறிவியல் தமிழ் முயற்சியைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

நீங்கள் குடியிருக்கிற தேசத்தின் வயனங்களையும் இந்தத் தேசம் அடங்கிய பூமியின் வயனங்களையும் அறியாமல் இந்தத் தேசமே பூலோக மென்று அநேகர் நினைக்கிற படியினாலே, நான் அந்த வயனங்களை உங்களுக்கு அறிவிக்க விரும்பி, ஐரோப்பாக் கண்டத்திலுள்ள கல்விமான்கள் பூமியைக் குறித்துச் செய்த புத்தகங்களைப் பார்த்து பூமி சாஸ்திரமெனப்பட்ட இந்தப் புத்தகத்தைச் செய்தேன்

பூமி சாஸ்திரத்தில் பயன்படுத்தப்பட்ட கலைச்சொற்களை ரேனியஸ் நாமங்கள் என்று குறிப்பிடுகின்றார். இந்நூலில், பூமி சாஸ்திரத்திலே குறிக்கப்பட்டிருக்கிற நாமங்களின் அட்டவணை என்ற தலைப்பில் 51 கலைச் சொற்களடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளார். அவர் கலைச் சொல்லாக்கத்துக்கு எந்தவிதக் கோட்பாடுகளைக் கடைப்பிடித்தார் என்பதை அறிதற்கில்லை. ரேனியஸ் கலைச்சொல் பட்டியலே தமிழின் முதல் கலைச்சொல் பட்டியலாகும். ரேனியஸே தமிழின் முதல் கலைச் சொல்லாக்குநரும் ஆவார்.  (http://www.koodal.com/tamil/research/கலைச்சொல்லாக்கம்: சாமுவேல் பிஷ் கிறின்)

இதனைத் தொடர்ந்து பூமி சாஸ்திரச் சுருக்கம், பூமி சாஸ்திரப் பொழிப்பு,பூமி சாஸ்திரப் பாடங்கள் ஆகிய நூல்கள் 1846 வரை தமிழாக்கமாகத் தமிழில் வெளிவந்தன. இக்காலக் கட்டத்தில் பள்ளியளவில் பயன்படுத்தத்தக்க அறிவியல் நூல்களைத் தமிழில் வெளியிடுவதில் குறிப்பிடத்தக்கவை 1850க்கும் முன்னதாக உருவாக்கப்பட்ட சென்னைப் பாடசாலைப் புத்தகச் சங்கம், 1854 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட தென்னிந்திய கிருத்துவப் பாடசாலைப் புத்தகச் சங்கம் ஆகியவை ஆகும்.

தமிழில் முதல் கணித நூல்

தமிழில் கணிதத்தைப் போதிக்கும் வகையில் வெளிவந்த முதல்நூல் என்ற பெருமையைப் பெற்றது 1849ஆம் ஆண்டு வெளிவந்த பால கணிதம் என்னும் நூலாகும். இது இலங்கையிலிருந்து வெளிவந்தது. இக்கணித நூல் முழுமையான மொழிபெயர்ப்பாக அமையாமல் ஆங்கிலக் கணித முறைகளின் சிறப்பியல்புகளும் தமிழ்க் கணித முறையின் சிறப்புக் கூறுகள் சிலவும் இணைந்த முறையில் வெளிவந்தது. 179 பக்கங்களைக் கொண்ட இந்நூல் மூலநூலாகத் தமிழில் எழுதப்பட்ட கணித நூல் எனும் தோற்றத்தையுடையதாக வெளிவந்தது. அடுத்து 1855 இல் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கரோல், விஸ்வநாதன் என்பவர்கள் அல்ஜீப்ரா கணிதத்தைத் தமிழில் இயற்கணிதம் என்ற பெயரிலும் வீச கணிதம் என்ற பெயரிலும் வெளியிட்டனர்.

தமிழ் மருத்துவ அறிவியலின் முன்னோடி  டாக்டர் சாமுவேல் பிஷ் கிறீன்

டாக்டர் சாமுவேல் பிஷ் கிறீன் என்பவர் அமெரிக்க மருத்துவரும் கிருத்தவச் சமய ஊழியருமாவார். இலங்கையின் மானிப்பாய் என்ற ஊரில் மருத்துவச் சேவையும் மருத்துக் கல்வியும் வழங்கியவர். தமது பத்தாண்டுச் சேவை முடிந்த பின் அமெரிக்கா திரும்பி ஓய்வு பெற்ற கிறீன், ஐந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பி, தமிழில் மருத்துவம் கற்பித்தல், நூல்கள் எழுதுதல் ஆகிய பணிகளைத் தொடர்ந்தவர், தாம் இறந்தபின் தம் கல்லறையின் நினைவுக்கல்லில் தமிழருக்கான மருத்துவ ஊழியர் (Medical Evangelist to the Tamils) எனப் பொறிக்குமாறு வேண்டிக் கொண்டார். 1884இல் டாக்டர் பிஷ் கிறீன் அவர்கள் இறந்தபோது அவ்வேண்டுகோள் நிறைவேற்றப் பட்டது.

அமெரிக்க மிஷன் ஊழியராக யாழ்ப்பாணம் வந்து ஊழியஞ் செய்த டாக்டர் சாமுவேல் பிஷ் கிறீன் மேனாட்டு மருத்துவக் கலையை நம்மக்களிடையே படிப்படியாக அறிமுகப்படுத்தினார். இலங்கையின் மானிப்பாயிலே மருத்துவமனை நிறுவி, மருத்துவம் செய்ததுடன் அவர் நின்று விடவில்லை. தொடர்ந்து, தமிழர்களுக்கு மேனாட்டு மருத்துவப் பயிற்சி அளித்தார். காலப்போக்கில், தமிழிலேயே மருத்துவக் கல்வியைத் தொடங்கினார். ஆங்கில மொழி மூலம் 29 மருத்துவர்களுக்குப் பயிற்சி அளித்தார். தமிழ்மொழி மூலம் 33 மருத்துவர்களுக்குப் பயிற்சி அளித்தார். தமிழ் மக்களிடையே பணியாற்ற வருமுன்பே ஓரளவு தமிழ் பயின்றார், வந்தபின், கிராமம் கிரமமாகச் சென்று தமிழ் பயின்று, மேனாட்டு மருத்துவ நூல்களைத் தமிழாக்கம் செய்வதில் ஆர்வம் கொண்டார்.

டாக்டர் கட்டர் என்பவரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த மருத்துவ நூலான Anatomy, physiology and Hygiene எனும் ஆங்கில நூலை அங்காதிபாத சுகரண வாத உற்பாவன நூல் என்னும் பெயரில் 1852 இல் டாக்டர் சாமுவேல் பிஷ்கிறீன் மொழி பெயர்த்தார். தமிழ் வடிவில் முதன்முதலாக வெளிவந்த முழுமையான மருத்துவ நூல் இதுவேயாகும். இதன்பின் 1857 ஆம் ஆண்டில் டாக்டர் சாமுவேல் பிஷ் கிறீன் அவர்களால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட மருத்துவ நூல் பிள்ளைப் பேறு தொடர்பான மருத்துவ வைத்தியம்  (Midwifery) என்பதாகும்.

டாக்டர் சாமுவேல் பிஷ்கிறீன் அவர்கள் மொத்தம் 24 நூல்களைத் தமிழில் எழுதி வெளியிட்டார். அவற்றில் சில:

1. கட்டரின் அங்காதிபாத சுகரண வாத உற்பாவன நூல் - Cutter's Anatomy, Physiology and Hygiene, 1852 

2. மோன்செல்ஸ் மாதர் மருத்துவம் - Maunsell's Obstetrics, 1857

3. பிள்ளைப் பேறு தொடர்பான மருத்துவ வைத்தியம்  (Midwifery) 1857

4. துருவிதரின் இரணவைத்தியம் -  Druitt's Surgery, 1867

5. கிறேயின் அங்காதிபாதம் -  Gray's Anatomy, 1872

6. மனுசகரணம் -  Dalton's Physiology, 1883

7. வைத்தியாகரம் - (1872)

8. கெமிஸ்தம் -  Well's Chemistry, 1875

9. கலைச் சொற்கள் - 1875

10. இந்து பதார்த்த சாரம் -  Pharmacopoeia and India 1884 (மொழிபெயர்ப்பு உதவி)

11. வைத்தியம்  -Practice of Medicine, 1884 (மொழிபெயர்ப்பு உதவி)

இவைதவிர, பெண்கள் குழந்தைகளுக்கான மருத்துவ நூல்களும் பதார்த்த சாரம், சிகிச்சம், மருத்துவம் முதலிய வேறுபல சிறு கைநூல்களும் அவரால் வெளியிடப்பட்டன.

டாக்டர் சாமுவேல் பிஷ்கிறீன் அவர்களின் கலைச் சொல்லாக்கக் கோட்பாடு:

தமிழின் முதல் கலைச்சொல் ஆக்குனரான ரேனியஸ் கோட்பாடுகள் எதனையும் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை. ஆனால் பிஷ்கிறீன் கலைச் சொல்லாக்கத்துக்கு முறையான விதிகளை வகுத்துக் கொண்டதோடு அவ்விதிகளைத் தம் நூலின் இறுதியில் வெளியிட்டுள்ளார். எனவே பிஷ் கிறீன் தமிழின் முதல் அறிவியல் கலைச்சொல் கோட்பாட்டாளர் என்ற பெருமையையும் பெறுகிறார்.

கிறீனின் கலைச்சொல்லாக்கக் கோட்பாடு வருமாறு:

1. சொல் இணக்கமும் சுருக்கமும் ஓசையுமாய் இருக்கவும் அச்சொல் தமிழில் உண்டோவென்று பின் சொல்லப்படும் எட்டு விதங்களுள் ஓர் விதிப்படி முதலில் தேடிப்பார்க்கவும்.

2. ஒரு மொழியாவது தொடர் மொழியாவது வழங்கிவரும் சொல்லை நல்லதென்றெடுக்கவும்.

3. வழக்கமான உரிய சொல்லில்லாதிருந்தால் சற்றே கருகலானாலும் குறிப்பான சொல்லாய் எடுக்கவும்.

4. குறிப்பான தனிமொழி இரண்டாவது பலவாவது சேர்த்து ஓர் சொல்லாக்கவும்.

5. குறிப்பான பகுதியும் விகுதியும் சேர்த்துச் சொல்லாக்கவும்

6. குறிப்பான ஓர் பகுதியும் ஓசையான யாதேனும் ஓர் ஈற்றசை சேர்த்து வேறுபடுத்திச் சொல்லாக்கவும்.

7. இங்கிலீஷ்மொழிமூலத்தின் பயனையுள்ள சொல் தெரிந்தெடுக்கவும்.

8. ஒரு பயனுக்குப் பல மொழியாவது ஒரு மொழிக்குப் பல பயனாவது இருந்தால் சொல் தேவைக்கிணங்கிய பொருள்பட அதை வரைவுப் பண்ணிக் கொள்ளவும்.

9. இங்கிலீஷ் தொடர் மொழியின் உறுப்புக்களைத் தனித்தனியே மொழி பெயர்த்து அம்மொழிக்குச் சரியான சொல் பிறக்க இவைகளைப் புணர்க்கவும்

10 பூரணமான சொல் தமிழிலே பெற வழுவும்போது பின்காட்டப்படும் பத்து விதிகளுள் ஓர் விதிப்படி சமஸ்கிருதத்தில் தேடவும்.

****

1. இங்கிலிஷ்சமஸ்கிருத அகராதி ஒன்றில் பார்த்து அதிலே தெரிந்து கொள்ளவும்.
2. சமஸ்கிருத இங்கிலீஷ் அகராதி ஒன்றிலே தெரிந்தெடுக்கவும்.
3. இவ்விரு அகராதிகளையும் சரியொத்துக் காட்டும் சொல் சிறந்ததென் றெடுக்கவும்.
4. பெயரிடப்பட வேண்டிய பொருளுக்கு உரிய சொல்காணாதிருந்தால் அப்பொருளின் குறிப்புக்களில் ஒன்றையாவது பலவையாவது வாடிக்கைப்படாத ஓர் சொல்லை அதற்குரியதாக்கவும்.
5. குறிப்பான தனிமொழி இரண்டாவது பலவாவது சேர்த்து ஓர் சொல்லாக்கவும்.
6. காரியத்திற்கு அதிக இணக்கமானால் ஏற்ற பகுதி விகுதிசேர்த்து ஓர் சொல் ஏற்படுத்தவும்.
7. இங்கிலீஷ் மொழிமூலத்தின் பயனையுள்ள ஓர் சொல்லாகவும்.
8. ஒரு பயனுக்குப் பலமொழியாவது மொழிக்குப் பல பயனாவது இருந்தால் சொல் தேவைக் கிணங்கிய பொருள்பட அதை வரைவு பண்ணிக் கொள்ளவும்.
9. தொடர்மொழிகள் யாதொன்றின் உறுப்புக்கிணக்கமான தமிழ்மொழி உண்டானால் அதை ஆரிய மொழியுடன் சேர்த்துச் சில இடங்களில் வழங்கலாம்.
10. இங்கிலிஷ் தொடர்மொழியின் உறுப்புக்களை வெவ்வேறாய் மொழி பெயர்த்து அதற்குச் சரியான தொடர்மொழியாய் இதன்வழி இவைகளைப் புணர்த்தவும்.

****
தமிழாவது சமஸ்கிருதத்திலாவது சொல்காணாதபோது பின் சொல்லப்படும் மூன்று விதங்களில் ஓர் விதிப்படி இங்கிலீஷ் சொல்லைச் சேர்க்கவும்.
1. சொல்லை அதன் ஒலிப்படி தமிழ் எழுத்தால் எழுதிக்கொள்ளவும்.
2. தேவையான இடங்களில் இணக்கமான விகுதி கூட்டி அதை வேறுபடுத்திக் கொள்ளவும்.
3. தொடர்மொழி யாதொன்றின் உறுப்புக்கு வாடிக்கைப்பட்ட தமிழ்மொழி உண்டானால் அதை இங்கிலீஷ் மொழியொடு சேர்த்துச் சொல்லாக்கவும் (கிறீன் 1857:205)
பிஷ் கிறீனின் இக்கோட்பாடு சொற்களை முதலில் தமிழிலும், பின் சமஸ்கிருதத்திலும் பின் ஆங்கிலத்திலும் கலைச் சொற்களை ஆக்கிக்கொள்ள வழிகாட்டுகிறது.

பதிவமைப்பு

பிஷ்கிறீனின் இக்கோட்பாட்டின்படி தாம் ஆக்கிக்கொண்ட கலைச் சொற்களைத் தம் நூல்களின் இறுதியில் அருஞ்சொல்லகராதி என்ற தலைப்பில் தமிழ் - ஆங்கிலம், ஆங்கிலம் - தமிழ் என்ற பதிவமைப்பு முறையில் வெளியிட்டுள்ளார். பெரும்பாலான கலைச்சொற்களின் இறுதியில் தாம் உருவாக்கிய கலைச்சொற்களை அனைவருக்கும் புரியும் வகையில் தமிழில் ஆக்கப்பட்ட சொல்லை (T.1) சமஸ்கிருதத்தில் ஆக்கப்பட்ட சொல்லை (S.2) ஆங்கிலத்தில் ஆக்கப்பட்ட சொல்லை (E.1) எனவும் குறிப்பிட்டுள்ளார். T.S.E. இவைகளுக்கு அடுத்தபடியாக வரும் எண்கள் முறையே தமிழ் சமஸ்கிருத ஆங்கில கலைச் சொல்லாக்க விதிகளைக் குறிப்பவை.  (http://www.koodal.com/tamil/research/கலைச்சொல்லாக்கம்: சாமுவேல் பிஷ் கிறீன்)

பத்தொன்பதாம் நூற்றாண்டின் அறிவியல் தமிழ் முயற்சிகள் பிற:

1861 ஆம் ஆண்டில் அர்னால்டு என்பவர் வான சாஸ்திரம் என்ற நூலை வெளியிட்டார். சாலமன் என்பவர் கேஷத்ர கணிதம்  (Geometry) நூலை எழுதினார். 1865 இல் ஜெகந்நாத நாயுடு என்பார், சரீர வினா விடை  (A cotechism of Human Anatomy and physiology) என்ற பெயரில் வினா விடை வடிவிலான மருத்துவ நூலொன்றைத் தமிழாக்கம் செய்து வெளியிட்டார். 1868 ஆம் ஆண்டில் மற்றொரு புதுவகை அறிவியல் நூல் தமிழில் வெளிவந்தது. லூமிஸ் என்பவர் எழுதிய தி ஸ்டீம் ரூ தி ஸ்டீம் என்ஜீன் என்ற தமிழ் நூலே அது. அந் நூலில் கொடுக்கப்பட்டிருந்த விளக்கப்பட எண்கள் அனைத்தும் தமிழ் எண்களாகவே அமைக்கப்பட்டுள்ளன என்பது இங்குக் குறிப்பிடத் தக்கதாகும்.

இதே காலக்கட்டத்தில் வீட்டு விலங்கு பற்றிய ஊர் திரி விலங்கு என்ற நூலும் காட்டு விலங்குகளைப் பற்றிய வனவிலங்கியல் மற்றும் மீன்களைப் பற்றி மச்சவியல் என்ற நூல்களும் அடுத்தடுத்து வெளிவந்தன. 1883இல் வெ.பா. சுப்பிரமணிய முதலியாரால் டாக்டர் ஜேம்ஸ் மில்ஸ் அவர்களின் Veterinary Science என்ற நூலின் ஒருபகுதி இந்தியாவிலுள்ள கால்நடைகளின் வியாதிகளைப் பற்றிய தெளிவான குறிப்புகள் என்ற பெயரில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. பின்னர் 1885இல் அவரே முழு நூலினையும் இந்து தேசத்துக் காலநடைக்காரர் புஸ்தகம் என்ற இந்தியாவிலுள்ள கால்நடைகளின் வியாதிகளைப் பற்றிய தெளிவான குறிப்புகள் என்ற விரிவான தலைப்பில் மொழிபெயர்த்து வெளியிட்டார். நல்ல தமிழில் சிறப்பாக மொழிபெயர்க்கப்பட்ட நூலாக இந்நூல் வெளிவந்தது. இந்நூல் பத்து அதிகாரங்களைக் கொண்டு 238 பக்கங்களில் எழுதப்பட்டுள்ளது. நூலின் பின்னிணைப்பாக இடம்பெற்றுள்ள தமிழ் -ஆங்கிலம் கலைச்சொல் அட்டவணையில் உள்ள அடிக்குறிப்பில், அருஞ்சொல் விளக்கம், பல இங்கிலீஷ் வைத்திய புஸ்தகங்களையும் இங்கிலீஷிலிருந்த மொழி பெயர்க்கப் பட்டிருக்கிற அநேக தமிழ் வைத்திய புஸ்தகங்களையும் பார்வையிட்டுக் கூடிய கவனத்தோடு எழுதப்பட்டிருக்கின்றது
எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அந்த நூலுக்கு முன்பே தமிழில் பல மருத்துவ நூல்கள் வெளிவந்துள்ளமை தெளிவாகின்றது. அந்நூல்களைப் பற்றிய செய்திகள் கிடைக்கவில்லை. இந்நூலில் கையாளப்பட்ட புதிய சொல்லாக்கங்கள் பலவும் சிறப்பான கலைச் சொற்களாக இன்றளவும் இத்துறையினரால் தமிழில் கையாளப்பட்டு வருவனவாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை தமிழில் வெளிவந்த அறிவியல் நூல்களில் மிகப்பல யாழ்ப்பாணத்தில் அச்சிடப்பட்டவையாகும்.

அறிவியல் தமிழ் வளர்ச்சியில் பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ் இதழ்களின் பங்கு

அறிவியல் தமிழ் வளர்ச்சியில் தமிழ்ப் பத்திரிக்கைகளுக்கும் கணிசமான பங்கு உண்டு. 1831 ஆம் ஆண்டில் வெளிவந்த முதல் தமிழ்ப் பத்திரிக்கையின் பெயரே “தமிழ் மேகசின்” என்பதுதான். இதில்தான் பிற செய்திகளுடன் அறிவியல் செய்திகளும் முதன்முதலில் வெளிவரத் தொடங்கின. இதற்குப் பிறகு நீண்டகாலம் வேறு தமிழ் இதழ்கள் எவையும் அறிவியல் செய்திகளைக் கூறும் வகையில் அமையவில்லை.

நீண்ட இடைவெளிக்குப்பின் 1870 இல் “அகத்திய வர்த்தமானி” என்ற பெயரில் வைத்திய முறைகளை விவரிக்கும் கட்டுரைகளுடன் தமிழ் இதழ் ஒன்று வெளிவந்தது. அடுத்து 1887 இல் “சுகசீவனி” என்ற பெயரில் வைத்திய மாத இதழொன்று பெங்க@ர் நகரிலிருந்து வெளிவந்தது. இதில் தமிழில் எழுதப்பட்ட கட்டுரைகளுடன் ஆங்கில மொழிக் கட்டுரைகள் இடம்பெற்று வந்தன. தொடர்ந்து 1891 ஆம் ஆண்டில் “சுகாதார போதினி” என்ற பெயரில் மருத்துவம் பற்றி, குறிப்பாகப் பொதுச் சுகாதாரம் பற்றிய கட்டுரைகளோடு கூடிய இதழ் வெளிவந்தது. தொடர்ந்து 1908 இல் “ஆரோக்கிய வழி” என்ற இதழும் ஆயுர்வேத வைத்திய முறைகளின் அடிப்படையில் “ஆயுர்வேத பாஸ்கரன்” என்ற இதழும் வெளிவந்தன. இவையெல்லாம் நீண்ட ஆயுளைப் பெற்றிருக்கவில்லை. ஆனால் 1909 இல் ப+னா நகரினின்றும் ஆரம்பிக்கப்பட்ட “நல்வழி” இதழ் நீடித்த ஆயுளுடன் இன்றும்கூட வெளிவருகிறது.

அறிவியல் இதழுக்கான தோற்றப் பொலிவுடன் “ஞானபோதினி” என்னும் ஏடு 1897 ஆம் ஆண்டில் வெளிவந்தது. இதன் ஆசிரியர் பூர்ணலிங்கம் பிள்ளையாவார். இதில் இடம்பெற்ற தத்துவார்த்தக் கட்டுரைகளினும் அறிவியல் தொடர்பான கட்டுரைகளே அதிகமானவை எனலாம். இதேபோன்று மற்றொரு ஏடு கல்யாண சுந்தர நாடன் என்பவரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த “சித்தாந்த தீபிகை” எனும் இதழாகும். இதில் சமய, தத்துவ ஞானக் கட்டுரைகளோடு பௌதிக, இரசாயனக் கட்டுரைகளும் வெளிவந்தன.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அறிவியல் தமிழாக்க நூல்கள் கணிசமான அளவுக்கு வெளிவந்தது போன்றே அறிவியல் இதழ்களும் ஓரளவு வெளிவந்தன. இவற்றுள் தொழிற்கல்வி இதழாக 1914 முதல் வெளிவரத் தொடங்கிய இதழும், அதே ஆண்டில் மருத்துவ அறிவியல் கட்டுரைகளை வெளியிடுவதற்கென்று வெளிவந்த “வைத்தியக் கலாநிதி” இதழும் குறிப்பிடத்தக்க இதழ்களாகும். 1911 ஆம் ஆண்டில் தமிழர் கல்விச் சங்க வெளியீடாக வந்த “தமிழர் நேசன்” இதழ் ஒரு தனித்துவமான போக்கில் அறிவியல் செய்திகளையும் குறிப்புகளையும், ஆய்வுக் கட்டுரைகளையும் நல்ல தமிழில் வெளியிட முனைந்தது.

இதைத் தொடர்ந்து மருத்துவ இதழ்கள் சில அடுத்தடுத்து வெளிவந்தன. ஆயுர்வேத மருத்துவத்தை மக்களிடையே பரப்புவதற்காக “தன்வந்திரி” என்ற இதழ் சென்னை ஆயுர்வேதக் கல்லூரி சார்பில் வெளிவந்தது. இதேபோல்  அமைந்த மற்றொரு மருத்துவ இதழ் “ஆயுர்வேதம்” என்பதாகும். இவ்விரண்டு இதழ்களும் ஆயுர்வேத மருத்துவத்தின் பல்வேறு சிறப்புத் தன்மைகளையும் நோயறி திறனையும், மருந்துகள் பற்றியும் கட்டுரைகளை வெளியிட்டு வந்தன. இதே சமயத்தில்தான் ஆங்கில மருத்துவ முறையான அலோபதி மருத்துவ முறை பற்றிய கட்டுரைகளைக் கொண்ட, அதிலும் குறிப்பாகக் குழந்தை நலம், மற்றும் மருத்துவ முறைகளை விளக்கும் வகையில் “ஆரோக்கியமும் சிசுவின் சுகவாழ்வும்” என்ற மாத இதழும் வெளிவந்தது. (மணவை முஸ்தபா, காலம் தேடும் தமிழ், பக். 48-50)

அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றிய இதழ்களின் பட்டியலைக் காணும்பொழுது பெரும்பாலான இதழ்கள் மருத்துத்துறை தொடர்பான இதழ்களாகவே இருப்பது கண்கூடு. பிற அறிவியல் துறை சார்ந்த இதழ் முயற்சிகள் அரிதாகவே உள்ளன. மருத்துவத்துறை அறிவியல் தமிழாக்க நூல்கள் பெருமளவில் வெளிவர வழிவகுத்த, கலைச்சொல் ஆக்கம் முதலான பல முன்னோடிப் பணிகளுக்கு வழிகாட்டிய பெருமை டாக்டர் பிஷ் கிறீன் அவர்களையே சாரும்.

- முனைவர் நா.இளங்கோ, தமிழ் இணைப் பேராசிரியர், புதுச்சேரி-605008

Pin It