நாட்டையே உலுக்கிய டில்லி நடைபெற்ற கொடூரமாக பாலியல் சம்பவம் இது வரை இல்லாத அல்லாத அளவுக்கு பெண்கள் மீதான வன்முறை குறித்து விழிப்புணர்வையும் எழுச்சிகளையும் உருவாக்கியுள்ளது.நாடு முழுவதும் பல மாநிலங்களின் முக்கிய நகரங்களிலும் முக்கியமாக டில்லியில் தொடர்ந்து நடைபெற்ற மாணவ மாணவிகளின் மற்றும் பெண்களின் வீரமிக்க போராட்டங்கள் மத்திய அரசை அதிர வைத்தன.இந்த போராட்டங்களில் டெல்லியில் மாணவியை கும்பல் வல்லுறவுக்கு (Rape)உட்படுத்தி அவரின் மரணத்திற்கு காரணமாக இருந்த குற்றவாளிகள் அனைவருக்கும் மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் வல்லுறவுக்கு எதிரான சட்டம் பாதிக்கப்படும் பெண்களுக்கு சாதகமான முறையில் கடுமையாக்கப்பட வேண்டும்.மற்றும் பெண்கள் குறித்து ஆண்களின் மற்றும் சமூகத்தின் கண்ணோட்டம் மாற்றப்படும் வகையில் மத்திய அரசினால் கொள்கைகளும் சட்டங்களும் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

போராட்டங்கள் தீவிரமடைந்ததால் மத்திய அரசு உடனடியாக சம்பவத்தினை விசாரிக்க ஓய்வு பெற்ற முன்னாள் டெல்லி உயர்நீதிமன்ற  நீதிபதி உஷா மேஹரா  தலைமையில் ஒரு விசாரணைக்கமிஷன் அமைக்கப்பட்டது. அதே போன்று வல்லுறவுக்கு எதிரான சட்டத்தையும் பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான இந்திய தண்டணைச் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டஙகள் மற்றும் இதர குற்றவியல் சட்டங்கள் அனைத்தையும் திருத்தங்கள் கொண்டுவருவது குறித்து ஆராய ஒய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.எஸ்.வர்மா தலைமையில் ஒய்வு பெற்ற நீதிபதி லீலா சைய்த் மற்றும் முன்னாள் அரசு தலைமை வழக்குரைஞர் கோபால் சுப்பிரமணியம் ஆகியோர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது.

பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு முற்றுபுள்ளி வைத்திடும்முகமாக பெண்கள் சமத்துவத்திற்கான கொள்கைகளையும் திட்டங்களையும் பரிந்துரைத்திடும்படியாகவும் இருக்கின்ற பாகுபடுகளை அனைத்தும் நீக்கிடும்படியாக விரிவான அதிகார வரம்புகளுடன் அமைக்கப்படவில்லை. மாறாக ஒருமாத காலத்திற்குள் குற்றவியல் சட்டதிருத்தங்களை மட்டும்பரிந்துரைக்கும்படியாககுறுகிய அதிகாரவரம்புகளுடன்கமிட்டிஅமைக்கப்பட்டிருந்தது. வர்மா கமிட்டி விசாரணை தொடங்கியவுடன் இரு வார காலத்திற்குள் 70000மனுக்களை மக்களிடமிருந்து பெற்றது.  குறிப்பிட்டபடி ஒரு மாத காலத்திற்குள் கமிட்டியுன் அறிக்கை மத்திய் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.குறுகிய வரம்புகளுடன் கமிட்டி அமைக்கப்பட்டிருந்தாலும் சமூக பொறுப்புடனும் பாலியல் கண்ணோட்டத்துடனும் பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக ,மிக அருமையான அதே சமயத்தில் ஆழமானதும்  வலிமையானதுமான பரிந்துரைகளை வழங்கியிருந்தது,அந்த கமிட்டியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள சிலவற்றை மட்டும் ஏற்றுக்கொண்டு பெயரளவில் குற்றவியல் சட்டதிருத்தத்தை மத்திய அரசு கொண்டு வர முயற்சித்துள்ளது.

வர்மா கமிட்டியின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டால் பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஒரளவாவது குறைய வாய்ப்புண்டு. அந்த பரிந்துரைகளில்  பெண்கள் மீதான வன்முறைகள் குறிப்பாக வல்லுறவு உள்ளிட்ட பாலியல் வன்முறைகளுக்கு எதிரான தண்டனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இப்போது நாடு முழுவதும் பெண்கள் அமைப்பினர் ,மனித உரிமை அமைப்புகள், சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் இடது சாரி அமைப்புகள் நீதிபதி வர்மா கமிட்டியின் அறிக்கையை அமல்படுத்தப்பட வேண்டும் என்று போராடத் தொடங்கியுள்ளனர். சமூகத்தில் சரிபாதியாகவும் மனித குலத்திற்கே அடிப்படை ஆதாரமாகவும் உள்ள பெண்களின் விடுதலையிலும் அவர்களின் உரிமையிலும் அக்கறை கொண்ட மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரும் வர்மா கமிட்டியின் பரிந்துரைகளை தெரிந்து கொள்வது அவசியம் .

ஏறத்தாழ 657பக்கங்களைக் கொண்ட நீதிபதி வர்மா கமிட்டியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய பரிந்துரைகள் பின்வருமாறு;

 நாட்டின் குடியரசு ஜனநாயகத்தின் அடிப்படையாக உள்ள சட்டத்தின் ஒழுங்கை நிலைநிறுத்த ஒரு கொடூரமான கும்பல் பாலியல் வன்முறை போன்ற நிகழ்வு தேவைப்படுகிறது என்பது துரதிருஷ்டவசமானது வேதனையானது. பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பானது அரசின் மீது  சுமத்தப்பட்டுள்ளது.  பெண்கள் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்முறையிலிருட்ந்து பாதுகாத்தும் கொள்ளும் உரிமை உண்டு என்று   அரசியல் சட்டத்தில் உத்திரவாதப்படுத்தப்பட்டுள்ள    அடிப்படை உரிமையிலிருந்து அறிக்கை தனது தார்மீக அதிகாரத்தை  பெற்றுக் கொள்கிறது.

 பாலியல் வன்முறையினால்  தாக்குதலுக்குள்ளானவர் மீதே குற்றம் சுமத்தும் சில அரசியல் தலைவர்களின் பாலியல் சார்ந்த பாகுபாடான அறிக்கைகளை கண்டித்துள்ளது(பெண்கள் அணியும் சில  உடைகள்தான்  பாலியல் வன்முறைகளை தூண்டுகின்றன என்பது போன்றும் பாதிக்கப்பட்ட பெண் ஏன் இரவில் தனியாக சென்றார் என்பது போன்றும் அறிக்கைகளை விடுவது- ஆனால் உண்மையில் எப்படி அவர்கள் கூறுவது போல் புடவை அணிந்திருந்தாலும் அல்லது எப்படி கண்ணியமான உடை அணிந்திருந்தாலும் அவர்களை பாலியல் வன்முறைக்குள்ளாக்குவது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றது. பாலியல் வன்முறைக்கும் அணியும் உடைகளுக்கும் எந்த வித தொடர்புமுமில்லை என்பதை பல ஆய்வுகளும் வழக்குகளும் நிரூபித்துள்ளன. இது மறைமுகமாக  தங்கள் பாலியல் வன்முறையை நியாயப்படுத்துவதாகவே அமைந்துள்ளது என்பதுதான்   இங்கு கவனித்தக்கது ) இனியும் இதுபோல பெண்களுக்கு எதிராக அவர்கள் மீதாக வன்முறைகளை நியாயப்படுத்தி அறிக்கைகளை விடும் எம்.எல்ஏக்களையும் எம்பிக்களையும்  நீக்கம் செய்து அவர்கள் மறுபடியும் தேர்தலில் போட்டியிட முடியாதபடி தகுதிநீக்கம் செய்ய வேண்டும்.

 சாதி மறுப்பு அல்லது கலப்பு திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளை குறிப்பாக பெண்களை கௌரவப் படுகொலை செய்யும் அல்லது தண்டிக்கும் கட்டப்பஞ்சாயத்து அமைப்புகளையும் சாதி வெறி அமைப்புகளையும் அவை சட்ட விரோத அமைப்புகளாக பிரகடனம் செய்து தடை செய்ய நாடாளுமன்றம் சட்டம் இயற்ற வேண்டும்.

 வல்லுறவு குற்றம் மற்றும் மற்ற பாலியல் வன்முறைகளை பொருத்தவரை, உடலுறவு கொள்வது மட்டும்தான்வல்லுறவு என்பது மாற்றப்பட்டு மற்ற சம்மதமில்லாத கட்டாயப்படுத்தப்படும் எந்த வகை உடலுறவுகளும் வல்லுறவுதான் என்று குற்றவியல் சட்ட திருத்தப்பட வேண்டும்.  அது மட்டுமின்றி ஒரு பெண் திருமணம் ஆனவர் என்றாலும்  அவரின் சம்மதமின்றி   அவரை கட்டாயப்டுத்தி  உறவு கொள்வதும் வல்லுறவு எனப்படும் குற்றமாக பாவிக்கப்படும்.

 பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் வன்முறை வழக்குகளை துரிதமான முறையில் விசாரித்து முடித்திட ஓய்வு பெற்ற நீதிபதிகள் நியமிக்கப்படவேண்டும். இந்த வழக்குகள் நடைபெறும் நீதிமன்றங்களில் பெண்கள் நீதிபதிகளாகவும் அரசு வழக்ககுரைஞர்களாகவும் நியமிக்கப்பட வேண்டும்.

 பாலியல் வல்லுறவு வழக்கு விசாரணையில் கடைப்பிடிக்கப்படும் இரு விரல் பரிசோதனை முறை அறவே ஒழிக்கப்பட வேண்டும்.(இது காலனிய காலத்து காட்டுமிராண்டித்தனமான பரிசோதனை முறையாகும்.  இந்த பரிசோதனையில் பெண்களின் பிறப்புறப்பில் இரு விரலை விட்டு வல்லுறவுக்கான ஆதாரமாக அவளின் கன்னித்திரை கிழிந்துள்ளதா?என்பதை பரிசோதிக்கும் முறையாகும். மருத்துவ மற்றும் விஞ்ஞானரீதியாக விளையாட்டுகளில் ஈடுபடும் பெண்களுக்கும் இரு சக்கர வாகனங்களில் ஓட்டும் பெண்களுக்கும் இதுபோன்று கன்னித்திரை கிழிவது என்பது சர்வ சாதாரணமான ஒன்று, மேலும் இது ஆணாதிக்க சமூகம் பெண்ணின் உடலையும் அவளின் பாலியல் விருப்பங்களையும் தனது கட்டுபாட்டில் ஆதிக்கத்தில் வைத்திருப்பதற்காக உருவாக்கப்பட்ட அச்சுறுத்தல் முறையாகும்.இதை எதிர்த்து பல நாடுகளில் வழக்குகள் தொடரப்பட்டு இந்த முறை நிராகரிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி ஐநா சபையின் பெண்களின் மீதான வன்முறைகளுக்கு எதிரான சர்வதேச உடன்படிக்கை மற்றும் பல்வேறு மனித உரிமை விருப்பு உடன்படிக்கைகள் இதை நிராகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 பாலியல் வல்லுறவில் ஈடுபடுவோருக்கு குறைந்த பட்ச தண்டணையாக 10 ஆண்டு கால சிறைத்தண்டணையும் அதிக பட்ச தண்டனையாக ஆயுட் தண்டனையும் அளிக்கப்பட வேண்டும்.  ஆயுட் தண்டனை என்பது 14 ஆண்டுகாலமாக இருக்கக்கூடாது. அவரது ஆயுள் முடியும்வரையிலான தண்டனையாக இருக்க வேண்டும்.

 பாலியல் வல்லுறவில் பாதிக்கப்படும் பெண்களுக்கான மருத்துவச் செலவினங்களை குற்றவாளியே ஏற்க வேண்டும்

 கமிட்டி பாலியல் வல்லுறவில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனையையோ அல்லது ஆண்மை நீக்கத்தையோ  பரிந்துரைக்கவில்லை அதனால் இக்குற்றங்கள் குறையாது என்று கமிட்டி கருதுகிறது.  கும்பல் பாலியல் வல்லுறவில் ஈடுபடுவோருக்கு 20 ஆண்டுகளுக்கு குறையாத சிறைத்தண்டனையும் அல்லது அதற்கு மேலும் அவர் ஆயுள் முடியும் வரை தண்டனை வழங்கப்படும்.

 பாலியல் வன்முறையில் ஈடுபடும் ஆயுதப்படையினர் (இராணுவத்தினர் உள்ளிட்டு)மற்றும் போலீசார் ஆகியோருக்கு விசாரணையிலிருந்தும் தண்டனையிலிருந்தும் எந்த வித விதிவிலக்கும் அளிக்கப்படாமல் அவர்கள் யாராக இருந்தாலும் நடைமுறையிலுள்ள குற்றவியல் சட்டங்களின் படி வழக்கு தொடரப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

 இந்திய தண்டனைச் சட்டத்தில் பெண்கள் மீது ஆசிட் ஊற்றி  தாக்குவது என்பது தனிக்குற்றமாக சேர்க்கப்பட வேண்டும்.

 இந்திய குற்றவியல் சட்டங்களில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைக் குற்றங்களாக கீழ்க்கண்டவை சேர்க்கப்பட வேண்டும் ;பெண்களின் ஆடைகளை களைவது (பொது இடமாக இருந்தாலும் அல்லது தனி இடமாக இருந்தாலும்) உடை மாற்றுவதை அல்லது குளிப்பதை அல்லது மற்ற முறைகளில் அவர்களின் கீழ்த்தரமான நோக்குடன் பார்ப்பது (பாலியல்ரீதியாக பெண்களை ஒரு போகப் பொருளாகப்பாவித்து), பெண்களை பின்தொடருவது போன்றவை குற்றங்களாக சேர்க்கப்பட வேண்டும்.

 பணியிடத்தில் பாலியல் தொந்திரவு (தடுப்பு தடை மற்றும் மறுவாழ்வு) சட்ட முன்வரைவைப் பொறுத்தவரை(sexual harassment of women at workplace ,prevention,prohibition and redressal bill 2012)இச்சட்டமானது முறைசாரா தொழிலாளர்கள் , பள்ளிகள் கல்லூரிகள் போலீஸ் மற்றும் ஆயுதப்படையினர் அனைத்து துறை மற்றும் அனைத்து தரப்பினருக்கும் பொருத்தப்பட வேண்டும்.துறைவாரியான விசாரணைகள் மட்டும்போதாது இதற்கென தனியாக பேராயம் அமைக்கப்பட வேண்டும்.

 இசைவுடனான பாலுறவைப் பொருத்தவரை அதற்கான வயது வரம்பு 18 ஆக இருப்பது 16 ஆக மாற்றப்பட வேண்டும். ஏனெனில் உலகமயமாக்கலின் போக்கில் நாகரீகமும் இணையதள பண்பாட்டுச்சீரழிவும் கோலோச்சுகின்ற இந்நாட்களில் கல்வி நிலையங்களில் இது போன்ற நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. இவற்றை குற்றவியல் நடவடிக்கை ஆக்குவது இரு பாலருக்கும் கடுமையான விளைவுகளை எற்படுத்தும் என்பதால் இந்த பரிந்துரை மேற்கொள்ளப்படுகின்றது.

 இந்த பரிந்துரைகளில் மிக சிலவற்றை மட்டும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டு குற்றவியல் சட்டதிருத்த முன்வரைவைக் கொண்டு வந்துள்ளது. இந்த சட்ட வரைவிற்குட்பட்டு இதர குற்றவியல் சட்டங்களான இந்திய தண்டனைச் சட்டம்,குற்றவியல் நடைமுறைச் சட்டம்,இந்திய சான்றுச் சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் ஆகியவையும் திருத்தத்திற்கு உள்ளாகின்றன.பாலியல் வல்லுறவுக்கான சிறைத்தண்டனை குறைந்து பட்சம் 20 ஆண்டுகளும் அல்லது குற்றத்தின் தன்மையை பொறுத்து அவரது ஆயுள் முழுவதும் தண்டனையும் அளிக்கப்பட்டுள்ளது. கும்பல் வல்லுறவினால் கடுமையாக பாதிக்கப்பட்டால் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்கப்படும்.ஆசிட் வீசும் குற்றங்களுக்கு 10 ஆண்டுகள் மட்டுமேசிறைத்தண்டனை வழங்கப்படும். வாழ்நாள் முழுவதும் நடைப்பிணங்களாக கடுமையாக பாதிக்கப்பட்டு வாழும் பெண்களுக்கு இதனால் என்ன நீதி கிடைக்கப்போகிறது என்பது தெரியவில்லை.  இந்த சில்லறை சீர்த்திருத்தங்களினால் பெரிய அளவில் பயன் ஏதும் விளைந்து விடப்போவதில்லை

 ஒட்டு மொத்தமாக நீதிபதி வர்மா கமிட்டி அளித்த பெண்கள் மீதான குற்றங்கள் ஒழிக்கப்பட  அனைத்து சட்டத் திருத்தங்களும் பெண்களுக்கான கொள்கைகள் திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும் .அப்போதே பெண்கள் மீதான வன்முறைகள் பாலியல் குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் . இதுவே அனைத்து மனித உரிமைக் காப்பாளர்களின் பெண்கள் அமைப்புகளின் விருப்பம் .இக்கமிட்டியின் பரிந்துரைகள் முழுமையாக நிறைவேற்றப்படும் வரை தொடர்ந்து போராடுவோம். 

Pin It