தமிழகமெங்கும் கல்வி வணிகமயமாக்கப்பட்டு கல்விக்கூடங்கள் சிறைகூடங்களாக மாற்றப்பட்டுள்ளன‌. சேனல் 4-ல் வெளிவந்த இனப்படுகொலை காட்சிகளும், மழலைச் செல்வன் பாலச்சந்திரனின் நெஞ்சை பதறவைக்கும் படுகொலையும் நம்மை பூட்டி வைத்திருந்த சிறைக் கதவுகளை உடைத்து சீறியெழ வைத்தது. ஈழத் தமிழர்களை படுகொலை செய்த "சிங்கள இனவெறியன் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக, இனப்படுகொலையாளனாக சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும்", "வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்" என்ற முழக்கங்கள் தமிழகமெங்கும் எதிரொலித்தது. நாம் தமிழகமெங்கும் எழுச்சி கொண்டு பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தோம். தொடர்ந்து நடந்த நமது போராட்டத்தின் விளைவாய்

• இந்திய அரசு பணிந்து அமெரிக்கத் தீர்மானத்தை ஏற்று (தனது பிராந்திய அரசியல் நலனுக்காக திருத்தங்களை முன் மொழியவில்லை என்றாலும்) வாக்களித்தது.

• தி.மு.க. கட்சியானது காங்கிரசு அரசிற்கு அளித்து வந்த ஆதரவை விலக்கியது, அமைச்சரவையிலிருந்து விலகியது.

• தமிழீழ மக்களுக்கும், தமிழீழ ஆதரவு இயக்கங்களுக்கும் நம்பிக்கையையும் உத்வேகத்தையும் கொடுத்துள்ளது.

• நமது போராட்டம் தமிழக மக்களின், உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளதோடு, பல்வேறு மக்கள் பிரிவினரை களத்தில் இறங்கி போராட வைத்தது.

அடுத்து நாம் செய்ய வேண்டியது என்ன?

நமது முதல் கட்ட போராட்டம் மேற்கூறிய வெற்றிகளைத் தந்துள்ளது. நமது வெற்றியை அடுத்த கட்ட படியை நோக்கி முன்னெடுக்க வேண்டும். வரும் செப்டம்பர் மாதம் அய்.நாவின் பொதுப்பேரவை நடக்கவுள்ளது. அக்கூட்டத்தில் நமது கோரிக்கையை ஏற்க வைப்பதற்கான அனைத்து நடவடிக்கையையும் முன்னெடுக்க வேண்டிய கடமை நம்முன்னுள்ளது.

ஈழத்தில் நடந்த இனப்படுகொலை கொடூரங்களை முழுமையாக வெளியிடுவதற்கான முன்முயற்சிகளை சேனல் 4 மேற்கொண்டு வருகிறது. ஈழத் தமிழர்களும் குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழர்களும் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். உலகில் உள்ள மனித உரிமை அமைப்புகளும் இனப்படுகொலையை உலகின் பார்வைக்கு கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருக்கின்றன.

நாமும் நமது போராட்டத்தை மாணவர்கள் தளத்தோடு நிறுத்திக் கொள்ளாமல்

1. அரசியல் கட்சிகளை நிர்பந்திப்பதற்கான போராட்டமாகவும்

2. மாணவர் போராட்டத்தை மக்கள் போராட்டமாகவும்

மாற்றுவதற்கு அனைத்து திட்டமிட்ட வேலைகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

அரசியல் கட்சிகளை நிர்பந்திப்பது

ஆந்திராவில் தனித்தெலுங்கானா போராட்டத்தில் மாணவர்கள் போராட்டத்தோடு மக்களின் போரட்டமும், அரசியல் கட்சிகளின் போராட்டமும் ஒருங்கிணைந்து உள்ளதால்தான் அந்த போராட்டம் வீரிய‌த்துடன் இன்றும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இதை முன்னுதாரணமாகக் கொண்டு நாமும் நமது போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

• தனித்தெலுங்கானாவிற்காக தெலுங்கானா காங்கிரஸ் எம்.எல்.ஏ, எம்.பி.க்களை ராஜினாமா செய்ய நிர்பந்தித்து போராடியது போல் காங்கிரஸ் கட்சியில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் ஈழத்தமிழர்களுக்கு துரோகமிழைத்த காங்கிரசு கட்சியை விட்டு வெளியேற வலியுறுத்த வேண்டும். காங்கிரசு எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், தலைவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்த வேண்டும். அதற்காக காங்கிரசு எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் மற்றும் காங்கிரசு கட்சித் தலைவர்களின் வீடுகளை முற்றுகையிடும் போராட்டங்களை நாம் முன்னெடுக்க வேண்டும்.

• தனித் தெலுங்கானாவிற்காக தெலுங்கானாவில் உள்ள அனைத்து எம்.பி.க்க‌ளும் நாடாளுமன்றத்தில் ஒருங்கிணைந்து உறுதியாகப் போராடுவது போல தமிழகத்தில் (புதுச்சேரி உட்பட) உள்ள 40 எம்.பி.க்களும் ஈழத்தமிழர்களுக்காக ஒருமித்த குரல் எழுப்பி போராட வேண்டும். நாடாளுமன்றத்தை முடக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் போராட்டங்களை முன்னெடுக்க தமிழக எம்.பி.க்களை நாம் நிர்பந்திக்க வேண்டும்.

• இந்தியா முழுவதும் உள்ள அனைத்துக் கட்சிகளிடமும் தமிழக எம்.பி.க்கள் அரசியல் கட்சிகள் தமிழீழ சிக்கலை கொண்டு சென்று அனைத்து எம்.பி.களும் தமிழீழ சிக்கலை நாடாளுமன்றத்தில் எழுப்பி ஒருமித்து போராட வைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்க நிர்பந்திக்கும் வகையில் மாணவர்கள் போராட்டத்தை கட்டியமைப்போம். நமது இரண்டு கோரிக்கைகளையும் நாடாளுமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்ற வைப்போம்.

மாணவர்கள் போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்றுவோம்!

• இந்தியா முழுவதும் உள்ள மாணவர்களின் ஆதரவை திரட்டுவதற்கான முன் முயற்சிகளில் உடனடியாக இறங்குவோம்.

• தமிழக மக்கள் மத்தியில் தமிழீழ சிக்கல் குறித்த விழிப்புணர்வை பரப்புரை செய்து மாணவர்கள் போராட்டத்தை தமிழக மக்களின் எழுச்சிப் போராட்டமாக மாற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுவோம்.

• தமிழகத்தைச் சேர்ந்த ஆங்கில மொழி எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், சமூக ஆர்வலர்கள், செயல்பாட்டளர்களை ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப் படுகொலை குறித்து எழுதவும், பேசவும், வலியுறுத்துவோம்.

• ஏர்டெல், டாடா, அசோக்லைலேன்ட் போன்ற இந்திய முதலாளிகளின் நலன்களைக் காக்கவே இலங்கைக்கு ஆதரவாய் இந்திய அரசு செயல்படுகிறது. ஏர்டெல், டாடா, அசோக் லைலேன்ட், மாருதி, பஜாஜ் போன்ற இலங்கையில் பலமாக உள்ள இந்திய முதலாளிகளின் பொருள்களைப் புறக்கணிப்போம் என்ற கோரிக்கையை மக்களிடம் கொண்டு சென்று இலங்கையில் பலமாக உள்ள இந்திய முதலாளிகளின் பொருட்களை மற்றும் இலங்கை பொருட்களைப் புறக்கணிக்கும் போராட்டங்களை முன்னெடுப்போம்.

ஒட்டுமொத்தத்தில் நமது முதல் வெற்றியை முதல் படியாகக் கொண்டு மாணவர்களின் போராட்டத்தை பரந்து விரிந்த தளத்தை நோக்கி முன்னெடுப்பதன் மூலம் மட்டுமே நமது கோரிக்கையில் நாம் வெற்றியடைய முடியும். செப்டம்பரில் நாம் சில வெற்றிகளையும் ஈட்ட முடியும்.

காங்கிரசு எம்.எல்.ஏ., எம்.பி.க்களே! காங்கிரசு தலைவர்களே! தமிழக காங்கிரசு கட்சியினரே!

* ஈழத்தமிழர்களுக்குத் துரோகமிழைத்த காங்கிரசு கட்சியை விட்டு வெளியேறுங்கள்! பதவிகளை ராஜினாமா செய்யுங்க‌ள்!

தமிழக (பாண்டிச்சேரி) 40 எம்.பி.க்களே!

* நாடாளுமன்றத்தில் ஒருமித்த குரல் எழுப்பி போராட்டத்தை வெற்றியாக்குங்கள்!

* இந்தியாவில் உள்ள அனைத்து எம்.பி. -க்களை ஒன்றிணைத்து காங்கிரசை பணிய வையுங்கள்!

இந்திய அரசே!

* இத்தாலிக்கு ஒரு நீதி, இலங்கைக்கு ஒரு நீதியா?

* இலங்கை வேண்டுமா? தமிழ்நாடு வேண்டுமா?

* இலங்கை அரசை நிர்பந்தித்து, ஈழத் தமிழர்களின் இனஅழிவை உடனடியாக தடுத்து நிறுத்து!

- மறுவாழ்வுப் பணிகளை விரைவாக நடைமுறைப்படுத்து!

அய்.நா-மன்றமே!

* இனப்படுகொலையாளன் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக, இனபடுகொலையாளனாக சர்வதேச நீதிமன்றத்தில் பகிரங்க விசாரணை நடத்து!

* வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்து!

* ஈழத் தமிழர்களின் மறுவாழ்வுப் பணிகளை அய்.நா மேற்பார்வையில் உடனடியாக நடைமுறைபடுத்து!

* சிங்கள அரசு தொடர்ந்து நடத்தும் ஈழ தமிழர்களின் இன அழிவை உடனடியாக தடுத்து நிறுத்து!

- தமிழீழ ஆதரவு அனைத்து கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு 

தொடர்புக்கு : 9789434804, 9629377789, 9944367319, 9092698346, 9698815767, 9659292249 8015118750

Pin It