என் கருத்துகளுக்கு
மதிப்பளிப்பவர்களுடன் மட்டுமே
என்னால் தொடர்ந்தும்
தொடர்பிலிருக்க முடிகிறது

மாற்றுக்கருத்துகளுக்கு இடமளிக்க
வேண்டுமென்று நினைத்தாலும்
என் கருத்துகளுடன் உடன்படுபவர்களையே
அரவணைத்துச் செல்ல முடிகிறது

என் குறைகளை
முகத்தில் அடித்தாற்போல்
என்னிடம் சொல்லாதவர்களையே
அருகில் வைத்துக்கொள்ள முடிகிறது

வெளிப்படையாகச் சொல்லாமல்
அதை நாசூக்காகச் சொல்லுபவர்களை
இனங்கண்டுகொள்வதில்
என் ஆர்வம் அடங்கியிருக்கிறது

எனக்குக் கீழ்ப்படிதலுள்ளவர்களின்
சூழல்களில் மட்டுமே என்னால்
தொடர்ந்தும் தயக்கமின்றி
இயங்க முடிகிறது.

என்னால் கண்டிப்பாக
செய்ய இயலாதவற்றைக்
கண்டுகொள்ளாமல் இருப்பவர்களையே
எனக்கு மிகவும் பிடித்துப்போகிறது

என் திறமையை இனங்கண்டு
புன்முறுவலைக் கண்களில் காண்பித்து
சிறிதே தலையை மட்டும் அசைத்து
அளவுக்கு மீறிப்பாராட்டாதவர்களின்
அருகாமையை என் மனம் விரும்புகிறது

இத்தனை இருப்பினும்
நான் எதிர்பார்க்கும் தகுதிக்குச்
சற்றுக் கீழிருப்பதே
என்னிடம் நிலைக்கிறது

இது போன்ற கவிதைகளை
முதல் வரியிலிருந்து
வாசிக்க ஆரம்பித்து
பத்திகள் செல்லச்செல்ல
கொஞ்சம் கொஞ்சமாக
உங்களை என்னிடம்
கண்டுகொண்டவர்களுக்கென
தொடர்ந்தும் எழுதுவது
எனக்குப் பிடித்துத்தானிருக்கிறது

- சின்னப்பயல் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.) 

Pin It