Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

தொடர்புடைய படைப்புகள்

இலங்கை மீதான சர்வதேச விசாரணையையும், தமிழீழத்திற்கான ஐ.நா.வின் பொது வாக்கெடுப்பினையும் தடுத்து நிறுத்தியதை உடனடியாக நிறைவேற்றுவதே பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான உடனடி நிவாரணம்! ஐ.நாவே அதை நிறைவேற்று!!

இலங்கை இனப்படுகொலை தொடர்பில் ஐ.நா.வின் நடவடிக்கைகள் குறித்து ஒரு உள்ளக ஆய்வறிக்கையை சார்லஸ் பெட்ரி என்கிற ஐ.நா. அதிகாரி தலைமையிலான குழு நவம்பர் மாதம் வெளியிட்டது. இது ஐ.நா. உயர் அதிகாரிகளின் இலங்கை தொடர்பான நிலைப்பாட்டினையும், செயல்பாட்டினையும் வெளிப்படுத்துகிறது. இதில் ஐ.நா.வின் உயர் அதிகாரிகள் இலங்கை அரசிற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவி இருப்பது பதியப்பட்டுள்ளது. 120 பக்கங்களுக்கு மேலான தகவல்களைக் கொண்ட இந்த அறிக்கை பல உள்தகவல்களை நமக்கு வழங்குகிறது. ஐ.நா.வின் நிபுணர் குழு அறிக்கை, போர்குற்றம் என்பதாக மட்டுமே நின்றுவிட்டதையும், அரசியல் தீர்வினை நோக்கி தீர்மானகரமாக நகர இயலாதவாறு, முட்டுச்சந்தினை நோக்கிய நகர்வினை செய்ததற்கு பின்புல காரணங்களை இந்த அறிக்கை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துவிட்டதாகவே நாங்கள் அறிகிறோம். இதனூடாக இலங்கை அரசுடன் வெகு நெருக்கமாகவோ அல்லது அவர்களின் நெருக்குதலுக்கு அடிபணிந்தோ ஐ.நா.வின் உயர் அதிகாரிகள் செயல்பட்டு, உலகத்துடனான தொடர்பில் இலங்கைக்கு ஆதரவான அறிக்கைகளை, செய்திகளை, செய்தி மறைத்தல்களை செய்தது மட்டுமல்லாமல் கள தகவல்களை திரித்தும் அல்லது நீர்த்தும் அல்லது இரண்டினையும் செய்து வெளியிட்டு இருக்கிறார்கள். தங்களது கீழுள்ள பணியாளர்களின் தகவல்களை உதாசீனப்படுத்துகிறார்கள் அல்லது அவர்களது பணிகளை செய்யவிடாமல் தடுத்து இருக்கிறார்கள். அறிக்கையின் முக்கிய தகவல்களை தங்களது கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறோம்.

விஜய் நம்பியார்சிக்கல் நிறைந்த பகுதிகளில் ஐ.நா.வினுடைய மிக அத்தியாவசிய செயல்பாடுகளாக  இரண்டு முக்கிய கூறுகளைப் பார்க்கிறோம். மனித நேய உதவிகள் அல்லது அது சார்ந்த சர்வதேச சட்ட வரையறைகளைக் காப்பது மற்றும் மனித உரிமை மீறலைத் தடுப்பது அல்லது உலகின் கவனத்திற்குக் கொண்டு செல்வது. உலக நாடுகள் இந்த இரண்டு அம்ச கோட்பாடுகளில், சட்டத் தீர்மானங்களில், உடன்படிக்கைகளில், புரிந்துணர்வில் கையொப்பமிட்டு உறுதி அளிக்கின்றன. அதனூடாக இவற்றினை மீறும் பட்சத்தில் சர்வதேச சட்ட நடவடிக்கையின் படி தண்டனை பெறுவதையும் ஏற்கின்றன. இது நாடுகளை நடத்தும் அரசுகளுக்குப் பொருத்தமானதாக அமைகிறது.

ஐ.நா.வின் இலங்கைக்கான உதவிகளை இரண்டு கட்டங்களாகப் பிரித்து உணர முடியும். முதல் பகுதி போர் நடக்கும் காலகட்டத்தில் இலங்கை தங்கு தடையின்றி போரை நடத்துவதற்கும், தமிழர்களுக்கு ஆதரவாக போரை நிறுத்தக் கோரி வரக்கூடிய சர்வதேச அழுத்தங்களை தடுப்பதற்கும் துணை புரிந்த அதே நேரத்தில் இலங்கை போர்க் குற்றம் செய்வதற்கு நேரடியாக உதவி செய்தது என்கிற உண்மையினை நாங்கள் இங்கே காண்கிறோம். அடுத்ததாக போர் முடிந்த பிறகு இலங்கைக்கு ஐ.நா. செய்யும் உதவியை மேலும் இரண்டு வகையாகப் புரிந்து கொள்ளமுடியும். ஒன்று போருக்குப் பிறகு சர்வதேச விசாரணையை இலங்கை மீது வராமல் தடுப்பது; அதன் மூலமாக ஐ.நா. பொது வாக்கெடுப்பிற்கான வாய்ப்பினை இல்லாமல் செய்வது. இனப்படுகொலையைப் பற்றிய விவாதங்களும், கோரிக்கைகளும் பிற்காலத்தில் எழுப்பப்படாமல் இருக்க, இனப்படுகொலை ஆதரங்களை இலங்கை அரசு அழிப்பதற்கான கால அவகாசத்தினை அளிப்பது; சர்வதேச விசாரணையைக் குறுக்கி உள் நாட்டு விசாரணையாக மாற்றி அரசியல் கோரிக்கையான 'தமிழீழம்' என்பதைத் திரித்து மனித நேய உதவிகள், மறுவாழ்வு, வாழ்வுரிமை, வாழ்வாதர உதவிகள், நலத்திட்டங்கள், தொண்டு நிறுவன உதவிகள், நல்லிணக்கம் என தமிழர்களைத் திசை திருப்புவதும், அதற்கு ஆதரவாக உலக அரங்கில் விவாதத்தினை முன்னெடுப்பதுமாகும். இதை இப்போது மிகத் திறம்பட செய்து வருகிறது ஐ.நா.

பெட்ரியின் உள்ளக அறிக்கையின் சில தகவல்களாக நாம் கவனிக்க வேண்டியது, ஐ.நா. பணியாட்களை அங்கிருந்து வெளியேறுமாறு செய்தது. இது போர் நடக்கும் பகுதிகளில் பாதுகாப்பு தேடி ஐ.நா. அலுவலகத்திற்கும் அதைச் சுற்றி கிடைக்கும் பாதுகாப்பு இடங்களுக்காக வந்த தமிழர்களை இனப்படுகொலையில் சிக்க வைத்தது.

மனித நேய உதவிகளாக போர் முனையில் சிக்கியிருந்த தமிழர்களுக்கு உணவு, மருந்துப் பொருட்களை அனுப்புவது என்பது கிட்டத்தட்ட 8-10 நாட்களுக்கு ஒருமுறை 18 ஆயிரம் மெட்ரிக் டன் பொருட்கள் அனுப்பப்பட வேண்டும். ஆனால் ஜனவரி 15 ஆம் தேதிக்குப் பின்பு எந்தவித உதவிப் பொருட்களையும் ஐ.நா. அனுப்பவில்லை என்பது மட்டுமல்ல அதற்கான எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை.

ஜனவரி 15 ஆம் தேதி இலங்கை ராணுவத்திடம் ஒப்புதல் பெற்ற பிறகு உதவிப் பொருட்கள் போர் பகுதிக்கு அனுப்பப்படுகிறது. இந்த உதவிப் பொருட்களுக்கான வண்டிகள் 16 ஆம் தேதியே திரும்பும் என்கிற உத்திரவாதத்துடன் சென்ற போது இலங்கை அரசு தாக்குதலைத் தீவிரப்படுத்தியது. இதன் காரணமாக இந்த உதவிக்குழு முல்லைத்தீவு பகுதியிலேயே இரண்டு வாரங்களுக்கு மேலாக தங்க நேர்ந்தது. அந்த காலகட்டத்தில் இலங்கை அரசு செய்த மனித உரிமை மீறலான போர்த் தாக்குதலையும் (மருத்துவமனைகளைத் தாக்குவது, ஐ.நா. பணியாட்கள் இருக்கும் பகுதியைத் தாக்குவது, பொது மக்கள் குழுமியிருக்கும் பகுதிகளைத் தாக்குவது போன்றவை) தாக்குதலால் கொலை செய்யப்பட்ட தமிழர்களின் கணக்கெடுப்புகளையும் கொழும்புவில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்புகிறார்கள். இவை பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தத் தகவலை அனுப்புபவர்களில் 6 பேர் ஐ.நா.வின் சர்வதேச பணியாட்கள், 5 பேர் உள்ளூர் பணியாட்கள்.

ஐ.நா.வின் உதவிப் பொருட்களில் தமிழர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களின் அளவினை விட மிக மிகக் குறைந்த அளவே அனுப்பப்படுகிறது. முற்றுகைக்குள்ளாக்கப்பட்ட பகுதிகளில் விளை நிலங்கள் இருப்பதாகவும், உணவு இருப்பதாகவும் இலங்கை அரசு தெரிவிப்பதோடு, மக்கள் தொகையையும் குறைத்தே சொல்கிறது. ஆனால் இவற்றினை உடைக்கும் தகவல்களை அம்னெஸ்டி போன்ற அமைப்புகள் அம்பலப்படுத்தின. இதைக் கொண்டு இலங்கை அரசினை கண்டிக்கும் செயலை சர்வதேசம் செய்யுமளவு ஐ.நா. நடந்து கொள்ளவில்லை. மேலும் கொண்டு செல்லப்பட்ட உதவிப் பொருட்களில் கிரிக்கெட் மட்டைகளும், பந்துகளும், புலிகளுக்கு எதிரான சிங்கள அரசின் துண்டறிக்கைகளும் பல சமயங்களில் எடுத்துச் செல்லப்பட்டன.

ஜான் ஹோம்ஸ்

ஜான் ஹோம்ஸ்

இந்தக் குழுவில் இருந்து இருவர் கொழும்புவிற்கு தப்பிச் சென்று ஐ.நா. அலுவலகத்தில் களத் தகவலை பகிர்கிறார்கள். அவ்வாறு பகிரும் போது, போரில் கொல்லப்படும் தமிழர்களின் இறப்பினைக் கணக்கெடுக்கும் வேலை ஐ.நா. அலுவலகத்தில் நடக்காத ஒன்றினைக் கவனித்து, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, இவர்களது கள தகவல் அடிப்படையில் இறப்பு தகவல்கள் தொகுக்கப்படுகின்றன. இது 2009 பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் ஏற்படுகின்றது. மூன்றாவது வாரத்தில் முடிவு பெறும்போது அது அதிர்ச்சிக்குரிய தகவலாக மாறும் அளவிற்கு தமிழர்கள் போர்க்களத்தில் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.

மார்ச் 2009இன் முதல் வாரத்தில் இந்தத் தகவலை அறிந்த ஐ.நா.வின் உலக தலைமைச் செயலகம் உடனடியாக அரசியல் குழுவில் இருந்து உயர் அதிகாரியை அனுப்புகிறது. அவர் கொழும்புவில் தகவலை கவனித்ததும் "இந்தத் தகவலை வைத்து நாம் உடனடியாக நடவடிக்கை எடுத்து தடுத்து நிறுத்தவில்லை எனில் நாமும் குற்றவாளிகளாவோம்" என்று பதிவு செய்கிறார். தொகுக்கப்பட்ட தகவலை எடுத்துக் கொண்டு மார்ச் 9இல் ஐ.நா. தலைமை அலுவலகம் செல்கிறார்.

மார்ச் மாதம் 12 ஆம் தேதி நடைபெற்ற உயர்மட்டக்குழு விவாதத்தின் இறுதி நேரத்தில் ஐ.நா.வின் மனித உரிமை ஆணையத்துக்கு ஒரு விரிவான மின்னஞ்சலை ஐ.நா.வின் தலைமை அதிகாரி விஜய் நம்பியார் அனுப்புகிறார். அந்த மின்னஞ்சலில், "இலங்கையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை நம்மால் உறுதி செய்ய முடியாது; எனவே வெளியிட வேண்டியதில்லை" என பதிகிறார். மேலும் "ஒருவேளை நீங்கள் அவ்வாறு எண்ணிக்கையை வெளியிட விரும்பினால் அவற்றினை நீர்த்துப் போகச்செய்து வெளியிடுமாறு" குறிப்பிடுகிறார். அந்த மின்னஞ்சல் மேலும் இரண்டு முக்கிய செய்திகளைக் காட்டுகிறது. ‘இலங்கை அரசின் மீது போர்க் குற்றம், மனித குலத்திற்கு எதிரான குற்றத்தினை நாம் இப்போது வைக்க முடியாது. அவ்வாறு செய்தால் இலங்கை அரசின் விரோதத்தினை நாம் சம்பாதிக்கவேண்டி வரும்; அது நமக்கு நல்லதல்ல" என்கிறார். இதுமட்டுமல்லாமல் அவர் குறிப்பிடும் மற்றுமொறு விடயம் "ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும். குற்றச்சாட்டுகளில் இலங்கையையும், விடுதலை புலிகளையும் ஒன்றாகவே நாம் பாவிக்க (குற்றம்சாட்ட) வேண்டும்" எனச் சொல்கிறார். பின் இதே உள்ளர்த்தம் உள்ள மின்னஞ்சல் பிற துறைகளில் இருந்தும், குறிப்பாக மனித நேய உதவிகளுக்கான அதிகாரி ஜான் ஹோல்ம்ஸ்‍மிடமிருந்தும் அனுப்பப்பட்டு, இறுதியில் மார்ச் 12-13ஆம் தேதி மனித உரிமை ஆணையத்தின் அறிக்கைகள் நீர்த்துப் போய், புலிகளை கடுமையாக குற்றம் சாட்டி வெளியிடப்படுகின்றன.

இந்த மார்ச் 12-13ஆம் தேதி அறிக்கையே தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதன் தொடர்பில் வெளியிடப்பட்ட இறுதி அறிக்கையாக அமைகிறது. அதுவும் புலிகளை குற்றம் சாட்டி வந்த அறிக்கையை இலங்கையில் இருந்த ஐ.நா.வின் களப்பணியாளர்கள் ஏற்காமல் விமர்சனம் செய்கிறார்கள்.

இந்த வேலையை விஜய் நம்பியார் செய்தபோது, கிட்டதட்ட 45 நாட்களுக்கும் மேலாக உணவும், மருந்தும் இல்லாமல் ஆயிரக்கணக்கான இறப்புகள் முற்றுகைப் பகுதியில் நடைபெறுகின்றன என்பதை சார்லஸ் பெட்றி பதிவு செய்கிறார்.

இவ்வாறு இலங்கை அரசால் ஈழத் தமிழர்கள் கொல்லப்படுவதைப் பற்றியான முழுமையான தகவல்கள் சர்வதேச சமூகத்திற்குக் கிடைக்காமலிருக்கும் வேலையை விஜய் நம்பியார் செய்கிறார். மேலும் புலிகளைக் குற்றஞ்சாட்டுவ‌தன் மூலமாக 'புலிகள் ஒடுக்கப்படவேண்டியவர்கள், பயங்கரவாதிகள், எனவே இது பயங்கரவாதத்திற்கு எதிரான போர்' என்று அறியச் செய்கிறார். இதன் மூலமாக இலங்கை அரசானது சர்வதேச சமூகத்தின் முன் நியாயமாக்கப்படுவதுடன், இனப்படுகொலைக்கான உதவிகள் அந்த அரசிற்குக் கிடைக்கிறது.

மனித நேய உதவிப் பொருட்களான உணவு, மருந்துப் பொருட்களை அனுப்ப தடை செய்யப்பட்ட‌தை உலகின் கவனத்திற்குக் கொண்டு செல்வதைத் தடுக்க மறைமுகமாக விஜய் நம்பியார் உதவியிருக்கிறார். மருந்தும், உணவும் போரின் கருவிகளாக பயன்படுத்தப்படுவதை ஐ.நா.வின் சாசனம் போர்க்குற்றமாகவே சித்தரிக்கிறது. இதை ஐ.நா.வின் உயர் அதிகாரிகளான விஜய் நம்பியாரும், ஜான் ஹோல்ம்ஸ்சும் செய்து முடிக்கிறார்கள். அவர்கள் இலங்கை அரசை நாம் விரோதித்தால் அவர்கள் மனித நேய உதவிகளை செய்ய நம்மை அனுமதிக்க மாட்டார்கள் என்கிற வாதத்தினை முன் வைத்தார்கள். அதில் உண்மையும் கவலையும் இருக்கிறது என எடுத்துக் கொண்டால், 15 ஜனவரி 2009க்குப் பிறகு எந்த ஒரு உதவிப் பொருளையும் ஐ.நா. போரின் இறுதிக் காலம் வரை கொண்டு சேர்க்க‌வில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இது மட்டுமல்ல, இந்த மின்னஞ்சல் மேலும் ஒரு விடயத்தினை அம்பலமாக்குகிறது. அதாவது 12 மார்ச் 2009 அன்றே ஐ.நா.வின் முக்கிய குழுக்களில் ஒன்றான மனித உரிமைக் குழு 'இலங்கை செய்தது போர்க் குற்றம்' என்றும், 'மனித குலத்திற்கு எதிரான குற்றம்' என்றும் முடிவுக்கு வருகிறது. அவ்வாறு அறிவிப்பதற்கான ஆதாரங்களை அது பரிசீலித்தபிறகே அந்த முடிவுக்கு வருகிறது. இந்த ஆதாரங்கள் களப் பணியாளர்களிடமிருந்து பெறப்பட்டவையே. ஐ.நா. அலுவலர்கள் 15 ஜனவரி 2009இல் களமுனையில் இருந்து அனுப்பிய செய்திகளின் அடிப்படையிலேயே இது சாத்தியமாயிற்று. மனித நேய உதவிகளைச் செய்யும் குழுவிற்கு சர்வதேச மனித உரிமை சட்டங்களை மீறும் நிகழ்வுகள் தெரிந்தே இருக்கும். அதை அவர்கள் அவதானிக்க வில்லை என்றால் எந்த வழிமுறையில் ஐ.நா. அவதானிக்கும் என்பது எளிய கேள்வி. ஆனால் இவ்வாறு முதல் தகவலாக நேரடியாகப் பெறப்பட்ட தகவலை உறுதி செய்ய முடியாத தகவலாக ஜான் ஹோல்ம்ஸ்சும், விஜய் நம்பியாரும் கருதுகிறார்கள். இந்தத் தகவல் அறிக்கையாக வரும்போது, அதன் முக்கியப் பகுதிகளை ஐ.நா.வின் உயர் அதிகாரிகள் மறைத்தே வெளியிட்டுள்ளார்கள். அவ்வாறு மறைக்கப்பட்ட பகுதிகளை மே பதினேழு இயக்கத் தோழர் உடைத்து, வெளியெடுத்த தகவலை வைத்தே இது தொகுக்கப்பட்டது.

gotabaya_vijay_nambiyar_600

கோத்தபய ராஜபக்சே உடன் விஜய் நம்பியார்

இதன் பிறகு ஏப்ரல் 2009இல் ஐ.நா.வின் தலைமை அலுவலகத்தில் இருந்து ஐ.நா.விற்கான துணைக்கோள் உதவியுடன் பெறப்பட்ட தகவலை அடிப்படையாகக் கொண்டு, அங்கு பெருமளவிலான சேதங்கள் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டு இருப்பதாகவும், மருத்துவமனைகள் உள்ளிட்ட பகுதிகள் தாக்கப்பட்டு இருப்பதாகவும், செய்திகள் வெளியிடப்பட்டு இலங்கை அரசினைக் கண்டித்து அறிக்கை வெளியிடப்பட்டது. அதுவும் எப்பொழுதும் போல புலிகளையும் குற்றம்சாட்டியே வெளியிடப்பட்டது. ஆனாலும், ஜான் ஹோல்ம்ஸை அழைத்த இலங்கை அரசு, கடுமையாக கண்டித்ததோடு, அந்த செய்தி உண்மைக்கு மாறான, உறுதிப்படுத்தப்படாத தகவல் என வெளியிடச் சொல்லி நெருக்குகிறது. அதை ஏற்று இலங்கை அரசிற்கு மின்னஞ்சலை அனுப்புகிறார். அந்த மின்னஞ்சலை ஐ.நா.வின் மறுப்பு அறிக்கையாக, துணைக்கோள் செய்தி அறிக்கையை மறுத்த செய்தியாக இலங்கை வெளியிடுகிறது. இதை ஐ.நா. கண்டிக்கவில்லை. மாறாக பான் – கி- மூனின் செய்தித்தொடர்பாளர் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, இலங்கை தொடர்பான மக்கள் இறப்பினைப் பற்றிய கேள்விக்கு ‘உடல்களை எண்ணுவது எங்களது பணியல்ல’ என்று சொல்லி கடந்து செல்வதை இந்த அறிக்கையில் இல்லாமல் இருந்தாலும் காணொளியாகக் கண்டோம்.

ஐ.நா.வின் முக்கிய நிறுவனங்களான மனித உரிமை அமைப்பு இவ்வாறு அமைதியாக்கப்பட்டது. இதே நேரத்தில் இந்த அறிக்கையில் வெளியிடப்படாத அல்லது கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படாத விடயமாக ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலின் தலைவராக இருந்த ஜப்பானின் தக்காசுவின் இலங்கை சார்பு நிலையும், புலிகளுக்கு எதிரான அறிக்கையும் மனித உரிமை, மனித நேயப் பிரச்சனைகள் தொடர்பில் பாதுகாப்பு கவுன்சில் இலங்கையை விவாதப் பொருளாக மாற்றுவதை தடுத்தது. போர் முடியும் காலம்வரையில் ஐ.நா.வின் பொதுச் சபையோ, பாதுகாப்பு கவுன்சிலோ கூட்டப்படாமல் செய்வதற்கான முயற்சியை இவர்கள் பான் –கி- மூனின் மெளனமான அங்கீகாரத்தின் மூலமாக செய்து முடித்தார்கள்

ஐ. நாவின் மற்ற நிறுவனங்களும் இவர்களின் உதவியோடு தோற்கடிக்கப்பட்டன அல்லது செயலிலழக்கச் செய்யப்பட்டன.

ஐ.நா.வின் இனப்படுகொலை தடுப்பு ஆலோசகர் நேரடியாக கள ஆய்வு செய்து ஐ.நா.வின் தலைமை அதிகாரியான பான் – கி- மூனிற்கு செய்தி அனுப்பி, இனப்படுகொலையை தடுக்க வேண்டும். இவருக்கும் ஐ.நா.வின் மனித நேய, மனித உரிமைச் சட்டங்களை அமுல்செய்யும், உறுதிபடுத்தும் அதிகாரம் உண்டு. இவர் மே 15 ஆம் தேதி, 2009இல் ஒரு குறிப்பினை மட்டும் அனுப்புகிறார். அதில் இனப்படுகொலை நிகழ்வதற்கான வாய்ப்பிருப்பதாக குறிப்பிடுகிறார். ஆனால் அவர் ஜான் ஹோல்ம்ஸ், விஜய் நம்பியார் முன்வைத்த இலங்கை அரசுடன் ஒத்துழைத்து செயல்படுவது என்பதற்கு ஏற்ப‌ முடிவெடுத்ததாக பெட்ரி தனது அறிக்கையில் குறிப்பிடுகிறார். ஆக இனப்படுகொலையை தடுத்து நிறுத்தும் அமைப்பும் செயல் இழக்கச் செய்யப்படுகிறது. இதன் மூலமாக இலங்கை அரசுக்கு இனப்படுகொலை செய்வதற்கான முழு சுதந்திரமும் கொடுக்கப்படுகிறது.

இது மட்டுமல்லாமல் போர் மற்றும் சிக்கல் நிறைந்த பகுதிகளில் பாதிக்கப்படும் குழந்தைகளைப் பாதுகாக்கும் ஐ.நா.வின் தலைமை அதிகாரிக்கான செயலாளர் இலங்கையைப் பொருத்தளவில் தமது தகவல் அறிக்கையைப் போர் முடிந்து பல வாரங்கள் கழித்தே அனுப்புகிறார். ஆனால் பிப்ரவரி 2009இன் போதே இறந்தவர்களில் குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர் என ஐ.நா.வின் இலங்கைக் குழு கணக்கிடுகிறது. ஆக ஐ.நா.வின் அனைத்து நிறுவனங்களும் செயல்படுவதை மூன்று முக்கிய அதிகாரிகள் தடுக்கிறார்கள் அல்லது அதனை இலங்கைக்கு ஆதரவாக மாற்றுகிறார்கள்

விஜய் நம்பியார் மற்றும் பான் கீ மூன்

இதன் பிறகு இலங்கையின் பிரச்சனையை மேற்பார்வையிடவும், கையாளவும் விஜய் நம்பியார் அனுப்பப்படுகிறார். இவர் மே 14ம் தேதி இலங்கை வந்தடைகிறார். மே 15 ஆம் தேதிக்குப் பின்பு முள்ளிவாய்க்காலில் சிக்குண்ட மக்களையும், இலங்கை ராணுவத்திடம் சரணடையும் புலிகளின் அரசியல் தலைவர்களையும், பொதுமக்களையும், போராளிகளையும் சர்வதேச சட்டங்களின் படி இலங்கை அரசு நடத்துவதையும், அதை மேற்பார்வையிட்டு உறுதி செய்வதுமே அவரது முதன்மைப் பணியாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இவர் முள்ளிவாய்க்காலுக்கு செல்வதற்கு இலங்கை அரசிடம் அனுமதி கேட்கிறார். இலங்கை அரசு அனுமதி மறுக்கிறது. வெள்ளைக்கொடியுடன் வருபவர்களைக் காப்பதாக இலங்கை அரசு இவரிடம் உறுதி கூறுகிறது. ஆனால் முள்ளிவாய்க்காலுக்கு செல்ல அனுமதி மறுக்கிறது. இவரும் அதன் பின்பு இலங்கை அரசிடம் கேட்பதைத் தவிர்க்கிறார் அல்லது அதற்கான முயற்சி எடுப்பதை நிறுத்துகிறார். பின்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஏன் முள்ளிவாய்க்காலுக்கு செல்லவில்லை எனும் போது “கொழும்புவிற்கு வெளியே தட்பவெப்பம் சரியாயில்லை” என்கிறார்.

இனப்படுகொலையை தடுக்க அனுப்பப்பட்ட விஜய் நம்பியாரின் உடன்பிறந்த மூத்த சகோதரர் சதீஸ் நம்பியார் என்பவரே இந்த இனப்படுகொலை போரில் இலங்கை ராணுவத்திற்கான ஆலோசகராக செயல்பட்டவர். மேலும் ஐ.நா.வானது நடைமுறையில் எந்த ஒரு போர் நிகழ்ந்த பகுதிக்கும் அதன் அண்டை நாட்டினைச் சேர்ந்தவரை அனுப்புவ‌து கிடையாது. ஆனால் இலங்கை விடயத்திலும், பர்மா விடயத்திலும் விதிகளுக்கு மாறாக நடந்து கொள்கிறது.

மே 17, 18, 2009இல் இனப்படுகொலை முடியும் வரை பான் – கி – மூன் இலங்கைக்கு வரவே இல்லை. போரின் இறுதி நாளில் வெள்ளைக்கொடியுடன் வந்த புலிகளின் தலைவர்களும், அவர்களின் குடும்பங்களும் கொலை செய்யப்பட்டதும், பெரும் திரளாக மக்கள் படுகொலை செய்யப்பட்டதும் சர்வதேச ஊடகங்களில் வெளியானபோது கூட இவர் இலங்கைக்கு வரவில்லை. ஆனால் போர் வெற்றி விழாவில் கலந்து கொள்ளவே அவர் இலங்கையில் இறங்குகிறார் என ஐ.நா.வின் அதிகாரிகளே அவதானிக்கிறார்கள். இவ்வாறான குற்றச்சாட்டும் உண்மை என்பதை நாம் அறிவோம். போர் ஆரம்பித்த காலத்தில் இருந்து இறுதி வரை புலிகளின் மீதே குற்றச்சாட்டினை ஐ.நா. வைத்தது என்று ஐ.நா.வின் களப்பணியாளர்கள் பதிவு செய்தார்கள். ஐ.நா.வினுடைய இலங்கைக்கான பணியாளர் குழு இதை எதிர்த்திருக்கிறார்கள் என்பதை அறிக்கை பதிவு செய்திருக்கிறது. ஏனெனில் அவர்களது கூற்றுப்படி இலங்கை அரசு மீதான எந்தவித குற்றச்சாட்டினையும், ஆதாரங்கள் இருந்த போதிலும் ஐ.நா. வெளியிடவில்லை. மனித நேய உதவிகளை குண்டு வீச்சினால் தடுத்தபோதிலும் இலங்கை அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவில்லை.

போர் முடிந்த பிறகு இலங்கை மீது ஒரு விசாரணையை ஐ.நா.வின் 99வது விதியின் படி துவக்க வேண்டும் என ஐ.நா.வின் சட்ட நிபுணர் குழு கோரிக்கை வைக்கிறது. ஜூலை 2009இல் கொள்கைக் குழுவில் ஒரு நீதி விசாரணைக்குப் பதிலாக இலங்கைக்கு சிறிது கால அவகாசம் அளிப்போம் மற்றும் ஒரு உள்நாட்டு விசாரணை ஆரம்பிக்கட்டும் எனக் கூறி ஐ.நா.வின் விசாரணையை பான் – கி – மூன் மறுக்கிறார். இலங்கை அரசு உள் நாட்டு நீதி விசாரணைக்கு 2010 ஜனவரி வரை மறுத்தே வருகிறது (அதாவது ராஜபக்சே மீண்டும் அதிபராகும் வரை காத்திருக்கிறது). அதுவும் இயலாமல் போகவே மார்ச் 2010இல் இலங்கைப் போரின் மீது ஒரு விசாரணைக் குழுவினை அமைக்கிறார். இந்த விசாரணைக் குழுவும் இலங்கைக்குள் செல்லாமலேயே அறிக்கை தயாரிக்கிறது. இலங்கைக்குள் அனுமதி மறுத்ததை ஐ. நா. கண்டிக்கவே இல்லை.

இது போன்ற எண்ணற்ற ஆதாரங்களோடு ஐ.நா.வின் உயர் அதிகாரிகளின் செயல்பாடுகள் ஐ.நா.வின் உள்ளக அறிக்கையில் ஆவண‌ப்படுத்தப்பட்டுள்ளன‌. இதுமேலாக எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. மாறாக இந்த உண்மைகளை மூடிமறைக்கவே செயல்பாடுகள் நடக்கின்றன என்பதை அறிய முடிகிறது. மேலும் பி.பி.சி. போன்ற முன்னணி ஊடகங்கள் இந்த செய்தியைத் திரிக்கவும், ஜான் ஹோல்ம்ஸ் என்கிற அதிகாரியை அழைத்தே கருத்துக்களை பதியச் செய்தனர். இந்திய ஊடகங்களும் இதை வெளியிடாமல் மெளனம் காக்கின்றன.

இந்த நிலை ஐ.நா.வின் உயர் அதிகாரிகள் தமிழீழ கோரிக்கையைப் பின்னுக்குத் தள்ளி 'மறுசீரமைப்பு, நல்லிணக்கம், வாழ்வுரிமை' என்கிற சமூக நல கோரிக்கையை முன்னுக்குத் தள்ளும் வேலையை செய்து கொண்டு இருக்கிறார்கள். கடந்த 2012 ஆகஸ்ட் 1 ஆம் தேதி ஐ.நா.வின் மறுசீரமைப்பிற்கான தலைவர் ஜான் ஜிங், இலங்கை அரசானது உலகிலேயே மறுசீரமைப்பிற்கு முன்மாதிரியாகத் திகழ்கிறது என புகழ்கிறார். இது போல பல புகழாரங்கள், அங்கீகாரங்களை ஐ.நா. உயர் அதிகாரிகள் இலங்கைக்கு தொடர்ச்சியாக வழங்குகிறார்கள் என்பதை நாம் கவனத்தில் எடுக்க வேண்டும்.

ban-ki-moon_rajapakse_600

பான் கீ மூன் மற்றும் ராஜபக்ச

இவற்றுடன் நாம் கவனிக்க வேண்டிய கூடுதல் செய்தி என்னவென்றால், சித்தார்ஜ் சாட்டர்ஜி என்கிற இந்தியாவின் முன்னாள் ராணுவ அதிகாரி இலங்கைக்கு அனுப்பப்பட்ட அமைதிகாப்புப் படையில் பாரசூட் மூலமாக யாழ் பல்கலைக் கழக வளாகத்திற்குள் புலிகளைத் தாக்க அனுப்பப்பட்டவர்களில் ஒருவர். கிட்டத்தட்ட தன்னுடன் வந்தவர்கள் அனைவரும் கொல்லப்பட, இவர் மட்டும் தப்பிச்செல்கிறார். அன்றிலிருந்து இன்று வரை இவர் புலிகளுக்கும், தமிழீழத்திற்கும், தமிழர்களுக்கும் எதிராக தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறார். இவர் தனது தோல்வி எண்ணத்தால், வன்மத்தினையே இதுவரை தனது ஊடகக் கட்டுரைகளில் பதிவு செய்தவர். இவர் தற்போது ஐ.நா.விற்கான பணியாளாராக இருக்கிறார் என்பது மட்டுமல்ல, இவர் பான் – கி- மூனின் இரண்டாவது மகளை மணம்புரிந்து இருக்கிறார். சதீஸ் நம்பியார், சித்தார்ஜ் சாட்டர்ஜி போன்றோரை நெருங்கிய உறவினராக வைத்து இருக்கும் ஐ.நா.வின் உயர் அதிகாரிகள் தமிழீழப் படுகொலையில் பங்கெடுத்து இருப்பது ஆச்சரியமில்லை.

இந்த மூவர் கூட்டணியும், இவர்களுக்குப் பின்னால் இருந்து செயல்பட்ட மிக மிக முக்கிய ஆற்றலான இந்தியாவும், அதன் அதிகாரிகளும் விசாரிக்கப்பட வேண்டியவர்கள். இவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதியப்படவேண்டும், விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்தக் கூட்டணியே தமிழீழ விடுதலைக் கோரிக்கைக்கு எதிரான‌ செயல்பாடுகளை சர்வதேச அளவில் செய்து வருகிறது. இந்த நிலைக்கு ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலின் தலைவராக இருந்த தகாசி என்கிற சப்பானிய அதிகாரியும் உடந்தை. இவர் தொடர்ந்து தமிழீழப் போராட்டத்திற்கு எதிராகவும், புலிகளுக்கு எதிராகவும், இலங்கைக்கு ஆதரவாகவும் செயல்பட்டதோடு மட்டுமல்லாமல் பாதுகாப்பு கவுன்சிலில் எந்த ஒரு முடிவும் எட்டப்படாமலேயே கூட்டத் தொடரை சம்பிரதாய பதிவுகள் கூட இல்லாமல் செய்து முடித்தவராக அறியப்படுகிறார். இந்த மிக முக்கிய கவுன்சில் போர் முடிய இரண்டு நாட்களுக்கு முன்பு ம‌ட்டுமே தனது அறிக்கையைப் பதிவு செய்கிறது.

சர்வதேச விசாரணையை பான் கி மூன் தடுத்ததன் மூலமாக ஐ.நா.வில் தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பினை நடக்க விடாமல் தடுத்துள்ளார்.

இந்த மறைக்கப்பட்ட நீதியை மீட்டெடுக்க வேண்டியது தமிழரின் கடமையாகும். சர்வதேச விசாரணையையும், ஐ.நா.வில் பொது வாக்கெடுப்பினையும் தடுத்து நிறுத்திய இந்த அதிகாரிகளும், அதன்பின் உள்ள இந்திய அதிகாரிகளையும் விசாரித்து தண்டிப்பது உலக நீதிக்கு அவசியமானதாகும். இதை சாத்தியப்படுத்த வேண்டியது தமிழர்களின் கடமையாகும். மிகச்சரியான சமயத்தில் நாம் இந்தப் போராட்டத்தினை முன்னெடுக்கத் தவறினால் ஐ.நா. இந்த நிகழ்வுகளை குழிதோண்டிப் புதைப்பதுடன் தமிழீழக் கோரிக்கை சர்வதேச அளவில் விவாதத்திற்கு வராமல் தடுத்து விடும். இதுவே அது இந்தியா-இலங்கை கூட்டணிக்கு செய்யும் பெரும் உதவியாகும்.

பிப்ரவரி 12, 2009இல் ஜெனிவாவில் ஐ.நா. அலுவலகத்திற்கு முன் தமிழீழ விடுதலையையும், மக்களையும் காக்கக் கோரி தீக்குளித்து தியாகம் எய்திய முருகதாசனின் நினைவு நாளில் ஐ.நா. அலுவலகங்களை உலகெங்கும் முற்றுகை இடுவோம். அயோக்கிய அதிகாரிகளையும் அதன் பின்னுள்ள இந்திய அரசினையும் விசாரிக்க வலியுறுத்துவோம். இவர்கள் தடுத்து வைத்துள்ள சர்வதேச பொது வாக்கெடுப்பையும், இலங்கை மீதான சர்வதேச விசாரணையையும் உடனே நடத்தச் சொல்லி சர்வதேசத்தினை நெருக்குவோம். நமது விடுதலையை நாமே வென்றெடுப்போம்.  மாவீரன் முத்துக்குமார் தனது மரண சாசனத்தில் பான் – கி- மூனினைப் பற்றி முன்வைத்த அவதானிப்புகள் வரலாற்றில் உண்மை என்றே அறியப்படுகின்றன. இந்த தமிழ்ச் சமூகத்தின் தியாக செம்மல்களை நினைத்து அவர்களின் நினைவாக நாம் இந்த போராட்டத்தினை முன்னெடுப்போம் என மே பதினேழு இயக்கம் அழைப்பு விடுக்கிறது. கட்சி, சாதி, எல்லைகள் கடந்து தமிழராய் ஒன்றாவோம். நாம் பெரும் திரளாய் ஒன்று கூடி நடத்தும் போராட்டம் சர்வதேச அரங்கில் நடக்கும் நாடகங்களை உடைத்து தமிழீழ விடுதலையை உறுதி செய்யட்டும். 2009இல் நாம் செய்யத் தவறிய பொறுப்புகளை தற்போது செய்து முடிக்க ஆயிரமாய் அல்ல, லட்சங்களாய் அவரவர் இயக்க, கட்சி அடையாளங்களோடு தமிழர்களாய் ஒன்று கூடுவோம்.

நாம் வெல்வோம்.

- திருமுருகன் காந்தி, மே பதினேழு இயக்கம்.

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 viyasan 2013-01-30 15:42
விஜ‌ய் ந‌ம்பியார் எங்க‌ளின் திராவிட‌ உட‌ன்பிற‌ப்பாச் சே.. அவ‌ரும் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ ளின் அழிவுக்குக் கார‌ணமா? நம்ப‌முடிய‌வில் லையே!

http://www.viyaasan.blogspot.ca/
Report to administrator
0 #2 ANNADURAI 2013-02-04 21:58
A WONDERFUL ARTICLE
Report to administrator
0 #3 ANNADURAI 2013-02-04 21:59
THAMIL EELAM VELGA VELGAVAE....
Report to administrator
0 #4 solomon 2013-02-06 15:35
விடுதலைப் புலிகலின் ஆயுதப் போராட்டம் சர்வதேசிய அலவில் அரசியல் போராட்டமாக பரினமித்திருக்க ிர இந்த சூழலில்,ராஜபட்ச வும் திருமுருகன் காந்தியும்(பின் பெயருக்கு பொருத்தமாக)ஈழ விடுதலைக்கெதிரா க ஓரனய்ல் இருக்கிரார்கல் என்பது இந்த விலக்கத்தின் மூலமாக விலங்குகிரது.(த மிழர்கலெ எச்சரிக்கை! ஈழத்தின் விடுதலையை விரும்பாதவர்கல் சிங்கலத்தில் மட்டுமல்ல இங்கேயும் கூடுவார்கல்)
Report to administrator
0 #5 raghava raj,t.v. 2013-02-07 12:16
சபாஷ்,திருமுருக ன் காந்தி,ராஜபக்சே வை விட ஐ.நா.அதிகாரிகள் தான் அதிக அயோக்கியர்கள் என்று சொல்ல வருகிறீர்கள்.இத ு ராஜபக்சே,"ரா" கையாட்கள் செய்யும் வேலையல்லவா!
Report to administrator
0 #6 suresh 2013-02-10 02:33
அட இங்க பாருடா... இலங்கை சென்ஞ அயோக்கியத்தனத்த ுக்கு , அதுக்கு உதவி பன்னுன ஐ. நா ந்னு ஒருத்தன் சொல்ரான்.. அது கூட புரியாதவனுக ராஜபக்சே கையாளுன்னு எழுதுரான்.. விளங்கும்டா... இவனுக எதுக்கு இந்த கட்டுரையெல்லாம் படிக்கிறானுக... சகீலா படத்துக்கு விமர்சனம் எழுதச் சொல்லனும்... எல்லோரும் ஐ. நாவுக்கும் இந்தியாவுக்கும் கூஜா தூக்க சொல்றான் போல...
Report to administrator
0 #7 muthuraman 2013-02-12 12:07
இப்பொழுது ஈழப்பிரச்சினையி ல் ஐ.நா.வும் இந்தியாவும் ஒரே நிலைபாட்டில் இருக்கின்றனவா? இல்லையே,இரண்டுக ்கும் முரண்பாடுகள் இருக்கின்றனவே!ச ுரேஷ் லாஜிக் இடிக்கிறது.இந்த மாதிரி சிக்கலான பிரச்சினைகளை கொஞ்சமாவது அறிவு உள்ளவர்களால் தான் புரிந்துகொள்ள முடியும்.
Report to administrator
0 #8 antony 2013-02-17 15:03
ராஜபக்சே இனப்படுகொளையாளன ். இந்தியா சதி திட்டம் தீட்டியது. ஐ.நா சர்வதேச அழுத்தங்களை தடுத்து குற்றவாளிக்கு உடந்தையாய் இருந்தது. அருமையாக விவரித்துள்ளீர் கள்.

கட்டுரையின் முதல் வரியே அருமை "இலங்கை மீதான சர்வதேச விசாரணையையும், தமிழீழத்திற்கான ஐ.நா.வின் பொது வாக்கெடுப்பினைய ும் தடுத்து நிறுத்தியதை உடனடியாக நிறைவேற்றுவதே பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான உடனடி நிவாரணம்! ஐ.நாவே அதை நிறைவேற்று!!" இதனை செய்தால் ராஜபக்சே மட்டுமல்ல உடந்தையாய் இருந்தவர்களும் தப்ப முடியாது.

ஈழம் வெல்லும்!
Report to administrator

Add comment


Security code
Refresh