மாருதி-சுசூகி தொழிலாளர் சங்கத்தின் தலைமையில் குர்க்கானில் உள்ள மானேசரில் அமைந்துள்ள மாருதி-சுசூகி ஆலைத் தொழிலாளர்கள் தொழிலாளர் ஆணையர் அலுவலகம் முன் 2012 நவம்பர் 8, 9 தேதிகளில் இரண்டு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் வேலையில் சேர்க்கக் கோரியும் சிறை செய்யப்பட்ட தொழிலாளர்களை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் இந்தப் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.

பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமின்றி, பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்களின் அமைப்புக்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

அரியானாவின் பாசிச அரசாங்கம் இந்த வேலைநிறுத்தம் தொடங்குவதற்கு முன்பே அடக்கி ஒடுக்கிவிட கடுமையாக முயற்சி செய்தது. அப்போது தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திற்கு வெளியே நிறைய போலீஸ் குவிக்கப்பட்டு இருந்தது. தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்திற்கு கூடியவுடன் போலீசார் அவர்களை கைது செய்ய தொடங்கியது. இருப்பினும், மேலும் தொழிலாளர்கள் குவிந்தவுடன் எழுச்சி மிக்க வேலை நிறுத்தம் தொடங்கியது.

18 சூலையில் மாருதி மானேசர் ஆலையில் தீ ஏற்பட்டு ஒரு மேலாளர் மூச்சுமுட்டி இறந்துவிட்டார் என்பது நன்கு தெரிந்ததே. அதற்கு பின், எந்த விசாரணையும் இல்லாமல் "கொலை மற்றும் கொலை செய்ய சதி" செய்ததாக இந்திய குற்றவியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் 655 தொழிலாளர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் சாட்டப்பட்டுள்ளனர். இதில் வெறும் 55 நபர்களுக்கே பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் 160 நபர்களை சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். நிறுவனம், 546 தொழிலாளர்களை எந்த முன்அறிவிப்பும் இல்லாமல் வேலைநீக்கம் செய்துள்ளது. இது தவிர, மேலும் 2000 தற்காலிக தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். தொழிலாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற ஒரு தொழிற்சங்கம் அமைப்பதை நிர்வாகம் கடுமையாக எதிர்க்கிறது.

வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களிடத்தில் உரையாற்றிய தொழிலாளர் ஒற்றுமைக் குழுவின் பிரதிநிதி, நாட்டின் தொழிலாளர்களும் முதலாளிகளும் மாருதி-சுசூகி தொழிலாளர்களின் போராட்டத்தை கூர்ந்து கவனித்து வருகின்றனர், என்று கூறினார்.

அநீதி இழைக்கப்படுவதற்கு எதிராக நீதிக்கான போராட்டங்களை முன்னெடுக்கவும் சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கவும், தங்கள் விருப்பப்படி போராட்ட அமைப்புக்களை அமைக்கும் உரிமையை தொழிலாளர்களுக்கு மறுப்பதற்காக தொழிலாளர்களின் இந்த போராட்டத்தை எப்படியாவது நசுக்க வேண்டும் என்று முதலாளிகள் பெருமுயற்சி செய்து வருகிறார்கள் என்று அவர் விளக்கினார். தொழிலாளர்களின் வெற்றி நோக்கிய பயணத்தை தடுத்து நிறுத்தவும் அவர்களின் முயற்சியை மக்களின் பார்வையில் இழிவுபடுத்தவும் தான் மாருதி-சுசூகி நிர்வாகமும் அரசாங்கமும் சதி செய்து வருகின்றன.

கடந்த பல ஆண்டுகளாக, முதலாளிகளின் அரசாங்கம் இன்றுள்ள தொழிலாளர் சட்டங்கள் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு தடைக்கல்லாக உள்ளன என்று சித்தரித்து நம் நாட்டு மக்களை குழப்பி வருகின்றனர். வேறு வார்த்தைகளில் கூறினால், முதலாளிகளின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் என்று அவர்கள் சொல்கிறார்கள். முதலாளித்துவ அரசியல் கட்சிகள் இந்திய முதலாளிகளை உலகளாவிய முதலாளிகளாகப் பார்க்க வேண்டும் என்று ஆவலாக உள்ளனர். சுரண்டலுக்கு எதிராக தொழிலாளி வர்க்கம் இருப்பது அவர்களுக்கு முட்டுக்கட்டையாக உள்ளது.

மாருதி தொழிலாளர்களின் போராட்டம் தொழிலாளி வர்க்கத்திற்கு மிக முக்கியமானது என்று சுட்டிக்காட்டினார். இது மானேசர் குர்க்கானுடைய ஒரு போராட்டம் என்பது மட்டுமல்ல, இது பரிதாபாத்திலிருந்து பாவல் வரையிலான இந்தியாவின் அனைத்து தொழிலாளி வர்க்கம் மற்றும் உழைக்கும் மக்களுடைய போராட்டமுமாகும். இந்த போராட்டம் வெற்றிபெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அப்பொழுது தான் நாம் எந்த முன்னேற்றத்தையும் பெற முடியும்.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வாக்களித்துவிட்டு நாட்டை நடத்துவதை முதலாளிகளிடமும் அவர்களது அரசியல் கட்சிகளிடமும் ஒப்படைத்துவிட்டு நாம் அரசியலில் ஒதுக்கப்பட்டு இருக்க முடியாது என்று விளக்கினார். நாம் தான் செல்வத்தின் படைப்பாளிகள், நாம் தான் நாட்டின் உந்து சக்தி. நாம் முதலாளிகளுடைய கைகளில் நாட்டை விட்டுவிட முடியாது, மாறாக நாமே ஓட்டுநர் இருக்கையை ஆக்கிரமிக்க வேண்டும். நாட்டின் தொழிலாளர்கள் ஒரு அரசியல் சக்தியாக உருவெடுக்க வேண்டும். நாம் முதலாளித்துவ கட்சிகளின் வாலாக இருப்பதை எதிர்க்க வேண்டும். நாம் தொழிலாளி வர்க்கத்தின் திட்டத்தை முன்னுக்கு கொண்டு செல்ல வேண்டும்.

இந்தியாவின் பல பகுதிகளிலும் இருந்து வந்த பல தொழிற்சங்க மற்றும் தொழிலாளர்களின் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இரண்டு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் உரையாற்றினார்.

அடுத்த நாள், தொழிலாளர்கள் தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் இருந்து பாராளுமன்றத்தின் உள்ளூர் உறுப்பினர் வீட்டிற்கு ஒரு ஊர்வலமாக சென்று தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தினர்

Pin It