நாட்டின் முன்னேற்றத்தை அளவிடும் கருவியாக ஆட்சியாளர்கள் நமக்கு காட்டுவது பங்குச் சந்தையைத்ததான். உலகம் முழுவதும் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையால் அமெரிக்க, ஐரோப்பிய பங்குச் சந்தைகள் பதினைந்து விழுக்காட்டிற்கும் மேலான இழப்பை சந்தித்தாலும், இந்திய பங்குச் சந்தைகள் வெறுமனே 1.8 விழுக்காடு அளவுக்கு மட்டுமே சரிவை சந்தித்துள்ளதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

இந்திய பங்குச் சந்தைகள் இருபது ஆயிரம் புள்ளிகளைத் தொடும் நிலைக்கு உயர்ந்து, உலகப் பொருளாதார வளர்ச்சியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குவதாகவும் மத்திய அரசு பெருமிதம் கொள்கிறது.

agriculture_200இந்திய பங்குச் சந்தை உயர்வுதான் நாட்டின் பொருளாதார உயர்வின் அடையாள சின்னமாக ஆக்கபட்ட 1990களில் தொடங்கி 2010 வரையிலான காலகட்டம் வரை, அதாவது கடந்த பதினைந்து ஆண்டு காலத்தில் இந்தியாவில் 2,56,913 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தேசிய குற்றப் பதிவு ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால் இந்த ஆணையத்தின் புள்ளி விவரங்களை மத்திய அரசோ, மாநில அரசுகளோ ஏற்றுக் கொள்வதில்லை.

1995 – 2010 வரையிலான பதினைந்து ஆண்டுகளில் 1995 – 2002 வரையிலான முதல் எட்டு ஆண்டுகளில் 1,21,157 ஆக இருந்த விவசாயிகளின் தற்கொலை அடுத்த எட்டு ஆண்டுகளில் அதாவது 2002 – 2010 வரையிலான கால கட்டத்தில் 1,35,756 ஆக உயர்ந்துள்ளது.

முதல் எட்டு ஆண்டுகளில் ஒரு ஆண்டின் சராசரி விவசாயிகளின் தற்கொலை 15,144 என்றால் அடுத்த எட்டு ஆண்டுகளில் இதுவே ஆண்டுக்கு 16,969 ஆக உயர்ந்துள்ளது. இதை நாள்வாரியாக கணக்கிட்டால் முறையே முதல் பாதி ஆண்டில் நாளொன்றுக்கு 41 பேராகவும், அடுத்தப்பாதியில் நாளொன்றுக்கு 46 ஆகவும் தற்கொலைகள் உயர்ந்துள்ளது.

விவசாயிகளின் தற்கொலையில் மகாராஷ்டிராதான் முதல் மாநிலம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது! 1995 - 2002 வரையிலான காலத்தில் 20,066 ஆக இருந்த தற்கொலை அடுத்த 2002 – 2010 வரையிலான காலத்தில் 30,415 ஆக உயர்ந்து சாதனை புரிந்துள்ளது இந்த மாநிலம்.

விவசாயிகளின் தற்கொலையில் முதல் மாநிலமாகத் திகழும் மகாராஷ்டிராதான் நாட்டிலுள்ள மாநிலங்களிலேயே மிகவும் பின்தங்கிய மாநிலமாக இருக்கும் என்று நாம் கருதினால், அது முட்டாள்தனம் என வேறொரு புள்ளி விவரம் நம்மைப் பார்த்து ஏளனம் செய்கிறது.

தனிநபர் வருவாயில் அரியானா, கோவா ஆகிய மிகச்சிறிய மாநிலங்களுக்கு அடுத்து மூன்றாவது மகாராஷ்டிரா இடத்தில் உள்ளதாம்! இம்மாநிலத்தின் தனிநபர் வருவாய் ஆண்டுக்கு ரூ. 74,027/ = என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

நாட்டின் பெரும்பான்மை மக்களாகிய விவசாயிகளின் தற்கொலையில் முன்னணியில் உள்ள ஒரு மாநிலம், தனிநபர் ஆண்டு வருவாயிலும் முன்னணி மாநிலமாக திகழமுடியுமா? என்றால் முடியும் என்றுதான் உண்மை நமது செவுளில் அறைந்தாற்போன்று கூறுகிறது.

இது எப்படி சாத்தியமானது என்று உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லையா? புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு இது கடினமான, புதிரான விடயமல்ல. அதாவது விவசாயிகளின் அழிவுதான் இந்த வளர்ச்சியாக மாற்றமடைந்துள்ளது.

நாடு முன்னேற வேண்டுமானால் விவசாயிகள் அழிய வேண்டும் என்பதுதான் ஆட்சியாளர்களின் சித்தாந்தம். இதை உங்களால் நம்ப முடியாவிட்டால் மீண்டும் ஒரு முறை புள்ளிவிவரங்களை கூர்ந்து கவனியுங்கள்!

விவசாயிகளையும், விவசாயத்தையும் இந்திய அரசு அழிவை நோக்கி தள்ளி விட்டுள்ளதால் 1991 முதல் 2001 வரையிலான காலத்தில் அதிகமான விவசாயிகள் விவசாயத்திலிருந்து வெளியேறியுள்ளனர். இது அடுத்த பத்தாண்டுகளில் இருமடங்காகியிருக்கும் என்பது மிகையல்ல!

indian_famers_600

நாட்டிலேயே விவசாயத்திலிருந்து வெளியேறும் விவசாயிகள் எண்ணிக்கையிலும், விவசாயம் அல்லாத வேறு வகையான பயன்பாட்டுக்கு விவசாய நிலங்கள் ஆட்படுத்துவதிலும் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது.

1990 – 91 ம் ஆண்டில் 18,35,000 ஏக்கர் நிலம் விவசாயம் அல்லாத வேறுவகை பயன்பாட்டில் இருந்தது. இதுவே 2008 – 09ம் காலப்பகுதியில் 26,67,396 ஏக்கராக உயர்ந்து விட்டது. 1990 – 2009 ஆகிய 19 ஆண்டுகளில் 8,32,396 ஏக்கர் நிலம் விவசாயம் செய்வதிலிருந்து வேறுவகை பயன்பாட்டுக்கு மாற்றப்பட்டுவிட்டது.

விவசாயத்திலிருந்து வெளியேறியுள்ள கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு மாற்று வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதா? மாற்று வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்ட பின்புதான் விவசாயிகள் விவசாயத்திலிருந்து வெளியேறியுள்ளார்களா? என்றால் அப்படி எதுவுமே நடைபெறவில்லை. விவசாயத்திலிருந்து வெளியேறியுள்ள விவசாயிகள் பெருநகரங்களில் கட்டுமானத்துறையில் தான் மாற்று வேலைத்தேடிக் கொள்கின்றனர்.

கிராமங்களோடு ஒப்பிடும்போது நகரங்களில் அதிகக் கூலி கிடைத்தாலும், நகர வாழ்க்கையோடு ஒப்பிடும் போது மிகக் குறைந்த கூலிக்கு தமது, உடல், பொருள் ஆவி அனைத்தையும் கொடுத்து நகரங்களை மேம்படுத்திய தொழிலாளர்கள், கட்டுமானப் பணிகள் முடிவடைந்ததும், அவைகளுக்கு பெரும் சுமையாகி வேண்டப்படாதவர்களாக ஆகிப் போனார்கள்! இந்த சுமையைக் குறைத்து அவர்களை மீண்டும் கிராமங்களுக்கே துரத்தும் இந்திய அரசின் நடவடிக்கை தான் நூறுநாள் வேலைத்திட்டமாகும்.

இன்று நாட்டிலேயே தமிழகம்தான் கட்டுமானப் பணிகளில் முன்னணியில் உள்ளதால் வட இந்திய மாநிலங்களில் விவசாயத்திலிருந்து வெளியேறும் விவசாயிகள் அலை, அலையாய் தமிழகம் நோக்கி படையெடுக்கின்றனர். இப்படி விவசாயத்திலிருந்து வெளியேறுபவர்கள் தமது உயிரையாவது தக்க வைத்துக் கொள்கின்றனர். வெளியேற முடியாதவர்கள் தற்கொலைக்கு தள்ளப் படுகின்றனர்.

கோடிக்கணக்கானோர் விவசாயத்திலிருந்து வெளியேறினாலும் இன்னமும் நாட்டில் 60 கோடி மக்கள் தமது வாழ்வுக்கான ஆதாரமாக விவசாயத்தைத்தான் நம்பி உள்ளனர். 2026 – ல் இந்தியாவின் மக்கள் தொகை 142 கோடியாக உயரும் என்றும் இவர்களில் 70 கோடிக்கும் மேலானவர்கள் விவசாயத்தையே சார்ந்திருப்பார்கள் என்றும் ஐநாவின் ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. ஆனால் 2026ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு வெறுமனே 15% மட்டுமே இருக்கும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முன்பு 34 விழுக்காடாக இருந்த விவசாயத்தின் பங்கு, தற்போது 21 விழுக்காடாக சரிவடைந்து விட்டது. இந்த சரிவின் எதிர் விளைவுதான் விவசாயிகளின் தற்கொலைகள். இதுவே 15 விழுக்காடாக மேலும் சரிவடையும்போது விவசாயிகளின் தற்கொலைகள் லட்சத்திலிருந்து கோடியாக உயர்ந்து கோரத்தாண்டவம் ஆடப்போகிறது.

நிலைமை இவ்வளவு தீவிரமடைந்த பின்னரும் கூட, விவசாயிகளின் தற்கொலையைத் தடுப்பதற்கான உருப்படியான நடவடிக்கைகளை, அதாவது விவசாயத்தை இழப்பில்லாத தொழிலாக ஆக்குவதற்கான எந்த திட்டத்தையும் ஆட்சியாளர்கள் உருவாக்கவில்லை. விவசாயிகளின் தற்கொலையால் எழக்கூடிய உணர்வலையைத் தணிப்பதற்கான சித்து வேலைகளைத்தான் செய்து வருகின்றனர்.

தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிப்பதன் மூலம் தனது கடமை முடிந்துவிட்டதாகவே ஆட்சியாளர்கள் கருதுகின்றனர். இழப்பீடு தருகிறோம் என்ற பெயரிலும் விவசாயிகளை மேலும், மேலும் இழிவுபடுத்தி வெந்தப் புண்ணில் வேலைத்தான் பாய்ச்சுகின்றனர்.

விவசாயிகள் தற்கொலையில் முதலிடம் வகிக்கும், மத்திய விவசாய அமைச்சரின் சொந்த மாநிலமான மகாராஷ்டிராவில் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் குடும்பத்தாரிடம் 40 கேள்விகள் கேட்கப்படுகிறது. இந்தக் கேள்விகள் தற்கொலையால் ஏற்பட்ட வேதனையைவிட மிகப்பெரியதாக இருப்பதாக விவசாயிகள் நொந்து கொள்கின்றனர். இதனால் பல விவசாய குடும்பங்கள் தமது குடும்பத்தில் நடைபெறும் தற்கொலைகள் பற்றி வாயே திறப்பதில்லை. இதுதான் ஆட்சியாளர் எதிர்பார்ப்பதுமாகும்.

அரசுத் தரப்பில் 40 கேள்விகள் என்றால் அன்றாடம் செய்தியாளர்கள், ஆய்வாளர்கள் ஆகியோரின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கும் பதில் கூற முடியாமல் விக்கித்து நிற்கின்றனர், குடும்பத்தலைவரை இழந்த குடும்பத்தினர்.

  • ஆந்திராவிலோ விவசாய தற்கொலை என்று நிரூபிக்க 13 வகை ஆவணங்களை தரவேண்டும். இவற்றைப் பெறுவதற்கும், அலைவதற்கும் இதற்காக அதிகார வர்க்கத்திற்கு கொட்டி அழுவதற்கும் முடியாமலேயே தற்கொலையை பதிவு செய்வதையே விட்டு விடுகின்றனர் பல விவசாய குடும்பத்தினர்.
  • நிலமற்ற குத்தகை விவசாயி தற்கொலை செய்து கொண்டால் அது விவசாய தற்கொலை அல்ல.
  • தாய், தந்தை பெயரிலோ அல்லது மனைவி பெயரிலோ நிலம் இருந்து மகனோ, கணவனோ தற்கொலை செய்து கொண்டாலும் அதுவும் விவசாய தற்கொலை அல்ல.
  • ஒரு குடும்பத்தில் யார் பேரில் நிலம் உள்ளதோ அவர் தற்கொலை செய்து கொண்டால்தான் அது விவசாய தற்கொலை. ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் குடும்பத்தில் தற்கொலை செய்து கொண்டாலும் அது விவசாய தற்கொலை இல்லையாம்.

விவசாய தற்கொலை என்று நிரூபிக்க மேலே கண்ட வழிமுறையைத்தான் அரசுகள் கடைபிடிக்கின்றன. இவைகளை ஆழ்ந்து, கூர்ந்து கவனிக்க வேண்டும் என்பதல்ல. இவைகளைக் கேள்விப்படும் எவரும் கூறிவிடலாம், இவைகள் தற்கொலையைத் தடுப்பதற்கான வழிமுறைகள் அல்ல. மாறாக இவைகள் நாட்டுமக்களை திசை திருப்பும் வழிமுறைகள் என்று!

இவ்வளவு கோரமான அழிவுகளுக்குப் பின்னரும், இந்த அழிவை ஏற்படுத்தக் கூடிய அரசுகள்தான் இவைகளைத் தடுக்கும் என்று நம்மை நம்பச் சொல்கிறார்கள் சில மேதாவிகள். இதற்காக அரசுகளுக்கு பல்வேறு ஆலோசனைகளையும் வழங்குகிறார்கள். ஆரவாரமாக செய்திகளை வெளியிடுகின்றனர்.

ஆனால் தற்கொலைக்குத் தள்ளப்பட்டுள்ள விவசாயிகளிடையே இன்னமும் இவைகளுக்கு எதிரான உணர்வலைகள் எழவில்லை. இன்னமும் அவர்கள் அரசுகளையே நம்பி ஏங்கி நிற்கின்றனர். தமது பிரச்சனைக்கான காரணங்களையும் அதற்கான தீர்வுகளையும் முழுமையாக, தொகுப்பாக புரிந்து கொள்ளவில்லை என்றாலும் – அப்படி அவர்களால் புரிந்து கொள்ளவும் முடியாது - அவைகளை தமது அனுபவத்தின் ஊடாக துண்டுத் துண்டாக அறிந்தே வைத்துள்ளனர்.

farmer_326ஆனாலும் இவைகளை தொகுத்து அமைப்பாக்கி, கொண்டு செல்வதற்கு எவரும் இதுவரை நாட்டில் இல்லாததும், தமது வாழ் நிலையிலிருந்து இனி அப்படி நடக்கும் என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு ஏதுமில்லாததால், எப்படிப்பட்ட அவமானங்களை அரசும், அதிகார வர்க்கமும் ஏற்படுத்தினாலும் அவற்றை அனைத்தையும் சகித்துக் கொண்டு அவர்களிடம் கையேந்தி நிற்பதே இந்திய விவசாயிகளின் வாழ்வியல் பண்பாடாக உள்ளது.

விவசாயிகளை அமைப்பாக்குவது என்ற புரிந்து கொள்ள முடியாத, சவால் நிறைந்த பணியில்தான் இந்தியாவிலுள்ள முற்போக்கு, புரட்சிகர அமைப்புகள், சிந்தனையாளர்கள் அனைவரும் விழிபிதுங்கி நிற்கின்றனர். இவர்களில் எவருக்கும் விவசாயிகளை அணிதிரட்ட முடியும் என்ற நம்பிக்கை சிறிதும் இல்லை.

அதே நேரத்தில் நாட்டில் நடைபெறும் அனைத்து பிற்போக்கு செயல்பாடுகளுக்கும் இந்த விவசாயிகள்தான் ஆதாரமாக விளங்குகின்றனர்.

குறிப்பாக உலகிலேயே வேறு எங்கும் இல்லாத, இந்தியாவின் சிறப்புத் தன்மையான இந்துமதம் என்ற சாதிகளின் கூட்டணியின் உறுப்பினர்களான ஒவ்வொரு சாதியும், அதனின் உட்சாதி பிரிவுகளும் விவசாயிகளிடையே தான் - நகரவாசிகளோடு ஒப்பிடும் போது - மிகமிக குறைந்த அளவிளான, நெளிவு சுளிவுகளோடு (இதுவும் தவிர்க்க வியலாத காரணங்களால்) உயிர்ப்போடு உள்ளது.

இந்தக் கடினமான சூழலால் நாட்டின் பெரும்பான்மை மக்களாகிய விவசாயிகளைத் திரட்டுவதில் தான் ஜனநாயக, புரட்சிகர சக்திகள் தோல்வி கண்டுள்ளனர்.

விவசாயிகளைத் திரட்டுவதில் தாங்கள் அடைந்த தோல்வியிலிருந்து – வெளியில் சொல்லாவிட்டாலும் தமது செயல்பாடுகளின் ஊடாக – விவசாயம் என்ற பின்தங்கிய தொழிலில் இருக்கும் வரை இவர்களை அணிதிரட்ட இயலாது என்றும், விவசாயத்திலிருந்து எந்த அளவிற்கு விவசாயிகள் வெளியேறி மாற்றுத் தொழில்களில் – நகரங்களில் – ஈடுபடுகிறார்களோ, அந்த அளவிற்குத்தான் அவர்களை தமது இலக்கிற்கு ஏதுவாக அணிதிரட்ட முடியும் என்றும் நம்புகின்றனர்.

இவர்களின் இந்த பாரதூரமான, பரிதாபகரமான முடிவிலிருந்து, முன்னேறிய முதலாளித்துவ உற்பத்தியின் விளைவாக பின்தங்கிய உற்பத்தியாகிய விவசாயம் அழிவைச் சந்திப்பது தவிர்க்க வியலாதது என தமது தோல்விக்கு இவர்கள் சித்தாந்த முலாம் பூசிக் கொண்டு தம்மைத்தாமே சமாதானப்படுத்திக் கொள்கின்றனர்.

இதனடிப்படையில் கிராமங்களை கைவிட்டு, நகரங்களையே தமது முதன்மையான செயல்பாட்டுக்கான களமாக மாற்றிக் கொள்கின்றனர். இந்நடவடிக்கையின் தவிர்க்க விளைவாத விளைவாக நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாழ்நிலை, அவர்கள் சிந்தனை ஓட்டத்தைப் பற்றி முழுமுற்றாக அறியாதவர்களாக, அறிவிலிகளாக அந்நியப்பட்டுக் கிடக்கின்றனர்.

கிராமங்களிலிருந்து நகரத்திற்கு ஓடியவர்களோடு ஓடிய இவர்கள், இப்போது அவர்கள் அரசுகளால் நிர்பந்தமாக மீண்டும் கிராமத்திற்கே துரத்தப்படும் போது செய்வதறியாது திகைத்துப் போகிறார்கள். ஆனாலும் தமது கொள்கை முடிவை நிலைநாட்ட, நகரம் விட்டு நகரம் இடமாற்றம் செய்து கொள்கின்றனர். மொத்தத்தில் இவர்கள் அனைவரும் கழுதை தேய்ந்து கட்டெரும்பு ஆன கதையாக மாறி நிற்கிறார்கள். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதைப் போன்று காரசாரமாக விவாதிக்கின்றனர்.

விவசாயிகளை, விவசாயத்தைப் பாதுகாக்க சமூக ஆர்வலர்கள் முன் வைக்கும் தீர்வுகளோ கொலைகாரனிடமே நீதி கேட்கச் சொல்கிறது.

புரட்சிகர அமைப்புகள் முன்வைக்கும் தீர்வுகளோ, புரட்சிக்குப் பின்னர் தாங்கள் செயல்படுத்தப் போவதைப் பற்றியதாக உள்ளது. விவசாயிகள் இப்போது சந்திக்கும் பிரச்சனைகளைத் தீர்த்து, விவசாயிகளையும், இதனூடாக சமூக வளர்ச்சியையும் பாதுகாக்கும், முன்னேற்றும் வழிமுறைகள்தான், தீர்வுகள்தான் இப்போதையை உடனடித் தேவையாகும்.

அந்த வகையில் கீழ்கண்ட வழிமுறைகளை, தீர்வுகளை நாங்கள் முன்வைக்கிறோம்.

மத்திய, மாநில அரசுகளே! 

1.விவசாயத்தை நாட்டின் தொழிலாகவும், அத்தியாவசிய தொழிலாகவும் அறிவித்து நடைமுறைப்படுத்து! 

2.நிலப்பிரபுக்கள், மடங்கள், ஆதீனங்கள், கோயில்கள், நவீன கால நிலப்பிரபுக்களான கார்ப்பரேட் முதலாளிகள், நடிகர்கள், பெரும் பணக்காரர்கள் வாங்கிக் குவித்துள்ள நிலங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களை கூலி ஏழை விவசாயிகளுக்குப் பிரித்து வழங்கு!

3.விவசாய விளை பொருட்களுக்கான விலையைத் தீர்மாணிக்கும் உரிமையை விவசாயிகளுக்கே வழங்கு! 

4.ஒவ்வொரு சாகுபடிக்கும் ஆகும் முழுச்செலவையும் விவசாயிகளுக்கு கடனாக வழங்கு! 

5.நாடு முழுக்க விவசாய விளை பொருட்கள் அனைத்தையும் அரசே கொள்முதல் செய்யும் முறையை ஏற்படுத்து. 

வாசகர்கள் இவைகளை பற்றிய தமது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பதிவு செய்யுங்கள். மேலும் விவாதிக்க, இணைந்து செயல்பட எம்மோடு தொடர்பு கொள்ளுங்கள்.

- சூறாவளி ( இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்., தொடர்பு எண்:9842529188)

தொடர்புடைய பதிவுகள்:

1.விவசாயிகள்: நாட்டின் சட்டபூர்வ கொத்தடிமைகள்! பாகம் 2

2.விவசாயிகள்:நாட்டின் சட்டபூர்வ கொத்தடிமைகள்! பாகம் -1

3.விவசாயிகள்:நாட்டின் சட்டபூர்வ கொத்தடிமைகள்! பாகம் -3

4.ஒரு கண்ணுக்கு வெண்ணை,ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பு!

Pin It