அருந்ததியர் சாதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்னும் இளைஞரைக் காதலித்த ஒரே செயலுக்காக, பறையர் சாதியைச் சேர்ந்த கோகிலா என்னும் இளம்பெண் விழுப்புரம் மாவட்டத்தில் சொந்தக் குடும்பத்தினராலேயே கொல்லப்பட்டிருக்கிறாள். ஜுனியர் விகடனில் இச்செய்தி வெளிவந்திருக்கிறது. ஆனாலும் தமிழகம் எவ்வித எதிர்ப்பையும் வெளிப்படுத்தாமல் மயான அமைதி காப்பது, ஏனோ தெரியவில்லை. இச்சூழலில் கார்த்திகேயனிடமும் அவருடைய குடும்பத்தாரிடமும் பேசியவற்றையும், வெளிவந்திருக்கும் செய்திகளின் அடிப்படையிலும் இக்கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது.

karthikeyan_400செய்திக்குள் போவதற்கு முன் தமிழ்நாட்டில் தலித் உட்பிரிவு சாதிகளிடையே நிலவும் சாதி ஏற்றத்தாழ்வு பற்றிச் சிலவற்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கிட்டத்தட்ட இதே சாதி ஏற்றத்தாழ்வு நிலை தான் இந்தியா முழுவதும் இருக்கிறது என்றே சொல்லலாம். பறையர்கள், பள்ளர்கள், அருந்ததியர்கள் ஆகிய மூன்று பிரிவுகள் தாம் தமிழ்நாட்டில் உள்ள மூன்று முக்கியமான தலித் சாதிகள் ஆகும். இவர்களுள் பறையர்கள் கல்வியில் மற்ற இரு பிரிவுகளைக் காட்டிலும் ஓரளவு முன்னேறிய பிரிவினராக இருக்கிறார்கள்; பள்ளர்களுக்குச் சில இடங்களில் கொஞ்சம் நிலபுலன்கள் இருக்கின்றன. அருந்ததியர்கள் செருப்புத் தைக்கும் தொழிலிலும், துப்புரவுத் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார்கள். அதாவது, அருந்ததியர்களைக் காட்டிலும் பள்ளர்களும் பறையர்களும் கொஞ்சம் மேலோங்கிய நிலையில் இருக்கிறார்கள்.

அதற்காக, வன்னியர், கவுண்டர், தேவர் ஆகிய சாதிகள் அருந்ததியர்களை எப்படிப் பார்க்கிறார்களோ அதே போல் தான் பள்ளர்களும் பறையர்களும் அருந்ததியர்களைப் பார்க்கிறார்கள் என்று சொல்ல வரவில்லை. தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இம்மூன்று சாதிகளும் ஒற்றுமையாக நல்ல புரிந்துணர்வுடன் இருக்கிறார்கள். ஆனாலும் அது சில பகுதிகளில் மட்டும் தானே தவிர, எல்லாப் பகுதிகளிலும் இல்லை. பறையர் சாதியில் உள்ள படித்த சிலர், இச்சாதிகளுக்குள் நிலவும் உறவைக் கெடுக்கும் வேலையைச் செய்து கொண்டே இருக்கிறார்கள்.

கவனித்துப் பாருங்கள் – பறையர் சாதியைச் சேர்ந்த அறிவுஜீவிகளுள் ஒருவர் கூட, இதுவரை தாழ்த்தப்பட்டவர்கள் எல்லோரும் சமம் என்று சொல்லியதில்லை. இது இப்படியே போகட்டும். குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று என்னவென்றால், அருந்ததியர் சாதியைச் சேர்ந்த ஓர் ஆண், பறையர் சாதியையோ பள்ளர் சாதியையோ சேர்ந்த ஒரு பெண்ணை மணப்பதை பறையர் சாதியும், பள்ளர் சாதியும் ஏற்றுக்கொள்வதேயில்லை.

தருமபுரியில் பறையர் மக்களுடைய வீடுகளைச் சூறையாடிய வன்னியர்களைப் போலவே (தருமபுரி கொடுமைக்கு முன்பாகவே) பறையர்களும் வன்கொடுமையைச் செய்திருக்கிறார்கள். வன்கொடுமை நடந்த இடம் – விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகில் உள்ள பள்ளிநெல்லினூர். இவ்வூரில் 40 பறையர் வீடுகளும் மூன்று அருந்ததியர் வீடுகளும் உள்ளன. தம்முடைய மனைவியை அவளுடைய அப்பாவும், உறவினர்களும் சேர்ந்து கொன்று விட்டதாகக் கடந்த நவம்பர் 10ஆம் நாள் கார்த்திகேயன் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் கூறியிருக்கிறார்.

இனி தினக்கூலியாக வேலை பார்க்கும் கார்த்திகேயன் சொல்வதைப் பார்ப்போம்:

"எட்டாண்டுகளுக்கு முன்னர் நான் கோகிலாவும் கண்டமங்கலம் வள்ளலார் உயர்நிலைப்பள்ளியில் ஒன்றாகப் படித்தோம். நாங்கள் இருவருமே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் வேறு வேறு உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். அவள் பறையர் சமூகம், நான் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவன். கோகிலாவின் பெற்றோர், எங்களுடைய திருமணத்தை ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்பதால் நாங்கள் கமுக்கமாகக் கடந்த 1.12.2010 அன்று கடலூரில் திருமணம் செய்து கொண்டோம். திருமணம் செய்து கொண்டாலும் இருவருடைய பெற்றோரும் ஒப்புக்கொள்ளும் வரை இருவரும் தனித்தே வாழ்வது என முடிவு செய்து கொண்டோம். கோகிலா பக்கத்தில் உள்ள மருத்துவத்துறை சார்ந்த நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். நாங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டோம்.

எங்கள் இருவருக்கும் திருமணம் நடந்த விடயம் அண்மைக் காலத்தில் கோகிலாவின் அப்பா, அம்மாவுக்குத் தெரிய வந்தது. தெரிய வந்தவுடன் அவளை வேறு யாராவது ஒருவருக்கு மணம் முடித்து விட வேண்டும் என்று முடிவு செய்து அவளுடைய பெற்றோர் மாப்பிள்ளை தேடத் தொடங்கிவிட்டார்கள். அதைக் கோகிலா கடுமையாக எதிர்த்ததால் அவளை மாமா வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். அங்கு அவளை மிக மோசமாக அடித்து உதைத்துத் துன்புறுத்தி வேறு ஒரு திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளக் கேட்டிருக்கிறார்கள். ஆனால் அவள் அதற்கு மறுத்துவிட்டாள். திடீரென 2012 நவம்பர் 8ஆம் நாள், ‘நாங்கள் உன்னையும் உன் கணவனையும் சேர்த்து வைத்து விடுகிறோம்’ என்று அவளிடம் சொல்லி அவளை வீட்டுக்குக் கூட்டிச் சென்று விட்டார்கள். அங்கு அவளைத் தனியறையில் மூன்று நாட்கள் அடைத்து வைத்து, தற்கொலை செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியிருக்கிறார்கள். நடந்த இவை எல்லாவற்றையும் என்னிடம் கோகிலாவே சொன்னாள். அவள் சொன்னவாறே கொடுமைகள் நடந்திருக்கின்றன என்பதற்கு என்னிடமும் பல சான்றுகள் இருக்கின்றன.

நவம்பர் 9 ஆம் நாள் நான் கோகிலாவை அலைபேசியில் கூப்பிட்டேன். ஆனால் அவளுடைய எண் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. மறுநாள் காலை அவள் இறந்து விட்டதாக என்னிடம் தகவல் சொன்னார்கள்.

கோகிலாவை அவளுடைய பெற்றோரே கொன்றுவிட்டார்கள். உடனடியாகப் பக்கத்தில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்று நான் புகார் கொடுத்தேன். காவல் ஆய்வாளர் எங்கள் ஊருக்கு வந்து கோகிலாவின் சடலத்தைத் தருமாறு கேட்டார். ஆனால் அவளுடைய பெற்றோர் கொடுக்க மறுத்துவிட்டனர். பின்னர் சடலத்தை அவர்கள் எரித்து விட்டார்கள். இப்போது அடிக்கடி அவளுடைய பெற்றோர் என்னைக் கூப்பிட்டு ‘புகாரைத் திரும்ப வாங்கு அல்லது கோகிலாவிற்கு நடந்தது தான் உனக்கும் நடக்கும்’ என மிரட்டுகிறார்கள்."

ஜூனியர் விகடனில் வெளிவந்த செய்தியைப் பார்ப்போம்.

நான் (நிருபர்) கோகிலாவின் நண்பர்களுடன் பேசியபோது அவர்கள் தெரிவித்ததாவது: “கோகிலா கார்த்திகேயனைக் காதலித்ததும் அவர்கள் திருமணம் செய்து கொண்டதும் உண்மை. கார்த்திகேயன் கோகிலாவை அடிக்கடி துவிச்சக்கரவண்டியில்(பைக்) கொண்டுபோய் கோகிலா வேலை பார்க்கும் இடத்தில் விட்டு விட்டு வருவார். கோகிலா தானும் கார்த்திகேயனும் திருமணம் செய்து கொண்டதாகவும் அது அவளுடைய பெற்றோருக்குத் தெரியாது எனவும் தெரியவந்தால் மிகப் பெரிய சிக்கலாகிவிடும் என்றும் அடிக்கடி கூறுவாள். ஆனால் அண்மைக்காலமாக அவள் தன் தந்தையிடம் தன்னுடைய திருமணத்தைப் பற்றிச் சொல்லிவிடப் போவதாக எங்களிடம் கூறிவந்தாள். ஆனால் அவள் தன் தந்தையிடம் சொல்லவே இல்லை. நாங்கள் அதைப் பற்றிக் கேட்டபோது அதற்கு அவள், “என் தந்தை மிகவும் கௌரவமாக வாழ்ந்து வருகிறார். என்னுடைய திருமணம் பற்றிய உண்மை தெரிந்தால் அவருடைய கௌரவத்திற்குக் களங்கம் ஏற்படும். என்னால் என்னுடைய பெற்றோருக்கு எந்தத் துன்பமும் வரக்கூடாது” என்று கூறினாள். கோகிலா தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்குக் கோழையான பெண் அல்ல. அவள் தான் 'கார்த்திகேயனுடன் இணைந்து வாழ்வேன்' என்று சொன்னாள்.”

அந்தச் சிற்றூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலிமையாக உள்ளது. ஆனால் அவர்கள் இந்த விவகாரத்தில் அமைதி காக்கிறார்கள். இதன் பொருள் என்ன?

இந்த விவகாரத்தைப் பற்றி யாருமே பேசாதது அதிர்ச்சி அளிக்கிறது. தருமபுரி கொடுமை பற்றி இணையத்தில் செய்திகள் பரவிக்கிடக்கின்றன. ஆனால் இந்த விவகாரத்தைப் பற்றி மிகச் சிறிய அளவிலேயே செய்திகள் வெளிவந்திருக்கின்றன. தமிழகத்தில் அருந்ததியர்கள், பறையர்களால் சாதிய வன்கொடுமைக்குள்ளாக்கப்படுவது இது முதல் முறை அல்ல. இந்தச் சாதிய வன்கொடுமை, சாதியக்கொடுமை மட்டுமல்ல; இது பெண்களுக்கு எதிரான வன்முறையாகும். ஒரு பறையர் சமூகத்துப் பெண் ஒரு துப்புரவு தொழிலாளியை மணக்கக் கூடாது என்ற சாதி மனப்பான்மையே இந்த கொலைக்குக் காரணமாகும். உண்மை அறியும் குழுக்கள் பல தர்மபுரிக்குச் சென்றன. ஆனால் யாரும் இந்த விவகாரத்தைப் பற்றி விசாரிக்கச் செல்லாதது ஏன்? (மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: கடந்த சில தினங்களுக்கு முன், தமிழக மக்கள் புரட்சிக் கழகத்தின் பொதுச் செயலாளர் அரங்க.குணசேகரன் தலைமையில் உண்மை அறியும் குழு சென்று விசாரணை செய்திருக்கிறது)

தலித் இயக்கங்களும் தலைவர்களும் தர்மபுரி நிகழ்வே சாதிய வன்கொடுமைக்குச் சிறந்த சான்று என்று பேசி வருகின்றனர். ஆனால் அவர்கள் இங்கே பெண்களுக்கு எதிரான வன்முறை, சாதிய வன்முறையாக‌ உருவெடுத்துள்ளதைப் பற்றிப் பேச மறுக்கின்றனர். ஒவ்வொரு சாதியும் தம் சமூக மக்களின் எண்ணிக்கையைப் பாதுகாத்துக் கொள்ள விரும்புகின்றன. இதற்குப் பெண் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதால் (வேறு சாதியைச் சார்ந்த ஆணைக் காதலித்து விடுவாள் என்பதால்), பெண்கள் ஆணாதிக்கத்திற்கு மிக எளிதாக இலக்காகின்றனர்.

பறையர் சமூகத்துப் பெண்களை மணந்ததற்காக அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்த ஆண்கள் கொலை செய்யப்பட்ட நிகழ்வுகளும், அந்த ஆண்களின் சகோதரிகள் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட நிகழ்வுகளும் அதிகம். காதல் திருமணமே தர்மபுரி வன்முறைக்குக் காரணம் என்று பலரும் பேசி வருகின்றனர். ஆனால் ஆதிக்க சாதியைச் சார்ந்த பெண், தன்னைவிட தாழ்ந்த சமூகத்தைச் சார்ந்த ஆணைக் காதலிக்கக் கூடாது என்ற ஆதிக்க சாதி மனப்பான்மையே வன்முறைக்குக் காரணமாகும். தமிழ்நாட்டில் வன்னியர்கள் தங்கள் சமூகத்துப் பெண்கள் பறையர் சமூகத்து ஆண்களைத் திருமணம் செய்வதை எதிர்க்கின்றனர். ஆனால் அவர்கள் வன்னிய ஆண்கள், பறையர் பெண்களைத் திருமணம் செய்யக்கூடாது என்று சொல்வதில்லை. பறையராக இருந்தாலும் சரி, பள்ளராக இருந்தாலும் சரி, வன்னியராக இருந்தாலும் சரி, ஆணாதிக்கமே சாதிய அமைப்பின் அடிப்படையாக இருக்கின்றது. பறையர்கள் தங்களுடைய பெண் தங்களை விட சாதிப்படிநிலையில் கீழ்நிலையில் உள்ள அருந்ததிய ஆணைத் திருமணம் செய்ததற்காக அவளைக் கொன்றதையே மேலே குறிப்பிட்ட நிகழ்வு நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

கடந்த காலங்களிலும் சரி, நிகழ்காலத்திலும் சரி, அருந்ததியர்களின் சிக்கல்கள் கவனம் பெறுவதில்லையே ஏன்? தலித் தலைவர்களும் அறிவுசீவிகளும் உட்சாதி முரண்களைக் களைய எந்த நடவடிக்கையும் இதுவரை எடுத்ததில்லை. மேலும் அவர்கள் அமைதியாக இருப்பதன் மூலம், அருந்ததியர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு ஆதரவளிக்கின்றனர். மேற்சொன்ன விழுப்புரம் நிகழ்வு இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

ஆங்கிலத்தில் - இரவிச்சந்திரன்

ஆங்கில மூலம் - http://roundtableindia.co.in/index.php?option=com_content&view=article&id=6001:the-murder-of-a-dalit-girl-and-the-silence-over-it&catid=119:feature&Itemid=132

தமிழாக்கம் - முத்துக்குட்டி, நரேந்திரன்

படம் நன்றி: ஜுனியர் விகடன்

Pin It