பல்வேறு சிக்கல்களில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு. காவிரி நடுவர் ஆணையமும் உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்ட பிறகும் தமிழகத்திற்குக் காவிரி நீரைத் தர மறுக்கிறது கர்நாடக அரசு. தண்ணீர் தர மாட்டோம் என்று கன்னட தேசமே எழுந்து வேலைநிறுத்தம் நடத்துகிறது. ஆனால் தண்ணீர் விடக் கோரி கர்நாடகத்தை வலியுறுத்தும் வகையில் தமிழகத்தின் ஒற்றுமையைக் காட்ட முடியவில்லை.

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழக அரசு, மத்திய அரசுக்கு வழக்கம்போல் கடிதம்தான் எழுத முடிகிறது. கேரள அரசோ அம்மாநில உரிமைகளுக்காக உறுதியாக நிற்கிறது. தமிழகம் எதிர்வினையாற்றக்கூட முடியவில்லை.

ramadoss_403'இருட்டறையில் உள்ளதடா தமிழகம்' என்கிற வகையில் தினமும் 10 மணி நேரம், 15 மணி நேரம் செயற்கையான மின்வெட்டால் தமிழகம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இதனால் திருப்பூர், கோவை மாவட்டங்களில் தொழில்கள் பாதிக்கப்படுவதால் தொடர்ந்து தொழிலாளர்களும், ஆலை உற்பத்தியாளர்களும் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

தலைமுறை தலைமுறையாய் மக்களை அழித்தொழிக்கும் அணுஉலை கூடாது என்று 500 நாட்களுக்கும் மேலாக தென்தமிழகத்தில் வெகுமக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். கடலுக்குள் இறங்கினால்தான் பிழைப்பு நடத்த முடியும் என்கிற நிலைமையில் உள்ள அம்மக்கள் கடலுக்குள் செல்லாமல் தொடர்ந்து போராட்டக் களத்தில் தம்மை ஈடுபடுத்தி வருத்திக் கொண்டிருக்கிறார்கள். இதே அணுஉலை முதலில் கேரளாவுக்கு வந்தபோது ஒட்டுமொத்தக் கேரள மக்களும் கட்சி, சாதி, மத பேதமின்றி போராடி அணுஉலையை விரட்டியடித்தார்கள். ஒட்டுமொத்தத் தமிழர்களையும் காவு வாங்கத் துடிக்கும் அணுஉலைக்கு எதிராக ஒரு பகுதி மக்கள் மட்டுமே போராடிக் கொண்டிருக்கும் அவல நிலை இங்கே தொடர்கிறது. தமிழக அரசோ அணுஉலை எதிர்ப்பாளர்களை அடக்குவதிலேயே முனைப்பு காட்டி வருகிறது.

அடுத்தத் தலைமுறையை செழுமைப்படுத்தக்கூடிய கல்வி வியாபாரத் தளமாக மாறிப்போனதால் ஊழல் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாமானிய மக்கள் கல்வி கற்க முடியாத நிலை, கொழுத்த பணக்காரர்கள்தான் மேற்கல்வியைத் தொடர முடியும் என்கிற அவலநிலை ஏற்பட்டுள்ளது. ஊழலும் கையூட்டும் நீக்கமற தலைவிரித்தாடுகின்றன கல்வித் துறையில்.

விவசாய நிலங்களையெல்லாம் வீட்டு மனைகளாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் நில வணிகர்கள். வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் கைகளில் தமிழர் நிலம் சிறைபட்டுக் கிடக்கிறது. மார்வாரிகளும் சேட்டுகளும் தமிழச்சிகளின் நகைகளைச் சூழ்ச்சி செய்து பறிமுதல் செய்வதுடன் வீடுகளையும் பறிமுதல் செய்கிறார்கள். சில்லறை வணிகத்தில்கூட அந்நிய முதலீடு என்கிற பெயரில் பிற மொழிக்காரர்கள் ஆதிக்கம் நடைபெறுகிறது. பெட்டிக் கடைகள்கூட இனி தமிழர்களின் கைகளிலிருந்து பறிக்கப்படலாம். தமிழகத்தில் இருக்கிறோமா அல்லது வடநாட்டில் இருக்கிறோமா என்கிற அளவில் வியாபாரத் தளங்களிலும் பிற மொழிக்காரர்களின் ஆதிக்கம் தமிழகத்தைக் கவலைகொள்ளச் செய்கிறது.

கடலோர மீனவர்கள் தினந்தோறும் சிங்களப் படையினரால் கொல்லப்பட்டு வருகிறார்கள். கடல் வளம், சிங்களர்களால் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது.

முள்ளிவாய்க்கால் போருக்குப் பிறகு தமிழீழ நிலத்தில் தமிழர்கள் சொல்லொணாக் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள். தமிழினம் என்கிற ஓர் இனம் வாழ்ந்ததாகவே தடயம் இருக்கக்கூடாது என்கிற அளவில் அழித்தொழிப்பு வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

தமிழ் நிலத்தில் இவ்வளவு சிக்கல்கள் தமிழர்களை முற்றுகையிட்டுக் கொண்டிருக்கின்றன. இனம், மொழி, பண்பாடு திட்டமிட்டே சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இவை பற்றியெல்லாம் எந்த அக்கறையும் கவலையும் இல்லாமல் காதலைப் பற்றியும், காதல் திருமணத்தைப் பற்றியும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார் மகா புரட்சியாளர் ஒருவர். கற்காலத்தை நோக்கி தமிழகத்தைப் பின்னோக்கி நகர்த்திக் கொண்டிருக்கும் அந்தப் புரட்சியாளரின் பெயர் மருத்துவர் இராமதாசு.

எஸ்.எஸ்.எஸ். (ட்ரிபிள் எஸ்) என்கிற தொண்டு நிறுவனத்தின் மூலம் வன்னிய சமுதாய மக்களுக்கு அறிமுகமாகி, வன்னியர் சங்கத்தை உருவாக்கி, அதையே பாட்டாளி மக்கள் கட்சியாய் முற்போக்கு முலாம் பூசி, மீண்டும் சாதி அரசியலில் தீவிரமாகியிருக்கிறார். கடந்த காலங்களில் முன்னுக்குப் பின்னான அறிக்கைகள் மூலம் அரசியலையே அதிர்ச்சியடைய வைத்த அவர், தாழ்த்தப்பட்ட மக்களின் குடிசைகளைக் கொளுத்தி அதன் மூலம் தங்களை வலிமை மிகுந்த சமூகமாய்த் தமிழ்கூறும் நல்லுலகுக்குக் காட்டிக் கொண்டவர். இதனால் 'குச்சிகொளுத்தி இராமதாசு' என்கிற சிறப்புப் பட்டத்தையும் பெற்றார். வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு கேட்டு போராடுவதாகச் சொல்லி சாலையோர மரங்களை வெட்டிப் போட்டு தங்களது மகத்தான வீரத்தைப் புறநானூற்றுத் தமிழர்களிடம் காட்டியதற்காக 'மரம்வெட்டி இராமதாசு' என்னும் கூடுதல் சிறப்புப் பட்டத்தையும் பெற்றார்.

இத்தனை பராக்கிரமங்களையும் செய்து திராவிடக் கட்சிகளின் துணையோடு அரசியல் அதிகாரத்திற்கு வந்தவர் பல்வேறு புரட்சிகரத் திட்டங்களை அறிவித்தார். தனது குடும்பத்திலிருந்து யாரும் பதவிக்கு வரமாட்டார்கள்; தமது கட்சியின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவறு செய்தால் சவுக்கடி கொடுக்கப்படும்; தலித் ஒருவரை முதல்வராக்குவோம் என்றெல்லாம் புரட்சிகர வசனங்களைப் பேசினார். இப்போதோ 'புதிய அரசியல்! புதிய நம்பிக்கை!' என்று தமது தவப்புதல்வன் அன்புமணிக்காக, கட்சிக்காக உழைத்தவர்களையெல்லாம் விரட்டிவிட்டு தன்னந்தனியாக நிற்கிறார். "ஜெயலலிதாவோடு கூட்டுச் சேர்வது பெற்ற தாயோடு படுப்பதற்குச் சமம். எனவே அவரோடு கூட்டு சேரமாட்டோம்" என்று அறிவித்த சில ஆண்டுகளிலேயே ஜெயலலிதாவுடன் கூட்டு சேர்ந்து அரசியலில் பெரும் புரட்சியை உருவாக்கினார்.

தலித் ஒருவரை முதல்வராக்குவோம் என்று அறிவிப்பில் மட்டும் புரட்சி செய்த மருத்துவர் இராமதாசு, திராவிடக் கட்சிகளோடு கூட்டணி இல்லை என்று புரட்சி வசனமும் பேசி வருகிறார். வருகிற தேர்தல் இந்தப் புரட்சி வசனத்தை காமெடி வசனமாக்கப் போவது உறுதி.

இந்த நேரத்தில் இன்னொரு புரட்சியை ரத்தக் களறியோடு ஆரம்பித்திருக்கிறார் மருத்துவர். அதாவது சாதி மறுப்புத் திருமணம் கூடாது என்பதுதான் அந்தப் புரட்சி. மீறிச் செய்தால் என்ன நடக்கும் என்பதற்கு தர்மபுரிதான் சாட்சி என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

தான் வாழ்ந்த காலம் முழுவதும் தமிழர் விடுதலைக்காகப் பாடாற்றியவர் அய்யா பெரியார். தமிழர் விடுதலையடைய வேண்டுமென்றால் சாதி மறுப்புத் திருமணங்கள் அவசியம் என்பதை வலியுறுத்தி, அந்தத் தள்ளாத வயதிலும் மூத்திரப் பையைத் தூக்கிக் கொண்டு களமாடினார். பெரியார் மட்டுமல்ல புரட்சியாளர் அம்பேத்கர், அய்யா வைகுண்டர் என அனைவரும் சாதி மறுப்புத் திருமணங்களை வலியுறுத்திக் களமாடினார்கள்.

ஆனால் வாராது வந்த மாமணியாய் வாய்க்கப் பெற்றுள்ளதாகக் கருதிக்கொள்ளும் மருத்துவர் இராமதாசு, சாதி மறுப்புத் திருமணங்கள் கூடாது என்கிறார். காரணம் கேட்டால், எல்லாம் நாடகக் காதல் என்கிறார். இரு தனி நபர்களுக்கிடையே எழும் இயற்கையான உணர்ச்சியை அரசியலாக்கும் அருவறுப்பான நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார் இந்தப் புரட்சியாளர். முதலில் சாதி மறுப்புத் திருமணங்கள் வேண்டாம் என்றவர், இப்போது காதல் திருமணங்களே கூடாது என்கிறார்.

பாலின உணர்ச்சி தொடர்பாக பல்வேறு உரிமைப் பிரச்சனை உலகளாவிய அளவில் எழுந்துள்ளது. திருநங்கைகள் மட்டுமல்ல ஓரினச் சேர்க்கையாளர்கூட தங்களது உரிமைகளுக்காகத் தெருவில் இறங்கிப் போராடத் தொடங்கியுள்ளனர். இச்சிக்கல்கள் குறித்து சமூக அக்கறை உள்ளவர்கள் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மருத்துவரோ எவ்வளவு பிற்போக்குத்தனமாகவும் பிழைப்புவாதியாகவும் செயல்படுகிறார் பாருங்கள்.

இனிமேல் காதலை மையப்படுத்தித் திரைப்படங்களே எடுக்கக்கூடாது என்று சொன்னாலும் சொல்வார் போலிருக்கிறது. தெருவில் இனி ஆணும் பெண்ணும் சேர்ந்து நடக்கக் கூடாது; பூங்காக்களில் கடற்கரைகளில் ஜோடி ஜோடியாக உட்காரக் கூடாது; மீறினால் தருமபுரி போல் நடக்கும் என்று இனி எச்சரிக்கை விடுத்தாலும் விடுவார் போலிருக்கிறது. அப்படியான ஒரு பாசிசத்தை தமிழக அரசியலில் திணித்துக் கொண்டிருக்கிறார். இவர் அடுத்தவர்களுடைய படுக்கையறையை எட்டிப் பார்க்கும் அருவறுப்பான அரசியலுக்குள் தள்ளப்பட்டதன் பின்னணி என்ன?

anbumani_ramadoss_500

தொடர்ச்சியாக ஏற்பட்ட தேர்தல் தோல்வியும், இவரால் புறக்கணிக்கப்பட்ட வன்னியர் சமூகம் இவரைப் புறக்கணித்ததும்தான் காரணம். பாமகவில் இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்த திரு.வேல்முருகன் அவர்கள் நீக்கப்பட்ட பிறகு பாமகவின் பெரும்பகுதி அவர் பக்கம் இணைந்தது. இதனால் பதற்றமடைந்த மருத்துவருக்குக் கிடைத்த அரிய மருந்துதான் இந்தக் காதல் விவகாரம்.

"கீழ் சாதிக்காரங்க நம்ம பொண்ண தூக்கிட்டு ஓடுறான். சும்மா இருக்கீங்களே...." என்று சாதி உணர்வைத் தூண்டுகிற பிரச்சாரத்தால் மீண்டும் வன்னிய சமூகத்தினருக்கு சாதிவெறியூட்டும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். இது மட்டுமல்லாது, தலித் அல்லாத பிற சமூகத்தினரையும் ஒருங்கிணைத்து, தலித்துகளுக்கும் தலித் அல்லாதவருக்கும் இடையே பகையை உருவாக்க முயலுவதுதான் மருத்துவரின் புதிய அரசியல். ஆகவேதான் சாதிக் கட்சிகளுடன் மட்டும்தான் கூட்டணி என்று வெளிப்படையாக அறிவித்து மீண்டும் முருங்கை மரத்தில் ஏறுகிறது இந்த வேதாளம். அதற்குக் கிடைத்த வாய்ப்புதான் தருமபுரி நத்தம் சேரி. இப்போது அவர் நினைத்ததுபோல் செய்து முடித்துவிட்டார். எதிர்வினையாற்ற வேண்டியவர்கள் தலித்துகள்தான். அதிலும் குறிப்பாக, 'அடங்க மறு! அத்து மீறு! திமிரி எழு! திருப்பி அடி!' என்கிற முழக்கங்களை முன்வைத்த விடுதலைச் சிறுத்தைகள்தான் எதிர்வினையாற்ற வேண்டியவர்கள். ஆனால் சிறுத்தைகளோ அமைதி காக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை தலித் இயக்கங்கள் எழுப்புகின்றன.

"பெரியாரிய, மார்க்சிய, தமிழ்த்தேசிய சக்திகளும் மனித உரிமை ஆர்வலர்களும், இன்ன பிற சனநாயகச் சக்திகளும் இத்தகைய இக்கட்டான நிலைமையில் ஆற்றவிருக்கும் எதிர்வினைகளுக்காக - செயற்பாடுகளுக்காக விடுதலைச் சிறுத்தைகள் காத்திருப்பதையே தற்போதையக் கடமையாகக் கருதுகிறது.

சமூக நல்லிணக்கத்தின் மீதும் சனநாயகத்தின் மீதும் நம்பிக்கையுள்ள அனைவரையும் ஒருங்கிணைக்கவும், தமிழகத்தை முற்போக்கான திசைநோக்கி இட்டுச் செல்லவும் பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள் முன்வந்தால், அதற்கு உண்மையாக ஒத்துழைக்க விடுதலைச் சிறுத்தைகள் எப்போதும் கைகளை நீட்டியபடியே காத்திருக்கிறது."

என்ற தனது அறிக்கை மூலம் தமிழ்ச் சமூக ஒற்றுமைக்காகத் தான் எப்போதும் தயாராக இருப்பதை உணர்த்தியிருக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள்.

முதிர்ச்சியாக நடந்துகொள்ள வேண்டிய வயது பெரியவர் இராமதாசுக்கு இருக்கிறது. தொல்.திருமாவளவன் அவர்களுக்கோ 50 வயதுதான் ஆகிறது. இளைஞர்களை வழிநடத்தும் துடிப்புமிக்க இளைஞர். ஆனால் இந்த வயதில் மிகவும் முதிர்ச்சியாகவும் பொறுப்புணர்வோடும் நடந்துகொள்வதோடு, தமிழகத்தில் மற்றவர்களைக் காட்டிலும் சமூகப் பொறுப்பும் அக்கறையும் விடுதலைச் சிறுத்தைகளுக்கு உள்ளது என்பதைத்தான் திருமாவளவன் அவர்கள் தமது அறிக்கையின் மூலம் உணர்த்துகிறார். "கலவரத்தை உருவாக்க ஒரு ரவுடி போதும். கலவரத்தைக் கட்டுப்படுத்த நல்ல தலைவன் தேவை." கலவரத்தைக் கட்டுப்படுத்தியிருக்கிறார் தொல்.திருமாவளவன் அவர்கள். கலவரத்தை உருவாக்கிய ரவுடிகளை தமிழ்ச் சமூகம் அறியும்.

இச்சூழலில் தமிழர் ஒற்றுமை குறித்து அக்கறைப்படுபவர்கள், 'நாம் தமிழர்' என்று உரத்துக் குரல் கொடுப்பவர்கள், பிரபாகரன் வழியில் நடப்போம் என்று சொல்பவர்கள் வாய்மூடிக் கிடப்பதன் பின்னணி என்ன?

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அய்யா நெடுமாறன் அவர்கள், மருத்துவர் இராமதாசோடு சேர்ந்து தலித்துகளுக்கும் எங்காவது நினைவு முற்றம் அமைக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறாரோ?

'நாம் தமிழர்' என்று முழங்கும் சீமான்கள் மாவீரர் மாதமான நவம்பர் மாதம் என்றாலும் அமைதிப்படை படப்பிடிப்பில் கவனம் செலுத்தத்தான் முடிகிறது. இவர்களால் வேறென்ன கிழிக்க‌ முடியும்?

தருமபுரி நிகழ்வுக்குக் கண்டனம் தெரிவிக்காதவர்கள், சாதி மறுப்புத் திருமணத்தை எதிர்க்கும் மருத்துவர் இராமதாசுக்குக் கண்டனம் தெரிவிக்காதவர்கள் மருத்துவரின் கருத்தை ஆதரிப்பதாகத்தானே அர்த்தம். நடுநிலை என்பது ஏமாற்று வேலைதானே. பாதிக்கப்பட்டவன் பக்கம் நிற்பதே அறம். இந்த அறம் நெடுமாறன் அவர்களுக்கு உண்டா? தமிழ்த் தேசியவாதிகளுக்கு உண்டா? அல்லது தலித்துகள் தமிழர்கள் இல்லை என்று எண்ணி இவர்கள் கள்ள மவுனம் சாதிக்கிறார்களா?

மருத்துவரை பல பட்டங்களைச் சொல்லி தமிழகத்தில் அழைக்கிறார்கள். தமிழினக் காவலர் என்றழைக்கிறார்கள். தமிழ்க்குடிதாங்கி பட்டமும், அம்பேத்கர் சுடர் பட்டமும் வழங்கி சிறுத்தைகள் அவருக்குச் சிறப்புச் செய்தார்கள். ஆனால் இப்பட்டங்களெல்லாம் இப்போது பொருத்தமில்லாமலே போய்விட்டன. காலத்தை வென்று நிற்கின்ற பட்டங்கள் 'மரம் வெட்டி இராமதாசு', 'குச்சிக்கொளுத்தி இராமதாசு' என்பவைதான். இதைவிடத் தீர்க்கதரிசனமான பட்டங்களை, புரட்சிகரமான பட்டங்களை யார் சுமக்க முடியும்?

மரம் வெட்டிக்கு நிகர் மரம் வெட்டிதான். குச்சிக்கொளுத்திக்கு நிகர் குச்சிக்கொளுத்திதான் என்பதை மருத்துவர் மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார்.

- வன்னி அரசு, மாநிலச் செய்தித் தொடர்பாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

Pin It