dalit_woman_480

தர்மபுரி மாவட்டம், வெள்ளாளபட்டி பஞ்சாயத்து, கிருஷ்ணாபுரம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட கிராமம் நாயக்கன்கொட்டாய் – நத்தம் காலனி. கடந்த 07.11.2012 அன்று மாலை சுமார் 4.00 மணியளவில் 1000க்கும் மேற்பட்ட சாதி இந்து வன்கொடுமை கும்பல் கத்தி, உருட்டுக்கட்டை, பெட்ரோல் குண்டு, அரிவாள், கடப்பாறை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் நாயக்கன்கொட்டாய் – நத்தம் காலனி தலித் குடியிருப்பிற்குள் அத்துமீறி உள்ளே நுழைந்து கொடூரமான தாக்குதல் நடத்தியுள்ளனர். இக்கிராமத்தில் மட்டும் சுமார் 30 வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. 120 வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. தொலைக்காட்சி, இரண்டு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், கடைகள், பீரோ, கட்டில் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் சூறையாடப்பட்டுள்ளன. இதே போன்று அண்ணாநகர், கொண்டபட்டி புதிய காலனி, செங்கல்மேடு மரவாடி ஆகிய கிராமங்களில் 30 வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் குறித்து எமது எவிடன்ஸ் அமைப்பின் உண்மையறியும் குழுவினர் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரடியாகச் சென்று களஆய்வு மேற்கொண்டனர். களஆய்வில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஆரம்பநிலை அறிக்கை வெளியிடப்படுகிறது.

dalit_colony_640

நாயக்கன்கொட்டாய் – நத்தம் காலனி பகுதியில் வசித்து வருபவர் திரு.இளங்கோ (48). தாழ்த்தப்பட்ட தலித் சமூகத்தைச் சேர்ந்த இளங்கோவின் மகன் இளவரசன் (23). இவரும் செல்லங்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த திரு.நாகராஜ் என்கிற சாதி இந்துவின் மகள் திவ்யா (21) என்கிற பெண்ணும் கடந்த 2 வருடமாக காதலித்து 14.10.2012 அன்று பதிவுத் திருமணமும் செய்து கொண்டனர். இத்திருமணத்திற்கு நாகராஜின் குடும்பத்தினரும் அப்பகுதி சாதி இந்துக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தலித் இளைஞர் இளவரசனும் சாதி இந்து பெண் திவ்யாவும் காதலித்து வந்ததை அறிந்த நாகராஜின் குடும்பத்தினர் கடந்த ஜனவரி 2012 மாதத்தில் இளவரசனையும் அவரது குடும்பத்தினரையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். ஆயினும் காதலர்கள் இருவரும் உறுதியாக இருந்து பல்வேறு எதிர்ப்புக்கு இடையே திருமணம் செய்திருக்கின்றனர்.

திருமணம் செய்து கொண்ட இளவரசனும் திவ்யாவும் தங்களது உயிருக்குப் பாதுகாப்பு கேட்டு சேலம் டி.ஐ.ஜி. சஞ்சய் குமார், தர்மபுரி காவல் கண்காணிப்பாளர் திரு.அஸ்ரா கர்க் ஆகியோரிடம் மனு கொடுத்திருந்தனர். போலீசாரும் உரிய பாதுகாப்பு கொடுத்திருந்தனர். இந்நிலையில் கடந்த 04.11.2012 அன்று தர்மபுரி மாவட்ட பா.ம.க. இளைஞரணி தலைவர் திரு.மதியழகன் தலைமையில் வெள்ளாளபட்டி, நாயக்கன்கொட்டாய், புளியம்பட்டி, கொண்டபட்டி, சவுளுபட்டி, மந்தன்கொட்டாய், சீரம்பட்டி, எஸ்.கொட்டாய், கதிர்நாயக்கன் அள்ளி, பழையவூர், மிளகானூர், செல்லம்கொட்டாய் உள்ளிட்ட 12 கிராமங்களிலிருந்து வந்திருந்த சுமார் 1000 சாதி இந்துக்கள் நாயக்கன்கொட்டாய் பகுதியில் கூடியிருந்தனர். தலித் தரப்பிலிருந்து நத்தம் காலனி பகுதி சக்தி (35) த/பெ.சேட்டு தலைமையில் 25 பேர் கலந்து கொண்டனர்.

அப்போது அங்கிருந்த சாதி இந்துக்கள் தலித்துகளைப் பார்த்து, உங்கள் பையன் இளவரசன், எங்க பெண் திவ்யாவை திருமணம் செய்து கொண்டிருக்கிறான். இது முறையானதல்ல. திருமணமானதை நாங்கள் மன்னித்துவிடுகிறோம். ஆனால் எங்கள் பெண்ணை கொண்டு வந்து எங்களிடம் வருகின்ற 07.11.2012 தேதிக்குள் ஒப்படைக்க வேண்டுமென்று கூறினார்கள். அதற்கு தலித் தரப்பினர் எங்கள் மக்களிடம் கலந்து பேசி எங்களது முடிவை சொல்லுகிறோம் என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

dalith_colony_641

இந்நிலையில் 07.11.2012 அன்று மதியம் 2.00 மணியளவில் திவ்யாவின் தந்தை நாகராஜ் தற்கொலை செய்து கொண்டு இறந்துபோயுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி சாதி இந்துக்கள் பா.ம.க. கட்சியைச் சேர்ந்த மதியழகன், வெள்ளாளபட்டி பஞ்சாயத்து தலைவர் ராஜா ஆகியோர் தலைமையில் சுமார் 1000க்கும் மேற்பட்ட கும்பல் தர்மபுரி - திருப்பத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதன்பின்னர் இவ்வன்கொடுமைக் கும்பல் மாலை சுமார் 4.00 மணியளவில் பெட்ரோல் வெடி குண்டு, கத்தி, அரிவாள், உருட்டுக்கட்டை, கடப்பாறை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் நாயக்கன்கொட்டாய் – நத்தம் காலனி தலித் குடியிருப்பிற்குள் அத்துமீறி உள்ளே புகுந்துள்ளனர். இதற்கு முன்னதாகவே அவ்வன்கொடுமைக் கும்பல் தலித்துகளை சாதி ரீதியாக இழிவாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்து கூச்சலிட்டதால் அப்பகுதி தலித் மக்கள் உயிருக்கு பயந்து அங்கிருந்து தப்பித்து வெளியே சிதறி ஓடியிருக்கின்றனர்.

 அவ்வன்கொடுமைக் கும்பல் நாயக்கன்கொட்டாய் – நத்தம் காலனி பகுதியில் தலித்துகளுக்கு சொந்தமான 30 வீடுகளை தீ வைத்து கொளுத்தி எரித்துள்ளனர். 150 வீடுகளை அடித்து நொறுக்கியுள்ளனர். தொலைக்காட்சி பெட்டிகள், இரண்டு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், கட்டில், பீரோ உள்ளிட்ட பொருட்களும் அடித்து சூறையாடப்பட்டுள்ளன. பணமும் நகையும் களவாடப்பட்டுள்ளன. இவ்வன்முறை இரவு 8.30 மணி வரை நடந்துள்ளது. இதுமட்டுமல்லாமல் கொண்டபட்டி, அண்ணாநகர் புதுகாலனி ஆகிய தலித் குடியிருப்பு பகுதிக்குள்ளும் சாதி இந்து வன்கொடுமை கும்பல் உள்ளே புகுந்து சுமார் 30 வீடுகளை எரித்தும், நொறுக்கியும் சேதப்படுத்தியுள்ளனர்.

dalith_colony_642

இக்கொடூர வன்கொடுமைகளுக்கு எதிராக கிருஷ்ணாபுரம் காவல்நிலையத்தில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றஎண்.295/2012 (புகார்தாரர் திரு.செல்வராஜ் (42) த/பெ.பெரியசாமி) பிரிவுகள் 147, 148, 435, 536, 427, 307 இ.த.ச., வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 பிரிவுகள் 3(1)(10), 3(2)(3), 3(2)(4) மற்றும் 3(1) TN PPDL Act ஆகியவற்றின் கீழ் 500 நபர்கள் மீதும், குற்றஎண்.296/2012 (புகார்தாரர் திரு.சக்தி (36) த/பெ.சேட்டு) அடிப்படையில் 87 நபர்கள் மீதும், குற்றஎண்.297/2012 (புகார்தாரர் திரு.தங்கவேல் (40) த/பெ.குப்பன்) அடிப்படையில் 84 நபர்கள் மீதும், குற்றஎண்.298/2012 (புகார்தாரர் திரு.தர்பார் (55) த/பெ.மலையான்) அடிப்படையில் 21 நபர்கள் மற்றும் பலர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றத்தில் ஈடுபட்ட 90 நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலித்துகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலினால் சுமார் 3 கோடி இழப்பு அம்மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. தலித் மக்களுக்கான இழப்பின் விபரம் (இணைப்பு 3) சிலவற்றை இணைத்துள்ளோம்.

தமிழகத்தில் தலித்துகள் மீதும், அவர்களது குடியிருப்புகள் மீதும் நடத்தப்படுகிற தாக்குதல்கள் ஆண்டாண்டு காலமாகவே நடந்து வருகின்றன. தலித் குடியிருப்புகள் மீது தமிழகத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவங்களின் சில பட்டியல்.

1) 31.08.1995 - தூத்துக்குடி மாவட்டம், கொடியங்குளம் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட தலித் குடியிருப்புகள் 600 போலீசாரால் மிகக் கொடூரமாக அடித்து சூறையாடப்பட்டன. டி.வி., கட்டில், பாத்திரம், இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தலித்துகள் மீது தாக்குதலும், காவல்நிலையத்தில் சித்திரவதையும் நடந்தது.

dalith_colony_643

2) 07.03.1996 - விருதுநகர், மங்களாபுரம் பகுதியில் 150 தலித் வீடுகள் கொளுத்தப்பட்டன. டி.வி., கட்டில், பாத்திரம், இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன. வீடுகளும் சூறையாடப்பட்டன.

3) 26.02.1998 - கொடைக்கானல், குண்டுபட்டியில் தலித் குடியிருப்பில் 130 போலீசார் உள்ளே புகுந்து குடியிருப்புகளை அடித்து நொறுக்கினர். 16 பெண்கள் உட்பட 25 தலித்துகள் கைது செய்து, கடுமையாக சித்திரவதை செய்தனர். வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. மண்ணெண்ணையை உணவுப் பொருட்கள் மீது கொட்டி எரித்தனர். டி.வி., கட்டில், பாத்திரம், இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

4) 01.12.1998 - பெரம்பலூர் மாவட்டம், ஓகலூர் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட போலீசார் கொடூரமான தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 80 தலித் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. 20 தலித்துகள் காவல்துறையால் கைது செய்யப்பட்டு கொடூரமான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

5) 16.12.1998 - கடலூர், புளியூர் கிராமத்தில் 500 தலித் வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. டி.வி., கட்டில், பாத்திரம், இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன. பலருக்கு வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன.

6) 16.11.2001 - தூத்துக்குடி மாவட்டம், சங்கரலிங்கபுரத்தில் 167 தலித் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. 26 இளம் பெண்கள் உட்பட 65 பெண்களும், 45 ஆண்களும் போலீசாரால் காவல்நிலையத்தில் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். 400 ஆடுகள் காணாமல் போயின. டி.வி., கட்டில், பாத்திரம், இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

7) 17.05.2004 - கோயம்புத்தூர், காளப்பட்டியில் சாதி இந்துக்களால் 120 தலித் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. வீடுகளுக்கு தீ வைப்பு, பொருட்கள் அடித்து சூறையாடப்படுதல், தலித் பெண்கள் மீது பாலியல் வன்முறை நடைபெற்றது.

8) 16.05.2005 - மதுரை – காடுபட்டி கிராமத்தில் சுமார் 100 பேர் கொண்ட சாதி இந்து வன்கொடுமை கும்பல் தலித் குடியிருப்புகள் மீது கொடூர தாக்குதல் நடத்தியது. 40க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. 80 தலித்துகளுக்கு கடுமையான காயம் ஏற்பட்டது. டி.வி., கட்டில், பாத்திரம், இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

dalith_colony_644

9) 17.10.2005 - மதுரை – மேல உரப்பனூர் கிராமத்தில் 100 பேர் கொண்ட சாதி இந்து வன்கொடுமை கும்பல் 40 தலித் வீடுகளை அடித்து நொறுக்கினர். டி.வி., கட்டில், பாத்திரம், இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

10) 08.11.2007 - திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், ஆவரம்பட்டி கிராமத்தில் 80 பேர் கொண்ட சாதி இந்துக்களால் 24 தலித் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. டி.வி., கட்டில், பாத்திரம், இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

11) 17.01.2008 - விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகில் எடுத்தவாய் நத்தம் கிராமத்தில் சுமார் 100 பேர் கொண்ட சாதிஇந்து வன்கொடுமை கும்பல் 34 தலித் வீடுகளை அடித்து நொறுக்கினர். டி.வி., கட்டில், பாத்திரம், இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

12) 18.02.2008 - கோவை மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், சாணார்பட்டி கிராமத்தில் சுமார் 50 பேர் கொண்ட சாதி இந்து வன்கொடுமை கும்பல் தலித் குடியிருப்பு மீது கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் 10 தலித் வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. 15க்கும் மேற்பட்ட தலித்துகளுக்கு காயம். டி.வி., கட்டில், பாத்திரம், இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

13) 06.03.2008 - விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், தெற்கு ஆணைக்கூட்டம் கிராமத்தில் சாதி இந்து கும்பல் கொடூர தாக்குதல் நடத்தியது. 16 தலித் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. தலித் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டனர்.

14) 30.07.2008 - கரூர் மாவட்டம், குளித்தலை அருகில் உள்ள இடையப்பட்டி கிராமத்தில் சாதிஇந்து வன்கொடுமை கும்பலால் 43 தலித் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. டி.வி., கட்டில், பாத்திரம், இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

15) 29.01.2010 - சிவகங்கை மாவட்டம், வேம்பத்தூர் கிராமத்தில் 60 பேர் கொண்ட சாதி இந்து கும்பலால் 32 தலித் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. டி.வி., கட்டில், பாத்திரம், இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

16) 29.06.2011 - திருச்சி அருகில் உள்ள துளையாநத்தம் கிராமத்தில் சுமார் 120 பேர் கொண்ட சாதி இந்து வன்கொடுமை கும்பல் 42 தலித் வீடுகளை அடித்து நொறுக்கினர். டி.வி., கட்டில், பாத்திரம், இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

dalith_colony_27817) 13.02.2011 - திண்டுக்கல் மாவட்டம், பரளிபுதூர் கிராமத்தில் சுமார் 120 பேர் கொண்ட சாதி இந்து கும்பலால் 70 தலித் வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. டி.வி., கட்டில், பாத்திரம், இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

18) 27.03.2011 - விருதுநகர் மாவட்டம், திருச்சுழி கிராமத்தில் சாதி இந்து வன்கொடுமை கும்பலால் கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 34 வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. சில வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. டி.வி., கட்டில், பாத்திரம், இரண்டு சக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

சிறிய அளவிலான வன்முறைகள், தலித் படுகொலைகள், தலித்துகள் மீதான கொடூர சித்திரவதைகள் போன்ற பல சம்பவங்கள் தலித்துகளுக்கு எதிராக நடந்திருந்தாலும் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவத்தில் சில மட்டுமே பட்டியலாக வெளியிட்டுள்ளோம்.

தலித் குடியிருப்புகளை தீ வைத்துக் கொளுத்தினால் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989 பிரிவுகள் 3(2)(3), 3(2)(4) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். இதுவரை மேற்குறிப்பிட்ட பிரிவுகளின் கீழ் தமிழகத்தில் முழுமையான அளவில் வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை. நாயக்கன்கொட்டாய் – நத்தம் காலனியில் நடைபெற்ற வன்முறைக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அஸ்ராகர்க் அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் வன்கொடுமை குற்றவாளிகள் மீது மேற்குறிப்பிட்ட பிரிவுகளின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது வரவேற்கக்கூடியது.

தீண்டாமையின் உச்சகட்டம் சாதியம். தங்களுடைய பெண் தாழ்த்தப்பட்ட இளைஞர்களை திருமணம் செய்து கொண்டால் தங்களுடைய சாதிப் பெருமை கெட்டுவிடும் என்கிற காரணத்தினால்தான் கௌரவக் கொலைகள் நடக்கின்றன (கௌரவக் கொலைகளின் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது). கௌரவக் கொலைகளுக்கு ஆதரவாக தீண்டமை, சாதி பஞ்சாயத்து, சாதியை வளர்த்தெடுக்கும் கட்சிகள், சாதி மறுப்பு திருமணத்திற்கு எதிரான பிரச்சாரம் போன்ற பல நடவடிக்கைகள் காரணமாக அமைந்துவிடுகின்றன.

தலித் ஒருவர் சாதி இந்துக்களின் எதிர்ப்பை மீறி கோவிலுக்குள் சென்றாலோ அல்லது சரிக்கு சமமாக தேனீர் கடையில் இரட்டை குவளை முறையை எதிர்ப்பு தெரிவித்து ஒரே குவளையில் தேனீர் குடித்தாலோ சாதி இந்துக்களின் கோபத்தின் அளவீடு குறிப்பிட்ட அளவிற்கு இருக்கின்றன. அதே நேரத்தில் சாதி இந்து பெண்ணை தலித் ஒருவர் திருமணம் செய்து கொண்டால் அந்த கோபம் எல்லையில்லாமல் பெரிதாக வெடித்துச் சிதறுகிறது. தலித் பெண்ணை சாதி இந்து ஆண்கள் திருமணம் செய்வதை சாதி வன்ம குழுக்கள் அனுமதிக்கின்றன. ஆனால் சாதி இந்துப் பெண்ணை தலித் ஆண்கள் திருமணம் செய்வதற்குத்தான் இக்குழுக்கள் கடுமையாக எதிர்ப்பை தெரிவிக்கின்றன. ஆகவே இந்த சாதிப் பெருமை என்பது – கௌரவம் என்பது ஆணுக்கான கௌரவமாகவும், அந்த ஆணை அடிப்படையாகக் கொண்டு இயங்கக்கூடிய சாதிக்கான கௌரவமாகவும், அந்த சாதியை அடிப்படையாக கொண்டு இயங்கக்கூடிய மதத்திற்கான கௌரவமாக இருப்பது துரதிஷ்டமானது.

dalith_colony_645

கடந்த மே 2012 மாதத்தில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற வன்னியர் இளைஞர் பெருவிழாவில் வன்னியர் சங்கத்தலைவர் திரு.காடுவெட்டி குரு அவர்கள், எங்க பொண்ணுங்களுக்கு கலப்பு திருமணம் செஞ்சு வைச்சா தொலைச்சுப்புடுவேன் என்று கூறியிருந்தார் (ஆதாரம்: 13.05.2012 ஜுனியர் விகடன்).

இதுபோன்ற சமூக நீதிக்கு எதிரான பேச்சுகள் கருத்துகள் சமத்துவத்தை அழிக்கக்கூடிய நடவடிக்கைகளாகும். இத்தகைய சக்திகள் மீது ஆரம்பத்திலேயே உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் நாயக்கன்கொட்டாய் – நத்தம் காலனி பகுதியில் வன்கொடுமைநடந்திருக்காது. தலித்துகள் மீது நடத்தப்பட்டிருக்கிற இத்தகைய கொடிய அநீதி ஒருவேளை தடுக்கப்பட்டிருக்கலாம். சமீப காலமாக திரு.காடுவெட்டி குரு அவர்கள், தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் எல்லாம் திட்டமிட்டு தங்கள் சமூகத்துப் பெண்களை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி வருவதாக பத்திரிக்கைகளில் பேட்டி கொடுத்தும், பேசியும் வந்திருக்கிறார். எந்த சமூகத்துப் பெண்களையும் இழிவுபடுத்துவது, பாலியல் ரீதியாக வன்முறையில் ஈடுபடுவது கடும் கண்டனத்திற்குரியது.

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது தமிழ்நாடு மற்றும் கர்நாடகா போலீசாரால் மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் வன்னியர் சமூகத்துப் பெண்கள். அந்த காயங்களின் வலிகள் வரலாற்றில் ஆழமாகப் பதிந்து போயுள்ளன. இதுபோன்ற கொடிய அநீதிகளுக்கு எதிராகத்தான் காடுவெட்டி குரு பேசவேண்டும். காடுவெட்டி குரு சமூகத்தைச் சேர்ந்த ஆண்களால் பல அப்பாவி தலித் பெண்களும் பழங்குடியினப் பெண்களும் கடுமையான பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். எங்களது அமைப்பிடம் இதுபோன்று 48 வழக்குகள் உள்ளன. அவற்றின் பட்டியல் (இணைப்பு) சிலவற்றை இணைத்துள்ளோம். அதனால் அச்சமூகத்தினுடைய எல்லா ஆண்களும் மோசமானவர்கள் என்று அர்த்தப்படுத்திக் கொள்ள முடியாது. இந்த பார்வையோடு தான் இப்பிரச்சனையை அணுக வேண்டும்.

திவ்யாவின் தந்தை திரு.நாகராஜ் இறந்து போனது வருத்தத்திற்குரியது. இதனால் அக்குடும்பத்தினர்கள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியிருப்பார்கள். அதை உணர்ந்து கொள்ள முடிகிறது. நாகராஜ் இறந்துபோனதற்கு தலித் மக்கள் எப்படி பொறுப்பாவார்கள்? காவல்நிலையத்தில் ஒரு இளைஞர்கள் கொல்லப்பட்டால் அதைக் கண்டித்து மக்கள் போராட்டம் செய்வார்கள் அல்லது சாதியப் படுகொலையால் இறந்துபோனால் அதைக் கண்டித்தும் பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம் செய்வார்கள். ஆனால் நாகராஜின் தற்கொலையை முன்னிறுத்தி போராட்டம் நடத்தியிருப்பது அந்த போராட்டம் தலித்துகளுக்கு எதிராக திசை மாறியிருப்பது எல்லாமே ஏற்புடையதல்ல.

dalith_colony_646

தலித் குடியிருப்புகளை எரிப்பது, நொறுக்குவது என்பது ஒருவிதமான அழித்தெழிக்கும் நடவடிக்கைகளாகும். இத்தகைய சக்திகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கு அரசு சிறப்பு உத்தரவினை வெளியிட வேண்டும். இதுமட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட தலித்துகளுக்கு நஷ்டஈடு மட்டும் கொடுக்காமல் அவர்களுக்கான மறுவாழ்வும் நிவாரணமும் கொடுக்கப்பட வேண்டும். சாதிய துவேசத்தால் வீடுகளை இழந்த பல தலித்துகளுக்கு இதுவரை போதுமான உரிய நிவாரணமும் நஷ்ட ஈடும் வழங்கப்பட்டதில்லை.

இதுமட்டுமல்லாமல் தமிழக அரசு பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் அறிவித்துள்ளது. இந்த தொகை வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989ன் கீழ் மாற்றம் செய்யப்படாத சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 23.12.2011 அன்று தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நிவாரணம் குறித்து பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. குடியிருப்புகளை இழந்து தவிக்கக்கூடிய தலித்துகளுக்கு குறைந்தபட்சம் ரூ.1,20,000 வழங்க வேண்டுமென்றும், அவ்வீடுகள் முறையாக புனரமைக்கப்பட வேண்டும், இழந்துபோன பொருட்களுக்கு நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்றெல்லாம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் சில பரிந்துரைகளை அரசிற்கு எமது குழு முன்வைக்க விரும்புகிறது.

பரிந்துரைகள்

  • தலித் குடியிருப்புகளை சேதப்படுத்துகிற குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்து அவர்களுக்கு அபராதமும் விதித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட வேண்டுமென்று வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கூறப்பட்டிருப்பதால் இவ்வழக்கினை உரிய முறையில் விசாரணை செய்ய வேண்டும். ஆகவே தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமிகு.அஸ்ராகர்க் அவர்கள் இவ்வழக்கின் விசாரணை அதிகாரியாக தொடர்ந்து பணியாற்ற மாநில காவல்துறை இயக்குனர் சிறப்பு உத்தரவினை வெளியிட வேண்டும்.
  • பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்ச நிவாரணத் தொகையை கடந்து ரூ.2 இலட்சம் நிவாரணம், நஷ்டஈடு, வீடுகளை புனரமைப்பு செய்தல் போன்ற நடவடிக்கைகளில் அரசு ஈடுபட வேண்டும்.
  • குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்.
  • குறைந்தபட்சம் 12 மாதத்திற்கு தற்காலிக நிவாரணமாக ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் மாதந்தோறும் ரூ.5000 கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ஆ.கதிர், செயல் இயக்குனர், எவிடென்ஸ்

Pin It