'மின்வெட்டுக்கு தீர்வாகுமா சூரிய ஒளி மின்சாரம்' என்ற தலைப்பில் சென்ற‌ வார (24.10.2012) ஆனந்த விகடனில் ஒரு கட்டுரை வெளிவந்தது. அதன் இறுதி பத்தி பின்வருமாறு உள்ளது.

"சூரிய மின்சாரம் சரியான தீர்வா"

சூரிய சக்தி மின்சாரம்தான் இருப்பதிலேயே சாத்தியமானது என்று பலரும் கை காட்டினாலும், சூரிய மின்சாரத்தை மட்டுமே முழுமையான தீர்வாகக் கருதிவிட முடியாது. உதாரணமாக, இதை ஒரு தனி நபர் அமைக்க குறைந்தது 50 ஆயிரம் ரூபாய் பணமும், சொந்த வீடு இட வசதியும் வேண்டும். மூன்று வேளை உணவுக்கே வழியற்ற ஏழை மக்கள் இவ்வளவு பணத்துக்கும், இடத்துக்கும் எங்கே செல்வார்கள்? ஆகையால் நடுத்தர வர்க்க மக்களுக்கும், உயர் வர்க்க மக்களுக்கும் இது ஒரு தீர்வைக் கொடுக்கலாம்.

  இதே நிலைமை தான் அரசாங்க அளவிலும். உலகிலேயே மிகப்பெரிய சூரிய மின்சார உற்பத்தி நிலையம் சீனாவில் இருந்தது. இதன் மொத்த மின் உற்பத்தி திறன் 220 மெகாவாட். கடந்த ஆண்டு சீனாவை விட பெரிய சூரிய மின் உற்பத்தி நிலையத்தை குஜராத்தில் அமைத்தார் நரேந்திர மோடி. அதன் உற்பத்தி திறன் 214 மெகாவாட். ஆனால் அனல் மின் நிலையம் மற்றும் அணு மின் நிலைய உற்பத்தியுடன் ஒப்பிட்டால் இது சொற்பம் தான். ஆகையால், நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரிய அளவிலான மின் தட்டுபாட்டுக்கு முன் சூரிய மின்சார உற்பத்தி என்பது யானைப் பசிக்கு சோளப் பொரி தான். ஆனால் கோரமான பசியில் இருக்கும்போது சோளப் பொரியை யாராலுமே அலட்சியப்படுத்த முடியாது."

பொய்கள் பலவகைப்படும். முழு பொய்கள், பாதி உண்மை, பாதி பொய்கள் என்பன அதில் சில... இதில் ஆனந்த விகடனின் மேற்கூறிய கட்டுரை இரண்டாம் வகையைச் சேர்ந்தது. கட்டுரையில் 90 விழுக்காடு வீடுகளில் பயன்படுத்தும் சூரிய மின்னுற்பத்தியைப் பற்றி பேசி விட்டு, இறுதி ஆறு வரிகளில் மட்டும் அரசு உற்பத்தி செய்யும் சூரிய மின்னுற்பத்தி நிலையங்களைக் கூறி இறுதியாக "சூரிய மின்னுற்பத்தி யானை பசிக்கு சோளப்பொறி" என்ற உண்மைக்கு புறம்பான முடிவை எட்டியுள்ளது ஆனந்த விகடன். இந்த இதழ் வெளிவந்த சில தினங்களில் தமிழக அரசு தனது சூரியஒளி மின்திட்டத்தை வெளியிட்டது. இது யதேச்சையான ஒன்றாகவும் இருக்கக்கூடும்.

  ஆனந்த விகடன் கட்டுரையில் கூறியுள்ளது போல சூரிய மின்சாரம் என்பது தற்போதுள்ள மின்தேவைக்கு முன் "யானைப் பசிக்கு சோளப்பொறி" போன்றதா என இங்கு ஆராய்வோம். சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் எடுக்கும் தொழில்நுட்பத்தின் முதல் கண்டுபிடிப்பு 1860களில் தொடங்கினாலும், 1970-80 காலகட்டத்தில் தான் வர்த்தக ரீதியாக சூரியஒளியின் மூலம் மின்னுற்பத்தி செய்வது பரவலாகத் தொடங்கியது. இந்த தொழில்நுட்பத்தை தொடக்கத்தில் வளரவிடாமல் தடுத்ததில் எண்ணெய் மாபியாக்களின் பங்கு அதிகமாக இருந்தது. தற்சமயம் அப்பணியை அணுசக்தி மாபியாக்கள் செய்து வருகின்றன. மேற்கூறிய விவரங்களின் அடிப்படையிலேயே சூரிய ஒளி மின்னுற்பத்தியை நாம் ஆராயத் தொடங்க வேண்டும். 1970-80களில் தொடங்கிய சூரிய ஒளி மின்னுற்பத்தி தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து கொண்டே செல்கின்றது. இதை செர்மனியின் சூரிய ஒளி மின்னுற்பத்தி திட்டத்துடன் ஒப்பு நோக்கினால் மிகத் தெளிவாக விளங்கும்.                                

mojave_solar_power

1991ல் வெறும் 2 மெகாவாட் சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையத்தை நிறுவியிருந்த செர்மனி 2011ல் 24,800 மெகாவாட் அளவிற்கு சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையங்களை அமைத்துள்ளது.(1,2) மேலும் பல சூரிய ஒளி மின்னுற்பத்தி பூங்காக்களை அமைத்தும் வருகின்றது. கடந்த மே(2012) மாதத்தின் ஒரு நண்பகலில் செர்மனி 22,000 மெகாவாட் (30க்கும் மேற்பட்ட அணு உலை மின்னுற்பத்திக்கு சமம்) மின்சாரத்தை உற்பத்தி செய்தது இங்கே குறிப்பிடத்தக்கது. (3)இது ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே நீடித்தது. இதற்கு செர்மனி சூரிய ஒளி குறைவாக கிடைக்கும் பகுதியில் இருப்பதே காரணமாகும். இதே சூரிய ஒளி மின்னுற்பத்தி கட்டமைப்பு, 365 நாட்களும் சூரிய ஒளி கிடைக்கும் இந்தியா போன்ற வெப்ப மண்டல நாட்டில் இருந்தால் 22,000 மெகாவாட் மின்னுற்பத்தி தொடர்ச்சியாக கிடைக்கும். இந்திய அரசும் தார் பாலைவனத்தில் சூரிய ஒளி பூங்கா அமைக்கும் திட்டத்தை வைத்திருந்தது. 60 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த ஒரு திட்டத்தின் மூலம் மட்டுமே நாம் 3,00,000 மெகாவாட் மின்னுற்பத்தி பெற முடியும். 2020ல் இந்தியா முழுமைக்கும் தேவைப்படும் மின்சாரத்தின் அளவாக கணிக்கப்பட்டுள்ளது 4,00,000 மெகாவாட்!. ஆனால் வழமை போலவே இந்தத் திட்டமும் பரணில் எறியப்பட்டது.  

மேலும் ஆனந்த விகடனின் கட்டுரையில் கூறியுள்ளது போல குசராத்தில் அமைந்துள்ள சூரியஒளி மின்னுற்பத்தியின் மொத்த உற்பத்தி 214 மெகாவாட் அல்ல, அது சரங்கரா என்ற சூரிய ஒளி மின்னுற்பத்தி பூங்காவின் உற்பத்தி மட்டும் தான். குசராத்தில் செயல்படத் தொடங்கியுள்ள மொத்த சூரிய மின்னுற்பத்தியின் அளவு 689 மெகாவாட். 2013ற்குள் இது 1000 மெகாவாட்டைக் கடந்துவிடும்.(4,5) உலக அளவில் தற்பொழுது மிகப்பெரிய சூரிய ஒளி மின்னுற்பத்தி பூங்காக்கள் கட்டப்பட்டு வருகின்றன. வட அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் முறையே 968 மெ.வா , மூன்று 550 மெ.வா, 354 மெ.வா உற்பத்தி திறன் கொண்ட சூரிய ஒளி பூங்காக்கள் கட்டப்பட்டு வருகின்றன‌(6,7,8,9,10). தற்பொழுது உலக நாடுகளில் மொத்தமாக 17,000 மெகாவாட்டிற்கும் அதிகமான அளவிற்கு சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன‌. இந்தத் தகவல்கள் எதுவும் ஆனந்த விகடனின் கட்டுரையில் வரவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்னால் நாளேடுகளில் வெளிவந்த இந்திய அறிவியல் தொழிநுட்ப கழகத்தைச் சேர்ந்த இரு அறிவியலாளர்கள் வெளியிட்ட ஆய்வு முடிவில் இந்தியாவில் உள்ள 4.1 விழுக்காடு தரிசு நிலங்களைப் பயன்படுத்தி சூரிய ஒளி, காற்றாலை மூலம் மட்டுமே இந்தியாவின் மொத்தத்திற்குமான மின்தேவையைப் பூரித்தி செய்ய முடியும், அணு உலைகள் தேவையே இல்லை என்ற ஆய்வுக்கட்டுரை வெளியாகியுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது!(11)

மேலும் சூரிய ஒளி மின்னுற்பத்தியை கணக்கில் கொள்ளும்போது அதன் குறைபாடுகளாக சுட்டிக்காட்டபடும் மின்னுற்பத்திக்காக ஆகும் செலவைப் பற்றியும் நாம் ஆராய‌வேண்டும். நான் முன்னரே கூறியது போல சூரிய ஒளி மின்னுற்பத்தி தொழில்நுட்பம் 1970-80களில் தான் வர்த்தகமயமாகத் தொடங்கியதால் தொடக்கத்தில் அதற்கான உற்பத்தி செலவு என்பது அதிகமாக இருந்தது. ஆனால் மேற்குலகில் அதிகரிக்கத் தொடங்கிய சூரிய ஒளி மின்னுற்பத்தியின் மூலம் உற்பத்திக்கான செலவு குறையத் தொடங்கியது. மேலும் 2020களில் சூரிய ஒளி மின்னுற்பத்திக்கான செலவு நிலக்கரி, எண்ணெய் மூலம் மின்னுற்பத்தி செய்யும் செலவை விட குறைந்ததாக இருக்கும் என்று தரவுகளுடன் விளக்குகின்றது ஒரு கட்டுரை(12). இதன் மூலம் சூரிய ஒளி மின்னுற்பத்தி என்பது அவ்வளவு செலவு மிகுந்ததல்ல என்று நமக்குத் தெரிய வருகின்றது.

solar_map_india

அதே சமயம் அணு உலை மின்னுற்பத்திக்கு அரசு கொடுக்கும் மானியங்கள், அணு உலை ஆயுட்காலம் (40-60 ஆண்டுகள்) முடிந்த பிறகு அதை மூடுவதற்கு ஆகும் செலவு, அணு உலைக்கழிவுகளை பராமரிப்பதற்கு ஆகும் செலவு, அணு உலை விபத்து ஏற்பட்டால் அதை சரிசெய்வதற்காகும் செலவுகள் என்ற எல்லா செலவுகளையும் சேர்த்தால், இன்றைய நிலையில் சூரிய ஒளி மின்னுற்பத்திக்கான செலவு என்பது மிகக்குறைவான ஒன்றே. கோடை காலம் வந்தால் வேலூரில் சிலர் சூரிய வெப்பத்தினால் இறந்தனர் என்ற செய்தி என்பது இங்கு வழமையான ஒன்றாக இருக்கின்றது. சேலம், தர்மபுரி, வேலூர் மாவட்டங்களில் தேவையான தரிசு நிலங்களும், தேவைக்கு அதிகமாகவே சூரிய ஒளியும் கிடைக்கின்றது என்பதை நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் அதிகப்படியான வாசகர்களைக் கொண்டுள்ள ஒரு வார இதழ் குழுமம் இதுபோன்ற பாதி உண்மைத் தகவல்களைக் கொண்டு உண்மைக்குப் புறம்பான ஒரு கட்டுரையை வெளியிட்டு அதிகார வர்க்கத்திற்கு ஆதரவளிப்பது "ஊடகம் சனநாயகத்தின் நான்காவது தூண்" என்ற நிலை மாறி அதிகார வர்க்கங்களின் பிரச்சார பீரங்கியாகி விட்டது என்ற முற்போக்காளர்கள் குற்றச்சாட்டை உறுதி செய்வது போல் உள்ளது. அடுத்து வருகின்ற இதழில் தாங்கள் எழுதியிருக்கும் இக்கட்டுரைக்கு மறுப்பு வெளியிட்டு மேற்கூறிய முற்போக்காளர்களின் நம்பிக்கையை பொய்யாக்குவீர்கள் என்ற எதிர்பார்ப்புடன் இக்கட்டுரையை அனுப்புகின்றேன். அதே சமயம் இக்கட்டுரையை பொதுமக்கள் பார்வைக்கும் வெளியிடுகின்றேன்.

பி.கு - இக்கட்டுரை ஆனந்த விகடனின் மின்னஞ்சலிற்கும் அனுப்பப்பட்டுள்ளது.

- நற்றமிழன்.ப

தரவுகள்:

1)   http://www.zeitnews.org/applied-sciences/energy/germany-added-543-megawatts-solar-power-capacity-july
2)   http://en.wikipedia.org/wiki/Solar_power_in_Germany
3)   http://www.reuters.com/article/2012/05/26/us-climate-germany-solar-idUSBRE84P0FI20120526
4)   http://articles.economictimes.indiatimes.com/2012-04-19/news/31367545_1_gujarat-solar-park-solar-project-solar-power-policy
5)   http://en.wikipedia.org/wiki/Gujarat_Solar_Park
6)   http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2010/02/22/AR2010022204891.html
7)   http://www.nrel.gov/docs/legosti/fy98/22589.pdf
8)   http://en.wikipedia.org/wiki/Solar_power_plants_in_the_Mojave_Desert
9)   http://www.renewableenergyworld.com/rea/news/article/2011/06/the-rise-of-concentrating-solar-thermal-power
10)  http://en.wikipedia.org/wiki/List_of_solar_thermal_power_stations
11)  http://www.thehindu.com/sci-tech/energy-and-environment/india-can-meet-energy-needs-sans-npower-study/article3964452.ece
12) http://www.dianuke.org/solar-energy-in-india-now-costs-38-less/

Pin It