நண்பர்களே! இக்கட்டுரையை எழுதும் இத்தருணத்தில் என் மடியில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைக்கு ஒன்றரை வயது. என் எதிர் வீட்டு அர்ச்சகரின் குழந்தை. நாங்கள் இந்த வீட்டிற்கு வந்த பிறகு அவர்கள் திருமணமாகி எதிர்வீட்டிற்கு வந்தார்கள்.

பின்னர் அவர்களுக்கு இந்தக் குழந்தை பிறந்தான். அவன் ஓரளவு நடந்து பழகியவுடன் முதன் முதலாக வந்தது எங்கள் வீட்டிற்குத்தான். இப்போது பேசப் பழகுகிறான். எல்லோரையும் பார்த்து 'கா.. கா..' என்று மட்டுமே அழைக்கத் தெரிந்த எங்களின் செல்லக் குரல் அவன்.

எங்கள் வீட்டில் அசைவம் சமைத்தபோதிலும், அவனுக்காக சில நேரம் தயிர்சாதம், சாம்பார் சாதம் சமைத்து நீலா ஊட்டி விடுவார். அவனுக்கு என் மீதுதான் அதிக ப்ரியம். ஒரு நாள் தவறாமல் மாலை நேரம் இங்கு வந்து விடுகிறான்.

chinmayi_350எங்கள் அடுக்கத்தின் கீழ்த் தளத்தில் இரண்டு குடும்பம் மட்டும் தான் பார்ப்பனரல்லாதவர்கள். ஏனைய மூன்று குடும்பங்களுமே பார்ப்பனர்கள். ஆனால் அர்ச்சகர் வீட்டுக்காரர்கள் எங்கள் வீட்டிற்குத்தான் அந்தக் குழந்தையை அனுப்புவார்கள். ஏனைய பார்ப்பனர்கள் வீட்டிற்குக் கூட அவனை அனுப்பி நான் பார்த்ததில்லை.

இதை ஏன் இங்கே சொல்கிறேன் என்றால் என்னுடன் பழகும், புழங்கும் சக மனிதர்களுக்கு என்னால் இயன்ற அளவு அன்பைக் கொட்டிக் கொடுப்பேன். அவர்களின் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், உணவுமுறைகளை நான் மதிப்பேன். அவர்களில் எவரேனும் என் கலாச்சாரப் பழக்கவழக்கங்களையோ, உணவுமுறையோ தவறு என்றால் அதை கடுமையாக எதிர்ப்பேன்.

உனக்கும் எனக்கும் எல்லோருக்கும்தான் பூமியில் வாழும் உரிமை உள்ளது. அந்த சம உரிமை எங்கே பாதிக்கப்படுகிறதோ, எங்கே அது தட்டிப் பறிக்கப்படுகிறதோ அங்கேதான் மனிதன் கூட்டம் கூடி தனக்காகப் பேசி தன் உரிமைக்காக இயக்கம் கட்டுகிறான். தலித் இயக்கங்களும், திராவிட இயக்கமும், தமிழ்த் தேசியமும் இங்கிருந்துதான் உருவாகின்றன. தன்னைக் காத்துக் கொள்ளும் கோட்பாடுகளை உருவாக்குகிறான் வாய்ப்பிழந்தவன்.

நீண்ட காலப் போராட்டத்தின் பின்னரே சமூகத்தில் சமவாய்ப்பற்று பின்தங்கிய மக்களுக்கு இட ஒதுக்கீடு என்னும் உரிமை கிடைத்தது; அதுவும் முழுமையாக அல்ல. இட ஒதுக்கீடு என்னும் உரிமை சென்று சேராத வர்க்கங்களும் உண்டு. பொருளாதார ரீதியான முன்னேற்றத்திற்கு என்பதைக் காட்டிலும் சமூக அந்தஸ்துக்கு என்பது பொருத்தமாக இருக்கும். ஏழையாகவே இருந்தாலும் பார்ப்பனர்கள் அந்தஸ்தில் உயர்ந்தவர்களே. பணமே இருந்தாலும் சூத்திரனுக்கோ, தலித்துக்கோ பார்ப்பனர்களுக்குரிய அந்தஸ்து கிடைத்து விடுவதில்லை. இந்த இடத்திலிருந்துதான் சின்மயி விவகாரத்தை நாம் புரிந்து கொள்ள முயல வேண்டும்.

சின்மயி மிகச் சிறந்த பாடகர். அவரது பாடல்களுக்கு நானும் ஒரு ரசிகன். எனக்கும் அவருக்குமான தொடர்பு அவ்வளவுதான். பாலியல் ரீதியான துன்புறுத்தல் என்னும் புகாரின் பேரில் டிவிட்டர்களான ராஜன்லீக்ஸ், சரவணகுமார் கைதான பின்னர்தான் தெரிந்தது மீனவர்கள், முஸ்லீம்கள், தலித்துக்கள் தொடர்பாக சமூக விரோதக் கருத்துக்களை சின்மயி எழுதி வெளியிட, ராஜன் லீக்ஸ் போன்றவர்கள் கடுஞ்சொற்களில் அவரிடம் உரையாட, அவரோ திட்டமிட்டு இவர்கள் வசவியதை எல்லாம் பிரதி எடுத்து விட்டு தான் எழுதியதை எல்லாம் அழித்து விட்டார். அவர் போலீசில் புகார் கொடுத்தபோது கூட 'முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றி எப்படி எல்லாம் கிண்டல் செய்திருக்காங்க பாருங்கோ' என்றுதான் பலம் கூட்டியிருக்கிறார்.

மக்கள் பிரச்சினைகளில் அதிகார வர்க்கத்திற்கு எதிரான குரலை ஒலிப்பதில் சமூக வலைத்தளங்கள் ஆற்றி வரும் பங்கைக் கண்டு பொருமிக் கொண்டிருந்த ஆளும் வர்க்கத்திற்கு, சின்மயி விவகாரம் ஒரு நல்வாய்ப்பாக அமைந்தது. உடனடியாக ராஜன்லீக்ஸ், சரவணகுமார் கைது செய்யப்பட்டதில் சமூக வலைத்தளங்களில் இயங்குபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை இருக்கிறது. 'இணையதளக் குற்றங்களில் ஈடுபடுவோர் பிணையில் வெளிவர முடியாத வழக்குகளில் உடனடியாக கைது செய்யப்படுவார்கள்' என்று சென்னை மாநகர காவல் துறை ஆணையர் ஜார்ஜ் கூறியிருப்பது இணையதளங்களில் நிலவும் கட்டற்ற கருத்து சுதந்திரத்திற்கு விடப்பட்ட எச்சரிக்கையாகவே கருத வேண்டும். இதில் வினோதம் என்னவென்றால், இடதுசாரிகளை ஆபாசமாக சித்தரித்து கவிதை எழுதி, அதை 'கருத்துச் சுதந்திரம்' என்று கூட்டம் நடத்தியவர்கள் எல்லாம் இன்று ராஜன்லீக்ஸ், சரவணகுமார் கைதை வரவேற்றிருப்பதுதான்.

ராஜனின் எழுத்துக்கள் ரசிக்கத்தக்கவை அல்ல. சின்மயியிடம் இவர் ஓர் அரசியல் வாதத்தை நடத்தியிருந்தால் – வேண்டாம், அது வெட்டி வேலைதான் – ‘சின்மயியிடம் விவாதிக்கிறேன் பேர்வழி’ என்று அவர் விரித்த வலையில் போய் சிக்கியிருக்க வேண்டிய அவசியம் நேர்ந்திருக்காது. இங்கே ராஜனின் குரலை அடித்தட்டு சமூகங்கள் தங்களுக்கிடையில் வசவிக் கொள்ளும் மொழியாகத்தான் நான் பார்க்கிறேன். ஆனால் இத்தகைய வார்த்தைகளை நேரடியாக ராஜன் போன்றோர் பயன்படுத்தினார்களா என்று தெரியவில்லை. ஆனால் வெவ்வேறு விஷயங்களில் ஆபாசம் கலந்த எள்ளல் தொனி அவரது மொழியில் இருக்கி்றது.

சின்மயின் மொழி ராஜனின் மொழியை விட ஆபத்தானது மட்டுமல்ல, ஆபாசமானதும் கூட. பார்ப்பனரல்லாதோரின் தலைமுறை மீது வைணவம் குதத்தில் சொறுகிய வாளைப் போல அது இறங்கியிருப்பதற்கான எல்லா சாத்தியங்களையும் கொண்டிருக்கிறது. மீனவர் படுகொலை தொடர்பாக கருத்து தெரிவிக்குமாறு இவர்கள் அவரைக் கேட்டிருக்கிறார்கள். அப்படிக் கேட்கலமா? என்ற கேள்வியில் ஒரு நியாயம் உள்ளது. நிச்சயமாக நான் நடிகர் மாதவனிடம் போய் ஈழத் தமிழர் பிரச்சனை குறித்து உங்கள் கருத்து என்ன என்று கேட்க மாட்டேன். ஆனால் மாதவன் பொதுப் பிரச்சனையில் கருத்துச் சொல்லி அது முரண்பாடாக இருந்தால் மாதவனிடம் ஈழம் தொடர்பாக கருத்துச் சொல்லும் படிக் கேட்பேன். அந்த வகையில் மின்சாரத் திருட்டு தொடர்பாக ஓர் இணைப்பைக் கொடுத்து. தன் வீட்டின் அருகிலும் அப்படியான திருட்டுகள் நடப்பதாக எழுதியதாகவும், கிட்டத்தட்ட குடிசைப்பகுதி மக்களை அவர் திருடர்களாகச் சொன்னதாகவும் உடனே இவர்கள் கேள்வி எழுப்ப, தொடர்ந்து சின்மயி இது மாதிரி அரிய பல கருத்துக்களைக் கொட்ட, இவர்களும் விட்டேனா பார் என்று அவரைத் திட்டியிருக்கிறார்கள்.

இதெல்லாம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்திருக்கிறது. சின்மயின் அம்மா ராஜனை என்ன செய்கிறேன் பார் என்று சவால் விட்ட ஆடியோ ஒன்றையும் கேட்டேன். ஆக மொத்தம் அவர்கள் திட்டமிட்டு இவர்களை போலீசில் சிக்க வைக்க வேண்டுமென்றே டிவிட்டியிருக்கிறார்கள்.

அப்படி எழுதியதுதான் // மீனவா மீனைக் கொல்றா மீனவனை இலங்கை இராணுவம் கொல்றா// என்று மீனவர் படுகொலையை நியாயப்படுத்தியிருக்கிறார். வினவு குழுமத்தின் நாடகப் பிரதியொன்றின் வசனம் என்கிறார்கள் சிலர். அது வினவு பிரதியாக இருந்தால் என்ன, கனவுப் பிரதியாக இருந்தால் என்ன ? அங்கே சின்மயி அதை அவருடைய பதிலாகத்தான் பயன்படுத்துகிறார். ஆக மொத்தம் அவருடைய கருத்துதான் அது. இன்னொரு இழையில் தான் அப்படிச் சொன்னதை உறுதியும் படுத்துகிறார்.

அது போல ‘சோ கால்ட்’ தலித் தலைவர்கள்தான் தாழ்த்தப்பட்டவர்கள் என்பவர்களை வைத்து பிரச்சனை செய்கிறார்கள் என்பது போன்று எழுதுகிறார். ஆக மொத்தம் சின்மயி எழுதிய எல்லாமே சமூக விரோதக் கருத்துக்களாக உள்ளன. சின்மயின் கோபம் என்பது பெரும்பான்மை பிற்படுத்தப்பட்ட, தலித், முஸ்லிம் மக்களுக்கு எதிரான பார்ப்பனக் கருத்தியலாக உள்ளது.

காலம் காலமாக அறிவுத்தளத்தில் இப்படியான கருத்துக்களையே பார்ப்பனர்கள் கொண்டிருந்தாலும் பெரும் ஊடகங்களில் அவர்களுடன் பார்ப்பனரல்லாதார் மோத வாய்ப்பில்லாமல் இருந்து வந்தது. இன்றும் கூட அதே நிலைதான் தொடர்கிறது. பார்ப்பனீயத்தைப் பாதுகாத்துக் கொண்டே தலித்துக்களை ஒடுக்கும் சூத்திரப் பார்ப்பனீயம், பார்ப்பனீயத்திற்கு இணையாக இல்லை என்றாலும் அதுவும் அச்சு ஊடகங்களில் செல்வாக்குச் செலுத்தும் நிலைதான் உள்ளது.

இணைய தளத்தில் 2005-க்குப் முன்னர் வரை பார்ப்பனர்கள் மட்டுமே அதுவும் அமெரிக்கப் பார்ப்பனர்கள் மட்டுமே செல்வாக்குச் செலுத்தினார்கள். பின்னர் இணைய வசதிகள் கிராமங்கள் வரை பரவியதன் விளைவாகவும், சமூக வலைத் தளங்கள் உருவானதன் விளைவாகவும் எழுத வாய்ப்பில்லாதவர்கள், நினைப்பதை கட்டற்ற சுதந்திரத்தோடு எழுதுகிறார்கள். இப்போது வெகுசன ஊடகங்கள் சமூக வலைத் தளங்களில் கட்டற்ற சுதந்திரம் தேவையா என்று விவாதிக்கிறார்கள். உண்மையில் கட்டுப்பாடே இல்லாத சுதந்திரத்தோடுதான் பார்ப்பனர்கள் தங்களின் கருத்துக்களை அச்சு, காட்சி ஊடகங்களில் பரப்பி வந்தார்கள்.

இங்கே கட்டுப்படுத்த முடியாத தொழில் நுட்பத்தைக் கட்டற்ற சுதந்திரம் என்று தட்டையாகப் புரிந்து கொண்டு, ஏதோ இவர்கள் எல்லாம் கட்டுப்பாட்டோடு கட்டுரைகள் எழுதுவது போலவும், இணைய பாவனையாளர்கள் கட்டுப்பாடற்று கருத்து எழுதுவது போலவும் சித்தரிக்க முயல்கிறார்கள். உண்மையில் இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த இணைய ஊடகம்தான் தமிழகத்தின் சமகாலப் பிரச்சனைகள் சகலத்திலும் எழுச்சி ஏற்பட பங்காற்றியிருக்கிறது. ஈழம், தூக்குத்தண்டனை எதிர்ப்பு, அணு உலை எதிர்ப்பு என சகலத்திலும் அதன் பங்களிப்பு அளப்பரியது என்னும் நிலையில்தான் சின்மயியோடு இவர்கள் மோதியதைக் காண வேண்டும்.

பொது வெளியில் கருத்துச் சொல்லும்போது அதை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கிற பார்ப்பனர்களை நான் பார்க்கிறேன். அதே நேரம் எத்தனையோ பார்ப்பன நண்பர்கள் நம் சமகாலப் போராட்டங்களில் பங்கேற்பவர்களாக இருக்கிறார்கள். பொது வெளியில் அவர்கள் கருத்துச் சொல்லும்போது அவர்கள் மீது எவரும் இப்படிப் பாய்வதில்லை.

சின்மயி தன்னை அய்யங்கார் என வெளிப்படையாக எழுதுகிறார். அதுவும் iyengar என்று எழுத வேண்டிய வார்த்தைகளை HIGH engar என்று திமிரோடு எழுதுகிறார். நாங்கள் உயர்ந்தவர்கள் என்பதை இத்தனை பார்ப்பனத் திமிரோடு எழுதும் சின்மயி போன்றவர்கள், இம்மாதிரியான வசவுகளில் சிக்குவதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?

இப்போது சின்மயியை ஷோபா சக்தி, லீனா மணிமேகலை, சாரு நிவேதிதா போன்றோர் ஆதரிக்கிறார்கள். ராஜனையும், சரவணகுமாரையும் டிவிட்டர் பொறுக்கி என்கிறார் 'இலங்கை ரைட்டர்' ஷோபாசக்தி. 'இணையப் பொறுக்கி, செக்ஸிஸ்ட்' என்கிறார் லீனா மணிமேகலை. பொதுவாகவே இவர்கள் எல்லா நிலைகளிலும் தமிழர் எதிர்ப்பு நிலை எடுப்பவர்கள் என்னும் நிலையில் இதிலும் ஒன்றிணைகிறார்கள். அதில் ஆச்சரியம் ஏதும் இல்லை என்றாலும், செக்ஸியிஸ்ட் என்றும் இணையப் பொறுக்கிகள் என்றும் சொல்லும் உரிமையை இவர்களுக்கு யார் கொடுத்தார்கள்? தமிழச்சியை இணையத்தில் அவமதித்ததோடு, ‘அல்லா அல்லா அல்லைப்பிட்டி பள்ளா பள்ளா என்று நாங்கள் பள்ளி செல்லும்போது பாடுவார்கள்' என்று தலித் வேடம் கட்டி, ஆடி அம்பலப்பட்ட பின்னர் வெளியிட்ட மொக்கைக் கட்டுரையில் திருத்தம் கொண்டு வந்த இந்த யோக்கிய சிகாமணி, அரசியல் ரீதியாக நம் சமகாலப் பிரச்சனைகளில் நிற்கும் ராஜனை இணையப் பொறுக்கி என்கிறார்.

உள்ளூர் பூர்வகுடிப் பழங்குடிகளைக் கொன்ற டாடாவிடமே பணம் வாங்கி, கொல்லப்பட்ட பெண்கள் நன்றாக வாழ்கிறார்கள் என்று படம் எடுக்கும் லீனா மணிமேகலையும் இவர்களை இணையப் பொறுக்கிகள் என்கிறார். மார்க்ஸ் உள்ளிட்ட கம்யூனிஸ்டுகளை ஆண் குறியோடு ஒப்பிட்டு பரபரப்புக் கவிதை எழுதிய அதே லீனா, ராஜனை செக்ஸியிஸ்ட் என்கிறார். ‘மதுரை பொண்ணு’ புகழ் சாருவும், ஜெயமோகனும், தினமலரும், பார்ப்பன ஊடகங்களும் இவர்களோடு இணைகிறார்கள்.

இதில் நுட்பமான இன்னொரு விஷயம் என்னவென்றால் லீனாவோ, ஷோபா சக்தியோ மக்களின் பிரச்சனைகள் குறித்து எப்போதும் பேசியதில்லை. மக்கள் பிரச்சனைகளை வைத்து நிதி வாங்கி ஆவணப்படம் எடுத்திருக்கிறார்கள். ஷோபாசக்தி என்னும் அந்தோணி தன் வாழ்நாளில் மொத்த எழுத்தையும் இலங்கை அரசுக்காக மட்டுமே செலவிட்டவர். அதற்காக தன்னை தலித்தாகக் காட்டி விற்றவர். இவர்கள் பெண் ஒடுக்குமுறை விவாகரம் ஒன்றை கையில் எடுக்கிறார்கள் என்றாலே அது தமிழர்கள் தொடர்பான ஏதோ அரசியலை காலி பண்ணத்தான். ஏனென்றால் இவர்கள் தலித் முரண்பாட்டை வைத்து ஈழப் போராட்டத்தை காயடிக்க முயன்ற வரலாற்றை நாம் பக்கம் பக்கமாக எழுதியிருக்கிறோம். அந்த வகையில்தான் இவர்கள் இப்போது சின்மயி HIGH யங்காருக்காக களமிறங்கியிருக்கிறார்கள். ‘பார்ப்பனப் பெண்ணே என்றாலும்’ என்றுதான் விவாதத்தைத் துவங்குகிறார்கள். பார்ப்பனப் பெண்ணே என்றாலும் வயலில் இறங்கி களை பிடுங்குவதில்லை; தலையில் கீரைக்கட்டை சுமப்பதில்லை; கருவாட்டுக் கூடையை சுமப்பதில்லை. சமூக அந்தஸ்தில் இவர்களும் அவாளும் எப்போதும் ஒன்றும் அல்ல. அப்படியிருக்க அதென்ன ... ‘பார்ப்பனப் பெண்ணே யென்றாலும்....'

சின்மயிக்கு ஆபாசத் தொல்லை கொடுத்ததாகச் சொன்ன ராஜனும், சரவணகுமாரும் இப்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். பொதுவெளியில் பெண்கள் குறித்து அநாகரிகமாக உரையாடியதற்கான தண்டனையை அவர்கள் சிறையில் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சின்மயி மீது தொடுத்த ஆபாசத் தாக்குதலுக்கான துல்லியமான ஆதாரம் இதுதான் என்பதை லீனா மணிமேகலையோ, ஷோபாசக்தியோ கொடுத்தால் நன்றாக இருக்கும். அவர்களால் கொடுக்க முடியாது. அவர்களால் மட்டுமல்ல சின்மயியால் கூட கொடுக்க முடியாது. இது போன்ற பல மொக்கை வழக்குகளை கொஞ்சம் நேர்த்தியோடு எதிர்கொண்டால் ஒரு வருடம் கூட தாங்காது.

மீனவனைக் கொல்வது சரியென்றும், இடஒதுக்கீட்டிற்கு எதிராகவும், தலித்துக்கள், முஸ்லீம்களுக்கு எதிராகவும் கருத்து சொன்ன சின்மயிக்கு என்ன தண்டனை? குறைந்த பட்சம் அவர் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோருவாரா? சின்மயி கொடுத்த மனு மீது உடனடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, ‘வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சின்மயி மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்’ என்று கோரி அம்பேத்கர் பாசறை சார்பில் வழக்கறிஞர் ரஜினிகாந்த் கொடுத்த மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்குமா? இல்லை, சூத்திரர்களுக்கு ஒரு நீதி, பார்ப்பனர்களுக்கு ஒரு நீதி என்பதுதான் இங்கேயும் நிலைநிறுத்தப்படுமா?

- டி.அருள் எழிலன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It