பதியம் போட்டுப் புதிப்பிக்க
வேண்டிய உறவுகள் நேரமின்றி
செல்போன் டவர்களின் வாயிலாக
ஹலோ சொல்லி முறிந்து கொள்கிறது.

புத்தனுக்காக  போதிமரங்கள்
காத்திருந்த வேளையில்
சாலை விரிவாக்கத்திற்காக
வெட்டப்படுகிறது

நகரெல்லாம் தாகம் தணிக்க
வந்த ஆற்றின் மீது
நரகலுடன்
சாக்கடை கலக்கப்படுகிறது.

விதைகள் பிரசவிக்கப் பொறுத்திருந்த
நேரத்திலே பறந்து
வந்தன பிளாஸ்டிக் பைகள்
தூக்குக் கயிறுகள் வடிவிலே

மெட்டல் சாலை போடும் வரை
காத்திருந்து தோண்டப்பட்டன
சாலைகள்
மூடப்படும் தேதியில்லாமல்

கனவிலும் மின்சாரம் வரக்கூடாதென்று
இரவெல்லாம் மின்வெட்டு
வருங்கால எடிசன்களை
டார்ச் கொண்டு தேடுகிறார்கள்
Pin It