ஐக்கிய முற்போக்கு கூட்டணி -2ன் மத்திய அரசு பொறுப்பேற்றதிலிருந்து இன்றுவரை, கூட்டணி அரசாங்கம் மிகுந்த பரபரப்புக்கும், மோசடிகளுக்கும் பஞ்சமில்லாமல் போய்க் கொண்டிருப்பது ஒருபுறம் வேடிக்கையாக இருந்தாலும், மற்றொரு புறம் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதுடன், நாட்டின் நன்மதிப்பும் ஒருபுறம் குறைந்து கொண்டும் வருகிறது. துப்பறியும் நாவல்களில் வரும் கதாபாத்திரங்களைப்போல நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாய் ஊழல்களும் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.

நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசைக் காப்பாற்ற கோடிக்கணக்கான பணம் நாடாளுமன்றத்திலேயே கொட்டப்பட்டது, ராணுவ வீரர்களுக்கான குடியிருப்பு கட்டும் திட்டமான "ஆதர்ஷ் வீட்டுவசதி திட்டத்தில” ஊழல், காமென்வெல்த் போட்டிகள் நடத்தியதில் ரூ.700 கோடிக்கு நடைபெற்ற ஊழலில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுரேஷ்கல்மாடி கைது செய்யப்பட்டது, 2ஜி எனப்படும் இரண்டாம் அலைக்கற்றை ஒதுக்கீட்டை முறைகேடாக ஒதுக்கியதால் ரூ1.76 லட்சம் கோடிக்கு மோசடி எனக் கூறி திமுகவைச் சேர்ந்த அப்போதைய மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியுடன் பல மத்திய அரசின் உயர் அதிகாரிகள் வரையில் கைது செய்யப்பட்டது, ஐ.பி.எல் போட்டிகள் நடத்தியதில் பல்லாயிரக்கணக்கில் மோசடி என அதன் தலைவர் லலித் மோடி நீக்கம் செய்யப்பட்டு வேறு நாட்டிற்கு தப்போடியது என பல வரலாற்று சிறப்பு மிக்க மோசடிகளும், ஊழல்களும் ஐ.மு.கூட்டணியின் 2 அரசில் நடைபெற்றிருந்தாலும், தற்போது நிலக்கரி மற்றும் கனிம சுரங்கங்கள் ஒதுக்கியதில் ரூ.10லட்சத்து 67 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்ற தணிக்கைக் குழுவின் புகாரும், தேசத்தின் அச்சறுத்தலை சவாலோடு எதிர்கொள்ளும் இந்திய ராணுவத்தில் முறைகேடுகள் நடைபெற இருந்ததாக எழுந்துள்ள சர்சைகளும் தேசத்திற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், தேசப் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளது.

2006-2009 காலகட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங் நிலக்கரித் துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலத்தில் ரூ.51 லட்சம் கோடி மதிப்புடைய 90க்கும் அதிகமான நிலக்கரி சுரங்கங்களை 150க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கியுள்ளனர். 2008 ஆம் ஆண்டின் இறுதி வாக்கில் நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடுவது தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் 2ஜி அலைக்கற்றை போன்றே அவசர, அவசரமாக இந்த ஒதுக்கீடும் நடைபெற்றுள்ளன. இந்த ஒதுக்கீட்டையும் பெற்ற பல நிறுவனங்கள் 2ஜியைப்போல பணிகளை குறிப்பிட்ட காலம் வரையில் துவக்காமல் இருந்துள்ளன. மேலும் ஒப்பந்தம் பெற்ற பலர் அதிக விலை வைத்து வெவ்வேறு நிறுவனங்களுக்கு விற்பனை செய்துள்ளனர். இதில் தான் மத்திய அரசுக்கு ரூ.10 லட்சத்து 67 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தணிக்கை குழு அறிக்கை தெரிவித்துள்ளது. அதே நேரம் மத்திய சுரங்கத்துறை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் சுரங்க ஒதுக்கீட்டில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்றும், வெளிப்படையான முறையில் விளம்பரங்களின் மூலம் சம்பந்தப்பட்டவர்களோடு கலந்தாலோசித்த பிறகே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி அரசைக் காப்பாற்ற முன்வந்துள்ளார். ஆனால் இது குறித்தும் பெரும்பாலான அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ள நிலையில் முறையாக சிபிஐ விசாரனை நடத்தினால் 2ஜியைப் போல பல மடங்கு பெரிய பூதம் வெளிவர வாய்ப்புள்ளது.

இதேபோல் தற்போது இந்திய குடிமகன்கள் அனைவரையும் கேவலப்படுத்தும் விதமாக ரகசியம் காக்கப்பட வேண்டிய ராணுவம் சம்பந்தப்பட்ட விசயங்கள் குழாயடி சண்டையைப் போல தெருத் தெருவாக நாற்றமடிக்கத் துவங்கியுள்ளன. அதேநேரம் அம்புலிமாமா கதையைப்போல முடிவே இல்லாமல் ராணுவ விவகாரம் காட்சிக்கு காட்சி சஸ்பென்ஸ் நிறைந்த அதிரடி திரைபடத்தைப் போல சென்று கொண்டிருக்கின்றது. ஆம் இந்திய ரானுவத் தளபதி விஜய்குமார்சிங் 31.05.2012 தன்னுடைய பதவிக் காலம் முடியவுள்ள நிலையில் தன்னுடைய பிறந்த தேதி 1950ம் ஆண்டுக்கு பதில் 10.5.1951 எனக் கூறி தன்னுடைய ஓய்வை 2013ம் ஆண்டிற்கும் மாற்றும் படி பிரதமருக்கு கடிதம் எழுத சர்ச்சை துவங்கியது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தையும் நாடி பின்னர் வழக்கை திரும்ப பெற்றுக் கொண்டார்.

மேலும் அவர் ராணுவத்துக்கு 'டாட்ரா' என்ற வாகனங்கள் 600 வாங்குவதற்காக தனக்கு ரூ.14 கோடியை அதிகாரி ஒருவர் லஞ்சமாக தர முன்வந்தார் என்றும் கூறியுள்ளார். இதை ராணுவ மந்திரி அந்தோணியிடம் தெரிவித்து விட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் டேங்குகளுக்குத் தேவையான வெடிபொருட்கள் இல்லை என்றும், எதிர்ப்பு பீரங்கிகளில் 97 சதவீதம் காலாவதி ஆகிவிட்டது என்றும், தரைப்படைக்கு தேவையான நவீன ஆயுதங்கள் எதுவும் இல்லை என்றும் கூறி எழுதிய கடிதம் அப்படியே ஊடகங்களில் வெளியாகியுள்ளது. இதேபோல் துணை தளபதி தர்பீர்சிங் சுகாக் என்பவர் நாகாலாந்து '3 கன்பஸ்' படைப்பிரிவின் கமாண்டன்டாக இருந்தபோது உத்தரகாண்ட்- நைனிடால் சிறப்பு எல்லைப்படை தளமான 'சக்ரா'விற்கு தளவாடங்கள் வாங்கியதில் முறைகேடு செய்துள்ளதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அம்பிகா பானர்ஜி என்பவர் பிரதமரிடம் புகார் அளித்துள்ளார். இதுபோக ராணுவ தளபதி கூறியுள்ள புகாரைத் தொடர்ந்து அந்த விவகாரத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் குமாரசாமி ராணுவ ஒப்பந்தத்திற்காக தனது தந்தை பிரதமராக இருந்தபோது ஏராளமான கோடிகளை லஞ்சமாக தன்னிடம் கொடுக்க முன்வந்ததாகக் கூறியுள்ளார்.

அதேநேரம் ராணுவ தளபதி தன்னை சம்பந்தமில்லாமல் முறைகேட்டில் தொடர்பு படுத்துவதாகக் கூறி ரானுவ தளபதி உள்ளிட்ட பலர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். நடைபெற்ற சம்பவங்கள் குறித்தும் சிபிஐ தீவிர விசாரனையில் ஈடுபட்டுள்ளது. இப்படியாக ரகசியம் காக்கப்படவேண்டிய நாட்டின் பாதுகாப்பு தொடர்புடைய முப்படைகளில் ஒன்றான ராணுவம் குறித்து புகார்கள் நாடே அதிரும் வகையில் நாற்றமடிக்கத் துவங்கியுள்ளது. இதன்மூலம் பல ஆண்டுகளாக ராணுவத்தில் முறைகேடு நடைபெற வாய்ப்பிருக்கிறது என்பதும் தெரியவருகிறது. ஒருவேளை தளபதி வி.கே.சிங் தான் விரும்பியபடி தனக்கு பதவி நீட்டிப்பு அளிக்கப்பட்டிருந்தால் இது போன்றதொரு செயல்களில் ஈடுபட்டிருப்பாரா என்ற கேள்வியும் எழுகிறது. அப்படி அவர் இது போன்றதொரு முறைகேடுகளை கோடிட்டு காட்டியிருக்காவிட்டால் முறைகேடுகள் முடிவே இல்லாமல் தொடர்ந்திருக்குமல்லவா?. இதே போல் ராணுவத்திற்கான ஆட்கள் தேர்வும், அதிகாரிகள் தேர்வும் முறையாக நடைபெற்றிருக்குமா என்ற ஐயமும் எழுகிறது. அப்படியே முறைகேடாக பலரும் தேர்வு செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் அவர்களைக் கொண்டு எப்படி நேர்மையான, தகுதியுடைய படைப்பிரிவை நம்மால் நடத்திட முடியும்?

தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா போன்ற பல மாநிலங்களில் நடைபெறும் ராணுவத் தேர்வில் பலரும் தேர்வு செய்யப்படாத நிலையில் அவர்களில் பலர் சில பயிற்சி நிறுவனங்களின் உதவியுடன் வடமாநிலங்களில் நடைபெறும் தேர்வுகளில் கலந்து கொண்டு எந்தவித சிரமமின்றி தேர்வாகி உயர் பதவிகள் வகித்து வருகின்றனர். இப்படி தேர்வு செய்யப்பட்டவர்களால் எப்படி நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்க முடியும்? ஆகவே சிபிஐ தளபதி புகார்கள் குறித்து விசாரணை நடத்தும் போது ராணுவ தேர்வு முறை உள்ளிட்ட அனைத்து விசயங்கள் குறித்தும் முழுமையாக விசாரிக்க வேண்டும். அப்போது தான் கடந்த பல ஆண்டுகளாக ராணுவத்தில் நடைபெற்ற சம்பவங்களின் உண்மை தெரியவரும். அரசியல்வாதிகள் செய்த ஊழல்களை விட ராணுவத்தில் அதிகாரிகள் செய்த ஊழல்களும், முறைகேடுகளும் முடிவே இல்லாமல் போகுமளவிற்கு உள்ளன.

இப்படி ஊழல்களும், முறைகேடுகளும் ஒருபுறம் என்றால், மற்றொரு புறம் நாட்டில் நடைபெற்ற பலதரப்பட்ட நிகழ்வுகளிலும் எந்தவொரு திடமான முடிவையும் எடுக்க முடியாத முதுகெலும்பற்ற அரசாகவே மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இந்தியப் பெருங் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை படையினர் ஈவு இரக்கமற்ற முறையில் சுட்டு மீன்பிடி தொழிலில் ஈடுபடவிடாமல் செய்துவருவதைத் தடுத்திட தேவையான நடவடிக்கைகளில் சிறு அளவில் கூட ஈடுபடுமுடியாதது, தெலுங்கானா தனி மாநிலம் கோரி பல ஆண்டுகளாக தெலுங்கான மக்கள் போராடி பலரது உயிர்களையும், பொருளாதாரத்தையும் இழந்தும் உள்ள நிலையில் அதிலும் திடமான முடிவை எடுக்கமுடியாமலேயே தவித்து வருவது, ஊழலுக்கு எதிரான வலுவான லோக்பால், லோக்ஆயுக்தா போன்றவற்றிலும் சரியான முடிவெடுக்காதது, அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைக்க எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காதது, பெட்ரோல், டீசல் போன்ற பொருட்களின் விலையை ஏற்றிக்கொண்டே வருவது, கூட்டணி கட்சியினரை கட்டுப்பாடு இல்லாமல் செயல்படவைத்தது என எதிலும் ஒரு முறையான அரசாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2ன் அரசு செயல்படவில்லை. இந்த அரசின் ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் அலசிப்பார்த்தால் இவர்கள் யாரைத் தான் பாதுகாப்பதற்காக இந்த அரசை நடத்தி வருகிறார்கள் என்று கடைக்கோடி குடிமகனும் கேள்வி கேட்கத் துவங்கிடுவான் என்ற நிலை விரைவில் வரும். மொத்தத்தில் கேப்டன் இல்லாத கப்பலாக கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தாலும் பரவாயில்லை, இன்ஜினே இல்லாதே கப்பலாகத்தானே தத்தளித்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசு.

- மு.ஆனந்தகுமார்  (பத்திரிகையாளர்-எழுத்தாளர்)

டாப் 10 ஊழல்கள்:

  1) 2ஜி அலைக்கற்றை     -1,76 லட்சம் கோடி.

 2) காமென்வெல்த் போட்டி ஊழல் - 70,000 கோடி.

 3) தெல்கியின் போலி பத்திர ஊழல்     -20,000 கோடி.

 4) சத்யம் கம்ப்யூட்டர்ஸ்   -14,000 கோடி.

 5) போபர்ஸ் ஊழல்       - 16 மில்லியன் டாலர்.

 6) பீகார் கால்நடை தீவன ஊழல்       - 900 கோடி.

 7) ஹவாலா மோசடி      - 18 மில்லியன் டாலர்.

 8) ஐ.பி.எல் மோசடி      - பல ஆயிரம் கோடி.

 9) ஹர்ஷத்மோத்தா பங்கு சந்தை மோசடி - 4000 கோடி

 10) கேத்தன் பரேக் பங்கு சந்தை மோசடி - 1000 கோடி.

Pin It