முல்லைப் பெரியார் அணை கட்டிய பென்னிகுயிக் ஆங்கிலேயராயினும் தமிழர்களின் போற்றுதலுக்குரியவர்; காரணம் அவர் கட்டிய அணை. அயர்லாந்தினரான இராபர்ட் கால்டுவெல் தமிழர்களால் போற்றத்தகுந்தவர்; காரணம் அவர் எழுதிய “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்”. இத்தாலியிலிருந்து வருகை தந்த கான்ஸ்தாந்தி பெசுகி தமிழ் கற்று தேம்பாவணி உள்ளிட்ட பல நூல்களைப் படைத்தார்; வீரமா முனிவர் என்னும் பெயரால் அறியப்பட்டார்; காரணம் அவரின் தமிழ்த் தொண்டு. ஆங்கிலேயரான போப்பையர் நாலடியார், திருக்குறள் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து மேலையுலகில் தமிழைப் பரப்பினார்; தம் கல்லறையில், “இங்கே ஒரு தமிழ் மாணவர் உறங்குகிறார்” என்று பொறிக்கச் சொன்னார்; அவரும் போற்றுதலுக்குரியவர். காரணம் அவரின் தமிழ்ப் பற்று. ஆனால் தமிழினத்துக்காக தம் வாழ்வை ஈகம் செய்த பார்ப்பனரல்லாத கன்னடரான‌ பெரியாரையும் அவரது திராவிடக் கொள்கையையும் முழுமையாக ஒருசேரத் தூக்கி எறிய வேண்டும் என்று வழக்கறிஞர் பா.குப்பன் எழுதுவார். அதனைத் தென்மொழி வெளியிட்டு அகமகிழும். ஆனால் அதன் நிறுவனர் பெருஞ்சித்திரனாரோ “முற்றும் மூடநம்பிக்கைகளாலேயே நிரப்பப் பெற்றிருந்த கடந்த மூவாயிரமாண்டுக் காலத் தமிழினத்தின் அறிவுக்கண்களைத் திறந்து விட்ட பெருமைக்குரியவர் பெரியார்” என்று போற்றிய‌வர்.

periyar_403“சாக்ரடீசு, புத்தர், திருவள்ளுவர், ஏசு, நபி, காந்தி போலும் காலத்தின் எல்லையாக அமர்ந்துவிட்டவர் பெரியார். ஆனால் அவர்கள் செய்த அருஞ்செயல்களைவிட ஒருபடி மேலாகவே செய்தார் பெரியார். அவர்கள் அனைவரும் நன்மைகளையே செய்தார்கள், பரப்பினார்கள்; பேசினார்கள்! ஆனால் பெரியார் தீமைகளையே எதிர்த்துப் போரிட்டார். விதைகளைத் தூவுகிறவர்களை விட, மண்டிக்கிடக்கும் களைகளை அகற்றுபவனுக்கும், முட்களை வெட்டியெறிபனுக்கும், கற்களைப் பொறுக்கி அப்புறப்படுத்துபவனுக்கும்தான் வேலைகள் மிகுதி; முயற்சிகள் மிகுதி; உடலுழைப்பு ஏராளம்.” என்று போற்றியவர் வேறுயாருமல்லர் தென்மொழி இதழாசிரியர் மா.குன்றனின் தந்தையார் பெருஞ்சித்திரனாரே.

அந்தப் பெருஞ்சித்திரனாரின் தென்மொழி இதழ், திராவிடம் குறித்தும் பெரியார் குறித்தும் அண்மைக்காலமாக வெளியிட்டு வரும் திறனாய்வுகள் பிராமணீயத்தின் முதுகரிப்புச் சொரிவுகளாகத்தான் தெரிகிறது.

‘தமிழ்’ என்னும் சொல்லின் பலுக்கல் திரிபாக ‘திராவிட’ என்ற சொல் வடமொழியாளர்களால் பயன்படுத்தப்பட்டது என்று வரலாற்றுப் பதிவுகளின் வழித் தெரிய வருகிறது என்றும், திராவிடம் என்பது தமிழ் என்பதன் திரிபாக இருந்திருக்கலாம்; மொழிக் குடும்பத்திற்காக அறிஞர் கால்டுவெல் அப்பெயரைச் சூட்டியிருக்கலாம்; ஆனால் அது ஓர் இனத்தையோ, ஒரு மொழிசார்ந்த மக்களையோ ஒருபோதும் குறிக்காது என்றும் தென்மொழி ஆசிரியவுரை தீட்டப்பட்டுள்ளது.

அதாவது ‘திராவிடம் ஒரு பலுக்கல் திரிபு’ - அது இனத்தையோ மொழிசார்ந்த மக்களையோ குறிக்காது. அவ்வாறெனில் அந்தத் ‘திராவிடம்’ என்னும் ஒரு சொல்லைக் கண்டு தமிழ்த் தேசிய வீரர்கள் இந்த அளவுக்கு அஞ்சவேண்டிய தேவை என்ன? அதற்காக ஏன் இத்தனை சொல்லாடல்கள்? கருத்து மோதல்கள்?

“காஞ்சி சங்கராச்சாரி தமிழை ‘நீஷ பாஷை’ என்றபோது கடுமையாக எதிர்த்த நாம் தமிழ் காட்டுவிலங்காண்டி மொழி என்ற பெரியாரை எதிர்க்காததற்குக் காரணம் என்ன? முன்னவர் கன்னட பார்ப்பனர்; பின்னவர் பார்ப்பனர் அல்லாத கன்னடர். இருவரும் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்துக்கும் அயலாரே! அப்படியிருக்க, பார்ப்பனக் கன்னடரை எதிர்த்த நாம் பார்ப்பனர் அல்லாத கன்னடரை எதிர்க்காததற்குக் காரணம் என்ன?” என்று வேறு யாருமே விடை சொல்ல முடியாத ஒரு வினாவை வழக்கறிஞர் பா.குப்பன் வினவி அதற்கு விடையையும் கூறுகிறார். “அதற்குக் காரணம் திராவிடம் என்ற கருத்தியல் தான்” என்கிறார்.

உலகில் உள்ள அனைத்துத் தேசியங்களும் மொழிவழித் தேசியங்களேயாகும். உலகில் மரபினவழித் தேசியமோ, மதயினவழித் தேசியமோ, நிலவியல் அடிப்படையிலான தேசியமோ இல்லை என்றும் கட்டுரையின் தொடக்கத்தில் கூறியுள்ளார் (தென்மொழி, மீனம் திங்களிதழ்- 2043).

சங்கராச்சாரி கன்னட பார்ப்பனர், பெரியார் பார்ப்பனர் அல்லாத கன்னடர். இவற்றுள் கன்னடர் என்பது என்ன? அது மொழிவழித் தேசியம். அவ்வாறெனில் பார்ப்பனர் என்பது எதன்வழித் தேசியம்? விளக்குவாரா வழக்கறிஞர்? உலகில் மொழிவழித் தேசியம் மட்டுமே உண்டு எனும்போது ‘பார்ப்பனர்’ என்பது எத்தேசியத்தில் அடங்கும்?

ஆங்கிலேயர் வங்காளத்தை இரண்டாகப் பிரிக்க, அது கிழக்கு வங்காளம், மேற்கு வங்காளம் என ஆனபோது இரண்டிலும் வங்காள மொழிதான் மக்கள் மொழியாய் இருந்தது - இன்றும் இருக்கின்றது. ஆனால் மொழிவழித் தேசியம் பிளவுற்று மதவழித் தேசியமாய் மாறி மேற்கு பாகிஸ்தானோடு இணங்கியிருந்து, பின் பிணங்கி, பிளவுற்றுத் தனி நாடாக இன்று இருக்கிறதே எவ்வாறு? மதவழித் தேசியமாகப் பாகிஸ்தானோடும் ஒட்டியிருக்கவில்லை. மொழிவழித் தேசியமாய் வங்காளத்தோடும் சேர்ந்திருக்க வாய்க்கவில்லை.

மதயினவழித் தேசியம், மொழிவழித் தேசியம், நிலவியல் அடிப்படையிலான தேசியம் என்பவற்றைத் தாண்டி மரபின வழித் தேசியமும் உண்டு என்பது கண்கூடு.

“மனிதகுலம் மானிட இயல் அறிஞர்களால் பகுக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு பகுக்கப்பட்ட இனங்கள் மரபினங்கள் அல்லது குருதியினங்கள் என அழைக்கப்படுகின்றன” என்கிறார் தமிழ்த் தேசிய முன்னெடுப்பாளர்களுள் ஒருவரான பழ.நெடுமாறன் அவர்கள். (பார்க்க: மனிதகுலமும் தமிழ்த் தேசியமும் - பக்கம் :6)

மட்டுமன்றி, மரபினம் (Race) என்பது உயிரியலை அடைப்படையாகக் கொண்டதாகும். ஆனால் தேசிய இனம் என்பது சமூகம், சமுதாயம் பற்றிய அறிவியலைச் சேர்ந்ததாகும். திராவிடர் என்பது மரபினத்தைக் குறிக்கும். ஆனால் தமிழர், கேரளர், கன்னடர், தெலுங்கர் என்பது மொழி அடிப்படையில் இனங்களைச் சுட்டும் சொற்களாகும். மரபின அடிப்படையில் இந்த நான்கு இனங்களையும் பொதுப்படையாகக் குறிக்கும் சொல்லே திராவிடர் என்பதாகும். எனவே அது தேசிய இனத்தை குறிக்கும் சொல் அல்ல” - என்பதும் பழ.நெடுமாறன் அவர்களின் கூற்று. (மேலது - பக்கம் 48)

‘உலகில் மரபின வழித் தேசியமே இல்லை’ என்று கூறும் குப்பன் அவர்கள் பழ.நெடுமாறன் அவர்களின் கருத்துக்கு என்ன சொல்லப் போகிறார்?

திராவிடம் என்னும் சொல் தமிழின் பலுக்கல் திரிபாயிருந்தாலும் அவ்வியக்கம் பாடுபட்டது தமிழினத்துக்காகத்தான். ஆனால் தமிழினத்தையும் தமிழையும் எப்போதும் எதிர்க்கின்ற ‍ கடும்பகையாகக் கருதுகின்ற பிராமணீயத்தை ‘பார்ப்பனீயம்’ என்றும் பிராமணனைப் ‘பார்ப்பான்’ என்றும் தூய தமிழில் அழைத்து அகங்குளிர்கிறோம்.

மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களின் நோக்கில் பார்ப்பான் என்று பிராமணர்களைக் குறிப்பதும் தவறுதானே!

பெரியாரே ‘திராவிட நாடு திராவிடர்க்கே’ என்ற முழக்கத்தை விட்டொழித்துத் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்றுதான் கொள்கை முழக்கத்தை மாற்றினார் எனக் குறிப்பிடும் மா.குன்றன் அவர்கள் பெருஞ்சித்திரனாரின் மைந்தன். பெ.குன்றனாகத் தன்னைக் குறித்துக்கொள்ளாமல் மாணிக்கத்தின் மைந்தன் மா.குன்றனாகக் குறித்துக் கொள்வது ஏன்? மாற்றத்தில் மன மாறுபாடா?

தமிழ் என்று பெயர் தாங்கி தமிழுக்குப் பகையான செயல்களைச் செய்வதை விடவும் திராவிடம் என்று பெயர் தாங்கி தமிழுக்கு விருப்பமான செயல்களைச் செய்வது பிழைபாடானதாகுமா?

தென்மொழி, நளித்திங்கள் -2042 இதழின் ஆசிரியவுரையில் “கலைஞர் ஒரு சொல்லைப் பலுக்கி விட்டதாலேயே அந்தச் ‘செம்மொழி’ என்ற சொல் மீது கூட அம்மையார் அரசு வெறுப்பு காட்டியது. அரிய நூல்கள் தொகுக்கப்பட்டிருந்த செம்மொழி நூலக நூல்களையெல்லாம் வாரிச்சுருட்டி இயங்கமுடியாதபடி அறைகளுக்குள் முடக்கிப் போட்டது. கல்வியாளர்களிடையேயும் தமிழறிஞர்களிடையேயும் அரசின் மேல் வெறுப்பை ஏற்படுத்தியது” என்று மா.குன்றன் குறிப்பிட்டுள்ளார். கலைஞர் பலுக்கியதால் ‘செம்மொழி’ மீது அம்மையார் வெறுப்பு காட்டுவதற்கும், பெரியார் பலுக்கியதால் திராவிடத்தின் மீது தமிழ்த் தேசியர்கள் வெறுப்பு காட்டுவதற்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும்?

திராவிடர் கழகம் என்ற அமைப்பு உருவாகி அதன் சார்பில் வெளியான இதழ்கள் ‘குடி அரசு’, ‘விடுதலை’, ‘உண்மை’ ஆகியவை தனித்தமிழ்ப் பெயர் கொண்டுதான் மக்களிடையே அறிமுகமாயின; இன்று வரை தொடர்கின்றன. ஆனால் தமிழ்த் தேசியம் பேசிய - நாம் தமிழர் இயக்கம் நடத்திய- சி.பா.ஆதித்தனாரால் ‘தினத்தந்தி’ என்றும் ‘ராணி’ என்றும் அதும் ‘வாராந்தரீ’ என்றும் தான் எழுத்துவடிவில் அடையாளங் காணப்பட்டது - இன்றுவரை படுகிறது.

 ‘தமிழ்த் தேசியம்’ என்பதை யாரும் வெறுக்கவில்லை. அது உரியவாறு முன்னெடுக்கப்பட்டு மக்களிடம் கொண்டு சேர்க்கப்படும்போது திராவிடம் தானாகவே இடம் நகர்ந்து நின்றுவிடும். அதற்காக அணிதேர் புரவி ஆட்பெரும் படையோடு போர் நடத்தவேண்டிய கட்டாயம் எதுவும் வந்துவிடவில்லையே! பிராமணீயத்தின் சூழ்ச்சி வலைக்குள் தான் தமிழ்த் தேசியம் மெல்ல மெல்ல அடிஎடுத்து வைக்கிறதோ என்ற ஐயம் தற்போது எழுந்துள்ளது.

தமிழகத்தின் தென்னெல்லை குமரி. ஆனால் அதன் முன்னொட்டாக ‘கன்யா’ முளைத்தது எங்ஙனம்? அதனை அகற்ற தமிழ்த் தேசிய அறிஞர்கள் எடுத்த முயற்சிகள் எத்தனை? இந்த ஒரே ஒரு ஊரின் பெயரை மட்டும் குறிப்பதாகக் கொள்ள வேண்டாம்; இதுபோல் ஆயிரக்கணக்கான ஊர்களும் நகரங்களும் தமிழ்ப் பெயரை இழந்து சமற்கிருதமாக மாறியுள்ளனவே, அவற்றைக் களைவதற்குத் தமிழ்த் தேசியம் இந்நாள் வரை என்ன செய்துள்ளது?

கோயில்களில் தமிழ் பாடப்படுகிறதா? வணிக நிறுவனங்களில் வாழ்கிறதா தமிழ்? கடைகளில் - உருவாக்கப் பொருட்களில் தமிழ்ப் பெயர்கள் உள்ளனவா? தமிழ்நாட்டுப் பாடநூல்களில் பிறமொழி கலப்பிலா ஒரு பாடத்தையாவது தமிழ்த்தேசிய வீரர்கள் காட்ட இயலுமா?

தமிழனின் பெயர்களில் தமிழுண்டா? தமிழில் பெயர் வைக்கும் ஒரு போராட்ட நடைமுறையை உருவாக்கி, பத்தாயிரம் பேருக்குப் பெயர் சூட்டிய தொல்.திருமாவளவனின் அருஞ்செயல் ஒரே ஆண்டோடு முடிந்து போனதேன்? பிற இயக்கங்களாவது - தமிழ்த் தேசிய இயக்கங்களாவது அந்நடைமுறையைத் தொடர்ந்திருக்கலாமே, ஏன் தொடரவில்லை?

எதைச் செய்தால் தமிழ்த்தேசியம் வலுப்பெறுமோ அதனை விடுத்து, திராவிடத்தைத் திட்டி எழுதப்படும் வெற்றுவேட்டுக் கட்டுரைகளால் விளையப்போவது என்ன? களத்தில் இறங்குங்கள்; செயலில் காட்டுங்கள். வெறுமனே பேசுவதாலும் எழுதுவதாலும் தமிழ்த் தேசியம் தலையெடுத்துவிடாது. செயல் - செயற்பாடு – செயற்பாங்கு- அதுதான் தமிழை வாழவைக்கும்; தமிழ்த் தேசிய ஓர்மையை வலுப்படுத்தும்.

தமிழியம் மலரட்டும், வரவேற்போம். அந்தத் தமிழியத்துக்குத் தலைமை தாங்கப் போகிறவர் யார்? யாரை முன்னிறுத்தித் தமிழ்த் தேசியம் தற்போது உலா வருகிறது?

தமிழகத்தைச் சுற்றி முப்புறமும் கடல்தான். ஒன்றின் பெயராவது தமிழில் உண்டா? இல்லை! குமரிக்கடல் எங்கே வற்றிப்போனது? தமிழறிஞர்கள், தமிழ்த் தேசிய அடலேறுகள் என்றாவது சிந்தித்தது உண்டா?

திரைப்படங்கள், தொலைக்காட்சிகள், தாளிகைகள் என்ற அனைத்து ஊடகங்களிலும் தமிழைச் சீரழிக்கின்றார்களே, அதனைச் சீர்படுத்த தமிழ் ஆர்வலர்கள், தமிழ்ப்புலவர்கள், அறிஞர்கள், தேசிய ஓர்மையாளர்கள் யாவரும் சேர்ந்து செய்த போராட்டங்கள் எத்தனை?

மொழியைத் தமிங்கலமாகவும், தமிற்கிருதமாகவும் அழிய விட்டுக்கொண்டு - அதனைப் பார்த்துக்கொண்டு வாளாயிருக்கும் வாய்ச்சொல் வீரர்களால் தமிழ்த்தேசியம் வலுப்பெறாது.

அறிவியல் உலகில் அனைவரின் கையிலும் இருப்பது ‘மொபைல் ஃபோன்’ இதன் தமிழாக்கம் : ஒருவர் > அலைபேசி, இன்னொருவர் > கைப்பேசி, மற்றொருவர் > செல்பேசி, பிறிதொருவர் > கண்ணறைப் பேசி, எனப் பலவாறு ஒரு பொருளின் பெயராக்கத்தையே ஒன்றுபட்டு சிந்தித்து, ஒன்றைத் தேர்ந்து எடுத்து மக்களிடையே பரப்புதற்கு முனைவார் இல்லை. ஒவ்வொருவரும் அவரவர் அறிவியல்புக்கேற்ப ஒன்றை வைத்துக்கொண்டு, அதனை மற்றவரிடம் திணிக்கும் போக்குதான் தமிழ்த் தேசியத்தின் அரிச்சுவடியாக அறிய முடிகிறது.

ஈழ மண்ணில் இலக்கக்கணக்கில் இன்னுயிர்கள் சிதைக்கப்பட்டதற்கு தி.மு.க.தான் காரணம் என்று சொல்லும் தமிழ்த் தேசியவாதிகள், அந்த காலகட்டத்தில் செய்தது என்ன? முதலில் இதனைத் தெரிந்துகொண்ட பிறகே திராவிடத் தேசியத்துக்குச் செல்லலாம். திராவிட மாயையா ஈழப்படுகொலைக்குக் காரணம்? இது ‘மாயை’ என்ற புரிதல் ஈழப்படுகொலைக்குப் பிறகுதான் தமிழ்த் தேசியத்துக்கு தென்பட்டதா?

ஈழப்படுகொலை நடப்பதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பே தீக்குளித்து உயிர் நீத்த முத்துக்குமரன் என்ன சொல்லிப் போனான்? “என் உடலைக் காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும், விடாதீர்; என் பிணத்தை கைப்பற்றி, அதைப் புதைக்காமல் ஒரு துருப்புச்சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள்” என்று தமிழ்ச்சாதியை நோக்கித்தானே தன் இறுதிக் கூற்றை எழுத்துவடிவில் வெளியிட்டான். அதனைப் படித்த கல்லூரி மாணவர்கள் - இளைஞர்கள் தமிழகமெங்கும் திரண்டு எழமுயன்றபோது, தடுத்து அணைகட்டி உணர்வு நீரைத் தங்கள் பயிருக்கே பாய்ச்சிக் கொண்டவர்கள் யாவர்? முத்துக்குமார் உட‌லை துருப்புச் சீட்டாக‌ ப‌ய‌ன்ப‌டுத்தாம‌ல், அவச‌ர‌ அவ‌ச‌ர‌மாக‌ அட‌க்க‌ம் செய்ய‌ முய‌ற்சித்த‌வ‌ர்க‌ள் யார்?

தமிழகம் புரட்சிக் களமாக மாறும் சூழ்நிலையை, அன்று தடுக்காமல் இருந்திருந்தால் ஈழப்படுகொலை நடைபெற்றிருக்குமா என்பதைத் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் ஒரு கணம் சிந்திப்பார்களாக!

தமிழ்ச் சாதி அன்று, ஒன்று திரண்டு நடுவண் அரசு அலுவலகங்கள், தொடர்வண்டிகள் யாவையும் இயங்கவிடாமல் முற்றுகையிட்டிருந்தால், தமிழகம் போர்க் கோலம் பூண்டிருந்தால் ஈழப் படுகொலை நடந்தேறியிருக்காது. அரண்டு போயிருக்கும் சிங்கள இனவெறி அரசு. தமிழ்ச் சாதியாய் ஒன்றுபடமுடியாமல், வலவன் காளை வடக்கு நோக்கியும் இடவன் காளை மேற்கு நோக்கியும் இழுத்த மாட்டுவண்டி போல் தமிழ்த்தேசியம் அன்று தடுமாறியதன் விளைவு, இன்றுவரை நாம் வருந்திக்கொண்டிருக்கிறோம்.

தந்தை பெரியார் அவர்களின் திராவிட இயக்கம் அரசியல் இயக்கமல்ல. ஒப்போலை வாங்கிப் பதவி நாற்கலியில் அமரத்துடிக்கும் இயக்கமல்ல அது. பெரியார் அவர்கள் திராவிடத்தின் பெயரால் தமிழகத்தைச் சுரண்டிவிட்டாரா? அவர் சுரண்டிச் சேர்த்த சொத்துக்கள் எல்லாம் ஆந்திரத்திலும் கர்நாடகத்திலும் கேரளத்திலுமா உள்ளன?

1960 இல் இந்திய நாட்டுப் படத்தை எரிக்கும் போராட்டம் நடத்திய போதும் தமிழ்நாடு நீங்கலான இந்தியப் படத்தைத்தான் எரித்தார் என்பது தானே வரலாறு.

தமிழர்க்கும் தமிழ்நாட்டுக்கும் கேடு என்பதே இந்திய தேசியம் பேசும் பேராயக்கட்சி போன்ற தேசிய கட்சிகளால்தான். இவ்வுண்மையை திராவிடர் கழகம் அது இயக்கமாக கால்கொண்டபோதே உணர்ந்து போராடி வந்தது என்பதை மறந்துவிடக் கூடாது. கேரளத்தில் உலகத் தேசியம் பேசும் பொதுவுடைமைக் கட்சியும் பேராயக்கட்சியும் தான் மாறி மாறி ஆட்சிக்கு வந்து ஆற்று நீர் உரிமைக்கு அணை போடுகின்றன. கர்நாடகத்திலும் பேராயக்கட்சியோ, அகண்ட தேசியம் பேசும் பாரதீய சனதாவோ தான் ஆட்சிக்கு வருவதும் காவிரியை முடக்குவதும் தலையாய பணியாகக் கொண்டுள்ளன. ஆந்திரத்திலும் அந்நிலையேதான். ஏதாவது நல்லது நடந்ததென்றால் தெலுங்குதேசம் போன்ற மாநிலக் கட்சியால்தான் என்பதைக் கருத்தில் கொள்க.

இந்திய தேசியம் பேசும் பேராயக் கட்சியோ, அகண்ட பாரதம் பேசும் பாரதீய சனதாவோ, உலகத் தேசியம் பேசும் பொதுவுடைமைக் கட்சியோ பிராமணீயத்தின் வல்லாளுமைக்குள் தான் வளைய வருகின்றன. அவைதாம் தமிழரின் உரிமைகளை நசுக்கி வருகின்றன என்பதே அடிப்படை உண்மையாகும்.

முல்லைப் பெரியாற்று நீர் இல்லாமல் வாழத் தமிழர்கள் பழகிக் கொள்ள வேண்டும் என்று சு.சாமி சொல்வார்; தமிழ் ஈழம் உருவாகவே கூடாது என்று சோ.சாமி சொல்வார்; சேதுக் கால்வாய் திட்டமா அனைத்து சாமிகளும் அணிதிரளும், இது தமிழ்நாட்டில் தான் நிகழும். ஆனால் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள், தமிழறிஞர்கள், புலவர்பெருமக்கள் வாளாயிருந்து வம்பளந்து கொண்டிருப்பார்கள்.

தமிழினப் பகைவர்களான அவர்களை எதிர்ப்பதும் எதிர்த்துக் களமாடுவதும் திராவிட இயக்கங்கள்தாம். அவைதாம் அதனைக் கடமையாகக் கொண்டு களமாடும். ஆயினும் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று கதையளக்கும் தமிழ்த் தேசியம்.

திராவிடர் கழகமோ, பெரியார் திராவிடர் கழகமோ அரசியல் அமைப்பு அல்ல. தேர்தல் அரசியலுக்கும் ஆட்சியதிகாரத்துக்கும் அடிமைப்பட்ட இயக்கமல்ல என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். அதே வேளையில், அரசியல் இயக்கமாக இயங்கிக் கொண்டிருக்கும் கட்சிகளின் செயற்பாடுகளை - தலைவர்களின் நிறை குறைகளை ஆராயுங்கள்; பிழை எனில் சுட்டிக்காட்டுங்கள். ஆனால் தந்தை பெரியாரையோ அவர் கண்ட கழகத்தையோ பிராமணத் தளத்தில் நின்று கொண்டு திறனாய்வு செய்வதை விட்டுவிடுங்கள். தமிழ்நாடு இந்த அளவாவது முன்னேறியிருக்கிறதென்றால் அதற்கு முதன்மைக் காரணியம் திராவிட இயக்கங்களின் பங்களிப்புதான். இதனை மறப்பது நன்றி கொன்றதற்கு ஒப்பானது.

 ‘திராவிடம்’ என்னும் ஒரு சொல்லால் அதுவும் ‘தமிழம்’ என்பதன் பலுக்கல் திரிபால் தமிழகத்தைக் கேடுகள் சூழ்ந்து விட்டதாக எழுதித் திரிப்பது பிராமணச் சூழ்ச்சியின் வேலை என்றே கருதவேண்டியுள்ளது.

"தமிழர்களுக்கு உணர்வுண்டு; அறிவுண்டு; திறனுண்டு. சரியான வழிகாட்டு தலைவர் இல்லாமல்தான் அவர்கள் திண்டாடுகிறார்கள். திராவிட இயக்கத்துள்ளும் சிறு சிறு இயக்கங்களுக்குள்ளும் தங்களை நுழைத்துக்கொண்டு வெளிவர முடியாமல் தவிக்கின்றனர்" என்று கூறுகின்ற மா.குன்றன் அவர்களே, அந்த வழிகாட்டு தலைவராக உங்களை நீங்களே முன்னிறுத்திக் கொண்டு களமாட வாருங்கள். யார் தடுப்பார் உங்களை! உங்களுக்கு அந்தத் தகுதி இல்லையா? வாருங்கள்! தமிழ்த் தேசியத்தை முன்னெடுங்கள்! உங்கள் முன்னெடுப்பில் திராவிடம் தானாக மறைந்துவிடும்.

பெரியாரின் கொள்கை வழிப் பேரன், பகுத்தறிவு பால் குடித்து வளர்ந்தவன் என்றெல்லாம் மேடைகளில் முழங்கி வந்த செந்தமிழர் ஒருவர் - பேராயக் கட்சியை எதிர்ப்பதற்காக மும்பையில் சிவசேனா மேடையிலும் பாரதீய சனதா மேடையிலும் ஏறத் தயங்காதவர், பண்பாட்டு நெறிபிறழா தூயவர் “ஈழப்போரை நடத்திய இந்திய நடுவண் பேராயக் கட்சி அரசுக்கு தோளோடு தோள் கொடுத்துக் கொண்டிருந்து தமிழ்நாட்டிலிருந்து சென்ற நாற்பது திராவிடக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்தானே? ” என்று வினா எழுப்பியுள்ளார். ஈழப்போர் நிகழ்ந்த போது இவர் என்ன செய்தார்? தமிழக மக்களை ஓரணியில் திரட்டி அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாற்பதின்மரையும் நகரவிடாமல் முற்றுகைப் போராட்டம் நடத்தினாரா? நடுவண் அரசு அலுவலகங்கள் எதுவும் இயங்கவிடாமல் தடுத்தாரா? தொடர் வண்டிகளை ஓடவிடாமல் மறியல் செய்தாரா?

ஈழப் போர் உச்சத்தில் இருந்தபோது, இலங்கைக்கு ஆயுதங்கள் ஏந்திச் சென்ற இராணுவ லாரியை கோவையில் மறித்து, அடித்தது பெரியார் திராவிடர் கழகமும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் தானே! அப்போது நீங்கள் என்ன செய்தீர்கள்? உங்களின் போராட்ட வடிவு என்ன? உண்ணா நிலை, மனிதச்சங்கிலி, ஆர்ப்பாட்டம் போன்ற ஊசிப்போன வடிவுகள் தானே! எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்யாமல் விட்டு விட்டு இப்போது புலம்புவதால் விளையப் போவது என்ன?

தமிழ்த் தேசிய உணர்வு நீர்த்துப் போக வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் இல்லை. ஆனால் ‘திராவிடம்’ என்ற கருத்தியலால் மட்டுமே தமிழகம் உருக் குலைந்து போய்விட்டது என்பது போன்ற ஒரு மாய்மாலம் காட்டும் பணியில் ஈடுபட வேண்டாம் என்றே விழைகிறோம்.

முதலில் மொழி மீட்புக்கு வழி காணுங்கள். நாளிதழ்கள், கிழமை, திங்களிதழ்கள், சின்னத்திரை போன்ற ஊடகங்கள் தமிழைக் கெடுக்கின்றனவா வளர்க்கின்றனவா என்று ஆய்வு நடத்தி கெடுப்பவற்றைத் திருத்த முனையுங்கள்.

கடந்த ஆட்சியின் போது தைத்திங்கள் முதல்நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போதைய ஆட்சி தமிழ்ப் புத்தாண்டை சித்திரைக்கு மாற்றியதே; அதனைக் கண்டித்துத் தமிழ்த் தேசிய வீரர்கள் நடத்திய போராட்டம் என்ன? எத்தனைப் பேர் வெஞ்சிறையில் வாடுகின்றனர்? எண்ணிப் பாருங்கள்!

 தமிழ்ப் புத்தாண்டு ‘தை’ முதல் நாள் என்ற போதும் தமிழ்த் தேசியம் வாளாயிருந்தது. சித்திரை முதல் நாள் என்ற போதும் சீறிப் பாயாமல் ஏன் - சிணுங்கல் கூட இல்லாமல் கிடந்தது. பிராமணியமோ வெற்றிக் களிப்பில் மிதக்கிறது.

 “பார்ப்பனப் பதடிகள் தமிழையும் தமிழகத்தையும் பாழ் செய்வதை மனமார உணர்ந்த ஒருவன் அவர்களைத் தமிழர்கள் என்று ஒரு போதும் ஒப்புக்கொள்ளவே மாட்டான். பார்ப்பனர்கள் தமிழர்கள் என்றால் அவர்கள் திராவிட இனத்தவராகவே வேண்டும். அப்படி அவர்களைத் திராவிடர்கள்தாம் என்றால் ஆரியர் என்பவர் யார் என்று வரையறுக்க வேண்டும். ஆரியரே இந்நாட்டுக்கு வரவில்லை என்றால் பார்ப்பனர், நிறத்தாலும் மொழியாலும் பழக்க வழக்கத்தாலும் குலத்தாலும் வேறுபடுவது ஏன் என்று விளக்க வேண்டும்” என்று பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் கூறியுள்ளதைக் குன்றனும் குப்பனும் மறக்கலாமா? (ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்: பக்கம் 15)

ஈராயிரம் ஆண்டுக் காலமாகத் தமிழினம் பிராமணியத்திடம் அடிமைப்பட்டு வந்துள்ளது. குன்றன் கூறுவது போல் 70 ஆண்டுக்குள்ளோ, சீமான் கூறுவது போல் நாற்பது ஆண்டுக்குள்ளோ அந்த இழிவிலிருந்து முற்றாக வெளியேறிவிட முடியாது. 70 ஆண்டுத் திராவிடம் வேண்டாம் - நாற்பது ஆண்டு திராவிட ஆட்சி வேண்டாம். சரி, தமிழராட்சியை நிறுவுவதற்கான கொள்கைத் திட்டம் என்ன? யார் தலைமையில் தமிழராட்சியை நிறுவ முனைகிறீர்கள். அதற்கான அரசியல் அமைப்பின் பெயர் என்ன?

இதுதான் அதன் பெயர் - இன்னவாறுதான் அதன் செயல்திட்டம் -இவை தாம் கொள்கைகள் - இன்னின்னார்தாம் கட்சி ஆள்வினையாளர்கள் - இவர் தான் தலைவர் என்று மா.குன்றனோ, பா.குப்பனோ, குணாவோ, நெடுமாறனோ, மணியரசனோ, அருகோவோ, சீமானோ, பா.ம.க தலைவர் மருத்துவர் இராமதாசோ, இறைக்குருவனாரோ உடனே அறிவிப்பீர்களா? உடன்பட்டுத் தெரிவிப்பார்களா?

 செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க

 செய்யாமை யானும் கெடும் - என்னும் குறள் மொழி இவர்களுக்கு சாலவே பொருந்தும்.

மொழி பற்றிய பெரியாரின் கருத்துகளைக் குப்பன் அவர்கள் குற்றச்சாட்டாகக் கூறுவதிலிருந்தே இவரின் 34 ஆண்டுகள் திராவிட இயக்கப் பங்களிப்பின் வெற்றியைப் புரிந்து கொள்ள முடிகிறது.

பெரியார் தாம் கூறும் எந்தக் கருத்தையும் எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று விழைந்தவர் அல்லர். அவரவர் அறிவைக் கொண்டு ஆராய்ந்து ஏற்பனவற்றை ஏற்கவும் தள்ளக்கூடியவற்றைத் தள்ளவும் கூறியவர் அவர்.

தமிழ் மொழியைப் பற்றி அவர் கூறியனயாவும் ஏக்கப் பெருமூச்சின் வெளிப்பாடாகத்தான் காண முடிகிறது. உலகில் சிறந்த மொழியான தமிழில் “வான நூல் இல்லை, நில நூல் இல்லை, காற்று நூல் இல்லை, உடல் நூல் இல்லை, ஊர்திகள் நூல் இல்லை, இயந்திர நூல் இல்லை, கல்வி முறைக்கான நூல் இல்லை, பிள்ளைப் பேற்றுக்கு நூல் இல்லை, பிள்ளை வளர்ப்பு நூல் இல்லை, உணவுக்கு நூல் இல்லை” என்று கூறும் பெரியார், “தமிழ் படித்தால் சமயவாதியாகத்தான் ஆக முடிகிறதேயொழிய அறிவுவாதியாக ஆக முடிவதே இல்லை” என்றும் அறுதியிடுகிறார். மறைமலையடிகள் போன்ற மொழியறிஞர்கள் பலரும் இக்கூற்றுக்கு நெறிவிலக்கானவர்களா என்பதை குப்பன் தான் கூற வேண்டும். அறிவியல் அறிஞர்களாக உலக அளவில் உயர்ந்துள்ள தமிழ்நாட்டார் எத்தனைப் பேர்? எத்தனை நோபல் பரிசு பெற்றுள்ளனர்? கூறுவாரா குப்பன்.

“தமிழ் புனிதத்தன்மை உடையது; சிவன் பேசியது; தேவாரம் திருவாசகங்களைக் கொண்ட மொழி என்பதற்காக நான் காக்கப் போராடவில்லை. இருக்கின்ற மொழியில் இந்தத் தமிழ்மொழிதான் சிறந்ததாக இருக்கின்றது என்பதற்காகவே” என்பவரும் பெரியார் தான்.

“தமிழில் ஆரியம் புகுந்ததால்தான் மக்களிடையே காட்டுமிராண்டித்தனம் புகுந்துவிட்டது. இதில் பண்டிதர்கள் கவனம் செலுத்தவேண்டாமா? கவலை எடுத்துக் கொள்ள வேண்டாமா? வெளிநாட்டு மக்களெல்லாம் கட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கப்பலோட்டிக் கடல் கடந்து வாணிகம் நடத்திய தமிழர்களின் மரபில் இன்று ஒரு நியூட்டன் தோன்றவில்லை; ஒரு எடிசன் தோன்றவில்லை; ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லையே என்பதை அறிந்து கொள்ள வேண்டாமா?” என்றவரும் பெரியார் தான்.

"நான் தமிழுக்குத் தொண்டு செய்வது தமிழுக்காக என்று அல்ல. தாய்மொழியைப் பாதுகாத்தல் ஒவ்வொருவருடைய கடனாகும். நம் தமிழ் மொழி தாய்மொழி என்ற மட்டிலும் அல்லாமல் எல்லா வளப்பங்களும் கொண்ட சிறந்த மொழி. இந்தியாவிலேயே பழமை வாய்ந்த பண்பட்ட மொழியாகும். அப்படிப் பெருமைக்குரிய மொழிக்கு ஏற்படும் ஆபத்துகளை எதிர்த்தும் அது மேன்மை அடைய வேண்டும் என்றும் அதற்காகப் போராட்டங்கள் நடத்துகின்றோம்” என்று கூறியவரும் பெரியார் தான்.

“முதலாவதாகத் தமிழ் முன்னேற்றமடைந்து உலக மொழி வரிசையில் அதுவும் ஒரு மொழியாக இருக்க வேண்டுமானால் தமிழையும் மதத்தையும் பிரித்து விட வேண்டும். தமிழுக்கும் கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தையும் கொஞ்சமாவது தள்ளி வைக்க வேண்டும்.” - இதுவும் பெரியார் புகன்றதே.

“தமிழில் (Creative Literature) ஆக்க இலக்கியங்கள் தோன்றவில்லை என்பது மட்டுமல்ல.; ஆக்க இலக்கியங்கள் அனேகமாக இல்லவே இல்லை. காரணம் புலவர்களுக்குப் பகுத்தறிவு பெறும் வாய்ப்பும், பகுத்தறிவு பெற்றவர்களுக்கு வயிற்றுப் பிழைப்பு காரணமாகத் துணிவு இல்லாமல் போகும்படியான நிலைமையும் இருப்பதால் - தமிழில் ஆக்க இலக்கியங்கள் தோன்றுவதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது” - என்றதும் பெரியார் தான்.

“நமது மேன்மைக்கு, நமது தகுதிக்கு, நமது முற்போக்குக்கு ஏற்ற மொழி தமிழை விட மேலான ஒரு மொழி இந்நாட்டிலில்லை என்பதற்காகவே தமிழை விரும்புகிறேனே தவிர, அது அற்புத, அதிசயங்களை விளைவிக்கக் கூடியது என்பதற்காக அல்ல. அற்புத சக்திகள் நிறைந்த மொழி என்று பிடிவாதம் செய்வது அறியாமைதான். அது தமிழ்ப் பண்புகூட அல்ல. தமிழில் அதிசயம், மந்திரம், சக்தி முதலிய சொற்களே இல்லை” - என்று விளக்கியவரும் பெரியார் தான்.

“தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று சொல்லக் காரணம் இன்றைக்கும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு எந்த மூடப் பழக்க வழக்கங்களில் இருந்து வந்தோமோ, அதில் தானே இன்றும் இருந்து இருந்து கொண்டிருக்கிறோம். அந்த பழக்க வழக்கங்களிலிருந்து நம்மை இன்னும் நாம் மாற்றிக்கொள்ளாமல் 2000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளவற்றையே உதாரணமாகக் காட்டிக் கொண்டு கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றி வந்தால் அதற்கு என்ன பொருள்? - என்று வினவி காட்டுமிராண்டி மொழி என்று சொன்னதற்கு விளக்கம் கூறியவரும் பெரியார் தான்.

ஆக, பெரியார் தமிழ் பற்றிப் புகன்றவை தமிழைத் தாழ்த்தும் நோக்கிலோ, தமிழ் தமது தாய்மொழி அல்ல என்ற நோக்கிலோ அல்ல. தமிழ் இன்னும் உயரவில்லையே என்ற மனப் பொருமலின் விளைவே. அந்த ஆற்றாமையால்தான் "சமற்கிருதத்தினால் தமிழர்களும் தமிழ்நாடும் இன்று என்ன நிலைமைக்குத் தாழ்ந்து தொல்லையும் மடமையும் இழிவும் அனுபவிக்கிறோம் என்பதை சிந்திக்க வேண்டும்” என்று வேண்டுகோள் வைக்கிறார் என்பதை குப்பன் உள்ளிட்ட தமிழ்த்தேசிய பேராளர்கள் எண்ணிட வேண்டும்.

தொல்காப்பியம் நிலைத்திணைகளுக்கு உயிருண்டு என்று கூறும்; அதன் காலம் ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகள். மூவாயிரம் ஆண்டுகளாக தொல்காப்பியம் கற்ற ஒரு தமிழன் கூட அதனை ஆய்வு செய்து மெய்ப்பித்து அறிவியலுக்கான ‘நோபல் பரிசைப்’ பெறவில்லை.

 ‘வலவன் ஏவா வானவூர்தி’ எனப் புறநானூற்றில் ஒரு தொடர் வருகிறது. ஏறத்தாழ ஈராயிரத்தைந்நூறு ஆண்டுகள் அதனைப் படித்த தமிழன் எவனும் ஆய்ந்து வானூர்திகளை கண்டுபிடிக்க முடியவில்லை.

உலகம் - உலவுவது - சுற்றுவது; சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் என்றெல்லாம் உலகச் சுழற்சி பற்றிய கருத்துகள் வள்ளுவத்தில் இருந்தும் உலகம் தட்டையானது என்னும் புராணப் புளுகுக்குள் மூச்சுத் திணறிக் கிடந்ததால் தான் கலிலியோ, கோபர் நிக்கசு போன்ற வானியல் அறிஞர்கள் தமிழகத்தில் தோன்றவில்லை.

இவை சான்றுக்காக ஒரு சிலவே. இன்னும் ஏராளம் உண்டு. விரிவஞ்சி விடுகிறேன்.

பெரியாரின் மனப் பொருமல் தான் அவரின் மொழி பற்றிய கருத்துகள். தமிழைத் தம் தாய் மொழியாகக் கொண்டவர் அவர்.

“பெரியாரின் மொழித்துறை ஈடுபாட்டுக்கும் தமிழ் மொழி பற்றி அவர் கொண்ட தெளிவுக்கும் அவர் சிறந்த தமிழ்ப்பேரறிஞர்கள் பால் கொண்ட தொடர்புதான் காரணமாக இருந்தது” - என்று பாவலேறு அவர்களின் கூற்று எவ்வளவு நேரியது என்பது புரிகிறது.

பிராமணியம் இல்லாத ‘தமிழ்த் தேசியம்’ ஒன்றே திராவிடத்துக்கு மாற்றாக இருக்கும். ஆனால் அண்மைக்காலமாகப் பாட்டாளி மக்கள் கட்சி, “திராவிட மாயை” என்று கருத்தரங்கு நடத்துவதெல்லாம் பிராமணியத்தின் பின்புலத்தின் அடிப்படையில் அமைகிறதோ என்ற ஐயம் நடுநிலையாளர் பலருக்கும் எழுந்துள்ளது. தேர்தலில் தோல்வி கண்டால் ஒருநிலையும் வெற்றி பெற்றால் ஒரு நிலையும் எடுக்கும் இது போன்ற அரசியல் கட்சிகளின் தமிழ்த் தேசியமோ தமிழையும் தமிழர்களையும் காக்கும் என்று நம்ப முடியாது.

தமிழும் திராவிடமும் தொடர்வண்டிப் பாதையின் தண்டவாளங்கள். ஒன்றை விட்டு ஒன்றைப் போற்றுவதோ தூற்றுவதோ தமிழ்த் தேசிய முன்னெடுப்புக்குப் பின்னெடுப்பாகவேதான் முடியும்.

“தமிழ் மொழியின் சிறப்புப் பெயர் தமிழ் (தமிழம்), திராவிடம் என்னும் இரு வடிவில் காணப்படுகின்றது. இவ்விரண்டும் வெவ்வேறு சொற்போல் தோன்றிடினும் உண்மையில் ஒரே சொல்லின் இருவேறு வடிவங்களாகும். இவற்றுள் முன்னையது தமிழ் என்பதே” என்ற மொழிஞாயிறு பாவாணர் கூற்று (தமிழ் வரலாறு: பக்கம் 30) தமிழ்த் தேசியர்கள் உளங்கொள வேண்டியது ஆகும்.

மரபினத் தேசியமாகத் திராவிடத்தையும் மொழியினத் தேசியமாகத் தமிழ்த் தேசியத்தையும் கொள்வோம். தமிழர் நலம் ஒன்றே திராவிடத்தின் - தமிழ்த் தேசியத்தின் குறிக்கோள் என்றே உளத்தில் கொண்டு பணியாற்றுவோம். தமிழ் ஈழம் மலர்வதற்குச் செயலில் இறங்குவோம்.

“பெரியார் என்னும் மூல வித்தின் விளைவை, அதனின்று தோன்றிய கோடிக்கணக்கான வித்துகளின் பரப்பை யாரும் ஓரிடத்திலிருந்து கொண்டு, ஒரு காலத்திலிருந்து கொண்டு எடையிட்டு விட முடியாது” -பாவலரேறு பெருஞ்சித்திரனார்.

- பண்ணையூரான்

Pin It