நாம் தமிழர் கட்சி ஆவணம் அக்கட்சியின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும், வரலாற்று சம்பவங்களாக பல திரிபுகளையும் தாங்கி வெளிவந்திருக்கிறது. இந்திய அரசியலமைப்புக்கு உட்பட்ட ஓட்டுக்கட்சி அரசியலால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் எதிரான தமிழ்த்தேசிய முழக்கத்தை கையிலெடுத்திருக்கும் 'செந்தமிழன்' சீமான் அதற்கான வழிமுறைகளையும், திட்டங்களையும் முன்வைக்காமல், எதிர்ப்பு அரசியலிலும், தமிழினம் போற்றும் தலைவர்களை குறை சொல்வதிலும் அதீத கவனம் கொண்டு ஆவணத்தை வெளியிட்டிருக்கிறார். 

ஒடுக்கப்பட்டோர் நலன், தமிழின நலன், சமூகநீதி என தன் பாதைகளை வகுத்துப் போராடி வந்திருக்கும் திராவிட இயக்கத்தை தமிழர் விரோதியாக சித்தரிப்பது என்பது கடினமான காரியம் மட்டுமல்ல, முடியாத காரியமும் கூட! ஆனால் அதற்காக பயங்கரமாக மெனக்கெட்டு, அதிஅற்பத்தனமான பொய்களைச் சொல்லி, வரலாற்றைத் திரித்து செவ்வனே முயன்றிருக்கிறது ஆவணம்.

பெரியாரியவாதிகள், அரசியல் ஆதரவற்ற சீமானுக்கு அமைத்துக்கொடுத்த மேடைகளில், "நான் பெரியாரின் பேரன், பெரியாரின் பேரன்" என தொண்டை புடைக்க முழங்கி இன்று பெரியாரை தமிழின விரோதியாக சித்தரித்திருக்கும் போக்கு ஓரிரவில் நடந்ததல்ல! சில மாதங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சி இணையதளத்தில் இருந்து திடீரென பெரியாரின் படம் காணாமல் போனதில் ஆரம்பித்து படிப்படியாக நாம் தமிழர் கட்சி தனது இந்த வெளிப்படையான ஆரிய ஆதரவுப் போக்கை வடிவமைத்திருக்கிறது! சரி செய்ததையாவது சரியாகச் செய்தார்களா, வெளிப்படையான எதிரியாக உருமாறி தைரியத்துடன் எதிர்த்து நின்றார்களா என்றால் அதுவும் இல்லை! நாம் தமிழர் கட்சி ஆவணம்  ஏகப்பட்ட நகைச்சுவைகளையும், தவறான வரலாற்று உதாரணங்களையும், பக்கத்துக்கு பக்கம் மாறுபட்ட கொள்கைகளையும் தாங்கி முரண்களின் மூட்டையாக நம் முன் விரிகிறது.

ஆவணம் முழுவதும் பார்ப்பனர், ஆரியர் என்ற சொற்களுக்கு பதிலாக 'மனு நெறியாளர்' என்ற சொல் வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் பார்ப்பனர் என்றால் உயர்ந்தவன், சீரிய நெறியாளன் என பொருள் என்று 117ம் பக்கத்தில் அர்த்தம் கொடுத்திருக்கிறார்கள்.

"பார்ப்பானை ஐயர் என்ற காலமும் போச்சே -
வெள்ளைப் பரங்கியைத் துரை என்ற காலமும் போச்சே" என்று பாடியிருக்கிறார் பாரதியார் (பக்கம் 44ல் போற்றுதற்குரிய பெருமக்கள் வரிசையில் பாரதியாரையும் சேர்த்திருக்கிறார்கள்). நடப்பு வழக்கில் 'பார்ப்பனர்' என்ற சொல்லாடலுக்கு 'உயர்ந்தவன், சீரியவன்' என்ற அர்த்தம் இருந்திருந்தால் மேற்கண்டவாறு பாடியிருப்பாரா பாரதியார்? பார்ப்பனர் என்பதற்கான நடைமுறை அர்த்தத்தை மறைத்துவிட்டு, ஒருகாலத்தில் பார்ப்பனர்களே பார்ப்பனர்களுக்கு வழங்கிக்கொண்ட செத்துவிட்ட பொருளைத் தோண்டி எடுத்து உயிர்கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? யாரை திருப்திப்படுத்த இந்த 'பொருள்' புதுப்பிப்பு!?

பார்ப்பனர்கள் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் தெலுங்கர்கள் தங்கள் ஆதிக்க நிலையை மீட்டெடுத்துக் கொள்வதற்காகவே இடஒதுக்கீடு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாகக் கூறி இடஒதுக்கீடு என்ற திராவிட இயக்கத்தின் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமை காக்கும் திட்டத்தின் மேல் போகிற போக்கில் சேற்றை அள்ளி இறைக்கிறது ஆவணம். இடஒதுக்கீடு சட்டங்களில் எந்த இடத்தில் தெலுங்கர்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது என்றோ அருந்ததியினர் என்ற தெலுங்கு பேசும் ஆதிதிராவிடரின் நிலையையும் ஆதிக்கசாதி தெலுங்கர்களோடு சேர்த்தே மதிப்பிடுகிறதா என்பது குறித்தோ ஆவணத்தில் தெளிவான கருத்துக்கள் இல்லை. தெலுங்கு பேசுவோர் எல்லாம் பார்ப்பனர் போன்ற உயர்ந்தநிலையில் இருந்தவர்களாகவும், தமிழ்பேசுவோர் எல்லாருமே கீழ்நிலையில் அடிமைப்பட்டுக்கிடந்ததாகவும் சொல்கிறது ஆவணம். ஆதிக்க சாதியினரான தெலுங்கு நாயக்கர்களும், ரெட்டிகளும், தமிழ் ஆதிக்கசாதியினரான செட்டியார்களும், முதலியார்களும் சம-நிலையில் வாழ்ந்தார்கள் என்பதுதான் வரலாறு!

மேலும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்புகள் அனைத்துமே முன்னேற வேண்டும் என்பதே இட ஒதுக்கீட்டின் நோக்கமாக இருந்தது என்பதையும், பிற்படுத்தப்பட்டவர்களை விட தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீட்டில் முன்னுரிமை இருப்பதையும் மறந்தோ அல்லது மறைத்தோ, ஏதோ தெலுங்கு பேசுவோருக்கு மட்டும் இடஒதுக்கீட்டை அள்ளிவழங்கியது போல பொய் பரப்புரை செய்கிறது ஆவணம். இடஒதுக்கீட்டை இன்றுவரை எதிர்க்கும் ஒரே வகுப்பினர் யார் என்பதும், இடஒதுக்கீட்டு திட்டத்தினால் பலமாக பாதிக்கப்பட்டது யாருடைய ஆளுமை என்பதும் அனைவருக்கும் தெரியும். மீண்டும் தமிழர்களை ஏவலாட்களாக, வர்ணாசிரம அடிமைகளாக மாற்ற திட்டம் தீட்டி, சமகால-பார்ப்பனர்களைத் திருப்திப்படுத்த இந்த ஆவணத்தின் மூலம் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறது நாம் தமிழர் கட்சி. 

சி.பா.ஆதித்தனார் அவர்களைப் போற்றுவது போல் தொடங்கி பின் அவர் திராவிடத்தை நம்பி ஏமாந்தவர் என பறைசாற்றுகிறது ஆவணம். திராவிட இயக்கத்தின் மறைந்த ஒரு முக்கியத் தலைவரை "நம்பி ஏமாந்தார்" "தமிழ்த் தேசியத்திற்கு பெருந்தீங்கு செய்தார்" என எந்த ஆதாரமும் இன்றி அவர் மனசாட்சி போல அடித்துச் சொல்வது எந்த வகையான பண்பு எனப் புரியவில்லை.

இருமொழிக்கொள்கைதான் தமிழைக் காப்பாற்றும் என திராவிட இயக்கங்கள் அறிவித்ததும் போராடியதும் துரோகமாம், ஆராய்ச்சி செய்திருக்கிறது  நாம் தமிழர் கட்சி. திராவிட இயக்கங்கள் இல்லாமல் இருந்திருந்தால், ஒருபேச்சுக்காக நாளை  'நாம் தமிழர் கட்சி' ஆட்சிக்கு வருவதாக வைத்துக்கொண்டால் கூட மத்திய அரசுடன் இந்தியில் தான் தொடர்பு கொள்ள வேண்டியிருந்திருக்கும்! செந்தமிழன் சீமான் கூட '30நாட்களில் இந்தி கற்பது எப்படி?' என்ற புத்தகத்தோடு தமிழை இந்தியில் வளர்த்திருப்பார்! ஆனால் உலகத் தொடர்புமொழி ஆங்கிலத்தை இந்தியாவில் தக்கவைத்து அதன்மூலம் இந்தியின் ஆதிக்கத்தில் இருந்து தமிழர்களைக் காத்தது திராவிட இயக்கம். இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழ்நாட்டு இளைஞர்கள் தகவல் தொடர்புத் துறை சார்ந்த வேலைவாய்ப்புகளில் மின்னுவதற்கு திராவிட இயக்கத்தின் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் பங்கு மகத்தானது என ஊடகங்கள் இன்றும் புகழாரம் சூட்டுவதை இங்கு குறிப்பிடுவது அவசியம்.

ஏதோ பலநூறு வருடங்களாக களத்தில் இருக்கும் இயக்கம் போல வரலாற்றையே மாற்றியமைத்த போராட்டங்களின் மேல் மிக சுலபமாகப் பழிபோடுகிறது ஆவணம்!  1900களின் ஆரம்பத்தில் எழுதப்பட்ட தமிழையும், இன்றைய தமிழையும் ஒப்பிட்டுப் பார்த்தால் திராவிட இயக்கம் எவ்வளவு சீரிய முறையில் சமஸ்கிருத கலப்பில் இருந்து தமிழ்மொழியைக் காப்பாற்றி இருக்கிறது எனப் புரியும்.

அடுக்கடுக்காக அடுத்தடுத்த பக்கங்களில் வெளிப்படும் எல்லாப் பொய்களுக்கும் சிகரம் வைத்தாற்போல ஈழத்தமிழர்களை கொன்றுகுவித்த சிங்களப் பேரினவாதத்தை 'திராவிடம்' எனச் சொல்கிறது ஆவணம்! பேரினவாத சிங்கள அரசுக்குக்குக் கூட  இவ்வளவு பெரிய பொய் சொல்ல, திரிபு செய்ய துணிவிருக்குமா எனத் தெரியவில்லை! தமிழர்கள் இலங்கைக்கு எதிராக குரல் கொடுக்கும்போதெல்லாம் "இலங்கைக்கும் இந்தியாவுக்கு வரலாற்று ரீதியான நட்பு உண்டு." என இந்திய அரசு பதில் சொல்வதை நாம் தமிழர் கட்சி வசதியாக மறந்துவிட்டது. ஆதிகாலத்தில் சிங்களர்கள் இந்தியாவில் இருந்து அங்கு குடியேறிய ஆரியர்கள் என்பதும் அவர்களுக்கும் திராவிட இனத்தைச் சேர்ந்த தமிழர்களுக்கும் எவ்வகையிலும் தொடர்பு கிடையாது என்பதும் வரலாற்றுத் தெளிவு முற்றிலும் இல்லாத நாம் தமிழர் கட்சிக்குத் தெரிய வாய்ப்பில்லை. நாளை வாய்ப்பு கிடைத்தால் இந்திய அரசியலை ஆட்டிப்படைக்கும் பார்ப்பனியத்துடன், ஈழத்தமிழர் படுகொலைக்கு துணை நின்ற ஆரிய-சிங்கள வரலாற்று நட்புடன் கைகுலுக்கி "பாவம். திராவிடர்கள் செய்ததற்கு நீங்கள் என்ன செய்வீர்கள். நாமெல்லாம் ஒரே இனம்" என நாம் தமிழர் கட்சியினர் சொன்னாலும் சொல்வார்கள்! சிங்களர்கள் திராவிடர்கள் என்றால் அங்கு அழிந்த தமிழர்கள் என்ன ஆரியர்களா? பொய் சொல்வதை பொருந்தச் சொல்லவேண்டாமா? 

சாதிப்பெயர்களை துறப்போம் என 'நடத்தை விதி' பகுதிகளில் பறைசாற்றும் ஆவணம், மறக்காமல் கட்சி வழிகாட்டிகள் பட்டியலில் இடம்பெற்றிருப்போர் அனைவருக்கும் சாதிப்பெயர்களை இட்டு மகிழ்ந்திருக்கிறது. தேவர், படையாட்சி என மறக்காமல் சாதிப்பெயர்களை குறிப்பிட்டிருக்கிறது. அதாவது உங்கள் சாதியிலும் ஒருவரை (அவர் வெறும் சாதித்தலைவரக இருப்பினும் கூட) எங்கள் வழிகாட்டியாக ஏற்றுள்ளோம் அதனால் தவறாமல் எங்களுக்கு வாக்களியுங்கள் என மறைமுக சாதி ஓட்டு கலாச்சாரத்தை தொக்கி நிற்கிறது அந்த பக்கங்கள்.

போற்றுதற்குரிய பெருமக்கள் பகுதியில் முத்துராமலிங்கம் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதே முத்துராமலிங்கத்தை கீற்று இணையதளப் பேட்டியில், "அவரைப் பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது. அதனால் தான் தம்பி படத்தில் அவர் புகைப்படத்தை இடம்பெறச் செய்தேன். பெரியாரின் மரணத்தின் போது இரங்கல் தெரிவிக்காத ஒரே கட்சி ஃபார்வர்ட் ப்ளாக் தான் என தோழர்கள் சொன்னார்கள். பின் அவர்மேல் கொண்ட நன்மதிப்பை மாற்றிக்கொண்டேன்" என சொன்ன சீமான் இப்போது மீண்டும் அவரை 'போற்றுதற்குரிய பெருமக்கள்' வரிசையில் சேர்த்திருப்பதன் மர்மம் என்ன? திராவிடக் கட்சிகளின் ஓட்டரசியலை எதிர்க்கும் நாம் தமிழர் கட்சி ஒரு தேர்தலைக் கூட சந்திக்காவிடுனும் ஓட்டுக்காக எவ்வளவு சமரசங்களை செய்துகொள்கிறது என்பதற்கு இது ஒன்றே உதாரணம்!

உண்மை இப்படியிருக்க, தமிழக அரசியல் இதழில் வெளிவந்த பேட்டியை தான் அளிக்கவேயில்லை என்று சீமான் மறுத்திருக்கிறார். ஆனால் தங்களிடம் ஆதாரம் உண்டு என்று தமிழக அரசியல் இதழ் கூறியபின் சீமானிடம் இருந்து மறுப்பேதும் இல்லை. இந்தப் பிரச்சினையை நாம் ஆராய வேண்டாம். ஆனால் தமிழக அரசியல் இதழில் சீமானின் பேட்டியாக வெளியான விஷயங்களும் ஆவணத்தில் உள்ள பெரியார் தூற்றல் விஷயங்களும் ஒன்றே. இந்நிலையில் சீமான் தன் பேட்டிக்கு எதிராக, "நாம் தமிழர் கட்சி பெரியாரை புகழ்பரப்புரை செய்து வருகிறது." என கூறி பேட்டியை மறுத்திருப்பது உண்மையென்றால் அவர் தன் கட்சியின் கொள்கை ஆவணத்தையே மறுக்கிறார் என்றே பொருள். நாம் தமிழர் கட்சி குழப்பநிலையில் உள்ளதா அல்லது கையும் களவுமாக பிடிபட்டபின் பிதற்றுகிறதா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.  

திராவிடத்தின் மேல் குற்றச்சாட்டுக்களை வைப்பதாகச் சொல்லி, மறைமுகமாக பெரியாரின் மேல் பல குற்றச்சாட்டுக்களை அடுக்கடுக்காக வைத்துக்கொண்டே போகிறது ஆவணம். தமிழகத்தைப் பொறுத்தவரை தந்தை பெரியார் என்பவர் தனியொரு மனிதரல்லர். அவர் ஒரு கோட்பாடு, கொள்கை, வாழ்வியல்.  பெரியாரைப் பிடிக்கவே பிடிக்காதெனினும், அவர் கொள்கைகள் எதிலுமே உங்களுக்கு உடன்பாடில்லையென்றாலும் உங்கள் பெயரின் பின்னால் நீங்கள் சாதிப்பெயர் எழுதுவதை உங்களுக்குத் தெரியாமலேயே தடுத்துவிட்டவர் பெரியார். பிற மாநிலங்களில் சாதிப்பெயர் பெருமையாகக் கருதப்படும் சூழ்நிலையில், தமிழகத்தில் அவமானகரமாகக் கருதப்படுவதற்கு காரணம் பெரியார். இப்படி தமிழக மக்களின் வாழ்வியலில் இரண்டறக் கலந்துவிட்ட பெரியாரை முன்வைக்காமல் தமிழகத்தில் அரசியல் நடத்தவோ, அரசியல்வாதியாக நடமாடவோ முடியாது.

தட்சிணப்பிரதேசம் என்ற பெயரில் ஆந்திரா, தமிழகம், கேரளம், கர்நாடகம் ஆகிவற்றை இணைத்து பெரிய மாநிலமாக நேரு அரசு உருவாக்கவிருந்தபோது தமிழர்களின் உரிமை மறுக்கப்படும் அதனால் தட்சிணப்பிரதேசத்தை அனுமதிக்கக் கூடாது என காமராசரை வலியுறுத்தி அதைத் தடுத்து நிறுத்தியவர் பெரியார். இதுபோல் பெரியாரைப் பற்றிய எண்ணற்ற வரலாற்று ஆவணங்கள் உண்டு. இச்சூழ்நிலையில் அவரைப் பற்றிய உண்மைகளைப் பேச நேர்ந்தால் திராவிடக் கட்சிகளுக்கும், நாம்தமிழர் கட்சிக்கும் வித்தியாசம் காட்ட முடியாமல் போகும் என்ற காரணத்தால் பெரியாரின் மேல் தமிழர் விரோதக் கதைகளை இட்டுக்கட்டி இகழத் துவங்கி, அதை தன் மாற்று அரசியல்பாதையாகத் தேர்ந்தெடுத்திருக்கிறது நாம் தமிழர் கட்சி.

இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டுமானால் பெரியாரின் திராவிட இயக்கத்தின் தாக்கத்தால் இந்துத்துவ கட்சிகள், கோட்பாடுகள் நுழையவே முடியாத தமிழகத்தில், 'தமிழர் நலன்' என்ற முகமூடியுடன் இந்துத்துவ, சாதிய கோட்பாடுகளை மறைமுகமாகத் தாங்கி நுழைந்திருக்கிறது நாம் தமிழர் கட்சி. அதற்கான முத்தாய்ப்பாகத்தான் நாம் இந்த ஆவணத்தைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

சமீபத்தில் நடந்த பிஜேபி மாநாட்டு சுவரொட்டிகளில் "தமிழ்த்தாய் தமிழ்த்தாய்" என முழங்கியிருந்தார்கள். பிஜேபி "தமிழ் தமிழ்" என முழங்குவற்கும் 'நாம் தமிழர் கட்சி'யின் தமிழ், தமிழர் நலன் குறித்த முழக்கங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை அவர்களின் கொள்கை ஆவணம் தெள்ளித்தெளிவாக பறைசாற்றுகிறது.

முடிவாக நாம் தமிழர் கட்சி, 'ஆவணம்' என்ற பேரில் ஏறி வந்த ஏணியை எட்டித்தள்ளி தன் ஆணவத்தை வெளியிட்டிருக்கிறது. தமிழர்களை பார்ப்பனியத்திடமிருந்து மட்டுமல்லாமல், முளைவிட்டிருக்கும் இந்த புதிய-பார்ப்பனியத்திடமிருந்தும் கவனத்துடன் காக்கவேண்டிய பொறுப்பு திராவிட இயக்கங்களுக்கு இருக்கிறது. 

Pin It