சாதிவாரி கணக்கெடுப்பு நீண்டநாள் கோரிக்கைக்குப் பிறகு, தற்போது நடைபெறத் தொடங்கி இருக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கிய நாளிலிருந்தே சாதி சங்கங்கள் ஒவ்வொன்றும் தங்கள் சாதியை எவ்வாறெல்லாம் மறுபெயரிட்டு அழைக்க வேண்டுமென்று பாடம் எடுக்கத் துவங்கியுள்ளன. தன் சாதியை எவ்வாறு அழைக்க வேண்டும் என்று தெரியாமலே இத்தனை ஆண்டுகள் ‘தமிழன்’ வாழ்ந்திருக்கானா என்று வியப்பாக இருக்கிறது.

சாதி ஒழிப்பும் சாதிவாரி கணக்கெடுப்பும்:‍

 சாதி என்பது தமிழ் வார்ததை அல்ல. ஆனால், தமிழர்கள் வாழ்க்கையில் ‘சாதியை’த் தவிர்த்து எதுவுமே இல்லை என்கிற அளவுக்கு “இந்துத்துவ” சூழல் நிலவுகிறது. இச்சூழலில் ‘சாதிவாரி கணக்கெடுப்பு' மிக அவசியமான ஒன்று. சாதி மறுப்பு மணத்தை மறுக்கும் பார்ப்பனீய புத்தி, பள்ளிகளிலும், வேலைவாயப்பு அலுவலகங்களிலும் சாதியை மறுப்பதையே தன்னுடைய போர்க்குணமாக காட்டிக்கொள்கிறது. சமூக எதார்த்தத்திலும் ஜனனம் முதல் மரணம் வரை ‘சாதி’ என்கிற நோய் தமிழனை விடாமல் துரத்திக் கொண்டே வருகிறது. சாதியால் ஈராயிரம் ஆண்டுகள் அடிமைப்பட்டுக் கிடந்த தமிழ்ச் சமூகம் உரிமைகளை மீட்பதற்காக, ‘சாதி’வாரி இட ஒதுக்கீடு கோரப்பட்டது. முஸ்லீம் லீக், அம்பேத்கரின் சட்டம், நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம் போன்ற அமைப்புகளால் போராடி பெறப்பட்டது தான் இட ஒதுக்கீடு.

 1906-ம் ஆண்டே இசுலாமியர்களுக்கு விகிதாச்சார இட ஒதுக்கீடு கோரப்பட்டது. ஆனால், இன்று வரை மக்கள் தொகைக்கேற்ப விகிதாச்சார இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை. அதற்கான முன்முயற்சிதான் சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பதை நாம் உணர வேண்டும். ஆனால் அதன் உள்நோக்கத்தையே கெடுக்கும் விதமாக ‘சாதி சங்கங்கள்’ அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.

சாதி வேறு, சாதிப் பட்டம் வேறு:

 சாதி என்பது வேறு, சாதிப் பட்டம் என்பது வேறு. உதாரணமாக கள்ளர், மறவர், அகமுடையோர் என்கிற மூன்று சாதிகளும் 'தேவர்’ என்று பட்டம் போட்டுக் கொள்கின்றன. மூன்று சாதிகளுக்குள் மண உறவு கிடையாது. உண்மைநிலை அப்படியிருக்க மூன்றையும் ஒரே சாதியாகச் சேர்த்து “தேவர்” என்று அழைக்குமாறு சாதி சங்கங்கள் கேட்டுக்கொண்டுள்ளன. கள்ளர் சமூகத்தில் பிரான்மலைக் கள்ளர், சிவகங்கை நாட்டார், தஞ்சாவூர் வாண்டையார் என்று பகுதிகளுக்கு ஏற்றாற்போல் பெயர்கள் வழங்கப்படுகின்றன. இவர்கள் ‘கள்ளர்' என்று பொதுவாக அழைக்கப்பட்டாலும் இவர்களுக்குள் மண உறவு சிடையாது.

 எனவே இவர்கள் தத்தம் அடையாளங்களை சரியாக பதிவு செய்ய வேண்டும். (மாவட்டம், ஊர் முதற்கொண்டு சரியாக பதிவு செய்ய வேண்டும்.) சரி, “தேவர்” என்று பொதுவாக அழைத்தால் என்ன? பிரிவினை சற்று குறைவது நல்ல விஷயம் தானே என்று சிலர் கேட்கலாம். சத்தியமாக இது பிரிவினையை உடைக்காது. அதிகரிக்கத்தான் செய்யும். மூன்று சாதிகளையும் (கள்ளர், மறவர், அகமுடையோர்) இணைத்து “தேவர்” என்று அழைத்தால், அகமுடையோர் சமூகமே அதிகம் பயன்பெறும். மூன்று சமூகத்தில் கல்வி, பொருளாதாரம் அளவில் முன்னேறிய சமூகம் அகமுடையோர் சமூகம். இவர்களை கள்ளர், மறவருடன் இணைப்பதன் மூலம் கள்ளர், மறவருக்குரிய இடஒதுக்கீடையும் சேர்த்தே அபகரித்துக்கொள்ளக் கூடிய அபாயம் நிகழும். அகமுடையோர் சாதி பிற்படுத்துப்பட்டோர் பட்டியலில் இருக்கிறது. கள்ளர், மறவர் இருவரும் சீர்மரபினர் பட்டியலில் வருகிறார்கள். (மிகவும் பிற்படுத்தப்பட்டோர்) மூன்றையும் சமூகத் தளத்தில் ஒரே அடுக்காக வைத்துப் பார்ப்பது சமூக அநீதி. சாதிச் சங்கங்கள், தன் சாதிப் பெருமையை காட்டிக் கொள்வதற்காகவும், வாக்கு அரசியலில் தன் கட்சிக்கு அதிக தொகுதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் “தந்திரமாக” அறிக்கைகளை விடுகின்றன. இதில் அந்த சாதி மக்களுக்கு ஒரு பயனும் இல்லை என்பதை உணர வேண்டும்.

சைவப்பிள்ளையும், இல்லத்துப் பிள்ளையும் ஒன்றா?

வெள்ளாளர் என்பது சாதி, பிள்ளை என்பது பட்டம். திருவாங்கூர் சமஸ்தானத்தில் கேரள நாயர்களுக்கு ‘பிள்ளை’ என்றொரு பட்டம் உண்டு. அந்தப் பட்டம் தான் தமிழக வெள்ளாளர்களுக்கும் ‘பிள்ளை’ என்ற பட்டம் கிடைக்க காரணமாயிற்று. சைவ வேளாளர், சோழிய வேளாளர், கொடிக்கார வேளாளர், வீரகுல வேளாளர் என்று பல பிரிவுகள் உள்ளன. இதில் ‘சைவப் பிள்ளை’ மட்டுமே முற்படுத்தப்பட்ட சமூகம். இதர சமூகங்கள் அனைத்தும் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள். ஆனால் எல்லா பிள்ளைமார்களையும் ‘வெள்ளாளர்’ என அழைக்கும்படி ‘சாதிச் சங்கங்கள்’ கேட்டுக் கொள்கின்றன. இதனால் ‘சைவப் பிள்ளை’ சமூகம் பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தில் இணைந்து பிற வெள்ளாள சமூகங்களின் உரிமைகளை அபகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனை உணர்ந்து கொள்ள வேண்டும்.

 தொண்டை மண்டல முதலியார், சைவ முதலியார், செங்குந்த முதலியார் போன்ற சாதிகள் முதலியார் பட்டம் போட்டுக் கொள்கின்றனர். 'செங்குந்தர்’ என்றால் கைத்தறி நெசவு செய்யும் உழைக்கும் வர்க்கத்தினர். நிலவுடமை சமூகமான தொண்டைமண்டல முதலியாருடன், “செங்குந்தர்” சமூகத்தையும் இணைத்து “முதலியார்” என்றே பொதுவாக பதிவு செய்ய வேண்டும் என்று ‘சாதி சங்கங்கள்” வலியுறுத்துகின்றன. “முதலி” என்கிற சாதிப்பட்டத்திற்கு ஆசைப்பட்டு, “செங்குந்தர்” சமூக தோழர்களே உங்களுடைய உரிமைகளை இழந்து விடாதீர்கள். ‘செங்குந்தர்” என்றே பதிவு செய்யுங்கள். இதைப் போன்று. நாட்டுக்கொட்டை செட்டியார்(B.C), சைவ செட்டியார்(F.C.), வாணிய செட்டியார்(MBC) என அழைக்கப்படும் மக்கள் அனைவரும் “செட்டியார்” என்று பொதுவாக பதிவு செய்யாதீர்கள்.

தாழ்த்தப்பட்டோர் விடுதலையும், சாதிவாரி கணக்கெடுப்பும்:

விடுதலைச் சிறுத்தைகளின் ஊடகப்பிரிவு செயலாளர் செந்தில் தனது முகநூலில் (Facebook) ‘தாழ்த்தப்பட்டோர் அனைவரும் தலித்துகள் என பதிவு செய்ய வேண்டும்’ என்று விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் கேட்டுக் கொண்டதாக செய்தி ஒன்றைப் பதிவு செய்திருந்தார். ‘இந்து’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில் திருமாவளவன் அவ்வாறு கேட்டுக்கொண்டதாக செய்தி வெளியாகியிருக்கிறது. தோழர் செந்திலிடம் பேசியபோது அந்த செய்தியை நான் உறுதி செய்து கொண்டேன். பள்ளர், பறையர், சக்கிலியர், மாதரி, பகடை என பல்வேறு சாதிகளாக இருக்கும் தாழ்த்தப்பட்ட தோழர்களை ‘தலித்’ என்ற ஒற்றை அடையாளத்துடன் பதிவு செய்யச் சொல்வது சரியான நடைமுறையாகாது.

தேவேந்திரகுல வேளாளர், ஆதிதிராவிடர், அருந்ததியர் என தனித் தனியே பதிவு செய்யும்போது தான் விகிதாச்சார அடிப்படையில் தனித்தனியே அவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்க வசதியாக இருக்கும். பள்ளர், பறையர் இருவரும் இணைந்து அருந்ததியர்களின் இட ஒதுக்கீட்டை பறித்துகொண்டனர் என்கிற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இந்த சூழலில் ‘தலித்’ என்று பொதுவாக பதிவு செய்தால் அருந்ததியர்கள் உட்பட தாழ்த்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை தெரிய வாய்ப்பில்லை. மீண்டும் உள்இட ஒதுக்கீடு பிரச்சனை எழுப்பப்படும். தாழ்த்தப்பட்டோர் ஒற்றுமை சீர்குலையும் ஆபத்து உள்ளது. எனவே விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் அவர்கள் தனது கருத்தை மறுபரிசீலனை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். சாதி ஒழிப்பு தான் உங்களுடைய நோக்கம் என்பதால் நான் உங்களுடன் உரிமையுடன் இந்த கோரிக்கையை முன்வைக்கிறேன்.

 சாதி வாரி கணக்கடுப்பில் உண்மை சாதியை பதிவு செய்வோம்.
 சாதி ஒழிப்பை உறுதி செய்வோம்
 சாதியை மறுத்து மணம் செய்வோம்
 சாதியற்ற சமூகத்தை உருவாக்குவோம்!

Pin It