இந்திய வரலாற்றைச் சமூகப் பொருளியல் பின்னணியில் பகுத்தறிந்து ஆய்வு செய்யும் முதன்மையானவர்களில் பேராசிரியர் எ.சுப்பராயலுவும் ஒருவர். தென்னிந்திய வரலாற்றை ரசனைப் பூர்வமான கலைக்கோட்பாடு, சமயப் பின்னணியில் கணிக் காமல் சமூகப் பின்னணியின் காரணியான பொருளி யலை அறிவதில் தலைப்பாடாக உழைக்கிறவர். வெவ்வேறு வரலாற்று அறிஞர் குழுக்களிடையே ஓர் இணைப்புப் பாலமாக இயங்கிவருகிறவர். எம்.ஜி.எஸ்.நாராயணன், கேசவன்வேலுதட், ராஜன் குருக்கள், அர.சம்பகலக்ஷ்மி போன்ற வரலாற்றுக் கோட்பாட்டாளர்களுக்கும், கே.வி.ரமேஷ், எம்.டி. சம்பத், கட்டி, இராகவ வாரியார், நடன.காசிநாதன் போன்ற கல்வெட்டு ஆய்வாளர்களுக்கும், வெ.வேதா சலம், சொ.சாந்தலிங்கம், ச.ராசகோபால், சு.ராச வேலு, வீ.செல்வகுமார், கா.இராஜன் போன்ற skilled researchers களுடனும், ர.பூங்குன்றன், பர்டன் ஸ்டெயின், நொபொரு கரஷிமா, ரொமிலா தாப்பர் போன்ற கருத்துநிலையினைக் கட்டமைக்கும் அறிஞர்களுடனும் இணைந்து பணியாற்றுகிறார்.

இந்தியாவிற்கு வெளியில் இருந்து தென்னிந்தியா பற்றி ஆயும் அறிஞர்களுக்கு ஆற்றுப்படுத்து நராகவும் இருந்து வருகிறார். தென்னிந்தியா பற்றி வரலாற்று நூல்களை ஒவ்வொன்றாக OUP நிறுவனம் வெளியிட்டு வருகையில் பேராசிரியர் YS அவர்களின் நூல் ஒன்றினையும் வெளியிட்டு அந்நிறுவனம் தன் தகுதியினை உயர்த்திக்கொள்ளவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கையில் இந்நூல் (South Indian Under Cholas) வெளிவந்துள்ளது. இந்நூல் இளம் ஆய்வாளர்களுக்குக் கூடுதலான புரிதலுக்கு வழிகாட்டும் ஒன்றாக அமைய வேண்டும் என்று தம் அவாவினைப் பேராசிரியர் வெளியிட்டுள்ளார்.

முதல் வணக்கம்

பேரா.தி.வை.மகாலிங்கம் தம்முள் காத்திரமான ஆய்வினைத் தொடங்கி வைத்தவர் என்றும், சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு பர்டன் ஸ்டெயின் வருகை, தம்மைப் போன்றவர்களுக்கு கல்வெட்டுகளை அறிவியல்பூர்வமாக ஆய்வதற்குத் தூண்டுதலைத் தந்தது என்றும் மனம் திறந்த மரியாதையினைப் பதித்திருக்கிறார். பேரா.கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி சோழர் வரலாற்றை எழுதிய பிதாமகன் என்றும் மிகப்பெரிய வரலாற்றாசிரியர் என்றும் மலர் தூவியுள்ளார்.

ஆய்வுமுறை

தென்னிந்திய வரலாற்றாய்வினை இருமுறைகளில் அறிஞர்கள் மேற்கொண்டு வருகின்றனர். குத்துமதிப்பு ஆய்வுமுறை (data of random sample) குவியல்முறை ஆய்வு (quantitative method). இவ்விரு முறைகளையும் பின்பற்றிச் சோழர் ஆட்சி பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தி.வை.சதா சிவ பண்டாரத்தார், மா.இராசமாணிக்கனார், எம்.எஸ்.கோவிந்தசுவாமி, வி.பாலாம்பாள், எஸ்.ஆர். பாலசுப்ரமணியம் போன்றோரின் ஆய்வுகளை முதல் வகைக்குள் வைக்கலாம். கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, நொபொரு கரஷிமா, எ.சுப்பராயலு, ப.சண்முகம், ஜேம்ஸ் ஹெய்ட்ஸ்மேன், லெஸ்லி. சி. ஓர், வல்லிபுரம் மஹேஸ்வரன் போன்றோரின் ஆய்வுகளை இரண்டாவது வகைக்குள் வைக்கலாம். பேரா.எ.சுப்பராயலு குவியல்முறை ஆய்வினைப் பின்பற்றி இந்நூலினைச் செய்துள்ளார். காட்டாக, எட்டாவது கட்டுரையினை எழுதுவதற்கு சுமார் நாலாயிரம் கல்வெட்டுகளைப் பயன்படுத்தியுள்ளார். ஒன்பதாவது கட்டுரைக்கு மூவாயிரத்து ஐந்நூறு கல்வெட்டுகளைப் பயன்படுத்தியுள்ளார்.

ஒரு epigraphist, epigrapher, historian என்ற நிலைகளில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்வெட்டுகளைப் படியெடுத்தல், படித்தறிதல், கூடிப்படித்தல், கலைச் சொற்களுக்குப் பொருள் கண்டுணர்தல், முன்னோர் வாசிப்பினை மீளவாசித்தல், கருத்துரு செய்தல், கட்டமைத்தல், வரலாற்றுக் கூறுகளை வரிசைப்படுத்தித் தெளிவாக்கல் என்பது இவரது நிலை. இதற்குச் சிறந்த காட்டு, பூலாங்குறிச்சி கல்வெட்டுகளின் மீதான கட்டுரை. கூட்டுமுயற்சி ஆய்வில் சங்கடம் பார்க்காமல் பிற அறிஞர்களுடன் கலந்துரையாடி கல்வெட்டுகளைப் படித்தறிவதில் ஆர்வம் காட்டி இன்றைய இளைஞர்களுக்கு முன்னேராய் இருந்து வருகிறார். சோழராட்சி தொடர்பான கட்டுரைகளில் வழக்கமான நான்கு நிலைக் கால கட்டங்களைப் பின்பற்றியுள்ளார். இது நல்ல புரிதலுக்கு வழிவகுப்பதாய் உள்ளது.

நூலின் பெரும்பாலான கட்டுரைகளின் மையத் தடம் சோழர் அரசு கூறுகளைக் கண்டறிவதிலேயே கவனம் கொள்கிறது. சோழர் அரசு, சோழர் அரசுக் கூறுகள் பற்றிய இரு கட்டுரைகள் இந்நூலின் முத்தாய்ப்பு.

பிறர் பயனுற வேண்டும்

குவியல்முறை ஆய்வினை முதன்மையாகக் கொண்டு எழுதப்பட்ட எட்டாம் ஒன்பதாம் கட்டுரைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட அத்தனை கல்வெட்டு எண்களையும் சான்றாதாரங்களாக பேராசிரியர் தந்துள்ளார். அக்கல்வெட்டுகளைக் கொண்டு வேறு வேறு கருப்பொருளில் ஆய்வோருக்கு இவை பெரிதும் பயன்படுவன. இத்துறையில் புதிதாக ஆய்வு செய்யும் ஒருவருக்கு இதனால் பெருமளவு சான்றுகளைத் தேடும் நேரம் மிச்ச மாகும். நிலவிலை ஆவணம்பற்றிய கல்வெட்டுகள் முதல் காலகட்டத்தில் அதிகமாகவும் அடுத்தடுத்த காலகட்டங்களில் குறைந்துபோவதனையும் இக் கட்டுரையின் அடிக்குறிப்புகளில் தரப்பட்டுள்ள கல்வெட்டுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் அறியலாம். எட்டாம் கட்டுரையில் தரப்பட்டுள்ள நஒயீடயயேவடிசல nடிவநள, கல்வெட்டுகளைப் பதம் பிரித்து ஆய்வதற்கும் கல்வெட்டுச் சொற்களை எப்படி விளக்குவது என்பதற்கும் ஆய்வாளர்களுக்கும் பயனுள்ளதாக அமைகிறது.

அறுபடாத தொடர்ச்சி

தென்னகச் சமூகம் ஓர் அறுபடாத தொடர்ச்சி யினைக் கொண்டுள்ளது என்பது கட்டுரைகளின் ஊடுபாவாகும். பூலாங்குறிச்சிக் கல்வெட்டுகளில் பேராசிரியரால் கண்டுணரப்பட்ட பிரம்மதேயக் கிழவர், காராண்மை, மீயாட்சி போன்ற சொற்கள் சமூகத்தின் உயர்நிலை மக்களையும், நிலவுடைமை யாளர்களையும் குறிக்கும் என்று அறியப்படுகிறது. இதனைச் சங்க இலக்கியச் சொற்களான கிழவன், கிழவோன், கிழமையோன், கிழத்தி, கிழமையர், கிழான், கிழவியர் போன்ற சொற்களுடன் ஒப்பிடலாம். இவ் வகைச் சொற்கள் சங்க இலக்கியக் கால கட்டத்துச் சமூகத்தினையும், அதன் தொடர்ச்சியான பூலாங் குறிச்சிக் காலகட்டத்துச் சமூகத்தினையும் விளக்கும். சங்க இலக்கியச் சொற்களான இழிசினன், இழி பிறப்பாளன், இழிபிறப்பினோன் போன்ற சொற்கள் அடிநிலை மக்களைக் குறிக்கிறது எனக் கொண்டால் இதன் தொடர்ச்சியினை ஈ / தா / கொடு என்ற தொல்காப்பியத்து வினைச் சொற்களால் அறியலாம். இங்குச் சொல்லப்பட்ட இரு வர்க்கக் கூட்டங் களுக்கு இடையிலான இடைத்தட்டு மக்களைப் பேராசிரியர் பூலாங்குறிச்சி கல்வெட்டுகளில் கண்டுணர்ந்த களக்கிழமை, பாண்டங்கர், விருமாச் சாரி, தருமி, உள்மனையாளர் போன்ற சொற் களால் அறியலாம். ஏவல் மரபு உடையவரையும் (தொல் : 970) அடியவர் மரபினையும் (தொல் : 969) தொல்காப்பியம் விளக்குகிறது. இந்த வகையில் பூலாங்குறிச்சி கல்வெட்டுகள் பற்றிய கட்டுரை தொல்காப்பியம் காட்டும் சமூகத்தினை அறியப் பெரிதும் உதவும்.

தென்னிந்திய மொழிகளில் போதிய புலமை யுள்ளபோதே தென்னிந்திய வரலாற்றினைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். இதற்கு நல்ல காட்டாக நூலின் நான்காம் கட்டுரை அமைகிறது. அக்கட்டுரையின் மங்கலம் என்ற சொல்லிற்கான பொருளினைச் சுற்றிச் சுற்றி வருகையில் இச்சொல்லிற்கு இரு திராவிட மொழிகளிலும் (தமிழ், தெலுங்கு) ஒத்த பொருள் தொழிற்படுவதன் அடிப்படையில் முடிவான கருத்து நிலைக்கு வரமுடியும் என்று பேராசிரியர் சுட்டிக் காட்டுகிறார். மூலபருடை என்ற தமிழ்க் கல்வெட்டுச் சொல்லினை விளங்கிக்கொள்ள மலையாள மொழியறிவு தேவை என்பதனைப் பிறிதொரு கட்டுரை வாயிலாக அறிய முடிகிறது. இம்முறையான ஆய்வு தென்னிந்திய மொழிகளின் புலமைத்துவம் தென்னிந்திய வரலாற்று ஆய்விற்குப் போதிய பலனளிக்கும் என்று புரியவைக்கிறது. இக்கட்டுரையின் இரண்டாம் பகுதி சோழர் ஆட்சியில் அலுவலர் பற்றிக் கூறுகிறது. புள்ளி விவரப்படி மொத்த சோழ அலுவலர்களின் எண்ணிக் கையில் பிராமணர்கள் ஏழு சதவீதத்தினரே என்றும், அலுவலர்களை அமர்த்துவதில் சாதி முதன்மைப் பாத்திரம் வகிக்கவில்லை என்றும் முடிவு காண்கிறார்.

சில கல்வெட்டுச் சொற்களை நுணுகி ஆராயும் அய்ந்தாம் கட்டுரையின் இறுதிப் பத்தி இதுவரை தென்னக ஆய்வில் உண்டான நெருடல்களையும் அவற்றினை நிவர்த்தி செய்யும் போக்கினையும் விவரிக்கிறது. இக்கட்டுரையின் கோநேரின்மை கொண்டான் என்ற சொல்லின் ஆய்வு இடைக் காலத் தமிழக வரலாற்றில் அரசரின் அழுத்தமான செல்வாக்கினை உறுதிப்படுத்துவதாக அமைகிறது. இத்தன்மையினைச் சோழர்கள் பல்லவரிடமிருந்து பெற்றனர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அய்ம்பது சதவீதம் கல்வெட்டுகளிலேயே அரச கட்டளையும் அலுவலரின் பணியும் குறிக்கப் பட்டுள்ளது அறியப்பட்டுள்ளது. இதனை அரசனின் அதிகாரம் அளவோடு இருந்ததாகக்கூடக் கருதலாம்.

சோழர் ஆட்சியில் நிலஅளவை பற்றிய கட்டுரை மிகவும் நுணுக்கமானது. சோழர்களின் நுணுக்கமான அளவை முறையினை இக்கட்டுரை விளக்குகிறது. இதனைத் தமிழகத்தில் கணக்கியல் நன்கு வளர்ந்துள்ளதாகவே கருதவேண்டும். இத் துறையில் நன்கு வளர்ந்த சமூகம் பிற துறைகளான கட்டடக்கலை, ஓவியக்கலை, படிமக்கலை, நீர்ப் பாசனம் போன்றவற்றிலும் வளர்ச்சி பெற்றிருக்கும். இவ்வனைத்தையும் சோழர் அரசு வெளிப்படை யாக்கியுள்ளது. அளவைகளின் புள்ளிவிவரங்களை விளக்கும் இக்கட்டுரை ஒரு கணக்குப் பாடத்தினைப் படிப்பது போன்றுள்ளது. நிலஅளவைக் கோல்கள் இரட்டை எண்களின் அடிப்படையில் 12 அடி, 16 அடி, 18 அடி என்று தெரிவு செய்யப்பட்டதில் தமிழரின் உளவியல் என்ன என்பதனை அறிய வேண்டும். ஈரடிக் குறள், நாலடியார், எட்டுத் தொகை, அகம் 400, புறம் 400, இரட்டைக் காப்பியம், நான்முகன், அறுமுகன், ஆறடிநிலம், எட்டடி குச்சு, 18 சித்தர்கள் என்ற இரட்டைப்படை எண்களையும் தமிழர் உளவியலையும் தொடர்பு படுத்திப் பார்க்க வேண்டும். Geometryஇல் இரட்டை எண்களின் அளவையியல் தொழிற்பாடு என்ன என்பதனையும் அறிய வேண்டும். வெவ்வேறு வட்டாரத்தில் வெவ்வேறு அளவைகளில் நிலங்கள் அளக்கப்பட்டன என்பதும் தஞ்சாவூர்க் கல்வெட்டில் சொன்னபடி அளக்கப்பட்ட நிலஅளவு மனக் கணக்குப்படி நிகழ்ந்தது என்பதும் ஆட்சியதி காரத்தின் மனச்சாய்வினை அளந்து காட்டும்.

வெட்டி, அந்தராயம், பாட்டம் என்ற வரிகளே அதிகமுறை கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டவை களாக உள்ளன. இவற்றுள் எச்சோறு, வெட்டி இரண்டும் முதல் காலகட்டத்தில் அதிக முறையும் பாட்டம் நான்காம் காலகட்டத்தில் அதிகமுறையும் குறிக்கப்பட்டுள்ளன. இவ்விரு காலகட்டங்களிலும் நீர்ப்பாசன வசதிகள் மேலதிக அக்கறையுடன் கவனிக்கப்பட்டன என்பதனை இதனால் அறியலாம். நீர்ப்பாசன வசதிக்கேற்ப ஆற்றுப் பாசனப் பயிருக்கும், குளத்துப்பாசனப் பயிருக்கும், வரண்ட நிலப்பகுதிகளின் பயிர் விளைச்சலுக்கும் வரி விதிப்புகள் வேறுபட்டுள்ளன. வரிகள் வளமான பகுதிகளில் தானியமாகவும், வரண்ட பகுதிகளில் பணமாகவும் வசூலிக்கப்பட்டது, விந்தையே. இதனை இன்னொரு கோணத்திலும் பார்க்கலாம். வளமையான காவிரிச் சமவெளிப் பகுதிகளிலேயே படிமக்கலைக்கான உலோகத் தேவை மிகுந்து இருந்ததால் இங்கு உலோகத்தினாலான பணப் புழக்கம் குறைவாக அமைவது இயல்பே.

ஊரார், நாட்டார், பெரிய நாட்டார் என்ற கட்டுரை சோழர் காலத்தின் சமூக மாற்றத்தினை விளக்குகிறது. ஊரார் பொதுவாக நிலவுடைமை யுள்ள வெள்ளாளர் ஆவர். இது வரலாற்று உண்மை. எனினும், பேராசிரியரின் ஆய்வு வரண்ட பகுதி யான புதுக்கோட்டை வட்டாரத்தின் விரையாச் சிலை என்ற ஊரின் போர்க்குலத்தவரான மறவரும், அரச மக்களும் (கள்ளரும்) ஊராராக எழுந்துள்ளனர் என்பதனை 13ஆம் நூற்றாண்டின் கல்வெட்டு அடிப்படையில் விளக்குகிறது. இதனைக் கள்ளர், மறவர், கணத்ததோர் அகம்படியர் மெள்ள மெள்ள வெள்ளாளர் ஆவர் என்ற சொலவடையினை மெய்ப்பிப்பதாக அமைகிறது. இதனை feudalism from the below என்ற கொசாம்பியின் பார்வையில் காண வேண்டும். இது ஒருவகையான சமூக மாற்றம். புதுக்கோட்டையின் அன்னவாசல், இலுப்பூர் பகுதிகளில் இருந்துவந்த அம்பலக்காரர்களே பின்னாட்களில் முஸ்லிம்களாக மாறினர் என்ற செய்தியும் உண்டு. அங்கு வெள்ளையப்ப ராவுத்தர், சீனியப்ப ராவுத்தர் என்ற பெயர்கள் வழக்கில் உண்டு. இப்படி இவ்வட்டாரம் அடிக்கடி சமூக மாற்றத்தினைப் பெற்றுள்ளது.

 

பத்தாம் நூற்றாண்டிற்குப் பிறகு சபையாரும், ஊராரும் இணைந்து செயற்படவில்லை. சபையார் பதினோராம் நூற்றாண்டிற்குப் பிறகு தம் ஆதிக்கத் தினை இழந்தனர்; நான்காம் காலகட்டத்தில்தான் மீள எழுந்தனர். பேராசிரியரின் கூற்றுப்படி சோழ அரசினைத் தாங்கி நிற்கும் கால்களாக அமைந்த நாடு நீர் கிடைக்கும் வளமைக்கு ஏற்ப பரப்பளவில் சிறிதாகவோ, பெரிதாகவோ அமைந்திருக்கும். நாட்டார்களின் இயக்கம் பெரும்பாலும் விளிம்பு நிலப்பகுதிகளிலேயும், புதுக்கோட்டை போன்ற வரண்ட நிலப்பகுதியிலும் அதிகாரம் பெற்றிருந்தது. நாட்டார்களுக்குச் சோழ அரசின் மையப்பகுதியில் செல்வாக்கு இல்லை. காலம் செல்லச் செல்ல நாடு அமைப்பு தம் தனித்தன்மையினை இழந்து பல இனக்குழுக்களுக்கும் வாழ்வாதாரமாக அமைந் திருந்தது. தெற்கில் போர்க்குலத்தவரான கள்ளர், மறவர் ஊரார் எனவும் நாட்டார் எனவும் வேளாண் மைக்குத் திரும்ப வடக்கின் போர்க் குலத்தவரான பள்ளியர், ஸ்ரீகோபாலர் என்ற ஆயர்குலத்தவரும் பெரிய நாட்டார் என்ற தொணியில் வேளாண் மைக்குத் திரும்பினர். ஒவ்வோர் கட்டுரையும் இப்படியான சமூக மாற்றத்தினைப் பதிவு செய்கிறது.

அஞ்சுவண்ணமும் எரிவீரப்பட்டினமும்

அஞ்சுவண்ணம் என்ற கட்டுரை தென்னகத்தின் கண்டம் தாண்டிய வணிகத்தினை ஆய்கிறது. சமயமும், சமய நிறுவனங்களும் வணிகத்திற்கு எந்த அளவிற்குத் துணைநின்றன என்பதனையும் விளக்குகிறது. மேற்குலகின் அயொனியன் தீவுகள் தொடங்கி கிழக்கே ஜாவா வரைக்கும் வணிகப் பொருளியல் கூறுகள் தெளிவாக்கப்பட்டதனை இக்கட்டுரை வழியே அறியலாம். இது ஒரு வகையான globalizationஐ விளக்குகிறது. எரிவீரப்பட்டினம் என்ற கட்டுரை தென்கிழக்காசியாவின் நீர்நிலப் பரப்பின் மேலான வணிக நகர்வினை வெளிப் படுத்துவதாயுள்ளது. இவ்வணிக நடவடிக்கை களில் மேற்காசிய இனத்து மக்களுடன் தென்னகத் தினர் இரத்த உறவினை நிகழ்த்தியிருப்பர் - குறிப்பாக கடற்கரை நகரங்களில் இப்போக்கு நடந்தேறியிருக்கும்.

நிலவுடைமைச் சமூகத்தில் அடிமைமுறை நிலவியதுபோல் அஞ்சுவண்ணம் என்ற வணிகக் கூட்டத்திற்கு கீழ்கழனை என்ற மக்கள் பணிசெய்துள்ளனர் என்ற பேராசிரியரின் கருத்து கருதத்தக்கது. எரிவீரப்பட்டினம் புதிதாக உருவாக்கப்பட்டவை அல்ல என்றும் வழிப்பறிக் கொள்ளையினைத் தவிர்ப்பதற்கு என்றே உருவாக்கப் பட்ட காவல் அமைப்பு என்றும் பேராசிரியர் விளக்குகிறார். முறியடிக்கப்பட்ட இது போன்ற தொரு கொள்ளை நடவடிக்கை திருமயம் அருகே நிகழ்ந்ததாகக் கல்வெட்டுக் குறிப்பினைப் பேராசிரியர் அறியத் தருகிறார். திருமயம் வரண்ட பகுதியான புதுக்கோட்டை வட்டாரத்தில் உள்ள ஊராகும். பெருமளவிலான கற்பாறைகளைக் கொண்டுள்ள அப்பகுதி கணிசமாக கள்ளர் இனத்தினர் வாழும் நிலப்பரப்பாகும்.

அப்பகுதியில் அண்மைக் காலம் வரை கொள்ளையர்கள் இயங்கியதாகக் கதை உண்டு. பத்தொன்பதாம் நூற்றாண்டில் புண்ணிய மூர்த்தி என்ற கொள்ளையர் தலைவர் ஒருவர் புகழுற வாழ்ந்துள்ளார். சோழர் அரசு மிகவும் உன்னத நிலையில் இருந்த பதினோராம் நூற்றாண்டில் தான் எரிவீரப்பட்டினம் பற்றிய குறிப்புகள் பல கிடைத்துள்ளன. சோழர் அரசின் புறநிலப் பகுதி களிலேயே வழிப்பறி, கொள்ளை நடந்தது என்பது சோழர் அதிகாரம் மையத்தில் குவிந்து விளிம்பு நிலப் பகுதிகளில் செல்லுபடியாகவில்லை என்பதைக் காட்டும். வணிகர் குழுக்கள் படையணியினரைத் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கும் அளவிற்குச் செல்வாக்கு பெற்றிருந்தனர் என்பதனை இக்கட்டுரை விளக்குகிறது. தென்னிந்தியாவின் சோழராட்சியில் சைவமதம் வேளாண்மைக்கு உதவியது போல் இலங்கையில் பவுத்தம் வணிகத்திற்கு உதவியது என்பதனையும் இக்கட்டுரை பேசுகிறது. மக்களைச் சுரண்டுவதில் சமயங்கள் வேறுபாடு காட்டுவதில்லை என்பதே இதன் விளக்கமாகும்.

சோழர் அரசு

சோழர் அரசின் கூறுகள் இரு தனித்தனிக் கட்டுரைகளில் விளக்கப்பட்டுள்ளன. கட்டுரைகளின் ஊடாக சமூக, பொருளியல் மாற்றங்களையும் அறியலாம். இக்கட்டுரைகள் கூடுதலாக பர்டன் ஸ்டெயின் கூற்றுகளுக்குப் பதிலிறுப்பதாகவும் சோழர் அரசினை வகைப்படுத்துவதாகவும் அமை கின்றன.

சோழராட்சியின் 400 ஆண்டுக் காலம், தேங்கி யிருந்த பழங்குடி இனத்துச் சமூகங்களைப் படி நிலை சார்ந்த சமூகத்திற்குள் திணித்தது, கூட்டு நிலவுடைமையினை உடைத்து நிலவுடைமை உறவு களையும் உடைத்தது, இவை அரசனை மையப் படுத்திய அரசு உருவாவதற்கு வழிவிட்டது, நிலைப் படையும் அலுவலமைப்பும் வளர்ந்தன. கவனமாக மேற்கொள்ளப்பட்ட நில அளவை நிலவருவாயினை உறுதி செய்தது. பிராமண ஊர்களையும் கோயில் களையும் கட்டுக்குள் வைத்தது.

ஓர் அரசு உருவாக்கிய சமூக மாற்றத்தினை இவ்வொரு சொற்றொடரில் பேராசிரியர் பதிக் கிறார். பேரா.நீலகண்டசாஸ்திரி சில கூறுகளை வரையறுத்தார் : பேரரசு, திறமையான அலுவல் அமைப்பு, உள்ளூர் அரசியல், அரசனின் வரை யறுக்கப்பட்ட தலையீடு. பர்டன் ஸ்டெயின் இரு கூறுகளை மட்டும் வரையறுத்தார் : கூறாக்க அரசு, தெய்வீக அரசன்.

அரசன்

இவ்விருவரின் கூற்றுகளும் தருக்க முறையிலும், சான்றுகளைக் கொண்டும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. பத்தாம் நூற்றாண்டில் பெருமான், அடிகள், பெருமானடிகள் போன்ற பட்டப் பெயர்களைக் கொண்டிருந்த அரசர்கள் அந்நூற்றாண்டிற்குப் பிறகு மக்களிடமிருந்து சற்று விலகி இருந்தனர். அரசரும் உடையார் என்று அழைக்கப்பட்டுள்ளார். அவரே, பதினோரு, பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில் உலகுடைய பெருமாள், உலகுடைய நாயனார் என்று மாறு கிறார். தொடர்ந்து சக்கரவர்த்தி, திரிபுவன சக்கர வர்த்தி, போன்ற பட்டங்களை இட்டுக்கொள்ளத் தொடங்கினார். தேவா என்றழைக்கப்பட்ட அரசர் சில சந்தர்ப்பங்களில் இறைவனின் தோழன் என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டார். சோழ அரசரின் ஆளுமை வளர்ச்சி (stature) பற்றிய பேராசிரியரின் இக்கூற்று சோழ அரசர் தெய்வீகத் தன்மை பெற்றவர் என்ற பர்டன் ஸ்டெயின் கருத்திற்குச் சற்று வலுசேர்ப்பதாயுள்ளது.

சோழர் அரச குடும்பம் தொடக்கத்தில் வட்டார, ஆட்சித் தலைவர்களுடன் திருமண உறவினை உருவாக்கிக் கொண்டனர்; நன்கு வளர்ந்த அதிகாரக் கட்டமைப்பினை உருவாக்கிய பின்பு சாளுக்கியர் போன்ற பலம் பொருந்திய அரசர் குடும்பத்தினருடன்தான் மணவுறவு கொண் டிருந்தனர். இதன்மூலம் ஓர் அகன்ற தமிழகத்தினை உருவாக்க முயன்றனர் என்று கருதலாம்.

தந்தையும் தனயனும்

இராஜராஜன் ஓர் அறிவுத் திட்பம் கொண்ட அரசனாகவும் சோழ மன்னர்களிலேயே மிகப் பெரிய போராளி என்றும், மிகச்சிறந்த ராஜதந்திரி என்றும் கணிக்கப்படுகிறான். வளநாடு என்ற அமைப்பினை உருவாக்கி வட்டாரத் தலைவர் களை அலுவலர் நிலைக்குத் தள்ளி மொக்கை யாக்கி அவர்களின் இனக்குழுத்தன்மை சிதைக்கப் பட்டு வரிவசூலிக்கும் வெற்றுத்தட்டுகளாக மாற்றியது ஒரு தந்திரமான ராஜ நடவடிக்கை. இவனையும் தாண்டிச் செயல்பட்ட முதலாம் இராஜேந்திரன் அரசகுலம் சார்ந்த மாகாணங்களை உருவாக்கினான். ஆனால் மன்னர்களின் அதிகார நிலை நூற்றாண்டுகள் தோறும் மாறிக்கொண்டே இருந்தது என்றும் விளக்கப்பட்டுள்ளது. வட்டாரத்து அரச குடும்பங்கள் சோழர் குடும்பத்துடன் திருமண உறவுகள் மூலம் கலந்ததால் சோழரின் குடும்ப இயக்கம் வலு வாக்கப்பட்டது. பெரும்பாலும் பெண்களைக் கொடுத்துச் சாதித்தனர். மிக இலகுவான முறையில் சேதாரம் இல்லாமல் இங்கு அரசியல் வெற்றி நடந்தேறியது. சேதாரம் பெண்ணுக்குத் தானே; வருமானம் ஆணுக்குத்தானே. முதல் பராந்தகனின் மகள் சோழப் பெருந்தேவியைக் கொடும்பாளூர் இருக்குவேள் தலைவன் பூமி பராந்தகன் மணந் தான். முதலாம் ஆதித்தனின்மகள் அனுபமாவை இராஷ்டிரகூடத்து அரசன் சபரமிராமன் மணந் தான். முதலாம் சுந்தரசோழனின் தங்கை வரகுண பெருமானார் என்பவரை பிறிதொரு கொடும் பாளூர் தலைவன் மணந்தான். இராஜராஜன் மகள் குந்தவை சாளுக்கிய அரசர் விமலாதித்தனை மணந்தாள். இவர்களின் மகனை இராஜேந்திரனின் மகள் மணந்தாள். இப்படி அரசகுலப்பெண்கள் மொழிபெயர் தேயங்களின் அரண்மனைகளில் உலா வந்தனர். முதல் காலகட்டத்தில் வட்டாரத் தலைவர்களின் துணைப்படையோடு ஆண்டு வந்த அரசர்கள் இரண்டாம் காலகட்டத்தில் தானே கோலோச்சினர். ஆனால் பன்னிரண்டாம் நூற்றாண்டின் இரண்டாம் கூற்றில் இவர்கள் மீளவும் வட்டாரத் தலைவர்களின் துணைப்படையினை நாட வேண்டி இருந்தது.

சோழ மன்னர்கள் மக்கள் மனத்தில் அரும்பி வருகின்ற உணர்வினை ஊதிப் பெருக்கி அறுவடை செய்யும் உத்தியினைப் பின்பற்றியுள்ளனர். ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்களை ஏதாவதொரு கருத்தியல் இயக்கிவரும். சோழர் காலத்திலும் இதுபோன்ற இயக்கம் இருந்தது. மக்களின் நநேசபல இங்கு வெவ்வேறு வகையில் சிதறடிக்கப்பட்டுள்ளது. இத்திறன், போரிடுதல் மூலம் நிறைவேறியது. உடல் வலிமையும், மனத்தில் உக்கிரமும் கொண்ட மக்கள் திரள் கோபமுறும்போது வெடித்துக் கிளம்பும் ஆற்றல் உள்நாட்டில் சிக்கலை உண்டு பண்ணும் என்று எண்ணித் தமிழகத்தின் வெளி நிலப்பரப்பில் சண்டையிடுவதற்குச் செலவளிக்கப் பட்டது. இதனால் உள்நாட்டில் கலகம் தவிர்க்கப் பட்டுள்ளது. மக்களின் மனோநிலை மடைமாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொருளாசை காட்டி அவர் களின் படை நகர்வு நியாயப்படுத்தப்பட்டுள்ளது. படையணியின் ஆண்கள் வெளிநிலப் பிரதேசத்தில் இயங்குகிற போது அவர்களின் மனைவிகள் கற்புடன் பொறுமை காக்க வேண்டும் என்ற போதனையே கம்ப இராமாயணத்தின் அறிவுறுத்தலாகும். வெற்றிக் களிப்புடன் திரும்பிய படையணியினர் மீதமுள்ள வீரத்தினை உள்நாட்டில் விதைக்காமல் இருக்க அவர்கள் கைக்கோலர்கள் என்ற பெயரில் கை வினைஞர்களாக மாற்றப்பட்டுள்ளனர். இங்கு தான் சோழ அரசின் தந்திரம் பொதிந்துள்ளது. இப்பத்தியின் முதல் வரியில் சொன்ன கருத்தினை அண்மைக் காலத்திய அரசியல் போக்குடன் இணைத்துப் பார்க்கலாம். சென்ற நூற்றாண்டில் தமிழகத்து மக்களின் மனத்தில் பதிந்திருந்த திராவிட உணர்வு, தமிழ் உணர்வு, உரைநடை மறுமலர்ச்சி, மேடைப் பேச்சு, திரைப்படக்கலை, நாடகக்கலை, இதழியல் போன்றவற்றைத் திராவிடக் கட்சிகள் லாகவமாக சாதகமாக்கிக் கொண்டு ஆட்சியினைப் பிடித்தனரே அன்றி மேற்சொன்ன கலைகள் முன்பே நன்கு வளர்ந் திருந்தன. இதே போன்று அரும்பிக் கொண்டிருந்த மக்கள் உணர்வினைப் பயன்படுத்தித்தான் சோழர் அரசு கட்டமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

உள்ளூர்ப்பற்று உணர்வினைச் சிறிது வட்டார உணர்வாகவும் மாற்றும் நிலையிலுள்ள மக்களின் மனோபாவம் சிறப்பாக அறுவடை செய்யப் பட்டிருக்கும். இதனை அறிந்தேற்பு செய்ய ஒரு நூல் தேவைப்பட்டிருக்கும். அதனை ஏற்கனவே தேவாரம் நிறைவேற்றியிருந்தது. அப்பிரதியே அகன்ற தமிழகத்தினை உருவாக்கும் ஊக்கத்தினை இராஜராஜனுக்குத் தந்திருக்கும். இதற்காகவே அப்பிரதி சுவடி உருவில் தில்லையில் மீட்டெடுக்கப் பட்டிருக்கும். இவ்விடத்தில் இராஜராஜனின் ஈழப் படையெடுப்பினை நாயன்மார் கோணேஸ்வரர் மீது பாடிய பாட்டுடன் ஒப்பிட வேண்டும். கப்பலை ஓட்டாமலே கடலினைத் தாண்டினர் நாயன்மார்; கடலினை அடைக்காமலே கரையினைத் தாண்டினான் இராஜராஜன். போரும் நடந்தது; பொருளும் குவிந்தது.

சோழர் அரசு உருவாக்கத்தில் நீர்ப்பாசன வசதி மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. ஊர்த் தொகுப் பினைக் கொண்ட ஒவ்வொரு நாடும் ஏதாவ தொரு நீராதாரத்தினை மையமாகக் கொண்டே உருவாகியுள்ளது. நாடுகளின், வளநாடுகளின் எல்லைகள் பெரும்பாலும் நீராதாரங்களாக இருந்துள்ளன. சிறப்பாக இயங்கிவந்த தலைவாய், தலைவாய்ச் சான்றார், தலைவாயர் போன்ற குழுக்களின் வரலாற்று இருப்பு நீராதாரங்களின் முக்கியத்துவத்தினை வலியுறுத்துகிறது. நீராதாரங் களின் பராமரிப்பிற்கென்றே வசூலிக்கப்பட்ட வரிவகைகளின் எண்ணிக்கை அதிகமாயுள்ளதனை அவதானிக்க வேண்டும். காவிரிச் சமவெளியில் பத்தாம் நூற்றாண்டில் வசதி ஸ்திரத்தன்மைக்கு வந்துள்ளது; இதற்குப் பிறகு நீர்ப்பாசன செய்திகள் இல்லை.

நாட்டார்களை அரசு நிர்ணயித்தது இல்லை. அவர்கள் நாட்டுக்குள் இருந்து எழுந்தனர். அரசாணை களில் இவர்கள் முதன்மை இடம்பெறவில்லை. ஆளுங்கணம் என்ற சிறப்பு பிராமணர் ஆட்சிக் குழுவினர் பற்றிய செய்திகள் தெற்கு, மேற்கு நிலப்பிரதேசங்களைத் தவிர தமிழகத்தின் பிற வட்டாரங்களில் கிடைப்பதில் இருந்து அங்கு வேறு மாதிரியான சமூக அமைப்பு இயங்கியுள்ளது என்று அறியலாம். அதாவது பிற வட்டாரங் களைவிட இங்கு பிராமணப் பண்புக் கூறுகள் வலிமையாக இடம்பெறவில்லை எனலாம். பிரா மணக் கோயில்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதன் அடிப்படையில் இதனை உறுதிப் படுத்தலாம். இவர்கள் பிராமணக் குழுக்களுக்கான ஆட்சிநிலை அலுவலர்கள் என்று கருத வேண்டி யுள்ளது.

அடிமை

சோழர் சமூகத்தில் அடிமை பற்றிய ஆய்வு மிக நுண்ணியதாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமூகத்தின் படிநிலை உழக்கிற்குள் வைக்கப்பட்ட உழக்குகள் போன்று ஒன்றிற்குள் ஒன்றாக அமைந் துள்ளதனைப் பேராசிரியர் விளக்கியுள்ளார். பிராமணர்களைத் தவிர்த்துப் பார்த்தால் நில வுடைமை கொண்ட வெள்ளாளர்கள் வெள்ளாண் வகை நிலமுடையோர் என்றும், இவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட உழைக்கும் வெள்ளாளர்கள் உழுகுடி வெள்ளாளர்கள் என்றும் வகைப்படுத்தப் பட்டுள்ளனர். இவ்வகை உழைக்கும் வர்க்கம் கி.பி.1117க்குப் பிறகு கல்வெட்டுகளில் பதியப் பட்டதனை நிலவுடைமைச் சமூகத்தின் கிடையான வெடிப்பாகக் கருதலாம்; நெடுக்கான வெடிப் பாகவும் கருதலாம். இப்போக்கு கீழத்தஞ்சைப் பகுதியில் நிகழ்ந்ததனை அங்கு நிகழ்ந்த சமூகப் படிமாற்றம் என்றே கருத வேண்டும். பிராமணர்கள் மங்கலத்திலும், வெள்ளாளர்கள் ஊரிலும் வசித்து வருகையில் உழுகுடி வெள்ளாளர்கள் பிடாகை என்ற பகுதியில் வசித்தனர். பிராமணர் பெருங்குடி என்றும் பிராமணர் அல்லாத நிலவுடைமை யாளர் நிலத்தில் உழுவோர் உழுகுடி என்றும் அடித்தளத்தில் இருப்போர் அடிமை என்றும் பணி செய் மக்கள் என்றும் அழைக்கப்பட்டனர். பன்னிரண்டாம் நூற்றாண்டில் நிலவுடைமை வெள்ளாளர்களுக்கும், உழுகுடி வெள்ளாளர் களுக்கும் மோதல்கள் நிகழ்ந்துள்ளன. அடிமைகள் பிராமணர்களிடத்திலும், படைத் தலைவர் களிடத்திலும், கோயிலிலும் பணி செய்துள்ளனர்.

சோழர் அரசு : கூறுகள்

பர்டன் ஸ்டெயின் அவர்களின் நூல் வெளி வந்தவுடன் தமிழகத்தில் இரு அறிஞர்கள் மட்டுமே எதிர்வினையாற்றினர். ஒருவர் பேராசிரியர் எ.சுப்ப ராயலு, இன்னொருவர் மொழியியலறிஞர் து.மூர்த்தி, வடக்கில் பலரும் இந்நூலுக்கு எதிர்வினையாற்றினர்.

பேரா.கே..ஏ.நீலகண்ட சாஸ்திரி சோழர் அரசு, அதிகாரம் குவிந்த மையப்படுத்தப்பட்ட ஒன்று என வரையறுத்தார். இதனை மறுத்து ஸ்டெயின் சோழரின் அதிகார மையங்களை மூன்றாக வகுத்தார். காவிரி பாயும் வளமையான மையப்பகுதி, தொண்டை மண்டலம் போன்ற கலவையான நீர்ப்பாசனம் கொண்ட இடைநிலப்பகுதி, கங்கைவாடி போன்ற விளிம்புநிலைப்பகுதி. இவற்றுள் காவிரி நிலப் பகுதியில் மட்டுமே அரச குலத்தினர் அதிகார வலுவுடன் இருந்தனர் என்று தம் வாதத்தினை முன்வைத்தார். இக்கருத்திற்கு வலுசேர்ப்பதாக ஜார்ஜ் டபிள்யூ ஸ்பென்ஸர், கென்னத்.ஆர் ஹால் இருவரும் சோழர் பிரதேசத்தில் சீரற்ற நிலையில் பரவிக் கிடந்த கல்வெட்டுகளை உதாரணம் காட்டினர். நாடு அமைப்புகளின் மாறாத தன்மையே சோழர் அரசின் கூறாக்க நிலைக்குக் காரணம் என்று ஸ்டெயின் கருதினார். நாட்டிற்குள்ளேயே நடந்த அகமணமுறையே காரணம் என்றும் கருதினார்.

மேற்சொன்ன கூற்றுகளைத் தக்க ஆதாரங் களுடன் பேராசிரியர் மறுக்கிறார். தொடக்கநிலை ஆய்வாளர்களின் எழுத்தினைக் குத்துமதிப்பு ஆய்வுமுறை என்று கிண்டலடித்த ஸ்டெயினும் அதே பிழையினைச் செய்தார் என்று சுட்டிக் காட்டு கிறார். நீர்ப்பாசன வளம் குறைந்த நாடுகளின், நாட்டார்களின் நடவடிக்கைகளின் பின்னணியில் இடைநிலப்பகுதி என்ற வகையினை ஸ்டெயின் மேற்கொள்கிறார். ஆனால் இவ்வாதமே அவரின் கருத்தினை உடைக்கிறது என்று இந்நூல் நிரூபிக்கிறது.

வலங்கை இடங்கைப் பிரிவு, தமிழக வரலாற்றின் முக்கிய சமூகக்கூறாகக் கருதப்பட்டது. இதனை ஸ்டெயின் தவறாகப் புரிந்துகொண்டார். விளிம்பு நிலையில் பன்னிரண்டாம் நூற்றாண்டின் பிற் கூற்றில் மட்டும் நிகழ்ந்த இச்சமூகப் போக்கினைச் சோழர் நாடு முழுக்க நிகழ்ந்ததாகக் கருத இயலாது என்பது பேராசிரியரின் வாதம். மதிப்புறு பட்டம் பெற்ற பலம் பொருந்தியவரையும் அதிகாரிகளையும் ஒன்றாகப் பார்த்து ஸ்டெயின் குழப்பிக் கொண்ட தாகச் சொல்கிறார். சோழர் அரசின் உண்மை யான இயல்புநிலை தெரிந்தும் வலிந்து மாற்றுக் கருத்தினை ஸ்டெயின் முன்வைத்தார் என்றும் சுட்டப்படுகிறது. ஆனால், இவ்விரு பிரிவுகளுக்கு இடையிலான சண்டை என்பது உண்மையில் பழைய நிலவுடைமைக் குழுக்களுக்கும் புதிதாக எழுந்த நிலவுடைமைக் குழுக்களுக்கும் இடையில் நிகழ்ந்த போட்டி என்று நிரூபிக்கப்படுகிறது.

சோழர் அரசு வலுவாக இருந்ததற்கான காரணங்களைப் பேராசிரியர் முன்வைக்கிறார்:

1. உள்ளூர் அளவிலும் நாடு அளவிலும் தானியக் கிடங்குகள் இருந்தன 2. தஞ்சைப் பெரிய கோயிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து தானியங்கள் சென்றன 3. விளிம்பு நிலைப் பகுதிகளிலேயே நாட்டார் களும் பெரிய நாட்டார்களும் செயற்பட்டனர், அதிலும்கூடப் பன்னிரண்டு பதின்மூன்றாம் நூற்றாண்டுகளில் மட்டுமே.

தென்னிந்திய அரசுபற்றிப் பலரும் சுட்டி யுள்ள கருத்துகளை வாதிட்டு விலகும் பேராசிரியர் சோழர் அரசு Darcy Ribeiro முன்வைத்த Archaic State, Kathleen Gough tiuewj Early State என்ற அரசக் கூறுகள் சிலவற்றோடு பொருந்திப் போகிறது என்கிறார். அவை : அரசனின் முதன்மையான இயக்கம், படிநிலைச் சமூக அமைப்பு, ஆளும் வர்க்கம் - ஆளப்படும் வர்க்கம். என்றாலும், எந்த புராதன அரசக் கூறுகளுக்கும் சோழர் அரசின் தன்மைகள் பொருந்திவரவில்லை என்று நூலினை முடிக்கிறார். சோழர் அரசு பற்றிய இருகட்டுரைகளும் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும்.

Pin It