ஜப்பான் நாட்டின் புகுஷிமா நகரில் ஏற்பட்ட அணு உலை ஆபத்திற்குப் பின் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் 80 சதவீத ஜப்பானியர்கள் "அய்யோ... வேண்டாம் அணு உலை' என கருத்து தெரிவித்துள்ளனர். இது அவர்களின் அடி வயிற்றிலிருந்து எழும் குரல்! அவர்கள் பாதிக்கப்பட்டவர்கள். அதனால் அவர்களுக்கு வலி தெரிகிறது.

புகுஷிமா அணு உலை ஆபத்திற்குப் பின் உலக மக்கள் விழித்துக் கொண்டனர். எங்கெல்லாம் அணு மின் நிலையம் நிறுவப்பட்டுள்ளதோ அப்பகுதி மக்கள் கடுமையாக அணு உலையை எதிர்த்து வருகின்றனர். ஆனால், எத்தனையோ நாடுகளில் அணு உலைகள் உள்ளன; இந்தியாவிலும் சில மாநிலங்களில் அணு உலைகள் உள்ளன; அங்கெல்லாம் எதிர்ப்பு இல்லை. கூடங்குளத்தில் மட்டும் ஏன் எதிர்க்கிறார்கள் என்று படித்தவர்களே கூட கேட்பது கவலையளிப்பதாக உள்ளது.

கூடங்குளத்தில் மட்டும் அணு உலைக்கு எதிராக மக்கள் போராடவில்லை. மஹாராஷ்டிரா மாநிலம் ஜெய்தாபூரில் அணு உலையை எதிர்த்து மக்கள் போராட்டம் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. கல்பாக்கத்திலும் மீனவ அமைப்புகள் கடந்த 30 ஆண்டுகளாக எதிர்ப்புகளை வெளிப்படுத்தியே வந்திருக்கின்றனர்.

கூடங்குளத்தில் கூட அணுஉலை எதிர்ப்பு என்பது சமீபத்தில் எழுந்த பிரச்சினை அல்ல... அப்பகுதி மக்களும் 25 ஆண்டுகளாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். புகுஷிமா அணு உலை விபத்திற்குப் பிறகு தான் போராட்டங்கள் வீரியம் பெற்றிருக்கின்றன.

கூடங்குளம் இடிந்த கரையில் நடைபெற்று வரும் போராட்டம் 200 நாட்களைத் தாண்டி வீரியம் குறையாமல் நடந்து வருகிறது. 5 ஆயிரம் முதல் நாற்பதாயிரம் வரையிலான மக்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு அணு உலை வேண்டாம் என தங்களது எதிர்ப்புகளை வெளிப் படுத்தி வருகின்றனர்.

மக்கள் போராட்டங்களை எதிர்கொள்ள முடியாத அரசு, போராட்டத்தை பலவீனப்படுத்துவதற்காக போராட்டக் குழு தலைவர் போராட்டக்காரர்களுக்கு வெளிநாடுகளிலிருந்து பெருமளவு நிதியைப் பெற்று விட்டார் என அறப்போராட்டத்தை கொச்சைப்படுத்துவது, உதயகுமாருக்கு எதிராக மக்களை திருப்ப நினைப்பது, இடிந்தகரையிலுள்ள தேவாலயத்திற்கு அருகில் உண்ணாவிரப் போராட்டம் நடப்பதால் கிறிஸ்த மதத்தைச் சேர்ந்தவர்கள் இப்போராட்டத்தின் பின்னணியில் இருக்கிறார்கள் என்று பிரச்சாரம் செய்வது, அப்பகுதியில் பல மணி நேரங்களுக்கு மின் தடையை ஏற்படுத்தி கூடங்குளம் அணு உலை இயங்கினால்தான் தட்டுப்பாடற்ற மின்சாரம் கிடைக்கும் என்பது போன்ற எண்ணத்தை கட்டாயமாக மக்களிடத்தில் திணிப்பது என அநாகரீகமான காரியங்களில் ஈடுபட்டது அரசு; ஈடுபட்டும் வருகிறது.

ஆனால் இவற்றையெல்லாம் புறந்தள்ளி விட்ட இடிந்தகரை மக்கள் தங்கள் நம்பிக் கையை மட்டும் இடிந்துபோக விடாமல் தன்னம்பிக்கையோடு இப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

"இடிந்தகரை மக்களின் பயத்தைப் போக்கும் வகையில் அம்மக்களுடன் பேச வேண்டும் அதுவரை அணு உலை இயங்கு வதை நிறுத்தி வைக்க வேண்டும்' என சட்டமன்றத்தில் தீர்மானம் போட்ட முதல்வர் ஜெயலலிதா, சங்கரன்கோவில் இடைத் தேர்தல் முடிந்தவுடன் அணு உலை இயங்க அனுமதி அளித்து தனது நயவஞ்சகத னத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இடைத் தேர்தல் வராமல் இருந்திருந்தால் மக்களின் அச் சத்தைப் போக்க வேண்டும் என் கிற தீர்மானத்தைக் கூட முதல் வர் போட்டிருக்க மாட்டார். அணு உலையைத் திறப்பதற்கு எப்போதோ அவர் அனுமதிய ளித்திருப்பார்.

மத்திய, மாநில அரசுகளுக்கு இசைவாக நடந்து கொள்ளும் முன்னணி தமிழ் ஏடுகளும் அணு உலை ஆபத்து குறித்து அணு உலை எதிர்ப்பாளர்களும் அவர்கள் தரப்பு விஞ்ஞானிக ளும் எழுப்பும் கேள்விகளை முக்கியத்துவப்படுத்துவதில்லை.

"அணு உலை பாதுகாப்பா னது. மத்திய, மாநில அரசு வல் லுனர் குழு உறுதி' என்பது போன்ற ஸ்டீரியோ டைப் செய் திகளை வெளியிட்டு அணு உலையால் ஆபத்து இல்லை என்பது போன்ற சித்திரத்தை மக்கள் மத்தியில் உருவாக்க முய லுகின்றன.

இப்போது போராட்டம் முடி வுக்கு வந்து விட்டது என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க அரசும், மீடியாக்களும் பெரு முயற்சி எடுத்து வருகின்றன.

சில தினங்களுக்கு முன் இடிந்தகரை போராட்டக் குழுவினருடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் செல்வராஜ் மூலம் அரசு நடத்திய பேச்சுவார்த்தையின்போது போராட்டக்காரர்கள் தெளிவாகவே பதிலளித்திருந்தனர்.

இதுவரை கைது செய்யப்பட் டவர்களை விடுதலை செய்ய வேண்டும்; அவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்; அணு உலை காப்பீடு குறித்து ரஷ்யாவுடன் போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வைத்த போராட்டக்காரர்கள், இவற்றையெல்லாம் ஒப்புக் கொள்ளும்பட்சத்தில் இடிந்தகரை உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்திக் கொள்வோம். அதே சமயம், அணு உலைக்கு எதிரான எங்களின் போராட்டம் வேறு வடிவங்களில் தொட ரும் என அறிவித்திருந்தனர்.

ஆனால், அணு உலை எதிர்ப்பு போராட்டம் முடிவுக்கு வந்து விட்டதாக மீடியாக்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

இடிந்தகரை மக்களின் அச் சத்தை போக்க வேண்டும் என அறிவுப்பூர்வமாக தீர்மானம் போட்ட தமிழக அரசு, அம்மக்க ளின் அச்சத்தைப் போக்காமல் இப்போது அணு உலை இயங்க அனுமதியளித்திருக்கிறது என் றால் இது அறிவிலித்தனம் தானே?

இன்றுவரை போராட்டக் காரர்களின் கேள்விகளை எதிர் கொள்ள திராணியற்ற நிலையில் தான் மத்திய, மாநில அரசுக ளும் அதன் வல்லுனர் குழுவும் இருக்கின்றன.

அணு உலை பாதுகாப்பா னது என்று சொல்லும் அரசுகள் அணு உலை பாதுகாப்பானது அல்ல என்று கூறும் எங்கள் விஞ்ஞானிகளின் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் என்று இன் றுவரை அணு உலை எதிர்ப்பா ளர்கள் கேட்டு வருகிறார்கள்.

அறிவுப்பூர்வமான இந்தக் கோரிக்கையை ஏற்று விஞ்ஞான ரீதியில் பதிலளிக்காமல் ஆயுத முனையில் அவர்களை மிரட்டி வருவதன் மூலம் அரசாங்கத்தி டம் பதில் இல்லை என்பது மட் டுமல்ல அணு உலை பாதுகாப் பற்றது என்பதையும் சேர்த்தே உணர்த்துகிறது.

கூடங்குளம் அணு உலை யைத் திறப்பதற்கு அனுமதிய ளிப்பதற்கு முன் குறைந்தபட்சம் அணு உலை எதிர்ப்பு பிரதிநிதி களையும், அவர்களது விஞ்ஞா னிகள் குழுவையும் அழைத்துப் பேசியிருக்கலாம். அவர்களிடம் தனக்கு உலை திறப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று பேசி யிருக்கலாமே என்றெல்லாம் பத் திரிகையாளர் ஞானி போன்ற வர்கள் எழுதுகின்றனர்.

ஜெயலலிதா போராட்டக் குழுவினர் மீது அடக்குமுறை ஏவி விடாமல் ஞானி சொல்வ தைப்போல் போராட்டக் குழுவி னரின் விஞ்ஞானிகளைச் சந்தித் திருந்தால் அது குறைந்தபட்சம் நல்ல அணுகுமுறையாக வேண் டுமானால் எடுத்துக் கொள்ள முடியுமே தவிர அதனால் பய னொன்றும் விளைந்திருக்காது.

போராட்டக்காரர்கள் தரப்பு விஞ்ஞானிகளின் கேள்விகளுக்கு ஜெயலலிதாவோ, அவரது வல் லுனர் குழுவோ திருப்தியான பதிலளித்திருக்க முடியாது. தேவையற்ற அவமானத்தைத் தவிர்த்துக் கொள்ளும் வகையில் இந்த சந்திப்புகளை முதல்வர் மேற்கொள்ளவில்லை என்று கருத இடமுண்டு.

அணு உலை எதிர்ப்பாளர்கள் அரசுக்கும், வல்லுனர் குழுவுக் கும் சவாலாகவே ஒரு கோரிக் கையை முன் வைக்கின்றனர்.

கூடங்குளம் அணு உலை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் கடலியல், நிலவியல் ரீதியான ஆய்வுகளை மேற்கொள்ளத் தனியாக ஒரு வல்லுனர் குழுவை நியமியுங்கள். அது சூப்பர் எக்ஸ்பர்ட் வல்லுனர் குழுவாக இருந்தாலும் சரி. இந்த ஆய்வுக் குழு ஆய்வுகளை மேற்கொண்ட பின் கூடங்குளம் அணு உலை மிக பாதுகாப்பானது என்று கூறினால்... அது பாதுகாப்பான தல்ல என்று தக்க ஆய்வுகளோ டும், விஞ்ஞான ரீதியாகவும் எங்கள் விஞ்ஞானிகள் நிரூபிப் பார்கள் என்கின்றனர் அணு உலை எதிர்ப்பாளர்கள்.

இந்த சவாலை எதிர்கொள்ள துப்பில்லாமல் தமிழக அரசு அமைத்த வல்லுனர் குழு கூடங் குளம் பகுதிக்குச் சென்று அணு உலை எதிர்ப்பு இயக்கத்தின் பிரதிநிதிகளையோ, அவர்களின் விஞ்ஞானிகளையோ சந்திக்கா மல் கள்ளத்தனமாக ஒரு ஆய்வை நடத்தி விட்டு வந்து முதல்வரிடம் அறிக்கையைத் தந் திருக்கிறது.

அதில், கூடங்குளம் பகுதியில் நில நடுக்கமோ, சுனாமியோ ஏற் பட்டதாக வரலாறு இல்லை; கூடங்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்களின் அச்சத் தைப் போக்க உண்மையான முயற்சிகளை அரசு எடுத்துள் ளது; உள்ளூர் மக்களின் பிரதி நிதிகள் எழுப்பிய கேள்விக ளுக்கு மத்திய அரசின் வல்லுனர் குழு பதிலளித்துள்ளது (விஞ்ஞா னிகளின் கேள்விகளுக்கு மட்டும் பதிலளிக்கவில்லை.

மேற்கூறிய காரணங்களினால் இத்திட்டத்தின் செயல்பாடு களை மீண்டும் துவக்கலாம்.

கூடங்குளம் பகுதி மக்களி டையே அணுமின் நிலையத்தின் சாதகமான அம்சங்கள் குறித்து தெரிவித்து விழிப்புணர்வை ஏற் படுத்த வேண்டும் - இவைதான் தமிழக அரசு நியமித்த வல்லு னர் குழு தந்த அறிக்கையின் சாரம். இதோடு, அப்பகுதி மக்க ளின் வாழ்வாதாரத்தை உயர்த்த சில ஆலோசனைகளை சொல்லி யிருக்கிறது வல்லுனர் குழு.

இந்த அறிக்கையை வைத்துத் தான் கூடங்குளம் மிகவும் பாது காப்பானது என்று அதனை திறக்க முதல்வர் அனுமதியளித் திருக்கிறார். இந்த வல்லுனர் குழு, கூடங்குளம் பகுதியில் நில வியல் ஆய்வையோ, கடலியல் ஆய்வையோ மேற்கொள்ள வில்லை.

இந்திய அணு சக்தி ஒழுங்கு முறை கட்டுப்பாட்டு வாரியத் தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வில்லை. சர்வதேச அணு சக்திக் கழகத்தின் விதிமுறைகளும் ஆய் வுக்கு எடுத்துக் கொள்ளப்பட வில்லை. ஆனாலும் கூடங்குளம் மிகப் பாதுகாப்பாக இருக்கி றது! என்கிறது இக்குழு.

இதைச் சொல்வது அதிகார வர்க்கம் அதனால் இதனை ஏற் றுக் கொள்ள வேண்டும் என்று அடக்குமுறை மூலம் மக்கள் மீது திணிக்கப்படுகிறது. இதை ஏற்க மறுத்தால் அரசின் ஆக் டோபஸ் கைகள், வெளிநாட்டுச் சதி, மாவோயிஸ்ட் ஊடுருவல், வெளிநாட்டுப் பணம், ரெய்டு, போலீஸ், துணை இராணுவம், மிரட்டல், உருட்டல் என பல வடிவங்களில் நீளுகிறது. அவர்கள் ஆட்சியார்கள் என்பதால் ஆபத்து என்று தெரிந்தாலும் அடக்குமுறைமூலம் திணிக்க முடிகிறது!

யாருக்கு மின்சாரம்?

கூடங்குளம் உற்பத்தித் திறன் 1000 மெகா வாட் மின்சாரம் என்று கூறப்பட்டாலும் தமிழகத்திற்கு 200 மெகா வாட்டுக்கும் குறைவாகவே கிடைக்கும் என் கின்றனர் அணு உலை எதிர்ப்பாளர்கள். இவர்கள் இப்படி சொல்வதற் குண்டான முகாந்திரங்கள் இருப்ப தாகவே தெரிகிறது.

இது குறித்து தமிழ் தேசிய மற்றும் மனித உரிமைப் போராட்டக் களங்களில் இயங்கி வரும் தமிழக தேசிய விடுதலை இயக்கத்தின் தோழர் தியாகுவிடம் பேசினோம்.

“மின் தேவைக்காகத்தான் கூடங்குளம் அணு உலை அமைக்கப்படுகிறது என்று மத்திய, மாநில அரசுகள் மக்களை ஏமாற்றி வருகின்றன. ஆனால் கூடங்குளம் மூலம் கிடைக்கும் மின்சாரம் தமிழக மக் களின் மின் தேவையை பூர்த்தி செய்ய அல்ல. இதைப் பற்றி மத் திய அரசு எவ்வித உத்திரவாத மும் தரவில்லை.

தமிழகத்தின் மின் தேவை யைப் பூர்த்தி செய்ய வேண்டு மானால் நெய்வேலியிலிருந்து பெறப்படும் மின்சாரமே போது மானது. இதிலிருந்து முல்லைப் பெரியாறு விஷ யத்தில் தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் கேரளாவிற்கும், காவிரி தண்ணீரை விட மறுக்கும் கர்நாடகாவிற்கும், பாலாற்றில் தடுப்பணை கட்டும் ஆந்திரா விற்கும் மின்சாரம் பகிர்ந்தளிக் கப்படுகிறது. இதனை நிறுத்தி னால் தமிழகத்தில் மின் தடை இல்லாமல் போகும்.

அதோடு கடந்த 2010 ஜூன் மாதம் இந்தியாவும் இலங்கையும் போட்டுக் கொண்ட ஒப்பந்தத் தின்படி இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மின்சாரம் தருவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந் தியாவின் பவர் கிரீட் கார்ப்பரே ஷன் என்கிற நிறுவனமும், இலங் கையின் சிலோன் எலக்ட்ரி சிட்டி போர்டும் இணைந்து ராமேஸ்வரத்திலிருந்து தலை மன்னார்வரை மன்னார் வளைகுடா கடலுக் கடியிலிருந்து கேபிள் வழியாக இந்த மின்சா ரத்தை எடுத்துச் செல்லும் திட்டத்தில் ஈடுபட வுள் ளன.

ஆக, இலங்கைக்கு மின்சாரம் என்பது இலங்கையின் மன்னார் பகுதிக்கு மிக அருகாமையில் இருக்கும் கூடங்குளத்திலிருந்துதான் போகும் என்பது பாமரனுக்கும் தெரியும். இலங்கையின் மின்சாரத் தேவைக் காவும், இந்தியாவில் அனு மதிக்கப்ப டும் பன்னாட்டு பகாசுர கம்பெனிக ளுக்கு வழங்கவுமே கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து பெறப்படும் மின்சாரம் பயன்படும். தமிழ் மக்களுக்கு இல்லை...'' என் றார் தோழர் தியாகு தீர்மானமாக!

தோழர் தியாகு கூறுவதை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த 2010ம் ஆண்டு மின்சார வர்த்தகம் தொடர்பாக இந்தியா - இலங்கை போட்டுக் கொண்ட ஒப்பந்தப்படி 2300 கோடிக்கான இந்தத் திட்டம் 2013 அல்லது 2014ல் நிறைவடையும் என இந்தியாவின் பவர் கிரீட் நிறுவனத்தின் தலைவர் சதுர்வேதி சமீபத்தில் தெரிவித்துள்ளார். பவர் கிரீட் நிறுவனமும் இலங்கையின் சிலோன் எலக்ட்ரிக் போர்டும் இணைந்து மன்னார் வளைகுடா பகுதியில் ஆழ் கடலில் கேபிள் அமைக்கும் பணிகளை மேற்கொள்ளத் தயாராகி வருகின்றன.

இந்தியத் தரப்பில் மதுரையிலிருந்து டவர் அமைத்து உயரழுத்த கம்பிகள் வழியாக மின்சாரத்தை கடற்பகுதிவரை கொண்டு சென்று அங்கிருந்து கடலுக்கடியில் கொண்டு செல்லும் பணியை இலங்கை தரப்பிலிருந்து மேற்கொள்ளப்பட்டு இலங்கை அனுராதபுரத்திலுள்ள பவர் நெட்வொர்க்கிற்கு இணைப்பு கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் சதுர்வேதி.

இதுபோன்ற திட்டங்கள் தேவையில்லை!

கூடங்குளம் மக்களுக்கு துரோகமிழைத்த தமிழக அரசு, அவர்களை குஷிபடுத்த வளர்ச்சிப் பணிகளுக்காக 500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தீர்மானித்திருக்கிறது. இப்பகுதியில் வசிக்கும் மீனவர்கள் தங்களது விசைப்படகுகள் பழுதாகி விட்டால் நாகர்கோவிலுக்கு எடுத்துச் சென்றுதான் சரி செய்ய முடிகிறது. அதனால் கூடங்குளத்திலேயே பழுது நீக்கும் நிலையம் அமைத்துத் தரப்படுமாம்.

மீனவர்கள் பிடிக்கும் மீன்களை பதப்படுத்த குளிர் பதனீட்டு நிலையம் அமைக்கப்படுமாம். அந்தப் பகுதி மக்களுக்கு வீட்டு வசதிகளும், சாலை வசதிகளும் ஏற்படுத்தப்படுமாம். இதையெல்லாம் சொல்லும் அரசால், அணு உலையைச் சுற்றி 40 கி.மீட்டருக்குள் அணுக்கதிர் பாதிப்பு ஏற்படும் என்று சொல்லப்படும் நிலையில் அப்பகுதி மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் 3 மாதங்களுக்கு ஒரு முறையோ, 6 மாதங்களுக்கு ஒருமுறையோ மருத்துவக் குழுவினர் மூலம் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று சொல்ல முடியவில்லை.

மக்கள் விஞ்ஞானிகளின் கேள்விகளுக்கு அரசு பதில் தந்தால் போதும். இதுபோன்ற திட்டங்களைத் தீட்ட வேண்டிய அவசியமிருக்காது.

Pin It