பெரியாரின் பார்ப்பனிய ஆதிக்க எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, பெண் விடுதலை என தமிழ்ச் சமூகத்திற்கு அவர் செய்த ஆக்கப்பூர்வமான பங்களிப்புகளை அங்கீகரிக்கும் அதே வேளையில், பெரியார் மீது சில திறனாய்வுகளை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள், கட்சியின் இதழான தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டத்தில் முன் வைத்தார். 

இது குறித்து, அண்மையில் வெளிவந்த ‘கருக்கல்’ என்ற திங்களிதழுக்கு (மார்ச்-ஏப்ரல் 2012), த.தே.பொ.க. தலைவர் தோழர் பெ.மணியரசன் வழங்கிய செவ்வியில் கூறியதை இங்கு பதிகிறேன். 

பெரியாரை விமர்சிப்பதால் ஒருவர் பிற்போக்குவாதியாகிவிடுவார் என்று சொன்னால் அது பெரியாரின் பகுத்தறிவுவாதத்திற்கு உகந்ததாக இருக்காது. பெரியார் பக்தி மார்க்கத்திற்கே உரியதாக இருக்கும். காரல் மார்க்சிலிருந்து பெரியார் வரை அனைவரும் திறனாய்வுக்கு உட்பட்டவர்களே.  

பெரியாரின் பார்ப்பனிய ஆதிக்க எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, பெண் விடுதலை ஆகியவை குறித்த கருத்துகளும் அவற்றிற்காக அவர் நடத்திய போராட்டங்களும் தமிழர் வரலாற்றில் குறிப்பிடத்தக்க பங்காற்றியிருக்கிறது. அதற்காக அவரை த.தே.பொ.க. பாராட்டுகிறது. ஆனால் இனம், மொழி, தேசியம், தேசம் குறித்த அவரின் கருத்துகள் முழுக்க முழுக்க தமிழினத்திற்கும் தமிழ்த் தேசியத்திற்கும் எதிரானவை.  

தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று அவர் தொடர்ந்து கூறி வந்தது, தமிழைப் புறந்தள்ளிவிட்டு ஆங்கிலத்தைப் படிக்குமாறும் வீட்டில் கூட வேலைக்காரியுடன் ஆங்கிலத்தில் பேசும் நிலை வரவேண்டும் என்றும் பெரியார் கூறிய கருத்துகள் போன்றவை மொழியியல் குறித்த அறிவியலுக்கு எதிரானவை. ஆங்கிலத்தின் மீது அவருக்கு இருந்த மூட நம்பிக்கைக்கான சான்று.  

ஆரியர்கள் திணித்த திராவிடம் என்ற திரிபுக் கருத்தியலை ஏற்று அவர் பரப்பியது தமிழினத்திற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் இனத்தின் பெயரான தமிழர் என்பதையே மறுக்கவும் மறைக்கவும் பெரியாரின் கருத்துகள் துணை செய்தன. தேசியம் என்பதே பாசிசம் என்று அவர் வரையறுத்தார். அதுவும் சமூக அறிவியல்படி பிழையான கருத்து.  

தமக்கு மொழிப்பற்றோ, இனப்பற்றோ கிடையாது என்று திரும்பத்திரும்பக் கூறினார். ஆரியத்தை எதிர்த்து இன அரசியல் நடத்திய பெரியாருக்கு தமக்கான ஓர் இன அரசியல் வேண்டாமா? இனப்பற்று இல்லை என்று சொல்வது சரியா? தமிழர் மரபையும் தமிழர் இலக்கியச் செழுமையையும் முற்றிலுமாகப் பெரியார் எதிர்த்தார். இவை போன்ற அவருடைய பிழையான கருத்துகளைத்தான் த.தே.பொ.க. விமர்சிக்கிறது. நான் ஏற்கெனவே சொன்னது போல் பெரியார் அளித்த பங்களிப்பை நன்றியோடு ஏற்றுக்கொண்டே இந்த விமர்சனத்தைச் செய்கிறோம்” 

இவ்வாறு பெரியார் மீது முன்வைக்கப்பட்ட பல திறனாய்வுகளையும் பெரியாரியவாதிகளால், அவதூறு என்றும் புனைவுகள் என்றும் தொடர்ந்து புறந்தள்ளி வந்தனரே ஒழிய, தர்க்கப் பூர்வமாக எதிர்க்கவில்லை. அவற்றுக்கு உரிய விடை எதுவும் அளிக்கப்படவில்லை. 

பெரியார் முன்வைத்த ‘திராவிட’க் கருத்தியல், தென்னகத்துப் பார்ப்பனர்களையேக் குறிக்கிறது என்பதற்கான பல ஆதாரங்களை முன்வைத்து, தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழில், வரலாற்றியல் ஆய்வாளர் முனைவர் த.செயராமன், பழந்தமிழர் இலக்கிய ஆய்வாளரும், இயக்குநருமான தோழர் ம.செந்தமிழன் ஆகியோர் பல கட்டுரைகளை எழுதினர். இவற்றுக்கும் பதில் கிடையாது. 

ஆனால், தொடர்ந்து இவற்றை மறுக்காமல் இதற்குரிய தர்க்கப்பூர்வமான பதில்கள் எதனையும் அளிக்காமலும் இவற்றை அவதூறு என்று கடந்து செல்லவே விரும்புகின்ற பல ‘பகுத்தறிவு’வாதிகள் பெரியாரை இன்றும் கடவுளாக நினைத்து வழிபட முற்படுகின்றனர். 

சாதி ஆதிக்கத்தை எதிர்ப்பதற்காக, பொத்தாம் பொதுவாக அனைவரும் கிராமங்களை விட்டு வெளியேறி நகரங்களுக்குச் செல்லுங்கள் என்று பெரியார் இட்ட கட்டளை, நகரமயமாதலை மேலும் மேலும் தீவிரப்படுத்தி கிராமங்களை அழித்தொழிக்கத் துடிக்கும் உலகமயமாக்கலுக்கு கருத்தியல் ரீதியாக மறைமுகமாக உதவி புரிகின்றது. நகரமயமாக்கல் சாதியை ஒழித்துக் கட்டப் பயன்படவில்லை, ஒளித்து வைத்துக் காட்டத்தான் பயன்படுகின்றது என்பதை நடைமுறையில் நாம் உணர்ந்துள்ள நிலையில், ‘கிராமங்களை ஒழித்தால் சாதி ஒழியும்’ என்று கூறிய பெரியாரின் கருத்தை எப்படி அங்கீகரிக்க முடியும்? 

இதைத் தொடர்ந்தே, தேவிகுளம், பீரிமேடு உள்ளிட்ட தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்து வந்த தாலுக்காக்கள் கேரளாவுக்கு தாரை வார்க்கப்படுவது குறித்து தனக்கு கவலையில்லை என்று அறிவித்தது, எவ்வித நிபந்தனையுமின்றி காங்கிரசை ஆதரித்தது என பெரியார் மீது திறனாய்வு செய்து, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் கொள்கை இதழான தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழில், கட்சியின் தலைவர் தோழர் பெ.மணியரசன் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். (காண்க: தேவிகுளம் பீரிமேடு மீட்பும் திராவிட குழப்பங்களும், http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=18791&Itemid=139

periyar_cartoon_620

அக்கட்டுரையில், தோழர் பெ.மணியரசன் பெரியார் மீது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். அவற்றுள் கீழ்க்கண்டவை முக்கியமான சில கேள்விகள் ஆகும். 

  1. ம.பொ.சி. தேவிகுளம் பீரிமேட்டை மீட்க வேண்டுமென அழைத்த கூட்டுப் போராட்டத்தில் கலந்து கொள்ள இந்தித் திணிப்பு எதிர்ப்பு, மாநில சுயாட்சி ஆகியவற்றை நிபந்தனைகளாக விதித்த பெரியார், காமராசரையும் காங்கிரசையும் ஆதரிக்க ஏன் அவர் எந்த நிபந்தனைகளையும் போடவில்லை?  
  1. 1957, 1962 தேர்தல்களில் காங்கிரசு வெற்றிக்காக உழைக்க ஏன் இந்தித் திணிப்பு எதிர்ப்பு, மாநில சுயாட்சி ஆகியவற்றை நிபந்தனைகளாக பெரியார் போடவில்லை? 
  1. 1965-இல் மாணவர்கள் நடத்திய மாபெரும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை காங்கிரசு ஆதரவு நிலையிலிருந்து கொண்டு பெரியார் ஏன் எதிர்த்தார்? 

மேற்கண்ட கேள்விகளுக்கு பெரியாரியவாதிகளிடம் உரிய பதில்கள் இல்லை. மாறாக, தோழர் பெ.மணியரசன் சுட்டிக்காட்டிய இச்செய்திகள் அனைத்தையும் கண்ணை மூடிக் கொண்டு அவதூறு என்று மறுத்தனர். 

தேவிகுளம், பீரிமேடு தாலுக்காக்கள் பறிபோவது பற்றி தனக்கு கவலையில்லை என்று பெரியார் 11.10.1955 நாளிட்ட தினத்தந்தி இதழில் பேட்டி கொடுத்ததை தோழர் பெ.மணியரசன் சுட்டிக்காட்டிய போது, அப்பேட்டியே பொய் என்று 'பகுத்தறிவு' கொண்டு மறுத்துப் பேசினர் சிலர். தி.க.வின் ஏடான 'விடுதலை'யில் வெளிவந்தால் மட்டுமே அப்பேட்டி சரியானதென்றும், 'தினத்தந்தி' இதழுக்கு பெரியார் அப்படியொரு பேட்டியே வழங்கவில்லை என்றும் மெத்தப் படித்ததாக நினைத்துக் கொண்டுள்ள 'சில' மேதாவிகள் முழங்கினர். 

கடவுள் மறுப்பை தனது கொள்கையாக கொண்ட பெரியாரையே இன்று கடவுளாக நினைத்து வழிபடுகின்ற மனநிலை கொண்ட இந்த 'மேதாவி'களுக்கு இப்பேட்டி உவப்பானதாக இருக்காது தான். இருந்தாலும், இதனை தவிர்க்காமல் வெளியிட்டே ஆக வேண்டும், பெரியார் மீதுள்ள இவர்களது ஐயத்தைப் போக்க வேண்டும் என்ற நோக்கில், தினத்தந்தியில் வெளியான பெரியாரின் பேட்டியை அந்நாளிதழ் வடிவிலேயே இங்கு வெளியிடுகிறோம். பெரியார் இப்பேட்டியில் கூறியிருப்பது சரிதானா என்பதை இப்பேட்டியை முழுமையாக படிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள். 

periyar_inerview_700

'விடுதலை' இதழில் வெளிவந்தால் மட்டுமே இது சரி என்றும் வேறு இதழ்களில் வெளிவந்தால் இது பொய் என்றும் கூறுபவர்கள், 'பொய்'யான பேட்டியை வெளியிட்டமைக்காக தினத்தந்தி இதழை கண்டித்தார்களா? அல்லது கண்டிப்பார்களா? 

இந்த ஆதாரங்களையும் பெரியார் பக்தர்கள் முழுமையாக உள்வாங்குவார்கள் என நாம் எதிர்பார்க்க முடியாது. இவற்றையும் அவதூறு என்றும் புனைவு என்றும் கருதி ஓடத் துடிப்பதற்கு முன், அவர்கள் அடிக்கடி உச்சரிக்கும் 'பகுத்தறிவு' கண் கொண்டு இதனை பரிசீலிக்க வேண்டும் என்றே நாம் விரும்புகிறோம்! 

தோழமையுடன்,

க.அருணபாரதி

தலைமைச் செயற்குழு உறுப்பினர்,

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

Pin It