உலகின் இளைய ஜனநாயக நாடுகளில் ஒன்று இந்தியா. தனக்கெனத் தனித்துவமான ஓர் அரசியலமைப்புச் சட்டத்தையும், பாராளுமன்ற - நிர்வாக அமைப்பையும் அது உருவாக்கி 60 ஆண்டு கூட ஆகவில்லை. சாதி ஏற்றத்தாழ்வுகளாலும், சமயப் பகைமைகளாலும், இன ஆதிக்க உணர்வுகளாலும், கொதிப்புகள் உச்சத்தை நோக்கி உயர்ந்து கொண்டிருக்கின்றன. எல்லாத் தளங்களிலுமே சமத்துவத்துக்கான போராட்டங்கள் நிகழ்ந்த வண்ணமாய் உள்ளன. ஜனநாயகத்தின் அடிப்படைப் பண்பாக உள்ள அதிகாரப் பகிர்வு இன்னும் முறையாக நிகழவில்லை. பெண்களுக்கான அதிகாரப் பகிர்வு குறித்த முயற்சிகள் ஆண்களால் தந்திரமாகத் தள்ளிப் போடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

naliஆயினும் எல்லாம் மோசமாய் கிடக்கின்றன எனச் சொல்லிவிட முடியாது. ஜனநாயகப்படுத்துதல் என்னும் எல்லையற்ற நெடும் பயணத்தின் ஒரு வெற்றிப் படியாக இப்போது கடந்திருப்பது, உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தில் மூன்றில் ஒரு பங்கைப் பெண்களுக்குப் பகிர்ந்தளிப்பது என்னும் முதற்கட்ட வெற்றி.

ஆனாலும் அதிகாரத்தை மிக நெடுங்காலமாகத் தாமே அனுபவித்து வந்த ஆணாதிக்கச் சமூகம் இதை சகித்துக் கொள்ளத் தயாராக இல்லை. உள்ளாட்சி நிர்வாகத்தின் தலைமையைப் பெண்ணிடமிருந்து பிடுங்கி கைவசப்படுத்திக் கொண்டு, பெண்ணை ஒரு நிழலாக, ரப்பர் ஸ்டாம்பாக ஆக்கி விடுகிறார்கள். அப்பெண்ணின் குடும்பத் தலைவர்கள்.

ஒரு பள்ளிக்கூடச் சுதந்திர தினவிழா. தேசியக் கொடியை ஏற்றி வைப்பதற்கு ஒப்புதல் அளிக்கிறார் ஊராட்சி மன்றப் பெண்தலைவர். காலை நேரம் மாணவர்களும், ஆசிரியர்களும் கொடியேற்றப்பட வேண்டிய கம்பத்தைச் சுற்றி நின்றுக் கொண்டிருக்கிறார்கள். பைக் ஒன்று வருகிறது. வந்தவர் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர். தலைவர் எங்கே? "அவருக்கு வசதி இல்லை, அதுதான் நான் வந்திருக்கிறேனே!" என்கிறார் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் அலட்சியமாக. பெண்களுக்கு அதிகாரம் வழங்கும் முயற்சியின் இன்றைய நிலை இது. இப்படி ஒரு காட்சியை விவரிக்கிறது, சிந்துக் கவிஞர் என புகழப்படும் வாய்மைநாதனின் "நாலி" என்னும் நாவல். "இதற்குத் தீர்வு? சமூகப் போராட்டம் வழியே பெண் தன்னை வலுப்படுத்திக் கொள்ளுதலே. போராட்டமில்லாமல் வாழ்வுமில்லை, வளர்ச்சியுமில்லை. இந்த நாவலிலும் சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கான போராட்டத்தில் களமிறங்கி, சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதோடு தன்னையும் வலிமைப்படுத்திக் கொள்ள முயலுகிறார் கண்ணம்மா என்கிற இளம் பஞ்சாயத்துக் தலைவி." போர்க்களத்திலும் இதே பிரச்சனைதான். கணவர் என்கிற குடும்ப அதிகாரத்தைக் கையிலெடுத்துக் கொண்டு, கண்ணம்மாவை நிழலாக்க முயலுகிறார் கண்ணம்மாவின் காதல் கணவர் மாதவன்.

இந்தச் சூழலில், களத்தில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறார் மணியம்மா என்னும் அனுபவமிக்கச் சுற்றுச்சூழல் இயக்கப் போராளி. கண்ணம்மாவைப் படிப்படியாக வளர்த்து வலுவேற்றி, அவர் இளம் தாயாகிய இக்கட்டான நிலையிலும் வீராங்கனையாகப் போர்க்களத்தில் நிமிர்ந்து நிற்க வைக்கிறார் இவர்.

நாகை மாவட்டக் கடலோரப் பகுதிகளில் பெரும் பண முதலைகளால் நடத்தப்படும் இறால் பண்ணை விவசாயம் இறால் வளர்ப்போருக்கு லட்சக்கணக்கான டாலர் வருமானம் தருகிறது. வருமானத்தின் ஒரு பகுதி அரசாங்கத்துக்குக் கிடைப்பதால், அரசாங்கமும் இதை ஊக்குவிக்கின்றது.

இந்த இறால் பண்ணை விவசாயத்தின் விளைவுகளோ படுபயங்கரமானவை. நிலத்தை நிரந்தரமாகக் கெடுத்து விடுகிறது. இறாலுக்குப் போடும் உணவு வகைகளும், மருந்து வகைகளும் நீரை நஞ்சாக்குகின்றன. நிலத்தடி நீரும் பாழாகிவிடுகிறது. சிற்றாறுகள் கடலுடன் கலக்கும் முகங்களாக நாலிகளின் போக்கையும் சிக்கலுக்குள்ளாக்குகின்றன. பசிய வயல்கள் அழிகின்றன. வாழும் நிலத்தை இழந்த மக்கள் போராட்டத்தில் இறங்குகிறார்கள். அவர்கள் ஒரு புறமும், நிலத்தைச் சுரண்டிக் கொழுக்கும் பண முதலைகள் மறுபுறமுமாக வரிசைப்படுகிறார்கள். இவர்களுக்கிடையே சுரண்டுவோரைக் கைவிட இயலாமலும், போராடும் மக்களை நேருக்குநேர் சந்திக்க இயலாமலும் விலாங்குத்தனம் பண்ணுகிறார்கள் ஆளும் அரசியல் சக்திகள். இவர்களின் கையாளாகி, சுரண்டலில் சுவை கண்டு சோரம் போகும் பொறுக்கிகளின் பிரதிநிதியாக நிற்கிறார் ஊராட்சி மன்றத் தலைவி கண்ணம்மாவின் கணவன் மாதவன்.

இந்தப் போராட்டங்களின் ஊடாக ஊராட்சி நிர்வாகத்தின் சுரண்டல்காரர்கள் செய்யும் அட்டூழியங்கள், குறிப்பாக அதிகாரத்தில் இருக்கும் பெண்களின் கணவன்மார் செய்யும் தில்லுமுல்லுகள், அதற்காக அவர்கள் பயன்படுத்தும் லஞ்ச லாவண்ய ஆயுதங்கள், அங்குமிங்குமாகப் பிளவுபடும் மக்களின் முகங்கள் என இன்னொரு உலகத்தையும் திறந்து காட்டுகிறது நாவல். கடுமையான நெருக்கடிக்குள்ளாகிறார் ஊராட்சி மன்றத் தலைவர் கண்ணம்மா. தனக்குள்ளே இயல்பாகப் பொங்கிக் கொண்டிருக்கும் போர்க்குணமிக்க மனிதத் தன்மையாலும், அதை வடிவப்படுத்த மணியம்மை தரும் நேர்மையான ஆதரவுகளாலும் படிப்படியாக வளர்கிறார் அவர்.

நாவலுக்குள் வைரத்துண்டு போல இன்னொரு அம்சம், சாம்பான் என்னும் பெயரில் அறிமுகமாகும் ஒரு தலித்து முதியவரின் கதை. தலித்துகளுக்கு விவசாயம் செய்வதற்காக அரசாங்கம் நிலம் வழங்கிய காலத்தில், இவருக்கும் 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. அந்த நிலம் எப்படி உயர்சாதியினரால் நயவஞ்சகமாகப் பிடுங்கப்பட்டு, இறால் பண்ணையாக மாற்றப்படுகிறது என்பதைப் படிக்கும்போது, வாசகர் மனம் பற்றி எரிகிறது. சாம்பானின் பேரன் அஞ்சான் கொலை செய்யப்படும் காட்சி மனதை நடுங்க வைக்கிறது. அந்தக் கொலைக்கு அஞ்சானின் வாரிசான கட்டயன் பழிவாங்கத் துடிக்கிறார். ஆனால் உழைக்கும் மக்களின் அடிமனதில் ததும்பி நிற்கும் அன்பின் ஆற்றல் எப்படி அவரைத் தடம் மாற்றுகிறது. தான் கொல்ல நெருங்கும் வேலுச்சாமி - தன் வம்சத்தை வேரறுத்துவரும் உயர்சாதி வம்சத்தின் சமகால வாரிசான வேலுசாமி - பெருவெள்ளத்தில் சிக்கிக் கிடக்கும் தருணத்தில், காப்பாற்றும் கருணை மனமாற்றமாக அது வெளிப்படுகிறது என்பதைப் படிக்கும்போது வாசகர் மனம் நெகிழ்ந்து கரைகிறது.

இப்படியாக, சமூகத்தில் இன்று நிகழும் பலமுனைப் போராட்டங்களின் சித்திரமாக விரிகிறது நாவல்.

நாவலில் வாசகர்களை ஈர்ப்பது ஆசிரியரின் சித்திரிப்பு முறை. ஒரு பாத்திரத்தையோ காட்சியையோ ஒரு நிகழ்ச்சியையோ அவர் சித்திரிக்கும் முறையில் வாசகர் மனக்கண்முன் அது உயிர் பெற்றுப் பளீரென விரிந்து விடுகிறது. ஆசிரியர் பயன்படுத்தும் வட்டார மணம் நிறைந்த உரையாடல் மொழி, அவர் சொல்லுகின்ற அழகழகான உவமைகள்,, பழமொழிகள் எல்லாமே அபூர்வமானவை. அந்த வட்டாரத்துக்கே உரிய சிறப்புத்தன்மை கொண்டவை. பாத்திரங்களினுள்ளே நுழைந்து அவர்களின் ஆழ்மன ஓட்டங்களின் சிறுசிறு அசைவுகளையும் வெளிப்படுத்தும் நுட்பம் மிகச் சிறப்பானது. ஆசிரியரின் கவித்துவ ஆற்றல் நாவல் முழுவதிலும் நிரம்பித் ததும்பிக் கிடக்கிறது.

இந்தக் கவித்துவ ஆற்றல் தேவைக்கு அதிகமாக வெளிப்பட்டு, நாவலின் அழகையும், ஆழத்தையும் மறைக்கிறதோ என்ற எண்ணமும் வாசகருக்குப் பல சந்தர்ப்பங்களில் ஏற்படுகிறது. பாத்திரங்களின் உரையாடல்களையும், சித்திரிப்புகளையும் மீறி, ஆசிரியர் குரல் தேவையில்லாமல் பல இடங்களில் வெளிப்பட்டு, நாவல் வாசிப்புக்கு இடையீடு செய்கிறது.

இன்னொரு குறையாக வாசகரை உறுத்துவது இறால் பண்ணை வளர்ப்பு பற்றிய விவரச் சித்திரிப்பு. ஒரு நாவலில் இம்மாதிரிச் செய்திகள் இடம் பெறுவது தவிர்க்க முடியாதது, தேவையானது கூட. சம்பவங்களின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள, அல்லது சூழலை விளங்கிக் கொள்ள, அல்லது சம்பந்தப்பட்ட பாத்திரங்களை மேலும் தெளிவாக விளக்கிக் கொள்ள, அல்லது நாவலின் களத்தைப் புரிந்து கொள்ள எவ்வளவு செய்திகள் தேவையோ அவ்வளவு செய்திகள் மட்டும் நாவலில் சிக்கனமாகப் பயன்படுத்தப்பட வேண்டும். அதற்கு மேல் உள்ளவைகள் நாவலில் துருத்திக் கொண்டு நிற்கும். நாவலின் அழகைக் கெடுக்கும். இறால் வளர்ப்பு நூலிலிருந்து தெரிந்து கொள்ளத்தக்க செய்திகளை நாவலில் விலாவரியாக விளக்கியிருப்பது நாவலின் கலைக் கட்டமைப்பைப் பாதிக்கும்.

மணியம்மை என்னும் ஒரு வயதான பெண் "அவள்" என்று நாவலில் ஒருமையில் சொல்லப்படுவதும், சாம்பான்கள் பற்றிச் சொல்லப்படும் போதும் "ஒருமை" பயன்பட்டிருப்பது தவிர்த்திருக்க வேண்டும்.

நாலி என்பது ஓர் இயற்கை வடிகாலைக் குறிக்கும் சொல். தஞ்சைத் தரணியின் கடலோர விளைநிலப் பகுதிகளில் புழங்கும் வட்டாரச் சொல். அந்த மக்களின் மண்ணையும், நீரையும், வளத்தையும் குறித்து நிற்கும் குறியீட்டுச் சொல்லாக அது நாவலில் இடம் பெற்றிருக்கிறது. கடலோர விளை நிலங்களைப் பணத்துக்காக நிரந்தரமாக அழித்துக் கொண்டிருக்கும். பணத்தாசை பிடித்த கும்பல்கள் வளர்ச்சி என்ற பெயரில் சுற்றுச் சூழல் விரோத காரியங்களைச் செய்வதும், அதைத் தடுக்க மண்ணுக்குரியவர்கள் போராடுவதுமான விரிந்த களத்தின் குறியீடாகவும் அது அழகாக உருவம் பெறுகிறது. அந்தப் போராட்டத்தின் மையமாக புதிய ஜனநாயக யுகத்தில் மலரத் தொடங்கியுள்ள பெண்மை கம்பீரமாக எழுச்சி பெறச் செய்யும் காட்சி நாவலுக்குக் காலப் பொருத்தத்தையும், இடப் பொருத்தத்தையும், அழுத்தமான பண்பாட்டுப் பொருத்தத்தையும் தருகிறது. கவனிப்புக்குரிய நாவல்.

- பொன்னீலன்

Pin It