இப்போது பத்திரிகைகளில் முக்கியச் செய்திகளில் ஒன்றாகி விட்டது மின்தடை நேரம். இதை மட்டும் பார்க்காவிட்டால் மின் தடையில் மாட்டிக்கொள்வோம். பார்த்தவர்கள் அவர்களுக்குள் வைத்துக்கொள்ளாமல் மற்றவர்களுக்கு உதவி செய்வதுபோல்  மின்தடை நேரத்தைத் தடையில்லாமல் பரப்பி விடுவது உண்டு. பகல்-இரவு மின்தடைக்கு ஏற்றபடி தங்களின் அன்றாடப் பணி களை ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டும். அறிவித்த நேரங்களில் மட்டுமல்லாது அறிவிக்காத நேரங்களிலும் அதிரடியாய் மின்தடை ஏற்பட்டுவிடுவதுண்டு. எப்போது வரும், எப்படி வரும் என்பது பற்றியெல்லாம் சொல்ல முடியாது.

“இப்படி கரண்ட் இல்லாத நேரங்களை மட்டுமே சொல்லிச் சொல்லி எங்களைக் கடுப்பேத்துறதுக்குப் பதிலா கரண்ட் இருக்கிற நேரங்கள மட்டுமே சொல்லுங்கப்பா...” என்று மக்களின் மனம் சலிப்போடு எரிச்சலடைகிறது.

‘எலக்ட்ரிய நம்பி இலை போடக்கூடாது’ என்று அந்தக் காலத்துப் பழமொழி உண்டு. அதாவது, மின்சார வெளிச்சம் இருக் கிறதே என்று நம்பி இரவில் விருந்து பரிமாறுகிறபோது திடீரென மின்சாரம் போய்விடலாம். அந்தச்  சமயத்தில் இலை எங்கே, சோறு எங்கே, தண்ணீர் தம்ளர் எங்கே, பரிமாறுவோர் எங்கே என்று இருட்டில் கிடந்து தடுமாறவேண்டும்.  அதனால் அந்தக் காலத்தில்  மின்சார இருப்பின்மீது முழு நம்பிக்கை  வைக்காமல் மண்ணெண் ணெய் அரிக்கேன் விளக்கை ஆபத்பாந்தவனாக அருகில் வைத்துக் கொள்வார்கள். இன்று அதுபோன்ற நிலைமை வந்துவிட்டது.

neyveli_370வீடுகளில் மெழுகுவர்த்தி, சார்ஜர் லைட், மண்ணெண்ணெய் அரிக்கேன்  விளக்கு இவற்றின் முன்னேற்பாடுடன்தான் இன்று மக்கள் மின் தடையை எதிர்கொள்கிறார்கள். தொழில், வணிக நிறுவனங்களென்றால் இன்வெர்டர், ஜெனரேட்டர்  ஆகிய மின்வழங்கிகள். தினமும் இவற்றுக்கு ஆகும் செலவு மின்கட்டணச் செலவைவிட பல மடங்கு அதிகம். மாணவர்கள்  பள்ளியில் படித்தது போதாதென்று இரவில் வீட்டுப் படிப்பும், தாய்மார்களின் சமையல் பணி யும், தொழில், விவசாயம், வணிகம் என சகல துறைகளும் பெரும் பாதிப்புக்கு  இலக்காகியுள்ளன.

இப்போதெல்லாம் விசேஷங்களுக்கு அய்யரிடம் நல்ல நேரம் குறித்துத் தரக் கேட்பதுகூட மின்சாரம் உள்ள நேரமாகப் பார்த்துத் தான்.

இரவில் ஏற்படும் மின்தடையால்  கொசுக்களுக்குக் கொண்டாட் டம். நல்ல ஆழ்ந்த  நித்திரையில் இருப்பவர்களுக்குக்கூட அது விழிப்பூட்டும் பணி செய்துவிடுகிறது!

ஊரை உலகத்தரம் ஆக்குவது கிடக்கட்டும்;  கொசுப் பெருக்கம் இல்லாத் தரம் ஆக்குவேன் என்று உள்ளுர்த் தர வாக்குறுதியுடன் ஒருவர் வர மாட்டாரா என்றிருக்கும் அந்த வேளை யில். ‘தமிழகத்தில் இருண்ட காலம் களப்பிரர் ஆட்சிக்காலம்’ என்று - பாடத்தில் உள்ளபடி சொல்லிச் சொல்லியே பழக்கப்பட்ட மாணவர்கள் கூட இப்போது, இருண்ட காலம் எது என்று ஆசிரி யர் கேள்வி கேட்டால் தினமும் படும் அனுபவத் தில் “தமிழகத் தில் இருண்ட காலம் மின்தடைக் காலம்” என்று மாற்றிச் சொல்லிவிடவும் கூடும்.  ஆசிரியரும் மின் தடை அனுபவத்தில் அதை ஒரு கணம் ரசிக்கவும் கூடும்.

இப்போதெல்லாம் இரவு மின்தடைப் பொழு தின் இருண்ட வானப் பின்புலத்தில் வட்ட வெண் ணிலா பால் கிண்ணமாய்த் தெரிகிறது.

நிலவைச் சுற்றிலும் நட்சத்திரங்கள் தெரிகின்றன.

“சோளப் பொரி மத்தியிலே
சுட்டுவச்ச தோசை போலே
தோணுதே இந்தச்
சோதி நிலா”

- என்ற ஒரு கிராமியப் பாடலை  நினைவுக்குக் கொண்டு வருகிறது அந்த நிலாக்காட்சி (இங்கே சோளப் பொரி என்பது நட்சத்திரங்கள்) நகர வாழ்க்கையில் நிலவை மறந்தவர்கள்கூட இந்த நிலாக் காட்சியை ஒரு கணம் நின்று ரசிக்கலாம்.

வீட்டில் ராத்திரிப் பாடம்  படிக்கிற வேளையில் மின்தடை ஏற்பட்டு படிக்க முடியாமலாகி புத்த கத்தை மூடி வைத்துவிட்டு வீதிக்கு விளையாட் டுக்கு  வந்துவிடுகிறார்கள். பள்ளிப் பிள்ளைகள் இருட்டில் ஒளிந்து திருடன் விளையாட்டு விளை யாடுகிறார்கள். சின்னப் பசங்களின் இந்த விளை யாட்டைப் பார்க்கிறபோது அந்தக் காலத்தில் நாம் இரவு இருட்டில் தெருவில் திருடன் விளையாட்டு விளையாடிய சின்ன வயசு ஞாபகம் வரும். இப்படி, மலரும் நினைவுகள் வருவதற்குக்கூட இரவு மின்சாரத்தடை ஒரு காரணியாய் உதவுகிறது என்று கூடச் சொல்ல லாம்தான்!

இரவில் வீட்டு விளக்கோடு தெரு விளக்கும் அணைந்து இருண்டு கிடப்பதைப் பார்க்கிற போது, அந்தக் காலத்தில் தெருவிளக்கு வெளிச்சத் தில் படித்து கல்வியில் உயர்ந்த அறிஞர்கள் நினைவுக்கு வருவார்கள். அந்த வாய்ப்பைக்கூட மின்தடை பறித்துவிட்டது.

கடந்த மின்வெட்டு ஆட்சிக்காலத்தில் மின் துறை அமைச்சர் யாரென்று கேட்டால் அப்போதே பதில் கிடைக்கும் “ஆற்காடு வீராசாமி” என்று. இன்று மின்துறை அமைச்சர் யார்? என்று கேட் டால் கேட்டுச்சொல்கிறேன் என்பார்கள்.

kudankulam_370மக்களின் கோபத்தைக் கிளறிவிட்டுள்ள இந்த மோசமான மின்வெட்டைப் பயன்படுத்தி, யாரா வது ஒரு பிரகஸ்பதி “நான் ஆட்சிக்கு வந்தால் எல்லாருக்கும் இலவசமாக மின்சார இன்வெர்டர் தருவேன், ஜெனரேட்டர் தருவேன்” என்ற வாக் குறுதியுடன் ஒரு புதிய அரசியல் கட்சி ஆரம்பித்து விடவும் கூடும்.

‘ஷாக்’ அடிப்பது மின்சாரம் மட்டுமல்ல; மின் சாரத்தடையும் தான் என்று ஆகிவிட்ட இன்று, மின் சாரக் கட்டணத்தை உயர்த்த அரசு முயற்சி செய் கிறது. இதற்காகப் பல நகரங்களில் மக்களிடமும் மக்கள் பிரதி நிதிகளிடமும் கருத்தறிவதற்காகக் கருத்துக் கேட்புக் கூட்டமும் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டங்களிலெல்லாம் எதிர்ப்புதான் கிளம்பியது.

மின்வெட்டைக் கண்டித்து இன்று மாநிலம் முழுவதும் பலதரப்பு மக்களும் மனக்கொதிப் போடு போராடுகிறார்கள்.

தூத்துக்குடி மின்நிலையத்தில் நிலக்கரிப் பற்றாக் குறை. 1050 மெகாவாட்டுக்குப் பதிலாக 720 மெகா வாட் மட்டுமே இப்போது இங்கு மின்சாரம் உற் பத்தியாகிறது. இதுபோதாதென்று தொழில்நுட்பக் கோளாறும் சேர்ந்துகொண்டது.

நெய்வேலியில் முதல் நிலைச் சுரங்கத்தில் நீராவி இயந்திரக் கோளாறு; இரண்டாம்  நிலைச் சுரங்கத்தில் கொதிகலன்  கோளாறு. நிலக்கரிப் பற்றாக்குறை; தரமற்ற நிலக்கரியால் இயந்திரங்கள் பாதிப்பு.

மேட்டூர் அனல்மின்நிலையத்தில் சட்டர் இயந்திரக் கோளாறு அதனால் மின் உற்பத்தி பாதிப்பு.
வட சென்னை அனல் மின்நிலையத்தில் ஹைட்ரஜன் வாயுக் கசிவு. அதனால் மின் உற்பத்திக் குறைவு.

இப்படி, ஏதோ திடீரென பயங்கர ‘தானே’ புயல் வந்து மாநிலத்தில் மின் உற்பத்தி நிலையங் களாகப் பார்த்து அசுரத்தனமாகத் தாக்கி பழுதும் பாதிப்புமாகச் சேதத்தை ஏற்படுத்திவிட்டதைப் போல ஒரே சமயத்தில் இத்தனையுமா... ஆச்சரியம் தான்!

தமிழகத்தில்  மாறி-மாறி ஆட்சிசெய்த, செய்கிற திமுக, அதிமுக அரசுகளின்  நிர்வாகக் கோளாறும்,  மின்உற்பத்தி வளர்ச்சியில் தொடர் திட்டமிடலும் அக்கறையின்மையும்தான் இந்தப் பாதிப்புகளுக் கெல்லாம் காரணம் என்பதைத் தவிர வேறென்ன?

கடந்த பத்தாண்டுகளில் திமுக - அதிமுக அரசுகள் புதிய மின்திட்டங்களை உருவாக்க வில்லை. மின்தேவை என்பது அன்றாடம் அதி கரித்துவரும் நிலையில் மின்தேவையை நிறைவு செய்ய அரசிடம் ஆக்கப்பூர்வமான திட்டம் இல்லை. மின் பற்றாக்குறையின் அடிப்படைக் காரணம் இதுவென்றால், இன்றைய மின்தடைக்கு முன் சொல்லப்பட்ட மற்ற காரணமும் வந்து சேர்ந்துவிட்டது.

இன்றைய நிலைமையைச் சமாளிக்க தனது மின் தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு  உதவ மத்திய அரசுக்கும் மனமில்லை; வலியுறுத்திப் பெற தமிழக அரசிடமும் தொடர் முயற்சி இல்லை.

இன்று அவர்களின் அக்கறையும் கவலையும் சங்கரன்கோவிலில் மையம் கொண்டுள்ளது. எல்லாம் எலெக்ஷனுக்குத்தான். அதனால் அங்கு மட்டும் எல்லா நேரமும் கரண்டு உண்டாம். ‘ஒளி மயமாகிறது சங்கரன் கோயில்’ என்று பத்திரிகை யில் செய்தி வருகிறது. இது தேர்தல் முடியுற வரைக் கும்தான் என்று அந்த மக்களுக்கும் தெரியும்.

மிகப்பெரும் செலவில் கட்டமைக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணுமின் நிலையம் கூடாத அணுமின் நிலையமாக ஒரு தரப்பினரின் எதிர்ப்பால் முடங்கிக் கிடக்கிறது. அப்பகுதியில்  வாழும் மக் களின் அச்சத்தைப் போக்கி அந்த மக்களுக்கான நலத்திட்டங்களை அரசு அறிவித்து அமல்நடத்த வேண்டும் என்ற ஆக்கப்பூர்வமான ஆலோசனை யும் முன்வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் குடியரசுத் தலைவரும் அணுவிஞ் ஞானியுமாகிய அப்துல் கலாம் கூடங்குளம் அணு மின் நிலையத்தை நேரில் பார்வையிட்டு இது மிகவும் பாதுகாப்பானது என்றார். அந்தப் பகுதி யில் வாழும் மக்களுக்கு அரசு நலத்திட்டங்களை அமல்நடத்த வேண்டுமென்றார். மத்திய அரசு நிபுணர் குழுவும், மாநில அரசு நிபுணர் குழுவும் கூடங்குளம் அணுமின் நிலையத்தை நேரில் பார்வையிட்டு இது மிகவும் பாதுகாப்பானது என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மக்களின் அச்சம் போக்கப்படுவதும், கஷ்டப்படும் அந்த மக்களுக்கான நலத்திட்டங்களை அரசு நிறை வேற்றித்தருவதும் அவசியமாகும்.

இத்துடன், இன்று ஏற்பட்டுள்ள மின் தடைக் கான கோளாறுகள் என்பவை அவசரமாய்க் கவனிக்கப்பட வேண்டிவை.

இரு திராவிடக் கட்சிகளின் காலங்களில் அனல் மின் நிலையங்களைப் பழுதுபார்த்துச் சீர்படுத் தாமை; தொடர் பராமரிப்பு இல்லாதது, மின் உற்பத்திக்கான நிலக்கரி போன்ற அத்தியாவசியப் பொருட்களை தேவைக்கு ஏற்ப நிறைவு செய்யா தது, எதிர்கால மின் தேவைக்கு ஏற்ப புதிய மின் திட்டம் இல்லாதது ஆகிய இவை போன்ற நிர்வாகக் கோளாறும் எதிர்கால கண்ணோட்டம் இல்லாமையுமே இன்றைய மோசமான மின் வெட்டுக்கான காரணிகள்.

Pin It