சிறுகதை:

அடம் பிடித்து அழும் குழந்தையை வீட்டிலுள்ளவர்கள் ஒவ்வொருவரும் தூக்கிக் கொஞ்சினார்கள் - கெஞ்சினார்கள் - வேடிக்கை காட்டினார்கள். ஒன்றுக்கும் அடங்கவில்லை.

பக்கத்துக் கடைக்குப் போயிருந்த அதன் தாய் ஓடோடி வந்து, பிள்ளையை நெஞ்சோடு  அணைத்துக்கொண்டு முதுகைத் தடவிக் கொடுத் ததும், நொடியில் அழுகையை நிறுத்தி - கேவலுடன் சிரித்தது.

தாயின் அணைப்பில் அதற்குத் தேவையான அத்தனை ஜீவதிருப்திகளும் இருக்கின்றன. இத னால்தான் அதன் அத்தனை உணர்வுகளும் அடங்கி விட்டன.

செல்வக்குமார் மௌனமாக இருந்தான்.

தெருவிலே இரைதேடிக் கொண்டிருக்கும் அந்தக் கோழியின் நீண்ட மெலிந்த கழுத்தில் முடியே இல்லை, சதைப்பகுதி அப்படியே தெரி கிறது. உதிர்ந்துவிட்டதா? இல்லை, உரித்து விட்டார்கள் - அடையாளத்திற்கு.

மனிதர்களுக்கு உயிருடன் விளையாடுவதில் அலாதி ஆனந்தம்.

இப்படித்தானே இவனைப் பெற்றவர்கள் வளர்க்க முடியாது என்று விற்றுப்போய்விட்டார் கள். தொப்புள் கொடியை அறுத்த அன்றே, உறவுக் கொடியையும் எப்படி அவர்களால் துண்டித்துக் கொள்ள முடிந்தது?

என்ன கஷ்டமிருந்தாலும் தாங்களும் - இதற்கு முந்தைய குழந்தைகளையும் வைத்து வாழ்ந்து கொண்டிருக்கையில் என்னை மட்டும் வைத்துக் காப்பாற்ற முடியாது என்று விற்றுப் போனதற்கு எது காரணம்?

ஜென்மத் தொடர்பும், பெற்ற பாசமும் எப்படியோ ஒட்டாமல் போய்விட்டது.

பெற்றவர்கள் உதறி விட்டதை சம்பந்தமில்லாத இவர்கள் ஏன் ஏந்திப் பிடித்தார்கள்? அவனால் இவர்களுக்கு என்ன பயன்? சிரமங்கள்தானே?

வாசலில் இருந்து ஐயம்மாள் குரல் கொடுத்தாள். “டேய் செந்தில், இங்கே வாடா?” சாதாரண மாகவே கனத்த குரல் அவளுக்கு.

boy-girl_370நவாஸ், சாலமன், பாலா, குமார் என்று தன் வயதை யொத்தவர்களுடன் விளையாட்டு மும்முரத்தில் இருந்தவன், “இரும்மா வர்ரேன்” எனப் பதில் குரல் கொடுத்தான். “சொன்னபடியே கேட்காது. இதை வளர்க்கிறதெல்லாம் தெண்டம்” -அடுத்த நொடி அக்கினி அஸ்திரம் பாய்ந்தது.

வளர்ப்பதற்கு விசுவாசமாக எப்போது எது சொல்வார்கள் என செய்வதற்குக் காத்திருக்க வேண்டும். விரும்பியது கிடைத்ததும் அலட்சிய மாகி விடுகிறது.

“ஆட்டத்தை விட்டுப் போகாதேடா” எனப் பாலா கையைப் பிடித்து இழுத்ததையும் மீறி, அம்மாவி டம் போனான் செந்தில்.

விளையாட்டின்போது  பாலாவை  அவன் அம்மா பலமுறைகள்  கூப்பிட்டும் போகவில்லை. சின்னப்பிள்ளைங்க விளையாடுற நேரத்திலே கூப்பிட்டா, இப்படித்தான் இருப்பாங்க”. மகன் ஆர்ப்பாட்டமா விளையாடுறதை ரசித்தவாறு சிரித்துக்கொண்டே கடைக்குப் போனாள் நோஞ்சான் சித்ரா.

மகனைவிட சற்றுதான் உருவத்தில் பெரிதா யிருப்பாள், சதா சண்டி மாடாய் படுத்துக் கொள்ளும் சீக்காளி சித்ரா. மகனைப் பார்க் கும்போதெல்லாம் ஆனந்தம் பொங்க இன்னும் ரெண்டு வருஷத்திலே என்னைவிட பெரிய ஆளா யிருவான்!”

உருவம், நிறம், குணம் எல்லாம் அச்சு அசல் இவள்தான் அந்தப் பயல். நடைகூட இவள் மாதிரி தான்! பத்து மாதம் சுமந்து பெற்ற பிள்ளையாச்சே!

செந்திலுக்கும் ஐயம்மாளுக்கும் ஏக வித்தி யாசம். அவள் வெளேரென்று நிறம். இவன் கருப்பு. பொதுக் பொதுக்கென்று நாற்பது வயதிற்குள் ளேயே சரிந்துபோன உடம்பு. இடுப்பு சேலைக்கு மேல் தொங்கும் தொந்தி வயிறும் - வயிற்றைத் தொடும் மார்பும்.... பயல் குச்சியாகத்தான் இருப் பான்.

அதிகாரமான அவள் குரல், இவனுக்கு இல்லை. பாந்தமாகத்தான் இருக்கும். என்ன இருந் தாலும் விதையும் விளைந்த நிலமும் வேறுதானே...

சித்ரா சொல்வாள் - போயும் போயும் தேடிப் பிடிச்சிருக்கியே - உனக்குப் பொருத்தமான பிள்ளை ஊரிலே எங்கும் கிடைக்கலியா?”

“இதுதான் கிடைக்கணும்னு இருந்திருக்கு.” ஐயம்மாள் பெருமூச்சு விடுவாள்.

எதிரேயிருக்கும் கண்ணாடியில்  தன்னைப் பார்த்துக்கொள்ளவே அவனுக்குப் பிடிக்கவில்லை.
இரவல் சதமாகுமா? மதினி உறவாவாளா?

புருசன் வீட்டு பூர்வீகச் சொத்தைப் பிரிக்கும் போது, ஐய்யம்மாளும் தன் பங்குக்கு முன்னால் நின்றாள்.

“பிள்ளையா குட்டியா?  குட்டிச்சுவர் மாதிரி இருக்கா. இருப்பதை வச்சுப் பொழைச்சுட்டுப் போகாமே... பாவம்! பிள்ளை குட்டிகளோட கஷ்டப்படுகிறவர்கள் கொண்டு பிழைத்துப் போகட்டுமேன்னு விடுவாளா? வரிந்து கட்டிக் கொண்டு முதல் ஆளா நிக்கிறா... மலடிக்குத்தான் ஆசை அதிகம்.”

மச்சான் மனைவி இதைக் கேட்டதும் கூடுதலாக கொணங்கிப் போனாள். தாங்குவார் இருந்தால், இளைப்பும் தவிப்பும் தானே வரும்!

நியாயமானதைப் பெறுவதற்குக்கூட பிள்ளை வேண்டுமா?

மனைவியின் கண்ணீர் தங்கராசுவின் கோபத் திற்கு எண்ணெய் வார்த்தது. “இப்போதுதான் கூடாமலே குழந்தை பெறும் மாயவித்தை நடக்கிறதே....”

“அதெல்லாம் எதற்கு? உங்க அண்ணன்தான் பிள்ளை குட்டிகளோட கஷ்டப்படுறாரே - அதிலே ஒன்றை வளர்ப்போம்.”

ஒரு சந்தர்ப்பத்தில் அத்யாவசியத் தேவைக்குப் பணம் கேட்டுப் போனதற்கு, “பிள்ளை குட்டிகளை வளர்த்துப் படிக்க வச்சு தவிச்சுப்போயி, கைமுடை வந்திருச்சு. வந்துட்டான்...

அப்படிப்பட்டவனிடமா பிள்ளைக்குக் கையேந்திப் போய் நிற்கணும்.”

அப்போதும்கூட தம்பியின் இயலாமையைச் சொல்லாமல், குழந்தையில்லை என்னும் குத்தல் இவள் மீது தானே விழும். ஆண் வஞ்சிக்கப்படுவ தில்லை. பெண் தான் வஞ்சிக்கப்பட்டு, எல்லா மீறுதல்களுக்கும் உட்படுகிறாள்.

அப்போது எழுந்த வேகத்தில் பிறந்து மூன்று நாட்களே ஆன இந்தப் பிள்ளையை வாங்கி  வந்தார்கள்.

அல்ப ஆசைகள்கூட நிறைவேறாவிட்டால் ஆதங்கப்படுகிறவர்களிடையே, பெண்ணின் அர்த்த மான தாய்மை அடையாமை எத்தகைய ரணத்தை உண்டாக்கியிருக்கும்?

உலகத்தில் ஒவ்வொன்றையும் கண்டுபிடித்தவர் களைச் சொல்கிறோம். அன்பைக் கண்டவர்களை யாரும் சொல்லவேயில்லை. நிலைகொண்டு விட்ட அன்பு, அதைப் படைத்தவனுக்கு அர்ப்பண மாகிக்கொண்டே இருக்கிறது!

ஐய்யம்மாள் பிள்ளையை நெஞ்சோடு அணைத்துக்கொண்டபோது, குழந்தைக்கு விரலும், ஸ்தனங்களின் மொட்டும் ஒன்றாகத்தான் இருக் கிறது.

தாய்ப்பால் அறியாத பிள்ளை என்று  ஊட்ட மான ஆகாரங்களைக் கொடுத்து வளர்த்தாள். ஆனால் சத்தான உணவுகளை, தண்ணீரையெல் லாம் உறிஞ்சிவிடும் மண் மாதிரி - காய்ந்து போய்த் தான் இருக்கிறான்.

“என்ன குடுத்துப் பிரயோசனம்? அப்பன் ஆத்தா மாதிரிதானே இருக்கும்...”

ஐய்யம்மாளுக்கு மூடாதவாய். எதையும் மூடிப் பேசமாட்டாள்.

பெற்றவர்கள் இவர்கள் இல்லை என்பது புரிந்து போன செந்திலுக்கு மனம் விரிசல் கண்டது. உரிமையும் பாசமும் வளரவேண்டிய உணர்வில் பயம் வளர்ந்தது.

‘இவன் அப்பா அம்மா எங்கே இருக்காக?’ பக்கத்து வீட்டுக்காரி நைசாகக் கேட்டாள்.

ரகசியமாகப் பதில் சொன்னவள், காடைக்கு கலப்புல்லு போட்டு வளர்த்தாலும் காடை காட்டுக்குத்தானே போகும்?’.

வளர்ப்பவர்களை அன்னியர்களாக்கிவிட்டு, சொந்த பெற்றவர்களைத் தேடி ஒரு நாள் போய் விடுவானாம்.

சரியாகக் கண் விழிக்காத பச்சைமண்ணை விட்டுச் சென்றவர்களிடம், நான் ஏன் போக வேண்டும்? இவர்கள் என்ன குறை வைத்திருக் கிறார்கள்? அப்பா ஒரு போதும் அதட்டிப் பேசிய தில்லை. அம்மாவும் இப்படிப் பேசுவதைத் தவிர வஞ்சனையில்லாதவள்.

சர்க்கரை நோயும், அதனுடன்  பிறந்த  ரத்த அழுத்தமும் தாங்காத கொதிப்பில், செயலற்று வரும் உடம்பின் பலவீனம் அம்மாவை இப்படிப் பேச வைக்கிறது.

அன்று வீட்டுக்கு வந்த உறவினர்கள் பெருமாள் சாமியும் மனைவி தாயாரம்மாளும் ரொம்பவும் குழைந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அவர் களுக்குக் குழந்தை இல்லை என்பதால், ஒரு பையனை இப்பொழுது இவருடன் வந்திருக்கும் இளம் பெண்?

“என்ன இருந்தாலும் சொந்தப் பிள்ளை யாகுமா? இவளை இரண்டாம் தாரமாக முடித்துக் கொண்டேன். ஒரு பயல் பிறந்து படிக்கிறான்.” இலட்சியம் பூர்த்தியடைந்த பெருமிதத்தில் சொன்னார்.

பிள்ளைப் பேற்றினாலே எக்காலத்தும் இரட்சிக்கப்படுகிறவளாக பெண் இருக்கிறாள்...

செந்தில் அவர்களையே பார்த்தான்.

வீட்டிலிருக்கும் டி.வி., கட்டில், காற்றாடி,  பீரோ இந்தப் பொருள்களையெல்லாம் சொந்தம் கொண்டாடுபவர்கள், விபரம் தெரியாத நாளி லிருந்து தொடர்ந்துவரும் பிள்ளையை “தத்து” என அன்னியப்படுத்துகிறார்களே...

குடிப்பதற்குப் பணம் கொடுக்கவில்லை என்று தாயை அடித்து மண்டையை உடைத்த மூன்றாவது வீட்டுக்காரன் சேதுவை, பெற்ற மகன் என்று பாசம் கொண்டாடுகிறாளே அவன் அம்மா...

ஐய்யம்மாள் திரும்பிப் பார்த்தவுடன், குறிப் பறிந்து பலகாரமும், காபியும் வாங்கி வந்து கொடுத்தான் செந்தில்.

“இப்போதெல்லாம் வீட்டு வேலைகள் அனைத் தையும் பள்ளிக்குப் போவதற்கு முன்பும் - பள்ளி விட்டு வந்ததும் செய்து முடித்துவிடுவான், அம்மா வுக்குக் கஷ்டமில்லாமல். சரியாக விளையாடப் போவதில்லை, பெற்றோர் முன்னர் பயபக்தியுடன் பணிந்து நிற்பான். மற்ற பிள்ளைகளைப் போல் எந்தப் பொருளையும் விரும்பிக் கேட்பதில்லை.

அந்த உரிமை இல்லையென்று நினைக் கிறானோ...

இப்போதெல்லாம் உறவுமுறைகள், நன்மை தீமை எனக் கூடும்போதுதான் அறிந்துகொள்ள முடிகிறது.” எனச் சலித்தவள், “ செந்தில்! இவுங்க மாமாவும் அத்தையும்” என அறிமுகப்படுத்தினாள் ஐய்யம்மாள்.

பையன் அவர்களைக் கும்பிட்டான்.

“முன்பெல்லாம் சொன்னபடியே கேட்க மாட் டான். சதா விளையாட்டு. ஒவ்வொன்றுக்கும் கூப்பிட்டு, தொண்டை காய்ந்துபோகும். இப்போ அப்படியில்லை, சொல்வதற்கு முன்னாலேயே வேலையை முடித்துவிடுவான். சின்னப்பிள்ளை தானே? விபரம் தெரியத்தெரிய நல்ல பிள்ளையாகி விட்டான்”.

ஐய்யம்மாள் பெருமையுடன் மகனைச் சொன் னாள்.

ஒரு வாரமாகிறது. போட்ட டிராயர் சட்டையுடன் போன செந்திலைப் பற்றி ஒரு விபரமும் தெரியவில்லை, பெற்றோர் மிகுந்த கவலையுடன் இருக்கிறார்கள்.

அவனுக்குத்தான் விபரம் புரிந்துவிட்டதே!

Pin It