தொழிற்புரட்சிக்குப் பின்புதான் அதி நவீன, அதிவேக அறிவியல் மாற்றங்கள் கடந்த ஒரு சில நூற்றாண்டுகளில்தான் ஏற்பட்டன. இந்த காலகட்டத்தில் ஏராளமான ஆண் அறிஞர்கள்தான் புகழ் பெற்றிருந்தனர்; அவர்களின் பெயர்களும் காலத்தால் பேசப்பட்டன. தொழிற்புரட்சியின் மாற்றங்களுக்கு பெண்களும் கூட முக்கியமான பங்களிப்பை செய்து தங்களின் இருப்பை நிலைநிறுத்தி இருக்கின்றனர். ஆதிகால பெண் விஞ்ஞானிகளில் மிகச் சிலரது பெயர்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. பலரது பெயர்கள் வசதியாக மறுக்கப்பட்டு, மறக்கப்பட்டு, மறைந்தும் போய்விட்டன. இடைக்காலத்தில் ஆணுக்கு இணையாக போட்டி போட்டு வரமுடியாத சமூகச் சூழலும், நிலவி வந்தது. இன்று நவீன காலத்தில் புகழ்பெற்ற பெண் விஞ்ஞானிகள் பலர் உள்ளனர். இருப்பினும் கூட இதுவரை நோபல் பரிசு பெற்ற பெண் விஞ்ஞானிகள் மிக மிகக் குறைவே.

gillani_370இடைக்காலத்தில் வாழ்ந்தவர்களில் முக்கியமானவர் அலெஸ்ஸாண்டிரா கிலியானி (Alessandra Giliani , born in 1307 and died on 26 March 1326) என்பவர். இவர் ஓர் இத்தாலிய உடலியலாளார் மற்றும் மனித உடல் அறுப்பவர். அலெஸ்ஸாண்டிரா கிலியானி கி.பி 1307ல் இந்த உலகைக் காண வந்தார். ஆனால் பூமியைத் தரிசித்த மாதம் /தேதி எதுவெனத் தெளிவாகத் தெரியவில்லை. 19 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்ந்தார். உலகுக்கும், தான் வாழ்ந்த சமூகத்துக்கும் ஏராளமான சேவை செய்த மனித நேயம் மிக்க மனிதர் இவர். இவர் அன்றைய கால கட்டத்தில் உடலியல் பற்றி படித்து, இறந்த உடலை அறுத்து அதிலிருந்து இரத்தம் வடித்தார். அத்துடன் அந்த உடலில் உள்ள இரத்தக் குழாய்களில் வேறு வண்ணம் உள்ள திரவம் ஏற்றினார். எதற்குத் தெரியுமா? அப்போதுதான் இரத்தக் குழாய்கள் உடலின் எந்தெந்த இடத்திற்குச் செல்கின்றன என்பதைத் தெளிவாக அறிய முடியும் என்பதனால்தான். உலகில் இப்படி முதன் முதலில் இரத்தக் குழாய்களிலுள்ள இரத்தத்தை வடித்துவிட்டு, இப்படி வேறு வண்ண திரவம் ஏற்றியவரும், அதனைப்பற்றி பதிவு செய்தவரும் அலெஸ்ஸாண்டிரா கிலியானிதான். இதனால் மருத்துவர்கள் எளிதாக உடற்கூறு பற்றி அறியமுடியும் படிக்கவும் முடியும். இவ்வாறு கிலியானி மருத்துவர்களுக்குஉறுதுணையாகவும், பக்க பலமாகவும் இருந்தவர்.

உயிரைப் பயணம் வைத்து உதவி..!

   இறந்த உடலை வெட்டி தயார்ப்படுத்துவது என்பது அந்த காலகட்டத்தில் மிகவும் உயிரைப் பயணம் வைக்கும் செயல். இறந்த உடலை அறுப்பது என்பது தெய்வ குற்றம்/மத துவேஷம் என்று பார்க்கப்பட்டது. அது மட்டுமா? தெய்வ நிந்தனை செய்பவருக்குத் தண்டனை தூக்கு/கொலை தண்டனை பொது இடத்தில் நிறைவேற்றப்பட்டது. கடவுள் உருவாக்கிய உடலை அறுப்பதும, அதன் உள்ளே என்ன இருக்கிறது என்று பார்ப்பதும் மதத் துரோகம்/கடவுள் மறுப்பு விஷயம் என்றும் போதிக்கப்பட்டது. இப்படிப்பட்ட காலத்தில் இத்தாலியப் பெண்ணான அலெஸ்ஸாண்டிரா கிலியானி, பொலோக்னா பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பேராசிரியரான மோண்டினோ டி லுஸ்ஸூக்கு உதவி செய்யும் உடலியலாளாராக, இறந்த உடலை அறுக்கும் உதவியாளராக இருந்தார் என்பது வியப்பானதுதான். இறந்த உடலிலிருந்து எளிதில் இரத்தம் வடிக்கும் முறையைக் கண்டுபிடித்தார். இரத்தம் வடிந்த குழாய்களுக்கு, உள்ளே போனால் உறைந்துவிடும் ஒரு புதிய வண்ணத்திரவத்தையும் கண்டுபிடித்து இரத்த குழாய்களுக்குள் செலுத்தினார். இதனால் மிகச் சிறிய இரத்தக் குழாய்களை எளிதில் கண்டுபிடித்துவிடமுடியும்.

கிலியானியின் சேவை:

    அலெஸ்ஸாண்டிரா கிலியானி மிகக் குறைந்த காலமே வாழ்ந்தவர். மருத்துவர் மோண்டினோவின் உதவியாளர்களில் ஒருவரான ஓட்டோ ஆன்ஜெனியஸ் (Otto Angenius) என்பவர், கிலியானியானியின் சேவை பற்றி குறிப்பிட்டு எழுதியுள்ளார். ஓட்டோ, கிலியானியின் காதலராகவும் இருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது. அவர்தான் ரோமில் உள்ள ஒரு தேவாலயத்தில் கிலியானியின் பணிகள் பற்றி விரிவாக எழுதி வெளியிட்டுள்ளார். ஆனால் 16ம் நூற்றாண்டின் வரலாற்றியலாளரான மைக்கேல் மெடிசி (Michele Medici) என்பவர் போலொக்னீஸின் உடற்கூறியல் பள்ளி பற்றி 1857ல் எழுதி வைத்த குறிப்பில், கிலியானைப் பற்றியும், அவரது சேவை மற்றும் திறமை பற்றியும் தெளிவாக எழுதி வைத்துள்ளார்.

Pin It