ஓவியம், சிற்பம், இசை, ஆடல் முதலிய கலைகள் யாவுமே மொழிகடந்த அனைத்துலக மொழிகளே. ஆயினும் அவை தாம் பிறந்த மரபின் அடையாளங்களில் காலூன்றி மையங்கொண்ட வாறே அகிலந்தழுவிய அம்சங்களையும் உள் வாங்கிச் செரித்துத் தன்வயமாக்கி அகலிக்க வல்ல னவே. இவ்வியல்பும் இவற்றைக் கையாளவல்ல கலைஞர்தம் கைவண்ணத்தைப் பொறுத்தே தகவ மையக் கூடுவதாகும். இந்த வகையில் உலகளாவிய ஓவிய மரபின் தமிழ் அடையாளம் என்றால் ஆதிமூலம்; உலகளாவிய சிற்ப மரபின் தமிழ் அடையாளம் என்றால் வித்யாஷங்கர் ஸ்தபதி எனலாம். இவ்வாறே இசை மரபின் தமிழ் அடை யாளம் என்றால் ‘தென்னக உயர்தனிச் செவ்விசைப் புலவர்’ குடந்தை ப.சுந்தரேசனாரே. ஆதிமூலத்தின் ஓவிய மொழிபற்றிய ஆவணப் பதிவே ‘அழியாக்கோடுகள்’ என்னும் தொகுப்பு நூல். ‘வித்யாஷங்கர் ஸ்தபதியின் சிற்ப மொழி’ என்னும் தேநுகாவின் நூல் அவர் பற்றிய ஆவணப் பதிவே சிலைகள் எடுக்கப்படுவதற்கும், அகற்றப்படுவது அல்லது சிதைக்கப்படுவதற்கும் பின்புலத்தில் அவற்றின் வரலாறும் உள்ளார்ந்த அரசியலும் காணக்கிடப்பனவே. கண்ணகி சிலை எடுக்கப்பட்ட நேற்றைய வரலாறு தொடங்கி, கண்ணகி சிலை அகற்றப்பட நேர்ந்த இன்றைய வரலாறு வரை இதுபற்றிக் காண்போம். சிலப்பதி கார வஞ்சிக் காண்டத்திலிருந்து ஒற்றை வரி:

“நாடு என்பதற்கும் அதற்கொரு நிலப்பரப்பு இருக்கிறது; அதற்கொரு மொழி இருக்கிறது; அதற்கொரு பண்பாடு இருக்கிறது; நிர்வாகம் இருக்கிறது; வாழ்க்கையை அறிதல் குறித்த தேடல் இருக்கிறது; அத்தேடலின் நீட்சியாகப் பல்வேறு சமயத் தத்துவங்கள் இருக்கின்றன. எனவே தமிழ்நாடு என்கிற தனித்த தேசியம் இருக்கிறது என்பதற்காகவே சிலப்பதிகாரப் பிரதி கட்டமைக்கப்பட்டுள்ளதாகப்படுகிறது. இந்த நுண்நோக்கினை அறியாத நிலையிலேதான் பாடல்களையும் குரவைப் பாடல்களையும் (அவற் றையும் இளங்கோவடிகள் இயற்றவில்லை என் பார் டி.கே.சி.) எடுத்துவிட்டால் சிலப்பதிகாரத்தில் காவியச்சுவை என்ன இருக்கிறது? என்று கேட்க வேண்டிய அவலம் ஏற்பட்டது;

(‘சாளரம்’ இலக்கியமலர் ஜனவரி 2008 ப.95)

சிலப்பதிகார வரிப்பாடல்களையும் குரவைப் பாடல்களையும் அவற்றிற்குரிய பண்முறை வழா மல் பாடிக்காட்டியும், அரங்கேற்றுக்காதையின் நாடக நுட்பங்களை எல்லாம் எடுத்துரைத்தும் தன்னேரிலாது திகழ்ந்தவர் தமிழிசைப்பாணர் குடந்தை ப. சுந்தரேசனார். கானல்வரிப் பாடல் களைப் பாடும்போதுதான் கோவலனுக்கும் மாதவிக்கும் இடையிலான ‘ஊடல் முற்றித் ‘துனி’யாகி அவர்கள் பிரிந்திட நேர்ந்தது. இது பற்றியே யாழ் வழிவந்த ஊழ்வினைப் பயனாக இனங்கண்ட தமிழ் ஒளியின் படைப்பே ‘விதியா வீணையா?’ என்னும் அருமையான கவிதை நூல். ஆனால் இந்த இடத்தில் மற்றொரு நுட்பத்தினை இனங்கண்டு எடுத்துரைத்தார் சுந்தரேசனார், அவர்களிடையே எழுந்த இகலின் பூசல் இரண்டு இசைக் கலைஞர்களுக்கு இடையிலான யாழிசைப் போட்டியின் வினைப் பயனாய் விளைந்த விபரீதமே என்பதே அந்நுட்பம். எனவே அக் காப்பியத்தினைச் சிலப்பதிகாரம் என்பதைக் காட்டிலும் யாழதிகாரம் என்பதே சாலவும் பொருந்தும் என்பதே அந்நுட்பம். இதனையே அவரிடம் பாடம் கேட்ட ‘தோடுடைய செவி யனான’ (கேள்வி ஞானத்தால் தோட்கப்பட்ட செவி) மாணவன் என்னும் முறையில் நானும் பாடல் மீட்டித் திளைத்தேன்:

“மாதவியாள் கானல்வரித் ‘துனி’நிலை மீறி

மனங்காவா வடபுலத்தின் மணிமுடி நூறிப்

போதவிழா நின்றதுவோ சிலப்பதி காரம்?

பொருத்தமுறும் எந்துணிபே யாழதி காரம்!”

கண்ணகிக்குச் சிலைவடிக்க கனகவிசயர் முடித்தலை நெரிய கல்சுமக்க வைத்தது நேற்றைய வரலாறென்றால்; கண்ணகி சிலை அகற்றப்பட்ட இன்றைய வரலாறு குறித்தும் ஓர் அபூர்வ கவிதை:

“கண்ணகி சிலையை / அகற்றுகிறார்கள்

தேர்ந்த பொறியாளர்கள் / உயர்நுட்ப                               யந்திரங்கள்

அவசரமான அரசாணை / அரவமில்லாமல்

நடக்கவேண்டும் / சிலையை ஏந்தி

வேலை முடிந்தது / ஓசையின்றி வண்டி

நகர்ந்தது / கேட்கத் தொடங்கியது

சிலம்பின் சத்தம்” - தேவதச்சன்

(‘கல்குதிரை’ 2002)

சிலையெடுப்பிற்கும், சிலையகற்றலுக்கும், அவை சிதைக்கப்படுவதற்கும் உள்ளார்ந்த அர சியல் அவை குறிப்பிட்ட ஒரு கோட்பாட்டின் குறி யீடாக, வழிபாட்டுக்குரிய ஓர் உருவத்திருமேனி (icon)யாக உருப்பெற்றுத் திகழ்வதாலும்; தொன்மங்களின் ஆதி உருக்களாகவும் கூட அவை உருமாறிப் பரிணமிப்பதாலுமேயாகும். இவை குறித்த பதிவுகளையும் தொகுத்துக் காண்போம்.

“தமிழர் சிந்தனை மரபு இரண்டாயிரம் ஆண்டு தொன்மை வாய்ந்தது. அந்த வளமான சிந்தனை மரபின் தொடர்ச்சியாகவே இன்றும் ஆத்திக / நாத்திக மோதல்கள் நிகழ்கின்றன”. “வேத மரபை மறுத்த சமண-பௌத்த மையங்கள் வேத ஆதரவு ஆன்மிகத்தால் வேட்டையாடப் பட்டன; புத்தரின் சிலைகள் சிதைக்கப்பட்டன. சமணர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். சிலைகள் ஒரு கொள்கையின் அடையாளமாகக் கருதப் பட்டதே இன்றும் தொடர்வதால் பெரியார், அம்பேத்கர் போன்றவர்களின் சிலைகள் கூட உன்மத்துடன் நகர்ப்புக்கும், உள்ளாகும் அட் டூழியம் நடைபெறுகிறது”. “விக்கிரக வழிபாட்டுப் பண்பாடு முக்கிய இடம்பெறும் தமிழக, தென்னிந்தியச் சூழலில் ‘உருவத் திருமேனிச் சித்திரிப்புகளுக்கு (icons) முக்கியத்துவமுண்டு” கா. சிவத்தம்பி (‘சமூகவிஞ்ஞானம்’ டிசம்பர் 2006)

“ஒரு பக்கம் கண்ணகிக்கும் கோவில் எழும்புகிறது, இன்னொரு பக்கம் - சோழனையும் பாண் டியனையும் தாண்டிச் சேரன் செங்குட்டுவனின் புகழ் ஓங்குகிறது. வைதீக நிறுவனமாக்கப்பட்ட சமயங்களுக்கு மாறாகப் பத்தினித் தெய்வம் உருவாக்கப்படுதல் மூலம், தமிழர்தம் சமூக மதிப்பு கட்டமைக்கப்படுகிறது. வடபுலத்துக் கனக விசயரைத் தோற்றடிப்பதாகக் காட்டுவதன் மூலம் தம் பேரரசியல் மதிப்பு கட்டமைக்கப்படுகிறது” (‘தமிழின் அடையாளம்’ - ப.32)

“ஆங்கிலத்தில் உள்ள ‘Architype’ என்ற சொல்லை மூல உரு அல்லது ஆதி உரு என்று குறிக்கலாம். தொன்மங்களில் சில மூல உருக் களாக அமைந்துவிடுகின்றன. அநீதி இழைக்கப் பட்டவன் என்றால் ஏகலைவன்; கொடை என்றால் கர்ணன், கற்பு என்றால் சீதை; முன் கோபம் என்றால் துர்வாசர்; நீதி கேட்கும் பெண்மை என்றால் கண்ணகி எனச் சில தொன் மங்கள் (myths) காலப்பழக்கத்தால் மூல உருக் களாக உயர்ந்துவிடுகின்றன.

“யுங் என்னும் உளவியல் அறிஞர் இம்மூல உருக்கள் நனவிலிமனத்தின் தொகுப்பில் எப் போதும் இருந்து வருவதாக எடுத்துக்காட்டியுள் ளார். மனித இனத்தின் நினைவுகளில் (Racial Memory) இம்மூல உருக்கள் எப்போதும் வாழ் கின்றன” - சிற்பி. (‘படைப்பும் பார்வையும்’ ப.14)

இப்பதிவுகளுக்கு ஊடாக நமக்குச் சிலை களின் பின்புலமான அரசியலும், கலைகளுக்குப் பின்புலமான உளவியலும் பிடிபடலாகின்றன. கர்நாடகத்தில் சாக்கில் வள்ளுவர் சிலை மூடுண்டு கிடந்ததும் பல்லாண்டுகளுக்குப் பின் ஓர் அரசியல் பேரத்திற்கு அப்புறமாகவே அங்கு வள்ளுவர் சிலையும் இங்கு சர்வக்ஞர் சிலையும் திறக்கப்பட்ட தும் இத்துடன் மனங்கொள்ளத்தக்கதே. ஒன்று மட்டும் இவற்றிற்கு ஊடாக நமக்குப் புலனாகிறது. சிலை வடிக்கச் செம்போ, ஐம்பொன்னோ, கல்லோ ஊடகமான கச்சாப் பொருள் மூலமாக இருக்கலாம். ஆனாலவை நம்மை அவை உளவியல் முறைமையால் தகவமைப்பனவாகவே வீற்றிருக் கின்றன. அரசாணைகளால் கண்ணகி சிலை அகற்றப்படலாம். ஆனாலும் நம் செவிப்புலனின் சிலம்பொலித்தே தீரும். கட்டுண்டு கிடந்த போதும் வள்ளுவச் சிலை தனக்குள் மெல்ல நகும். சர்வக்ஞரோடும் அதன் உரையாடல் தொடரும்.

ஆட்டந்தானேயாகிக் கரைவதே நடன மோகம். ஆடவல்லான் ஆகத்திகழும் இறைவனே நடராசனான தென்னாடுடைய சிவன். ஓங்காரத் திருவாசியில் நடம்புரிந்தே ஐந்தொழில் ஆற்று கின்றது பரம்பொருள் என்னும் நடராசத் தத்துவம். திருமேனிகளுக்கு உள்ளார்ந்த இறையியல் உட்கிடை என்கிற வகையிலான பதிவுகளை இனிக் காண்போம்.

“திருமந்திரத்தை கி.பி. 7-9ஆம் நூற்றாண்டு களில் மேலோங்கிய பக்தி நெறி எழுச்சியின் பின்புலத்திலே தொழிற்பட்ட மெய்யியற் சிந்தனை மரபுகள் பற்றி அறிந்துகொள்வதற்கான ஒரு தடயமாகவே கொள்ளுதல்வேண்டும். தேவாரங்களில் மனவெழுச்சி நிலையில் வெளிப்படுத்தப்படும் பல சிந்தனைகள் எண்ணக் கருக்களாக வளர்த்தெடுக்கப்படுவதைத் திருமந்திரத்தில் காணலாம். சிவ-தாண்டவம்பற்றிய எண்ண உருவாக்கத்திலும், அன்புபற்றிய எண்ண உருவாக்கத்திலும் இதனைக் காணலாம்” (பா.சிவத்தம்பி - முற்சுட்டிய இதழ்)

திருமந்திரம் ஒன்பதாம் தந்திரத்தில் எண்பத் திரண்டு பாடல்களில் திருக்கூத்துத் தரிசனம் விளக்கப்பட்டுள்ளது. நடராசத் தத்துவம் திரு மந்திரத்தில் சித்திரிக்கப்படுவது பற்றிக் காண்போம்.

“அரன்துடி தோற்றம் அமைத்தல் திதியாம்

அரன்அங்கி தன்னில் அறையில்சங் காரம்

அரன்உற் றணைப்பில் அமரும் திரோதயி

அரன்அடி என்னும் அனுக்கிர கம்மே”

- திருமூலர் (திருமந்திரம்)

“இறைவனின் ஐந்தொழில் தத்துவமே நட ராச உருவத்தின் தத்துவமாகும். நடராசர் திரு வுருவத்தில் அமைந்துள்ள உடுக்கை படைப்பைக் குறிக்கின்றது; அபய கரம் அளிக்கும் தொழிலைக் குறிக்கின்றது; ஊன்றிய பாதம் மறைப்பையும்; தூக்கிய திருவடி அருளுந் தொழிலையும் குறிக்கின்றது; நெருப்பு, அழித்தல் தொழிலையும் குறிக்கின்றது” - மனவாசகம் கடந்தார் (‘உண்மை விளக்கம்’)

“உடுக்கொலி, அபயம் காட்டும் அருள்கை, இடக்கை ஏந்தும் நெருப்பு ஆகியவற்றைப் படைத் தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில் சுட்டும் அடையாளங்களாக விளக்குவர். இதற்குத் திருமூலரின் ‘அரன்துடி’ என்னும் மந்திரம் துணை சேர்க்கும்.”

காபாலிகர்களும், மாவிரதிகளும், காளாமுகர் களும் சைவத்தில் கோலோச்சிய காலம் தேய்ந்து, சித்தாந்த சைவத்தை நோக்கிய சைவப் பண்பாட்டு வளர்ச்சியின் செழுமையில், நடராசர் திருமேனி சைவப் புராணங்களுக்கும் சித்தாந்தங்களுக்கும் குறியீடாக விளக்கம் தரவல்ல படிமக் குறியீடாகச் செழுமையும் முழுமையும் அடைகிறது”. - ‘செந்தீ நடராசன் (‘தமிழினி’ மார்ச் 2009)

காலந்தோறும் நடராசத் தத்துவம் சித்தாந்த சைவக் குறியீட்டுப் படிமமாக பரிணமித்ததற்கும் அப்பாலாக அதன் பரிமாணங்கள் பிரபஞ்ச இயற்கையின் உட்கூறுகளைப் பிரதிபலிப்பன வாகவும், இந்தியக் கலையின் அடையாளச் சின்னமாகவும் விகசிக்கலாயின. ஆடல்வல்லான் சிவதாண்டவத்தைப் பிரபஞ்ச நடனமாகவும் கவிதையும் அறிவியலும் சங்கமிப்பதாகவும் சித்திரிப்பதே கலாயோகி ஆனந்த குமாரசாமியின் ‘The Dance of Siva’ என்னும் அரும்பெறல் களஞ்சியமாகும். இத்தகு பரிணாமம் மற்றும் பரிமாணங்கள் குறித்து இனம் காணும் ஏனைப்பிற பதிவுகளையும் இங்கே தொகுத்துக் காண்போம்.

“பிறப்பு, இறப்பு, இறப்புக்குப் பின் உயிர்நிலை, பிறப்புக்குக் காரணமான நல்வினை, தீவினை, மாயையின் இயல்பு, பிரபஞ்ச இயக்கம், பிரபஞ்ச நிலையில் உயிர்களின் நிலை, பிரபஞ்சத்தின் முறை தவறாத இயக்கம், அவற்றின் மூல காரணமான அணுவின் இயக்கத்தோற்றம், ஒழுக்கம் முதலியன வற்றை நுண் தத்துவங்கள் விளக்குவன. சைவ சமயத்தின் நுண் தத்துவங்களை ஓவியத்தும், காவியத்தும், படிமத்தும் உருவத்துக்குக் காட்ட ஆனந்த நடராசர் திருவுருவினை விடச் சிறந்த ஒன்று அமைய இயலாது என்ற கருத்தைப் பலரும் பாராட்டுகின்றனர். - மு. அருணாசலம் (‘சைவ வரையறைகளின் தொகுப்பு’ - ப.33)

“நடராசர் வடிவம் சமயத்தைக் கடந்து இந்தியக் கலையின் சின்னமாக உயர்ந்து நிற்கிறது. சமகாலச் சிந்தனையை ஆன்மிகத்தோடு இணைப் பவர்கள் ஆடல் அரசுவின் தாண்டவத்தைப் பேரண்டத்தின் மொத்த இயக்கமாகக் காண்பர்” - ‘செந்தீ’ நடராசன் (முற்சுட்டிய இதழ்)

“சிவபெருமானின் பிரபஞ்ச நடனத்தால் ஓர் இந்துவுக்குப் பொருள்பற்றி என்ன கருத்து சொல்லப்பட்டுள்ளதோ, அதைத் தான் குவாண் டம் புலக்கொள்கையில் சில அம்சங்களால் இயல்பியல் வல்லுநருக்கும் சொல்லப்பட்டுள்ளது. நடனமாடும் கடவுள், இயற்பியல் கொள்கை இவை இரண்டும் மனத்தின் பங்களிப்புகள்தான் தம்மை ஆக்கியோரின் மௌனம் பற்றிய உள்ளுணர்வு விவரிக்கும் வடிவமைப்புகள்” - ஃபிரிட் ஜேஃப் காப்ரா (‘இயற்பியலின் தாவோ’ ப.64)

“பிரபஞ்சத்தில் முடிவடையாமல் தொடர் கின்ற ஆக்க -அழிவு இயக்கத்திற்குச் சான்றாக நிற்கின்ற இடையே செயல்படும் துகள்களின் பாதையினைக் குமிழிகளின் வரிசை மூலம் காட்டும் அமைவின் ஒளிப் படங்கள், அழகிலும் ஆழமான முக்கியத்துவத்திலும், இந்தியக் கலை ஞர்களின் அந்த உருவச் சிலைகளுக்கு இணையாக நிற்கின்ற சிவக்கூத்தின் காட்சி உருவப்படிவங் களாகும். இவ்வாறு அண்டக்கூத்தின் உருவக மானது, பண்டைப் புராண இலக்கியத்தையும், சமயக் கலையையும், தற்கால இயற்பியலையும், ஒன்றிணைக்கிறது. அது உள்ளபடியே, குமாரசாமி அவர்கள் கூறியிருப்பது போலக் கவிதைதான் எனினும் அது அறிவியலுமாகும்.” - ஃபிரிட் ஜேஃப் காப்ரா (மேற்கோள் ‘மறைக்கப்பட்ட மரபுச் செல்வம்’ - ப.73)

“நடராசத் தத்துவத்தின் உட்கிடையான பிரபஞ்ச இயக்கத்தின் விஞ்ஞான விளக்க ஒற்றுமைகளை மேதா, குடல், இராஜ்கமல் முகர்ஜி, மைக்கேல் மெய்ஸ்டர், பிரோஜேஷ் பானர்ஜி போன்ற அறிஞர்கள் தம் நூல்களில் பொதுப்படையாக விளக்கியுள்ளார்கள்.” - வை. தட்சிணாமூர்த்தி (ஸ்ரீ நடராசத் தத்துவம் - ப.99)

சமண புத்த ஆசீவக சமயங்கள் துறவினை வலியுறுத்துவனவாகும். அவற்றால் இறுக்கமடைந் திருந்த பெண்கள்பற்றிய பார்வையை நெகிழ்த் துவனவாக சைவ, வைணவ நோக்கு நிலைகள் இல்லறந் தழுவிய ஏற்பினை முன்னெடுத்த தென்பதும் அவற்றின் வளர்ச்சிக்கு முழுமையான காரணமாயிற்று. இவ்வாறு,

“மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் /                       எண்ணில் நல்லகதிக்கு

யாதுமோர் குறைவிலை / கண்ணில்                    நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்

பெண்ணில் நல்லாளோடும் பெருந்தகை                            இருந்ததே”

என நடராசத் தத்துவம் பெண்ணில் நல்லா ளோடும் பெருந்தகை இருந்த பக்தியிலக்கியமாய்ப் பரிணமித்தது.

“கோயிலில் இறைவனுக்கு மனைவியர் கற் பிக்கப்பட்டனர். இக்கற்பிதம் வைதீக மரபு களோடும் நாட்டார் மரபுகளோடும் இணைக்கப் பட்டது. முதலாம் இராசராசன் கி.பி. 1012இல் கட்டிமுடித்த தஞ்சைப் பெருங்கோயிலின் தோற் றம் வரை தமிழகத்து சைவ வைணவப் பெருங் கோயில்களில் இறைவனின் மனைவிக்கு (இறைவிக்கு) தனிச் சந்நிதி எதுவும் அமைக்கப்பட வில்லை.

தமிழ்நாட்டின் நடுப்பகுதி கங்கை கொண்ட சோழபுரத்தில் முதலாம் இராசேந்திரன் காலத்தில்தான் இறைவிக்கென்று தனிச் சந்நிதி அமைக்கும் வழக்கம் தமிழ்நாட்டில் தோற்றம் பெற்றது” - க. நவநீத கிருஷ்ணன் (‘உரைமொழிவு’ நவம்பர் 2003)

பக்தியிலக்கியப் பாடல்களில் இருந்தே கோயில்கள், கலைகள்; ஓவியங்களாகவும், சிற்பங் களாகவும், கோயில்கட்டுமானக் கலைகளாகவும், யாப்பு வடிவங்களாகவும், பண்ணிசை வடிவங் களாகவும் பரிணமிக்கலாயின. இலக்கியங் கண்ட தற்கு இலக்கணம் இயம்பலின் என்பதற்கு இயைய பக்தியிலக்கியத் தோத்திரங்களான திருமுறை களின் சாராம்சத்திலிருந்து மெய்கண்ட சாத்திரங் களான சித்தாந்தங்கள் வகுக்கப்பட்டன. அவ்வச் சித்தாந்த மதத்திற்கான நிறுவனமாக அவ்வச் சமயங்களும் உருப்பெறலாயின.

“ஐந்தொழில் தத்துவத்தின் அடிப்படையில் தான் திருமுறைகளும், சைவசித்தாந்த சாத்திர நூல்களும் அமைந்துள்ளன” (ப.352) “பல்லவர் காலத்திலேயே நடராசத் தத்துவம் வளர்ந்துவிட் டது. சோழர்காலத்தில் அது சிற்பத்திலும் ஓவியத் திலும் வடிக்கப்பட்டது. வடமொழி ஆகமங்கள் தமிழகத்திலும் பரவியதன் காரணமாகச் சைவ சமயம் புதுமலர்ச்சி பெற்றது. சமயக் குரவர் நால்வரும் தம் பாடல்கள் மூலம் சைவ வழி பாட்டையும் நடராசத் தத்துவத்தையும் நாடறியப் பரப்பினார்கள். எனினும் அவர்களுடைய தமிழ் மறையில் பொதிந்து கிடந்த மெய்ப்பொருள் களைத் தனியே திரட்டிச் சிலைகளில் காட்டிய பெருமையானது சோழர்களையே சாரும்.” - கே.கே.பிள்ளை (தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் ப.349-350)

“கணவன், மனைவி, குழந்தை ஆகிய குடும்ப அமைப்பைக் காட்டும் சோமாஸ்கந்த முகூர்த்தம் திருநாவுக்கரசரால் 7ஆம் நூற்றாண்டில் அவரது தேவாரத்தில் கொண்டாடப்பட்டது. அவரே பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரனைச் சமணத் திலிருந்து சைவத்திற்கு மதமாற்றம் செய்தவ ராவார். எனவே தொண்டை மண்டலத்துப் பல்லவர் கோயிலையே கோமாஸ்கந்த மூர்த்தம் முதன் முதலாக நிறுவப்பட்டது” - க.நவநீத கிருஷ்ணன் (முற்சுட்டிய இதழ்)

“தேவாரம் பாசுரங்கள் தந்த பக்தியுணர்வே சோழர்களைச் சிவாலயம் எடுக்கும் பெரும் பணிகளில் செலுத்திற்று. சிவலிங்கத்தைப் பெரிய புராணம் பல இடங்களில் குறிப்பிடுகிறது. அப் படியே சோமாஸ் கந்த மூர்த்தத்தையும் சேக்கிழார் பாடுகிறார்,

‘மறைந்த அவர்தாம் மலைபயந்த                                  தையலொடுஞ்

சரவணத்துத் தனயரோடுந் தாமணைவார்’

-மு. அருணாசலம் (சேக்கிழார்)

குடும்பமென்னும் நிறுவனத்தினை ஆகம நெறிகள் அங்கீகரிக்காதிருந்த காலகட்டத்தில், கோயிலென்னும் அதிகார மையங்கள் சொத் துடைமை நிறுவனங்களாக வலுப்பெறும் நிலை யில் குடும்ப நிறுவனத்தை அங்கீகரிக்கும் பண் பாட்டுச் சமரசம் மக்களிடம் உளவியல் ரீதியிலான நெருக்கத்தை உருவாக்கக் கோயிற் பண்பாடு வாயிலாகக் கட்டமைக்கப்படலாகின்றது.

‘பெருந்தெய்வக் கோயில் என்பது வழிபடும் இடம் மட்டுமன்று, அது சமூகத்தின் சாதி, குடும் பம் போன்ற அமைப்பைக் கட்டிக்காக்கும் ஒரு சொத்துடைமை நிறுவனமாகும்”.

“ஆகம நெறிகளை அறியாத வழிபடும் அடி யவர்களோடு பொருளாதார ரீதியிலோ, தத்து வார்த்த ரீதியிலோ சமூகச் சட்டங்களை மீறியோ உடன்பாடு செய்ய இயலாதபோது கோயில்கள் மக்களோடு பண்பாட்டுச் சமரசம் செய்து கொள்ள நினைத்தன.”

“இத்தகைய பண்பாட்டுச் சமரசங்களில் முதன்மையானது குடும்பம் என்ற அமைப்பினை அங்கீகரித்ததாகும். அதாவது சமூகத்திலுள்ள குடும்பம் என்ற தலைவன், தலைவி அமைப் பினையும் அதன் செயல்பாட்டினையும் கோயில் தன்னுடைய சடங்கியல் நிகழ்த்துதலில் ஏற்றுக் கொண்டதாகும்” - க.நவநீத கிருஷ்ணன் (முற்சுட்டிய கட்டுரை)

கோயில் திருவிழாக்கள் சுற்று வட்டார மக்களைக் கோயிலோடு இணைப்பனவாக இருந் தால் சிறிய அளவிலான உள்ளூர் மரபு சார்ந்த சடங்குகளே அப்பகுதி மக்களைக் கோவிலோடு உணர்வு பூர்வமாகக் கட்டிவைப்பனவாகத் திகழும் பாங்கினைத் தமது ‘குடும்பம் சீர்வரிசை, நிகழ்த்துதல்’ என்னும் கட்டுரை வாயிலாக எடுத்துரைக்கின்றார் க. நவநீத கிருஷ்ணன்.

“இராஜராஜன், சுந்தரரின் சரிதத்தைக் கருவறையைச் சுற்றி வரும் உள் சுற்றில், ஓவியமாகப் படைத்துள்ளான். வரலாற்றையே ஓவியமாகப் படைத்த முதல் மன்னன், இராஜராஜனே”.

“இராஜராஜன் சுந்தரர் தேவாரத்தின் விளக்கமாக அவரது பாடல்களையே கொண்டு அவரது சரிதத்தை வரைந்துள்ளது வரலாற்றின் உச்சியாகும்”.

சேக்கிழார் இராஜராஜனுக்கும் 150 ஆண்டு களுக்குப் பின்பு வந்தவர். ஆதலின் அவர் தரும் செய்திகள் இந்த ஓவியத்தின் அடிப்படையில் அமைந்தவை. இராஜராஜனுக்குக் கிடைத்த சான்று சுந்தரரின் பாடல்களேயன்றி வேறில்லை. ஆதலின் இனி ‘தேவார ஓவியம்’ என்பதே பொருந்தும். - ரா. நாகசாமி (‘தினமலர்’ கோவை 6-9-2010)

சோழர் வரலாற்றில் இராசராசனின் பிரா மண எதிர்ப்பும் ஆகமச் சைவச் சார்பும் குறிப்பிடத் தக்கன. ஏனெனில் இராசராசன் ஏற்படுத்திய திருப்புமுனையான மாறுதல்களாக இவை இலங்கின.

“ஆதித்த கரிகாலனைப் பிராமணர்கள் கொன்றதன் காரணத்தாலோ என்னவோ இராச ராசன் தமிழ்நாட்டில் வேதங்கள் ஒலிப்பதற்குப் பகரமாகத் திருமுறை ஓதுவதற்கு முதன்மை தந்திருக்கின்றன.”

“இம்மன்னன் தான் ‘சத்திரிய சிகாமணி’ என்று பட்டம் சூட்டிக் கொண்டிருக்கிறான்”

“பிராமணர்களுக்கு இவன் காலத்தில் நிலக்கொடை வழங்கி வெளியிட்ட செப்புப் பட்டயம் ஒன்றுகூட இதுவரை கிடைக்காம லிருப்பதும், இவன் பிராமணர் மீது கொண்டிருந்த வெறுப்பை எதிரொலிப்பதாகவே தெரிகிறது”

“இவையெல்லாம் முதலாம் இராராசனை பரசுராமர் வழிவந்தோர் எதிர்ப்பைப் பலப்படுத்து வதாகத் தோன்றுகிறது” - நடனகாசி நாதன். (‘முதன் மொழி’ அக்.திச.2010)

“சோழர்கள் சைவ சமயத்தைப் போற்றினர். இராசராசன் தன்னைச் ‘சிவபாத சேகரன்’ என்று கூறிக் கொள்வதை நோக்கவேண்டும். சோழர் ஆட்சிக்குக் கீழ் வந்த பல்வேறு இனக்குழுக்களை இணைக்கச் சைவம் மிகச் சிறந்த பணியாற்றியது. இனக்குழுக் கடவுளர்களைச் சிவனுடன் இணைத் துப் பெருந்தெய்வமாக்கியது. பெருந்தெய்வங் களுக்குப் பரிவாரத் தெய்வமாக்கியது. அதனால் சோழர்கள் போற்றிய சைவம் பல்வேறு மக்கள் குழுக்களைச் சோழப் பேரரசின் கீழ்க் கலந்தினிது உறையச் செய்தது எனலாம்”

“தடுத்தாட் கொண்ட புராணம், முப்புரம் எரித்த செய்தி, சுந்தரர் திருமணக் காட்சி, கண் ணப்ப நாயனார் வரலாறு, யானை உரித்த காட்சி, வாமதேவர் உருவம், இராசராசனின் முடிசூட்டு விழா என்று பலவகைக் காட்சிகள் உள்ளன. இனக்குழு மக்கள் தங்கள் தெய்வத்தையும், தங்கள் கலைகளையும் பண்பாட்டையும், தங்கள் இனத்து அடியார்களையும் (வேட்டுவர் கண்ணப்பரைக் கண்டு மகிழ்வது போல) கண்டு மகிழும்படி அக்கோயிலை அமைத்து மக்கள் அனைவரையும் ஈர்த்த பெருமை இக்கோயிலுக்கு உண்டு (தஞ்சைப் பெரிய கோயில்).”

இக்கோயில் இறைவன் உறையும் இடமாக மட்டுமின்றிச் சோழர் காலச் சமூகப் பண் பாட்டைக் காட்சிப்படுத்தும் அருங்காட்சியகம் போல் நிற்கிறது - அர.பூங்குன்றன் (முதன்மொழி’ அக்.திச.2010)

“வழிபாட்டிற்காக ஆலயத்திற்குள் நாயன் மார் சிலைகள் வைக்கப்பட்ட முதல் கோவில் ராஜராஜேச்வரமாக இருக்கலாம்.

வேத விற்பன்ன பிராமணர்கள் வசித்த கிராமங்களான சதுர்வேதி மங்கலங்கள் மூலம் தான் ஆரியமயப்படுத்தப்பட்ட ஆகமநியதி சார்ந்த சமயம் சோழ நாட்டிற்குள் பரவியது.

(ராஜராஜசோழன் இம்மாதிரியான ஆரியப் படுத்துதல், ஆகம நியதிக்குள் கொண்டு வரல் போன்ற செயல்பாடுகளில் ஒரு முக்கிய பங்கு ஆற்றினான். ஆகம நியதி சார்ந்த ஆலயங்களின் புரவலராகச் செயல்பட்ட ராஜராஜன் சதுர்வேதி மங்கலங்கள் மீது கை வைக்க முடியாமலிருந்தது”. - சுரேஷ்.பி.பிள்ளை (‘உயிர் எழுத்து’ அக்.2010)

பிராமண எதிர்ப்பின் ‘சத்திய சிகாமணி’, ‘சிவபாத சேகரன்’ மாமன்னன் இராசராசனால் கூட, ஆரியமயப்படுத்தப்பட்ட ஆகம நியதிசார் சைவ சமயத்தை முகாமையாகக் கொண்டாடி நின்ற போதிலும், சதுர்வேதி மங்கலங்கள் மீது கை வைக்க முடியாமலிருந்தது என்றால் கோயிலென் னும் நிறுவனம் அவற்றைக் கட்டி எழுப்பிய மாமன்னர்களைக் காட்டிலும் பிராமண அதிகார பீடமாகவே எந்த அளவிற்கு வலுப்பெற்றிருந்த தென இதன் மூலம் உணரலாம். மற்றொரு பக்கம் வழிபாட்டுத்தலமென்பதற்கும் அப்பாலாக அக்காலச் சமூகப் பண்பாட்டைக் காட்சிப்படுத் தும் அருங்காட்சியகமாக நிற்பதையும் காணலாம். ஆலயப் பெயர்களின் பின்னொட்டு அதன் வரலாற்றைச் சுருக்கமாகச் சொல்வதனையும் சுரேஷ்.பி.பிள்ளை விதந்தோதுகின்றார்:

“கோயில் என்ற பெயர் அம்மனுக்கு எழுப்பிய ஆலயங்களுக்கும் கிராமப்புற வழிபாட்டுத் தலங் களுக்கும் இடப்பட்டது. கோயில் என்று முடிந் தால் முந்தைய வடிவைக் குறிக்கின்றது. தளி என்று முடிந்தால் பிராமணிய நியதிகளை உள்ளூர்ப் பயனுக்கு ஏற்றவாறு மாற்றி அறிமுகப்படுத்தி யதைக் காட்டுகின்றது. தளி என்று முடியும் ஆல யங்கள் யாவும் ஓர் ஊர்ப் பெயரையும் கொண்டி ருந்தன.

ஈச்வரம் என்பது ஆகம ஆலயங்கள் முன்வந்து விட்டதை இயம்புகிறது”

(முற்சுட்டிய கட்டுரை).

ஈமச் சின்னங்களும் கோயில்களும் எதற்காகக் கட்டப்பட்டன என்கிற ஆய்வாளரின் ஆய்வு முடிவுகளும் இங்கே எண்ணத்தக்கன.

“உலக வரலாற்றில் மிகுந்த ஈமச் சின்னங் களை உருவாக்கியதன் நோக்கம் பற்றி ஆய்வு செய்த ஆய்வாளர்கள் வேந்தனின் ஆட்சி இது வரை என்பதை எதிரிகளுக்குக் காட்டுவதற்கே ஆகும் என்று கூறியுள்ளனர்.”

“எந்த ஒரு இனக்குழு மக்களும் தங்கள் தலைவனை அன்றி வேற்று வேந்தர்களை ஆட்சி யாளராக ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்; முரண் படுவார்கள்; போரிடுவார்கள். இவற்றைத் தவிர்ப் பதற்குச் சோழர் வென்ற பகுதிகளில் கோயில் களைக் கட்டினர்” - அர.பூங்குன்றன் (‘முதன்மொழி’ அக்.திச.2010).

உளவியல் ரீதியாக உள்ளூர் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்று விளங்கிய பெண் தெய்வ வழிபாட்டு மரபு வேரூன்றி நின்றமையால் அதனைத் தகவமைக்கு முகமாகவே அதுவரையில் இல்லாதிருந்த பெரிய கோயில் வளாகத்தில் ஒரு திரிபுவனக் குலோத்துங்கனால் உலகமுடைய நாச்சியார் கோயிலும் எழுப்பப்பட்டது.

“உள்ளூர் மக்கள் தஞ்சைப் பெரிய கோவில் மூலவரைவிட ஆலய வளாகத்தினுள் உள்ள திரிபுவனக் குலோத்துங்கன் கட்டிய பிருஹ நாயகியைத்தான் அதிகமாக வழிபடுகின்றனர்.

ராஜராஜன் ஆட்சியில் ஆகமநியதி சாராத் தெய்வங்களின் புகழ், கவனிப்பு மங்க ஆரம்பித்தது என்றாலும் இந்த வகைத் தெய்வங்களுக்கு இடமளிப்பது போலப் பல உமா பரமேஸ்வரி விக்கிரகங்கள் பெரிய கோயிலில் வைக்கப்பட்டன. இன்றும் தஞ்சையில் பெண் தெய்வங்கள் எண் ணிக்கை அதிகமாக இருப்பதைக் கவனிக்கலாம். உள்ளூர்ப் பெண் தெய்வங்கள் உமாவுடன் அடை யாளம் காணப்பட்டுச் சிவனுக்குத் துணையாக நிறுவப்பட்டனர்.” -சுரேஷ்.பி.பிள்ளை (முற்சுட்டிய கட்டுரை)

ஒருவகையில் உன்னிப்பாக நோக்கினால் நேற்றைய மாமன்னர்களின் மெய்க்கீர்த்திகளும், சிலாசாசனங்களும், செப்புப் பட்டயங்கள் முதலானவை எல்லாமும்கூட அவர்களாலும் சுயபிரதாபமாகவும் அவர்களுக்குப் போற்றி பாடுபவர்களால் முகஸ்துதிகளாகவும் முன் வைக்கப்பட்டனவே எனலாம். இன்றைய ஆட்சி யாளர் புதைக்கும் காலப் பெட்டகங்கள் போலத் தானே அன்றைய மெய்க்கீர்த்தி முதலானவையும் இவற்றின் வாயிலாகக் கட்டமைக்கப்படும் வரலாற்றினை ‘சொற்களின் கொடுங்கோன்மை’ என்பார் ஒரு வரலாற்றாளர்.

“தமிழக மன்னர்களைப்பற்றி நாம் அறிந்த தெல்லாம் தங்களைப்பற்றி அவர்களே சிலா சாசனங்களிலும் தாமிரப் பட்டயங்களிலும் செதுக்கி வைத்த அல்லது அவர்களிடம் பொருள் பெற்றவர்கள் எழுதி வைத்துப் போனவைதான் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். பெரும்பாலான ஆய்வாளர்கள் கல்வெட்டுக்களை மட்டுமே மூலாதாரமாகக் கொண்டு வரலாறு எழுதினர். அதிலும் பெயர் பெற்ற வரலாற்றா சிரியர்களும்கூடத் தமிழ் தெரியாததால் கல்வெட்டுக்களின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் பயன்படுத்தியே வரலாறு எழுதினார்கள்.

அதாவது சொற்களால் மட்டுமே அறியப்படும் விவரங்கள் இதை Tyrariny of Words என்று ஒரு வரலாற்றாசிரியர் குறிப்பிட்டார். சிற்பங்கள், ஓவியங்கள், ஊர்ப் பெயர்கள், களஆய்வு மற்ற மொழிகளில் (சமஸ்கிருதம், சிங்களம், பாலி) தமிழக வரலாறுபற்றி உள்ள விவரங்கள் இவைகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு சமய நடுவு நிலைமையிலிருந்து ஆய்வு செய்தால் சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்காமல் தமிழக வரலாற்றை மறுவாசிப்பு செய்ய முடியும்.” -தியடோர் பாஸ்கரன் (‘உயிர் எழுத்து’ பிப்.2010)

தமிழக வரலாற்றை மறுவாசிப்பு செய்வதற் கான புதிய வரலாறெழுதியல் முறையின் தேவையை வலியுறுத்துகின்றார் தியடோர் பாஸ் கரன். இதுமட்டுமின்றி, தலித்திய, பெண்ணிய, அடித்தள, விளிம்புநிலை நோக்கு நிலைகளினின் றும் புதிய வரலாறெழுதியல் முறைமைகள் மேற்கொள்ளப்படவேண்டியனவே. ஆனால் இக்கட்டுரையின் பேசு பொருள் எல்லையில் நின்றே கோயில் சார் கலைகள் ஒன்றிலிருந்து பிறிதாய் ஊடாடித் தொடரும் பாங்கும், அவற் றிற்கு ஊடாகவும் வெளிப்படலாகவும் வரலாற்றுக் குறிப்புகளும் மட்டுமே இங்கே எடுத்துரைக்கப் படலாகின்றன.

இராசராசனின் ஆட்சிக்குட்பட்ட பகுதி களில் புத்தவிகாரைகள் குறித்தும், பெரிய கோயி லின் புத்த சிற்பங்கள் குறித்தும் உரிய தரவுகளை இத்துடன் காண்போம்.

“பேரரசன் இராசராசனுடைய ஆட்சிக்குட் பட்ட பகுதிகளில் பௌத்த சமய விகாரைகள் பல பழுதுபார்க்கப்பட்டன. சில புதியதாகக் கட்டப்பட்டன. இவற்றிற்குச் சிறந்த எடுத்துக்காட் டாகத் திருக்கோணாமலைப் பகுதியில் உள்ள வேளாகம விகாரையைக் குறிப்பிடலாம். இராச ராசன் ஆட்சியில் இந்த விகாரை புதுப்பிக்கப்பட்டு விரிவாக்கப்பட்டது. இந்த விகாரையில் உள்ள இராசராசன், இராசேந்திரனுடைய தமிழ்க் கல்வெட்டுக்கள், இந்த பௌத்த விகாரையை ‘இராசராசப் பெரும்பள்ளி’ என்னும் தமிழ்ப் பெயரால் சுட்டுகின்றன. (இலங்கைக் கல்வெட்டியல் அறிக்கை (ASCAR 1953) P.P. 9-12). இதனால் சோழப் பெருவேந்தனது சமயப் பொறையை அறிகிறோம். - க.த.திருநாவுக்கரசு (‘முதன்மொழி’ செப்.அக்.2010).

“முனைவர் சுரேஷ்பிள்ளை எழுதிய (Introduction to the study of Temple art) கோயில்களுக்கு அறிமுகம் (1976) என்ற நூலில் இந்த (பௌத்த சிற்ப)த் தொகுப்புகளைப்பற்றிய குறிப்பைக் கண் டேன். சோழர் காலத்தில் தமிழகக் கடலோரப் பகுதியில் புத்த மதமும் காவிரியின் முகத்துவாரப் பகுதியில் சமணமும் தழைத்திருந்ததாகக் கூறு கின்றனர். ஒரு குழுவைச் சார்ந்த சிற்பிகள் மேஸ்திரிகள் புத்த விகாரமொன்றைக் கட்டி விட்டுப் பின்னர் சமணப் பள்ளியொன்றையோ அல்லது ஒரு சிவாலயத்தையோ கட்டும் வேலை யில் பயன்படுத்தப்பட்டனர் என்கிறார். பெரிய கோயிலிலுள்ள புத்த சிற்பத் தொகுதிகளைப் பற்றிஅவர் கூறியது.

‘இதுபோன்ற சிற்பங்கள் மூலம் சிற்பிகள் சில செய்திகளைப் பதிவு செய்கிறார்கள். இது வைதிகர்களுக்குப் பிடிக்காமலிருந்தாலும் அர சருடைய பெயருக்குக் களங்கம் வராமல் இதைச் செய்திருக்கின்றனர். இந்தச் சிற்பங்கள் இங்கு இடம்பெற்றது மற்ற சமயங்களின் மீது ராஜ ராஜனின் சகிப்புத் தன்மையைக் காட்டுகிறது. இந்தச் சிற்பங்களால் சொல்லப்படும் செய்தி என்னவென்றால் ஒரு புத்த விஹாரம் இருந்த இடத்தில்தான் இன்று பெரிய கோயில் இருக்கிறது என்பதைத் தான்.” -தியடோர் பாஸ்கரன் (‘உயிர்எழுத்து’ பிப் - 2010).

இராசராசனின் தமக்கையாரான குந்தவைப் பிராட்டியார் தன் தந்தையார் பெயரில் சிவன் கோயிலும், தன் தம்பியின் (இராசராசன்) பெயரில் வைணவக் கோயிலும், தன்னுடைய கணவர் (வந்தியத் தேவன்) பெயரில் சமணக் கோவிலும் கட்டுவித்தார். இத்தகைய கோயிலெடுக்கும் உணர்வு ஒருபுறம் சமயப் பொறையாகவும் மறுபுறம் மாற்று மதத்தவரான மதம் சார்ந்த மக்கள் மத்தியிலும் தமது ஆளுகைப் பகுதியில் தகவமைக்கும் பாங்கிலும் அன்று கொண்டு செலுத்தப் பெற்றதெனலாம்.

இன்று மாமன்னன் இராசராசனைக் கொண் டாடி நிற்கும் உணர்வு தமிழ்த் தேசிய அரசியல் நோக்கிலும், இராசராச மன்னரென தேவேந்திர குலவேளாளர் மத்தியிலும், இராசராசசோழனின் இன்றைய பதிப்பு கருணாநிதிச் சோழன் என்ப தாகவும், தேவார தேவரென சைவ சமய வாதிகள் மத்தியிலும், இந்து மாமன்னன் என்பதாக ஜெய மோகன் வகையறா வரையிலுமாக ஊடாடி நிற்கக் காணலாம்.

இன்குலாப்பின் ‘ஸ்ரீ ராஜ ராஜேச்சுவரியம்’ என்னும் கவிதையினைப் பெரிய கோயில் உள்ளள வும் நிற்கும் கவிதை என்பார் கனல் மைந்தன். ‘பொதிகைச் சித்தர் பாடல் பெற்ற ஸ்தலம்’ என்னும் என் கவிதை கங்கை கொண்ட சோழபுரக் கோயில் பற்றிய ‘ஸ்ரீ ராஜேந்திரேச் சுவரியம்’ ஆகும். இவைதாம் உள்ளபடியே இராஜராஜ - இராஜேந்திரர் தமக்கான ‘இன்றைய மெய்க் கீர்த்திகள்’ எனலாம். இவையிரண்டும் சித்தர் மரபின் அவேதிய மெய்யியலின் அதிர்ச்சி மருத் துவக் குரலாய்ப் பிரமைகளை எல்லாம் உடைத் தெறிந்து வரலாற்று மௌனங்களைச் சிதிலங் களாக்குவனவே.

“இதன் விழிகொள்ளாப் /                               பிரம்மாண்டத்தின்கீழ்

சிறிய தேசங்கள் / சிதறிக் கிடக்கின்றன.

ஆயிரம் ஆண்டு / மூத்த என் தங்கையின்

காலில் கட்டிய சதங்கை / இந்தப் பெரிய                                     கோயில்

முற்றத்தில் அழுது கொண்டிருக்கும்                                     இன்னும்”

எனத் தொடரும் ஸ்ரீராஜராஜேச்சுவரியம் பொற் காலக் கனவின் பிரம்மாண்டங்களைத் தகர்த் தெறியும் சுக்குநூறாய்...

‘பிற மன்னர் மலைக் குவட்டில் கொடி                                  பதித்தது

சோழ சாம்ராஜ்ய விரிவாக்கம் / சிவன்                                  கோயில்

தாசியர் முலைக் குவட்டில் / சூலக்குறி                                      பதித்தது

மதன காமராஜ்ய அமலாக்கம்”

எனத் தொடரும்.

என் ‘பொதிகைச் சித்தர் பாடல் பெற்ற ஸ்தலம்’.

“நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் நாட்டிய மகளிரை அழைத்து வந்த தன்மை இக் கோயிலின் தென்னிந்திய தேசியத் தன்மையை எடுத்துக் காட்டவேயாகும்” எனவாங்கு நம்மால் தொல்லியலாளர் அர.பூங்குன்றன் பூரிப்பதைப் போல இறும்பூதெய்திட இயலவில்லை. தேவதாசி மரபின் பிதாமகனாகவும் விளங்கிய இராச ராசனை இந்த வகையில் பெரியாரிய நோக்கு நிலை நின்றே நம்மால் எதிர்கொள்ள இயலும். மறுபக்கம் பகுத்தறிவின் பயங்கரவாத நோக்கு நிலையில் இருந்து பக்தியிலக்கியப் பங்களிப்பான கலை இலக்கியக் கொடைகளை நம்மால் மறுதலிக்கவும் இயலாது.

சிற்பநூல் ஆகம நூற் பயிற்சியோடு உள்ளார்ந்த இறையியல் மெய்யியல் புரிதல் களோடு செழித்தோங்கிச் சிறப்பதுவே கணபதி ஸ்தபதியின் சிற்ப மொழி. கணபதி ஸ்தபதியின் கைவண்ணத்தில் உருவான பூம்புகாரின் மாதவிச் சிலையும், குமரி முனையின் வள்ளுவச் சிலையும் பிறந்த மரபின் உள்ளார்ந்த அடையாளங் களையும் சிற்பநூல் நுட்பங்களையும் உள் வாங்கிய மேதைமையின் கொடைகளாய் விளங்கு வன. இவற்றிற்கு ஊடாக கணபதி ஸ்தபதியின் சிற்ப மொழி குறித்தும் அதன் உள்ளார்ந்த கலை நுட்பம் மற்றும் உட்கிடையான மெய்யியல் இறையியல் புரிதல்கள் குறித்தும் காண்போம். இச்சிலைகள் இரண்டுமே ‘மோடிப்படுத்தல்’ என்னும் சிற்பக் கலைப் பரிமாணத்திற்கான சிறந்த உதாரணங்களாகத் திகழக் கூடியனவேயாகும். இத்தகைய பரிமாணம் குறித்த பதிவுகளை நோக்குவோம்.

‘ஊரின் எல்லையில் தனித்திருக்கும் ஐயனார் உருவங்களும் சுடுமண் குதிரைகளும் உயிரும் பேராற்றலும் உள்ளனவாய் எனக்குத் தோன்றும். இவை இதுதான் என்று சொல்ல முடியாத பாதிப்பை எனக்குள் ஏற்படுத்தியிருக்கின்றன. இதுபோலவே எங்க வீட்டுத் தெருவில் இருந்த மரவாகனம் செய்யும் பட்டறையும். கோயிலிலுள்ள மரவாகனங்களில் மோடிப்படுத்தல் (Stilize of Stylization) என்னைக் கவர்ந்த ஒன்று. அதைத் தாண்டி அந்த உருட்டி வைத்த கண்களைப் போல எளிமையான அதே நேரம் அழுத்தமான கிராமிய அழகு என்னைக் கவர்ந்தது” - ஆதிமூலம் (ப.56)

“ஆதிமூலம் குறிப்பிடும் தஞ்சைப் பெரிய கோயில் ஓவியங்கள் எவ்வாறு சாஸ்திரிய சிற்பங் களின் இயல்பைக் கொண்டுள்ள அதே வேளை சிற்பத்தை மீறி நின்று பேசத்தக்க மோடிப் படுத்தலை உருக்களின் ஒழுங்கமைப்பில் கொண்டுள்ளனவோ அதுபோல (ஆதி மூலத்தின்) இக்கோட்டோவியங்கள் இப்பாரம் பரிய வடிவங்களுக்கு அப்பால் நின்று பேச வல்லவை” - தா.சனாதனன் (‘அழியாக் கோடுகள்’ ப.60)

“அவருடைய (ந.பிச்சமூர்த்தி) கவிதைகளில் ஓர் அற்புதமான ஒளிவீசும். அதாவது சொல்லை யும் பொருளையும் மீறி எழும் கருத்தின் ஒளி நிறைந்தது அவருடைய வாக்கு. அவர் ஞான வித்தகர். அவர் காட்டும் படிவமும் பரிமாணமும் சித்திரத்தின் கோடுகளில் விளிம்பை முறித்துக் கொண்டு மேலெழும் தன்மையுடையவை. அதாவது கண்பார்க்கும் கோடுகளுக்கும் அப்பால் கண்பார்க்காத கோடுகளில் அல்ட்ராவாகப் புலனாவன” - கரிச்சான் குஞ்சு (‘சொல்லின் மந்திரமும் சொல் ஓய்ந்த மௌனமும்’ ப.83).

ஆதிமூலம் மரவாகனங்களையும், சுடுமண் சிற்பங்களையும், தஞ்சைப் பெரிய கோவில் தேவார ஓவியங்களையும் முன்வைத்தும், தா.சனா தனன் ஆதிமூலத்தின் கோட்டோவியங்களைக் குறித்தும், கரிச்சான் குஞ்சு ந.பிச்சமூர்த்தியின் கவிதைகளை முன்நிறுத்தியும் பேசுகின்ற இத் தகைய மோடிப்பாடென்பது அதனதன் மர பார்ந்த நுட்பங்களில் மையங் கொண்டு பிறந்தவை யான போதிலும் சித்திரத்தின் கோடுகளையும், சிற்பத்தின் விளிம்புகளையும், கவிதையின் வரிகளையும் முறித்து மீறி மேலெழுந்து விகசிக்க வல்ல பரிமாணமேயாகும். இத்தகைய அற்புதப் பரிமாணம் வாய்ந்தனவே கணபதி ஸ்தபதியின் மேதைமையில் வாய்த்த மாதவிச் சிலையும் வள்ளுவச் சிலையுமாகும். காணும் பொருளும் தானேயாகக் காணவல்ல ‘ஒன்றாகக் காண்பதுவே காட்சி’ என்னும் ஒளவை மொழியான படைப்புக் கலையின் உக்கிரத்தில் சித்தித்தனவே இச்சிற்ப அற்புதங்கள் இரண்டுமாகும்.

மாதவிச் சிலையின் காமரூபமான மயக்கம் மோகன லாவண்யம்

“சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கு                                இவள்

உயிர் தவச் சிறிது காமமோ பெரிதே” என்னும் சங்கப் பாடல் வரிகளையும், கம்ப சித்திரக் காட்சியான

“சொன்னலங் கடந்த காமச் சுவையை ஓர்                          உருவமாக்க

அந்நலந் தெரிய வல்லார் எழுதிய தென்ன                               நின்றார்”

என்னும் வரிகளையும் வார்த்தெடுத்தாற் போன்ற கலையின் தாகம் மேவி நிற்கும் ‘தாக்கணங்கு உறுத்தலாக’ நம்மை ஈர்த்துப் பிணித்துக் கிரங்க அடிக்கின்றது.

ஆண்மையின் ராஜ கம்பீரம் தஞ்சைக் கோபுர மென்றால் பெண்மையின் நளின சிங்காரம் கங்கை கொண்ட சோழபுரக் கோபுரம் எனப் பெர்சி பிரௌன் எடுத்துரைப்பார்.

சற்றே நுசுப்பொசிய நுடங்கிநிற்கும் வள்ளுவச் சிலையோ சக்திக்குள் சிவமொடுங்கும் தந்திர மரபின் அர்த்த நாரீஸ்வர சொரூபமாகவே பரிணமித்துள்ளது.

‘ஆணாகிப் பெண்ணாகி அலியாகி நின்ற ஆதி’யைப்

பரவி நிற்கும் திருமந்திரத்தையும்

‘பெண்ணினுள் ஆணும் ஆணினுள்                                 பெண்ணும்

அண்ணுற வகுத்த அருட்பெருஞ் சோதி’

என்னும் வள்ளல் வாக்கினையும்

‘அருவில்லான் உருவுமில்லான்’ அணுவு      `                                         மில்லான்

ஆணில்லான் பெண்ணில்லான் அலியு                                   மில்லான்’

என அல்லாவைப் பரவும் ரசூல்பீவி பாடலையும் வார்த்தெடுத்தாற் போன்ற வள்ளுவச் சிலையின் உட்பொதிந்த மெய்யியல் கூறுகள் விதந் தோதத் தக்கனவாம்.

“தன் ஆளுமையையும் உணர்வையும் பெண் மையாக மாற்றுவதற்கான ஒருவிதப் பயிற்சித் திட்டமே தந்திர யோகம்... நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்த நடைமுறை பெண்ணாக மாறுவதன் மூலம் எல்லையற்ற பெண் சக்தியைச் சாந்தப்படுத்தும் ஒரு முயற்சி தான் என்பதையே... பெண்ணாக வேண்டும். மனிதரில் உறங்கும் பெண்மையைக் கிளர்த்தித் தமது ஆண்மையை ஒழிக்க வேண்டும்” -தேவி பிரசாத் சட்டோபாத்யாய (‘உலகாயதம்’...)

“வாமகாரமென்பது தாந்திரிகத்தில் ஆண் - பெண் சேர்க்கையின் மூலமாக வளமையைப் பெருக்குவதை முன் வைக்கிறது. இங்கே தந்தை தாயிடம் அடைக்கலமாகி விடுதலே தலையாயது. தாய்தான் வளமையின் சின்னம். எனவே தாயிடம் ஒடுங்குதல் தாந்திரிகத்தில் அவசியமாகும்” - தேவ.பேரின்பன் (‘தமிழ்ச் சித்தர்’, ‘திரட்டு’)

“எதிர் எதிர்நிலை, இயைதல்நிலை ஆகிய இருநிலைகளும் தந்திரத்தின் எல்லைக் கற்கள் எனலாம். தந்திரத்தின் குறிக்கோளே இந்த இருமையின் எல்லா வடிவங்களையும் யோகியின் தேகத்திலேயே ஒன்றுபடுத்தி இணைத்துக் கொள்வதுதான். - த.ந.கணபதி (‘தமிழ்ச் சித்தர் மரபு’)

இத்தகு பெண்ணாக முயலும் தந்திர மரபை ஏனைப் பிற சமயங்களும் உள்வாங்கி அவற்றிற்கு ஏற்பத் தகவமைத்துக் கொண்டன. இத்தகு மெய் யியல் கூறுகள் உட்பொதிந்த தந்திர வடிவாகவே கணபதி ஸ்தபதியின் கைவண்ணத்தில் வள்ளுவச் சிலையும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

‘ஐந்து பேரறிவும் கண்களேகொள’ எனவும் ‘ஐயாவென ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே’ எனவும் பரவி நிற்கும் பக்தி இலக்கிய பாவனை போலவே. வள்ளுவச் சிலையின் வடிவமைதியும் நம்மைப் பரவசத்தில் ஆழ்த்த வல்லதே. உளவியலறிஞர் கார்ல்யூங் (Jung) ஆணிடத்தில் உள்ளடங் கிய பெண்கூறை அனிமா (Anima) எனவும் அதைப் போலப் பெண்ணிடத்தில் உள்ளடங்கிய கூறு அனிமஸ் (animus) என்றும் வருணிப்பதைச் சுட்டிக்காட்டி ஆணினுள் பெண்மையும் பெண்ணினுள் ஆண்மையும் உள்ளார்ந்து கிடத்தலைச் சித்தர் மரபில் ஆழங்கால்பட்ட த.ந.கணபதி எடுத்துரைப்பதும் (முற்சுட்டிய நூல்) இங்கே மனங் கொள்ளத்தக்கதாம்.

(விழுப்புரம் ‘மருதம்’ விழாவில் 16-1-2011 அன்று ‘பக்தி இயக்கம் வளர்த்த கலை இலக்கியம்’ பற்றி நிகழ்த்திய ஆய்வுரையின் ஒரு பகுதி மட்டும் இங்குக் கட்டுரையாக்கம் பெற்றுள்ளது.)

Pin It