இந்தியாவில் கடந்த 2 ஆயிரம் ஆண்டுகளாக வர்ணாசிரமம் என்ற பெயரில் தலித் மக்கள் மீது தீண்டாமையை சுமத்தியதோடு மட்டுமல்லாமல் அதற்கு ஒரு வரையறையையும் தீண்டாமை, தீண்டாதோர் குறித்து மநு முன்வைத்துள்ளது.

இறைவனின் வாய், தோள்கள், தொடைகள், பாதங்கள் ஆகியவற்றில் இருந்து தோன்றியவர்களின் சமுதாயத்திற்கு வெளியில் உள்ள எல்லா இனக் குழுக்களும், மரங்களுக்கும், சுடுகாட்டிற்கும் அருகிலும், மலைகளின் மேலும் தங்களுக்கே உரிய தொழில்களை செய்துகொண்டு வசிக்கட்டும். சண்டாளர்களும் ஷ்வாபகர்களும் வசிக்குமிடம், கிராமத்தின் வெளியே இருக்கவேண்டும். அவர்களுடைய செல்வம், நாய்களும், கழுதைகளும் தான். இறந்தவர்களின் துணிகளையே உடையாகப் பயன்படுத்த வேண்டும். அவர்களுக்குச் சமமானவர்களையே திருமணம் செய்ய வேண்டும். உணவு உடைந்த தட்டில் மட்டுமே வழங்கப்படும். சவங்களை எடுத்துச் செல்லவேண்டும், மரண தண்டனையை நிறைவேற்றுவது என்பது இவர்களின் தொழிலாக இருந்தது. யாரையேனும் தொட்டால் தீட்டு, அவர்களுக்கு உடனே கடுமையான தண்டனைகள் ஏன் மரண தண்டனையும் கூட உண்டு.

இந்த நிலையில், 1911 ஆம் ஆண்டு பிரிட்டிஷார் இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினர். அதில் தீண்டாதோரை தனியே பிரிக்க அவர்கள் பத்து நெறிமுறைகளை வகுத்தனர்.

1. பார்ப்பனர்கள் அனைவரிலும் உயர்ந்தவர்கள் என்பதை மறுப்பவர்கள், 2. பார்ப்பன குரு அல்லது அங்கீகரிக்கப்பட்ட வேறு இந்து குருவிடமிருந்து மந்திர உபதேசம் பெறாதவர்கள், 3. வேதங்களின் அதிகாரத்தை மறுப்பவர்கள், 4. பெரிய இந்துக் கடவுளர்களை வழிபடாதவர்கள், 5. நல்ல பார்ப்பனர்களின் சேவை அளிக்கப்படாதவர்கள், 6. பார்ப்பனப் புரோகிதர்களே இல்லாதவர்கள், 7. சாதாரண இந்து கோவில்களின் உள்ளே அனுமதிக்கப்படாதவர்கள், 8. தீட்டு ஏற்படுத்துபவர்கள், 9. தங்களில் இறந்தவர்களை புதைப்பவர்கள், 10. மாட்டு இறைச்சி உண்பவர்கள், பசுவை புனிதமாகக் கருதாதவர்கள் என்பன.

இவை மநுவின் நெறி முறைகள் தான் என்பது சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இத்தகைய நெறிமுறை என்பது வர்ணாசிரமத்தின் வெளிப்பாடாகும். இப்படி மேலே குறிப்பிட்ட பட்டியல் நம்மை அதிரச் செய்வதுடன், தொடர்ந்து வந்தன.

அந்த சூழ்நிலையில் 1946 ஜுன் 7ஆம் தேதி ஃரிப்ரஸ் பத்திரிகைக்கு ஏ.வைத்தியநாத ஐயர் மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற தீண்டாமைக் கொடுமை பற்றி கடிதம் எழுதினார். அதில் “மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் சிரட்டையில் தேநீர் குடிக்க மறுத்து, கண்ணாடி டம்ளர் கேட்டதற்காக, செருப்பால் தாக்கிய கொடுமை நடந்ததோடு மற்றவர்களின் உணர்வுகளை புண்படுத்தக்கூடிய செயல்களை செய்ததற்காக நத்தம் அருகே பரளியில் ஹரிஜன்கள் 2 பேர் நான்கு மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டனர்”. இவ்வாறு அந்த கடிதத்தில் வைத்தியநாத ஐயர் குறிப்பிட்டார்.

காங்கிரஸ் கட்சி சார்பில் தன்னுடைய தொண்டர்களை வைத்து ஹரிஜன சேவா சங்கம் துவக்கப்பட்டு பல்வேறு பிரச்சார இயக்கங்கள் நடத்தப்பட்டன. மதுரை மாவட்டம் மேலூர் தாலுக்கா கீழவளவு கிராமத்தில் பொது ஊரணியில் தண்ணீர் எடுக்க தடை, ஆட்டுகுளம் என்ற இடத்தில் பொது கிணற்றில் தண்ணீர் எடுக்கத் தடை, எட்டி மங்களத்தில் ஊர்சாவடிக்குள் நுழையத் தடை, திருவாரூரில் ஊரணியில் தண்ணீர் எடுக்கச் சென்ற ஹரிஜன கர்ப்பிணி பெண்ணை ஆதிக்க சாதி இளைஞர் தாக்குதல், கொட்டகுடியில் முடிவெட்ட மறுத்தல், கிடாரிபட்டியில் பொது நடைபாதை வழியாக பிணத்தை எடுத்து செல்லத் தடை, நாவினிபட்டியில் டீ கடையில் நுழையத் தடை என பல்வேறு தடைகள் இருந்தன. இவற்றிற்கு எதிரான பிரச்சாரங்களை அந்த சங்கம் செய்த போதும், கொடுமை நீடிக்கவே செய்தது என்பதை அம்பேத்கர் எழுத்துகளில் இருந்து உணரமுடிகிறது. (அம்பேத்கர் நூ. தொ. தொகுதி 9)

இந்த கொடுமைகள் தொடர்கின்ற போதே அதற்கு எதிராக தமிழ்நாட்டில் தந்தை பெரியார், பி.சீனிவாசராவ் ஆகிய மகத்தான தலைவர்கள் போராட்டத்தை வீறு கொண்டு நடத்தினர். அடித்தால் திருப்பி அடி என்ற எழுச்சி முழக்கத்தோடு உழைப்பாளி மக்களை திரட்டி நிலப்பிரபுத்துவ சாதிய ஆதிக்கத்திற்கு எதிராக நடத்திய போராட்டமாக இருந்தது, சாணிப்பால், சவுக்கடி போன்ற கொடுமைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் போராட்டமாக செங்கொடி இயக்கத்தின் போராட்டம் முத்திரை பதித்தது. இதனை பொறுத்துக்கொள்ள£மல் நிலப்பிரபுத்துவ சாதிய சக்திகள் நடத்திய வன்முறையின் உச்சமாக 1968 டிச 25 நாள் அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டு சங்கம் வைத்து போராடிய 44 தலித் விவசாய தொழிலாளர்கள் உயிரோடு தீவைத்து எரித்து கொல்லப்பட்டனர். அன்றைக்கு தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் இருந்த அண்ணா தலைமையிலான திமுக அரசாங்கம் இக்கொடுமைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க மறுத்தது.

இந்தியா விடுதலை பெற்று 63 ஆண்டு காலம் ஆகிய பின்பும் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிகள் பல மாறியபோதும், மதுரை மாவட்டம், தெற்கு தாலுக்கா, வடிவேல்கரை கிராமத்தில் முதுகலை பட்டம் படித்த டி.ஒய்.எப்.ஐ கிளைச் செயலாளர் சைக்கிளில் சென்றதன் காரணமாக ஆதிக்க சாதியினரால் கொடூர தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார். தன்னுடைய வீடு திறப்பு விழாவிற்கு ஊர்வலமாக சென்றவர்கள் உத்தப்புரம் கிராமத்தில் ஆதிக்க சாதியினரால் கல் வீச்சுக்கு உள்ளானர்கள். இப்படியாக இன்றைக்கும் மதுரை மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் தீண்டாமைக் கொடுமை தொடருகின்றது என்பது தெரியவருகிறது. இதோடு மட்டுமல்லாமல் தமிழகத்தில் பல்வேறு வடிவங்களில் 7000க்கும் மேற்பட்ட கிராமத்தில் தீண்டாமைக் கொடுமைகள் தலைவிரித்து ஆடுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

செட்டிபுலம், காங்கியனூர் போன்ற கிராமங்களில் தலித் மக்கள் ஆலய நுழைவு போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு ஆதரவாக ஜனநாயக முறையில் போராடியவர்கள் மீது சட்டம் தன் கடமையை செய்யும் என்று கூறி வழக்கு போடுவது, தடியடி, துப்பாக்கி சூடு நடத்துவது என காவல்துறையின் ஆணவ வெறியாட்டம் தொடர்கிறது. இதனை கட்டுப்படுத்தி தலித் மக்களின் உரிமையை பாதுகாக்க வேண்டிய தமிழக அரசு, கைகட்டி வேடிக்கை பார்ப்பது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானதாகவே உள்ளது. தீண்டாமையை ஒழிப்பதில் அன்றைய தினம் காங்கிரஸ் கட்சி தலைமை பின்பற்றிய இரட்டை தன்மையை தற்சமயம் திமுகவும் பின்பற்றுகிறதோ என்ற ஐயம் ஏற்படுகிறது.

தந்தை பெரியார் “வைக்கத்தில்” நடத்திய போராட்டம் கேரளத்து தலித் மக்களை கோவிலுக்குள் அழைத்து சென்றது. அதன் எழுச்சி இன்றைக்கும் கேரளத்தில் தொடர்ந்து கொண்டு இருக்கிறது, ஆனால் தமிழகத்திலே தந்தை பெரியார் கொள்கைகளை பேசி, பெரியார் படத்தை போட்டு கட்சி நடத்துபவர்கள், கைபிடித்ததாக, கால் பிடித்ததாக பேசக்கூடியவர்கள் இருக்கும் இங்கு, இன்றைக்கும் தொடர்கின்ற இரண்டாயிரம் ஆண்டு கால அநீதிக்கெதிராக போர்க்களம் புக வேண்டியது காலத்தின் கட்டாயம்.

எனவே, இனியரு கனம் பொறுப்பதில்லை தீண்டாமைக்கு எதிரான கோயில் நுழைவு போராட்டம், செருப்பணிந்து நடக்கும் போராட்டம், முடிவெட்ட வைக்கும் போராட்டம், பஞ்சமி, தலித் சுடுகாடு, இரட்டை டம்ளர், பொதுகுளத்தில் குளிக்கும் போராட்டம், பட்டா கேட்கும் இயக்கம், பொதுப் பாதையில் நடக்க, தண்ணீர் எடுத்திட, உள்ளூரில் பொதுச்சொத்தை பயன்படுத்துதல் உள்ளிட்ட ஏராளமான வடிவங்களில் தொடர்கின்ற அநீதிக்கு எதிராய் டாக்டர் அம்பேத்கரின் ஆவேசத்தோடும், பகத்சிங்கின் உறுதியோடும், டி.ஒய்.எப்.ஐ டிச 25 வெண்மணி தியாகிகள் தினத்தன்று தமிழகம் முழுவதும் களம் காண்கிறது. தீண்டாமைத் தீயினை கொளுத்திட இளைஞர்கள் ஒன்றிணைவோம் தீண்டாமைக் கொடுமையை ஒழித்து காட்டுவோம். 

- எஸ்.பாலா

Pin It