உயிர் ஆதார சூரிய ஆற்றல்...!

சூரியன் உருவான காலத்திலிருந்தே, தன் ஒளி ஆற்றலை, விண்வெளியில் வீசியடித்துக் கொண்டிருக்கிறது. நம் பூமிப்பந்து மீதும், அது உருவானதிலிருந்து சூரிய ஆற்றல் பட்டு, திரும்பியும் போகிறது. அது போக பூமியின் மீது ஒட்டிக் கொண்டிருக்கும் சூரிய ஆற்றல்தான் நம் பூமியின் இயக்கத்திற்கு மைய கலன்...! கடலலை ஆர்ப்பரிப்பதும், கடல்நீர் ஆவியாகி, மேகமாகி - மழையாகவும், பனியாகக் கொட்டுவதும், காற்று வீசப்படுவதும், தாவரங்கள் உணவுக்காக உலை வைப்பதும், ஏன் உயிரினங்களின் ஆதாரக் களமே.. பூமியில் தங்கியுள்ள மிச்ச சொச்ச சூரிய ஆற்றல்தான்! சூரியனிடமிருந்து வந்து சேரும் ஆற்றலில் 30%சதம் மீண்டும் விண்வெளிக்கே திருப்பியனுப்பப்படுகிறது. 70சதம் ஆற்றல்தான் பூமியின் வளிமண்டலத்துக்குள் பிரவேசிக்கிறது. இங்கேதான் பசுமை இல்ல வாயுக்கள் உள்ளன.

உயிரை உருவாக்கிய பசுமை இல்ல வாயுக்கள்...!

நாம் எப்போதுமே, பசுமை இல்ல வாயுக்கள் என்றதுமே அவை பூமியை சூடாக்குபவை கெடுதல் செய்பவை என்றே நம்பிக்கொண்டிருக்கிறோம். அது 100சதம் உண்மையல்ல நண்பா..! புவியை எட்டிப்பார்க்கும் சூரிய ஒளியை, வெப்பத்தை, ஆற்றலை கவ்விப்பிடித்து தக்கவைக்கும் வேலையை செய்பவைதான் பசுமை இல்ல வாயுக்கள். இது தெரியாதா? அதனால்தானே புவி வெப்படைதலும் காலநிலை மாற்றமும் என்கிறீர்களா? அதுவும் உண்மைதான் ஆனால், அது மட்டுமே நிகழ்வதில்லை. ஒருக்கால், வளிமண்டலத்தில் பசுமை இல்ல வாயுக்கள் இல்லை என்றால், என்னவாகும் என்று நினைத்துப் பார்த்தது உண்டா? வளிமண்டத்தில் ஊடுருவிய சூரிய ஒளியும், வெப்பமும், அப்படியே திருப்பி அனுப்பப்பட்டால், பூமி ஜில்லென்று பனிக்கட்டி போல உறைந்துவிடும் நண்பா...! நீங்களோ, நானோ, புழு, பூச்சிகளோ, ஏன் புல்லினங்கள் கூட இந்தப் பூமியில் பிறந்திருக்க முடியாது. உயிர்களின்.... உயிர் நாடி.... பூமியில் உயிரினங்களை உருவாக்க முக்கியக் காரணி பசுமை இல்ல வாயுக்கள்தான்! வீணே, பசுமை இல்ல வாயுக்களால்தான், பூமி சூடாகிறது என அவைகளைப் போட்டு புரட்டிக் கொண்டிருக்க வேண்டாம். பூமி வெப்படைய வேண்டுவதும், ஒரு காலகட்டத்தின் தேவை.!

பசுமை இல்ல விளைவு கண்டுபிடிப்பு:

பசுமை இல்ல வாயுக்கள் என்பவை காடுகள் எரிதல், எரிமலைக் குமுறல் போன்ற இயற்கை நிகழ்வுகள் மூலம் வெளியான கரியமில வாயுக்களும், நீராவியும், நெட்ரஸ் ஆக்ஸைடும்தான் பெரும்பாலும். பின்னர் மீத்தேனும், குளோரோ புளோரோ கார்பனும் கைகோர்த்துக் கொண்டன. இந்த பசுமை இல்ல வாயுக்களினால் ஏற்படும் விளைவுகளை, கி.பி 1824இல் பிரெஞ்சு நாட்டு கணிதவியல் விஞ்ஞானியான ஜோசப் ஃபோரியர் தான். முதன் முதலில் கண்டறிந்தார். இவர்தான் பசுமை இல்ல வாயுக்களின் விளைவு என்பது சூரியக் கதிர்களை இந்த வாயுக்கள் உட்கிரகித்து இவற்றை அகச் சிவப்புக்கதிராக வெளியிட்டு பூமியின் புறப் பரப்பை சூடாக்குகின்றன என்ற உண்மையை ஃபோரியர் வெளியிட்டார்.

பூமி காய்ச்சல் பசுமை இல்ல வாயுக்கள், பூமியின் வளிமண்டலத்தில் இல்லை என்றால் மற்ற கோள்கள்போல், பூமியும், உயிரற்ற சுடுகாடாக பாலைவனமாக வெற்று நிலமாகவே இருந்திருக்கும் என்ற நிஜத்தை உலகிற்குப் புரிய வைத்தவர். ஜோசப் ஃபோரியர். இவைதான் பூமிப்பந்தை, மிதமாக உயிரினம் வாழ வசதியாக, 33’சி   வெப்பத்திலேயே வைத்திருக்கும் சாகச வித்தையை செய்கின்றன. நம் சூரியக் குடும்ப உறுப்பினரான வெள்ளி, செவ்வாய் மற்றும் சனியின் துணைச் கோளான டைட்டனிலும் பசுமை இல்ல வாயுக்களின் பாதிப்புகள் உள்ளன. ஆனால் இன்று 33’சி வெப்பதிலேயே உள்ளதா என்பதுதான் வினா? தொழிற் புரட்சிக்குப் பின் மனித செயல்பாடுகளால், ஆலைச் சக்கரங்களின் இயக்கத்தால், வாகன அதிகரிப்பால், பூமியின் வெப்பம் அதிகரித்து காய்ச்சல் வந்து விட்டதுதான் இன்றைய உண்மை நிலையாகும்.

பசுமை இல்ல வாயுக்களை வழங்கிடும் வளர்ந்த நாடுகள்...

பசுமை இல்ல வாயுக்கள், கோடிக்கணக்கான ஆண்டுகளாக, சூரியனிடமிருந்து பெற்ற ஒளி ஆற்றலை விண்வெளிக்கு வீசியடித்துக் கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் சூரியனிடமிருந்து பெறுவதும், பசுமை இல்ல வாயுக்கள் வெளியே அனுப்பும் ஒளி ஆற்றலும் சமநிலையில் உள்ளதால், வரவு செலவு பட்ஜெட் கி.பி 1800 வரை ஏதோ சமநிலையில் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால், கடந்த 200 ஆண்டுகளாக பசுமை இல்ல வாயுக்களின் பணிக்கு பாதகம் நிகழ்ந்துவிட்டது. இதன் மூலவேர் வளர்ந்த நாடுகளின் சுயநல ஆசைதான்! 1750களில் தொழிற் புரட்சி ஏற்பட்ட பின்னர். தொல் படிமப் பொருட்களான நிலக்கரி, பெட்ரோல், டீசல், கச்சா எண்ணெய்கள் எரிக்கப்பட்டன. ஆலைச் சக்கரங்கள் சுழன்றன, தொழில் உற்பத்தி பெருகியது. ஆலைகளின் புகை போக்கிகள், கரியமில வாயுவைக் கக்கின. பசுமை இல்ல வாயுக்களின் அளவும் அதிகரித்தது. இயற்கை செயல்பாட்டில் குறுக்கீடு நிகழ்ந்தது. சூரிய ஒளியை, பசுமை இல்ல வாயுக்கள் விண்வெளிக்கு திருப்பி விடுவதில் சிக்கல் பசுமை இல்ல வாயுக்கள் வெப்பத்தை தங்களிடமே வைத்துக் கொண்டன. பூமியின் வெப்பநிலை அதிகமாக உயர்ந்தது. இன்று உலகில், பசுமை இல்ல வாயுக்களை வாரி வழங்கி தானம் செய்வதில் முன்னணியில் நிற்பவை. வளர்ந்த நாடுகளே! காரணம். அறியலாமா?

பெட்ரோல் வந்ததா?

கடந்த 4000 ஆண்டுகளுக்கு முன்பே, பாபிலோன் போன்ற நாடுகளில் Asphalf என்ற புனிதபடிம/தொல்படிவ எரிபொருள் பயன்படுத்தப்பட்டதாக ஹெரடோடஸ் என்ற வரலாற்றியல் அறிஞர் தெரிவிக்கிறார். ஆனால், 1860களில் தான் உலகில் முதன் முதலாக, பென்சில்வேனியாவிலிருந்து எண்ணெய்க் கிணற்றில் எண்ணெய் எடுக்கப்பட்டது. பின்னர் அதனை 1892இல் தான். (பெட்ரோல்) என்ற பெயரினை பிரிட்டிஷ்காரர்கள் சூட்டினர். ஆனால், 1930 வரை “மோட்டார் ஸ்பிரிட்’’ என்றே அழைக்கப்பட்டது. உலகில் அதிகமான பெட்ரோல் பயனாளிகள் என்பவை 30 வளர்ந்த நாடுகளே..! இதில் அமெரிக்க ஐக்கிய நாடுகள் மட்டும் 40சதம் பெட்ரோல் பயன்படுத்துகிறது. இன்று 96 சதம் வாகனங்களின் எரிபொருள் பெட்ரோலியம்தான்..! அமெரிக்கா 2 சதம் கார்களை மின்சாரத்தில் இயக்குகிறது. உலகின் பெட்ரோல் இருப்பு தளங்கள், சவூதி அரேபியா, ரஷ்யா, கனடா மற்றும் அமெரிக்காவாகும் மத்திய கிழக்கு நாடுகளே 80 சதம் பெட்ரோல் உற்பத்தியைத் தருகின்றன.

கரியைக் கக்கும் வளர்ந்த நாடுகள்....

பசுமை இல்ல வாயுக்களில் முதன்மையானதும், பூமி சூடாவதற்கு முக்கியக் காரணியும், கரியமில வாயுதான்..! மனித செயல்பாடுகளால் வெளிப்படும் கரியமில வாயு என்பது தொல்படிமப் பொருட்களான, நிலக்கரி, பெட்ரோல், டீசல், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயுக்களை எரிப்பதன் மூலம் உருவாவதுதான். இந்த தொல்படிமப் பொருட்கள் என்பவை கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த விலங்கு மற்றும் தாவர இனங்களிலிருந்து உருவானதுதான். இவை அடிப்படையில் கார்பன் மற்றும் ஹைட்ரஜன் பொருட்களின் இணைப்பான ஹைட்ரோ கார்பன்கள்தான். இவை எரியும்போது, ஆற்றலைத் தருவதுடன் ஏராளமான கரியமில வாயுவையும் கக்குகின்றன. இன்று, உலகில் தொழில் முக வளர்ந்த முதலாளித்துவ நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான், இத்தாலி போன்ற நாடுகளும் சீனாவும் 80சதமான தொல்படிமப் பொருட்களை எரிக்கின்றன. தொல்படிம ஆற்றல் களனை, ஒருபோதும் புதுப்பிக்க முடியாது.

மெல்ல மெல்லக் சூடேறிய பூமித்தாய்.....?

கடந்த 10,000 ஆண்டுகளில், பூமிப்பந்தில் உள்ள கரியமில வாயுவின் அளவில் 10 சதத்துக்கு மேல் மாறுதல் நிகழ்ந்ததே இல்லை. ஆனால், கடந்த 200 ஆண்டுகளில் 30 சதத்துக்கு மேல் கரியமில வாயு அடர்த்தியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதே! எப்படி? யார் குற்றவாளி? தடம் தேடலாமா? அனைவரின் கைகளும் நீளவேண்டிய திசை வளர்ந்த நாடுகளே! நமக்கெல்லாம் ஒரு வினா எழலாம். இதுவரை பூமி சூடேறியதே இல்லையா? உண்மைதான் சூடேறியிருக்கிறது. ஆனால் இவ்வளவு விரைவாக அல்ல புவியின் காலநிலை என்பது தொடர்ந்து காலப்போக்கில் மாறிக் கொண்டே வந்திருக்கிறது. ஆனால், மெல்ல மெல்லத்தான் பல அறிவியல் அறிஞர்களின் கருத்துப்படி 5000 - 30,000 ஆண்டுகளுக்கு முன் பூமி கனமான பலத்த பனிப் போர்வையால் போர்த்தப்பட்டிருக்கிறது. இதுதான் பனிஊழிக் காலம் எனப்பட்டது. கடந்த 7000 ஆண்டுக்கு முன்பிருந்துதான் பூமி மிக மிக மெதுவாக அசைந்து சூடேற்றப்பட்டிருக்கிறது. அதுதான் பனிக்காலத்தின் இறுதியும் கூட..!

தொடரும்... 

Pin It