சொர்ணத்தாய் - ஊராட்சி மன்றத் தலைவராக கரியமாணிக்கபுரம் ஊராட்சி அகஸ்தீஸ்வரம் ஒன்றியம் கன்னியாகுமரி மாவட்டதில் தொடர்ந்து மூன்றாம் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு மிகச் சிறப்பாக தொண்டாற்றி வருகிறார்.

ஊராட்சித் தலைவராக தொடர்ந்து மூன்றாம் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டதில் உங்கள் அனுபவம் பற்றி சொல்லுங்களேன்.  

ஆரம்ப காலத்தில் நிர்வாகம் செய்வதில் ரொம்ப தயக்கமா இருந்தது. அதிகாரி களிடமும், பொது மக்களிடமும் எப்படி அணுகுவது என்று தெரியவில்லை. போகப் போக நிறைய விஷயங்களைக் கத்துக் கிட்டேன். மக்களின் சின்ன சின்ன குறைகளை உடனுக்குடன் தீர்க்கும் போது அவங்க ஆதரவு கிடைக்குது. அதேபோல், அதிகாரிகளிடமும் சுமூகமான முறையில் அணுகும்போது ஒத்துழைப்பு கிடைக்குது. இப்பவெல்லாம், தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1.30 வரை அலுவலகத்தில் இருப்பதால் மக்கள் அதனைத் தெரிந்து கொண்டு என்னை வந்து சந்திப்பதற்கு வசதியாக இருக்கு. மேலும், தலைவர் ஒரு பெண் என்பதால் மக்கள் நேரிடையாக பேச முடியுது. என்னிடம் சண்டையும் போட முடியுது(சிரிக்கிறார்). ரேஷன் கார்டு வாங்கித் தருவது, முதியோர் உதவித் தொகை, கர்ப்பிணிப் பெண்களுக்கான உதவித் தொகை, திருமண உதவித் தொகை போன்ற சின்ன சின்ன உதவிகளை செயவதால் மக்களிடம் அதிக ஆதரவு பெற உதவியாக இருக்கிறது. 

1996ல் முதல் தேர்தலின் போது, எங்கள் ஊராட்சி தாழ்த்தப்பட்ட பெண் தலைவர் பதவிக்காக ஒதுக்கீடு பெற்றதால், நான் போட்டியின்றி (அன் அப்போஸ்டு) தேர்ந் தெடுக்கப்பட்டேன். 2001 தேர்தலில் இட ஒதுக்கீடு தொடரப்பட்ட போது, என்னுடன் 11 பெண்கள் போட்டியிட்டனர். அதில் நான் கிட்டத்தட்ட 500 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். 2006 தேர்தலில் எங்களது ஊராட்சி பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டபோது, என்னுடன் அனைத்து சமுதாயத்தையும் சேர்ந்த 12 பேர் போட்டி யிட்டனர். நான் 248 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த நான் இந்த தொடர் வெற்றி பெற்றதற்கு காரணம் அனைத்து சமுதாய மக்களும் எனக்கு ஆதரவளித்தது தான். முதல் ஐந்தாண்டுகளில் நிறைய நலத்திட்ட உதவிகள் ஊராட்சிக்கு, குறிப்பாக தலித் மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஊராட்சிகளுக்கு கூடுதலாகக் கிடைத்தது. அடுத்த ஐந்தாண்டுகளிலும், இந்திரா நினைவுக் குடியிருப்புத் திட்டம், மத்திய அரசின் பிற திட்டங்கள் (இதில் SGRY திட்டத்தில் மட்டும் 15 லட்சத்திற்கு வேலை நடந்தது) இருந்ததால், வீடுகள், கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த முடிந்தது. ஆனால், தற்போதைய ஆட்சி காலத்தில், இந்த திட்டங்கள் ஏதும் இல்லை. கட்டமைப்பு வசதிக்காக 2.6 லட்சம் மட்டுமே எங்கள் ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 16 கிராமக் குடியிருப்புப் பகுதிகள் உள்ள எங்கள் ஊராட்சிக்கு இது போதுமானதாக இல்லை. அடிக்கடி மழை பெய்வதால் சாலைகள் சீக்கிரம் பழுதடைந்து போகிறது.  

எங்கள் ஊராட்சியில் கிட்டத்தட்ட 12 சமுதாய மக்கள் வாழ்கிறார்கள். 2006 தேர்தலில் மூன்றாம் முறையாக நான் வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தது எனது கல்விப் பின்ணணியும், எளிமையான அணுகுமுறையும் தான். ஊதியம் கூட இல்லாமல், மக்கள் குறைகளைத் தீர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக நாங்கள் முழு நேரமும் செலவிடுகிறோம். இதற்கு அரசு எங்களுக்கு அளிக்கும் உதவித் தொகை என்பது, மாதம் 950 ரூபாய்க்கு நான் பெறும் பயணப்படியே. இது தவிர, மக்களுக் கான தலைவர் என்ற அந்தஸ்து கிடைத் துள்ளது.  

கிராம நிர்வாகத்தில் அனைத்து மக்களையும் பங்கேற்கச் செய்ய தாங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள்? 

வருடத்திற்கு 4 முறை நடைபெறும், கிராம சபைக் கூட்டத்திற்கு குறைந்தது 120 பேர் கலந்து கொள்வார்கள். இதில், 100 பேர் பெண்களாக இருப்பார்கள். மீதமுள்ளவர்கள் ஊராட்சித் திட்டங்கள் மற்றும் அரசுத் திட்டங்கள் பற்றி அறிந்து கொள்ளவும், 35 கிலோ அரிசி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, வறுமை கோட்டிற்கு கீழுள்ளோர் பட்டியல் தயாரிப்பு ஆகியவற்றில் பங்கெடுக்கப்பார்கள். 3725 வாக்காளர்கள் கொண்ட எங்கள் ஊராட்சியில் இப்பங்கேற்பு மிகவும் குறைவே. கிராம சபைக் கூட்டத்திற்கான பொருள் மாவட்ட ஆட்சித் தலைவராலேயே ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்கு முன்பாக முடிவு செய்யப்பட்டு பத்திரிக்கைகளுக்கு தெரிவிக் கப்படுகிறது. ஊராட்சித் தலைவர்களுக்கும் தபால் மூலம் அனுப்பி வைப்பார்கள். அது கிடைத்தவுடன் நோட்டீஸ் மூலம் அதனை நாங்கள் மக்களுக்கு தெரிவிப்போம். முறைப்படி பார்த்தால், கிராம சபை விவாதத்திற்கான பொருளை நாங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் நாங்கள் எதுவும் தீர்மானிக்க முடியாமல் போய் விடுகிறது. நாங்கள் கொடுக்கவேண்டிய முன்னுரி¢மை கடைசி பொருளாகவே பட்டியலிடப்பட்டு எங்களுக்கு தகவல் அளிக்கப்படும். இதனை வைத்துக் கொண்டு, சுழற்சி முறையில் ஒவ்வொரு வார்டிலும், பொது இடங்களில் கிராம சபையை கூட்டுவோம். இது தவிர, ஊராட்சி வேலை நடைபெறும் போதெல்லாம், அந்தப் பகுதியை பார்வையிடப் போகும் போது மக்களை சந்தித்து குறைகளை கேட்ட றிவேன்.  

கிராம சபையில் மக்கள் எதிர்பார்க்கக் கூடிய பெரும்பாலான பிரச்சனைகள் எங்களது அதிகார வரம்பிற்கு அப்பாற் பட்டது, சம்மந்தப்பட்ட பிரச்சனையின் அதிகாரம் கலெக்டர் ஆபீஸிற்கு உட்பட்ட தால் அங்கு சென்று முறையிட மக்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டியிருக்கும். சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர் களுக்கு அரசியல் சட்டத்தில் அதிகாரங்கள் தெளிவாக பட்டியலிடப்பட்டுள்ளது போல ஊராட்சிகளுக்கான அதிகாரமும் அரசியல் சட்டத்தில் தனியாக பட்டியலிட வேண்டும். 29 துறைகளுக்கான அதிகாரம் ஊராட்சி களுக்கு இருக்கிறது என்று சொல்றாங்க. ஆனால், நாங்கள் கொண்டு போகிற எந்த தீர்மானத்தையும் உடனடியா அரசு அதிகாரிகள் ஏத்துக்கறதில்லை. உதாரணமாக, நீர் ஆதாரங்களை பராமரிக்க பொதுப் பணித்துறையின் அனுமதியோட தான் செயல்பட முடியும். எங்கள் ஊராட்சிக்கு இரண்டு பெரிய குளங்களும், ஏரி¢களும் இருக்கு. இவற்றின் கரையோரங்களில், 300-400 குடும்பங்கள், 30 வருஷத்துக்கும் மேலாக குடியிருக்க இடமின்றி ஆக்கிரமித்து வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு வேறு இடம் வழங்கணும்னா வருவாய்த்துறை அனுமதி வேண்டும்.

மேலும், நிலமெல்லாம் விளைச்சல் நிலமா இருக்கு. நகரத்துக்கு பக்கத்தில் இருப்பதால் அதிக விலையாகவும் இருக்கு. இதனால், மக்களை குளங்களி லிருந்து அப்புறப்படுத்தவும் முடியாமல், அந்த நீர் ஆதாரங்களைப் பராமரிக்க பொதுப்பணித்துறையின் அனுமதியும் கிடைக்காமல் அல்லல்பட வேண்டியிருக்கு. இருந்தாலும், எங்களுடைய ஊராட்சியின் தீர்மானத்தின் படி எங்களால் முடிந்தவரை பராமரிப்பு செய்து வருகிறோம். இதேபோல, தேசிய வேலை உறுதியளிப்புத் திட்டத்திலும், பணிகளுக்கு மதிப்பீடு செய்ய சிட்டா நகல் பெறவும், குடியிருப்பு மனைகளுக்கு பட்டா பெறவும் வருவாய்துறைக்கு போக வேண்டும். இது மட்டுமில்லாமல், கல்வி, சுகாதாரம், விவசாயம், நீர்பாசனம்னு எல்லாம் மாநில அரசு கட்டுப்பாட்டுல இருப்பதால், எங்களால் எந்த முடிவும் எடுத்து செயல்படுத்த முடியவில்லை. மக்கள் எந்த கோரிக்கை வைத்தாலும், இந்த அதிகாரி யிடம் போங்கன்னுதான் சொல்ல முடியுது. காவல் துறையும் கூட எங்கள் தீர்மானத் திற்கு கட்டுப்படமாட்டார்கள். ரேஷன் கடை, சத்துணவு ஆகியவற்றை மேற்பார்வை மட்டுமே செய்ய முடியும். தரமான உணவுப் பொருள் விநியோகம் என்பது கூட எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. 

தேசிய வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் இதுவரை 755 பேர் பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால், 150 பேர் தான் தொடர்ந்து வேலைக்கு வருகிறார்கள். இதில், 125 பேர் பெண்கள், 25 பேர் ஆண்கள். வேலைக்கு வருபவர்களுக்கு மட்டும், வேலை அட்டை வழங்கச் சொல்லியிருக்கலாம். விவசாய வேலை இல்லாத போது, இந்த திட்டம் நலிவடைந்த மக்களுக்கு கைகொடுக்கிறது. வேலைக்கு வராதவர்கள் இத்திட்டத்தில் பதிவு செய்யக் காரணம், இந்த பதிவு அட்டையை வாக்களிக்கவும் பயன்படுத்த லாம் என்று அரசு அறிவித்ததால் தான். இது போல, அரசுத் திட்டத்திற்கு பயன்படுமே என்றே பலர் பதிவு செய்கின்றனர். பதிவு செய்தவர் எல்லாருக்கும் கிஜிவி நீணீக்ஷீபீ டெல்லி யிலிருந்து வந்துள்ளது. இது அரசாங்கத்திற்கு வீண் செலவு தான். ஏனெனில் வேலை செய்யக் கூடியவர்கள் கூட, கூலியை பண மாகத் தான் பெற விரும்புகின்றனர்.  

ஆணாதிக்க சமூக அமைப்பில் ஒரு பெண் தலைமைப் பொறுப்பிற்கு வருவதால் எந்த விதத்தில் நிர்வாகத்தை திறம்பட நடத்த முடியும்? 

நாங்கள் எங்கும் அவசியமில்லாமல் சென்று நேரத்தை வீணடிக்க மாட்டோம். நாங்கள் வீட்டை கவனிப்பதோடு, ஊராட்சி அலுவலகத்தையும் கவனிப்பதால், மக்கள் எந்த நேரமும் எங்களை சந்திக்க வசதியாக இருக்கும். மக்களின் எந்தப் பிரச்சனையை யும் சுலபமாக புரி¢ந்து கொள்ளும் திறன் பெண்களுக்கே உண்டு. வீட்டை நிர்வகிக்கும் பொறுப்பு சிறு வயதிலிருந்தே பெண்களுக்கு அதிகம் திணிக்கப்படுவதால், வேறு எந்த நிர்வாகத்தையும் சமாளிக்க அதிக திறன் பெண்களுக்கு இயல்பாக வந்துவிடுகிறது. இதில் முக்கியமான அம்சம், தலைமைப் பொறுப்பில் இருக்கும் பெண்களுக்கு சுதந்திரமாக செயல்படக்கூடிய சூழல் அவசியம். நமக்கு குடும்ப சுமை கூடுதலாக இருந்தாலும், மக்களுக்கு சேவை செய்யும் போது அதில் ஒரு திருப்தி இருக்கு. குறிப்பா, நான் சுதந்திரமா என்னுடைய நிர்வாகத்தை கவனிக்க முடிந்ததற்குக் காரணம், என்னுடைய கணவர் ஒரு அரசு வேலையில், வேலை உத்திரவாதத்துடன் இருப்பதால் தான். இதுபோல், அனைத்து குடும்பங் களிலும் ஒருவருக்கு, வேலை உத்திரவாதம் இருந்தால், பெண்கள் பொது நிர்வாகத்தில் ஈடுபட்டு சிறப்பாக செயல்பட முடியும். இருவருமே வெளியில் சென்று உழைத்தால் தான், கூலி, கஞ்சி என்று இருக்கும் நிலையில், பெண்கள் பொது நிர்வாகத்தில் ஈடுபடுவதற்கு பெரும் தடையாக இருக்கிறது. 

அதுமட்டுமல்லாமல். பெண்களுக்கு கல்வி என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்று. ஒரு பெண்ணுக்கு கல்வி கிடைப்பதால், தன்னைப் பாதுகாத்துக் கொள்ள அறிவு கிடைப்பதோடு, பொருள் ஈட்டவும் செய்ய முடியும். அதோடு, தலைமைப் பண்பும் வளர்ந்து எந்தப் பிரச்சனையையும் சமாளிக் கும் திறனும் வளருது. முன்பு போல, 4-5 குழந்தைகளை மெஷின் போல பெத்துக் காம, குழந்தைப் பெறுவதைக் கூட ஒரு பெண் தன்னிச்சையாகத் தீர்மானிக்க முடியும். ஏட்டுக் கல்வியுடன் சேர்ந்து சமூகக் கல்வியும் அளிக்கணும். வயதில் மூத்தவர் களை பாதுகாப்பது பற்றிய கல்வி அவசியம். பெரியவர்களைப் பாதுகாப்பது பொன், பொருள் இருப்பதற்கு சமம். அவர்களது அறிவு,அனுபவம் நமக்கு மிக முக்கியம், ஊனமுற்றோரைப் பாதுகாப்பது குறித்த கல்வியும் குழந்தைப் பருவத்திலேயே கொடுக்கணும்.  

பெற்ற கல்வியின் பலனை அதிகமாக போற்றுகிற நீங்கள் இன்றைய தலைமுறையினரின் கல்வி பற்றி வைத்துள்ள கருத்து என்ன? 

எங்கள் ஊராட்சியில் முன்பெல்லாம், குழந்தைகள் 10 ஆவது தாண்டுவதே அரி¢தாக இருந்தது. இப்போது எல்லாக் குழந்தைகளும் பள்ளிக்கு செல்கிறார்கள். ஆனால், பள்ளிக் கல்விதான் சரியாக இல்லை. எங்கள் ஊராட்சியின், குளத்தூர், சபையார்குளம் என்ற இரண்டு குக்கிராமத்தில் தன்னார்வ அமைப்பு ஒன்றின் உதவியுடன் 25 குழந்தை களை ஒருங்கிணைத்து குழந்தைகள் பாராளு மன்றம் உள்ளது. இங்கு குழந்தைகளுக்கான திறன் வளர்ப்பு பயிற்சிகள் வழங்கப்படுவ தோடு, கிராமத்தைப் பற்றிய கல்வியும், பொது அறிவும் போதிக்கப்படுகிறது. குழந்தைகளே என்னிடம் வந்து இங்கு லைட் எரியவில்லை. அங்கு தண்ணீர் வரவில்லை, சாக்கடை சுத்தம் இல்லை என்று குறை களைத் தெரிவிப்பது ஆச்சரியமாக இருக்கிறது. பெரியவர்களே தங்கள் சுற்றுப்புறத் தைப் பற்றி கவலைப்படாத போது குழந்தை கள் அதில் அக்கறை காட்டுவது எதிர்காலத் தில் அவர்கள் தங்கள் கிராமத்தை திறம்பட நிர்வகிக்க உதவியாக இருக்கும். இது போன்ற குழந்தைகள் பாராளுமன்றம் அமைப்பதை, மாநில அரசு கொள்கையாக ஏற்று ஊராட்சிகள் மூலம் நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்காக தனியாக ஒரு குழந்தை கள் நல அலுவலர் ஒவ்வொரு ஊராட்சியி லும் நியமிக்க வேண்டும். குழந்தைகளுக்கான, விளையாட்டு, கலை, பொது அறிவு, பாலியல் கல்வி, ஆண்,பெண் சமத்துவம் மற்றும் நல்ல குடிமக்களாக வளர்வதற்கான கல்வி அளிக்க நிதி ஒதுக்கீடு ஒவ்வோரு ஊராட்சிக்கும் வழங்கினால் சிறப்பாக இருக்கும். தனியார் அமைப்புகள் மட்டுமே அங்கொன்றும், இங்கொன்றுமாக செய்தால் எல்லா குழந்தைகளுக்கும் இதன் பலன் போகாது.  

ஊராட்சிகளுக்கு சுயாட்சி அங்கீகாரமும், அதிக அதிகாரங்களும் வழங்கப்பட்டால் தாங்கள் யாருக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள்? 

ஊராட்சிகளுக்கு அதிக அதிகாரமும், நிதியும் வழங்கப்பட்டால், நாங்கள் சமூகத்தில் மிகவும் நலிந்த நிலையில் உள்ளவர்களுக்கே முக்கியத் துவம் அளிப்போம். குறிப்பாக ஊனமுற் றோருக்கு, அவர்களது மருத்துவ செலவு, குடியிருப்பு, வாழ்க்கைக்கான ஆதாரம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிப்போம்.  

எங்கள் ஊராட்சியில் எந்தவித சாதிப் பாகுபாடும் இல்லை. எல்லா சமூகத்தினரும் இணக்கமாகவே வாழ்கிறோம். இருப்பினும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பொருளாதாரத்தில் சமவாய்ப்பு இன்னும் இல்லை. அதிக அளவில், நிலமற்ற கூலித்தொழிலாளர்களாக அவர்களே உள்ளனர். அரசி யல் அதிகாரமும், இன்றைய அரசியலில் ஆதிக்க சக்திகளின் கையிலேயே உள்ளது. 5 ஆண்டு கால ஆட்சியில், ஆட்சியாளர்கள், தாங்கள் சேர்த்து வைத்த சொத்தை எப்படி பாதுகாப்பது, தன் குடும்பத்தாருக்கும் சுற்றத்திற்கும் எப்படி அதிகாரத்தினை கைமாற்றுவது என்ற போராட்டத்திலேயே கழிக்கின்றனர். மக்களின் தேவைகளை கவனிக்க ஆளில்லை. அரசியல் அதிகாரம் பரவலாக்கப்படவில்லை. வோட்டு அரசியல் என்பது மக்களை ஆட்டு மந்தை மாதிரி ஒரு பக்கமாக சாய்க்கிற நிலையில் தான் உள்ளது. இலவசங்களை நோக்கியே மக்களது எதிர்பார்ப்பு இருக்கும்படி இன்றைய அரசியல் பார்த்துக் கொண்டுள்ளது. இதற்கு எனது ஊராட்சியிலும் பல அனுபவங்கள் உள்ளது.

ஒருபுறம், இலவசத் திட்டங்கள், மறுபுறம் அரசே ஏற்று நடத்தும் மதுக் கடைகள் என, மக்களின் உழைப்பை சுரண்டி அவர்களை கையேந்திகளாக அலைய வைக்கும் நிலையே இன்றுள்ளது. அரசு மதுக் கடைகளுக்கு பதில் பனை மரத்தின் கள்ளுக்கு அனுமதியளித்தால் கூட, மக்களது தொழில் முன்னேற்றம் ஏற்படுவதோடு, மதுக்கடைகளுக்கு செலவிடும் தொகையை விட மிகக் குறைந்த செலவே ஆகும். மேலிருந்து கீழான அரசியல் கட்டமைப்பு இருக்கும் வரை மக்களது அடிப்படை பிரச்சனைகள் தீரப்போவ தில்லை. சிறந்த மனிதப் பண்புகளைக் கொண்ட கல்வியும்(ஏட்டுக் கல்வியுடன் கூட), ஆளுமைத் திறன்களும் குழந்தைப் பருவத்திலேயே வளர்த்தெடுக்கப்பட்டால், நாளைய சமூகம், தன்னைத் தானே ஆண்டு கொள்ளும் திறன் படைத்ததாக அமையும் என்பது என் கருத்து. 

சந்திப்பு: கல்பனா

Pin It