(கடல்மீன்பிடி தொழில் ஒழுங்காற்றல் மற்றும் மேலாண்மை சட்டம்‘ 2009 பற்றி சென்னை, நாகை, வேளாங்கண்ணி, வேதாரண்யம், சிதம்பரம், ராமேஸ்வரம் பகுதி மீனவர்களிடம் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டக் குழுவினர் நடத்திய கள ஆய்வு)

பாரம்பரியத் தொழில்களுக்கு ஆப்பு வைத்துவிட்டு, பன்னாட்டு கம்பெனிகளுக்கு கால் பிடிக்கும் இந்தியத் தலைமையின் பார்வை இந்தமுறை மீனவர்கள் மீது விழுந்திருக்கிறது. மீன்பிடித் தொழிலில் பாரம்பரியமாக ஈடுபட்டு வரும் மீனவர்களின் பிழைப்பில் கடல் மணலை அள்ளிக் கொட்ட, ‘மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம் - 2009’ என்று ஒன்றை கையில் எடுத்திருக்கிறது, மைய அரசு.

இந்தச் சட்டத்தில் உள்ள அம்சங்களை அலசினால் மயக்கம் வராத குறைதான். உண்மையில் இந்தச் சட்டத்தில் என்னதான் இருக்கிறது? இச்சட்டத்தை அமல் படுத்துவதில் இந்திய அரசின் நோக்கம் என்ன? மீனவர்கள், இச்சட்டம் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று, தமிழகம் முழுவதும் பயணம் செய்து விவரம் சேகரித்திருக்கிறார்கள், தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டக் குழுவினர்.

ஒரு மாதத்துக்கு முன்பே இந்தச் சட்டமுன் வரைவை (மசோதா) இணையதளங்களில் வலைவிரித்திருக்கிறது, இந்திய அரசு. இது கடந்த வாரம்தான் வெளியுலகிற்கு தெரிய வந்தது. அதிலும் பெரும்பாலான மீனவர்களுக்கு இச்சட்டம் பற்றி இந்தத் தேதி வரையிலும் அவ்வளவாக பரிச்சயம் இல்லை என்பதுதான் வேதனையான உண்மை.

த.தே.த.க.குழுவினர் சென்ற பல இடங்களிலும் இந் நிலையைக் காணமுடிந்தது. நம்முடைய குழுவினர் இச்சட்டம் பற்றி எடுத்துச் சொல்லிய பிறகுதான் தேள் கொட்டியது போல் துடித்துப் போனார்கள், நம் மீனவத் தோழர்கள். இதில் இந்த ஊர் மீனவர்கள்; அந்த ஊர் மீனவர்கள் என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது. சென்னை, நாகை, வேளாங்கண்ணி, வேதாரண்யம், சிதம்பரம், ராமேஸ்வரம் என ஏறத்தாழ எல்லா இடங்களிலும் இதே நிலைதான்.

மீனவர்கள் அன்றாடச் செய்திகளை அசைபோடுவதில் கொஞ்சம் பின்தங்கிய நிலையில்தான் இருக்கிறார்கள். இதை அவர்களின் குறையாக கருதிவிட முடியாது. காரணம், மீனவர்களுக்கு இதுபோன்ற தகவல்கள் உடனுக்குடன் சென்று சேர்வதில் நிறைய இடர்பாடுகள் உள்ளன. மீனவர்களுக்கு செய்தி ஊடகங்களில் கவனம் செலுத்தும் அளவுக்கு நேரம் வாய்ப்பதில்லை.

ஆண்கள் எல்லாம் தொழிலுக்காகக் கடலுக்குப் போய்விட பெண்கள் மட்டுமே வீடுகளில், அல்லது மீன் வியாபாரத்தில் இருப்பார்கள். இணையதளம் போன்ற நவீன ஊடகங்களில் மீனவர்களின் பங்களிப்பு என்பதும் இன்னும் எட்டாத நிலையிலேயே இருப்பதும் இந்த விடயத்தை அவர்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்வதில் தாமதம் ஏற்பட முக்கியக் காரணம்.

இணையதளத்தில் வெளியான தகவல் ஆங்கிலத்தில் இருந்ததும் அதைப் புரிந்து கொள்வதில் பலருக்கும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. தகவல் அறிந்து அதைப் பார்த்து, படித்துப் புரிந்து பின்னர் அதை மொழிபெயர்த்து கடைக்கோடி மீனவர்கள் வரை எடுத்துச் செல்வதில் உள்ள சிரமம். அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில், மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தின் அபாயகரத்தை உணர்ந்து அதை மீனவர்கள் மத்தியில் எடுத்துச் செல்ல முயன்றதில் த.தே.த.க. குழுவினரின் பங்கு முக்கியமானது.

த.க.குழுவினர் பயணம் செய்த மீனவ கிராமங்களில் எல்லாம் அந்தச் சட்டத்தில் கூறியுள்ள பனிரெண்டு கடல் மைல் தொலைவுக்குள்தான் மீன் பிடிக்கச் செல்ல வேண்டும் என்ற விதியை மீனவர்களால் நம்பக் கூட இயலவில்லை. பனிரெண்டு கடல் மைல் என்பது ஏறத்தாழ இருபத்திரெண்டு கிலோ மீட்டர். இந்தப் பரப்பில் மீன்வளம் அறவே கிடையாது என்பது முதல் முதலாக நேற்று மீன்பிடிக்கக் கடலுக்குப் போன மீனவனுக்குக் கூட தெரியும் என்று, நம் குழுவினரிடம் மீனவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

ஒரு காலத்தில் (இருபது ஆண்டுகளுக்கு முன்பு) ஐந்து கடல் மைல் பரப்பிலேயே மீன் கிடைத்திருக்கிறது. தொழிற்சாலைக் கழிவுகள், இறால் பண்ணைக் கழிவுகள் கடலில் கலப்பது போன்ற காரணங்களால் மீன்கள் ஆழ்கடலுக்குச் சென்று விட்டனவாம். விசைப் படகுகளின் இரைச்சலும் மீன்கள் ஆழ்கடலுக்குள் சென்றுவிட முக்கியக் காரணமாம்.

ஒரு படகில் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் மதிப்பிலான மீன்களைப் பிடிக்கக் கூடாது என்று அந்தச் சட்டத்தில் உள்ள மற்றொரு விதி இருப்பதை நாம் சொன்னதும், ‘‘ஒரு விசைப் படகை எடுத்துச் சென்றால் டீசல் செலவே ஆறாயிரம் ரூபாய் வரை ஆகும். வலை வாடகை, ஆட்கள் கூலி என்று கணக்கைப் போட்டுப் பார்த்தால் பிடிக்கும் மீன்களுக்கான செலவு மட்டுமே பத்தாயிரத்தைத் தாண்டும். இது தவிர, ஒரு முறை இன்ஜின் பழுதானால் ஐம்பதாயிரம் ரூபாய் வரை கூட செலவு பிடிக்கும். இதுதவிர எவ்வளவு மீன் கிடைக்கும் என்பது யாருக்கும் புரியாத மர்மம். இருபதாயிரத்திற்கும் கிடைக்கும், வெறும் நூறு ரூபாய்க்கு மட்டும் மீன்கள் கிடைக்கலாம்.

இந்த நிலையில், பத்தாயிரம் ரூபாய் மதிப்பிலான மீன்கள் மட்டும்தான் பிடிக்க வேண்டும் என்று சொல்வது, மீனவர்களை மீன் பிடிக்கவே போகாதே என்று சொல்வதற்குச் சமம்’’ என்று த.க.குழுவினரிடம் தெரிவித்தார், வானவன்மாதேவியைச் சேர்ந்த மணி என்ற மீனவர்.

வெறும் பேச்சளவில் நிறுத்திக் கொள்ளாத நாகை மீனவர்கள், த.க. குழுவினரை விசைப் படகில் கடலுக்குள் அழைத்துச் சென்றனர். ஒன்பது கடல் மைல் தொலைவு சென்ற பிறகு மீன்பிடி வலையை விரித்தனர். அந்தப் பகுதியில் ஒரே ஒரு மீன் கூடக் கிடைக்கவில்லை. எனவே, இந்திய அரசின் இச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், அது தமிழக மீனவர்களை உள்நாட்டு அகதிகளாக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

“அதே சமயத்தில் வெளிநாட்டு மீன்பிடிக் கப்பல்கள் எங்கு வேண்டுமானாலும் மீன் பிடிக்கலாம் என்று சொல்லும் இந்தச் சட்டம், உள்நாட்டு மீனவர்களைப் பன்னாட்டு நிறுவனங்களின் காலடியில் பலியிடும் சடங்குதானே தவிர வேறில்லை” என்ற , தென்னிந்திய மீனவர் நலச்சங்கத் தலைவர் கு.பாரதி (சென்னை), த.க. குழுவினரிடம் மேலும் கூறியதாவது:

ஏற்கெனவே, 450 கிலோ மீட்டர் தொலையில் உள்ள ஆந்திர மாநிலம் வரை சென்றால்தான் லாபகரமாக மீன்பிடிக்க முடியும். மீன்பிடிப்பதில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான தொழில் முறை இருக்கிறது. ஆந்திர மீனவர்கள் பின்பற்றும் தொழில் முறையை நாம் பின்பற்றுவது கிடையாது.

சிங்கள கடற்படைதான் எங்களைத் தாக்கிக்கொண்டிருக்கிறது. மீனவர்கள் யாரும் அடித்துக் கொண்டதில்லை. பாரம்பரியமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருபவர்களின் உரிமையைப் பறித்து பெரிய பெரிய கப்பல் முதலாளிகளுக்குக் கொடுக்கும் முயற்சிதான் இது.

1981-ம் ஆண்டு மீன்பிடிச் சட்டத்தின்படி, அன்னியக் கப்பலின் ஊடுருவலைத் தடுக்கலாம். ஆனால் அதற்கு முன்பே இந்திய எல்லையில் நானூறு அந்நிய கப்பல்களுக்கு மீன்பிடி உரிமையை இந்திய அரசு வாரி வழங்கிவிட்டது.

இப்போது பாரம்பரிய மீனவர்களுக்குச் சிறையும், அன்னிய கப்பல் கம்பெனிகளுக்கு கட்டுப்பாடற்ற உரிமைகளையும் வழங்கியிருக்கிறது, இந்திய அரசு. ஏற்கெனவே உள்ள மீன்பிடித் தொழில் ஒழுங்கு சட்டத்தில் ரோந்துப் படையினர் தேவையான நேரங்களில் மீனவர்களின் படகுகளில் சோதனையிடவும் சட்டத்துக்குப் புறம்பான செயல்களில் ஈடுபடும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

எனவே மீன்பிடித் தொழிலை ஒழுங்குபடுத்தும் சட்டம் புதிதாகத் தேவையில்லை. ஏற்கெனவே இருப்பதே போதுமானது. புதிய சட்டத்தின் மூலம் மீன்வளத் துறையில் மாநில அரசுக்கு இருக்கும் உரிமைகளை இந்திய அரசுப் பறித்துக் கொள்ளும். பனிரெண்டு கடல் மைல் என்பது நம் மாநில கடல் எல்லைக்குள் வருவது. அதற்குமேல் மைய அரசின் கட்டுப் பாட்டிற்குச் சென்றுவிடும். மொத்தத்தில் இந்தச் சட்டம் மாநில உரிமைகளுக்கு வைக்கும் வேட்டு!

இந்தப் புதிய சட்டத்தைத் திரும்பப் பெற அனைத்துக் கட்சிகளின் ஆதரவைக் கோரியிருக்கிறோம். மீனவர்கள் சங்கங்கள் ஒன்றிணைந்து மீனவ மக்களின் ஒட்டுமொத்த ஆதரவையும் திரட்டிக் கொண்டிருக்கிறோம். இந்தச் சட்டத்தில் திருத்தம் செய்து நிறைவேற்றிவிடலாம் என்று அரசு நினைத்தால் அது நடக்காது. எந்த வடிவத்திலும் இந்தச் சட்டத்தை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். தொடர்ந்து போராடுவோம் என்றார், கு.பாரதி ஆவேசமாக.

இந்தப் புதிய மீன்பிடிச் சட்டத்தை மீறுபவர்களுக்கு ஆறு லட்சம் முதல் ஒன்பது லட்சம் ரூபாய் வரை தண்டத் தொகை விதிக்கப்போகிறது இந்திய அரசு. “இந்தச் சட்டத்திலேயே மிகவும் கொடூரமான பிரிவு இதுவாகத்தான் இருக்க முடியும். ஒரு விசைப் படகின் மதிப்பே ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்தான். கடலோரக் காவல் படையினர் படகுகளைச் சோதனையிட்டு, விதி மீறல் நடந்திருந்தால் படகுகளையும், வலைகளையும் பறிமுதல் செய்து, ஆறு லட்சம் முதல் ஒன்பது லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிப்பார்களாம். இப்படிப் படகைப் பிடுங்கிக் கொண்டு அபராதமும் விதித்தால் ஒரே ஒரு வழக்கில் அந்த மீனவரால் வாழ்நாள் முழுவதும் மீளவே முடியாத சுனாமி சிக்கலில் சிக்கிக் கொள்வார்’’ என்கிறார், அறிவழகன் என்ற வானவன்மாதேவி மீனவர்.

தமிழக மீனவர்கள் தங்கள் பாரம்பரிய மீன் பிடித் தொழிலை வெறுத்து ஒதுக்கும் விதமான சூழல் இப்போதே இந்திய தமிழக அரசுகளால் உருவாக்கப்பட்டிருப்பதாக மீனவர்கள் தெரிவித்தனர். சிங்கள கடற்படையினரின் அட்டூழியங்களால் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கே செல்லத் தயங்குவதாகவும் அவர்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

அதேவேளை சிங்கள மீனவர்கள் இந்திய எல்லைக்குள், குறிப்பாக தமிழக எல்லைக்குள் வந்து மீன்பிடித்துச் செல்கிறார்களாம். அப்படி எல்லை மீறி வரும் சிங்கள மீனவர்களைத் தமிழக - இந்திய அரசுகள் மாப்பிள்ளைகள் போல் நடத்துவதும், அவர்களது படகுகளுக்குப் பாதுகாப்பு அளித்து இலங்கைக்கு அவர்களைப் பாதுகாப்பாக அனுப்பி வைப்பது. மீனவர்களிடம் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி யிருக்கிறது.

இந்த நிலையில் தமிழக கடல் பகுதியில் அந்நியர்களின் ஆக்கிரமிப்பை இந்தப் புதிய சட்டம் அனுமதிக்கிறது என்றே மீனவர்கள் கருதுகிறார்கள். மீனவர்கள் கடலைத் தங்கள் தாயாகவும், தெய்வமாகவும் கருதுகின்றனர். பிற சமூகத்தினருக்கும் மீனவர்களுக்கும் ஓர் அடிப்படை வேறுபாடு உள்ளது. தமக்கென்று சொத்து சேர்த்து வைத்துக் கொள்ளும் பழக்கம் மீனவர்களிடையே மிக மிகக் குறைவு. தங்களுக்குத் தேவையானவற்றை கடல் அள்ளிக் கொடுக்கும் என மீனவர்கள் நம்புகிறார்கள்.

படகுகளும், வலைகளுமே அவர்களின் சொத்துகள். கடலே அவர்களின் அட்சயப் பாத்திரம்! மீன்பிடித் தொழிலில் உயிர் ஆபத்து மிக அதிகம் இருப்பதாலும் கடின உடல் உழைப்புத் தேவை என்பதாலும் மீனவர்களிடையே குடும்பக் கட்டுப்பாடு என்பதே கிடையாது. அதிகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்கின்றனர்! ஒவ்வொரு மீனவக் குடும்பத்திலும் குறைந்தது ஐந்து குழந்தைகளாவது இருக்கும்.

புயல், துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட காரணங்களால் மரணமும், உடல் ஊனமும் மீனவர் வாழ்வில் சர்வசாதாரணமாகிவிட்ட நிலையில் குடும்பத்தில் அதிக உறுப்பினர்களின் தேவை அவசியமாக இருக்கிறது. அப்போதுதான் இதுபோன்ற இடர்களை சமாளித்துக் கொண்டு, மீன்பிடித் தொழில் செய்து குடும்பத்தைக் காப்பாற்ற முடியும் என்பது அவர்களின் எதார்த்தம்.

வெள்ளப்பள்ளம் ஊராட்சி மன்றத் தலைவி ஜெயா சுப்பிரமணியனிடம் பேசியபோது, ‘‘மீனவர்களுக்குக் கடலில் ஏற்படும் ஆபாயங்களைக் களையவே கடலோரக் காவற்படை அமைக்கப் பட்டது. மீனவர் பதிவுகள், மீன்பிடி தொழிலைக் கவனிக்கும் மீன் வளத்துறையிடம் உள்ளது.

இச்சட்டம் மீனவர்களின் உரிமம் தொடர்பான பதிவு நடைமுறைகளை மீன்வளத் துறையிடமிருந்து பிடுங்கி, கடலோரக் காவல் படையினரிடம் கொடுக்கிறது. இது நடைமுறையில் பல சிக்கல்களையும் நெருக்கடிகளையும் ஏற்படுத்தும். அதிகாரங்களைக் கடலோரக் காவற்படையிடம் ஒப்படைத்தால், மீனவர்களுக்குத் தேவையான உதவிகளை அப்படையினர் எப்படி செய்வார்கள்’’ என்று, த.க.குழுவினரைப் பார்த்துக் கேட்டார்.

தமிழ்நாடு மீனவர் இளைஞர் பேரவை மாநிலப் பொதுச்செயலாளர் செ.செரோன்குமார் (ராமேஸ்வரம்) த.க. குழுவினரிடம் கூறியது: மீனவர் நலம் சார்ந்த திட்டங்கள் எதுவும் அரசிடம் இல்லை. இணையதளங்களில் சட்ட மசோதாவை வெளியிட்டுள்ளது. வரும் குளிர்கால கூட்டத் தொடரில் இதைத் தாக்கல் செய்து சட்டம் ஆக்கிவிட இந்திய அரசு முயல்கிறது. ஏற்கெனவே ராமேஸ்வரம் தீவில் சிங்கள அரசின் துப்பாக்கிச் சூட்டுக்கும், கொலை வெறித்தாக்குதல்களுக்கும் சிக்கி, பிடித்த மீன்களை பறிகொடுத்துவிட்டு ஆடைகள் களையப்பட்டு நிர்வாணமாக கரை திரும்புவது அன்றாட நிகழ்வாகிவிட்டது.

இதுவரை ஐநூறுக்கும் மேற்பட்ட மீனவர்கள் சிங்கள கடற்படையின் துப்பாக்கிச்சூட்டுக்கு பலியாகியுள்ளனர். விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் தமிழீழப் பகுதி இருந்தவரை தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக இருந்தனர் என்பதை இங்கே கவனிக்க வேண்டும்” என்றார், அவர்.

“உலகமயமாதல், தாராளமயமாதல், தனியார்மயமாதல் என்ற கொள்கைக்கு அடிபணிந்து இயற்கை சுற்றுலா வழங்கிய அன்னிய செலாவணி என்ற மாயையை நம்பி ராஜீவ்காந்தி கடந்த 19.02.1991 அன்று கடற்கரையின் வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில், பன்னாட்டு உள்நாட்டு தொழில் நிறுவனங்களை திருப்திப்படுத்திட மீனவர் பயன்பாட்டுப் பகுதியை ஐநூறு மீட்டரில் இருந்து இருநூறு மீட்டராகக் குறைத்தார். கடல்மீன் தொழில் ஒழுங்காற்றல் மற்றும் மேலாண்மை சட்டம்‘ 2009 சட்ட முன்வடிவு இதுவரை மீனவர்களின் கருத்துகளை அறிவதற்கான எவ்வித முயற்சியையும் எடுக்கவில்லை. கடலும் அதன் வளங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதால் மீனவர்கள் ஒன்றிணைந்து இந்தச் சட்டத்தை எதிர்ப்போம்” என்றார், தமிழ்நாடு மீனவர் சங்கம் ஏ.ஐ.டி.யூ.சி (ராமேஸ்வரம்) மாநிலச் செயலர் முருகானந்தம்.

“கடந்த 1974 ஆம் ஆண்டில் மீனவர்களின் கருத்தை அறியாமலேயே கச்சத் தீவை இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்தது, இந்திய அரசு. அதன்பலனாக இதுவரை ஐநூறு மீனவர்களைப் பறிகொடுத்துவிட்டு தினம் தினம் சிங்கள கடற்படையின் அட்டூழியங்களுக்கு ஆளாகி வருகிறோம்” என்றார், ராமநாதபுர மாவட்ட நாட்டுப் படகு மீனவர் சங்கத் தலைவர் ராயப்பன்.

பன்னாட்டு கம்பெனிகளுக்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லை. ஆனால், நம் மீனவர்களுக்குக் கடுமையான சட்டங்கள். இது எந்த ஊர் நியாயம் என்று கேட்கிறார், பாரத கடல் தொழிலாளர் மீனவர் முன்னேற்ற சங்கத் தலைவர் ஜான்.

ராமேஸ்வரத்தைப் பொறுத்த வரையில் பாம்பன், தங்கச்சி மடம், அக்காள் மடம் என மொத்தம் எழுபதாயிரம் மீனவக் குடும்பங்கள் உள்ளன. தமிழர் வரலாற்றில் மீன்பிடித் தொழில் குறித்த குறிப்புகள் மூவாயிரம் ஆண்டுகள் பழமையானவை. சிந்துவெளியில் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கடல் மீன்பிடித் தொழிலில் சிறந்தவர்கள் நம் தமிழர்கள் என்கிறது, வரலாற்றுக் குறிப்புகள். இந்தச் சட்டத்தால் இவ்வளவு நீண்ட பாரம்பரியம் ஒட்டு மொத்தமாக அழிக்கப்படும் அவலநிலை உருவாகிவிட்டது என்கின்றனர், தமிழறிஞர்கள்.

இதைத் தான் தமிழர் கண்ணோட்டக் குழுவினர் சந்தித்த மீனவர்கள், “மனிதர்கள் தோன்றிய காலத்திலேயே விவசாயம் பார்க்க ஒரு பிரிவினரும், மீன் பிடிக்க ஒரு பிரிவினரும் பிரிந்து சென்றனர். அப்போது கடலுக்கு வந்தவர்கள் தான் எங்கள் முன்னோர்கள். எங்கள் வேர்கள் இந்தக் கடலில் ஆழமாக ஊன்றப்பட்டுவிட்டன. கடல்தான் எங்கள் நாடு. கடல்தான் எங்கள் பூர்வீகம். எங்கள் நாட்டிற்குள் எங்களை, ‘அங்கே போகாதே, இங்கே போகாதே’ என்று சொல்ல இந்தியாவுக்கு என்ன உரிமை இருக்கிறது?” என்றனர்.

த.க.குழுவினர் மீனவக் கிராமங்களில் தங்கள் பயணத்தை முடித்துவிட்டு திரும்பிய பின்பு இரண்டு நாட்கள் கழித்துத்தான், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தும் மீன்பிடித் தொழில் ஒழுங்குமுறை புதிய சட்ட மசோதாவை எதிர்த்து அறிக்கை விட்டனர். (மக்கள் நலனில் இவர்கள் காட்டும் அக்கறையை என்னவென்று சொல்வது?) அவர்களைத் தொடர்ந்து நம் முதல்வர் கலைஞரும் அந்தச் சட்டத்தில் சில மாற்றங்கள் வேண்டும் என்று பொறுப்புடன் (!) அறிக்கை விட்டிருக்கிறார்.

புதிய சட்டம் குறித்து, மாநிலங்களவையில் (நவம்பர் 26) பேசிய கனிமொழி, திருச்சி சிவா போன்றவர்கள், ‘‘இந்தச் சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டு வர வேண்டும்’’ என்று, கலைஞரை வழி மொழிந்திருக்கிறார்கள்.

அப்படியென்றால், மறைமுகமாக இந்தச் சட்டத்தை தமிழ்நாடு அரசு ஆதரிக்கிறது என்றுதானே அர்த்தம். ‘கடல்மீன்பிடி தொழில் ஒழுங்காற்றல் மற்றும் மேலாண்மை சட்டம்‘ முழுவதையுமே திரும்பப் பெற வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மீனவர்களின் கருத்தாக இருக்கிறது.

அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் தமிழக அரசு காட்டும் மௌனம் இந்த அரசு மீது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் மீனவர்கள தெரிவித்திருக்கிறார்கள். அரசியல் ரீதியாக மீனவர்கள் எழுச்சி பெற வேண்டிய நேரமிது. மீனவர்கள் பிரச்சினையில் கட்சி கடந்து தமிழர்கள் ஒன்று சேரவேண்டிய காலமிது என்பதே த.க. குழு முன்வைக்கும் கருத்து!

தமிழர் கண்ணோட்டக் குழு: அ.ஆனந்தன், முனி, குழ.பா.ஸ்டாலின், ரவி, பாண்டியன், மதி 

Pin It