"வரகு அரிசிச் சோறும், வழுதுணாங் காயும், முறைமுறவெனவே புளித்த மோரும்" என்பது ஒளவை பாட்டியின் பாடல் வரி. அதாவது வரகரிசி சோறாக்கி மோரை ஊற்றி கலந்து வழுதுணாங் காயை தொட்டுச் சாப்பிட்டால் மிகுந்த ருசியாய் இருக்கும் என்பது ஒளவையின் கூற்று. வழுதுணாங் காய் என்பது நமது கத்திரிக்காய்தான். 

கத்திரிக்காயின் தாய் வீடு இந்தியாதான். நமது நாட்டிலிருந்துதான் இந்தக்காய் சீனா, ஜப்பான், அரேபியா, ஐரோப்பா போன்ற நாடுகளுக்கு சென்றுள்ளது. 1806ம் ஆண்டில் தான் அமெரிக்கர்களுக்கு கத்திரிக்காய் அறிமுகமானது. ஆனால் இன்றைக்கு மரபணு மாற்றப்பட்ட கத்திரிக்காயை அமெரிக்காவிலிருந்து நமது நாட்டிற்கு இறக்குமதி செய்ய மத்திய ஆட்சியாளர்கள் துடியாய் துடிக்கிறார்கள். 

இப்பொழுதே ரசாயண உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளால் உணவு விஷமாகிவிட்டது. உணவகம்/உரக்கடை/பெயர்கள் வேறு/ விற்கப்படும் பொருள் ஒன்றுதான் என்றான் ஒரு புதுக்கவிஞன்.  

ஏற்கனவே மரபணு மாற்றப்பட்ட பருத்தி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பருத்தியை வாங்கி பயிர் செய்த விவசாயிகள் பலர் தற்கொலை செய்துகொள்ளும் நிலை ஏற்பட்டது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட மக்காச்சோளத்தை எலிகளுக்கு கொடுத்து சோதனை செய்தபோது அதன் இனப்பெருக்கம் வெகுவாக பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. கத்திரிக்காயை மட்டுமல்ல தொடர்ந்து நெல், கம்பு, சோளம், தக்காளி போன்றவற்றிலும் மரபணு மாற்றப்பட்ட விதைகளை இந்தியாவில் அறிமுகப்படுத்த வேலைகள் நடந்து வருகின்றன.

நமது நாட்டில் பாரம்பரியமாக விளைவிக்கப்பட்டு வந்த 500க்கும் மேற்பட்ட நெல் வகைகள் தற்போது வழக்கொழிந்து போய்விட்டன. இந்தியாவின் பருவநிலை மாற்றத்திற்கு ஈடுகொடுத்து நின்ற பயிர்கள் இவை. மரபணு மாற்றப்பட்ட கத்திரிக்காயை அனுமதித்துவிட்டால் பிறகு எந்த விவசாயியும் விதைக் கத்திரிக்காய் என்றுகூறி முற்றிய காயை மஞ்சள் துணி கட்டி வைக்கமுடியாது. ஒவ்வொரு முறையும் பன்னாட்டு நிறுவனங்களின் முன்னால் கைகட்டி நின்று விதை வாங்க வேண்டும்.

பிரிட்டிஷார் காலத்தில் நம் தோட்டத்து வெள்ளரிக்காய்க்கு எவனோ விலை வைப்பதா என்று கிராமத்துப் பெண்கள் குமுறினார்கள். இன்றைக்கு விதை கூட இல்லாத விஷத்தை நம் விவசாயிகளைக் கொண்டே விளைவிக்க முயலும் விபரீதம் அரங்கேறுகிறது. 

"பொய் நெல்லை குத்தியே பொங்க நினைத்தவன்; கை நெல்லை விட்டானம்மா" என்பது பூம்புகார் படப்பாடல். இன்றைக்கு பொய் விதையைக் கொடுத்து கை விதையைப் பறிக்க கைகாட்டி விடுகிறார்கள் ஆட்சியாளர்கள். 

நாட்டுக் கத்திரிக்காயா? அன்னிய நாட்டு மலட்டுக் கத்திரிக்காயா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இந்தக் கேள்வி கத்திரிக்காய்க்கு மட்டுமே பொருந்தும் ஒன்றல்ல. 

Pin It