நெடுமாறன் அவர்கள் தலைமையிலான தமிழர் தேசிய இயக்கம், கடந்த ஐந்தாண்டுகளாக கலைஞருக்கும், தமிழக அரசுக்கும் எதிராக எழுதியும் பேசியும் வந்தது. அவ்வியக்கத்தின் விருப்பப்படி, தேர்தல் முடிவுகள் அமைந்துவிட்ட காரணத்தால், மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று, ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்த சிங்களவனுக்குத் துணைநின்ற கருணாநிதி - சோனியா தோல்வியை அளித்த வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி என்று சுவரொட்டி அச்சடித்து மதுரை தெருக்களில் ஒட்டினர். அப்படி ஒட்டியதற்காகத் தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்த மாணிக்கமும், அச்சக உரிமையாளரும் அன்றே கைது செய்யப்பட்டனர். தடை செய்யப்பட்ட தமிழர் தேசிய இயக்கத்தின் பெயரைச் சுவரொட்டியில் பயன்படுத்தியதற்காகவே கைது நடவடிக்கை என அறிவிக்கப்பட்டுள்ளது.(2002ஆம் ஆண்டு அந்த இயக்கத்தைத் தடை செய்ததும் ஜெயலலிதா அரசுதான் என்பது இங்கு நினைவுகூரத் தக்கது) குற்ற எண்.1579/2011, u/s 17/1,CLA Act, 1908 and 4 of TNOPPD Act ஆகியனவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நீதிமன்றத்திற்கு அனுப்பவிருந்த நேரத்தில், எங்கிருந்தோ வந்த தொலைபேசியின் பொருட்டு, சிறைக்கு அனுப்பாமல், கடிதம் எழுதி வாங்கிக் கொண்டு வெளியில் செல்ல அனுமதித்துள்ளனர். பாவம் ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள், கலைஞரின் ஆட்சியில் பெற்றிருந்த பேச்சுரிமை, எழுத்துரிமையை இழந்து நிற்கிறார்கள்.

Pin It