தமிழகம், கல்வி, வேலை வாய்ப்பு வளர்ச்சியில் பெரும் சாதனை படைத்துள்ளதாக கூறப்படுவது உண்மையா?

என்ன கேள்வி இது என்று சிலருக்கு தோன்றலாம். சந்தேகமில்லை வளர்ச்சியில்லை என்று சத்தியம் கூட சிலர் செய்யலாம். ஆனால் ஒரு கேள்வி. வளர்ச்சி என்பது என்ன? தனியார் கல்வி நிறுவனங்களின் பெருக்கமும், தனியார் தொழிற்சாலைகள் மூலமான வேலை வாய்ப்பு அதிகரிப்பும் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு நிரந்தரமான பங்களிப்பு செய்யுமா எனவும், இதை வளர்ச்சி என்று கூறுவது பொருத்தம்தானா என்றும், இன்றைய சூழ்நிலையில் விவாதம் நடத்தப்படுவது அவசியமாகிறது.

பொருளாதார தேக்கம் என்ற ஒற்றை வார்த்தையால் அமெரிக்கா தொடங்கி பல நாடுகள், வேலையிழப்பு முதல் சமூக குற்றங்கள் அதிகரிப்பு வரை சந்தித்த பிரச்னைகள் ஒன்றல்ல இரண்டல்ல. ஆண்டுகள் பல ஆனாலும் இன்று வரை தீராத அப்பிரச்னைகளால் பெருமளவிற்கு பாதிக்கப்படாத நாடாக இந்தியா இருந்ததற்கு காரணம் பொதுத்துறை நிறுவனங்கள் தான் என அனைவரும் பெருமையாக பேசினர். ஆனால் மீண்டும், மீண்டும் இங்கு நடப்பதென்ன?

பள்ளிக்கூடம் முதல் பல்கலைக்கழகம் வரை எது துவங்க வேண்டுமானாலும் அரசு இன்று நம்பியிருப்பது தனியார் மூலதனத்தை மட்டுமே. தொழில் வளர்ச்சி மூலமான வேலை வாய்ப்புக்கும் தனியார் மூலதனத்தை சார்ந்த நிலைதான். இதனால், கல்விநிலையத்தின் ஒட்டு மொத்த செயல்பாடுகளும் தனியார் வேலைவாய்ப்பு சந்தைக்கேற்ற மாணவர்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாக மாறிப்போனதை யாரும் மறுக்க இயலாது. ஆனால், இதைத்தான் வளர்ச்சி என அரசும், பல ஊடகங்களும் மாறி மாறி கூறி வருகின்றன. ஒரு ஆரோக்கியமான சமூகம் உருவாக இந்த வளர்ச்சி உதவியுள்ளதா என பரிசீலிக்க நீண்ட சிந்தனை எதுவும் தேவையில்லை. கூடிய விரைவில் நாட்டில் ஒரு பெரும் அசாதாரண சூழலை தற்போதைய கல்வி முறை உருவாக்கும் என ஒரே வரியில் சொல்லிவிடலாம்.

பல கோடி சொத்து முழுவதையும் கொடுத்து ஒரு அறக்கட்டளை மூலம் கல்விக்காக செலவிடும் உயர்ந்த நோக்கத்தை உருவாக்கிய பச்சையப்பர் முதலானோர் கல்விநிலையங்களை துவக்கியபோது அதில் வியாபார நோக்கம் துளியும் இருந்ததில்லை. ஆனால் காலப்போக்கில் அரசு தன் பொறுப்பில் இருந்த கல்வியை தனியாருக்கு கொடுக்க துவங்கியபோது வணிக நோக்கம் எட்டிப்பார்க்கவும் துவங்கிவிட்டது. கல்வி ஒரு உரிமையாகவும், அரசின் கடமையாகவும் இருந்ததுமாறி பின்னர் கல்வியை ஒரு சேவைத்துறை என்று வர்ணித்தவர்கள், இன்று அதை ஒரு கார்பரேட் நிறுவனம் அளவுக்கு உயர்த்திவிட்டதால், கல்வி ஒரு பெரும் லாபமுள்ள சேவைத்துறை என புது விளக்கம் கொடுக்கத்துவங்கிவிட்டனர். விளைவு தங்கு தடையற்ற தாராள வர்த்தகத் துறையாக பள்ளிக்கல்வி கூட இன்று மாற்றப்பட்டுள்ளது. கல்வியை கிராமங்களுக்கும், நலிந்த பிரிவினருக்கும் பரவலாக்கிட மேற்கண்ட வர்த்தக மயமாக்கல் உதவவில்லை. மாறாக, கல்வி ஒரு சரக்கு என்ற ஒப்புதலை அனைத்து மக்களிடமும் உருவாக்கியுள்ளது. தமிழகத்திலும், இந்தியாவிலும் உயர்கல்வி வாய்ப்புகள் தேவையை விட அதிகமாக உருவாகிவிட்டது என்பது இதன் பொருளல்ல. கல்லூரிகள் ஒரு புறம் குவியும் நிலையும், மறுபுறமோ லாபம் கொழிக்கும் கல்வி நிலையங்கள் மட்டுமே தனியார் மூலம் துவக்கப்படுகின்றன. கிராம மக்களுக்கு பள்ளிக்கல்வி தருவது, கலை-அறிவியல் கல்லூரிகளை பரவலாக துவக்குவது, ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பது என்பதை ஒரு போதும் இலக்காக இவர்கள் கொண்டதில்லை.

முதலில், தனியார் பள்ளிகளை மட்டும் துவக்கியவர்கள், பின்னர் பாலிடெக்னிக், கலை- அறிவியல் கல்லூரிகளை துவக்கினர். ஆனால், இன்று அனைவரும் துவங்குவது நான்கு வகையான கல்விநிலையங்களை மட்டுமே.

(1) ஆங்கில வழிப்பள்ளிகள்

(2) பொறியியல், மருத்துவம் போன்ற தொழிற்கல்லூரிகள்.

(3) ஆசிரியர் பயிற்சி, மேலாண்மை போன்ற கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் வேலை வாய்ப்பு பாடப்பிரிவுகள்.

(4)நிகர் நிலைப் பல்கலைக்கழகங்கள்.

உலகத்திலேயே மூன்றாவது உயர்கல்வி கட்டமைப்பு கொண்ட நாடு இந்தியா தான். சீனாவுக்கு அடுத்தபடியாக மக்கள்தொகையில் இரண்டாவதாக உள்ள இந்தியா, உயர்கல்வியில் இரண்டாவது இடத்தை அமெரிக்காவுக்கு விட்டுக்கொடுத்துவிட்டு மூன்றாவது இடத்தில் தான் உள்ளது. இவ்வளவு பெரிய பரந்த உயர்கல்வி அமைப்பாக இருந்தாலும், தரம் என்ற அம்சத்தில் அணுகினால், உலகில் உள்ள சிறந்த கல்விநிலையங்கள் பட்டியலில், இந்தியாவில் உள்ள ஒரே ஒரு ஐ.ஐ.டி. மட்டுமே இடம் பெறுகிறது. இந்திய மாணவர்கள் வருடந்தோறும் சுமார் இருபத்தெட்டு ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்து வெளிநாடுகளில் கல்வி பெறுகின்றனர்.

ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் முதலில் நம் மாணவர்கள் மீது தாக்குதல் தொடுத்த நிலையிலிருந்து இன்று கொலை செய்யும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது. ஆனால், இப்போது கூட அரசு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி என்றுதான் பேசுகிறதே ஒழிய இந்திய உயர்கல்வியின் தரம் குறித்து மாற்றம் கொள்ள விரும்பவில்லை. உலக அளவில் சிறந்த புகழ் பெற்ற பல்கலைக்கழகங்கள் இதனால் இந்தியாவிற்கு வரப்போவதில்லை. மாறாக, டூபாக்கூர் பல்கலைக்கழகங்கள் வந்து இங்கு கடை விரிக்கப்போகின்றன. அவர்களோடு உள்ளூர் வியாபாரிகளும் கை கோர்த்துக்கொண்டு டை அப் செய்வது தவிர வேறெந்த மாற்றமும் நிகழப்போவதில்லை.எந்தவித திட்டமிடலும் இல்லாமல் தனியார் கல்வி நிலையங்களின் பெருக்கத்துக்கு அரசு அனுமதி அளித்துக்கொண்டிருக்கிறது.

நகரம் முதல் கிராமம் வரையான அனைத்து மக்கள் திரளுக்கும் ஒரே விதமான கல்வி என்றோ அல்லது கல்வியை அனைத்து கிராம மக்களுக்கும் பரவலாக்குவது என்ற நோக்கம் இல்லாமலேதான் இன்று தனியார் கல்வி நிலையங்களுக்கு தாறுமாறான அனுமதி அளிக்கப்படுகிறது. நகர்மயமாக்கல் என்ற உலகமயமாக்கலின் நோக்கமே கல்வித் துறை மூலம் பரவலாக்கப்படுகிறது. கிராமங்களில் நல்ல கல்வி கிடைக்காது என்ற கருத்து நிலை நாட்டப்பட்டுள்ளது தமிழகத்தின் வளர்ச்சிக்கு எப்படி உதவி செய்யும்?

இலாபம் மட்டுமே நோக்கம் என்ற தாரக மந்திரத்தோடு துவக்கப்படும் தனியார் கல்விநிலையங்கள் தமிழ் மொழியால் வேலைவாய்ப்பு கிடைக்காது என்ற நிலையை பள்ளி முதல் கல்லூரி வரை உருவாக்கி வைத்துள்ளதால் கல்வி முதலாளிகளின் கல்லா நிரம்பியுள்ளது. ஆனால், தமிழ் மொழி? தமிழில் பேசினால் தண்டனை மற்றும் அபராதம் என பள்ளி விதிகள் பெருகியுள்ளன. பெற்றோர்களும் கூடுதல் கட்டணம் முதல் அபராதம் வரை அனைத்தையும் செலுத்தி ஆங்கிலம் பேசுமா குழந்தை என வாய் பார்த்து காத்துக்கிடக்கின்றனர். பொறியியல், மருத்துவம், கணினித்துறை வேலை வாய்ப்புகள் என கனவோடு எல்.கே.ஜி.யில் துவங்கும் பெற்றோர்களின் செலவும், அலைச்சலும் எத்தனை பேருக்கு நிறைவேறுகிறது.?

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 285 ஆக இருந்த பொறியியல் கல்லூரிகள் 2011ல் 488 ஆக உயர்ந்துள்ளதை வளர்ச்சி என கூறுகிறது அரசு. ஆனால் உண்மையென்ன? கடந்த பல வருடங்களாகவே சுமார் 16,000 முதல் 25,000 வரையான இடங்கள் பொறியியல் படிப்பில் ஒவ்வோரு ஆண்டும் காலியாக இருக்கின்றன. அதே நேரத்தில், ஒவ்வோரு ஆண்டும் தமிழக அரசு புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கி வருகிறது.

இதனால் சில புதிய பிரச்னைகள் உருவாகியுள்ளன. அதாவது பொறியியல் கல்லூரிகளில் காலி இடங்கள் மிக அதிகமாகும். விளைவு குறைந்த பட்ச மதிப்பெண் வாங்கிய ஜஸ்ட் பாஸ் மாணவர்களையும் சேர்க்காமல் கல்லூரிகள் தங்களது பாதி இடங்களைக்கூட நிரப்பமுடியாது, இதனால் பல மாணவர்கள் தேர்ச்சி பெற முடியாமல் பொறியியல் படிப்பில் தேங்கி நிற்கும் நிலை அதிகமாகும். இடஒதுக்கீடு என்று வரும்போது மட்டும் தரம் குறைந்து விடுவதாக பேசும் இவர்கள், காசுக்கு சீட்டு என்று இலாபம் வந்தால் மட்டும் இவர்களின் தரம் எங்குபோகிறது என்று புரியவில்லை.

அரசுக் கல்வி ஒரு புறம், மறுபுறமோ காசுக்கேற்ற கல்வி என்ற இந்த இரட்டை சூழ்நிலைகளால் வளர்ச்சி என்பது அனைவருக்குமானதாக இல்லாமல் பணம் படைத்தவருக்கு மட்டுமே பெரும்பாலான வாய்ப்புகள் என்று மாறிப்போயுள்ளன. காசுக்கேற்ற தரம் என்பதே தனியார் கல்வி நிலையங்களின் தரம் குறித்த கோட்பாடு என்பதால் அரசு விதிகளும், தேவைக்கேற்ற, காலத்திற்கேற்ற தரமும் இங்கு பொய்யாக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் உள்ள தரம் குறித்து அரசு எந்த வகையிலும் தலையிடாத நிலையே தற்போது உள்ளதால் பெரும்பாலும் பள்ளிகள் முதல் நிகர்நிலை பல்கலைக் கழகம் வரை குறைந்த பட்ச தரம் கூட இல்லாத வகையில்தான் செயல்படுகின்றன. பல--------- நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் தரமற்றதாக உள்ளன என கண்டறிந்த பின்னரும் எந்த நடவடிக்கையும் அரசால் எடுக்க முடியவில்லை. வரம் கொடுத்த சிவன் தலையில் கை வைத்து அழிக்க நினைத்த அரக்கன் கதையைப் போன்றுதான் தனியார் கல்விநிலையங்களும். அனுமதி கொடுத்த அரசால் எந்த வகையிலும் கட்டுப்படுத்தவோ, ஏன் கேள்வி கேட்கவோ கூட இயலவில்லை.இதை வளர்ச்சி என ஆட்சியாளர்கள் கூறலாம். ஆனால் எப்படி ஏற்றுக்கொள்ள?

உயர்கல்விக்கு வங்கிக் கடன் என்ற அரசின் திட்டமும் தனியார் முதலாளிகளின் நலனுக்காகத்தான். கல்வி தர வேண்டிய அரசு அதை முதலாளிகளிடம் கொடுக்கிறது. அங்கு என்ன விலை என அரசு தலையிடாததால் தாறுமாறான விலையுயர்வு(?). பாதிக்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருந்தும் ஏற்கனவே, பள்ளிக்கல்வியில் பணம் செலவழித்தும், சராசரியாக படிக்கும் மாணவர்கள் மிக அதிகம் செலவழித்து பொறியியல் கல்வியில் சேரத்தயங்கும் பொருளாதார சூழ்நிலையில் கடன் வாங்கிப்படியுங்கள் நானே கடன் தருகிறேன் என அரசு வங்கிக்கடன் என அறிவிக்கிறது. அதாவது, கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும் வேலை தான் இது, அரசு வங்கிப் பணத்தை வைத்து பொறியியல் கல்லூரி கல்லாவை நிரப்பும் சூதாட்டத்திற்கு பெயர் வங்கிக்கடன். கடன் வாங்கித்தான் படிக்க வேண்டும் என்ற நிலையில் பெரும்பாலான மக்கள் உள்ள போது அரசே கல்வி நிலையங்களை நடத்துவது தானே வளர்ச்சிக்கு வழி கோலும். மாறாக, தனியார் மூலதனத்தை வளர்க்க அரசு திட்டம் தீட்டுவதால் மக்கள் வரிப்பணம்தான் வீணாகிறது.

கட்டுப்பாடற்ற, திட்டமிடப்படாத குறிப்பிட்ட வகையிலான தனியார் கல்விநிலையங்களின் பெருக்கம் காரணமாக அதிகமாகும் மாணவர்கள் எண்ணிக்கை மற்றொரு அசாதாரண சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.மிகக்குறைந்த ஊதியத்துக்கும் தயார் என்ற போட்டி மாணவர்களிடையே அதிகம் காணப்படுவதன் பின்னணி இதுதான். ஆனால் ஊதியம் அதிகம் சம்பாதிக்கும் துறைகள் என்ற தோற்றம் உருவாக்கப்பட்டுவிட்டதால் ஊதியம் குறித்து சரியான மதிப்பீடுகள் பலருக்கும் தோன்றுவதில்லை. வேலைவாய்ப்புத்தளமும். சூழ்நிலைகளும் மாறிப்போயுள்ள நிலையில் ஊதியம் உயர்வதும் இயல்பு தானே தவிர புதியதல்ல.

கல்வி வாய்ப்புகளுக்கேற்ற புதிய வேலைவாய்ப்பு சூழலை உருவாக்க வேண்டியது அரசின் அடிப்படை கடமையாகும். ஆனால் அரசு புதிய தொழிற்சாலைகளை உருவாக்குவதில்லை என்று கொள்கை முடிவு எடுக்கும் நிலை யாருக்கு சாதகமானது? அரசுப்பணத்தை எடுத்து தனியார் கல்லூரிகளுக்கு தரும் அரசு, மற்றொரு புறமோ தனியார் உற்பத்தி செய்யும் மதுவை அரசுக்கடைகளில் விற்றுத்தருகிறது. தனியார் மூலதனத்தை கட்டுப்பாடற்று பெருகச்செய்வது என்ற ஒற்றை வரியே அரசின் அத்தனை செயல்பாடுகளிலும் பிரதிபலிக்கையில் அரசு வேலைவாய்ப்பு என நம்புவது மூடநம்பிக்கை என்ற கருத்தே தற்போது பரவலாக உள்ளது.

பொறியியல் கல்லூரிகளில் தற்போது பயின்று வெளிவரும் மாணவர்களில் 20 சதவித மாணவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு பெறுவதற்கான தகுதி உள்ளதாக உயர்கல்வித்துறை செயலாளர் திரு. கணேசன் அவர்கள் கூறியுள்ளதை இங்கு நினைவில் கொள்வது அவசியம். ஆனால், உண்மையில் வேலைக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 20 சதத்தை விட குறைவாக உள்ள நிலையில் இதர மாணவர்களின் கனவும், உழைப்பும், பெரும் பணச் செலவும் என்னவாவது?

கல்வி என்பது வியாபாரப் பொருள் என்ற நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டு வேலைவாய்ப்புக்கான வாழும் உரிமை என்ற நிலைக்கு மாற்றப்பட்டு கல்வி, வேலை இரண்டும் முழுவதும் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால்தான் இதில் ஒரு சம நிலை ஏற்படும். தனியார் பங்களிப்பு கூடவே கூடாது என்பதல்ல நமது நிலை. மாறாக, தேவைக்கேற்ப அரசின் கட்டுப்பாடு மற்றும் திட்டமிடலோடு இணைந்த அளவான தனியார் பங்களிப்பு என்பதே சரியாக இருக்கும். இவ்வாறு இருக்கையில் விவசாயம் முதல் அனைத்து துறைகளிலும் ஒரே நேரத்தில், பரவலான அனைத்து மக்களுக்கான வளர்ச்சியை எட்டமுடியும். இதற்கு மற்றொரு மாற்றமும் கல்வியில் அவசியம். கல்வி சமூக உணர்வையும் ஊட்டிட வேண்டும். சமூக உணர்வே கல்வி கற்கும் நோக்கத்தின் அடிப்படையாகவும், மையமாகவும் இருக்க வேண்டும்.

Pin It